இது 120 ஆண்டுகட்கு முன்னர் நடந்த உண்மை சம்பவம். பொதுவாகவே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சிந்தனை செய்துக் கொண்டிருந்தால் “கப்பலே கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாயே..?” என்று வினவுவார்கள்.
உண்மையிலேயே கப்பல் மூழ்கியபோது அந்த நாகூர்க்காரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?
19-ஆம் நூற்றாண்டில் தமிழகத்து கடற்கரை ஓரங்களில் குறிப்பாக நாகூர், பரங்கிப்பேட்டை, கீழக்கரை, காயல்பட்டினம் ஏனைய ஊர்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம்கள் சொந்தமாக கப்பல் வைத்திருந்தும் குத்தகைக்கு எடுத்தும், மாலுமிகளாகவும் பணிபுரிந்து கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். அக்காலத்தில் நாகூரில் வாழ்ந்த கனவான்கள் யார் யாரிடத்தில் கப்பல்கள் இருந்தன என்ற விவரம் நகுதா என்ற தலைப்பிட்ட என் வலைப்பூ பதிவில் இடம் பெற்றிருக்கிறது..
120 ஆண்டுகட்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை போதுமான ஆதாரங்களுடன் இப்பதிவில் விளக்கியிருக்கிறேன்.
நாகூரிலிருந்து பர்மாவை நோக்கி புறப்பட்ட ஒரு கப்பல் நிக்கோபார் தீவுகளின் அருகே சென்று கொண்டிருக்கையில், கப்பலில் ஓட்டை ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்து, அதை தடுக்க எவ்வளவோ முயன்றும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடலில் முழுவதுமாக மூழ்கியது. அதனால் ஏற்பட்ட பொருட்சேதம் எவ்வளவு என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்பது மன ஆறுதல் தருகிறது.
இந்த கப்பலின் பெயர் “கர்னல் ஃபிட்சே” என்பதாகும், இந்த கப்பலுக்கு ஏன் “கர்னல் ஃபிட்செ” என்று பெயர் வைக்கப்பட்டது? அவர் யார்? என்ற விவரம் தெரிந்துக் கொள்ள இதோ ஒரு சிறு குறிப்பு :
ஆல்பர்ட் ஃபிட்செ (Albert Fytche) பர்மா தேசம், பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது அங்கு கர்னலாகவும், லெப்டினண்ட் ஜெனரலாகவும் (Feb 1867-April 1871) பணிபுரிந்தவர்.. 1892-ஆம் ஆண்டு தன்னுடைய 72-வது வயதில் மரணமடைந்தார். அவரை பெருமை படுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு “கர்னல் ஃபிட்செ” என்று பெயரிட்டனர்.
அதுமட்டுமன்றி பர்மா. திபெத், தாய்லாந்து ஏனைய நாடுகளில் காணப்படும் ஒருவகை பறவைக்கும் கர்னலின் நினைவாக “Bambusicola Fytchi” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது சுவையான ஒரு கூடுதல் தகவல்
கடலில் மூழ்கிய கப்பல் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரு நபர்களும் நாகூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெயர் நகுதா எஸ்.பக்கீர் மாலிம், இன்னொருவரின் பெயர் C.சாஹிப் மாலிம்.
கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை இவர்கள் இருவரும் வாக்குமூலமாக கொடுத்த ஒரு ஆவணத்தை படிக்க நேர்ந்தது. இதனை வாசிக்கையில் “டைட்டானிக்” ஆங்கிலப் படத்தை பார்த்ததைப்போல் ஒரு ‘திகில்’ உணர்வு என்னை ஆட்கொண்டது.
இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய மாஜிஸ்திரேட் Harry L. Tilly முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முதல் சாட்சியாக நகுதா எஸ். பக்கீர் மாலிம் அவர்களும் இரண்டாவது சாட்சியாக C.சாஹிப் மாலிம் அவர்களும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி கப்பல் மூழ்கியதற்கான முழு விவரத்தை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.. அது முறையே பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள Southampton நகரத்து SCC நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் இந்த ஆவணம் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்டவரின் வாக்குமூலம் :
பெயர் : எஸ்.பக்கீர் மாலிம்
வயது : 45
இனம்: சோனகர் (Chulia)*
மதம்: இஸ்லாம்
தந்தை பெயர் : சாஹிப் அல்லாபே
சொந்த ஊர் : நாகூர், மெட்ராஸ் மாகாணம், இந்தியா
தொழில் : பாய்மரக்கப்பல் மாலுமி (நகுதா)
நீதிமன்றத்தில் அச்சமயம் வீற்றிருந்தோரின் விபரம் பின்வருமாறு:
Harry L Tilly, Esquire, District Magistrate,
Members:
Captain Burnett, Master S.S. “Shropshire”
Captain Erskine, Master S.S. “Vortigern”
Mr.F.Wegener, Merchant
வழக்கு எண்: 128/ 1896
விசாரணை நாள் : 5th Oct 1896
ரங்கூன் தலைமை கமிஷனர் அவர்களின் ஆணையின் பேரில், இந்திய வணிகர் கப்பல் சட்டம் V 1883- விதிமுறையின்படி, நாகூரிலிருந்து புறப்பட்டு தெற்கே நிக்கோபார் தீவின் அருகேயுள்ள நாங்கோரி என்ற இடத்தில் “கர்னல் ஃபிட்செ” என்ற கப்பல் கடல்நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து இந்த வழக்கு பர்மாவிலுள்ள ரங்கூன் நகரத்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த கப்பல் 145 நீளம், 28 அடி அகலம், 10 அடி உயரம் கொண்டது. இந்த கப்பல் பர்மா நாட்டவருக்குச் சொந்தமானது. இவ்வழக்கில் சாட்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இருவரும் நாகூரைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையின்போது மாஜிஸ்திரேட் கேட்ட கேள்விகளும், அதற்கு நாகூர்க்காரர்கள் சாட்சிகளாக அளித்த வாக்குமூலம் இதோ:
மாஜிஸ்திரேட்: உங்களிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா?
பக்கீர் மாலிம்: ஆம். இருக்கிறது. இது மெட்ராஸ் மாகாணம் Master Attendant அவர்களால் 1882-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதை என் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதை கைவசம் பெறுவதற்காக என் சொந்த ஊர் நாகூருக்கு தந்தியும் அனுப்பி இருக்கிறேன்.
மாஜிஸ்திரேட் : மூழ்கிய கப்பலைப் பற்றி ஏதேனும் தகவல்கள் தர முடியுமா?
பக்கீர் மாலிம்: ஓ! தாராளமாக. “கர்னல் ஃபிட்செ” என்ற இந்தக் கப்பல் சுமார் 31 ஆண்டுகள் பழமையானது. கப்பலின் உரிமை பத்திரம் யாவும் அந்தக் கப்பலிலேயே மூழ்கி விட்டது. நாங்கள் 24-06-1896 தேதி மதியம் ஒரு மணிக்கு நாகூர் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டு நிக்கோபார் தீவை நோக்கிச் சென்றோம். தென்மேற்கு காற்று வீசிய எதிர் திசையில் பயணித்தோம்.
மாஜிஸ்திரேட்: நீங்கள் பயணிக்க வேண்டிய பாதை தென்கிழக்கு அல்லவா?
மாலிம்: ஆம். ஆனால் காற்றின் போக்கு எங்களுக்கு சாதகமாக இல்லாததினால் நாங்கள் சுற்றிக்கொண்டு வேறுதிசையில் பயணிக்க நேர்ந்தது..
மாஜிஸ்திரேட்: ஹு..ம் அப்புறம்
பக்கீர் மாலிம்: புறப்பட்ட மறுநாள் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு வானிலை மோசமானது, எங்கள் கப்பலில் இரண்டு கீழ்பகுதி பாய்மரம் இருந்தது. அப்பொழுதெல்லாம் கப்பலுக்குள் தண்ணீர் புகவில்லை. வழக்கமாக நாளொன்றுக்கு இரண்டு முறை தண்ணிர் ஏதேனும் உட்புகுந்திருப்பின் நாங்கள் வெளியேற்றுவோம். 29-ஆம் தேதியன்று தண்ணீர் அளவுக்கு அதிகமாக உட்புகுவதை நாங்கள் கவனித்தோம். ஆனால் அப்போது வானிலை முன்பை விட சற்று தெளிவாகவே இருந்தது. முதலில் இருந்ததை விட காற்றின் வேகம் பாதியளவே இருந்தது. என்றாலும், தண்ணீர் எதனால் இந்த அளவுக்கு உள்ளே புகுகிறது என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. கப்பலின் முற்பகுதியில்தான் சிறிது சிறிதாக தண்ணீர் புகுந்த வண்ணம் இருந்தது.
மாஜிஸ்திரேட்: அதை தடுக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா?
பக்கீர் மாலிம்: ஆம். நான் எங்கிருந்து தண்ணீர் புகுகிறது என்பதை கண்டறிய முயற்சிகள் எடுத்தேன். நீர்க்கிழி வழியாகத்தான் தண்ணீர் புகுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
மாஜிஸ்திரேட்: பிறகு என்ன நடந்தது?
பக்கீர் மாலிம்: 29-ஆம் தேதி 11 மணியளவில் எங்களுடைய கப்பல் சிறிது சிறுதாக மூழ்கத் தொடங்கியது. பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறிய படகில் தாவி நாங்கள் உயிர் பிழைத்தோம் . சுமார் கால் மணி நேரத்திற்குப் பிறகு கண்முன்னே எங்கள் கப்பல் முழுவதுமாக மூழ்கியது. நாங்கள் பதைபதைத்துப் போனோம்.
மாஜிஸ்திரேட் : அப்புறம்..?
பக்கீர் மாலிம்: வெகுதூரத்தில் எங்கள் கண்களுக்கு நிக்கோபார் தீவு தென்பட்டது. ஐந்து அல்லது ஆறு மைல்களுக்கு அப்பால் இருக்கலாம். சுமார் ஆறு மணி நேரம் படகிலேயே தத்தளித்துக் கொண்டிருந்தோம். அச்சமயம் “சாஹுல் ஹமீது” என்ற பெயர் தாங்கிய ஒரு பாய்மரக்கப்பல் “கச்சல்” என்ற இடத்திலிருந்து நங்கூரமிட்டு தேங்காய் பொதிச்சரக்கை ஏற்றிக் கொண்டிருந்தது. கச்சல் என்ற இடம் நாங்கூரி (Nancowry) என்ற இடத்திலிருந்து ஒன்பது அல்லது 10 மைல் தொலைவில் இருக்கிறது.
(பழங்குடியினர் வசிக்காத “campbell Bay”, “Kachal”, “Hut Bay” போன்ற தீவுகள் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியிருக்கும் குட்டித் தீவுகள். அதில் ஒன்றுதான் கச்சல். இந்த நாங்கூரி தீவு என்பது நிக்கோபார் தீவின் தொடர். வங்காள விரிகுடாவுக்கும் அந்தமான் தீவுக்கு இடைப்பட்ட தூரத்தில் வீற்றிருக்கிறது.)
மாஜிஸ்திரேட்: தொடர்ந்து சொல்லுங்கள்
பக்கீர் மாலிம்: நாங்கள் மூழ்கப்பட்ட கப்பலிலிருந்து வெளியானபோது “கச்சல்” வடமேற்கு திசையில் இருந்தது. இரவு முழுதும் கச்சல் தீவைச் சுற்றி தத்தளித்தபடியே இருந்தோம். கடலலைகள் வலுவாக உயரே எம்பிய வண்ணம் இருந்தது. துறையைச் சுற்றிலும் பாறைகள் வேறு நிறைந்திருந்தன.
மறுநாள் விடியற்காலை 6 மணிக்கு நாங்கள் அட்சரேகை 7A ° 40 ‘மற்றும் தீர்க்கரேகை 91Â ° 30’ –யில் இருந்தோம். காற்று எதிர்க்காற்றாக இருந்ததால் கச்சல் துறையை அடைவதற்கு சற்று சிரமப்பட்டோம். நல்லவேளையாக கப்பல் மூழ்கியதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மாஜிஸ்திரேட்: போதும். இப்போது நீங்கள் போகலாம்
(மாஜிஸ்திரேட் இரண்டாவது சாட்சியை விசாரணைக்கு அழைத்துவர ஆணையிடுகிறார்.)
இரண்டாம் சாட்சி
பெயர் : C.சாஹிப் மாலிம்
சொந்த ஊர்: நாகூர், மெட்ராஸ் மாகாணம், இந்தியா
வயது: 25
தந்தை பெயர்: குலாம் காதர் மாலிம்
தொழில்: துணை மாலுமி
மாஜிஸ்திரேட் : நடந்தது என்ன என்பதை நீங்கள் கூற முடியுமா?
சாஹிப் மாலிம்: 25.06.1896 அன்று எங்கள் கப்பலில் சிறிது சிறிதாக நீர்க்கசிவு ஏற்படத் துவங்கியது.. நீரை வெளியேற்றும் பம்பு பழுதாகியிருந்தது. நாங்கள் பழுதை சரிசெய்து இயக்குகின்ற செயல்பாட்டுக்கு அதனை கொண்டு வந்துவிட்டோம். ஆனால் அதைக்கொண்டு தண்ணீர் உள்ளுக்குள் புகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
மாஜிஸ்திரேட்: பிறகு என்ன நடந்தது?
சாஹிப் மாலிம்: 29-ஆம் தேதி பதினொன்று மணியளவில் கப்பலை விட்டு நாங்கள் வெளியேறினோம். நாங்கள் சிறிய படகில் தாவி தப்பித்த கால் மணி நேரத்திற்குள் அது முழுவதுமாக மூழ்கியது. அதற்குமுன், கப்பல் மூழ்குவதை தடுக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். நீர்க்கசிவை தடுத்து நிறுத்த மூட்டைகள் மற்றும் தார் போன்ற உபகரணங்கள் வைத்து அடைத்துப் பார்த்தும் அது எங்களுக்கு பலனளிக்கவில்லை. காற்றும் எதிர்க்காற்றாக இருந்தபடியால், அது எங்களுக்கு சாதகமாக இல்லாது போனதால் எங்களால் துரிதமாக கப்பலை கரை சேர்க்க முடியவில்லை.
மாஜிஸ்திரேட்: நீங்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்கிறது. நீங்கள் இப்போது போகலாம்,
5.10.1896 அன்று இதற்கான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை முழுவதும் விசாரித்த மாஜிஸ்திரேட் ஹார்ரி எல். டில்லி கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
நகுதா எஸ்.பக்கீர் மாலிம் மூழ்கிய கப்பலைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டார் என்பது இவ்விசாரணையின் மூலம் அறிய முடிகிறது. கடந்த 25 ஆண்டுகளாக பர்மா நாட்டவர்களுக்கு சொந்தமான “கர்னல் ஃபிட்செ” மூழ்கியதற்கு எவ்வகையிலும் அவர்மீது பழிசுமத்தவோ அல்லது அவரை பொறுப்பாளி ஆக்கவோ இயலாது
5th October 1896.
Ship Details:
Ship Launched on: 1866
Vessel Type: River Steamer
Vessel Description: Iron Paddle Steamer
Builder: Archibald Denny, Dumbarton
Tonnage: 276 grt/ 126 bm
Length: 145.0 ft X Breadth: 28.0 ft x Depth: 10.0 ft
Engine Detail: 2 cyl 32”, 32”x42” 70 nhp
1875 Irrawaddy Flotilla Co. Ltd, Glasgow
1877 _____ Penang (Reported)
Vessel History
1867 propably assembled at Dalla Dockyard, Burma
1869 commenced extended IFC service to Bhamo
பின்குறிப்பு: *ஆங்கிலத்தில் Chuliah என்று அழைக்கப்படும் வம்சா வழியினர் தமிழில் சோனகர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வியாபார நிமித்தம் கீழைநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள்.
தொடர்புள்ள சுட்டி
N.Rathna Vel
October 5, 2016 at 1:20 pm
நாகூரிலிருந்து சென்ற கப்பல் கடலில் மூழ்கியது – அரிய தகவல்கள் அடங்கிய பதிவு. நன்றி சார்.
அப்துல் கையூம்
October 5, 2016 at 7:53 pm
நன்றி ஐயா. எனது அனைத்து பதிவுகளுக்கும் தாங்கள் அளிக்கும் ஆதரவு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. வாழ்க வளத்துடன்.
P.n.panneer selvam
October 8, 2016 at 3:13 pm
Arputhamana pahirvu Nagai matrum nagore nanbargalae anaivarum pahirungal