RSS

தமிழகத்து தான்சேன் பிறந்த தினம்

25 Dec

25 டிசம்பர்

இன்னிசை பிறந்தது
மூங்கிலின் உராய்விலா?
எனக்குத் தெரியாது.

தமிழகத்து தான்சேன்
தரணியில் பிறந்தது
இன்றுதான் என்று
எனக்குத் தெரியும்.

நாயகப் பெருமான் புகழ்
நற்றமிழில் பாடி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தன்மான கவரிமான்

பண் பாடி சிறந்த
வெண்தாடி வேந்தன்

கண்ணியம்சேர்
கறுப்புச் சூரியன்

இனபேதம் மதபேதம் காணாது
சங்கநாதம் முழங்கிய
சிங்கக் குரலோன்

சமயம் கடந்த
சங்கீத இமயம்

எட்டுக்கட்டை தொனியில்
எட்டுத்திக்கும் இவன்குரல்
இன்றும் கேட்கும்
என்றும் கேட்கும்

ஒலிபெருக்கியே மிரளும்
ஒரே மனிதன்
இவனாகத்தான் இருக்கும்

இஸ்லாமிய இசையில்
இவன் தொட்ட சரணம்
எட்டிப் பிடிக்க
இதுவரையில்லை ஜனனம்

பாட்டால் கலகம்
விளைவித்தோர் உண்டு – இவன்
பாடியே கழகம் வளர்த்த
திராவிடக் காளை

முப்பால் புகழ்
முத்தமிழ் கானத்தை
ஏழுகடலுக்கு அப்பால்
எட்டிவைத்த சிறப்பால்
இவனை நாம் போற்றுகிறோம்

வெல்லமென இனிக்கும்
இவன் குரல்
இல்லம்தோறும் இசைக்கும்

நிகழ்காலம் இவனை
நினைக்குதோ இல்லையோ
வருங்காலம் நிச்சயம்
வாழ்த்திப் பேசும்

அன்று முதல் இன்று வரை
ஒரே கட்சி
கூடு விட்டு கூடு மாறா
கொள்கையுள்ள பட்சி

இந்த
கறுப்புச் சூரியனின்
கன்னித் தமிழுக்கு
ஏதோ ஒரு கம்பீரம்.

இந்த
பச்சைத் தமிழனின்
‘நச்’சென்ற
உச்சரிப்பில்
நமக்கெல்லாம்
நரம்புகள் புடைக்கும்.

‘முரசு’ ஒலித்தால்
நரம்புகள்
புடைக்கத்தானேச் செய்யும் ?

இவன்
வாயிலிருந்து புறப்பட
வார்த்தைகள்
வரம் பெற்று வந்து
இவனை
வலம் வரும்.

ஆர்மோனியக்
கட்டைக்குள்
அடங்காத
எட்டுக்கட்டை குரல்
இவன் குரல் !

இவன்
பாடிடும் பாணி;
பாமரன் மனதிலும்
பதித்திடும்
பசுமரத்தாணி !

தொப்பி யணிந்த
இவன்
தமிழிசைக்கு கட்டியதோ
தலைப்பாகை !

இன்னிசையில்
இவன் சூடியதோ
வெற்றி வாகை !

நாகூரின்
அடைப்புக்குறிக்குள்
இந்த இசைவாணனின்
நாமமும்
நாடெங்கும்
நினைவுறுத்தும்.

வாழ்வாங்கு வாழ
வளமோடு வாழ
வாழ்த்தும் என் இதயம்

 

Tags:

One response to “தமிழகத்து தான்சேன் பிறந்த தினம்

  1. வே.நடனசபாபதி

    January 11, 2015 at 5:31 am

    தமிழகத்து தான்சேனுக்கு பிறந்த நாள் வணக்கங்கள். அவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்! அவரது பெருமைகளை அழகிய கவிதையில் வடித்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
    (அவரது பிறந்த நாள் டிசம்பர் 25 ஆம் நாள் என்பது இன்று தான் தெரிந்தது)

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: