RSS

சிலேடை மன்னர் கி.வா.ஜ.

11 Apr

கி.வா.ஜ.

இன்று ஏப்ரல் 11 –  கி.வா.ஜ. அவர்களுடைய பிறந்த நாள்.

அவருடைய முழுபெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், நாட்டுப்புறவியலாளர் என பன்முகம் கொண்ட தமிழறிஞர் அவர்..

இன்றும் கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் சிலேடையாக பேசுவதில் வல்லவராக இருக்கிறார்கள். எத்தனையோ பேர்களை நாம் இதுவரை கண்டிருக்கிறோம். இருந்தபோதிலும் கி வா ஜ அவர்களுடைய சிலேடைப் பேச்சுக்கு ஈடு இணை  இல்லவேயில்லை

கி.வா.ஜ. ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் வாயிற்படியிலேயே துவைத்த புடவை உலர்த்தி காயப் போட்டிருப்பதைக் கண்டு இவ்வாறு சொன்னார்.

இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.  என்ன தெரியுமா? இதுதான் உண்மையான வாயில் புடவை!’

புவனேஸ்வரி அம்பாளின் புத்தக வெளியீட்டு விழாவில் .கி.வா.ஜ. தலைமை தாங்கி பேசுகிறார்.

“இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி.   இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர்  ராமசாமி.  நானோ  வெறும் ஆசாமி”.

கூட்டத்தில் எழுந்த  சிரிப்பலை அடங்க வெகு நேரம் பிடித்தது.

கி.வா.ஜ. நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பியபின் அவர்களது விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம்.

“அம்மணி உண்டி கொடுத்து, வண்டியும் கொடுத்து  உபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன்”.

இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளச் சென்றார். கி.வா.ஜ. கூட்டத்தில் குழப்பம்,. சண்டை, ஒரே  இரைச்சல். கடுப்பான அவர் வெளியே வந்தார்.  வெளியே மழைத் தூறிக் கொண்டிருந்தது.

அவர் சொன்னது: “உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்”.

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட கூட்டம். அமர்க்களமாக பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைத்தட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர் சொல்ல

“அதனால்தான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” என்று சொன்னபோது சபையில் பலத்த கைதட்டல்.

கி.வா.ஜ நண்பர்களுடன் சென்ற கார் வழியில் நின்று விட,  கி.வா.ஜ.முதியவர் என்பதால் அவரை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள்.  ஆனால் அவரும் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தார். “என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?” என்று அவர் கேட்டபோது அவரது பேச்சிலிருந்த சிலேடையைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.

கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கவிருந்த ஆசாமி  வரவில்லை.கி.வா.ஜ.வை

தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ. மறுத்தார் .”நீங்களே

தலைவராக நாற்காலியில் அமரவேண்டும்” என்று வற்புறுத்தியபோது ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க  ஏன்தான் உங்களுக்கு  இவ்வளவு ஆசையோ?” என்று கேட்டார் கி.வா.ஜ.

கூட்டமொன்றிற்கு கி.வா.ஜ அவர்களை தலைமை தாங்க அழைத்து போகும்போது ஒரு பையில் பழங்களையும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் போட்டு அனுப்பி வைத்தனர்.

“என்னைத் ‘தலைவனாக’த் தலைமை தாங்க அழைத்துப் ‘பையனாக” அனுப்புகிறீர்களே?” என்றார்.  அவரின் சிலேடை நகைச்சுவையை  அனைவரும் ரசித்தனர்.

வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி  பதிப்பகத்தார் வெளியிட்டனர். பாராட்டுரை  கூற  வந்த  கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக,  “’நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்’ என்றதும் அரங்கத்தில் கைதட்டல் வானைப் பிளந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு  கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, “நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்” என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

ஒரு முறை  கி. வா. ஜ அவர்களை  “இம்மை – மறுமை”  என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். உரையாற்ற  தொடங்கியதும் மைக் கோளாறு செய்தது. வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சரியாகச் செயல்படவில்லை.  கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

ஒரு  விருந்தோம்பலில் பெண்மணி ஒருவர் .கி.வா.ஜ  சாப்பிட இலைமுன் அமர்ந்ததும்   பூரியைப் போட்டுக் கொண்டே, “உங்களுக்கு பூரி பிடிக்குமோ இல்லையோ?  என்று அன்போடு வினவினார்.

உடனே கி.வா.ஜ. “என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றார். இப்பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனார்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது என்பததை எல்லோரும் அறிவர்)

அப்துல் கையூம்

Q

Advertisements
 

One response to “சிலேடை மன்னர் கி.வா.ஜ.

  1. N.Rathna Vel

    February 2, 2019 at 8:50 am

    அருமை. நன்றி

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: