RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7

25 Nov

எம்.ஜி.ஆர். & சிவாஜி

ரத்னமாலா

எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்காக ரவீந்தர் எழுதிய முதல் நாடகமான “இடிந்தக் கோயில்” 1953-ஆம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேற்றம் ஆன போது கதாநாயகியாக நடித்த ரத்னமாலாவை நீக்கி விட்டு ஜி.சகுந்தாலாவை நடிக்க வைத்தார் என்ற செய்தியை முன்னரே நாம் பார்த்தோம். ஏன் அவரை நீக்கிவிட்டு ஜி.சகுந்தலாவை நடிக்க வைத்தார் என்பதற்கு ஒரு நீண்ட பின்னணி கதை இருக்கிறது.

சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி  இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். எனினும் ஊடகங்கள் அதனை அவ்வளவாக பெரிது படுத்தவில்லை. சிவாஜி என்ற ஒரு சகாப்தத்தின் – ஒரு மகாபுருஷனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கிருந்த பலவீனத்தை யாரும் சர்ச்சைக்குள்ளாக்க விரும்பவில்லை என்பதே உண்மை. சிவாஜி எந்த அளவுக்கு தன் மனைவி மக்களோடு அனுசரணையாக இருந்தார் என்பது எல்லோரும் அறிந்து வைத்திருந்தார்கள். .

ரத்னமாலாவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே இருந்த அன்னியோன்ய உறவு ஒரு கட்டத்தில் எல்லோரும் அறியும் வண்ணம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தபோது முதலில் யாருமே நம்ப மறுத்தனர். பிரபலங்களைப் பற்றி பேசப்படும் எத்தனையோ “கிசுகிசு”க்களில் இதுவும் ஒன்று என்றனர்.

பாடகியாக…

ரத்னமாலா கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். இனிமையான குரல் வளம் படைத்தவர். திறமையான பின்னணி  பாடகி. திருச்சி லோகனாதன், எஸ்.சி.கிருஷ்ணன், டி.வி.ரத்னம், சந்திரபாபு, சி.எஸ்.ஜெயராமன் போன்ற எத்தனையோ பிரபல பாடகர்களுடன் இணைந்து காலத்தால் அழியாத பற்பல மனங்கவர்ந்த பாடல்களை பாடி ரசிகர்களின் மனதிலடம் பிடித்தவர்.

ரவீந்தர் வசனம் எழுதிய “மஹாதேவி” படத்தில் ஒரு பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 “ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!
 

என்ற “விவேக சிந்தாமணி”யின் பாடல் வரிகள் சிலவற்றை பொறுக்கி எடுத்து தொகையறாவாக ஆக்கி “தந்தனா பாட்டு பாடணும்  துந்தனா தாளம் போடணும்” என்ற சந்திரபாபுவின் பாடல் இன்றளவும் எல்லோர் மனதிலும் நிலைகொண்டு, முணுமுணுக்கும்  பாடலாக விளங்குகிறது. இந்த புகழ்பெற்ற பாடலுக்கு சந்திரபாபுவுடன் இணைந்து குரல் கொடுத்தவர் ரத்னமாலா.

ரவீந்தர் வசனம் எழுதிய அதே “மஹாதேவி” படத்தில் “மானை பழிக்கும் விழியே – உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு” என்ற பாடலுக்கு சந்திரபாபுவுடன் இணைந்து பாடியவரும் இதே ரத்னமாலாதான்.

மேலும், ரவீந்தர் வசனம் எழுதிய “கலையரசி” படத்தில் “கேட்டாலும் கேட்டுது இப்படி கேட்டுக்க கூடாது” என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.

இப்படி இவர் பாடிப் புகழ் பெற்ற பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. இவர் பாடிய பல பாடல்கள் ஜமுனா ராணி அல்லது ஜிக்கி பாடியதாகவே பலர் இன்றுவரை நினைத்து வருகிறார்கள்

“வீரபாண்டிய கட்டபொம்மன்”  படத்தில் இடம்பெற்ற  “போகாதே போகாதே என் கணவா” என்ற  பாடல் எந்த அளவுக்கு பிரபலமானது என்பதை எல்லோரும் அறிவர். இதுவும் இவர் பாடிய பாடல்தான். அதே படத்தில் “ஆத்துக்குள்ளே ஊத்து” என்ற பாடலை திருச்சி லோகனாதனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

சந்திரபாபுவுடன் ரத்னமாலா இணைந்து பாடிய பல பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன. உதாரணத்திற்கு “அந்தமான் கைதி” படத்தில் இடம்பெற்ற “ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஆசையானேனே உன் மேலே” என்ற பாடலைச் சொல்லலாம்.

“ஆரவல்லி” படத்தில் இடம்பெற்ற  “கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா?”, “இள மீசையுள்ள ஆம்பிள்ளைங்க வாருங்க”, “செங்கம்மா அங்கம்மா” முதலான பல பாடல்களைப் பாடி புகழின் உச்சியில் ஜொலித்தவர்.

“தங்கப் பதுமை” என்ற படத்தில் “பூமாலை போட்டுப் போனா”, “குறவஞ்சி” என்ற படத்தில் “செங்கையில் வண்டு” போன்ற நூற்றுக்கும் மேலான பாடல்களை படங்களில் ரத்னமாலா பாடியுள்ளார்.

“மானை பழிக்கும் விழியே” “எழுந்து என்னுடன் வாராய் சொக்கம்மா” போன்ற பாடல் உட்பட `வாழ்க்கை’, “அன்னை”,  “ராணி சம்யுக்தா” போன்ற பல படங்களில் சுமார் 100 பாடல்களுக்கு மேலாக பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் ரத்னமாலா. குறிப்பாக நகைச்சுவைப் பாடல்களில் ஏற்ற இறக்கத்தோடு குழைந்து பாடியது இவருக்கு பொருத்தமாக இருந்ததோடல்லாமல் நல்ல பெயரையும் இவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது.

ரத்னமாலா கணேசன்

பாடகி ரத்னமாலா

பாடகி ரத்னமாலா

சென்னை தியாராகராய நகரில் வசித்து வந்த இவரது வீட்டு வாசலில் “ரத்னமாலா கணேசன்” என்ற பெயர்ப் பலகையை மட்டும்தான் இவரால் போட முடிந்ததே தவிர  ஊரறிய, உலகறிய தானும்  சிவாஜி கணேசனின் மனைவிதான்  என்று வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. ‘வெளிக்காட்ட முடியவில்லை’ என்று சொல்வதற்கு பதிலாக இவர் ‘வெளிக்காட்ட விரும்பவில்லை’ என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

“ரத்னமாலா கணேசன்” என்ற பெயரை வைத்து முதலில் எல்லோரும் ஜெமினி கணேசனைத்தான் சந்தேகித்தனர். காரணம் அப்பொழுது நிஜவாழ்க்கையிலும் “காதல் மன்னனாக” வலம் வந்தவர் அவர்தான்.

ரவீந்தர் எழுதிய “இடிந்த கோயில்” நாடகத்தில் ரத்னமாலா  நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே சிவாஜி கணேனுடன் நாடகக்குழுவில் இணைந்து “என் தங்கை”,  “பராசக்தி”  போன்ற நாடகங்களில் நடித்தவர் இவர்.

(நிறைய பேர்கள் “என் தங்கை” நாடகம் எம்.ஜி.ஆர்  நாடக மன்றத்தினர் நடத்தியது என்று எழுதி வருகிறார்கள். இது கிட்டத்தட்ட “பாசமலர்” போன்று அண்ணன் தங்கை உறவின் நெருக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கதையாகும். நாடகத்தில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த அதே பாத்திரத்தை அது படமாக வெளிவந்தபோது எம்.ஜி.ஆர் ஏற்று நடித்தார்.)

1957-ல் படங்களில் சிவாஜி கணேசன் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக “சிவாஜி நாடக மன்ற”த்தைத்தொடங்கி, “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை அரங்கேற்றினார். இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜக்கம்மா என்ற பாத்திரத்தில் ரத்னமாலா அவருடைய மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட நூறு முறை இந்த நாடகம் மேடை ஏறியது. இது பின்னர் படமாக்கப்பட்டு சரித்திர சாதனை நிகழ்த்தியது.

veerapandiya

டி.ஆர். மகாலிங்கத்தின் “ஓர் இரவு” நாடகத்தில் மட்டுமல்லாது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் ரத்னமாலா நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் நடிகைகளில் நடிப்புத் திறமைக்கும், தெளிவான தமிழ் உச்சரிப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் புகழ் பெற்ற நடிகை எம்.என்.ராஜம். 1950 – 60களில் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்தவர். வில்லி மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்தவர்.  அவர் கூறியதாவது:

எம்.ஆர்.ராதா - எம்.என்.ராஜம்

ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா – எம்.என்.ராஜம்

 சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.

சேலம் நகரில் நடந்த கண்காட்சியில் ஒருமுறை “பராசக்தி” நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது..  ரசிகர்கள் கூட்டம் அரங்கம் நிரம்பி வழிந்தது.  அந்த நாடகத்தின்போது சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் இடையே நடைபெற்ற ஒரு காதல் காட்சியின்போது சுவையான நிகழ்ச்சியொன்று  நடந்தது.

“புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே…’ என்ற பாடலில், ‘அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதய்யா…’ என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்துப் போனது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு அபிநயித்து தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி. நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோசித புத்தியை பாராட்டினர்.

நாடகத்தில் மாத்திரமல்ல நிஜவாழ்க்கையிலும் ரத்னமாலா கழுத்தில் சிவாஜி தாலி கட்டினார் என்ற செய்தி ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாமலிருந்தது.  பிற்பாடுதான் அது வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

எம்.ஜி.ஆர். நாடகக் குழுவில் நடிக்க வருவதற்கு முன்பாகவே சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் இடையே  சினேகம் வலுத்திருந்தது என்கிறார்கள். இவர்கள் அன்னியோன்யமாக இருந்த விஷயத்தை எம்.ஜி.ஆருடைய நாடகக் குழுவில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.

இவர்கள் இருவரிடையே இருந்த உறவை பலசந்தர்ப்பத்தில் பார்த்தும், கேட்டும்  உறுதிபடுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர். இதனால் தன் நாடகக்குழுவின் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாதே என்ற நோக்கத்தில் நைஸாக ரத்னமாலாவை தன் குழுவிலிருந்து கழற்றி விட்டு விட்டாராம்..

ரத்னமாலாவை தன் நாடகக்குழுவிலிருந்து நீக்கியபின்தான் ஜி.சகுந்தலாவை கதாநாயகியாக நடிக்கவைத்தார் எம்.ஜி.ஆர். (ஜி.சகுந்தலா,  சி.ஐ.டி. சகுந்தலா – இவர்களிருவரும் வெவ்வேறு நபர்கள்)

நான் முன்னரே எழுதியிருந்ததுபோல் தன் நாடகக்குழுவில் உள்ள கலைஞர்கள் வெளியாட்களை சந்திப்பதற்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  ஊர்விட்டு ஊர் செல்லும் நாடகக்குழுவினர் தங்குவதற்கு வசதியாக பெரிய பங்களாக்களை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தனர். குறிப்பாக பெண் கலைஞர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவு நேரங்களில் எம்.ஜி.ஆரே, ‘ரோந்து’ சுற்றுவார்.

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் இடையே இப்படியொரு ரகசிய உறவு நிலவியது என்ற விஷயத்தை முதன் முதலில் வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்தான்.

Naan En piranthane

ஆனந்த விகடனில் தான் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் “நான் கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வரும்போது தம்பி சிவாஜி தினந்தோறும் தவறாமல் எங்களது நாடகக் கொட்டகைக்கு வந்து செல்வார்” என்று சூசகமாக பொடிவைத்து எழுதி இருந்தார்.

அப்போது எம்.ஜி.ஆருடன் அன்றைய நாடகங்களில் நடித்து வந்தவர் ரத்னமாலாதான் என்பதை சினிமாவுலகமும், ஊடகங்களும் கிரகித்துக்கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. (சிவாஜி தவறாமல் வந்து பார்த்ததாகவும் கூறப்படுவது ரத்னமாலா அல்ல; நடிகை பண்டரிபாயின் சகோதரி மைனாவதி என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.) ஆனால் எம்.ஜி.ஆர் அதில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை.

இந்த ரகசியத்தை சில நாட்கள் கழித்து மேலும் பகிரங்கமாக  போட்டுடைத்தவர்  ‘இதயம் பேசுகிறது’ மணியன்.

Idhayam pesukiradhu front

மணியனைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் ரவீந்தருடன் இணைந்து பணியாற்றிய வித்வான் வே.லட்சுமணனுடன் சேர்ந்து மணியன் “உதயம் புரொடக்ஷன்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியபோது, அவர்களிருவருக்கும் உதவும் வகையில் அவர்களின் முதல் தயாரிப்பான “இதயவீணை” என்ற படத்தில் நடித்து அவர்களிருவரையும் பொருளாதார ரீதியில் உயர வைத்தவர் எம்.ஜி.ஆர். “இதயவீணை” கதையை எழுதியது மணியன் என்றாலும் வசனம் ஆகியவற்றிற்கு  திரை மறைவில் இருந்து உதவி புரிந்தவர் நாகூர் ரவீந்தர்.

எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த மணியன் எம்.ஜி.ஆர். சூசகமாக எழுதிய சிவாஜி – ரத்னமாலா இவர்களின் உறவை பகிரங்கமாக தனது ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் எழுதி ஒரு பெரிய சூறாவளியை உண்டு பண்ணினார். அதுவரை யூகமாகவும் வெறும்  ‘கிசுகிசு’வாகவும் இருந்த செய்தி மணியன் பட்டவர்த்தனமாக எழுதிய பிறகே சினிமா உலகில் அது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்தது.

‘இரு மலர்கள்’ படத்தைப் பற்றி  குறிப்பிட்டு எழுதிய மணியன் தேவையே இல்லாமல் “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார். இரண்டு மனைவிகள் உள்ள கதாபாத்திரத்தை சிவாஜி மிகவும் அழகாகச் செய்வார். காரணம், அவருக்கு அதில் அனுபவம் அதிகம்” என்று எழுதி ஒரு பெரிய பூகம்பத்தை உண்டுபண்ணி தொலைத்துவிட்டார்.

இரு மலர்கள்

இந்த சம்பவம் சிவாஜி ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இது குறித்து “சிவாஜி ரசிகன்” என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆரம்பித்து அதில் எம்.ஜி.ஆரின் அந்தரங்க வாழ்க்கை குறித்து எழுதுவார்கள் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். அந்நேரம் பார்த்து தமிழகத்தில் புயல் வரவே, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், நிவாரண நிதி திரட்டுகிற பொறுப்பை சிவாஜியிடம் ஒப்படைக்கிற சாக்கில் சமாதானம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் “சாவி” மற்றும் “குங்குமம்”  பத்திரிகைகளில் ‘கிசுகிசு’ செய்தியாக வெளிவந்தது.

மணியனின் இந்த செய்கையால் வெறுப்புற்ற சிவாஜி இறுதிவரையில் அவர் மீது பயங்கர கோபத்துடனேயே இருந்தார் என்கிறார்கள் திரையுலகப் பத்திரிகையாளர்கள்.

சிவாஜியைப் பற்றிய இதுபோன்ற செய்திகள் அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்தி விட்டதாக நமக்குத் தோன்றவில்லை.

எம்.ஜி.ஆரையோ, ஜெமினி கணேசனையோ, எஸ்.எஸ்.ஆரையோ, சிவாஜியையோ அவர்களின் சொந்த வாழ்க்கையில் அவர்களுக்கிருந்த பலவீனங்களுக்காக மக்கள் ஒருபோதும் உதாசீனம் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ்த் திரையுலக ரசிகர்கள் தங்கள் மனங்கவர்ந்த நாயகர்களின் திறமையைத்தான் தரம் பார்த்தார்களேயொழிய அவர்களின் அந்தரங்க வாழ்க்கை அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாக இருந்தது.

ரத்னமாலா இந்த விஷயத்தில் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாகவே நமக்கு தெரிகிறது. எந்த வகையிலும் சிவாஜியின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாகவே இருந்துள்ளார். மனைவி என்ற உரிமை கொண்டாடி சிவாஜி கணேசனின் குடும்பத்தினரை ஒருபோதும் சங்கடத்தில் ஆழ்த்தியது கிடையாது. தன் வாழ்நாளில் எந்தப் பத்திரிக்கைக்கும் இது தொடர்பாக அவர் பேட்டி அளித்ததும் கிடையாது.

ரத்னமாலா மூலமாக  சிவாஜிக்கு இன்றைக்கு பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். ‘அழைத்தால் வருவேன் ‘படத்தில் நடித்தவரும், நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவருமான ஸ்ரீராஜ் என்பவரின் மூத்த சகோதரர்தான் இந்த  தன்ராஜ்.  தன்ராஜ் படங்களிலும் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார். அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய பாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.  ரத்னமாலா குடும்பத்தின் பின்னணி அறிந்தவர்கள்  தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

சிவாஜி, தான் எந்த ஒரு புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சிவாஜி மறைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ஆம் ஆண்டு ரத்னமாலா இறந்து போனார். அவர் இறக்கும்போது அவருக்கு 76 வயது. இறப்பதற்கு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னமாலா  வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்தார். ஜூன் மாதம் 3-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி ரத்னமாலா இறந்தார். இறந்த பின் கண்தானம் செய்யவேண்டும் என்ற அவரின் விருப்பப்படி அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ரத்னமாலாவின் குணத்தை அறிந்து வைத்திருப்பவர்கள் அவரைப் பற்றி மிக உயர்வாகவே கருத்துச் சொல்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், விஜயகுமார்,  மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

ரத்னமாலா மறைந்தபோது தினமலர்’ பத்திரிகை மட்டுமே அன்றைக்கு அவரது இறப்புச்  செய்தியோடு  அவர் யார் என்பதையும் எழுதியிருந்தது. அதன் பிறகு இலங்கையிலிருந்து வெளிவரும் “தினகரன்” பத்திரிக்கையும்  சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி விளக்கியிருந்தது

நடிகர் திலகம் சிவாஜி நடிகை ரத்னமாலாவை எல்லோரும் அறிய திருமணம் செய்துகொள்ள முன் வந்தபோது அவரைத் தடுத்து, “வேண்டாம், நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். இந்த திருமணத்தால் உங்கள் பெயர் பாழாகிவிடக் கூடாது. நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் அதில் எனக்கு சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வரவே மாட்டேன்” என்று மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.

சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து புகழ்ந்தார்.

பெரும்  புகழும், செல்வாக்கும் இருந்தும் இறக்கும் வரை கணவனின் நன்மைக்காக எந்தவித உரிமையும் கொண்டாடாத ஒரு பெண்  அவர். தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா நம் மனதில் நிற்கிறார்.

– அப்துல் கையூம்

– தொடரும்

Advertisements
 

Tags: ,

6 responses to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7

 1. rathnavelnatarajan

  November 26, 2014 at 1:24 pm

  எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7 = சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். = சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து புகழ்ந்தார்.= அப்துல் கையூம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிகவும் sensitive matter = நன்றி திரு அப்துல் கையூம்

   
 2. rathnavelnatarajan

  November 26, 2014 at 1:25 pm

  Reblogged this on rathnavelnatarajan and commented:
  எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7 = சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். = சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து புகழ்ந்தார்.= அப்துல் கையூம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிகவும் sensitive matter = நன்றி திரு அப்துல் கையூம்

   
 3. Mohamed Iqbal

  November 27, 2014 at 1:07 am

  எதிர்பார்த்திருந்த இந்த ஏழாம் பகுதி எதிர்பாராத செய்தியுடன் வந்துள்ளது.! எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை மூலமாக, திரையுலகின் அடுத்த பெரும் நடிகரின் பக்கம் செய்தியை நேர்த்தியாக திருப்பிய விதத்தை ரசித்தேன்.!

  வழக்கப்படி காணக்கிடைக்காத புகைப்படங்கள் அலங்கரித்துள்ளன.! நான் அறிந்திராத ரத்னமாலாவின் நல்ல குணத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது.! ஒருவேளை அந்த குணம்தான் சிவாஜியைக் கவர்ந்ததோ.?

  இதில் சாவி மற்றும் குங்குமம் இதழில் வெளியானதாக ஒரு கிசுகிசு செய்தியைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.! இருமலர்கள் வெளியானதற்கும், எம்.ஜி.ஆர் முதல்வரானதற்கும் பத்து ஆண்டுகள் இடைவெளி உள்ளன.! இந்த காலக்குழப்பத்தை சரி செய்வது முக்கியம்.!

   
 4. அப்துல் கையூம்

  November 27, 2014 at 11:14 am

  “இரு மலர்கள்” படம் வெளிவந்த ஆண்டு 1967. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததோ 1977. அறுபதுகளில் மணியன் ஆனந்த விகடனில் “இதயம் பேசுகிறது” என்ற தலைப்பில் சில “புருடா”க்களையும் சுயவிளம்பரத்தையும் இணைத்து பயணக்கட்டுரை எழுதி வந்தார்.

  அதன் பிறகுதான் எம்.ஜிஆரின் உதவியால் “இதயம் பேசுகிறது” பத்திரிக்கையைத் தொடங்கினார். ஆகவே மணியன் “இருமலர்கள்” படத்தைப் பற்றிய தனது கருத்தை பிற்பாடுதான் எழுதியிருக்க வேண்டும்.

  “நிவாரண நிதி திரட்டுகிற பொறுப்பை சிவாஜியிடம் ஒப்படைக்கிற சாக்கில் சமாதானம் செய்துக்கொண்டார்” என்ற செய்தி “சாவி” மற்றும் ”குங்குமம்” பத்திரிக்கையில் வந்த “கிசுகிசு” என்று கவனமாக குறிப்பிட்டிருந்தேன். காரணம் “கிசுகிசு” என்றாலே உறுதிபடுத்தாத செய்தி என்றுதான் அர்த்தம். யூகத்தை அடிப்படையாக வைத்து கற்பனையும் கலந்து “கிசுகிசு: என்ற பெயரில் இவ்வகை பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

  மேலும் “குங்குமம்” மற்றும் “சாவி” பத்திரிக்கைகள் எந்தக் கட்சிக்கு ஆதரவாக எழுதி வந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் மணியனைப் பற்றியும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது கிடையாது.

  சிவாஜியின் அந்தரங்க வாழ்க்கையை சம்பந்தமே இல்லாமல் “இருமலர்கள்” படத்தைப் பற்றி எழுதுகிற சாக்கில் இதனை கிளறியிருக்கத் தேவையில்லை. ஒருக்கால் எம்.ஜி.ஆர். ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவர் எழுதியிருக்கலாம். மணியன் தயாரித்த “இதயவீணை” படம் வெளிவந்தபோது எம்.ஜி.ஆர். – கருணாநிதி பகை உச்சத்தில் இருந்த நேரம். மணியன், சோ போன்றவர்கள் இதுபோன்ற நேரங்களில் குளிர் காய்ந்திருக்கிறார்கள்.

  “ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள். “கூத்தாடி” என்ற இடத்தில் “பத்திரிக்கையாளர்கள்” என்று சேர்த்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

  “இதயவீணை” திரைப்படத்தில் “ஒரு வாலுமில்லை, நாலு காலுமில்லை, சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே” என்ற கருணாநிதியை கருத்தில் வைத்து எழுதப்பட்ட பாடலை மணியன் வேண்டுமென்றே இடம்பெறச் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

  எம்.ஜி.ஆர். – சிவாஜி ரசிகர்களிடையே போட்டி மனப்பான்மையும், பிளவும் காலங்காலமாய் தொடர்ந்து வந்ததென்னவோ உண்மை. மற்றபடி பொது வாழ்வில் இவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது பரஸ்பர நட்போடுதான் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  திரைப்பட நாயகர்கள் சிவாஜி, எம்.ஜி,.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி கனேசன் உட்பட (சிவக்குமார் போன்ற ஒன்றிரண்டு பேர்களைத் தவிர) எல்லோரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமாகத்தான் இருந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் அவர்கள் சார்ந்திருந்த தொழில் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்.

   
 5. Mohamed Iqbal

  November 27, 2014 at 4:40 pm

  சகோதரர் அப்துல் கையும்.,

  உங்கள் விளக்கத்திற்கு நன்றி.! இந்த விளக்கத்தை கட்டுரையில் தேவையான விதத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.!

  இரு மலர்களின் விமர்சனம் என்று எழுதியதால் எனக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது.! 1967 ல் இதயம் பேசுகிறது இதழே ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் பின்னர் வேறுவிதத்தில் எழுதப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும்.!

  மணியன் பெரிய ஜால்ரா என்பதை அப்போதே உணர்ந்தேன்.! எம்.ஜி.ஆரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டு தனது பத்திரிகை விறபனையை அதிகரித்துக்கொண்டதல்லாமல் அவரை வைத்து இரண்டு படங்களை எடுத்து நல்ல காசும் பார்த்துவிட்டார்.!

  சிவாஜியைப் பற்றி மணியன் எழுதியது தேவையே இல்லாதது.! தனது லாபத்துக்காக அடுத்தவரின் மானத்தைப்பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.!

  சிவாஜியின் குடும்ப மானத்தைக் காத்த ரத்னமாலாவுக்கும் இந்த மணியனுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.!

   
 6. S.E.A.Mohamed Ali. "nidurali"

  December 1, 2014 at 1:10 pm

  Reblogged this on SEASONSNIDUR.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: