“ஏசு” என்பதால் இது மார்க்கப் பதிவு என்று நினைக்க வேண்டாம். அந்த “ஏசு” வேற. இந்த “ஏசு” வேற.
“அஹ ஏசுறாஹா”, “என்னை ஏசாதீங்க”, “ஏம்பா ஏசுறே?”
நாகூர் வட்டார மொழியில் இதுபோன்ற பேச்சுக்கள் சர்வ சாதாரணம். திட்டுதல் என்று பொருள்படும் இச்சொல்லை வேறு சில இடங்களில் “வைதல்” –என்று சொல்வதை காதுபட கேட்டிருக்கிறேன். உதாரணம்: “அவிங்க வையுறாங்க” “ஏம்பா வையுறே?”
“வசைபாடுதல்” அல்லது “வஞ்சித்தல்” என்ற சொல் “வைதல்” என்று மருவியிருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. நிந்தித்தல் என்பது இதன் பொருள். சில இடங்களில் ஏசினான் என்பதை “மானாவாரியா பேசிப்புட்டான்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“ஏசுறாஹா” என்று நாகூரில் பயன்பாட்டில் இருக்கும் இச்சொல் தூயதமிழ்ச் சொல்லா என்ற சந்தேகம் ரொம்ப நாளாக எனக்கிருந்தது. இந்த ஒளவையார் பாடலை படித்தபின் அந்த ஐயம் முற்றிலும் தீர்ந்தது.
ஏசி இடலின் இடாமையே நன்று – எதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று – நேசமிலா
வங்கணத்தில் நன்று வலியபகை, வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று
…ஒளவையார்
நானும் இதன் முதல் வரியை கேட்ட மாத்திரத்தில் “ஏசி போட்டுக்கிட்டு ரூமிலே தூங்கறத விட ஏசி போடாம தூங்குறதே சாலச் சிறந்தது” என்று ஒளவையார் சொல்கிறாரோ என்று தவறாக நினைத்தேன்.
இப்பாடலின் பொருள்: “ஏசி விட்டு ஒருத்தருக்கு தானம் தருவதை விட, தானம் தராமலிருப்பதே மேல். கணவனுக்கு முன்னால் நின்று மறுத்துப் பேசும் Female மனைவியைக் காட்டிலும் பேயானது ரொம்பவும் மேல். அன்பில்லாத உறவினைக்காட்டிலும் பெரும்பகையே மேல். சங்கடத்தால் நசிந்துபோன வாழ்வைக்காட்டிலும் சாவதே மேல்.
இப்பொழுது ஒளவையார் உயிரோடிருந்திருந்தால் இந்த கடைசி வரிக்காக “அவர் தற்கொலைக்குத் தூண்டினார்” என்று அவர் மீது வழக்கு போட்டிருப்பார்கள்.
ஏசுதல் என்ற சொல்லை ஒளவையார் பயன் படுத்தி இருப்பதால் அது சங்க காலத்து தூயதமிழ்ச்சொல் என்பது நன்கு விளங்குகிறது.
நாகூர் அதன் சுற்று வட்டார வழக்கில் பயன்பாட்டில் இருக்கும் இதுபோன்ற எண்ணற்ற தூயதமிழ்ச் சொற்களை தொகுத்து இதற்கு முன்பும் நிறைய எழுதியிருக்கிறேன்.
#அப்துல்கையூம்
மாசிலா
May 13, 2017 at 9:29 pm
வணக்கம்,
பாண்டிச்சேரியிலும் இவ்வித வார்த்தை அதே அர்த்தத்தில் புழக்கத்தில் உள்ளது நண்பரே.
நன்றி.
Sanchana
June 28, 2017 at 2:41 pm
Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News
அப்துல் கையூம்
June 28, 2017 at 5:07 pm
Thank you so much. Regards