RSS

ஒரே மாதத்தில் குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர்

23 Apr

Haja Basha Photos

2009-ஆம் ஆண்டு நண்பர் ஹாஜா பாஷாவைப்பற்றி முன்னொரு கட்டுரை வரைந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதிக் கொள்ளலாம்.

ஜெயகாந்தன் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்றதும் அவரெழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” கதை என் மனக்கண்முன் நிழலாடியது.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்றதும் நண்பர் ஹாஜா பாஷாதான் சட்டென்று என் நினைவுக்கு வந்தார்.

ரப்பானி வைத்திய சாலா சையது சத்தார், யூனானி டாக்டர் தாவூத், வாணியம்பாடி அப்துல் கவுசர், பழனி பாரம்பரிய சித்த வைத்திய சிகாமணி, சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் இவர்களின் ஒட்டு மொத்த கலப்படக் கலவையாக காட்சி தந்து அருள் பாவித்தார் ஹாஜா பாஷா.

இப்பொழுது அவருக்கு  “மதனி” என்ற பட்டம் வேறு. மதினா பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இப்படி போட்டுக் கொள்வார்கள் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய தகவல். ஒருக்கால் இவர் தபால்வழிக் கல்வி கற்றிருந்தாரோ என்னவோ எனக்குத்தெரியாது.

தலையில் பச்சைத் தொப்பி, கைவிரலில் மோதிரமாய் டிஜிட்டல் தஸ்பீஹ், தோளில் சால்வையாக சவுதி கத்ரா, கையில் நவரத்தினங்களும், கற்களும் (அவரே தன்கையால்) பதித்த கைத்தடி, மருதாணியிட்ட தாடி மீசை, பார்ப்பதற்கு பாபா பக்ருத்தீன் பீர் போல மெஞ்ஞானியாகக் காட்சி தந்தார்.

என்னைச் சந்தித்து உரையாடியபோது இந்தியில்தான் பேசினார். அண்மையில் போபால் சென்று வந்ததாகவும் அங்கு அவருக்கு பயங்கர வரவேற்பு தரப்பட்டதாகவும் கூறினார். (விஷவாயு தாக்கியதே அதே போபால்தான்.) மாநிலம் விட்டு மாநிலம் சென்று நம்மவர் பிரபலம் அடைந்திருக்கிறாரே என்று பூரித்தேன்.

‘புதிய பறவை’ படத்தில் சரோஜாதேவி மூச்சுக்கு மூச்சு “கோபால்… கோபால்” என்று கூறுவதைப்போல் இவரும் பேச்சுக்கு பேச்சு “போபால்.. போபால்..” என்றார்.  “போபாலில் இப்படி.. போபாலில் அப்படி” என்று எனக்கு நாட்டு நடப்பை எடுத்துரைத்தார்.

“நீங்கள் யார் யாரைப் பற்றியோ எழுதுகிறீர்கள். என்னைப் பற்றி எழுத மாட்டேன்கிறீர்களே” என்று குறைபட்டுக் கொண்டார். அவர் குறையை நிவர்த்திச் செய்ய இப்பொழுதுதான் எனக்கு ஓய்வு நேரம் கிடைத்தது.

அறிஞர் அண்ணாவுக்கு எப்படி “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற மூன்று வார்த்தைகள்  தாரக மந்திரமாக இருந்ததோ அதுபோன்று  நம்மவருக்கு இப்போது தாரக மந்திரம் “பயிற்சி-முயற்சி-நிகழ்ச்சி-மகிழ்ச்சி”. (வாசகர்கள் மீண்டும் ஒருமுறை அவருடைய இந்த தாரக மந்திரத்தை அப்படியே மனனம் செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்)

unnamed

எந்தவொரு வியாதியாக இருந்தாலும் குணப்படுத்திவிடும் ‘நேக்கு போக்கை’ , தான் கசடற கற்று வைத்திருப்பதாக வாய் மலர்ந்தார். ஆயகலை அறுபத்து நான்கில் வசீகரம், ரசவாதம், காந்தருவ வாதம், பரகாய பிரவேசம், இந்திர ஜாலம், மகேந்திர ஜாலம், பைபீல வாதம் – இவைகள் யாவும் அடக்கம்  என்பதை நானறிவேன். ஆனால் ஹாஜா பாஷா கூறும் இக்கலை அதில் அடங்கியுள்ளதா என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை.

“உங்கள் நண்பர்களில்  யாருக்காவது சிகிச்சை தேவையென்றால் சொல்லுங்கள். அவர்கள் நேரடியாக என்னிடம் வரத் தேவையில்லை. வெறும் போட்டோ மட்டும் தந்தால் போதும். போனில் தொடர்பு கொண்டாலே போதும். நான் அவர்களை பூரணமாக குணப்படுத்தி விடுவேன்” என்றார். நான் பிளந்த வாயை நானே மூடுவதற்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் பிடித்தன.

“எப்படிப்பட்ட நோய்களை குணப்படுத்துவீர்கள்?” என்று கேட்டேன். அடுக்கிக் கொண்டே போனார். அத்தனையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞாபகசக்தி இல்லை. ஞாபகச் சக்தியை அதிகரிக்க சிகிச்சையளிக்க முடியுமா என கேட்க மறந்தே போய்விட்டேன்.

ஹார்ட் ப்ராப்ளம், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், அஸ்கா  வியாதி, கிட்னியில் கல், ஹெர்னியா, தைராய்ட்,  மலச்சிக்கல், ஆண்மையின்மை, உடல் பருமன், (இப்பட்டியலில் எய்ட்ஸ் மற்றும் கேன்சர் நோய் உள்ளதா என்று கேட்கத் தவறி விட்டேன்) இப்படி எத்தனையோ பிரச்சினைக்கு தன்னிடம் பூரண நிவாரணம் இருப்பதாகக் கூறினார். அவரது சில விளக்கங்கள் எனக்கு யாகாவா முனிவரை நினைவு படுத்தியது.

என் நண்பர் ஒருவரிடம் இவரைப் பற்றி பெருமையாக கூறியபோது “நீங்க சொன்ன பிரச்சினைகளில் முக்கால்வாசி அவருக்கே இருக்கிறதே” என்று கிண்டலடித்தார்.  அந்த நண்பர் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது.

ஹாஜா பாஷா என் தொந்தியை ஒருமுறை என் மனம் நோகும் அளவிற்கு உற்று நோக்கிவிட்டு “உங்களுக்கு என் சிகிச்சை அவசியம் தேவை” என்று கறாராக ஒரு போடு போட்டார். மேலும்,  “நீங்கள் வெளிநாடு சென்றபிறகு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் உடனுக்குடன் தொந்தி கரைய வைத்து விடுவேன்” என்றார்.

“கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போல” சரியான ஆசாமி கிடைத்து விட்டாரோ என்று கூட மனமகிழ்ந்துப் போனேன்.

இதபோன்ற வித்தையெல்லாம் நம் நண்பரிடம் பொதிந்து கிடப்பதை அறியாமல் அனாவசியமாக “TREAD MILL” வாங்கிப் போட்டேனே என்று நான் அடைந்த துன்பத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

“தொந்தி கரைவதற்கு நான் ஏதாவது முயற்சி செய்ய வேண்டுமா?” என்று பரிவுடன் கேட்டேன். “தேவையில்லை” என்றார். “பயிற்சி ஏதும் செய்ய வேண்டுமா?” என்று ஆவல் மேலிட வினவினேன். “அதுவும் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

“வேறு என்னதான் நான் செய்ய வேண்டும்?” என்று ஆர்வம் பொறுக்க முடியாமல் அலறியே விட்டேன். என்னை சாந்தமாக இருக்கச் சொல்லிவிட்டு “அதற்கு நான் அளிப்பேன் நிகழ்ச்சி. அதன் பின்னர் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி” என்று டி.ராஜேந்தர் ஸ்டைலில் எனக்கு விளக்கினார்.

எனக்கு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. அலோபதி, ஹோமியோபதி, சீதபேதி, என் நண்பர் சபாபதி, இவையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், இது ஏதோ டெலிபதி முறையில் குணமாக்கும் வித்தையாம்.

தன்னுடைய வருங்கால கனவுகளைப் பற்றி விளக்கினார். “மருந்தே இல்லாத உலகம் படைப்பதுதான் என் நோக்கம்” என்றார்.  “புதியதோர் உலகம் செய்வோம்” என்று புதுவைக் கவிஞன் பாடியது இவரைத்தானோ?

“உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களை நான் குணமாக்கி விடுவேன்” என்றார். “உயிரைக் காக்க உதவுவதுதான் தன் தலையாய பணி” என்று சூளுரைத்தார்.  நாகூரில் தன் இல்லத்திற்கு அருகிலேயே “மருந்தில்லா சிகிச்சை” என்ற கோஷத்துடன் ஒரு பெரிய மருத்துவமனை நிறுவும் எண்ணம் உள்ளது என்றார். அதற்கு நிறைய பொருளுதவி வருங்காலத்தில் தேவைப்படும் என்றார்.

“ஒரே மாதத்தில் குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர்” என்னிடம் விடைபெற்று போனபிறகும்கூட அவர் போன கால்தடத்தையே அதிர்ச்சியில் உறைந்துப்போய்  அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

– அப்துல் கையூம்

haja Basha old

2009-ஆம் ஆண்டு நான் ஹாஜா பாஷாவைப் பற்றி வரைந்த கட்டுரை இது.

கலைஞர் என்ற முறையில் சிலருக்கு மு.கருணாநிதியைப் பிடிக்கும். எனக்கு எங்க ஊரு ஹாஜா பாஷாவைப் பிடிக்கும். ஏனெனில் இவரும் ஒரு நல்ல கலைஞர். அவர் குறளோவியம் வரைந்தவர். இவர் நகஓவியம் வரைந்தவர்.

நகம் நமக்கு வாய்த்திருப்பது கோபம் வரும்போது அதை பல்லால் கடித்துக் குதறி துப்புவதற்காகத்தான் என்று நாம் தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இவருக்கு நகம்தான் ஆயுதம். ஆம்.. நகம்தான் இவருக்கு சோறு போட்டது.

பழைய சினிமா படங்களில் பார்த்தோமானால் கதாநாயகிகளின் கண்கள் பேசும். குறிப்பாக சரோஜாதேவியின் கண்கள். “லவ் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், தக்கத் திமி தா” என்று பாடும்போது, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் கண் இமைகள் துடிக்கும், விழிகள் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் அலைபாயும். அது கண்கள் பேசும் கலை.

ஹாஜா பாஷாவின் நகக் கண்கள் பேசும்; உரையாடும்; கவிதை வடிக்கும். நகம்தான் அவருக்கு தூரிகை.

உருவத்தை பார்த்த மாத்திரத்தில் நொடிப்பொழுதில் தத்ரூபமாக வரைந்து விடுவார். இவரை ‘அபூர்வக் கலைஞர்’ என்று ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள் புகழ்மாலை சூட்டியிருந்ததை அந்தக் காலத்தில் படித்து மனமகிழ்ந்திருக்கிறேன்.

மாநிலக் கண்காட்சி, சென்னை மெரீனா பீச், தஞ்சை பொருட்காட்சி, என்று எங்கு சென்றாலும் இந்தக் கலைஞனை பார்க்கலாம். “இவரு எங்க ஊர்க்காரரு” என்று நண்பர்களிடம் பெருமையடித்திருக்கிறேன்.

அரிசிக்குள் ஓவியம் வரையும் அபாரத் திறமையும் இவரிடத்தில் உண்டு.

முன்பொரு நாள் நாகூரில், ஒரு வீட்டு கல்யாண வைபவத்தில் கச்சேரி நடந்தது. “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. “நானொரு விகடகவி. இன்று நான் ஒரு கதை சொல்வேன்” என்று தொடர்ந்து கிளிகளைப்போல கத்தி, தவளைகள் போல ஒலியெழுப்பி, யானைகள் போல பிளிறி, மான்களைப்போல மந்திரம் பாடிக்கொண்டிருந்தார் ஒரு மேடைப் பாடகர். அருகில் சென்று பார்த்தால்; “அட! நம்ம ஹாஜா பாஷா!!”

கெளரவமாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில் திரைப்படத்துறையில் அலைந்து திரிந்து கெளரவ நடிகர் ஆனவர் இவர். “நான்” (என்ற ஞாபகம்) படம் வெளிவந்தபோது அதை ஒன்றுக்கு பலமுறை பார்த்தேன். காரணம் மொட்டை பாஸ் ஆக வரும் அசோகனுக்குத் துணையாக ஹாஜா பாஷா ஒரு சில வினாடிகள் திரையில் தோன்றுவார். “ஹய்யா.. ஹாஜா பாஷா!” என்று திரையரங்கில் என்னையறியாமலேயே கூச்சல் போட்டிருக்கிறேன்.

அமிதாப் பச்சன் நடித்த “ஆக்ரி ராஸ்தா” இந்திப் படத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் பழைய லெட்ஜரிலிருந்து ஏதோ ஒரு ஆவணத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் ஆவண நடிகராக நடித்ததைக் கண்டு ஆணவப்பட்டேன். “அடடே! நம்ம ஊருக்காரரு அகில இந்திய லெவலுக்கு பிரகாசிக்கத் தொடங்கி விட்டாரே”  என்று பூரித்தேன்.

ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்கு போயிருந்தபோது ஹாஜா பாஷாவை தற்செயலாக அங்கு சந்திக்க நேர்ந்தது. அடுத்த ப்ளோரில் இளையராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது. “வாங்க.. வாங்க..” என்று வாயார வரவேற்று, உங்களை ஒரு வி.ஐ.பி.யோடு அறிமுகப் படுத்துகிறேன் என்று கூறி “இவர்தான் டி.ஏ.மதுரத்துடைய சகோதரர்” என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். நானும் கை குலுக்கினேன், (என்.எஸ்.கிருஷ்ணனையே திரையுலகம் மறந்திருந்த காலம் அது)

சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் கலர் கலராக பேண்ட் போட்டு ராமராஜன் படங்களில் நடிப்பார். அந்த Dress sense இவரைப் பார்த்துதான் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். எந்த ஒரு கும்பளிலும் ஹாஜா பாஷாவை சுலபமாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம். ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிப்பார்.

சிவப்பு நிறத் தொப்பி, சிவப்பு நிற Scarf, சிவப்பு நிற சட்டை, சிவப்பு நிற பேண்ட், சிவப்பு நிற பெல்ட், சிவப்பு நிற சாக்ஸ், சிவப்பு நிற ஷூ என்று உடையணிந்து தூரப்பார்வை உள்ளவர்களுக்குகூட தொலைதூரத்தில் துல்லியமாகத் தெரிவார்.

உள்ளூர் David Copperfield இவர். Showman – ஆகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதிருந்ததால், தன் ஓவியத் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் மேஜிக் கலையையும் கற்று வைத்திருந்தார். ரோஜா பிரியருக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கவரும் பரமரகசியம் இந்த ஹாஜா பாஷாவுக்குத்தான் அத்துப்படி.

Polyglot – க்கு உதாரணம் கேட்டால் இவர் பெயரைச் சட்டென்று சொல்லி விடலாம். எத்தனை மொழி இவருக்குத் தெரியும் என்ற கணக்கு இவருக்கே தெரியாது. கலைத் தொழில் நிமித்தம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை வட்டமடித்துக் கொண்டிருந்ததால் எல்லா பாஷையும் பேசுவார். அந்தந்த ஊர் accent – ல் பேசுவது இவரது தனித் திறமை.

மலேசியா பயணம் சென்றிருந்தபோது மலாய் மொழி கற்றுக் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் மலாய் மொழியில் பேசி அசத்தினார். தாய்லாந்து நாட்டில் பத்தாயா பீச்சில் இவரது கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது. “இப்பொழுது இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் இந்த மிமிக்ரி கலைஞர் நம் நாட்டு அரசியல் தலைவர் சொம்சாக் போல் பேசிக்காட்டுவார்” என்று ஒருவர் தாய்பாஷையில் அறிமுகம் செய்ய, ஹாஜா பாஷா மேடைக்கு வந்து சொம்சாக் போல, அதே குரலில்; அதே பாணியில்; அதே தொனியில் பேசி பலத்த கைத்தட்டலை பெற்றுக் கொண்டார்.

ஒரு சில நாட்களுக்குள், கேட்டறிந்து; பயிற்சி செய்து; உள்ளுர் பிரமுகர் போல் பேசியது இவரது திறமைக்கு ஒரு சான்று. கூர்ந்து கவனிக்கும் தன்மை, எதையும் உடனே கிரகித்துக் கொள்ளக் கூடிய திறமை இருப்பவரால்தான் இது சாத்தியம்

இந்த தடவை ஊர் சென்றிருந்தபோது செய்யது பள்ளியிலிருந்து இனிமையான குரலில் பாங்கு சப்தம் ஒலித்தது. “இந்தக் குரல் யாருடையது தெரியுமா?” என்று என் தாயார் புதிர் போட்டார். நான் உதட்டைப் பிதுக்கினேன். “உனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்தான்” என்றார். விசாரித்துப் பார்த்ததில் அது ஹாஜா பாஷாவின் குரல் என்று தெரிய வந்தது.

கலா ரசிகராக இருந்தவர் இப்போது பிலால் ரசிகராகி விட்டார். வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையின் வழிமுறையும் மாறி விடும் என்பது எவ்வளவு உண்மை? “எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்” என்று விவேக் நெகட்டிவ் தொனியில் பேசும் பஞ்ச் டயலாக் இவருக்கு பாஸிடிவ் தொனியில் அமைந்து விட்டது. மார்க்கம் இவர் மார்க்கத்தை திருப்பி விட்டிருந்தது. “ஹிதாயத்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது.

அவருடன் பேசிப் பார்த்ததில் அவரது மனதுக்குள் ஒரு மகத்தான ஆசை நெடுநாட்களாக புதைந்திருப்பது தெரிய வந்தது. புனித குர்ஆனை முழுவதுமாக உலோகத் தகட்டில் நகத்தாலேயே எழுதி முடிக்கவேண்டும் என்பதுதான் அது. இறைவன் அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.

அப்துல் கையூம் 5/11/2009

Advertisements
 

Tags:

5 responses to “ஒரே மாதத்தில் குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர்

 1. நாகூர் ரூமி

  April 23, 2015 at 10:45 pm

  நீங்கள் கிண்டலடித்திருக்கிறீர்கள் என்பதாவது அந்த ஒரு உயிருக்குப் புரியுமா?

   
 2. Hussain

  April 24, 2015 at 7:54 am

  Salam Mama,

  I had the opportunity of meeting him recently. I think he’s a genius. He spoke to me in fluent Kannada and we were talking in Kannada for a while. He may be a charlatan, but in all honesty he seems multi talented and very very wise. His grasping powers seem phenomenal. Also his inter personal skills are amazing. Such characters leave an indelible mark on the mind. God bless. Nice to see an article on him!!

  Regards
  Hussain

   
 3. sahirshan

  May 19, 2015 at 1:29 pm

  இந்த போஸ்ட்டரில் சொல்லப்பட்ட இதய வலி, இதய அடைப்பு, கொழுப்பு, சளி, கபம் போன்ற அனைத்து வியாதிகளும் மாமா ஹாஜா பாஷாவுக்கு உள்ளதால் அவருக்கு நடக்கமுடியாது என்பதை அடிக்கடி சொல்வார். அப்படி இருக்கையில் அவர் எப்படி ஒரே மாதத்தில் பிறருக்கு குணமாக்குவார்? நல்ல வேடிக்கை.!!!! கவனம் உண்மையான நோயாளிகள் தேடி வரப்போகிறார்கள். அப்புறம் சிக்கலாகபோகிறது.

  அவரின் அந்த 5 தங்க மெடல் உண்மைதானா? எந்த கடையில் வாங்கியது !!!!!!!

   
 4. rathnavelnatarajan

  May 27, 2015 at 6:14 pm

  விளம்பர வெறியர்களின் விளையாட்டு = நாகூர் மண்ணின் கலைமாமணிகள் →ஒரே மாதத்தில்
  குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர் – 2009-ஆம் ஆண்டு நான் ஹாஜா பாஷாவைப் பற்றி
  வரைந்த கட்டுரை இது.= சற்று பெரிய பதிவு. எப்படியெல்லாம் இருக்கிறார்கள்.
  படித்துப் பாருங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல்
  கையூம்

   
 5. marubadiyumpookkum

  May 29, 2015 at 10:13 am

  ha ha ha ..good writing..thanks to sharing.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: