எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தைக் குறித்து முன்பு எழுதிய அத்தியாயத்தில் சுருக்கமாக எழுதியிருந்த நான் இப்போது அதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.
நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.
“வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.
“இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.
இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.
1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘நாடோடி மன்னன்’ படத்தில்தான் நம்முடைய பெயர் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதன் மூலமாவது நமக்கு ஒரு திருப்பம் கிடைக்கும்” என திடமாக நம்பினார்
ஈரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்படத்திற்கான தொடக்கம் சத்யா ஸ்டூடியோவில் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தடபுடலான ஏற்பாடுகளுடன் நடந்தது. கலைஞர் சம்மந்தப்பட்டால் அவருடைய உறவினரின் ஊடுருவல் இல்லாமலா? வழக்கம்போல் வசனம் எழுதும் பொறுப்பு “முரசொலி சொர்ணம்” என அறிவிக்கப்பட்டது.
கரைவேட்டிக்காரர்களை திருப்திபடுத்த அவ்வப்போது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் வளைந்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காலந்தொட்டு இருந்து வந்தது. அரசியல் ஆளுமை பெற்றவர்கள் அப்பாவி கலைஞர்களின் திறமைகளை களவாடிய அநியாயம் கணக்கிலடங்காது.
சொர்ணத்திற்கு வசனம் எழுதக்கூடிய திறமையுண்டு. அதை மறுப்பதற்கில்லை. எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். ஆனால் விளம்பரத்தில் “வசனம் : சொர்ணம்” என்று காட்டப்பட்ட அத்தனைப் படங்களின் வசனங்களும் அவர் எழுதியதல்ல. “அரசகட்டளை”, “உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற பல படங்களை இக்கூற்றுக்கு உதாரணம் காட்டலாம். “இணைந்த கைகள்” படத்தை பொறுத்த வரையில் கதை, வசனம், திரைக்கதை யாவும் ரவீந்தரின் பங்களிப்பாகவே இருந்தது.
டி.ஆர்.ராஜேந்தர் பாணியில் கதை, திரைக்கதை, வசனம் யாவுமே ரவீந்தர் என்றால் அப்போதெல்லாம் எடுபடாது. படம் வெற்றி பெறுவதற்கு அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கு உள்ள பிரபலங்களின் பெயர் கண்டிப்பாக இடம்பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இது சினிமா உலகின் மற்றொரு இருண்ட பக்கம்
எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ரவீந்தரை கருவேப்பிலையாகத்தான் கருதியது என்பது கசப்பான உண்மை. காரியம் முடிந்தபின் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவானாலும் சரி, அப்படத்தின் வெற்றிவிழாவானாலும் சரி ரவீந்தரை கண்ணில் காட்ட மாட்டார்கள். எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் ரவீந்தரை பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அலுவலக அறைதான் அவரது வீடு, அவரது உலகம் யாவுமே.
ரவீந்தர் மாதச் சம்பளத்திற்குத்தான் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகைக்கு அவர் பழச்சாறாய் பிழிந்தெடுக்கப்பட்டார். வாழ்க்கை முழுவதும் பேனா பிடித்தே அவரது கைரேகை தேய்ந்துப் போனது என்று சொல்லலாம். ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸில் ஆளாளுக்கு அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்கள். சந்தடி சாக்கில் சிந்துபாடி ரவீந்தருக்கு பல வகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்திய புண்ணியம் ஆர்.எம்.வீரப்பனைச் சாரும். எம்.ஜி.ஆரையே கைப்பாவையாக இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை அலைக்கழித்து வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி போயிருந்ததுது. அது மட்டுமல்ல பெரியவர் சக்ரபாணியை சமாளிப்பதே பெரும்பாடுதான்.
“இணைந்த கைகள்” படத்தை தயாரிக்க முடிவானபோது விரக்தியின் விளிப்புக்கே ரவீந்தர் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி எவ்வளவுதான் உழைத்தாலும் “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்றுதான் விளம்பரப்படுத்தப்படுமே அன்றி ரவீந்தரின் பெயர் பிரபலமாகிவிடக்கூடாது என்பதில் ஆர்.எம்.வீரப்பன் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..
எந்த நாகூர்க்காரரின் (நீதிபதி மு.மு.இஸ்மாயீல்) புண்ணியத்தில் ஆர்.எம்.வீரப்பன் கம்பன் கழகத் தலைவராக பதவி வகித்தாரோ அதே ஆர்.எம்.வீரப்பன்தான் இன்னொரு நாகூர்க்காரரின் வயிற்றிலும் எட்டி உதைத்து விளையாடி வந்தார்.
“இணைந்த கைகள்” படத்திற்கு அதிசயமாக “கதை:ரவீந்தர்” என அவரது பெயர் விளம்பர போஸ்டர்களில் அலங்கரித்தன. ரவீந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை.
கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.
இப்படத்தின் கதையையும் “தினத்தந்தி” பத்திரிக்கையில் வெளிவரச் செய்தனர். இப்படத்தின் கதையை வடிவமைப்பதற்குள் ரவீந்தருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. காரணம் கதையை ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, ஐந்துமுறை மாற்றியமைத்து எழுத வேண்டியிருந்தது.
“டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.
கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.
இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார். மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.
இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.
ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன் புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?
ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.
சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நடிகை கீதாஞ்சலி எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.
வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.
இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார். திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.
இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.
- “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல் – [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
- அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல் [எம்.ஜி.ஆர். – லதா]
- “சிரித்து வாழ வேண்டும்” படத்தில் “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
- மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்
மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்றன.
பலமுறை மாற்றியமைக்கப்பட்ட “இணைந்த கைகள்” படத்தின் கதைதான் பின்னர் “உழைக்கும் கரங்கள்” மற்றும் “அரசகட்டளை” படமாக உருமாறியது.
“உழைக்கும் கரங்கள்” படத்தில் மன்சூர் கதாபாத்திரத்தை ரங்கன் என்று மாற்றியமைத்து அதை அரசியல் தாளிப்பு நிறைந்த திரைக்கதையாக ரவீந்தர் மாற்றியமைத்தார். படவிளம்பரத்திலோ கதை-வசனம் நாஞ்சில் மனோகரன் என்றிருக்கும். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் விஷயத்தில்அரசியல் ஆளுமை கொண்டவர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்தது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டு. இது போன்றுதான் “நாடோடி மன்ன”னிலும் கண்ணதாசன் பெயரும் ரவீந்தர் பெயரோடு இணைத்துக் காட்டப்பட்டது.
“கணவன்” படக்கதை எம்.ஜி.ஆரே எழுதியதாகத்தான் இதுவரை எல்லோராலும் நம்பப்படுகிறது. “Wood Cutter” ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வைத்து எம்.ஜி.ஆரின் தூண்டுதலால் கதையை வரிக்குவரி வடித்தவர் ரவீந்தர்,
அதேபோன்று எம்.ஜி.ஆர். எழுதி வந்த “நான் ஏன் பிறந்தேன்” தொடரை எழுதியது யாவும் வித்வான் வி.லக்ஷ்மணன், இதைச் சொன்னதும் ரவீந்தர்தான். இப்படி வெளியில் வராத உண்மைகள் இன்னும் எத்தனையோ உண்டு.
– அப்துல் கையூம்
– தொடரும்
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 9
எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10
எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11
எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12
rathnavelnatarajan
June 2, 2015 at 12:40 pm
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – பாகம் 13 – எந்த நாகூர்க்காரரின் (நீதிபதி மு.மு.இஸ்மாயீல்) புண்ணியத்தில் ஆர்.எம்.வீரப்பன் கம்பன் கழகத் தலைவராக பதவி வகித்தாரோ அதே ஆர்.எம்.வீரப்பன்தான் இன்னொரு நாகூர்க்காரரின் வயிற்றிலும் எட்டி உதைத்து விளையாடி வந்தார்.= இப்படி வெளியில் வராத உண்மைகள் இன்னும் எத்தனையோ உண்டு.- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்