யாராவது ஏதாவது ஒரு நல்ல ஜோக் முகநூலில் பகிர்ந்தால் போதும். ஒரு நபராவது நிச்சயம் “முடியலே” என்று கமெண்ட் அடித்திருப்பார்.
அவருக்கு என்ன “முடியலே?” என்று யோசித்துப் பார்த்து விட்டு “அவரால் சிரித்து மாள இயலவில்லை” என்று அவர் சொல்ல வருகிறார் என்பதை நாம் புரிந்துக் கொள்கிறோம்.
இந்த “இயலவில்லை” என்ற வார்த்தைதான் நாளடைவில் “ஏலலே” என்று ஆகிவிட்டதோ என்று ஆராய்ந்து பார்க்கையில் அக்காலத்து செய்யுள்கள் பலவற்றிலும் இப்பதத்தை பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது.
நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்
“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”
“எனக்கு உடம்புக்கு ஏலல”
“இந்த மாதிரி எடத்துக்கு என்னாலே வர ஏலாது”
நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.
“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.
அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிதுமாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று
இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:
எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து
இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.
இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.
“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.
“ஏலலே” என்பது பழஞ்சொல் என்பதை உங்களுக்கு புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.
– அப்துல் கையூம்