முன்ஷி
அரபு நாட்டிலிருந்து வந்து, தமிழ் நாட்டிலுள்ள நாகூரில் குடியேறி, மலேயா நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடி, மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்ற அப்துல்லாஹ்விற்கு “முன்ஷி” என்ற உருதுமொழி அடையாளம் எப்படி ஏற்பட்டது? என்று ஒரு நண்பர் வினா தொடுத்திருந்தார். நியாயமான கேள்வி.
ஏராளமான பழைய இந்திப்படங்களில் “முன்ஷி” என்ற கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கும். ஜமீந்தாருக்கு கணக்குப்பிள்ளையாக வரும் அவர் வெய்ஸ்-கோட் அணிந்து, தலையில் மார்வாடி தொப்பி மாட்டிக்கொண்டு,. சோடா புட்டி கண்ணாடியை மூக்கு வரை தாழ்த்தி உற்றுப்பார்த்தவாறு, கையில் கணக்கு நோட்டும், தடித்த இங்க் பேனாவும் கையில் ஏந்தியவாறு திரைப்படத்தில் காட்சி தருவார்.
“முன்ஷி” என்ற உருது வார்த்தை பாரசீக மொழியிலிருந்து தழுவப்பட்டது. “முன்ஷி” என்றால் ஆசான், காரியதரிசி அல்லது எழுத்தர் என்று பொருள். முகலாயர்களின் அரசவையில் முன்ஷிகளுக்கு பெருத்த மரியாதை தரப்பட்டது. பன்மொழி வித்தகராக கருதப்பட்ட அப்துல்லாஹ்வுக்கு “முன்ஷி” என்ற கெளரவப் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள். அதை வழங்கியது யார் என்பதை பிறகு பார்ப்போம்.
மலாய் மொழியின் மூலவார்த்தைகள் என்று ஆராய்ந்தாலே வெறும் 157 வார்த்தைகள் மட்டும்தான். பண்டைய காலத்து (7-14-ஆம் நூற்றாண்டு) மலாய் மொழியில் சம்ஸ்கிருதத்தின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இஸ்லாம் மார்க்கம் கீழை நாடுகளில் பரவ ஆரம்பித்தபோது (14-18-ஆம் நூற்றாண்டு), அதன் தாக்கம் மலாய் மொழியின் மீது அதிகம் காணப்பட்டது. அக்கால கட்டத்தில்தான் அரபி மற்றும் பாரசீக வார்த்தைகள் கலக்க ஆரம்பித்தன. 19-20 நூற்றாண்டுகளில்தான் நவீன மலாய் மொழி சுமார் 8,00,000 சொற்றொடர்களுடன் திருத்தி அமைக்கப்பட்டது.
இந்தியர்களின் தாக்கம் பற்பல நூற்றாண்டுகளாகவே கீழை நாடுகளில் இருந்து வந்தது, எனவே “முன்ஷி” என்ற உருது வார்த்தை அடைமொழியானது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளமைப் பருவத்திலேயே மலாய் மொழியில் ஆளுமை பெற்றிருந்த அப்துல்லாஹ், இந்திய சிப்பாய்களுக்கு மலாய் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் அவர்கள் மரியாதை நிமித்தமாக விளித்த “முன்ஷி” (ஆசான்) என்ற காரணப்பெயரே நிரந்தரமாக நிலைத்து விட்டது. அவருக்கு “இந்த” முன்ஷி பட்டம் வழங்கப்பட்டபோது அவருடைய வயது வெறும் பதின்மூன்று என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது
அப்துல்லாஹ்வின் இளமை பருவம்
கெம்பங் பள்ளி என்ற சிறு கிராமத்தில் 1796 –ஆம் ஆண்டு முன்ஷி அப்துல்லாஹ் பிறந்தார் “விளையும் பயிர் முளையில் தெரியும்” என்பார்கள். இந்த பழமொழி அப்துல்லாஹ் விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்
அப்துல்லாஹ்விற்கும் குழந்தைப் பருவத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் எப்போதும் அவர் சோர்வாகவே காணப்படுவார். அவரது தாயார் அவரை எந்தக் குறையும் இல்லாது நன்றாக கவனித்துக் கொண்டார். கடைக்குட்டி, அதுவும் ஒரே பிள்ளை, தவமிருந்து பெற்ற பிள்ளை, உடல்நலம் குன்றி காணப்பட்ட குழந்தை, இதுபோன்ற காரணங்களினால் சிறுவன் அப்துல்லாஹ் மீது அவரது தாயார் பெரிய ஆச்சி அளவற்ற பாசத்தை பொழிந்தார். தந்தையார் ஷேக் அப்துல் காதிர் அவர்களோ கண்டிப்பு என்றால் கண்டிப்பு; அப்படியொரு கண்டிப்பு.
இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “மேஜர் சந்திரகாந்த்” படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஏற்று நடித்த கதாபாத்திரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டும். வைத்த இடத்தில்; வைத்த பொருள் இருக்க வேண்டும். காலையில் எழுவதும், படிக்கச் செல்வதும், வீடு திரும்புவதும், படுக்கைக்கு உறங்கச் செல்வதும் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தாக வேண்டும். அப்துல்லாஹ்வின் வீட்டிலும் இதே கதைதான்..
‘கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்’ என்பார்கள்.அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். கடுமையான கண்டிப்பு செலுத்திய அதே வேளையில் தந்தையார் அப்துல் காதிர் அவர் மீது மிகுந்த அக்கறை கொண்டதோடு, தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
நான்காவது வயதிலேயே அப்துல்லாஹ் எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். சிலேட்டில். அவர் எழுதியெழுதி பயின்றார். ஆறாவது வயதில் அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட சோர்வும் கடுமையான பலகீனமும் அவரை ஆட்டிப் படைத்ததால் கல்வியில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை.
சிறுவயது முதற்கொண்டே அவர் கூர்மையான புத்தியும், எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளக் கூடிய சக்தியை பெற்றிருந்தாலும் அவரது உடல்நலமின்மை அவரது வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது.
திருக்குர்ஆன் பாடம் படிப்பதற்காக தந்தையார் அவரை மதரஸா அனுப்பி வைத்தார். மற்ற குழந்தைகள் அனைவரும் திருமறையை சரளமாக மனனம் செய்து ஒப்பித்தனர். ஆனால் சிறுவன் அப்துல்லாஹ் மட்டும் படிப்பதில் சற்று பின்தங்கியே இருந்தான். தன்னால் முழுமையான கவனத்தை செலுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்துல்லாஹ்வை வாட்டி எடுத்தது..
மற்ற குழந்தைகள் யாவரும் திருமறையைக் கையில் ஏந்தி விழுந்து விழுந்து மனனம் செய்தனர். ஆசான் சொல்வதை சிரத்தையுடன் கற்றுக் கொண்டனர். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் மட்டும் சிலேட்டை கையில் வைத்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து அரபி எழுத்துக்களை ஒவ்வொன்றாக கிறுக்கிக் கொண்டிருப்பான். நாளடைவில் ஒவ்வொரு அச்சரங்களையும் பொறுமையாக பசுமரத்தாணிபோல் தனது மனதில் பதிய வைத்துக் கொண்டான். கையெழுத்துக்களும் முத்து முத்தாக இருக்கும்.
அப்போது அவனுக்கு ஏழு வயது இருக்கும். திருமறையை மனனம் செய்வதில் மற்ற மாணவர்களை விட அப்துல்லாஹ் பின்தங்கி இருப்பதை அறிந்து ஆத்திரப்பட்டு ஒருநாள் பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். தான் கண்ட கனவுகளெல்லாம் வீணாகி விடுமோ என்ற மனவேதனை. அவனுக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமே. என்ன செய்வது? இம்போஸிஷன் எனப்படும் கடுமையான எழுத்துப்பயிற்சி கொடுப்பது என அப்துல் காதிர் தீர்மானித்தார்.
அப்துல்லாஹ்வினால் மனனம்தான் செய்ய முடியவில்லையே தவிர அரபி எழுத்துக்கள் அனைத்தையும் புரிந்துக்கொண்டு, நன்றாக எழுத தேர்ச்சி பெற்று, கோர்வையாக வார்த்தையாகவும் எழுத கற்றுக் கொண்டான்.
பள்ளிவாயிலுக்கு வந்துச் செல்லும் அத்தனை பெயர்களுடைய பெயர்களையும் தினமும் தந்தையிடம் அவன் எழுதிக் காண்பிக்க வேண்டும். எழுத்துக் கோர்வையில் பிழை இருந்தால் மீண்டும் மீண்டும் பிழையின்றி, திருத்தமின்றி எழுதிக் காட்ட வேண்டும்.
போகப்போக, இந்த எழுத்துப் பயிற்சி தண்டனை இன்னும் கடுமையாகியது,. திருக்குர்ஆனிலுள்ள அத்தனை அத்தியாயங்களையும் ஒவ்வொன்றாக தன் கையால் எழுதிக் காண்பிக்க வேண்டும், அதையும் செவ்வென எழுதி எழுதி தேர்ச்சி பெற்றான் அப்துல்லாஹ்.
இப்போது அப்துல்லாஹ் அரபி மொழி, மலாய் மொழி இவையிரண்டும் சரளமாக எழுதப்படிக்க கற்றுக் கொண்டான். அப்துல்லாஹ்விடம் ஊறிப்போயிருந்த அபாரத் திறமையை அப்துல் காதிரால் அறிந்துக் கொள்ள முடிந்தது. உள்ளுக்குள் அவருக்கு மிகுந்த சந்தோஷம். தான் ஆசைப்பட்டதைபோலவே தன் மகனை உலகமே மெச்சும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக ஆக்க உறுதி பூண்டார்.
இப்போது அதை விட கடுமையான பயிற்சி மேற்கொள்ள அப்துல்லாஹ்வை பழக்கப்படுத்தினார். திருமறை முழுவதையும் ஒவ்வொரு அத்தியாயமாக மலாய் மொழியில் மொழிபெயர்த்து எழுதிக் காட்ட வேண்டும். இத்தனை சிறுவயதில் இப்படியொரு சவாலான காரியத்தை முடிக்க யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்துல்லாஹ் தனது 11-வது வயதிலேயே திருக்குர்ஆன் வசனங்களை எழுதிக் கொடுத்து சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டார்.
13-வது வயதில் மலாக்கா அரணில் முகாமிட்டிருந்த இந்திய முஸ்லிம் சிபாய்களுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டார். சிப்பாய்களில் பெரும்பாலோர் வட இந்திய மாநிலத்திலிருந்த வந்திருந்த முஸ்லிம்கள். அவர்கள்தான் முதன்முதலில் இவரை முன்ஷி என்ற அடைமொழியிட்டு மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினர். பிறகு இதுவே இவரது பெயரின் அடையாளமாகி விட்டது என்பதை நாம் முன்னரே பார்த்தோம்.
பலமொழி கற்பதில் ஆர்வம் மிகுந்திருந்த அப்துல்லாஹ் அவர்களிடமிருந்து உருது மொழி பேசவும் நன்றாகக் கற்றுக் கொண்டார். பிற்காலத்தில் அவர் நூலாசிரியர் ஆனபொழுதில் அந்த அனுபவம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது.
அப்துல்லாஹ்வின் தந்தை அப்துல் காதிருக்கு பத்திரம் எழுதி கொடுப்பதுதான் பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருந்த வேளையில் கப்பல் மாலுமி ஒருவருக்கு ஒரு ஒப்பந்த படிவம் அரசாங்க, பாண்டு பத்திரத்தில் எழுத வேண்டியிருந்தது. அப்பணியை சிறுவன் அப்துல்லாஹ்வே மேற்கொண்டு கனகச்சிதமாக எழுதி முடித்தான். மாலுமிக்கு அது மிகவும் பிடித்துப்போனது.
அதற்கான தொகை ஒரு டாலரையும் கொடுத்துவிட்டு அந்த மாலுமி அலுவலகத்தை விட்டு வெளியேறவும் அச்சமயத்தில் அப்துல் காதிர் வீட்டுக்குள் வந்து நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
அப்துல்லாஹ்வின் அபாரத் திறமையைக் கண்டு அவரது தந்தை பூரித்துப் போனார்,. செல்ல மகனை அப்படியே வாரி அணைத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு அப்துல் காதிர் மேற்கொண்டிருந்த மனு, பத்திரம், விண்ணப்ப படிவம், உடன்படிக்கை படிவம் பூர்த்தி செய்வது, மொழிபெயர்ப்பு போன்ற அனைத்து அலுவலக பணிகளிலும் கூடவே ஒத்தாசையாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். பிற்காலத்தில் அப்துல்லாஹ் மேற்கொண்ட எழுத்துப் பணிக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.
அப்துல்லாஹ்வின மொழியார்வத்தை அறிந்த தந்தையார் மலாக்காவிலுள்ள மிகச்சிறந்த மலாய் மொழி ஆசான்களைத் தேடிப் பிடித்து அவருக்கு மொழிப்பயிற்சி அளித்தார். பழைய மலாய் கையெழுத்து ஏடுகளை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றை காகிதத்தில் மறுநகல் எடுப்பது,. ஆசானை கேள்விகளால் திணறடிப்பது, ஒவ்வொரு வார்த்தைகளின் மூலத்தையும் ஆராய்வது; இதுபோன்ற ஆர்வம் அவருடைய திறமைகளுக்கு கிரியாவூக்கியாக இருந்தன. மரபுமொழி, சொலவடைகள், பழமொழிகள் வட்டார வழக்குச் சொற்கள் இவைகளுக்கு அர்த்தம் கற்பித்து விளக்கவுரை எழுதினார்.
1811-ஆம் ஆண்டு, 14 வயது இருக்கும்போது அப்துல்லாஹ் மலாய் மொழியில் நன்றாக தேர்ச்சி பெற்று மொழி ஆளுமை நிறைந்த வல்லுனராக பெயரும் புகழும் பெற்று மலாக்காவில் செல்வாக்கு அடைந்திருந்தார்.
“Like Diamond, Palakkad is famous for 3 C’s ie; Cook, Carnatic and Crooks” – என்பார்கள். இப்படிச் சொல்வதால் பாலக்காடு நண்பர்கள் கோபப்படுவார்களே என்று நினைக்க வேண்டாம். இதை பெருமையாக்ச் சொன்னது முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷன். அவரும் பாலக்காட்டுக்காரர் என்பதுதான் இதில் சுவராஸ்யம்.
அதுபோன்று நாகூரும் மூன்று விஷயங்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. நாகூர் அல்வா, நாகூர் பிரியாணி மற்றும் நாகூர் குசும்பு. இந்த நாகூர் குசும்பு என்ற வகையறாவில் கேலி, கிண்டல், வெடப்பு, கலாய்ப்பு, நையாண்டி, நக்கல், கஞ்சி காய்ச்சுறது, கூடு விடுவது இவைகளோடு யதார்த்த பழமொழிகளும் அடங்கும். இப்பழமொழிகள் அனைத்திலும் மெல்லிய நகைச்சுவை உணர்வு இழையோடும்.
எனது தந்தை வழி பாட்டி அம்மாஜியின் நினைவு எனக்கு வருகிறது. அவர் வாய் திறந்தால் பழமொழிகள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டும். இதை முதலில் செய்வதா அல்லது அதை முதலில் செய்வதா என்று யாராவது வினா தொடுத்தால் “போத்திக்கிட்டு படுத்தா என்ன; படுத்துக்கிட்டு போர்த்தினா என்ன?” என்பார்கள். சந்தோஷத்தில் ‘ஒண்ணுக்கெடக்க ஒண்ணு’ செய்தால் “பூனைக்ககு குஷி வந்தா புல்லுப் பாயை பிறாண்டுமாம்” என்பார்கள். கடுமையாக வார்த்தைகள் வாய்தவறி வந்தால் “ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்” என்பார்கள். அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் மற்றொரு பழமொழி “வெளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதோ?” என்பதாகும்.
அப்துல்லாஹ்வின் மலாய் மொழி நடை உலகப்புகழ் பெற்றதற்கு காரணம் அவரது எழுத்துக்களில் காணப்படும் ஒரு துள்ளல் நடை, சொலவடை, பழமொழிகள், முதலியன,.
நாகூர் வம்சா வழியில் வந்த அதே ரத்தம், அதே மண்வாசம், பெரிய ஆச்சியின் வளர்ப்பில் கிடைத்த பயிற்சி இவையாவும் முன்ஷி அப்துல்லாஹ்வின் நகைச்சுவை உணர்வுக்கு உந்துதலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்….?
(அடுத்த பாகம் மீண்டும் தொடரும்…)