RSS

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 9

08 Dec
Kalaimamani

ரவீந்தருக்கு “கலைமாமணி” விருது

ஒரு படத்திற்கு கதை எழுதுவதென்பது எளிதான காரியம். வெறும் கற்பனைத்திறன் இருந்தால் போதும்; கதை எழுதிவிடலாம். ஆனால் படத்தின் வசனகர்த்தாவாக இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு கற்பனைத் திறனோடு சேர்ந்து  பொது அறிவு, நாட்டு நடப்பு, வட்டார மொழியறிவு, தமிழாளுமை, மொழித்திறன், பொறுமை, கடும் உழைப்பு இப்படி எல்லாமே தேவைப்படும். இவையனைத்தும் ஒருங்கே பெற்ற ஒரு ஆளுமைத்திறன் ரவீந்தரிடம் இருந்தது. இல்லாமலிருந்தது என்னவோ ராசியும் அதிர்ஷ்டமும்தான்,

வசனகர்த்தாக்களை  முதல்வர் நாற்காலிகளிலெல்லாம் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழ் ரசிகர்கள்.  ரவீந்தரை ஒரு பட அதிபர் என்ற ஸ்தானத்திற்கு கூட உயர்த்தி வைக்க நேரங்காலம் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அடுக்கடுக்கான ஏமாற்றங்கள் அவர் வாழ்வில் சந்திக்க நேர்ந்தது.

தன் திரையுலக வாழ்க்கையில் ஆரம்ப நாட்களிலிருந்தே  தன்னோடு இணைந்து பணியாற்றி, தன் அனைத்து வெற்றிக்கும் திரைமறைவிலிருந்து பாடுபட்ட  ரவீந்தருக்கு ஏதேனும் கைம்மாறு செய்ய வேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர்.

1980 முதல் 1984 வரை முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு மலர்ந்தது. 1982-ஆம் ஆண்டு அவருக்கு “கலைமாமணி” பட்டமும், விருதும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ரவீந்தருக்கு இந்தச் செய்தி கிட்டியதும் அவரடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.  தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டிய வள்ளலின் கையால் இப்படியொரு விருது கிடைக்கப்போவதை அறிந்து பூரித்துப் போனார். தன் வாழ்நாள் முழுதும் இந்த விருதை நினைத்து, அதுவும் தான் போற்றிப் புகழும் அந்த மாமனிதரின் கையால் பெற்றதை நினைத்து பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

ரவீந்தருக்கு ஒவ்வொரு வாய்ப்பு தேடி வரும்போதும்  அதிர்ஷ்டம் அவரோடு ஒத்துழைப்புத் தர ஏனோ மறுத்தது. விருது பெறும் நாளும் வந்தது. ஆனால் யார் கையால் விருது பெறவேண்டும் என்று விரும்பினாரோ அந்த ‘இதயக்கனி’ வரவில்லை. அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லையாம்.

எம்.ஜி.ஆருக்கு பதிலாக நெடுஞ்செழியன் அன்றைய தினம் விழாவுக்கு வந்திருந்தார்.  சிறந்த வசனகர்த்தாக்குரிய சிறப்பு விருதையும், பொற்பதக்கத்தையும் தந்து “கலைமாமணி” பட்டம்  வழங்கி ரவீந்தரை கெளரவித்தார்.

இது போன்று ரவீந்தர் தன் வாழ்நாளில் ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்த ஏமாற்றங்கள் ஏராளம், ஏராளம்.  நிறைய சந்தர்ப்பங்களில் அவருடைய ஆசை நிராசையானதுதான் மிச்சம். வாய்ப்புக்கள் வசமாக கைகூடி வந்தபோதெல்லாம் ஏதேனும் இடைஞ்சல்கள் ஏற்பட்டு அது நின்று போகும். இதனூடே அவரைப் பிடிக்காதவர்கள் அவருக்கு கொடுத்த இன்னல்களும், இடையூறுகளும் கணக்கிலடங்காது.

இவை எதையுமே பொருட்படுத்தாது ‘கருமமே கண்ணாகி’ பொறுமையின் வடிவமாகத் திகழ்ந்த ரவீந்தரின் மனோதிடம் போற்றுதலுக்குரியது.

நாடோடியின் மகன்

நாடோடி மன்னன்

“நாடோடி மன்னன்” படத்திற்கு கிடைத்த வெற்றி மகத்தானது என்பதை நாமறிவோம். எம்.ஜி.ஆரை புகழின் உச்சிக்கே அது அழைத்துச் சென்றது. அந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர் காவியமாக மற்றொரு சித்திரத்தை படைக்க எண்ணி ஒரு கதையைத் தயார் செய்து வசனங்களை எழுத எம்.ஜி.ஆர். ரவீந்தருக்கு ஆணை பிறப்பித்தார்.  இரவு, பகல் என்று நேரங்காலம் பாராது கண்விழித்து கதை வசனத்தை பல மாதங்களாக கஷ்டப்பட்டு உழைத்து எழுதி முடித்தார் ரவீந்தர். “கதிரவன் பிக்சர்ஸ்” என்ற பெயரில் படத்தை தயாரிப்பதற்கான முழுமூச்சாய் ஏற்பாடானது

“செங்குருதி நீர்ப்பாய்ச்சி, சரித்திரத்தைத் சீர்த்திருத்தி, மங்காப் புகழ்கொண்ட மாவிரனின் மாகாவியம்” என்ற முழக்கத்தோடு “நாடோடி மன்ன”னின் தொடர் காவியமாக “நாடோடியின் மகன்” என்ற பெயரில் திரைப்படம் வெளிவர விருக்கிறது என்று தடபுடலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன.

“நாடோடி மன்னன்” படம் பெற்றுத்தந்த மபெரும் வெற்றியில் பூரித்துப்போய், மகிழ்ச்சிக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு “நாட்டு மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற நாடோடி மன்னனின் தொடர் காவியம்” என்ற இந்த அறிவிப்பு அவர்களிடையே மிகப்பெரிய பரபரப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

நாடோடி மன்னனின் தொடர் காவியமான “நாடோடியின் மகன்” படஅறிவிப்பிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தவர் ஆர்.எம்.வீரப்பன்தான். பட அறிவிப்பும் வெளியானது.

பத்திரிக்கைகளில் வெளியான பட அறிவிப்பைக் கண்ட ரவீந்தருக்கு பேரதிச்சி காத்திருந்தது.. மனுஷர் வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டார். காரணம், எந்தப் படத்திற்காக கஷ்டப்பட்டு கண்முழித்து கடுமையாக உழைத்து கதை வசனம் எழுதி முடித்திருந்தாரோ அந்தப படத்திற்கு வசனம் என்ற இடத்தில் அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு வேறொருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து பார்த்தால் அந்த மனிதர் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

கதை என்ற இடத்தில் பொத்தாம் பொதுவாக “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று குறிப்பிட்டுவிட்டு வசனம் என்ற இடத்தில் கவிஞர் கண்ணதாசன் பெயர் கொட்டை எழுத்தில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

பெயரளவில் கதை இலாகா என்று இயங்கிக் கொண்டிருந்த குழுவில் ஆர்.எம்.வீ.யும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நான் ஏற்கனேவே எழுதியிருந்ததைப்போல்  “காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்போன கதை” என்பார்களே, அதுபோன்று அல்லும் பகலும் அயராது உழைத்தவர் ஒருவர். பெயரும் புகழும் அள்ளிக் கொண்டு போனவரோ வேறொருவர்.

“நாடோடியின் மகன்” படம் வெளிவராமலேயே போனது.

இப்படி எத்தனையோ ஏமாற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்து வந்த ரவீந்தருக்கு இப்பொழுது அது பழகிப்போயிருந்தது.

inaintha kaigal

இணைந்த கைகள்

எம்.ஜி.ஆர் புதிதாகக் கட்சி ஆரம்பித்த நேரம் அது.  ரவீந்தர் கதை வசனம் எழுத “இணைந்த கைகள்” என்று ஒரு படம் தயாரிக்கப்படவிருக்கிறது என்று  பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியாகின. இப்படத்தை சாணக்கியா இயக்குவதாக இருந்தது

படத்திற்கான கதை மற்றும் வசனத்திற்கான பொறுப்பு  ரவீந்தரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த படம் தனக்கு பெயரையும் புகழையும் வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில் பெரும் சிரத்தையுடன் இதற்கான பணிகளில் ரவீந்தர் இறங்கினார்.

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் இப்படத்தைத் தயாரிக்கலாம் என எம்.ஜி.ஆர். ரவீந்தருக்கு வாக்களித்திருந்தார். கதையையும் வசனத்தையும் சேர்த்து ஒருசேர எழுத வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இது தனது கலைத்துறை பயணத்தில் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணும் என்று உறுதியாக நம்பினார்..

“தியாக வானிலே பூத்த முழுநிலா! காதல் இலக்கியத்திலே புதிய உலா”  என்ற தலைப்போடு புரட்சி தலைவர் நடிக்கும் படம் என அட்டகாசமான விளம்பரங்களோடு படப்பிடிப்பு தொடங்கியது.

எம்.ஜி.ஆர். புதிதாகக் தொடங்கிய கட்சிப் பணியில் முழுகவனத்தைச் செலுத்தியதால் இந்த படமும் வெளிவராமல் நின்று போனது. ரவிந்தரின் எதிர்காலக் கனவு தூள் தூளாகிப் போனது.

அவரது சோகக்கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த படம் தயாரிப்பதற்கான முழு உரிமையும் அப்படியே கோவை செழியனுக்கு விற்கப்படுகிறது.

ரவீந்தர் எம்.ஜி.ஆர்.பிக்சர்சில் கதாசிரியர்/ வசனகர்த்தா என்ற பணிக்கு மாதச் சம்பளத்தில் அமர்த்தப்பட்டு இருந்ததால் சாட்டைக்கு இசைந்திடும் பம்பரம் போல நிர்வாகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து வேலை பார்க்கின்ற சூழ்நிலை. நான் முன்னரே சொன்னதுபோல நிர்வாகத்தின் கைப்பிடி முழுக்க முழுக்க ஆர்.எம்.வீரப்பன் கைகளிலேயே இருந்தது.

“இணைந்த கைகள்”  படத்தயாரிப்பின் உரிமை கோவை செழியனுக்கு அளிக்கப்பட்ட விவரமோ , அப்படத்தின் கதை-வசனம் வேறொருவரின் பெயரில் வெளியாகவிருக்கும் திட்டமோ அறவே ரவீந்தருக்குத் தெரியாது. படத்திற்கு வசனம் எழுதுகிற பணி முழுவதுமாக முடிந்தபின் அது தானாகவே ரவீந்தருக்குத் தெரியவரட்டும் என்று இதனை ரகசியமாகவே வைத்திருந்து மூடி மறைத்து விட்டார் ஆர்.எம்வீ.

ஒருநாள் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்காக நண்பர்கள் சிலர் எம்.ஜி.ஆரின் அலுவலகம் சென்றபோது அங்கே அவரைக் காண முடியவில்லை.  கோவை செழியன் ஆபிஸில் இருப்பதாகச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் ஒரு மூலையில் காகிதக் குவியலுக்கு மத்தியில்  தன் முகத்தை புதைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்து பக்கம் பக்கமாக வசனங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். வீட்டில் கார் ஓட்டுனராக பணிபுரிந்த மணி சொன்னார். “இவர் யார் தெரியுமா? இவர்தான் ரவீந்தர்”. ரவீந்தர் என்ற பெயரை அவர்கள் பிறர் சொல்ல கேள்விப்பட்டிருந்தார்களேயொழிய அவரை நேரில் அதுவரை பார்த்தது கிடையாது. அப்போதுதான் முதன்முதலாக பார்த்தார்கள். ரவீந்தர் வந்தவர்கள் யாரென்றும் கவனிக்கவில்லை. “கருமமே கண்ணாகி” தன் எழுத்துப்பணியிலே முழுவதுமாக மூழ்கிப்போயிருந்தார்.

உழைக்கும் கரங்கள்

ரவீந்தர் உண்மையிலேயே வசனம் எழுதிக் கொண்டிருந்தது  கோவை செழியனின்  படமான “ உழைக்கும் கரங்கள்” என்ற படத்திற்கு. இப்படத்தில் ரவீந்தர் உழைத்த கரங்களுக்கு சன்மானமாக மாதச்சம்பளம்தான் கிடைத்ததே தவிர பெயரையும் புகழையும் நாஞ்சில் மனோகரன் எந்தவித பிரயாசமுமின்றி தட்டிப்பறித்துக்கொண்டு போயிருந்தார். அப்படத்திற்கு Political Star Value வேண்டும் என்ற காரணத்திற்காக  நாஞ்சில் மனோகரன் கதை-வசனம் எழுதியதாக விளம்பரப்படுத்தி இருப்பதாக ஆர்.எம்.வீரப்பன் ரவீந்தருக்கு ஆறுதல் கூறுகிறார். அப்பொழுதும் ரவீந்தரின் பிரதிபலிப்பு வெறும் புன்னகையாக இருந்ததேத் தவிர அவருக்கு கோபம் வரவில்லை.

MGR Nanjil

ரவீந்தர் திரைக்கு பின்னாலிருந்துக்கொண்டு எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தபோதும், படவிழாக்களிலோ, பொதுமேடைகளிலோ தன்னை ஒருபோதும் முன்னிலைப் படுத்திக் கொண்டதில்லை. அது அவருக்கு தேவையாகவும் படவில்லை. அமைதியே உருவாக பணி செய்வதையே தன் கடமை எனக் கருதினார். புகழுக்கு ஆசைப்படாத பிழைக்கத் தெரியாத மனிதரவர்.

“இணைந்த கைகள்” படம் “இணைந்த கரங்கள்” என்ற பெயரில் எடுக்கலாம் எனத் திட்டமிடப்பட்டு பின்னர் கைமாறி “உழைக்கும் கரங்கள்” என்றானது. 1976-ஆம் ஆண்டு  “உழைக்கும் கரங்கள்” படத்தை கோவை செழியன் தயாரித்தார். படம் முழுவதிலும் அரசியல் தாளிப்பு இருக்கும், ரவீந்தரை எம்ஜி.ஆரிடம் முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்து அவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்த நகைச்சுவை நடிகர் டணால் கே.ஏ,தங்கவேலு இப்படத்தில் வில்லன் பாத்திரமேற்று நடித்திருந்தார்..

“உழைக்கும் கரங்கள்” படத்தில் எம்.ஜி.ஆருக்கு “ரங்கன்” என்ற உழைப்பாளி பாத்திரம். அவருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். சிறையிலிருக்கும்போதே தேர்தலில் அமோக வெற்றி பெறுகிறார் ரங்கன். பஞ்சாயத்து யூனியன் தலைவர் லஞ்சம் வாங்கி ஊழல் திருவிளையாடல்கள் புரிகிறார். அவரது அக்கிரமங்களுக்கு எதிரான போர்க்கொடி எழுப்புகிறார். இறுதியில் அவரது உழைக்கும் கரங்கள் அமோக வெற்றி அடைகின்றன.

இக்கதையை எழுதியது அனைத்தும் ரவீந்தர்தான். “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட கதை. “இணைந்த கைகள்” விளம்பரம் வெளியானபோது  கதை: ரவீந்தர் என்றும் வசனம்: சொர்ணம் என்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அதே கதையை படமாக்கும் உரிமையை கோவை செழியனுக்கு கொடுக்கப்பட்டபோது “கதை-வசனம்” இரண்டுமே நாஞ்சில் மனோகரன் என்று ரசிகர்களின் காதில் பூ சுற்றப்பட்டது. ரவீந்தர் என்ற ஒரு அப்பாவி மனிதனின் உழைப்பு சூறையாடப்பட்டு, அவனுக்கு கிடைக்கபட வேண்டிய புகழ் பறிக்கப்பட்ட செய்கை அந்த மனிதனுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.  “உனக்குத்தான் சம்பளம் கிடைக்கிறதே, பிறகு உனக்கெதற்கு பெயரும் புகழும்” என்று சொல்வதுபோலல்லவா இருக்கிறது?

இதுபற்றிய விவாதங்கள் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி எழுப்பியபோதெல்லாம்  “ரவீந்தர் நம்ம ஆளுதான். அவர் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் பொருட்படுத்தமாட்டார்” என்பதே ஆர்.எம்.வீ,யின் ‘சால்ஜாப்பு’ பதிலாக இருந்தது

ரவீந்தரின் பெயர் ஒவ்வொரு படத்திற்கும் முன்னிலை படுத்தப்படும் போதெல்லாம் ஆர்.எம்.வீரப்பனால்  மக்கள் திலகத்திற்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை இது ஒன்றுதான். படம் வெற்றியடைய வேண்டுமென்றால் பிரபலமானவர்களின் பெயர்கள், அதுவும் குறிப்பாக கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான், முரசொலி சொர்ணம், கோவை செழியன், நாஞ்சில் மனோகரன் இவர்களெல்லாம் ரவீந்தரை தூக்கி முழுங்கியது கட்சி என்ற போர்வையில்தான்.

“பார்த்தோம்; படித்தோம்; ரசித்தோம்,” என்று சர்க்காரியா கமிஷனில் எம்.ஜி.ஆர். அளித்த புகார் குறித்து கலைஞர் சொன்ன பதிலை அப்படியே படத்தில் கையாண்டிருந்தார். ரவீந்தர்.  வசனத்தில் இப்படிப்பட்ட அரசியல் நையாண்டித்தனம் புரிவது மந்திரக்கோல் மைனருக்கு கைவந்தக் கலை என்று நாஞ்சில் மனோகரனுக்கு ஊடகங்கள் பாராட்டு மழை பொழிந்திருந்தன.

அப்பாஸ்

“குலேபகவாலி” படத்தைப்போன்று அதே பாணியில் அரேபிய மண்ணின் வாசனையோடு “அப்பாஸ்” என்ற படத்தை தயாரிக்க விரும்பினார் ரவீந்தர். அவரே கதை-வசனம் எழுதி தயாரிப்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொண்டு பணத்தையும் தன் நண்பர்களிடமிருந்து கடனாக பெற்று படத்தயாரிப்பில் இறங்கி விட்டார்..

எம்.ஜி.ஆர். தன்னிடம் பணிபுரிந்த எத்தனையோ பேர்களுக்கு படத்தில் நடித்துக்கொடுத்து உதவியதைப் போன்று தன் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைப்பார் என்ற முழு நம்பிக்கை ரவீந்தருக்கு இருந்தது.

கே.ஆர்.விஜயா, மனோரமா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிப்பதற்காக ஏற்பாடாகியது. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு இதர வேலைகள் முழுவீச்சாய் நடைபெற்றன.  1981-ல்  இப்படத்தின் படப்பிடிப்பு நாகூர் மற்றும்  கூத்தூரில் நடைபெற்றதாக ரவீந்தரின் உறவினர் மன்சூர் அவர்களிடமிருந்து தெரியவந்தது.

ரவீந்தரின் போதாத காலமோ அல்லது வேறு யாருடைய சூழ்ச்சியினாலோ அந்த எண்ணம் நிறைவேறாமலேயே போனது. நிதி பற்றாக்குறை ஒரு முக்கிய காரணம். நாகிரெட்டி போன்ற பெரும் பட அதிபர்களுக்கெல்லாம் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார் ரவீந்தர். ஆனால் அவருடனே இருந்து பணியாற்றியவர்கள் ‘கூட இருந்தே குழி பறித்தார்கள்’. அவருக்கு நிதியுதவி கிடைக்காத வண்ணம் முட்டுக்கட்டைகள் போட்டார்கள்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். அரசியலில் பிஸியாகிப் போகிறார். , அவரால் நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது. அந்த திட்டம் முழுவதுமாக கைவிடப்படுகிறது

 – அப்துல் கையூம்

– தொடரும் 

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: