RSS

பேய்கள் அரசாண்டால்….?

29 Mar

பேய்கள் அரசாண்டால் பிணம்தின்னும் சாத்திரங்கள்
பேதமையை தொடர்வதினால் நமக்குள்ளே ஆத்திரங்கள்
நாய்களும் நரிகளுமே ஊளையிடும் பிரசங்கம்
நமக்குஇவரா தருவார்கள் நல்லதொரு அரசாங்கம்?
ஓயட்டும் இவர்கொட்டம் பட்டதெல்லாம் படுநட்டம்
உண்மைகளை நாம் சொன்னால் உதாவக்கரை பட்டம்
கோயபல்ஸ்கள் நிறைந்துவிட்டார் கொள்கைகளோ காணோம் எங்கும்
கோடிகளை குவித்துவிட்டார் இவர்ஆட்டம் இனி மங்கும்

மதுஒழிப்போம் என்பார்கள்; மதுஆலை வைப்பார்கள்
மதியிழக்க செய்து நம்மை நம்ப வைப்பார்கள்
விதிமாற்ற முனைகின்றோம்; வியாக்யானம் சொல்லக்கூடும்
விளையாட்டை முடித்தபின்பு வேதாளம் மரம் ஏறும்
புதிதாக பலகதைகள் ஊடகங்கள் தான்புனையும்
பணம்பெற்ற அவர்கூற்று உண்மையென்று நம்பவைக்கும்
சதிகாரக் கும்பல்கள் சகலவித்தை கையாளும்
சனியன்களை வளரவிட்டால் சாக்காடு எந்நாளும்

நேற்று பெய்த மழையினிலே இன்றுபூத்த காளான்கள்
நிலையின்றி ஆடுவதை நேரிடையாய் காணடா!
ஆற்றுமணல் கொள்ளையர்கள் அதிகாரம் கைப்பற்றி
ஆட்சிபீடம் அமரவேண்டி ஆயத்தத்தை காணடா !
வேற்றுமையை ஏற்படுத்தி வெறும்பேச்சு சித்தாந்தம்
வீணர்களின் வாயிலிருந்து வெளிவருவதை காணடா !
நாற்றமுறும் சாக்கடையாய் சாதியினை மேலிருத்தி
நாட்டை ஆள துடிப்பவரின் நாடகத்தைப் காணடா !

கனிமவளம் சுரண்டியபின் கனவுகளை சுமந்தபடி
கழிசடைகள் உதிர்க்கின்ற கனிமொழியைக் காணடா !
இனிமேலும் நீ உறங்கி எதனையுமே கண்டிராமல்
இருந்துவிட்டால் இழப்புக்கள் தொடர்கதையே தானடா !
புனிதராக அரிதாரம் பூசியவர் வருகின்றார்
புரிந்துக்கொண்டு அவர்களையும் புறந்தள்ளி வீழ்த்தடா !
சனியன்களை மறுபடியும் சந்தர்ப்பவாதியையும்
சரிசெய்யத் தவறிவிட்டால் சனங்களுக்கு கேடடா !

எட்டுமுழம் வேட்டிகட்டி எலிகள் போகும் சவாரிகளை
எதற்கென்று சிந்தித்து இனம்கண்டுக் கொள்ளடா !
கட்டுக்கட்டாய் பணமிறக்கி களம்காணும் பேர்வழியை
களையெடுக்கும் தருணமிது அறிந்துக் கொள்ளடா !
சட்டங்களை கையிலேந்தி சாதகமாய் பயன்படுத்தும்
சண்டாளப் பேர்வழியை சகதியாக எறியடா!
வட்டமிடும் பருந்துகளாய் வாக்குபெற ஏமாற்றும்
வலையில்விழா திருக்க வேண்டும் புரிந்து கொள்ளடா!

– அப்துல் கையூம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: