RSS

ரவீந்தரும் சத்யஜித் ரேயும் – தொடர் 12

02 Apr

Raveendar aSatyajit Ray a

வங்காளத்தில் பிறந்த உலகப் புகழ்ப் பெற்ற சத்யஜித் ரேயுக்கும், நாகூரில் பிறந்த காஜா மொய்தீன் என்ற ரவீந்தருக்கும் அப்படியென்ன தொடர்பு இருக்க முடியும்?

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நான் முடிச்சு போடுவதாக வாசகர்கள் நினைக்கக்கூடும்.

இருவரும் Science Fiction (அறிபுனை) திரைப்படங்களுக்கு இந்தியத் திரையுலகில் வித்திட்ட முதல் இந்தியர்கள். மேலை நாட்டவர்களை வியக்க வைத்தவர்கள்.

சத்யஜித் ரே வடநாட்டில் பிறந்ததினால் புகழ்க்கொடி நாட்டினார். ரவீந்தர் தென்னாட்டில் பிறந்ததினால் யாராலும் கண்டுக்கொள்ளப் படாமல் நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து, எழுதிக் குவிக்கும் இயந்திரமாகச்  செயல்பட்டு மறைந்தும் போனார்.

சத்யஜித்ரே விருதுகளைத் தேடிப் போகவில்லை. இவரைத் தேடி விருதுகள் வந்தன. ஆம். மிக உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்க இரண்டுபேர் கொண்ட ஆஸ்கார் குழு உடல்நலம் குன்றியிருந்த  சத்யஜித் ரேயைத் தேடி மருத்துவமனை வந்து, தந்து கெளரவித்தனர். பிரஞ்சு நாட்டு “லிஜியன் டி” பரிசு, யூகோஸ்லோவியா நாட்டு “கொடி விருது”  “மகஸாஸே” விருது, இந்திய நாட்டு “பாரதரத்னா”, “பத்மஸ்ரீ”, “பத்மபூஷன்”, “பத்மவிபூஷன்”  போன்ற விருதுகள் அனைத்தும் இவருக்குத் தானாகவே வந்துக் குவிந்தன.

காலங்காலமாக எம்.ஜி.ஆருக்கு உழைத்த காரணத்தால் ரவீந்தருக்கு பெரிய மனது படைத்து ஒரே ஒரு விருது – “கலைமாமணி” என்ற பட்டம் கொடுத்தார்கள். அதுவும் அவரது அபிமானக் காவலர் எம்.ஜி.ஆர். கையால் பெற அவர் கொடுத்து வைக்கவில்லை. எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வர இயலாததினால் நெடுஞ்செழியன் கையால் கொடுக்க வைத்தார்கள். கலைமாமணி விருதைப் பொறுத்தவரை கழுதைகள், குதிரைகள் யாவும் ஒன்றுதான். ஏன்…? தமன்னா, அனுஷ்கா கூட கலைமாமணி விருது பெற்றவர்கள்தானே?

சத்யஜித் ரே மறைந்த போது திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ரவீந்தர் மறைந்தபோது திரையுலகத்தினரும் யாருமே கண்டுக் கொள்ளவில்லை, ஊடகங்களும் அவரது மறைவுச் செய்தியைத் தரவில்லை.

இறக்கும் தறுவாயில் சத்யஜித் ரே பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருந்தார். ரவீந்தரை தமிழ்த் திரையுலகம் கைகொடுத்து தூக்கவில்லை.   இறுதிவரை அவர் வாடகை வீட்டிலேயே காலம் தள்ள வேண்டியதாயிருந்தது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர்  சத்யஜித் ரே.

ஏன்? ரவீந்தருக்கு மட்டும் வங்காளத்தோடு தொடர்பு இல்லாமலா?

ரவீந்தர் கதை வசனம் எழுதி அவர் வெளிச்சத்திற்கு வந்தப் படம் “நாடோடி மன்னன்”. எம்.ஜிஆர்.  “மாயா மச்சீந்தரா” படப்பிடிப்புக்காக கல்கத்தா சென்றபோது அங்கு பார்த்த “If I were King” ஆங்கிலப் படத்தின் கருவை ரவீந்தரிடம் சொல்ல, அதுவே  “நாடோடி மன்னன்” உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

நாகூர் காஜா மொய்தீனுக்கு “ரவீந்தர்” என்ற புனைப்பெயரே வங்காளத்துக் கவிக்குயில் ரவீந்தரநாத் தாகூரின் அபிமானத்தால் வைத்துக் கொண்ட பெயர்தான். இவரை நாகூரின் தாகூர் என்றாலும் அது மிகையாகாது. சத்யஜித் ரே ஓவியக் கலை பயின்றது ரவீந்தர்நாத் தாகூர் தோற்றுவித்த சாந்தி நிகேதன் பல்கலைக் கழகத்தில்தான்.

இவ்வகையில் அறிந்தோ அறியாமலோ, வங்காளத்திற்கும் தமிழகத்திற்குமான தற்செயலான நிகழ்வுப் பொருத்தங்களை நாம் காண முடிகின்றது.

தமிழ்மொழியில்   அறிபுனைத் திரைப்படங்களுக்கு  முன்னோடி யார்?” என்ற கேள்வியை முன்வைத்தால் எல்லோரும் ஒருமுகமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைத்தான் கூறுவார்கள். நாகூர் ரவீந்தர்தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள். யாரும் நம்ப மாட்டார்கள். இது வெளிச்சத்திற்கு வராத உண்மை. இந்த உண்மையை எந்த மீடியாக்களும் வெளிக்கொணர்ந்தது கிடையாது என்பதுதான் வருத்தம் தரக்கூடிய செய்தி.

1982-ஆம் ஆண்டு ஸ்பீல்பெர்க்கின் E.T. (the Extra Terrestrial) என்ற ஆங்கிலத் திரைப்படம் மேலைநாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் சக்கைப் போடு போட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். இதே போன்று  2003-ஆம் ஆண்டு ஹிர்த்திக் ரோஷன் நடித்த “Koi Milgaya” என்ற இந்திப்படத்தையும் இந்தியத் திரையுலகில் நவீனயுக்தி, புதுசிந்தனை, மாறுபட்ட படைப்பு என்றெல்லாம் ஊடகங்கள் பாராட்டுமழை பொழிந்தன.

112

தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.

“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு.  டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர் ஒருவரேதான்.

தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற  புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும்.  புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.

பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.

தமிழ் மொழியில் எத்தனையோ அறிபுனைத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. “விக்ரம்”,  “நியு”, “இரண்டாம் உலகம்”, “அம்புலி”, “எந்திரன்” என எத்தனையோ சினிமாக்களை உதாரணம் காட்ட முடியும். இவை யாவற்றிற்கும் முன்னோடியாகத் திகழ்ந்த படம்தான் “கலையரசி”.

வேற்றுக் கிரக மனிதர்களை மையமாக வைத்து எழுதப்பட்டு, இந்தியத் திரையுலகில் மாபெரும் புரட்சியை உண்டு பண்ணிய முதல் அறிபுனைத் திரைப்படம் இதுதான்.

இதுபோன்ற அறிவியல் தொடர்பான கதைகளை கையாண்ட சுஜாதா, அரவிந்தன் நீலகண்டன், ராஜ்சிவா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் நாகூர் ரவீந்தருக்கு பின்னர் வந்தவர்கள்தான் என்பதை இங்கு நான் பதிவு செய்வதன் மூலம் உண்மை நிலவரம்  இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவரும்.

kalai-arasi08

“கலைஅரசி”  வெள்ளித்திரையில் திரையிடப்பட்டபோது வெகுவாகப் பேசப்பட்டது. பறக்கும் தட்டு Concept-யை இந்தியத் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்தது ரவீந்தர்தான். கதையை உருவாக்கி ஏ.காசிலிங்கத்திடம் தனது கற்பனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஆர்ட் டைரக்டர் ஏ.கே.பொன்னுச்சாமியை விண்கலம் மற்றும் அயல்கிரகத்து வடிவமைப்பை வரையச் செய்தவர் ரவீந்தர்.

1950-களின் தொடக்கம்வரை வேற்றுக்கிரக விண்கலத்தை பறக்கும் தட்டு (Flying Saucers) என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் இதனை  ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள்” ’(UFO-Unidentified Flying Object)  என்று அழைக்கலாயினர். அரிஸ்டாட்டில் இதனை “சொர்க்கத்தின் தட்டு” என்று அழைத்தார்.

கி.பி. பதினோறாம் நூற்றாண் டிலேயே  சீனக் கல்வியாளரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில் “பறக்கும் தட்டு” பற்றிய தன் கற்பனையை வடித்திருந்தார். பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கலைஅரசி படத்தில் பறக்கும் தட்டின் வடிவமைப்பு இதுபோலத்தான் இருந்தது.

kalai-arasi19

விளம்பரத்தையோ, புகழையோ நாடாத ரவீந்தர் தன்னுடைய பெயரை போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி, அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு மனோபாவம் கொண்டவராக – Don’t Care Master-ஆக  இருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம். ஜி. ஆர், கதாநாயகனாகவும்  பி. பானுமதி மற்றும் பலரும் “கலைஅரசி: படத்தில் நடித்தனர். இவர்களைத் தவிர  ராஜஸ்ரீ, பி.எஸ்.வீரப்பா, கண்ணன், எம்.என்.நம்பியார், சச்சு, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர்.ஜானகி, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா  என்று ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இதில் இடம்பெற்றிருந்த சச்சு, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, பாடகி ரத்னமாலா போன்ற கலைஞர்கள் ரவீந்தர் கதாசிரியராக இருந்த எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்திலிருந்து பயிற்சிபெற்று உருவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும்,   இப்படத்தில் எம்.ஜி.ஆர் பெயரும் ரவீந்தர் பெயரும் ஒன்றாக இடம் பெற்றிருந்ததாலும், இதனை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் படம் என்றே பலரும் நினைத்தனர். உண்மையில்  “சரோடி பிரதர்ஸ்” என்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்து வழங்கியிருந்தார்கள்.

114

1950-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இப்படம் எடுத்து முடிப்பதற்கு நீண்ட காலம் பிடித்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. காரணம், இப்படத்தின் பாடலாசிரியர்களின் ஒருவரான பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 1959-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இப்படம் 1963-ஆம் ஆண்டுதான் திரைக்கு வந்தது. ரத்னமாலா, பி.லீலா, ஜிக்கி போன்ற பாடகிகள் 50-களில்தான்  புகழ்வெளிச்சத்தில் இருந்தார்கள். .

“சரோடி பிரதர்ஸ் திரையுலகிற்கு புதியவர்களாக இருந்தார்கள்.  சில காரணங்களுக்காக எம்ஜிஆரின் பட நிறுவனத்துக்கு முன் இப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது”

என்று பிலிம் நியூஸ் ஆனந்தன் தகவல் தருகிறார். இவரைத் “தமிழ்த்திரைப்பட உலகத்தின் என்சைக்ளோபீடியா” என்று பாராட்டினாலும் தகும். மனுஷர் அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்.

எம்.ஜி.ஆர். தன் சொந்த நிறுவனத்தின் படத்தயாரிப்பு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் இப்படத்தை முடிப்பதற்கு போதுமான ஒத்துழைப்புத் தரவில்லை என்பதை வேறொரு மூத்த தயாரிப்பாளர் ஒருவர் வாயிலாக அறிந்தேன்.

113

“கலைஅரசி” படத்தில், கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் யாவும் மனதில் நிற்கும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தன. சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும் இப்பாடல் அதில் இடம் பெற்றிருந்தது.

ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?

பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!

ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”

கவித்துவம் நிறைந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடிய “நீலவான பந்தலின் கீழே”, ஆலங்குடி சோமு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “அதிசயம் பார்த்தேன்” போன்ற இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகமான பாடல்களாகவே இருந்தன

மூலக்கதை டி.இ.ஞானமூர்த்தி என்று விளம்பரம் செய்திருப்பார்கள். ஆனால் திரைக்கதை, திரைப்பட வசனம் அனைத்தையும் எழுதியது ரவீந்தர்.  பட டைட்டிலில் வசனம்:ரவீந்தர் என்று மட்டுமே காண்பிப்பார்கள்.

அரச படங்களுக்கு தூயதமிழில் அடுக்குமொழி வசனங்கள் மட்டுமல்லாது, வழக்குத் தமிழில் எதார்த்தமான உரையாடல்களை எழுதுவதிலும் ரவீந்தர் திறம் பெற்றிருந்தார். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது

காதல், சாகசம், அறிவியல் புனைவு, அதிரடி, நவீனம் என்று அத்தனை பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த படமாக பல புதுமைகளை கொண்ட படமாக “கலைஅரசி” இருந்தபோதிலும், இப்படம் அடித்தட்டு ரசிகர்களை ஏனோ சென்று அடையவில்லை.

அன்றைய சூழ்நிலையில் அரச கதைகள், சமூக கதைகள் மட்டுமே வெற்றியை தேடித் தந்தன. இது போன்ற அறிவியல் புனைவுகள் தமிழ்த்திரையுலகிற்கு பரிசோதனை ஓட்டம் (Experimental) என்றுதான் சொல்ல வேண்டும். இதே படம் பிற்காலத்தில் வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்குமோ என்னவோ தெரியாது. “கலைஅரசி” எம்.ஜி.ஆரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பெறாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு நட்டத்தை உண்டு பண்ணவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று கருதலாகாது. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூல் சற்று குறைவாக இருக்குமே தவிர  பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பண இழப்பை உண்டு பண்ணிவிடாது.   தமிழில் ஒரு பழமொழி உண்டு, “யானை படுத்தால் குதிரை மட்டம்” என்று. நட்டம் ஏற்படாத அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூலை பெற்றுத் தந்து விடும்.

எம்.ஜி.ஆர்  இரட்டைவேடங்களில் நடித்த 17 படங்களில் “கலைஅரசி”, நாடோடிமன்னன் – இவையிரண்டும் ரவீந்தரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகள். இவையிரண்டும் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைத் தழுவிய அத்தனை இரட்டைவேட எம்.ஜி.ஆர். படங்களுக்கும் இவைகள்தான் முன்னோடியாகத் திகழ்ந்தன.

ரவீந்தரின் அத்தனை சாதனைகளும் முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று மறைக்கப்பட்டு, அவரது திறமைகள் மறுக்கப்பட்டு, இறுதிவரை அவர் புகழை குன்றிலிட்ட விளக்காக வெளிக்காட்டாமல் குடத்திலிட்ட விளக்காகவே மூடி மறைத்து வஞ்சித்த தமிழ்த் திரையுலகத்தை என்னவென்றுச் சொல்வது?

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி” என்பார்களே. அதுபோல பேசாமடந்தையாக இருந்த ரவீந்தரின் தலையில் மிளகாய் அரைத்தவர்கள் ஏராளம். 32-படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதிய ரவீந்தரின் பெயர் படடைட்டிலில் காட்டப்பட்ட படங்கள் ஒரு சில படங்கள்தான். ஒரு படைப்பாளி வஞ்சிக்கப்பட்டதை எடுத்துக்காட்ட  இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?.

“கலைஅரசி” படத்தில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதாநாயகன் எம்.ஜி,ஆர் மற்றும் கதாநாயகி பி.பானுமதி இருவருமே இரட்டை வேடமேற்று நடித்திருப்பார்கள். இதுபோன்று வேறுபடம் ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர்.  “மோகன்” மற்றும் “கோமாளி”  என்ற இரு மாறுபட்டவேடம் ஏற்று நடித்திருப்பார். பி.பானுமதி, “வாணி”  மற்றும்  “வள்ளி”  என்ற இரு பாத்திரங்களில் நடித்திருப்பார்.

வேற்றுக் கிரகத்திலிருந்து விண்கலம் ஒன்று பூமிக்கு வருகிறது. அதில் வேற்றுக்கிரகவாசிகள் இருவர் உள்ளனர். அவர்கள் பார்வைக்கு பூமிவாசிகள் போலிருப்பினும் விஞ்ஞான ரீதியாக பெரிதும் முன்னேற்றம் கண்டவர்கள்

இந்த படத்தில் காமிரா அபாரமாக கையாளப்பட்டிருக்கும். காமிராமேன் ஜே.ஜி.விஜயம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார்.  இவர் ‘ஜெனோவா’, ‘ஆனந்த ஜோதி’. ‘அன்னையின் ஆணை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“Zoom Lens”  தமிழ்த்திரையுலகில் புழக்கத்தில் இல்லாத காலம் அது. விஞ்ஞான நுட்பங்கள் அதிகம் கையாளப்படாத காலம். பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படிப்பட்ட சவால்களையெல்லாம்  எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். “ஹாலிவுட்” சினிமா உலகைப் போன்று தொழில்நுட்பம் வசதி  இல்லாத அந்தக் காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க மிகுந்த மனோதைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.

தந்திரக் காட்சிகள் எடுப்பதில் வல்லவர்களான, ஜெர்மனியில் இருந்து  டி.ஆர்.சுந்தரம் அவர்களால் வரவழைக்கப்பட்ட  ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்றவர்  ஜே.ஜி.விஜயம். “கலைஅரசி” படம் வெளியானபோது இந்திப்பட உலகில் அனைவரும் வியந்துப் போயினர். தமிழர்களின் திரைப்பட நுட்பங்களைக் கண்டு அதிசயித்தனர்.

ரவீந்தரின் வித்தியாசமான அறிவியல் திரைக்கதை, எஸ்.நடராஜனின் படத்தொகுப்பு, ஏ.கே.பொன்னுச்சாமியின் கலை வடிவமைப்பு, ஜே.ஜி.விஜயத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒளிப்பதிவு அத்தனையும் இப்படத்தில் அபாரமாக இருந்தது.

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதபோதும் மேலைநாட்டு படங்களுக்கு நிகராக தமிழ் மொழியில் நம்மாலும் தயாரிக்க இயலும் என்று சரோடி பிரதர்ஸுக்கு நம்பிக்கையூட்டி உற்சாகப் படுத்தியவர் ரவீந்தர். ரவீந்தரின் புதுப்புது யோசனைகளுக்கு பக்கபலமாக இருந்தவர் மக்கள் திலகம் அவர்கள்.

அறிபுனை திரைக்கதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இந்தியர்களான ரவீந்தருக்கும் சத்யஜித்ரேயுக்கும் இடையேயான ஒற்றுமையை இப்போது பாப்போம்.

The Alien என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் (ஏப்ரல் 1967) சத்யஜித்ரே ஈடுபட்டிருந்தார். இந்திய – அமெரிக்க கூட்டுத்தயாரிப்பில் இப்படம் வெளியாகவிருந்தது. இந்தப் படம் இடையில் நிறுத்தப்பட்டு, 2006-ல் தொலைக்காட்சித் திரைப்படமாக   வெளிவந்தது.

வேற்றுக்கிரக மனிதர்களைப் பற்றிய முந்தைய படங்களில் அவர்கள் கொடூரமானவர்களாகவே காட்டப்பட்டு வந்தனர். நட்புணர்ச்சியோடு பூமிக்கு வந்து இறங்கும் ஏலியன் பற்றிய சித்தரிப்பை முதன்முதலில் திரைக்கதை வடித்தவர் சத்யஜித்ரே என்பது பலரும் அறிந்திராத செய்தி.

ரவீந்தருக்கு அவர் கூடவே பணிபுரிந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் “நாகூர் அல்வா” கொடுத்ததைப் போன்று, சத்யஜித்ரேயுக்கும் அவருக்கு மேனேஜராக பணிபுரிந்த மைக் வில்சன் என்ற அமெரிக்கர் அல்வா கொடுத்தார்.

சத்யஜித்ரேயின் “ஏலியன்” கதையைத் திருடி தன் பெயரில் காப்புரிமை செய்திருந்தார். கொலம்பியா பிக்சர்ஸ் சார்பில் மார்லன் பிராண்டோ மற்றும் பீட்டர் செல்லர்ஸ் நடித்து தயாரிக்கப்படவிருந்த “ஏலியன்” படம் வெளிவரவில்லை. காரணம் கூட்டுத்தயாரிப்பில் இடம்பெறுவதாக இருந்த சத்யஜித்ரே, அந்த அமெரிக்கரின் வஞ்சிக்கப்பட துரோகச் செயலின் காரணமாகவே மனம் வெறுத்துப் போய் இந்தியா திரும்பி வந்துவிட்டார்.

உலக சினிமா புத்தகத்தில் E.T. திரைப்படத்தைப் பற்றி எஸ்.ரா. எழுதிய வரிகள் இவை:

“சத்யஜித்ரே இது போல வேற்றுகிரகவாசி ஒருவனைப் பற்றிய குழந்தைகள் திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று விரும்பி அதற்கான ஓவியங்களை வரைந்திருந்தார். அனால் அவரால் கடைசிவரை அது போன்ற ஒரு படத்தை இயக்க முடியவில்லை. ஸ்பீல் பெர்க்கின் இத்திரைப்படம் அக்கனவை நினைவாக்கியது போல அமைந்திருந்தது”

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் E.T. திரைப்படம் சத்யஜித்ரே யின் கனவுகளை நனவாக்கவில்லை. அதற்கு பதிலாக அவருடைய கனவுகளை கள்ளத்தனமாக  களவாடியிருந்தது.

“திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது”

என்று ரவீந்தரின் இறுதி காலத்தின்போது அவரைப் பற்றி எழுதி மனது வெம்பிய எழுத்தாளரும் எஸ்.ரா.அவர்கள்தான்.

1982-ல் வெளியான  ஸ்பீல்பெர்க்கின் E.T. படத்தின் பெரும்பான்மையான பகுதி சத்யஜித்ரேயின் திரைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதற்கு ஆதாரங்களை என்னால் அடுக்கி வைக்க முடியும்.

கூடவே இருந்து குழிபறித்த மைக் வில்சன் வாயிலாக சத்யஜித் ரேயின் முழுக்கதையையும் எழுத்துவடிவில் பிரிண்ட் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட அத்தனை ஹாலிவுட் பெரிய தாயரிப்பாளர்களிடமும் வினியோகிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு காப்பிதான் E.T, படத்தின் இயக்குனர் ஸ்பீல் பெர்க்கின் கையில் பலாச்சுளையாக கிடைத்தது.

E.T. பட வெற்றிக்குப் பிறகு இது சத்யஜித் ரேயின் கதைதானே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது “இல்லவே இல்லை. இந்தக் கதையின் பிரிண்ட் ஹாலிவுட்டில் நோட்டீஸ் போன்று வினியோகிக்கப்பட்டபோது நான் பள்ளிச் சிறுவனாக இருந்தேன்” என்று மழுப்பினார்.

இதுவும் பச்சைப் பொய். 1965-ல்  ஸ்பீல் பெர்க் கலிபோர்னியாவில் பள்ளி உயர்நிலைப்படிப்பை முடித்திருந்தார். இந்தக் கதை1967-ல் ஹாலிவுட் சினிமா உலகத்தில் பரவியது. 1969-ஆம் ஆண்டிலேயே இளவயது இயக்குனராக ஹாலிவுட்டில் அவர் அறிமுகம் ஆகியிருந்தார். இதிலிருந்து அவரது புளுகு நன்றாக வெளிப்படுகிறது.

“Bankubabur Bandhu” என்ற பெயரில் சத்யஜித் ரே எழுதிய சிறுகதையே E.T. படத்திற்கு மூலக்காரணமாக இருந்தது. புகழ்பெற்ற Science Fiction எழுத்தாளர் ஆர்தர் C. கிளார்க் ஸ்பீல்பெர்க்கின் இந்த திருட்டு வேலையை உலகறிய அம்பலப்படுத்தியிருந்தார். இவரை லண்டனில் சந்தித்தபோதுதான் சத்யஜித்ரே “ஏலியன்” கதைக்கருவைப் பற்றி எடுத்துச் சொன்னார். பிறகு, ஆர்தர் கிளார்க் தன்  நண்பர் மைக் வில்சனிடன் இந்த வித்தியாசமான கதையை எடுத்துச் சொல்ல அவர் உடனே கல்கத்தா சென்று சத்யஜித்ரேயுடனேயே இருந்து முழுக்கதையையும் எழுதி எடுத்துக்கொண்டார். பின்னர் ரேயுடன் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் “ஹாலிவுட்”தயாரிப்புக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தரகராகச் சென்றார்.

Arthur C.Clarke

ஆர்தர் சி. கிளார்க்

ஹாலிவுட் திரையுலகத்தின் புகழ்ப்பெற்ற மற்றொரு தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான Martin Scorses  என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

“I have no qualms in admitting that Spielberg’s E.T. was influenced by Ray’s Alien. Even Sir Richard Attenborough pointed this out to me”.

சத்யஜித் ரேயின் கதையில் ஒரு நீர்க்குட்டையில் வேற்றுக் கிரகத்து விண்கலம் ஒன்று வங்காளத்தின் ஒதுக்குப்புற பகுதியில் தரையிறங்குகிறது. அந்த விண்கலத்தை பூமியிலிருந்த எழுந்தருளிய கோயிலாக பாவித்து அந்த கிராம மக்கள் வழிபடுகிறார்கள். அந்த விண்கலத்திலிருந்து வந்திறங்கிய வேற்றுக்கிரகத்து விநோத பிராணியுடன் “ஹபா” என்ற சிறுவன் நட்புறவு கொள்கிறான். அந்த வேற்றுக்கிரகத்து பிராணி பூமியில் வசிக்கும் குறுகிய காலத்தில் அவ்வூர் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில்  சிறு சிறு குறும்புகளும், யாருக்கும் பாதிப்பில்லா  சேட்டைகளையும் ஒவ்வொன்றாகப் புரிகிறது.

இந்தக் கதை முற்றிலும் ஆங்கிலப்படம் E.T. யுடன் ஒத்துப் போகிறது.  சத்யஜித்ரே கற்பனையில் வடித்த வேற்றுக்கிரக   பிராணியின் அப்பட்டமான காப்பி ஸ்பீல்பெர்க் வடிவமைத்த E.Tயின் உருவமைப்பு என்பது இப்போது நமக்கு விளங்கும்.

alien

சத்யஜித் ரே ஒரு மிகச்சிறந்த ஓவியர். ஆகையால் அந்த வேற்றுக்கிரகத்து பிராணியின் உருவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட   தத்ரூபமாக வரைந்து வைத்திருந்தார்.

சத்யஜித்ரே யின் கதையில் வரும் ஒரு காட்சியமைப்பு இது. வேற்றுக்கிரக பிராணி நீர்க்குட்டையில் அருகாமையில் இருக்கும் புற்செடியின் இலையை ஆராய்கையில் அதன் கண்கள் மஞ்சள் நிற ஒளியில் பிரகாசமாக மின்னும். தன் நீண்ட விரல்களை மெதுமெதுவாக அதை நோக்கி நீட்டுகையில் அதிலிருந்து மலர் மொட்டு விரியும். அப்போது கீச்சுக் குரலில் மென்மையான சிரிப்பை உதிர்த்தவாறு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும். E.T. ஆங்கிலப் படத்தை பார்த்தவர்கள் காட்சிக்கு காட்சி இந்த பிரதிபலிப்பை உணரலாம்.

E.T படத்துக்கு முன்னால் 1977-ல் வெளிவந்திருந்த படமான ஸ்பீல்பெர்க்கின் “Close Encounters of the Third Kind” படத்திலும் ஓரிரண்டு காட்சிகளை சத்யஜித்ரே திரைக்கதையிலிருந்து பயன்படுத்தியிருக்கிறார்..

ரவீந்தரைப் போலவே சத்யஜித்ரேயும் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதை அறியும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. “கோயி மில்கயா” இந்திப்படம் சத்யஜித்ரேயின் கதையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது. இந்த உண்மை அறியாமல் இப்படம் வெளிவந்தபோது இது E.T. படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊடகங்கள் வர்ணித்தது வேடிக்கையான ஒன்று.

பெரிய மனது படைத்த சத்யஜித் ரே,  நீதி கேட்டு வழக்கு எதுவும் போடவில்லை. பத்திரிக்கையாளர்கள் இதைப்பற்றி ரேயிடம் வினவியபோது, “என்னுடைய ‘ஏலியன்’ படக்கருவின் தூண்டுதலின்றி E.T. படத்தை எடுத்திருக்க சாத்தியமே இல்லை” என்ற பதிலோடு மட்டும் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார். தொடக்கத்திலிருந்து இந்த உண்மையை அறிந்து வைத்திருந்த ஆர்தர் சி. கிளார்க், சத்யஜித் ரேயை தொடர்பு கொண்டு “உங்கள் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள். ஸ்பீல்பெர்க்கிடம் தொலைபேசியில் இதைப்பற்றி பேசுங்கள். அல்லது வழக்கு தொடுங்கள்”  என்று அறிவுறுத்தியபோது “போனால் போகட்டும். ஒரு உண்மையானக் கலைஞனுக்கு இதுவெல்லாம் சகஜம். நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது” என்று பெருந்தன்மையோடு பதிலளித்தார்.

இவருடைய பெருந்தன்மையை பார்க்கும்போது ரவீந்தரின் கதைகளைத் திருடி மற்றவர்களின் பெயரில் வெளியிட்டபோது ரவீந்தர் கூறிய அதே பதில் போன்றுதான் இருக்கிறது..

ரவீந்தர் ஒருக்கால் வடநாட்டில் பிறந்திருந்தால் அவருடைய திறமைக்கு போதிய அங்கீகாரம் கிடைத்திருக்குமோ? அவருக்கும் விருதுகள் தேடி வந்திருக்குமோ ? அவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்களோ?

– அப்துல் கையூம்

இதோ “கலைஅரசி” படத்தின் முழுநீளப் படத்தைக் காண

A Glimpse of the Story in English:

116Kalai_Arasi

Kalai Arasi Penned by Raveendar is an outstanding Science Fiction Movie ever tried in Indian Cinema. Raveendar tries to explain Tamil audience, what is space and how the Extraterrestrial looks. Nobody in the Indian Film Industry ever dared to take up such script. Kalai Arasi’ is a well-blended story of romance, science fiction, action and drama with the main cast of MGR and Bhanumathi playing double roles.

Amazing, in 1963 how people understood about the aliens and the space ship. This is definitely an Experimental film tried with much confidence and courage.

The plot is very simple and adaptable for the Tamil culture. Mohan is a poor, but honest and hard-working farmer. Vani is the daughter of the rich landlord who lives in the city while their lands are under the supervision of her cousin and suitor, the wily Kannan. On a visit to the village with her friends, Vani meets Mohan. Mohan and Vani find themselves falling in love with each other gradually.

Meanwhile a spacecraft is moving rapidly towards the earth. Inside are two alien creatures who resemble earthly humans. From their conversation we understand that they are traveling to the earth on a strange mission.

Apparently their planet has made far-reaching strides in science, but is woefully backward in performing arts. Hence they are coming to the earth to identify and take back a talented artiste who could teach their denizens music and dance.

As they near the earth, one of the aliens, Thinna, who is the commander-in-chief of their planet, switches on a monitor, and the screen shows music and dance performances in various parts of the earth. He seems to be dissatisfied with them all, until he comes across Vani singing. He is mesmerized with her performance and decides that she would best suit their purpose.

Returning home after a clandestine moonlight rendezvous with Mohan, Vani falls into the clutches of the aliens. Thinna drags her inside the spacecraft, while the other alien Malla elects to stay on in the earth for a while. Vani is shocked when she finds herself far away from the earth. The king of the alien planet assures her that she will return safely after she had taught them dance and music. Vani is defiant and furious. However, princess Rajini treats her kindly and Vani agrees to teach her. Meanwhile back in the earth Vani’s father blames Kannan for Vani’s disappearance. Kannan goes in search of Vani and comes across a mentally deranged girl called Valli who bears a startling resemblance to Vani. Assuming that she is Vani, he gets her kidnapped and brings her home. Saddened to see his daughter a lunatic, Vani’s father agrees for Kannan to get married to her, and thus Kannan marries the poor Valli, under the assumption that he is marrying the rich heiress Vani.

Mohan spies the alien Malla one night as Malla is getting ready to return to his planet. They have a brief skirmish and Malla dies. Thinna lands in his spacecraft just then to take Malla home. He sees Malla’s corpse and places it in an ante-chamber inside the craft.

Watching all this, Mohan enters the craft quickly, and dragging Malla’s corpse out, he jumps into the ante-chamber. Thinna does not notice this and takes off from the earth. When he nearing his planet, he ejects what he assumes to be Malla’s corpse from his spacecraft, but it is actually Mohan who falls into the alien planet.

By happenstance Mohan comes across a kind-hearted jester from another planet who is on the way to the palace. This jester takes Mohan to his house and feeds him. As they step outside, the jester is struck dead by a passing meteor. As luck would have it, the jester had resembled Mohan in facial features, and so Mohan takes his place and goes to the palace. There he meets Vani and manages to make her realize his true identity. They outwit the cunning Thinna and return to the earth. Meanwhile Kannan is caught strangling Valli and is arrested by the police. Mohan and Vani reach home.

All is well that ends well

தொடரும்

Advertisements
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: