நாகூர் பிரபலங்களில் இவரும் ஒருவர், நாகூர் சேத்தான் என்கிற M.A.காதர் இவர் ஒரு பன்முக கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், புகைப்படக் கலைஞர்,வீடியோ ஒளிப்பதிவாளர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், குறிப்பாக இசையமைப்பாளர் இப்படியாக இன்னும் பல வடிவங்களில் இவரது திறமைகள் தொடர்கிறது. பற்பல பாடகர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தும் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கொடுத்தும் அனைவரது இதயங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்து, இவர் மறைந்தாலும் இவர் அமைத்துக் கொடுத்த இசையால் உள்ளங்களில் என்றும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பவர், எனது பாடல்கள் பலவிற்கு மெட்டமைத்துக் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கியவர்.
ஒரு பாடகர் என்றால் அவருக்குப் பின்னால் கவிஞர், இசையமைப்பாளர் என்று பல ஏணிப்படிகள் மறைந்திருப்பர். ஆனால் புகழும் பொருளும் பாடகருக்கே குவியும். இது இஸ்லாமிய இசை உலகின் தலையெழுத்தாகி விட்டது. ஒரு இஸ்லாமிய பாடல் ஹிட்டாக வேண்டும் என்றால் பாடகரின் குரல் வளமும், பாடல் வரிகளின் நயமும், கருத்தும் எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தப் பாட்டுக்கான மெட்டு. பின்னணி இசைக்கூட பின்புதான். நமது சேத்தான் நானா அவர்கள் பாடகர்களுக்கு தகுந்தாற்போல் மெட்டமைத்துக் கொடுப்பதில் வல்லவர். அந்த வகையில் மெட்டமைத்து என்றும் செவிகளையும் சிந்தையையும் ஈர்க்கும் பாடல்கள் பல நூறு பாடல்கள் ஆகும். அவற்றில் நாகூர் இசைமுரசு E.M.ஹனிபா அண்ணன் பாடியவை காலத்தால் அழியாமல் என்றும் இனிப்பவை.இருந்தாலும் அப்பாடல்களில் நமது சேத்தான் நானா ஒளிந்துள்ளார் மறைந்துள்ளார் என்பதுதான் உண்மை. குறிப்பாக இசை முரசு அவர்கள் ஒரு பாடலை மேடையில் பலநூறு முறை பாடியப் பிறகுதான் இசைத்தட்டில் பாடுவார்கள் அப்படி பாடும்போது அதற்கு யாரோ ஒரு இசையமைப்பாளரை பின்னணி இசையமைக்க அழைத்து கொள்வார்கள், வேறு ஒருவர் போட்டு ஹிட்டான பாட்டுக்கு இவர் BGM மட்டும் அமைக்கிறார், இசைத்தட்டு வெளியாகி பாடல் மேலும் ஹிட்டாகிறது.
இப்படித்தான் “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு” என்ற பாடலுக்கு மெட்டுப் போட்டவர் சேத்தான் நானா. பல வருடங்கள் இசைமுரசு அவர்கள் மேடையில் பாடி மக்கள் மனதில் பதிந்த பின் 1973ல் இசைத்தட்டில் பாடுகிறார்கள். அதற்கு பின்னணி இசை அன்றைய பாவலர் பிரதர்ஸ் இளையராஜா. அவர் சினிமாவில் நுழையாத நேரம், இசைத்தட்டு வெளியாகி பாடல் எங்கும் ஒலிக்கிறது. பின்பு இளையராஜா 1976ல் சினிமாவில் நுழைந்து புகழ் உச்சியில் இருக்கும் போது இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்று எல்லா மேடைகளிலும் இசைமுரசு சொல்லுவார்கள். அப்போது புதிதாய் அப்பாடலை கேட்பவர்கள் ”ஆஹா! இளையராஜா இசையமைத்தப் பாட்டு” என ஆர்வமுடன் மீண்டும் மீண்டும் கேட்பார்கள், ஆனால் அதற்கு மெட்டமைத்தவர் சேத்தான் நானா என்பது தெரியாது. கடைசி வரை சேத்தான் நானா குட விளக்காகவே வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களை பாடகர்களும் இந்த சமுதாயமும் கண்டுக் கொள்ளவே இல்லை, பாடகர் ஜெய்னுல் ஆபீதினை 1978ல் சிங்கப்பூர் அழைத்து சென்று முதல் முதலாக மஜீது பிரதர்ஸ் ஆடியோ நிறுவனத்தில் பாட வைத்து அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. இசைமுரசுக்கு பல பாடல் எழுதிக் கொடுத்தும் மெட்டுப் போட்டுக் கொடுத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.
சேத்தான் நானா மெட்டமைத்து இசைமுரசு பாடிய பல பாடல்களில் சில:
*திருமறையின் அருள் மொழியில்”
*தக்பீர் முழக்கம்”
*சொன்னால் முடிந்திடுமோ”
*கண்கள் குளமாகுதம்மா”
*தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு”
*எல்லாப் புகழும் இறைவனுக்கு”
*இறைவனிடம் கையேந்துங்கள்”
*ஆதுமகன் சத்தாது குல வலிமை”
*தீன்குலப் பொண்ணு”
*ஆதியருள் கனிந்திலங்கி”
*அல்லாவை நாம் தொழுதால்”
இப்படியாக இவரின் பட்டியல் நீளுகிறது..மேற்கண்ட பாடல்களில் சில இவர் எழுதிய பாடல்கள் ஆகும், இஸ்லாமிய பாடகர் உலகம் இவரை போன்றவரை முன்னிறுத்தி நினைத்து பார்க்க வேண்டும். இசையுலகம் மறக்க முடியாத இனியவர் நாகூர் சேத்தான் அவர்கள். “இது சிறு குறிப்புதான்!”
தகவல்: கவிஞர் நாகூர் காதர்ஒலி
Ameermuhamad Fazlulhaque
November 1, 2015 at 5:28 am
Thanks
nagoreismail786
November 13, 2015 at 5:50 am
சேத்தான் நானா அருமையாக வரையவும் செய்வாஹா. எங்க பாட்டனார் கவுஸ் சேட் அவர்கள் பக்தாத் கவ்துல் அஃலம் றஹிமல்லாஹ் அவர்களுடைய ஜியாரத்திற்கு சென்று அங்கு அவர்களின் புகைப்படம் ஒன்றை வாங்கி வந்தார்கள். அதை பெரியதாக ஆக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அப்போதுள்ள டெக்னாலஜிபடி (அதாங்க வரைவது) சேத்தான் நானாவ அழைத்து வரைந்து கொடுக்க சொன்னார்கள். எங்கள் பாட்டியா வீட்டின் கூடத்தில் இன்னமும் அவர்கள் வரைந்த படம் உள்ளது.