RSS

பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை

06 Dec

photo (29)

பத்திரிக்கைகளில் வரும் செய்தி உண்மைதானா? பத்திரிக்கைக்காரர்கள் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னால் அதை முறையாக ஆராய்ந்து, அதன் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தி விட்டுத்தான் எழுதுகிறார்களா என்றெல்லாம் சந்தேகம் நமக்கு வருகிறது.

இணையதளங்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு “கட் & பேஸ்ட்” கலாச்சாரம் பரவலாக வலுத்துவிட்டது. யார் எழுதியது? எப்படி இந்தச் செய்தி வெளியானது? என்றெல்லாம் யாரும் ஆராய்வதில்லை. பத்திரிக்கைக்காரர்கள் தங்கள் கற்பனைக்கு வந்தவாறு எழுதித் தொலைக்கி|றார்கள்.. பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை எப்படிப்பட்டவை என்பதை இப்போது நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை நாம் காண முடிகின்றது

“உண்மையின் உரைகல்” என்கிறார்கள். எழுதுவதெல்லாம் பொய்யும் புரட்டும், சிண்டு முடிகிற வேலையும், காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுதலும்.

“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஊர்ஜிதமில்லாத கற்பனைச் செய்திகளெல்லாம் நாளைய வரலாறு ஆனால் என்ன கதியாகும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்

இப்படித்தானே வரலாற்றில் அக்பர் போன்ற மன்னர்கள் மாபெரும் அரசர்களாகவும், ஓளரங்கசீப் போன்ற மன்னர்கள் மிக மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்?

“செய்திகளை முந்தித்தருவது” நாங்கள் என்கிறார்கள் பழைய மொந்தைக் கள்ளை புதிய பாட்டிலில்அடைத்து விற்பனைச் செய்கிறார்கள்.

‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்  வேறொன்றும் அறியேன் பராபரமே” என்கிறார்கள். வாசகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக கண்டதையும் எழுதி விஷமத்தனம் புரிகிறார்கள்.

நடிகை நிஷா ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவர் பிறந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் பெரும்பான்மையாக இருப்பதினாலும் இச்செய்தி பரபரப்பை உண்டாக்கும் என்ற நினைப்பினாலா?

நடிகை நிஷா இறந்துப்போய் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் செய்தி 2007-ஆம் ஆண்டிலிருந்து இணைய தளத்திலும், முகநூல்களிலும் வலைத்தளங்களிலும். வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதனை அப்படியே மறுபடியும் தோண்டியெடுத்து “கட் & பேஸ்ட்” செய்து “ஹாட் நியூஸ்” ஆக 3.12.2014 தேதியிட்ட மாலைமலரில் செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த பத்திரிக்கையின் பொறுப்பற்றச் செயலை என்னவென்றுச் சொல்வது?

இந்தச் செய்தி சிலகாலத்திற்கு முன்பு மீண்டும் உருப்பெற்று சமூக வலைத்தளங்களில் புதிய செய்திபோல காட்டுத்தீயாக பரவியது. அதன் பிறகு மற்றுமொரு ஆங்கிலப் பத்திரிக்கை, திரைச்செய்தி,  இலங்கையிலிருந்து வெளியாகும் தினகரன் இன்னும்பல பத்திரிக்கைகள் சூடானச் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன,

இந்நிலையில், இந்த செய்தி பற்றி அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்தபிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக (தாமாக முன்வந்து தீர்த்து வைக்க நினைக்கும்பிரச்சனை) கையில் எடுத்துள்ளார்.

என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆதாரமற்ற ஒரு செய்தியின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் ஒரு நீதிபதியின் போக்கு நமக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது.

‘அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மலைமலர் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போன்று இந்தச் செய்தியும் உண்மையாக இருக்கும் பட்சத்தில்  நாகை மாவட்டக் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ள எங்கு போய் அவரைத் தேடுவார்கள் என்று தெரியாது.

நடிகை நிஷாவின் வாழ்க்கை பிறருக்கு பாடம் புகட்டுகிறது என்பதிலும் அவர் நாகூர் மற்றும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட களங்கம் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. அவரவர்  நன்மை தீமைகளை தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். இறந்தவர்களின் தவறுகளை விமர்சிப்பதற்கான அதிகாரம் நம் கைகளில் இல்லை.

நான் கேட்கிறேன், கறுப்பு ஆடுகள் எந்தச் சமுதாயத்தில்தான் இல்லை?

“பாத்திமா வாழ்ந்தமுறை உனக்குத் தெரியுமா? – அந்த

பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா!”

என்று கவிஞர் நாகூர் சாதிக் வரிகளை எழுத நாகூர் ஹனிபா பாடிய பாடலொன்று என் நினைவுக்கு வந்தது. ஓரு இஸ்லாமியப் பெண்மணி சீரான வாழ்வு வாழ்வதற்கு அன்னை பாத்திமாவின் வாழ்க்கைமுறையை பின்பற்றுமாறு அறிவுரை கூறுகிறோம். ஒரு பெண் எப்படி வாழ்ந்து சீரழிந்து போகக்கூடாது என்பதற்கு நடிகை நிஷாவின் வாழ்க்கை  ஒரு நடைமுறை உதாரணம்.

3,12,2014 மாலை மலர் செய்தி

 

 

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: