RSS

பெரியாரைச் சித்தரித்த புலவர்

18 Sep

புலவர் ஆபிதீன்

செப்டம்பர் – 17, தந்தை பெரியார் பிறந்த தினம். அலைமோதும் சில பெரியார் நினைவுகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்கம் ,மேலோங்கி வந்த காலத்தில் பெரியாரைப் பற்றி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது.

“ஆசுகவி” என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் புலவர் ஆபிதீன். ஆபிதீன் காக்கா என நாகூர் மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்டவர்.

அவர் எழுதிய அந்த அற்புத பாடல் வரிகள் இதோ :

பேரறிவாளர் அவர் பெரியார் எனும் ஈவேரா
ஆரறிவார் பெருமை தமிழா,
ஆபிதீன் சொல் ஈவெரா தமிழா
ஆபிதீன் சொல் ஈவெரா !

தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே

வேதியர் கண்கள் முன்னே
வேட்டிகளை அணியச் செய்து
வீதி உலாவச் செய்தார் – தமிழா
வீரராம் ஈவெரா-வே
வீரராம் ஈவெரா-வே

புரோகிதப் புற்றுக்குள்
பாலை விட்டு
…………………………………….
புகுத்தல் தருமத்திற்கு
விரோதம் என்றே கூறிட்டார்
வித்தகர் ஈவெரா-வே – தமிழா
வித்தகர் ஈவெரா-வே

இப்பாடல் அக்காலத்தில் எல்லோருடைய உதட்டிலும் தவழ்ந்தது. எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது.

ஆபிதீன் காக்காவுடைய எழுத்தாற்றலை எடுத்துக் கூற இந்த இரண்டு வரிகளே போதுமானது எனலாம். எத்தனை விஷயங்களை உள்ளடக்கி விட்டது கீழ்க்காணும் இந்த இரண்டு வரிகள்.

“தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார்”

ஆஹா! என்ன ஒரு சொல்லாடல்!!!!

சற்றே கண்ணயர்ந்து தூங்குவது வேறு. கண்முன் நடக்கும் அக்கிரமத்தை சகித்துக் கொண்டு கண்டும் காணாததுபோல் கண்மூடித் தூங்குவது வேறு.

“தூங்கிக் கிடந்த உன்னை” என்று விளிப்பதன் மூலம் “உணர்ச்சியற்ற பிண்டமாக உறங்கிக் கொண்டிருக்கின்றாயே தமிழா!” என்று ஒடுக்கப்பட்டவர்களை பார்த்து உணர்வூட்டும் வகையில் உசுப்பி விடுகிறார் நம் புலவர்..

“தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடலெழுதிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

“நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்”

என்று சமுதாயத்தைப் பார்த்து குற்றம் கூறுவார்.

ஆபிதீன் காக்கா அவர்களோ….

“தூங்கிக் கிடந்த உன்னைத் துடைத்தணைத்து” என்ற முதல் வரியில் பல அவலங்களை உள்ளடக்கி விட்டார்.

தூங்கிக் கிடந்தான் அந்த ஒடுக்கப்பட்டவன் சரி. ஏன் அவனை துடைத்து அணைக்க வேண்டும்.?

நீ எங்களோடு சமமாக நின்று பேசக்கூட லாயக்கற்றவன் .உன்னைத் தொட்டாலே தீட்டு. . நீ மல ஜலம் அள்ளத்தான் லாயக்கு. என்று சகதியில் கிடந்தவனை “துடைத்தார்” பெரியார் என வர்ணித்திருப்பது அம்சம்.

அவர் “துடைக்க” மட்டுமல்ல “அணைத்தார்” என்று கவிஞர் கூறுவது அதைவிட சிறப்பம்சம்.

எல்லோரும் எல்லோரையும் அணைத்துக் கொள்ள மாட்டார்கள். நான் உயர் சாதி; அவன் கீழ் சாதி என்று வேற்றுமை பார்ப்பவன் ஒருபோதும் அணைத்துக் கொள்ள மாட்டான்.

மீண்டும் அந்த வரிகளைப் பாருங்கள் :

தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார்

தூங்கிக் கிடந்த அவனை தந்தை பெரியார் துடைத்ததோடு நிற்காமல், அணைத்ததோடு நிற்காமல், “தாங்கியும்” கொண்டார்.

யாரைத் தாங்கிப் பிடிப்பார்கள்? என்ன செய்வதென்று குழம்பித் தடுமாறுபவனை. ஒடுக்கப்பட்டவனை கைத்தாங்கலாக தூக்கி அணைத்து ஒரு சமூக அந்தஸ்த்தை கொடுத்தவர் பெரியார் என்பதை புலவர் ஆபிதீன் கோடிட்டுக் காட்டுகிறார்,

அடுத்த வார்த்தையை கவனியுங்கள். தூங்கிக் கிடந்தவனை துடைத்தெடுத்தார்; அரவணைத்தார்; தாங்கிப் பிடித்தார். இப்பொழுது என்ன செய்தார் தெரியுமா?

“தரைமேல் இட்டார்”. அவனைத் தரைமேல் இட்டார் என்று சொன்னால் அவன் ஏற்கனவே பள்ளத்தில் கிடந்தான் என்றுதானே பொருள்?

படுபாதாளத்தில் கிடந்த ஒரு சமுதாயத்தை மேலே கொண்டுவந்தார் பெரியார் என்று .கவிஞர் எவ்வளவு லாவகமாக கூறுகிறார் என்பதை நாம் ரசிக்க முடிகிறது.

இரண்டே வரிகளில் ஒரு கவிஞன் இத்தனை விஷயங்களை கூற முடியும் என்பதற்கு ஆபிதீன் காக்கா அவர்களுடைய சொல்லாரற்றலே மிகச் சிறப்பான சான்று.

வறுமையில் வாடியபோதும் வளமான சிந்தனைக்கு ஒருபோதும் அவரிடத்தில் பஞ்சமில்லை.

அப்துல் கையூம்
18-09.2016

Advertisements
 

Tags:

One response to “பெரியாரைச் சித்தரித்த புலவர்

  1. Narayanan Gopala Sundaram

    September 19, 2016 at 4:10 am

    வெகு அற்புதம் கையூம் ஸாஹிப்! முதலில் அந்த புகைவிட்ட பழைய கால ரயில் இஞ்சினைப் பார்த்ததுமே புல்லரித்தது. பிறகு உங்கள் ரஸிகத்தன்மை மிகுந்த எழுத்தோவியத்தைப் பார்த்ததும் உள்ளம் நிறைந்துவிட்ட்து. உங்கள் கவியுள்ளத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் தலைவணங்குகிறேன். அன்புடன் கோபாலசுந்தரம்.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: