RSS

நாடாளுமன்ற நாயகர் நாகூர் அப்துல் ஜப்பார்.

28 Sep
mka-jabbar

எம்.கே.அப்துல் ஜப்பார்

நாகூர்பதி ஈன்ற நன்மணிகளை நான் பட்டியலிட நாட்கள் போதாது. கடல் கடந்து சென்றாலும் கன்னித்தமிழை கடுகளவும் மறவாத கனவான்கள் பிறந்த கண்ணியமான பூமி இது.

நாடுவிட்டு நாடு குடிபெயர்ந்தாலும். நற்பணிகள் செய்து நாடு போற்றும் நாயகர்களாக நகர்வலம் வந்த நல்லவர்களை பெற்றெடுத்த பூமி இது.

மண்ணின் வாசம் மறவாத மாமனிதர்கள் மலர்ந்த பூமி இது.

புகுந்த வீட்டுக்கு பெருமை தேடிதரும் மருமகள்போல, வாழ்வாதாரம் தேடிச் சென்ற நாட்டுக்கும், பிறந்து வளர்ந்த மண்ணிற்கும் சமஅளவில் விசுவாசம் காட்டி சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனை மனிதர்களை படைத்த பூமி இது

நாடு போற்றும் நாகூரின் மண்ணின் மைந்தர்கள் பலரை என் வலைப்பதிவில் அடையாளம் காட்டி அவர்களின் அருமை பெருமைகளை எடுத்தியம்பி இருக்கிறேன்.

அவ்வரிசையில் இதோ இன்னொரு அபூர்வ மனிதன்.

நாகூர் மண்ணிற்கு நற்பெருமை ஈட்டித் தந்த அந்த நாயகரின் பெயர் அப்துல் ஜப்பார். தந்தையார் பெயர் முகம்மது காசிம்

jabbar

எம்.கே.அப்துல் ஜப்பார்

2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அப்துல் ஜப்பார் அவர்கள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தபோது சிங்கப்பூர் நாடே கண்ணீர் வடித்தது.

மலேசியா நாட்டு பத்திரிக்கைகளும் அவர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தின.  அவர் ஆற்றிய அரும்பணிகளை   ‘ஆகா ஓகோ’வென  வானளாவ புகழ்ந்து தள்ளின.

அப்துல் ஜப்பாரின் மறைவு சிங்கப்பூருக்கு நேர்ந்த மாபெரும் இழப்பு என சிங்கை அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தார்கள்,

அப்துல் ஜப்பார் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தபோது அவருக்கு வயது 77. மனைவியையும் தன் மூன்று மக்களையும் விட்டுச் சென்றார்.

1980-ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி (People’s Action Party) நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ராடின் மாஸ் தனித்தொகுதியில் அப்துல் ஜப்பாரை வேட்பாளராக நிறுத்தியது.

சாதாரண தொழிற்சங்கத் தலைவராக இருந்த இவரது திறமையை கண்டறிந்து இவரை அரசியலுக்கு இழுத்து வந்தது யார் தெரியுமா?

%e0%ae%b2%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%82

லீ குவான் யூ

சிங்கப்பூரின் தந்தை என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் லீ குவான் யூ அவர்கள்தான். லீ குவான் யூ அவர்கள் சென்ற ஆண்டு மறைந்தபோது தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உட்பட பல இடங்களிலும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அவர் எந்த அளவுக்கு தமிழர்களின் மனதில் இடம் பெற்றிருந்தார் என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த அரசியல் கட்சி (P.A.P.)  1959-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் ஆட்சி நடத்தி வருகிறது என்பதை நாமறிவோம். இந்த கட்சியின் நிறுவினர்களில் ஒருவரும், முதல் பிரதமரும் லீ குவான் யூ என்பதும் தற்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இக் கட்சியின் செயலாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது,

சிங்கப்பூர் மேற்குப் பகுதியான ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற பிரதிநிதியாக எம்.கே.அப்துல் ஜப்பாரை நியமித்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சீனர்களும் மலாய் மக்களும் நிறைந்திருக்கும் பகுதியில் இவர் எப்படி தேர்தலில் வெற்றிபெற இயலும் என்று சந்தேகக் கண்கொண்டு   கேள்விகள்   எழுப்பினர்.

காரணம் இதற்கு முன்னர் இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெர்னார்ட் சென் தியன் என்ற சீனர்.  ஆனால் ஏற்கனவே இந்த தொகுதியில் N.நாயுடு கோவிந்தசாமி என்ற தமிழர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அப்துல் ஜப்பார், தன் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வெற்றி வாகை சூடினார்.

1980-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டுவரை அப்துல் ஜப்பார் நாடளுமன்றத்தில்   திறம்பட செயலாற்றினார்.    தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகவே சென்று கேட்டறிந்து அவர்கள் நலனுக்காக நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.. தன் சொல்வாக்கு சுத்தத்தால் அத்தொகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தார்.

நாடாளுமன்றத்தில் தனது கணீர் குரலில் தாய்மொழி தமிழில் முழங்கி ஒவ்வொரு தமிழனையும் தலைநிமிர வைத்தவர் அவர்.    தமிழ் மொழி மீது அவருக்கு அளவுகடந்த ஈடுபாடு  இருந்தது, உணர்ச்சிப்பூர்வமாக மேடையில் உரையாற்றும் தகுதி படைத்தவர்.

1984-ஆம் ஆண்டில் அவர் பதவி துறந்தபோது அவர் சொன்ன காரணம் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது. புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டி தான் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்றார்.

அரசியலில் ஒருமுறை நுழைந்து விட்டால் போதும் அதில் கடைசிவரை அட்டையாக ஒட்டிக் கொண்டு., ஏதாவதொரு பதவியை தக்க வைத்து. சொகுசாக மிச்ச காலத்தை நகர்த்திவிடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் நிறைந்திருக்கும் இவ்வுலகில் அப்துல் ஜப்பார் உதிர்த்த நேர்மையான சிந்தனைத் துளிகள் அவரை மேலும் உயர்த்திக் காட்டியது. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப்போல  அவருடைய உயர்ந்த பண்புக்கு இதுவொன்றே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி   மட்டுமல்லாது அப்துல் ஜப்பார்  பொதுவாழ்வில் அவர் வகித்த பதவிகள் ஏராளம்..  .

அப்துல் ஜப்பார்  ஒரு சாதாரண தொழிலாளியாக  வாழ்க்கைப் பாதையை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் தச்சுத் தொழிலாளியின்  உதவியாளராக தன் பணியைத் தொடங்கி, பின்னர் உதவி மேற்பார்வையாளராக பதவி உயர்ந்தார். 1954-ஆம் ஆண்டு முதலே தொழிற்சங்கவாதியாக செயற்பட்டார். அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே. சிறிது சிறிதாக முன்னேறி 1969-ஆம் ஆண்டு கெப்பல் கட்டுந்துறையின் (Keppel Shipyard) யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ஆம் ஆண்டுவரை இப்பதவியில் நீடித்தார். தொழிலாளர் வர்க்கத்தினரின் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகத் திகழ்ந்தார்.

1979 முதல் 1985 வரை பெருமைமிகு NTUC மத்திய குழுவில் உறுப்பினராக அங்கம் வகித்தார்

1990-ஆம் ஆண்டு சிங்கையின் குயின்ஸ் டவுன் பகுதியிலுள்ள பாஸிர் பாஞ்சாங் இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று அதனை சிறப்பாக நிர்வாகித்தார்.

பின்னர், 1990 முதல் 2003 வரை ஐக்கிய இந்திய முஸ்லிம் அசோசியேஷன் தலைவராக திறம்பட செயலாற்றி     எண்ணற்ற பொதுக் காரியங்களிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.   இந்த அமைப்பு The United Indian Muslim Association (UIMA)   என்ற பெயரில் அரசு அங்கீகாரம் பெற்று 1963-ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அவர் பதவி காலம் முடிவடைந்த பின்னரும் இந்த அமைப்பின் மூத்த ஆலோசகராக பதவியேற்று திறம்பட வழிநடத்தினார்.

2002-ஆம் ஆண்டு மூத்த செயல்வீரருக்கான தொழிலாளர் விருதை இவருக்கு  தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வழங்கி இவரை கெளரவித்தது .

அவர் தன்னலம் கருதா பொதுநலவாதி என்பதை அவரைச் சுற்றியிருந்தவர்கள் நன்கறிவார்கள்.

“அவர் சுயநலம் பேணிய மனிதரல்ல. இளைஞர்கள் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும் என்று கனவு கண்டவர் அவர்.” என்று அப்துல் ஜப்பாருக்கு புகழாரம் சூட்டுகிறார் ஐக்கிய இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த ஃபரியுல்லா என்பவர்.

மேலும் கூறுகையில், “அப்துல் ஜப்பார் அவர்கள் மிகவும் எளிமையான மனிதர். அவரை எப்பொழுது வேண்டுமானாலும் எளிதாக அணுக முடியும். எந்த நேரத்திலும் அவர் வீட்டுக் கதவை உதவிக்கரம் வேண்டி தட்டினாலும் தனிப்பட்டவர்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் ஓடி வந்து உழைப்பவர்” என்று அவரை பாராட்டுகிறார்.

அக்காலத்தில் ஏராளமான இந்திய சமுதாய அமைப்புகள் இருந்தன. அவை யாவும் திக்குக்கு ஒன்றாக வெவ்வேறாக செயற்பட்டு வந்தன. அவை யாவையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் இயங்குவதற்கு அப்துல் ஜப்பார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவரது இடைவிடாத முயற்சி பலனளித்தது.

ஜப்பார் அவர்கள் காயிதேமில்லத் கையால் நற்சான்றிதழ் பெறுகையில்

ஜப்பார் அவர்கள் காயிதேமில்லத் கையால் நற்சான்றிதழ் பெறுகையில்

1983-ஆம் ஆண்டு சிங்கப்பூரிலுள்ள எட்டு இஸ்லாமிய  அமைப்புகளை ஒன்றிணைத்து பிரமாண்டமான முறையில் மீலாது விழா எற்பாடு செய்த பெருமை அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த. எம்.கே.ஏ. ஜப்பார் அவர்களைச் சாரும். அதன்பிறகு இத்தகைய இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நிறைய நடைபெறத் தொடங்கின.

தமிழ்நாட்டிலிருந்து சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பாடகர்களை அழைத்து  சிங்கப்பூர் மண்ணில் தமிழ் மொழியை மணக்கச் செய்தவர்.

சிராஜுல் மில்லத் அப்துல் சமது, இசைமுரசு நாகூர் ஹனிபா போன்றவர்கள் அப்துல் ஜப்பாருக்கு நெருங்கிய தோழர்களாக இருந்தனர்.

1992-ல் இந்திய முஸ்லிம்களின் கூட்டமைப்பான ‘இந்திய முஸ்லிம் பேரவை’யைத் தொடங்கினார். அதன் தலைவர் மற்றும் செயலர் பதவிகளையும் வகித்தார். அதன் பிறகும் தொடர்ந்து ஆலோசகராகவும் தொண்டாற்றி வந்தார்.

இனம்,  மொழி,  மதங்களைக் கடந்து அனைத்து மக்களுடனும் இணைந்து சேவையாற்றவேண்டும்  இதுதான் அவர் அடிக்கடி மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தாரக மந்திரம்.

சாதாரண ஒரு தொழிலாளராக தன் வாழ்வைத் தொடங்கிய  எம்.கே.அப்துல் ஜப்பார் சிங்கப்பூர் அரசியல் வானில் தங்கத்தாரகையாய் ஒளிவிட்டு மிளிர்ந்தார்.

வாழ்வாதாரம் தேடி அயல்நாடு குடிபெயர்ந்துப் போகும் நபர்களில் வெகு சிலர் மட்டுமே தங்களுடைய தாயக மண்ணின் பெருமையை மறக்காமலும், அதன் வம்சாவழி வந்த மக்களின் நலனுக்காகவும் பாடுபட தங்களின் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர். அவ்வகையில் எம்.கே.அப்துல் ஜப்பாரின் வாழ்க்கை மகத்தானது.

சிங்கப்பூர் வாழ் மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற நாகூர் அப்துல் ஜப்பார் என்றென்றும் எல்லோருடைய மனதில் நிலைத்திருப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை,

அப்துல் கையூம்

பிற பிரமுகர்களின் கருத்துக்கள் :

Abdul  Jabbar is  A very effective union leader who was vocal in raising workers’ issues in Parliament. He spoke his mind on what he believed was right

saidi-shariff

Saidi Shariff

Haji Saidi bin Haji Shariff – M.P. Kaki Bukit Constituency (1980-1984)

———————————————————–

Mr Jabbar had helped unite the Indian Muslim community through his sincerity, humility and hard work

  • Singapore Kadayanallur Muslim League president Naseer Ghani

Extracted from speech delivered by Mr. Lee Yock Suan, the then Minister of state for finance on 15 October 1984

Reference:

ராடின் மாஸ் தொகுதி

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுச் செய்தி

National Library Singapore

Speech delivered by Minister of state for finance on 15 oct 1984

இதர ஆதாரங்கள்:

65th Anniversary cum opening of building extension (Page 63)

NTUC Co-operative Insurance Common Wealth Enterprises Ltd. 10th Anniversary 1970-1980 A Decade Progress Page 40

Available in NLB National Library Singapore

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: