பெரியார் என்ற சொல் எவரும் உச்சரிக்க உகந்த சொல் அல்ல என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளிலும் சுயமரியாதைச் சிந்தனைகளிலும் கவரப்பட்டு திராவிட முழக்கங்கள் முழங்கிக் கொண்டிருந்தார் நாகூர் ஹனிபா.
1935-ஆம் ஆண்டு அது. அப்போது ஹனிபாவுக்கு பத்து வயதுதானிருக்கும். ஹனிபாவின் தந்தையார் முகம்மது இஸ்மாயில் மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் நகரில் ரயில்வே போர்மேனாக பணி புரிந்து வந்த நேரம். அதுசமயம் தமிழக மண்ணில் புரட்சிக் கருத்துக்களை வித்திட்டுக்கொண்டிருந்த தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகள் அவரை பெரிதும் ஆட்கொண்டன.
தமிழ்நாட்டில் செட்டியார் தொடக்கநிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தன் அன்பு மைந்தன் ஹனிபாவின் மனதில் சுயமரியாதைக் கருத்துக்கள் வேரூன்றுவதற்கு அவரது தந்தை ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்றே கூறலாம்
‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா’ என்று சொல்வார்களே, அதுபோல ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்ற பழமொழிக்கேற்ப தன் தந்தைக்கு, அவரது ஆணைபடியே, இங்கிருந்தபடி இஸ்லாமிய பத்திரிக்கைகளையும் ,சுயமரியாதை இயக்க ஏடுகளை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கப்பல் போக்குவரத்து நாகை துறைமுகத்திலிருந்து மலேயாவுக்கு செயற்பாட்டில் இருந்தது. நாகூர் அல்லது சுற்றுவட்டாரத்து பயணிகள் யாரையாவது தொடர்பு கொண்டு பத்திரிக்கை கட்டுகளை தவறாமல் ஹனிபா தன் தந்தைக்கு அனுப்பி வைப்பார்.
- வேலூர் நகரிலிருந்து 1910-ஆம் ஆண்டு முதற்கொண்டு வெளிவந்துக் கொண்டிருந்த இஸ்லாமிய நாளிதழான “சைபுல் இஸ்லாம்”
- “இராமாயண சாயபு” என்றழைக்கப்பட்ட தாவூத் ஷா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1923-ஆம் ஆண்டு முதல் வெளிவந்துக் கொண்டிருந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை
- 1925-ஆம் ஆண்டு முதல் வெளிவந்துக் கொண்டிருந்த பெரியாரால் ஆரம்பித்து வெளியிடப்பட்ட சுயமரியாதை இதழான “குடியரசு” பத்திரிக்கை. இவைகள் குறிப்பிடத்தக்கவை.
“குடியரசு” இதழைத் தொடங்கி வைத்தவர் தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி’ எனும் ’ஞானியார் சுவாமிகள்’ என்பது கூடுதல் செய்தி.
இவைகளை ஒன்று விடாமல் சேகரித்து தன் தந்தைக்கு தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார் ஹனீபா. அனுப்புவதற்கு முன்னர் அவைகளை ஒரு வரிகூட விடாமல் ஒன்றுக்கு பலமுறை படித்து, தன்னைத்தானே உரமேற்றிக் கொள்வார். இப்படியாகத்தான் ஹனிபா திராவிடக் கொள்கைகளும், சுயமரியாதைச் சிந்தனைகளையும் தனக்குத்தானே வளர்த்துக் கொண்டார்.
திராவிட இயக்கம் ,மேலோங்கி வந்த காலத்தில் பெரியாரைப் பற்றி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது.
“ஆசுகவி” என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் புலவர் ஆபிதீன். ஆபிதீன் காக்கா என நாகூர் மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்டவர்.
அவர் எழுதிய அந்த அற்புத பாடல் வரிகள் இதோ :
பேரறிவாளர் அவர் பெரியார் எனும் ஈவேரா
ஆரறிவார் பெருமை தமிழா,
ஆபிதீன் சொல் ஈவெரா தமிழா
ஆபிதீன் சொல் ஈவெரா !
தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே தமிழா
தாத்தாவாம் ஈவெரா-வே
வேதியர் கண்கள் முன்னே
வேட்டிகளை அணியச் செய்து
வீதி உலாவச் செய்தார் – தமிழா
வீரராம் ஈவெரா-வே
வீரராம் ஈவெரா-வே
புரோகிதப் புற்றுக்குள்
பாலை விட்டு
…………………………………….
புகுத்தல் தருமத்திற்கு
விரோதம் என்றே கூறிட்டார்
வித்தகர் ஈவெரா-வே – தமிழா
வித்தகர் ஈவெரா-வே
இப்பாடல் அக்காலத்தில் அனைத்து இனஉணர்வாளர்களின் உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது ..
இப்பாடல் திராவிட இன உணர்வாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது.
1939-ல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ராஜாஜி நாகூர் வந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கறுப்புக்கொடி காட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது ஹனிபாவுக்கு வயது எத்தனை தெரியுமா..? சொன்னால் நம்ப மாட்டீர்கள். வெறும் பதின்மூன்று வயது.
“சின்ன வயதிலேயே தமிழ்.. தமிழ் என்ற தமிழுணர்வுடன் வளர்ந்தவர் நாகூர் ஹனிபா. தமிழுக்கு ஒரு தீங்கென்றால், அந்தத் தீங்கினைத் தடுத்து நிறுத்திட, தமிழர் நலன் காத்திட தமிழ்மொழி காத்திட, தோள்தட்டிதன்னை ஒப்படைத்துக் கொள்ளக் கூடிய தியாக சீலர் நாகூர் ஹனிபா” என வாயாரப் புகழ்கிறார் டாக்டர் கலைஞர்.
மேலும், “பெரியார் பெயரை உச்சரித்தால், அண்ணாவின் பெயரைச் சொன்னால் ஒருவித முகக்கோணலுடன் சமுதாயத்தில் பலர் பார்த்து ஒதுக்கிய நேரத்தில் – அவர்களின் பெயரைச் சொன்னால் பிழைக்கவே முடியாது எனும் அச்சுறுத்தல் ஆட்டிப் படைத்த நேரத்தில் – இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மேடை தோறும் இசைமுழக்கம் செய்த அனிபாவின் இளமைத் தோற்றத்தையும் கண்டிருக்கிறேன். இன்று என்னை விட ஓரிரு வயது குறைந்தவராயினும் நரைத்த தாடியுடன் கழகத்தின் கொடிமரமாய் மிடுக்காகத் திகழ்வதையும் கண்டு பூரிப்புக் கொள்கிறேன்.”
என்று புகழாரம் சூட்டுகிறார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
1938-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தஞ்சை மாநிலத்திலிருந்த பெரும்பாலான ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார்.
மே மாதம் 22 கூத்தாநல்லூரில் நடந்த மீலாது விழா. அதே 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.
மே மாதம் திருபுவனத்தில் நடந்த முஸ்லீம் லீக் மாநாடு.
ஜூன் 8, அய்யம்பேட்டை பனகல் பந்தலில் (பசுபதி கோயில்) நடந்த முதல் சுயமரியாதை மாநாடு
ஜூன் 9, திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி கூட்டம்
ஜூலை 24, மாயவரத்தில் நடந்த 10,000 க்கும் மேலானோர் கலந்துக் கொண்ட மாபெரும் முஸ்லீம் லீக் மாநாடு
ஜூலை 25, கும்பகோணம் காங்கேயன் பார்க்கில் நடந்த இந்தி எதிர்ப்பு கூட்டம்
ஜூலை 26, வவ்வாலடியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம்
ஜூலை 27, மாயவரம் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம்
இவை யாவும் தந்தை பெரியார் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய கூட்டங்கள். இவை அனைத்திலும் ஒன்று விடாமல் நாகூர் ஹனிபா தமிழின உணர்வோடு தொண்டராக கலந்துக் கொண்டு செயலாற்றிய கூட்டங்கள்.
இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :
தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?
“பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்.”
திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் தழைப்பதற்கு பெரியாரின் பெருமைமிகு சீடராக விளங்கிய நாகூர் ஹனிபாவும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது .
அப்துல் கையூம்