கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதைகளை நாம் படிக்கையில் கசப்பான அனுபவத்துடன் கூடிய ஒரு சோக ராகம் அதனூடே இழைந்து வருவதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. “உள்ளத்துள்ளது கவிதை” என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியது உண்மை எனத் தோன்றுகிறது.
அறிஞரும் நானும்
————————————-
ஐந்து வருஷங்கள் முன்னால்
அறிஞராக இருந்தார்
இன்று –
அவர் பேரறிஞர்..!
ஐந்து வருஷங்கள் முன்னால்
எனக்கு –
நிறைய ஆசைகள்..
ஒன்றுமே நிறைவேறவில்லை..
என்றாலும் –
இன்று நான்
பேராசைக்காரன்..!
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
31.05.2000
இருட்டு வெளிச்சம்
————————————-
என் நிம்மதிக் கிராமம்
இருட்டாகவே …
என்றாலும் அதன்
கவலைத் தெருக்கள்
எப்போதும் வெளிச்சத்தோடு..!
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
14.01.2000
தாயம்
————-
என் விஷயத்தில்
நினத்ததெல்லாம்
நடந்து விடுகிறது…!
நான் –
நினப்பதை தவிர..
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
01.01.2005
புதிர்
———
எனக்குப் புரியவில்லை…
புரியவில்லை என்பதே
ரொம்ப நாட்கள் புரியவில்லை.
இந்நிலையில் –
புரிந்தவர்கள்
என்னை –
எப்படிப் புரிந்திருப்பார்கள்..?
புரியவில்லை…!
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
01.01.2005
தியானம்
——————
தியானம் செய்..
என்றார் குரு.
நான்தான்
கவிதை எழுதுகிறேனே என்றேன்
சினந்தார்.
எனக்கு
தியானம் புரிந்த அளவுக்கு
என் குருவுக்கு
கவிதை புரியவில்லை
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
26.05.2000
புரிந்த புதிர்
———————-
மனைவி புரிகிறது ..
மக்கள் புரிகிறது …
சொந்தம் புரிகிறது ..
சுமைகள் புரிகிறது
வாழ்க்கைதான் –
புரியவில்லை..!
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
03.10.2002
தேடல்
————-
எனக்கு
நண்பர்கள்
நிறைய உண்டு..!
நட்பைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்…!
கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
26.06.2003