இனிக்கும் இராஜ நாயகம் – பாகம் 3
வண்ணக் களஞ்சியப் புலவரின் கவிதைத் திறன் :
தமிழிலக்கிய மரபின்படி அனைத்து காப்பியங்களும் கடவுள் வாழ்த்துடனே தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. பைந்தமிழில் புதுமைகள் பல புகுத்து இருப்பினும் காப்பிய இலக்கணங்கள் ஒவ்வொன்றையும் விதிமுறைகள் வழுவாமல் அவற்றை கவனமாக பின்பற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர் என்பது இவரது மற்றொரு சிறப்பு.
ஆரணத் தினிலகி லாண்ட கோடியி
லேரணக் கடல்வரை யினின்மற் றெங்குமாய்
பூரணப் பொருளெனப் பொருந்ருமோர் முதற்
காரணக் கடவுளை கருத்திருத்துவாம்
என்ற இறைவணக்க வரிகளுடன் “இராஜநாயக” காப்பியம் அட்டகாசமாய்த் தொடங்குகிறது. இக்காப்பியம் முழுக்க முழுக்க “சாலமன்” என்று விவிலியம் போற்றும் சுலைமான் நபி அவர்களைப் பற்றியது என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டிருந்தோம். மொத்தம் 2240 பாடல்களைக் கொண்ட காப்பியம் இது.
இவருக்கு வண்ணக் களஞ்சியப் புலவர் என்ற கெளரவப் பெயர் நாகூர் வாழ் புலவர்களால் “புலவர்கள் அவை”யில் வழங்கப்பட்டதன் காரணம் இவர் பாவினங்களில் ஒன்றான வண்ணம் அதிகமாகப் பாடியதால்தான்.
பல்லவி
மனமே வாழ்வைச் சதமென் றனுதினம் நபிபதம்
வாழ்த்தா திருந்தாய் மனமேசரணம்
நண்ணும் திருமதினத் தண்ணல் அப்துல்லா பெறும்
நாத ராமகு முதர்
வண்ணக் களஞ்சியமும் விண்ணோரெவரும் துதி
வணங்கும் கமலப் பாதர்
கண்ணீர் பெருகிவரும் அந்நாள் மகுஷரிலே
காப்போ ரவரல்லாமல்
தீர்ப்போம் துயரமெவர்
மேலே காணும் இப்பாடல் வண்ணக் களஞ்சிய பாடல் வகை வண்ணங்களில் ஒன்றாகும்
வண்ணக் களஞ்சியப் புலவரின் மொழிவளமும், கவிநடையும், சொல்லாட்சியும் வியந்து போற்றத்தக்கது. கவிகம்பனின் கவிதை நடைக்கிணையாக ஒப்பிட்டு நோக்க வல்லது. அதில் வரும் சந்தம் போற்றும் தன்மை வாய்ந்தது.இலக்கியத்திறன் கொண்டது.
“தீன்விளக்கம்” என்ற இவரது மற்றொரு காப்பியத்தில் [ஒன்பதாம் போர்புரி படலம் -44-253] இவர் கையாண்டுள்ள சொற்பதம் போர்வீரர்களுக்கு எழுச்சியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. இதில் காணும் சந்தத்தில் வீரமுழக்கம் இருப்பதை படிப்போர் புரிந்துக் கொள்ள இயலும்.
வடவைபோல் கொதிப்பன்
சண்டமாருதம் போல்எதிர்ப்பன்
இடிகள்போல் எதிர்ப்பன் போரில்
ஏழுலகம் இவனுக்கு ஈடோ
கடிதினில் எதிர்த்து யானும்
கையிழந்தேன் இங்கே
உடல் உயிரொடுமே சேர்ந்தது
ஊன்றிய விதி ஒன்றாமே!
இராஜநாயகம் காப்பியத்திலுள்ள காணப்படும் உவமை. உவமேயம், படிமம், குறியீடு, சந்தம், வருணனை, வார்த்தை பிரயோகம், சொல்லோவியம், அனைத்தையும் இலக்கிய ரசனையோடு காண்பது அவசியம்.
இராஜநாயகத்தில் ‘ஹுர்லீன்கள் ‘ என்றழைக்கப்படும் சொர்க்கத்து கன்னிகைகளுக்காக தனியான ஒரு படலத்தையே புலவர் அமைத்துள்ளார்.
வண்ணக் களஞ்சியப் புலவரின் கவிநடையை ஏன் கவிகம்பனின் கற்பனைவளத்துடன் ஒப்பிட்டுச் சொன்னேன் என்பதற்கு கீழ்க்காணும் வரிகள் என் கூற்றுக்கு சான்று பகரும். வண்ணக் களஞ்சியப் புலவரின் உருவகக் கற்பனை மெச்சத்தக்கது. “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல அவருடைய உருவக வருணனைக்கு இப்பாடல் ஒன்றே நல்லதோர் எடுத்துக்காட்டு.
வரம்செய்வோன் நபிவரவு அறிந்து
எழில் பொழின் மன்னன்
திருந்து சாணை செய்பதும
ராகங்களைத் திறையாகப்
பொருந்தவே இடற்கு இணைதரு
மகிழலர் புன்னை
அரும்பு எலாந்தர ளங்களை
இடுவது ஒத்தருளும்(எறும்புகள் விருந்திடு படலம் – 6)
சோலை ஒன்றிற்கு சுலைமான் நபியவர்கள் நுழைகின்றபோது அச்சோலையை ஒரு குறுநில மன்னனாகப் புலவர் உருவகப்படுத்துகிறார். மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய அந்த மாமன்னரின் வருகையைக் கண்டு அச்சிற்றரசன் (சோலை) பூரிக்கின்றானாம். கைம்மாறாக பரிசில் ஏதாவது தரவேண்டுமே! என்ன செய்வது? அவன் கப்பம் செலுத்துகிறான். எப்படிப்பட்ட கப்பம்?
மகிழ மலர்கள் திறையாக (வரிப்பணமாக) மாமன்னரின் கால்களில் சரமாரியாக வந்து விழுகின்றன . அச்செம்மலர்கள் நவமணிகளில் ஒன்றாகிய (பதுமராகமாகிய) பட்டை தீட்டிய மாணிக்கக் கற்களாகக் காட்சி தருகின்றனவாம். தூறலாகப் பொழிந்த புன்னை அரும்பு மொட்டுகள் முத்துகளாகக் (தரளம்) காட்சி அளிக்கின்றனவாம்.
புலவரின் உருவகக் கற்பனை நயம் நம்மை அப்படியே மாய உலகிற்கு அழைத்துச் சென்று நம்மை மகிழ்விக்கின்றதுதென்னவோ மறுக்க முடியாத உண்மை. இயற்கையின் வருணனையில் சற்று நேரம் நம்மை நாமே மறந்து போகின்றோம். இலக்கிய இன்பம் என்று இதைத்தான் சொல்கின்றார்கள் போலும்.
வண்ணக் களஞ்சியப் புலவரின் கற்பனை ஆற்றலுக்கு மற்றொரு சான்றினை இங்கே காண்போம். உயர்ந்த நிலைமாடத்தில் பளிங்கினால் உருவான தளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அத்தளத்தில் எழில் மங்கைகள் நின்ற வண்ணம் காட்சி தருகின்றார்கள். அவர்கள் கண்களின் பிம்பம் பளிங்குத் தளத்தில் பளிச்சென்று தெரிகிறது. மின்மினி நட்சத்திரங்களாய் அவைகள் ஒளிர்கின்றன. அவர்களின் கண்களின் தோற்றத்தை, குளத்தில் உள்ள மீன்கள் என நினைத்ததாம் மீன்கொத்திப் பறவை. அந்தரத்திலிருந்து அசுர வேகத்தில் பறந்து வந்து அதனைக் கவ்விக் கொள்ள நினைக்கிறது. அந்தோ! பாவம்! பளிங்குத் தரையில் மோதி பலனற்று போகிறதாம்.
பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம்குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல்அசை யாது
விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்
மீன்எறி பறவைவீழ்ந் திடுமே
(நகரப் படலம் – 3 (13)
தமிழிலக்கியத்திற்கு அதிகமான காப்பியங்கள் பங்களிப்பு செய்த பெருமை முஸ்லிம் புலவர்களையேச் சாரும். வேறு எந்தச் சமயத்தாரும் இதுகாறும் ஒரு சாதனையை புரியவில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. அவர்கள் தமிழுக்கு வழங்கிய காப்பியங்களின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தைந்து. அதில் பெருங்காப்பியங்கள் 16. சிறுகாப்பியங்கள் 9.
அதென்ன சிறுகாப்பியங்கள்? பெருங்காப்பியங்கள்? உங்களுக்குள் கேள்வி எழலாம். விளக்கம் பெற தண்டியலங்காரம் துணைபுரிகிறது.
அறமுத நான்கினுங் குறைபாடுடையது.
காப்பிய மென்று கருதப் படுமே”
(தண்டியலங்காரம் – பாடல் 10)
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பயப்பன “பெருங்காப்பியம்” என்றும், அவற்றுள் ஏதேனும் குறைந்து காணப்பட்டால் அது “சிறுகாப்பியம்” என்றும் தண்டியலங்காரம் தெளிவாக்குகிறது. தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். [எழுதப்பட்ட காலம் 946-1070]
இவ்வகையில் நோக்கும்போது முஸ்லிம் புலவர்கள் எழுதிய ஒன்பது காப்பியங்கள் சிறுகாப்பியங்கள் என்ற காப்பியத் தகுதியைப் பெறுகின்றன. காப்பிய இலக்கணங்கள் பொருந்துமாறும் அவை அமைந்துள்ளன. அவர்களின் 16 படைப்புகள் பெருங்காப்பியங்கள் என்ற தகுதியைப் பெறுகின்றன. இச்சாதனை இஸ்லாமியப் புலவர்கள் தமிழ் மொழிக்களித்த மகத்தான பங்களிப்புக்கு சிறந்த சான்றாகும். வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜநாயகம்” பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
உமறுப் புலவரும் வண்ணக் களஞ்சியப் புலவரும் :
இவ்விரு புலவர்களின் தமிழாற்றலும், அற்புத கவிதை நடையும், மொழியாளுமையும் நம்மை இவர்களின் காப்பியத்தின்பால் ஈர்க்கின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதே சமயம் உண்மைக்கு புறம்பான அதீத கற்பனைகளில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. மார்க்கம் அல்லது வரலாற்றின் அடிப்படையில் வரும்போது அறிவுக்கு ஒவ்வாத பொய்யான கற்பனைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன. இவ்விரு பெரும்புலவர்களின் கவிநடையில் நாம் நெகிழ்ந்து போகின்றோம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் இழைத்திருக்கும் தவறுகளை என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
சீறாப்புராணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள் அதீத கற்பனைகளைச் சேர்த்து உமறுப்புலவர் வழங்கியிருப்பதை நாம் காண்கிறோம். இதே பாணியை ஆங்காங்கே வண்ணக்களஞ்சியப் புலவரும் பின்பற்றியிருப்பதை நம்மால் காண முடிகிறது.
அண்ணலாரின் பிறப்பு படலத்திலிருந்து காப்பியம் நெடுகிலும் இதுபோன்ற கற்பனைச் செருகுகளை காண நேரிடுகின்றது. அண்ணலார் அவர்களை அன்னை ஆமினா அவர்கள் ஈன்றேடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை உமறுப்புலவர் வருணிக்கின்றார்.
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
பரந்து செவ் வரிக்கொடி யோடி
மான்மருள் விழியா ராமினா விருந்த
வளமினைத் திசையினை நோக்கி
நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி
னாலுமூ லையுமொரு நெறியாய்த்
தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுஜுதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)
நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தபோது கஃபதுல்லாஹ்வின் நாலு மூலையும் அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி ஒரு சேர சுஜுது செய்து எழுந்தனவாம். இதுபோன்ற ஒரு நிகழ்வு திருக்குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் நமக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சுகின்றது..
கஃபதுல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி அனைத்துலக மாந்தர்களும் சுஜுது செய்ய வேண்டியது கடமையாக போதிக்கப்பட்டிருக்க உமறுப்புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபதுல்லாஹ்வே சுஜுது செய்தது எனக் கற்பனை செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அனைத்து ஆற்றலையும் கொண்ட அல்லாஹ்வை சிரம்தாழ்த்தி வணக்கம் செய்ய நிறுவப்பட்ட கஃபத்துல்லாஹ் அன்னை ஆமினா அவர்களின் வீட்டை நோக்கி சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தது என்ற கற்பனை நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இது புலவர்களுக்கே உரித்தான கற்பனை போலும் என்று சமாதானப்படுத்த மனம் நினைத்தாலும் மார்க்க ரீதியில் நோக்கும்போது இப்படி உண்மைக்கு மாறாக எழுதியிருக்கிறாரே என்று மனது வேதனை கொள்கிறது.
வண்ணக்களஞ்சியப் புலவரும் உமறுப்புலவரின் அதே பாணியை பின்பற்றி இருப்பதை நாம் காண முடிகின்றது. இராஜ நாயகம் காவியத்தில் உள்ள 20-ஆம் படலத்தில் கஃபா பற்றிய சில செய்திகள் கிடைக்கிறன. இதில் கஃபா பற்றிய பாடல் ஒன்று..
அத்தலத்திழிந்தங்கிருந்தனர் அதன் மேல்
அமரர்கள் கரத்தினால் இயற்ற
எத்தலத்தினிலும் வியனுற விளங்கி
இலங்கொளி கதிர்மதி இருபால்
நித்த நித்தமும் சாய்ந்தோட மேலவர்கள்
தவமெலாம் நிறைவுற உலக
மத்திமத்துதித்த ககுபத்துல்லா தன்
வாய் திறந்தழுதது அன்றே
இந்தப் பாடலில் கஃபா அழுததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு இறைவன் அதனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க, அது சொல்லிற்றாம்
“… எனைச் சூழ் தரவுன்னக் கிணையாய்
இயற்றிய புத்துகளை வைத்து
ஆதிவித வணக்கம் புரிந்தனர் கொடியோர்
ஆகையால் அழுதனன் என்ன..”
(பாடல்- 20-05)
“தன்னைச் சுற்றிக் கொடியவர்கள் சிலைகளை (புத்துக்களை) வைத்து வழிபடுவதால் அழுதேன்” என்றுரைத்ததாக புலவர் குறிப்பிடுகின்றார்.
இதன் பிறகு நபிகள் வந்து இவற்றை அகற்றி கஃபாவைத் தூய்மை செய்ததாகவும் அங்கே குறுபான் (உயிர்பலி) கொடுத்ததாகவும் இராஜநாயகம் நூல் குறிப்பிடுகிறது.
பொருந்தும் எப்பதிக்கும் முதற்திருப்பதியாம்
புனிதநன்னகரில் வந்ததன் பின்
அருந்தவமியற்றும் ககுபத்துல்லாவுட்
புகுந்து அதைச்சூழ்ந்து அணியாய்
இருந்த புத்தனைத்தும் ஏவலார் தமை விட்
எடுத்தெறிந்திடப் புரிந்து இறையைப்
பரிந்ததிலிருந்து வணங்கியுட் கனிந்து
பரவினர் கருணையங் கடலே
(பாடல்- 20-10)
தமிழ் இலக்கியத் திருமண மரபுகளுக்கும், இசுலாமிய மரபுகளுக்கும் நிறைய வேறுபாகள் உள்ளதை யாவரும் அறிவர். அப்படியிருக்க உமறுப்புலவரும், வண்ணக் களஞ்சியப்புலவரும், தமிழ் மரபை இக்காப்பியங்களில் காட்டும் எண்ணத்தில் உண்மைக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாய் இருக்கிறது.
வண்ணக் களஞ்சியப் புலவரின் காப்பியமொன்றில் பகுதாதில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்ச்சி தமிழ்நாட்டு விழாவாக சித்தரிக்கப்படுகிறது. Poetic Licence எனப்படும் புலவர்களுக்கே உரித்தான உரிமத்தை, கற்பனை என்ற பெயரில் அறிவுக்கு ஒவ்வாத காட்சிகளை புகுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது.
சீறாப்புராணத்தில் வரும் இவ்வரிகளை சற்று பாருங்கள்.
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப
பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிது
பாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு
இப்பாடல் சீறாப்புறாணத்தில் மணம் பொருத்துப் படலத்தில் இடம் பெற்றுள்ளது. ,(பாடல் 56)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்திலுள்ள பெரியோர்கள் கலந்து பேசிய காட்சி நமக்கு நகைப்பூட்டுகின்றது. குடும்பத்தார் இருவரும் ‘பொருத்தம்’, ‘நல்ல நாள்” முகூர்த்தம்’ முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம். கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, “சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக” எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் எடுத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். (மரைக்காயர், மாலுமியார், இராவுத்தர் – இவர்களை ஏன் விட்டார் என்று புரியவில்லை)
ஒரு பாடலில்அன்னை கதீஜா நாயகிக்கு நெற்றிக்குப் பொட்டும் இட்டு அழகு பார்க்கிறார் உமறுப் புலவர்.
மணமகனாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டுகையில் தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபியவர்கள் அதன் நடுவே பவனி வந்ததாகக் குறிப்பிடுகின்றார் உமறுப்புலவர். (மணம்புரி படலம், பாடல் 42).
கம்ப ராமாயணத்தில் இடம்பெறும் வருணனைகள், காட்சியமைப்புகள் உமறுப்புலவர், வண்ணக் களஞ்சியப் புலவர் இவர்களிருவரையும் வெகுவாகப் பாதித்திருப்பதை நாம் நன்றாகவே உணர முடிகின்றது.அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்த கதை நம் நினைவுக்கு வருகிறது.
இந்த வருணனையை பாருங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீதிஉலா வருகையில் அவ்வூரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51).
“முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி …”
என இதனைப் பாடுகிறார் உமறுப்புலவர் (பாடல் 60).
பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):
கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால்
தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன்
பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல்
காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்
மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப்பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).
இங்ஙனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அவ்வேளையில் குறவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாக உமறுப்புலவர் புளுகித் தள்ளுகிறார். 103).
சீறாப்புராணத்தை மட்டுமே படித்து நபிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இதனையும் உண்மைச் சம்பவமாகக் கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் இந்நூலில் அனேகம் உள்ளன.
உதாரணத்திற்கு சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மாநாட்டில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நிகழ்த்திய உரை என் நினைவுக்கு வருகிறது. “சீறாப்புராணத்தில் மானுக்கு துணை நின்ற படலம் என்ற தலைப்பிலே ஒரு பகுதி வருகிறது. அதாவது, மானுக்குத் துணையாக இருந்த படலம் என்பதாகும். அது அருவிபோன்ற தமிழ் ஓட்டமும் ஆற்றுப் பெருக்குப் போன்ற வளமான சொற்களும் கொண்டன. அதிலே நபிகள் நாயகம் மான் ஒன்றை காப்பாற்றுவதற்காக அதற்கு பிணை கொடுத்து நின்றார் என்பதுதான் அப்பகுதி” என்று அந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்து நபிகள் நாயகம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காக எங்ஙனம் செயல்பட்டார் என்பதை பெருமையாகச் சொன்னார்..
இப்படியாக கலைஞர் கருணாநிதி முதற்கொண்டு சிலம்பொலி செல்லப்பன் உட்பட சகோதர சமயத்தைச் சார்ந்த அறிஞர்கள் உண்மைக்குப் புறம்பான சரித்திரத்தில் காணப்படாத நிகழ்வுகளை சீறாவை முன்வைத்து தவறாக விளங்கிக் கொண்டார்கள் என்பது நமக்கு புரிகின்றது.
சீறாப் புராணத்தில் இடம்பெறும் அந்தக் காட்சியைப் பார்ப்போம்.
புலி துரத்தியதால் மான் கூட்டம் ஒன்று சிதறி ஓடியதில் ஆண் மானையும், அண்மையில் பிறந்த கன்றினை பிரிந்து வந்த பெண் மானையும் வேடன் ஒருவன் பிடித்து வைத்து தனக்கு நல்ல உணவாகும் எனக் கட்டிப் போட்டிருந்தானாம்.
அவ்வழியே வந்த நபிகள் நாயகத்திடம், “”என்னை விட்டால் ஓடிப்போய் என் குட்டிக்குப் பால் கொடுத்துத் திரும்பி வந்து விடுவேன்” என மான் வேண்டியதாம். நாயகமவர்கள் வேடனிடம் இதைக் கூறி அந்த மானை விடுவிக்குமாறு பரிந்துரைத்தார்களாம். “”ஓடிப் பிழைக்கும் மான் ஒருபோதும் திரும்பாது” என்றானாம் வேடன். “”மான் வராவிட்டால் ஒன்றுக்கு இரண்டாக நான் தருவேன்” என நாயகம் பிணை நின்றதும் வேடன் மானை விடுவித்தானாம். மான் வேகமாக ஓடிச்சென்று கன்றுக்குப் பால் கொடுத்து விட்டு வேடனிடம் திரும்பிச் செல்ல தயாரானபோது அதன் ஆண் மானும் மற்ற மான்களும் தடுத்தும் அது கேட்கவில்லையாம். தாய் மான் எவ்வளவோ சொல்லியும் கேளாது கன்றும், அதனுடனேயே வந்ததாம். மான் ஒன்றுக்கு இரண்டாக வருவதைக் கண்ட வேடன் மனந்திருந்தி, மானை சுதந்திரமாக விட்டதோடு இஸ்லாத்திலும் சேர்ந்தானாம்.
இந் நிகழ்ச்சியைக் கூறும் உமறுப் புலவர்,
மானைக் கொண்டுவரப் போய்
ஈமானைக் கொண்டு அகத்திற் புக்கான்
என்கிறார். “மான் – ஈமான்” என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து நடத்தும் சொல் விளையாட்டை மட்டுமே நம்மால் ரசிக்க முடிகின்றதே தவிர புலவருடைய அதீத கற்பனை நமக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
வரலாற்றின்படி இப்படியொரு நிகழ்வு நபிகளின் வாழ்வில் நடந்ததா என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது பச்சையான பொய் என்பது படிப்போர் எல்லோராலும் புரிந்துக் கொள்ள இயலும். கம்பராமாயணத்தில் இடம்பெற்ற புள்ளிமான்/ மாயமான் நிகழ்வைப்போன்று ஒன்றினை தானும் புனையவேண்டும் என்று உந்தப்பட்டு உமறுப்புலவர் தன் கற்பனையை இப்படி ஓட விட்டிருக்கலாம்
வண்ணக் களஞ்சியப் புலவரின் கஃபத்துல்லா சுஜுது செய்வதாய் சொல்லப்பட்ட கற்பனை முதலானவை உமறுப்புலவரின் படைப்பின் தாக்கமே என்பது நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வண்ணக்களஞ்சியப் புலவரின் “ஈகையின் சிறப்பு” போன்ற இஸ்லாத்திற்கு மாறுபடாத கருத்துக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
ஈகையின் சிறப்பு :
இஸ்லாத்தில் ஐம்பெருங் கடமைகளில் ஒன்று ஈகை. தர்மங்களில் தலையானது தானம் என்பர் சான்றோர். தனது பாடல்களுக்கிடையே இஸ்லாத்தின் கடமைகளே ஆங்காங்கே வலியுறுத்த வண்ணக் களஞ்சியப் புலவர் தயங்கவில்லை ‘‘தரும லாபப் படல”த்தில் வரும் ஈகையின் சிறப்பை உணர்த்தும் பாடலை இப்போது பார்ப்போம். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகிய ஈகையின் மேன்மையை விளக்கிடும் பாடலிது :
இயற்பெரும் பல மந்திரம் எவையை ஓதிடினும்
வியத்த நோன்பு நித்தமும் உறையினும் இதன்மேல் எச்
செயல் பொருந்து புண்ணியங்கள் செய்யினும் பசிதீர
நயத்தொ ஈய்வதோர் தருமத்தைப் போலுண்டோ லாபம்.ஆனதத்துயிர் இடறையும் அகற்றி வாழ்வருளும்
வானகப் பெரும் பதவியும் தரும் எல்லாம் மாறித்
தானிறக்கினும் உடன்வரு சருவ சாதகமாய்
நானிலத்தினில் தருமத்தைப் போலுண்டோ லாபம்கூட்டு மக்களும் மனைவியும் சுற்றமும் குறித்த
தேட்டு மற்றெவைகளும் உடலும் உடன் சேரா
தீட்டு நற்றுணை வருபொருள் எவையென எண்ணி
நாட்டும் தன்மம் செய்யாதது போலுண்டோ நட்டம்’
- வேதவரிகள் வழக்கமாக எத்தனையோ ஓதினாலும், சிறப்பான நோன்பு நோற்ற போதிலும், அதனினும் மேலான நற்ககரியங்கள் செய்த போதிலும், மனமுவந்து ஒருவருக்கு பசிதீர ஈகையளித்திடும் செயலுக்கு ஈடுண்டோ?
- ஒரு உயிரின் துன்பம் தீர்த்தால் அவருக்கு மேலுலகில் பெரும் பதவி கிடைக்கும். ஓருவர் செய்யும் தானம் அனைத்தும் மரணித்துப் போகையில் உடன் வருவது போல் நற்பயன் வேறு ஏதுமுண்டோ?
- மனைவி, மக்கள், உறவினர் கூட்டம் தேடிவைத்த செல்வம் முதலியன கூடவே வராது. ஈகை ஏதும் புரியாது சுயநலத்தோடு வாழும் வாழ்க்கைக்கு கிடைக்கும் கேடு போல நட்டம் வேறு எதுவும் உண்டோ?
- ஆதாயத்துக்கான வருமானம் தேடல், இன்னும் பிற வகையிலான பொருளீட்டால் சம்பாத்தியம் அனைத்தும் உயிர் பிரியும் போது உடன் சேர்ந்து வரவே வராது, தருமம் செய்யாது சுயநலத்தோடு தான், தனது குடும்பம் என வாழும் போக்கினால் கிடைக்கும் அழிவும், கேடும் போல் வேறு அழிவு உண்டோ?
ஒரு சித்தருக்குரிய சிந்தனையை வண்ணக் களஞ்சியப் புலவரின் இப்பாடலில் நாம் உணர முடிகிறது. வீடு வரை உறவு, வீதி வரை மனை, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? என்ற கண்ணதாசனின் வரிகளைக் செவியுறும் போது அவர் வண்ணக் களஞ்சியப் புலவரின் பாடலால் உந்தப் பட்டிருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றன.
இஸ்லாமிய கலைக்களஞ்சியம் தந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் தனது “முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்”” என்ற நூலில் வண்ணக்களஞ்சியப் புலவரின் புலமையை மனம் திறந்து பாராட்டுகிறார். இராஜ நாயகத்தில் நல்லுபதேசங்கள் பலவற்றைக் காண முடிகின்றது.
யாரையும் நகையாடாதே, வீண்தர்க்கம் செய்யாதே, சினமுறாதே, இறையை அஞ்சு, அவனை தியானம் செய், நல்லோர் நட்பை நாடு, தீயோர் நட்பை தவிர், அன்பு செய், துன்பம் வருகையில் துணிந்திரு, நேரிய முறையில் இல்லறம் செய், நல்லறம் புரி – இதுபோன்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய நற்போதனைகளைன் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய “இராஜ நாயகத்தில்’ பல்வேறு இடங்களில் நாம் காண முடிகிறது.
ஆனால், உமறுப்புலவரின் சீறாப்புராணத்தில் இஸ்லாத்திற்கு முரணான பொய்யும் புனைவுகளுங்கூடிய செய்திகள் மலிந்து காணப் படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்க் காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப் படலம், நகரப் படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு, கற்பனை நயம்படப் புலவர் பாடிச் செல்கிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கூறும் ; மெய்யான வரலாற்றைப் பாடும்போதுகூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது..
– தொடரும்