RSS

மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு

21 Feb

நாகூர் சரவிளக்கு

எனது வாலிப பருவத்தில்  நாகூர் தர்காவுக்குள் பிரவேசிக்கும் போதெல்லாம் கட்டிடத்தின் உட்பகுதியில் தலைக்கு மேல் தொங்கும் பிரமாண்டமான சரவிளக்கை உன்னிப்பாக  நோட்டமிடுவேன். அதுவும் ஒரு பயம் கலந்த பார்வையோடு.

கலையம்சம் பொருந்திய அதன் அழகு என்னைக் கவர்ந்ததை விட, ஒரு வித திகில்தான் ‘திக்.. திக்..’ என்று கூடுதலாக என் மனதை ஆட்கொண்டிருந்தது

அதைப் பார்த்த மாத்திரத்தில் என்னை அறியாமலேயே ஒரு மாதிரியான அச்சம் உள்ளத்தைக் கவ்வும். எங்கே நம் தலைக்கு மேல் விழுந்து நாம் நசுங்கி ‘சட்னி’யாகி விடுமோ என்ற பீதி தான்.

“மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்”  படப்பிடிப்பின்போது சரவிளக்கொன்று ஜெய்ப்பூர் அரண்மனையில் ‘தடாலென்று’ சிதறி விழுந்து நடிகை லதா மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற பத்திரிக்கைச் செய்தியை படித்ததிலிருந்து இந்த பயம் என் மனதில் பதிந்திருக்கக்கூடும்.

பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சண் பிரபு பரிசளித்து தாஜ்மஹாலின் வாசலில் நிறுவப்பட்டிருந்த இரண்டு மீட்டர்கள் உயரமான, 60 கிலோ எடையுடைய சரவிளக்கு ஒன்று சில ஆண்டுகட்கு முன்னர்  நிலத்தில் விழுந்து உடைந்தது

இந்தியாவிலேயே மிகப்பெரிய சரவிளக்குஇருப்பது குவாலியர் நகரில் அடுத்து இரண்டாவது பெரிய சரவிளக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் என்றெல்லாம் படித்திருக்கிறேன்.

நாகூரில் இருக்கும் சரவிளக்கு  எவ்வளவு பெரியது அதன் பின்னணிக் கதை என்ன என்ற விவரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.

அதற்கு அடுத்தடுத்த கூரையில் தொங்கும் சங்கிலியைக் கண்பித்து “இது ஒரு காலத்தில் ரொம்ப நீளமாக இருந்தது. காலப்போக்கில் இது சிறியதாகி விட்டது. இது எப்போது முழுதாக கரைந்து விடுமோ அப்போது உலகம் அழிந்து விடும்” என்றெல்லாம் கதை கட்டிவிட்டு பயமுறுத்துவார்களேத் தவிர இந்த சரவிளக்கு  பற்றிய சரித்திர விவரங்கள் எல்லாம் கூற மாட்டார்கள்.

பக்தகோடிகள் அந்த நீண்ட சங்கிலியில் நனைக்கப்பட்ட நீரை பயபக்தியோடு அருந்தும்போது, அந்த துருப்பிடித்த சங்கிலியில் காணப்படும் துருவின் துகள்கள் நம் ஆரோக்கியத்தை பாதிக்காதா என்றெல்லாம் எண்ணி மிரள்வதுண்டு.

தஞ்சை மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலும் வணிகர்களே அதிகம். அவர்களில் பெரும்பாலும் சிங்கப்பூரில் வாணிபம் செய்து பெருமளவில் பொருளீட்டினார்கள்.

அவர்கள் நாகூர் தர்காவிற்கு தங்கள் பங்கிற்கு நீண்டகாலம் நினைவு கூறும் வகையில்  ஏதேனும் ஒரு பொருளை நன்கொடையளிக்க ஆவல் கொண்டனர்.

இது நடைபெற்றது 128 ஆண்டுகட்கு முன்னர்.  அதாவது 1888-ஆம் ஆண்டு.

இதற்காக சிங்கப்பூரிலிருந்த தமிழ்ச் சமுதாயத்து மக்கள் ஒன்று கூடி வசூல் வேட்டை நிகழ்த்தினர். 1500 டாலர் வரை வசூல் ஆனது. அப்போது அது பெரிய தொகை. நன்கொடை கொடுத்தவர்களின் வரிசையில் 41 வியாபார நிறுவனங்களும் சில தனிநபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.

பினாங்கு நகரில் நாகூர் சரவிளக்குக்காக 300 வெள்ளியை தாராள மனப்பான்மையோடுஅள்ளிக் கொடுத்தவர்கள் Katz Bros என்ற ஜெர்மானிய நாட்டு ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தின் நினைவாக ஒரு தெருவிற்கே இவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள். இது Lebuh Katz என்றும் அழைக்கப்படுகிறது.  1864 –ஆம் ஆண்டு ஹெர்மன் கட்ஸ் (Hermann Katz) என்பவர் இந்த ஸ்தாபனத்தை நிறுவினார். ஜெர்மானிய யூதர்களுக்கிடையே Kartz என்ற குடும்பப்பெயர் பரவலாக காணப்படுகிறது.

Katz Bros ஜெர்மானிய நிறுவனத்துடன் அதிகமாக வணிகத்தொடர்பு வைத்திருந் தவர்கள் தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக பல கப்பல்களும் இருந்தன,

நாகூர் தர்காவுக்கு சரவிளக்கு நிர்மாணிப்பதற்காக பணவசூல் செய்கிறோம் என்றவுடன் உடனே தயக்கம் காட்டாமல் இத்தொகையை  இவர்கள் அள்ளித் தந்தனர். தஞ்சை மாநிலத்து வர்த்தகர்களுடன் இந்நிறுவனத்தினர் கிட்டத்தட்ட 23 ஆண்டுகாலமாக வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர்.

ஒன்பது அடி உயரத்தில் 72 அலங்கார வளைவுக் கிளைகளைக் கொண்ட  பிரமாண்டமான சரவிளக்கை ஆர்டர் செய்து வாங்கினார்கள்.

ஜனவரி 16 –ஆம் தேதி வெளிவந்த “சிங்கை நேசன்” என்ற தமிழ்ப் பத்திரிக்கையில் நன்கொடை அளித்த அத்தனைப் பேர்களுடைய பெயர்களும் வெளியாகியிருந்தது.

மற்றொரு சுவையான தகவல் என்னவென்றால் இப்பத்திரிக்கையின் ஆசிரியரும் அதன் பதிப்பாளருமான சி.கு. மகதூம் சாஹிப் அவர்கள் நாகூரை பூர்வீகமாகக்  கொண்டு சிங்கப்பூரில் குடிபெயர்ந்தவர். சி.கு.மகதூம் சாஹிப் திருமணம் புரிந்த வகையில் பொறையாறில் இவரது குடும்பம் வசித்து வந்தது.

Csingai nesan magazine heading

சிங்கப்பூர் என்ற தனிநாடு உருவாவதற்கு முன்னர் மலாயாவின் முதல் பத்திரிக்கையாகக் கருதப்படுவது சி.கு.மகதூம் சாயபு அவர்களால்  1875-ஆம் ஆண்டு வெளிவந்த “சிங்கை வர்த்தமானி”  என்னும் இதழே.

அதன் பின்னர் 1887-ஆம் ஆண்டு “சிங்கை நேசன்” என்ற பெயரில் இப்பத்திரிக்கையை அவர்  வெளியிட்டார். சி.கு.மகதூம் சாஹிப் அவர்களுக்கிருந்த தமிழ்மொழிப் பற்றுக்கு ஒரு சிறிய உதாரணம் இது.  ஒவ்வொரு பதிப்பின் தலைப்பிலும் ஒரு திருக்குறள் காணப்படும். அதன் பொருள் விளக்கமும் அவ்விதழில் தரப்பட்டிருக்கும்.

(அதுமட்டுமன்று. மலாயாவில் முதன் முதலில் கவிதை நூல் (ஆறுமுகப் பதிகம்) வெளியிட்டதும் நாகையைச் சேர்ந்த மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்கள்)

நன்கொடையும் வசூலித்தாகி விட்டது. பிரமாண்டமான சரவிளக்கும் வாங்கியாகி விட்டது. இதனை  சிங்கையிலிருந்து நாகூருக்கு எப்படி கொண்டுபோய்ச் சேர்ப்பது? யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது.

இப்போதைய காலத்தில் இதுபோன்ற சரவிளக்குகள் எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாகி விட்டது. அப்போது இதுபோன்ற சரவிளக்குகள்  மிகவும் அபூர்வம்

எல்லோருடைய அறிவுரையின் பேரில் மகதூம் சாஹிப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான என்.எம்.முகம்மது அப்துல் காதர் புலவரிடம் இப்பணியை நிறைவேற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இவர் அக்காலத்தில் புகழ்ப்பெற்று விளங்கிய கவிஞர். பல கவிதைநூல்கள் எழுதி வெளியிட்டவர்.

நாகூர் கந்தூரி நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் “எஸ்.எஸ்.மீனாட்சி” என்ற கப்பலில் தன் சகாக்களுடன் நாகூர் பயணமானார். புகழ்ப்பெற்ற “எஸ்.எஸ்.ரஜுலா” கப்பலுக்கு முன்பே போக்குவரத்து கப்பலாக எஸ்.எஸ்.மீனாட்சி பயன்பட்டில் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு கப்பல் வழிச் சென்றோர் பயணிகள் பட்டியலை தருகிறார் அறிஞர் எட்கர் தர்ஃச்டன் என்பார்.

இந்த எண்ணிக்கையை ஆராய்ந்துப் பார்த்தால் மற்ற துறைமுக நகர்களிலிருந்து போனவர்களை விட நாகூர் நாகையிலிருந்து போனவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவிகதம் கூடுதல் என்பது நமக்கு நன்கு விளங்கும்.

நாகப்பட்டினம்.pdf

பாண்டிச்சேரி – 55 பேர்கள்

கடலூர் – 588 பேர்கள்

பரங்கிப்பேட்டை – 2555 பேர்கள்

காரைக்கால – 3422 பேர்கள்

நாகூர் நாகை – 45,453 பேர்கள்

Singai nesan

“சிங்கை நேசன்” பத்திரிக்கையைப் பற்றியும், சி.கு. மகதூம் சாஹிப் அவர்களின் தமிழ்ப் பணியை ஆய்வும் செய்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஒரு தனி நூலே வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி நமக்கு மனநிறைவைத் தருகிறது.

128 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சரவிளக்கு இப்போது நாகூர் தர்காவின் பெரிய வாயிலின் கூரையிலிருந்து அகற்றப்பட்டு சின்ன எஜமான் வாயிலின் கூரையில் 26.10.2015 அன்று மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

சிங்கைக்கும் நாகூருக்குமிடையே இருந்த பாசப்பிணைப்பு இன்று நேற்று உருவானதல்ல. “சிங்கப்பூர் நாகூர் சங்கம்” என்ற பெயரில் நாகூரிலிருந்து குடிப்பெயர்ந்த அன்பர்கள் இன்று வரை அந்த பந்தம் நிலைக்கும் வண்ணம் சங்கம் அமைத்து தீவிரமாக செயல்படுகிறார்கள் என்ற செய்தி நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

பின்குறிப்பு :1888 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9 ஆம் நாள் சிங்கை நேசன் வெளியீட்டில் “இந்தியா செய்தி” என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்ட செய்தி இது:

இவ்வூர்களில் இடைவிடாமல் மழை வருஷிப்பதில் ஜனங்களுக்கு வெகு தொந்திரவாக இருக்கிறது. தஞ்சாவூர் பகுதிகளில் அரிசி ரூபாய்க்கு 8 படி விற்கிறார்கள். வெயில் காண்பது அரிதாயிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்து உடைப்புகள் உண்டாயின. கொள்ளடம் ஆற்றில் திடீரென 5 கெஜம் தண்ணி வந்து 3 வண்டிகளும் 30 ஜனங்களும் சேதமாம். கும்பகோணத்தைச் சேர்ந்த கொட்டையூரில் 10 அடி தண்ணியுயர்ந்து 200 குடிகளும் வெகு சாமான்களும் நஷ்டமாம். காய்ந்தாலும் ஆகாது, பேய்ந்தாலுமாகாதா?

[நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சரவிளக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்த உயர்திரு கலீபா சாஹிப் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி]

அப்துல் கையூம்

 

Tags:

3 responses to “மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு

  1. N.Rathna Vel

    February 22, 2016 at 3:48 am

    மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு – நாகூர் மண்வாசனை = அப்துல் கையூம் – அரிய, மிகப் பழமையான தகவல்கள் அடங்கிய, அற்புதமான பதிவு. இடையில் கண் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததால் பதிவுகள் எதுவும் படிக்க முடியவில்லை. = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்

     
  2. rathnavelnatarajan

    February 22, 2016 at 3:50 am

    மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு – நாகூர் மண்வாசனை = அப்துல் கையூம் –
    அரிய, மிகப் பழமையான தகவல்கள் அடங்கிய, அற்புதமான பதிவு. இடையில் கண் சிகிச்சை
    பெற்றுக் கொண்டிருந்ததால் பதிவுகள் எதுவும் படிக்க முடியவில்லை. = எனது
    பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்

    2016-02-21 22:07 GMT+05:30 “நாகூர் மண்வாசனை” :

    > அப்துல் கையூம் posted: ” எனது வாலிப பருவத்தில் நாகூர் தர்காவுக்குள்
    > பிரவேசிக்கும் போதெல்லாம் கட்டிடத்தின் உட்பகுதியில் தலைக்கு மேல் தொங்கும்
    > பிரமாண்டமான சரவிளக்கை உன்னிப்பாக நோட்டமிடுவேன். அதுவும் ஒரு பயம் கலந்த
    > பார்வையோடு. கலையம்சம் பொருந்திய அதன் அழகு என்னைக் கவர்ந்ததை”
    >

     
  3. அப்துல் கையூம்

    February 22, 2016 at 10:22 am

    தங்களின் பாராட்டுக்களுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களின் கண்சிகிச்சை முடிந்து விரைவில் குணமாகி பூரண நலம் பெற இறைவனை இறைஞ்சுகிறேன்.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: