நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டாரம் ஒருகாலத்தில் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கியது.
வர்மக்கலை. மல்யுத்தம், களரிப்பற்று, சிலம்பம், மடுவு (மான் கொம்பு), சுருள் கொம்பு, போன்ற தமிழ்ப் பாரம்பரியக் கலைகள் இன்று சிறிது சிறிதாக அழிந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.
எனது பூட்டனார் (தந்தைவழி பாட்டியின் தந்தை) செய்யது மெய்தீன் அவர்கள் தற்காப்புக் கலையில் அக்காலத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பது நாகூர் வாழ் மூத்த தலைமுறையினர் அத்தனைப் பேருக்கும் நன்றாகவே தெரியும். சிலம்பம் மற்றும் குஸ்தி தற்காப்புக் கலையில் அவர்கள் புகழ் பெற்று விளங்கினார்கள். ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர் அவர். மேலும் தகர (Tin sheets) வேலைப்பாடுகளிலும் அவர் வல்லுனர். சிமிழ் விளக்கு (முட்டை விளக்கு என்று இதனை அழைப்பார்கள். முட்டை வடிவத்தில் இருந்ததினாலோ என்னவோ), போன்றவை கலைநயத்துடன் உருவாக்குவார். அவரிடம் தற்காப்புக்கலை பயின்றோர் ஏராளம். நாகூரில் இது போன்ற தற்காப்புக்கலை நிகழ்வுகள் நடக்கையில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற ஊர்களிலிருந்து அவருடைய சிஷ்யக் கோடிகள் வந்து ஆர்வத்துடன் கலந்துக் கொள்வார்கள்.
காற்று வேகத்தில் கம்பைச் சுற்றி லாவகமாக அவர் விளையாடுகையில் காண்போரைக் கவர்ந்திழுக்கும். ஒரு விபத்தில் அவருடைய கால் ஊனமாகி விட்டது. கையில் கம்பு ஊன்றி தான் நடப்பார். நாங்கள் “நொண்டி நானா” என்று அன்போடு அழைப்போம். அந்த ஊனமான காலை வைத்துக் கொண்டே அசல்ட்டாக கம்பு சுழற்றுவார்.
“ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர். நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி நாகூரில் பல பிரபலங்கள் உண்டு”
என்று தன் பழைய நினைவுகளை பரிமாறுகிறார் நாகூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா
1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” திரைப்படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அப்படம் திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன்.
நாகூர் ஃபரீது காக்கா ஒரு மேடை நாடக நடிகரும் கூட. “நாகூரின் நாடகத் தந்தை” என்று அவரை பாராட்டுவோர் உண்டு. “சந்தர்ப்பம்”, “விதவைக்கன்னி” போன்ற நாடகங்களில் அவர்தான் ஹீரோ. பாடல்கள் கவிஞர் நாகூர் சலீம். உள்ளூரில் முதன் முதலாக நாடகத்திற்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.
எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் நாகூர் ரவீந்தர் எழுதிய நாடகங்களில் எம்.ஜி.ஆருடன் சண்டையிடும் ஸ்டண்ட் வீரராக நடித்துள்ளார். “குலேபகவாலி” படத்தில் எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போடும் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு “டூப்”போட்டு நடித்ததும் இவர்தான்.
நான் அரை டிராயர் அணிந்த சிறுவனாக இருந்த காலத்தில் “உன்னை சினிமாவில் சேர்த்து விடுகிறேன். எங்கே நடித்துக் காண்பி” என்று என்னை உசுப்பிவிடுவார். (அவர் என்னை கலாய்க்கிறார் என்பதையும் புரிந்துக் கொள்ளாமல்) நானும் என் இடுப்பு பெல்ட்டை கையில் உருவி எடுத்துக்கொண்டு “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ” என எம்.ஜி,.ஆர். நம்பியாரை சாட்டையால் விளாசித் தள்ளுவதைப் போல் நடித்துக்காட்ட அதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் “நாம் எவ்வளவு அப்பாவியாக அப்போது இருந்திருக்கிறோம்” என்று நினைக்கத் தோன்றுகிறது.
சிறுவயதில் நாகூர் வஞ்சித்தோப்பில் நூர்சா மரைக்காயர் என்ற தற்காப்பு வல்லுனரிடம் நானும் என் தோழர்களும் குஸ்திக் கலை கற்பதற்குச் சென்றோம். போன மூன்றாவது தினமே என்னை அவர்கள் விட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்கள் ‘ரெடி’ என்று சொன்ன பிறகு எதிரணியில் இருப்பவனை நான் காலால் உதைக்க வேண்டும். அவன் தன் கையால் மின்னல் வேகத்தில் நான் விடும் உதையை தடுப்பான். இதுதான் அன்றைய பாடம். அவர்கள் ‘ரெடி’ என்று சொல்வதற்கு முன்னரே நான் விட்டேன் ஓர் உதை. அது அவனுடைய படாத இடத்தில் பட்டு அவன் துடிதுடித்து விட்டான். என்னை அழைத்து நூர்சா மரைக்காயர் மாமா சொல்லிவிட்டார்கள். “தம்பி உங்களுக்கு குஸ்திக்கும் சரிப்பட்டு வராது. நீங்க நாளையிலேந்து வர வேணாம்”. அன்று மறந்த குஸ்திதான். . “எதற்கு நமக்கு வம்பு.? இனிமே யாராவது அடிகொடுத்தால் பேசாமல் வாங்கிக் கொண்டு போய் விடலாம்” என்று என் மைண்ட் வாய்ஸ் கூற அதன்படியே குஸ்தியை மறந்து விட்டேன்.
நாகூர் தர்கா ஆபிஸ் முன்புதான் ஆற்று மணல் கொட்டி கோதாவுக்கான ஏற்பாடுகள் செய்வார்கள். உஸ்தாதுகள் இறங்குவதற்கு முன்பு கத்துக்குட்டிகள் களமிறங்கி தங்கள் திறமையைக் காட்டுவார்கள். ஒரு படத்தில் “சேலையிலே வீடு கட்டவா?” என்று அஜீத் பாடுவார். இங்கு உஸ்தாதுகளும் கத்துக்குட்டிகளும் காற்றிலேயே கையால் வீடு கட்டுவார்கள்.
கெளதியா பைத்து சபா புகழ் பக்தாது நானா. இவருக்கு ஏன் பக்தாத் நானா என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. (கல்கத்தா மாலிம், பங்களாதேஷ் யூசுப், லண்டன் மாலிம் என்பதைப்போல இவரும் பக்தாத் சென்று வந்தாரோ என்னவோ) இவரும் சிலம்பத்தில் பெயர் பெற்று விளங்கிய உஸ்தாது.
குட்டநானா (அண்மையில் காலமான சித்தீக் நானா அவர்களின் தகப்பனார்) அவர்கள் கோதாவில் இறங்குகையில் கைத்தட்டல் விண்ணை பிளக்கும். அவர்களுடைய உயரத்திற்கு தகுந்தாற்போல் சிறிய கம்பினை கையிலேந்தி, மின்னல் வேகத்தில் சுழற்றி திறமையைக் காட்டுவார்கள்.
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை இப்போது நிகழப்போகிறது என்று பாம்பாட்டி இறுதிவரை ஏமாற்றிவிட்டு சண்டையைக் காண்பிக்க மாட்டான். கடைசியில் ஏதாவது ஒரு லேகியத்தை விற்றுவிட்டு பேசாமல் போய்விடுவான்.
ஒருமுறை இப்படித்தான் குஸ்தி பார்க்க போனேன், சினிமாப் புகழ் ஃபரீது காக்கா ஆற்றுமணல் களத்தில் இறங்கினார்கள்.. காலால் மணலை சீக்கிக் கொண்டு இருந்தார்கள். ரொம்ப நேரம் இதையே செய்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். “கல்லு முள்ளு ஏதாச்சு, மண்ணுலே கெடக்குதான்னு ஆராய்ச்சி செய்யுறாஹா. விளையாடுறஹ முகத்துலே இல்லாட்டி முதுகுலே குத்திவிடக் கூடாது இல்லியா. கடைசியா அஹ இறங்குவாஹா பாருங்க” என்றார். நானும் ஆவலோடு கடைசி வரை காத்திருந்தேன்,. ஃபரிது காக்கா மணலைச் சீக்கியதோடு சரி. கடைசிவரையில் களமிறங்கவே இல்லை..
குஸ்தி கலையில் நாகூரில் மற்றொரு பிரபலம் “மொம்லி காக்கா”. அவர்களுடைய முழுமையான பெயர் முகம்மது அலி. முகம்மது குட்டி “மம்மூட்டி” ஆனது போல முகம்மது அலி “மொம்லி” ஆகிவிட்டது.
நாகூர் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் பூரான் ஷெரீப். இவர் பாம்புக்கடி, பூரான்கடி வைத்தியரல்ல. கபூரான் ஷெரீப் என்ற இவரது பெயர் சுருங்கி “பூரான் ஷெரீப்” என்று ஆகிவிட்டது. நாகூர் அருகாமையிலிருக்கும் திட்டச்சேரியைச் சேர்ந்தவர். வர்மக்கலையில் “நரம்பு பிடி” அறிந்தவர். ஏதாவது நரம்பை பிடித்து இழுத்து விட்டாலே போதும். அப்படியே செயலற்று நின்று விடுவார்களாம்.
உலகளாவிய புகழ் பெற்றவர் இந்த பூரான் ஷெரீப் அவர்களைப் பற்றி. “ஆஹா பக்கங்கள்” என்ற ஒரு வலைப்பதிவை இயக்கும் நண்பர் அப்துல் காதர் அவர்களின் பக்கங்களில் கீழ்க்காணும் இவ்விஷயங்கள் காணக்கிடைக்கின்றன
பிரசித்திப் பெற்ற தற்காப்பு கலையை சீனாவுக்கே சென்று கற்றவர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். “சைனீஸ் டிஸாஸ்டர்” என்ற அறியவகை கலையை கற்றவர்களில் முக்கியமானவர்கள் ‘எல்லைக்கல் ‘ யூசுப் மரைக்காயர், ‘பூரான்’ ஷரீப் ஆகியோர்களாவர்.
நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர் பெயர் “எல்லைக்கல் யூசுப்” என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.
இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டுகளில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர் நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல் படாமல் ‘விர்ர்.. விர்ர்..’ என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.
அப்துல் காதரின் சுவையான இத்தகவல்கள் நமக்கு பிரமிப்பை வரவழைத்தது.
மேலும் ஜூடோ சித்தீக், பாம்பாட்டி மஜீது, சே மரைக்காயர், அத்திக்கடை மடுவு சுல்தான், திட்டச்சேரி பூரான் சுல்தான், இதுபோன்ற தற்காப்பு விளையாட்டு நிபுணர்கள் நாகூரில் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார்கள்.
மஞ்சக்கொல்லையில் சின்ன மரைக்காயர் ஏற்பாடு செய்யும் குஸ்தி மிகவும் பிரபலம்.
நாகையில் பாண்டியன் திரையரங்கிற்கு கிழக்கே கொடிமரம் உண்டு. அங்கு ஒரு மேடை உண்டு. இந்த மேடையில்தான் அக்காலத்தில் கிங்காங் மற்றும் தாராசிங் மல்யுத்தம் செய்தார்கள் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன்.
மல்யுத்த வீரர்களான கிங்காங், தாராசிங் இருவரையும் ஊர் ஊராக அழைத்துச் சென்று, குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தி, டிக்கெட் போட்டு வசூல் செய்திருக்கிறாராம் எழுத்தாளர் சாவி.
தாராசிங் நெற்றியில் வரிவரியாக மடிப்புச் சுருக்கங்கள் இருக்கும். சண்டைக்கு முன், அந்த மடிப்புகளில் லேசாக பிளேடால் தாராசிங்கை கீறிக்கொள்ளச் சொல்வாராம் சாவி. பிளேடு கீறிய இடத்தில் ரத்தம் கசிந்து உறைந்து போகும். பின்பு சண்டையில் கிங்காங்கிடம் தாராசிங்கின் நெற்றியில் உள்ளங்கையால் அறையச் சொல்வார். அப்படி அறையும்போது, ரத்தம் காய்ந்த இடம் உதிர்ந்து, புதிய ரத்தம் பளிச்செனக் கிளம்பும். இது பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிந்தால்தானே அவர்களிடம் ஒரு விறுவிறுப்பு உண்டாகும் !
அதற்கும் ஒரு வழி செய்தார் சாவி. கிங்காங்கை வெள்ளை பனியன் அணிந்து சண்டையிடச் சொல்வார். தாராசிங்கைத் தாக்கி, ரத்தம் ஒட்டிய கையை தன் வெள்ளை பனியன் மீது அறைந்து கொள்ளச் சொல்வார். அப்படிச் செய்யும்போது, வெள்ளை பனியன் ரத்தமாகி, பார்வையாளர் கண்ணுக்குப் பளிச்செனத் தெரியும். சண்டை சூடு பிடிக்கும். பின்பு, ஏற்கெனவே திட்டமிட்டபடி, தாராசிங் பாய்ந்து கிங்காங் மேல் மோதி, அவரின் பனியனைக் கிழித்துக் கந்தல் கந்தலாக்குவார். “ஒரு பனியன் போனா என்ன, ஆயிரம் பனியன் வாங்குற அளவுக்கு வசூல் சேர்ந்துடும்” என்று சொல்லிச் சிரிப்பார் சாவி.
இது ஒரு பதிவில் படித்தது
தொலைக்காட்சியில் இந்த பாழாய்ப்போன WTF போன்ற நிகழ்ச்சிகள் வரப் போக இதுபோன்ற குஸ்தி மற்றும் பாரம்பரியக் கலைகளை நேரில் காணும் வாய்ப்பு நம் இளைய சமுதாயத்தினருக்கு கிடைக்காமல் போனது ஒரு மாபெரும் இழப்பு என்றுதான் கூறவேண்டும்.
சுல்தானுல் ஆரிஃபின் .க.
October 11, 2016 at 3:31 pm
70- 80களில் நாகூர் மெய்தீன் பள்ளி கந்தூரி விழாவில் குத்து சண்டை போட்டி நடந்ததை பார்த்திருக்கிறேன். அதில் (தாவாத்தி) ஹுசைன் நாநா, பாம்பாட்டி மஜீது நாநா இவர்களுடைய சீடர்களின் சிலம்பம் விளையாட்டு நடக்கும். அந்த காலத்தை நினைத்தாலே மணதில் இன்பம்.
Amine MOHAMED
October 11, 2016 at 7:37 pm
பூரான் ஷெரீப் அவர்களுடன் இணையாக விளையாடக்கூடியவர் நிரவியை சேர்ந்த நெய்னா முகமது அவர்கள் . அவர்களைப் பற்றி ஒன்றுமே காணோமே!