காலப்பேழையில் காஜா மொய்தீன்
“எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள் ஆர்.எம்.வீரப்பன் என்ற பெயரை உச்சரிக்காமல் கடந்து போக முடியாது” என்று என்னிடம் சொன்னார் என் திரையுலக நண்பர் ஒருவர்.
“ஆம். அதேபோன்று ரவீந்தர் என்ற பெயரைக் குறிப்பிடாமல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முழுமையே அடையாது” என்று அழுத்தம் திருத்தமாக நானும் கூறினேன்.
“என்ன பைத்தியக்காரத்தனமாக பேசுகிறீர்கள்? ரவீந்தருக்கும், எம்.ஜி.ஆருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ரவீந்தர் அறிமுகமானதே ‘ஒருதலை ராகம்’ படத்தின்போது தானே?” என்று பதில் சொன்னார் அவர். இத்தனைக்கும் அவர் சினிமாத்துறையில் பலகாலமாக இருப்பவர்.
“நான் சொல்லும் ரவீந்தரின் உண்மையான பெயர் காஜா மெய்தீன் என்பதையும், அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்ற தகவலையும், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அவருடன் ஒன்றாக திரைத்துறையில் பயணித்தவர் என்பதையும், “எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களே அன்போடு “எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று உரிமை கொண்டாடிய நபர் அவர் என்ற நிதர்சனத்தையும், ஆர்.எம் வீரப்பனுக்கு முன்பே அவர் எம்.ஜி.ஆரிடம் பணிக்குச் சேர்ந்தவர் என்பதையும், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் அவர் ஒரு முக்கிய அங்கம் என்ற உண்மையையும் நான் எடுத்துரைத்தபோது “அப்படியா..? இப்படியும் ஒரு இஸ்லாமிய அன்பர் புரட்சித்தலைவரின் வாழ்க்கையில் நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறாரா..?” என்று விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
எடப்பாடியின் அரசு என்னென்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆரின் மனதில் நிறைந்து நின்ற இந்த ரவீந்தர் என்ற திறமையான மனிதரை தமிழக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் புரட்சித் தலைவரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் “எம்,ஜிஆர், காலப்பேழை” என்ற ஆவண நூலை வெளியிட்டு அவருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்துள்ளது. அந்த வகையில் இவர்களை பாராட்டியே தீரவேண்டும்.
அந்த ஆவணப்பேழையில் ரவிந்தரைப் பற்றிய அரிய தகவல்களும், எம்.ஜி,ஆர். நாடக மன்ற வரலாறு, ரவீந்தர் எழுதிய நாடகங்கள், புகைப்படங்கள் அத்தனையும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். திராவிடக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு அண்ணாவின் நாடகங்களும், கலைஞரின் வசனங்களும் எந்தளவுக்கு பங்கு வகித்தனவோ அதுபோன்று எம்.ஜி.ஆரின் நாடகங்களில் கூறப்பட்ட அரசியல் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு ரவீந்தரின் கதை வடிவமைப்பும். கனல் தெறிக்கும் வசனங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
அவரெழுதிய ‘இன்பக்கனவு’, ‘இடிந்த கோயில்’, ‘ஆசை நினைவு’, ‘அட்வகேட் அமரன்’ போன்ற நாடகங்கள் மக்களிடையே புரட்சிக் கருத்துக்களை விதைத்தன.
உண்மைகளை பொய்கள் விழுங்கிவிடும் இக்காலத்தில் இதுபோன்ற உண்மைகளை ஆவணப்படுத்தி வைப்பது மிகவும் அவசியம்.
புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும். பல்வேறு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின. 30.09.2018 அன்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவின்போது எம்.ஜி.ஆரின் காலப்பேழை என்ற 290 பக்கங்கள் அடங்கிய சிறப்பு நூலொன்றை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை தொகுத்து வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிச்சாமி ‘காலப்பேழை’ வெளியிட்ட அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்களும் அரசு அதிகாரிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
என்ற திருக்குறளுக்கு ஒப்ப மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; இன்பத்ஜ்திலும் துன்பத்திலும் உறுதுனையாக நின்ற மாசற்ற உறவை மறக்காத வண்ணம் ரவீந்தரின் பெயரை மீண்டும் உச்சரிக்க வைத்த தமிழக அரசுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
அப்துல் கையூம்
இன்னும் தொடரும் ….
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 9
எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10
எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11
எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 15
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 16
One response to “எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 17”