சாத்தான்கள் விதவிதமாய் வேதம் ஓதும்
சாதனைகள் (?) இதுவென்று பட்டியலாகும்
ஆத்தாவே கதி என்று துதிபாடும் பக்தர்களின்
ஆவேசம் பலமடங்கு இரட்டிப்பாகும்
சூத்திரர்மேல் திடீர் பாசம் அதுவாய் பொங்கும்
சூட்சமங்கள் அரசியலில் செயலாய் மாறும்
ஆத்திரத்தில் மதிமயங்கும் அடிவருடிகளின்
ஆணவங்கள் முகநூலில் காட்சிதரும்
பீற்றிக் கொள்ளும் சீமான்கள் நல்லவராய்
பெயரெடுக்க நாடகம் ஆடும்
ஆற்றாமையால் நட்புகளும் கொக்கரிக்கும்
அர்த்தமிலா வாதத்திற்கு நட்பை இழக்கும்
நாற்றமெடுக்கும் வாசகங்கள் தட்டெழுத்தாகும்
நடிப்பவனுக்கே நாட்டில் மரியாதை கூடும்
சீற்றங்கள் முழுமையாக கண்ணை மறைக்கும்
சிந்தனைகள் திசைமாறி சீரழிவைத் தேடும்
சாதிகளை வைத்தே சதுரங்க காய் நகரும்
“சாதிகட்சி நாங்களல்ல” வாக்குமூலம் வெளியாகும்
ஆதிசிவன் முப்பாட்டன் வழிவந்தோர் எனப்பகரும்
அவன்மைந்தன் முருகனையும் உறவுகொண்டாடும்
நாதியற்ற பேர்வழிகள் நாற்காலிக்கு ஆசைப்படும்
நடமாட முடியாதோர் நாடாள மனம்துடிக்கும்
வீதியிலே கலவரங்கள் வேடிக்கை ஆகும்
வீணர்களின் பேச்சுக்களை ஊடகங்கள் படம்பிடிக்கும்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
தன் தலைவன் சொன்னதுவே வேத வாக்கு
ஏன் என்று கேள்விக்கு சொற்கணைகள் தான்பாயும்
எதிர்கேள்வி கேட்டுவிடில் ஓட்டம் பிடிக்கும்
நான் என்ற அகம்பாவம் பித்தம் ஏறும்
நாற்காலி கனவுகளில் நடுநிலை இழக்கும்
வானளாவ நாயகனை புகழ்பாடி நன்றி காட்டும்
வார்த்தைகளில் நாகரிகம் இல்லா தொழியும்
வசைபாட நுனிநாக்கு ஆங்கிலம் தேடும்
வலுவின்றி கோடிகளில் குற்றம் சாட்டும்
இசைத்தமிழும் தலைவிரித்து ஆட்டம் போடும்
இதுசமயம் மதவாதம் பிரிவினை தூண்டும்
பசையுள்ள கட்சிகளோ பணத்தால் அடிக்கும்
பகல்கொள்ளை அடித்தவர்கள் கொட்டம் ஓங்கும்
திசையெங்கும் ஒலிபெருக்கி திருவிழா தோற்றம்
தேர்தல்என வந்தாலே நம்பாடு நாசம்
- அப்துல் கையூம்
Palani Velu
March 29, 2016 at 6:28 pm
தேர்தல்என வந்தாலே நம்பாடு நாசம்