நாகூரில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை தொடராக எழுதலாம் என ஒர் எண்ணம்.
“ரொம்பத்தான் இஹ பீத்திகிறாஹா. எங்க ஊருலேயும்தான் இப்படிச் சொல்லுவாஹா” என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் இல்லை,.
“பீத்திக்கிறீங்க” என்று சொல்றீங்க பாத்தீங்களா இதுவும் தூய தமிழ்ச் சொல்தான். பீற்றுதல் என்றால் அகம்பாவத்துடன் பெருமை பேசுதல்.
நான் நாகூரோடு சம்பந்தப்பட்டவனாதலால் நானறிந்த வட்டார வழக்கைத்தான் நான் சொல்ல முடியும்.. உங்கள் ஊரோட சம்பந்தப்பட்ட சொல்லாடல்களை நீங்களும் தாராளமாக பகிரலாம். இதில் பீத்திக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே சார்.
நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்.
“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”
“எனக்கு உடம்புக்கு ஏலல”
நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.
“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.
அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று
இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:
எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து
இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.
இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.
“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.
“நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி” (புற:376:11).
“நல்கும் வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கு வாய் ஒல்கல் உறும்” (தி.நூ:17:3).
“நைந்து வீழும் முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்தே” (கோவை:61).: “தேய்ந்த நுண்ணிடை நைந்து உகச் செப்பினை” (சீவ:3:270).
இதுபோன்ற சொல்லாடல் பழந்தமிழ்ப் பாடல்களில் நாம் கான முடிகின்றது.
“ஏலலே” என்பது சங்கத்தமிழ்ச் சொல் என்பதை உங்களுக்கு நான் புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.
– அப்துல் கையூம்
(இதில் சில கருத்துக்கள் ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் நான் எழுதியதுதான்)