நாகூருக்கும் புகைவண்டிக்கும் ஏகப்பொருத்தம் உண்டு. ஒரு காலத்தில் வடநாட்டிலிருந்து நாகூர் ரயிலில் யார் பயணம் செய்து வந்தாலும், “நாகூர் வந்ததும் என்னை எழுப்பி விடுங்கள்” என்று சகபயணிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை. ரயிலில் ஏறி குறட்டை விட்டு தூக்கி விட்டால் போதும். அந்த ரயில் கடைசி நிறுத்தமாக நாகூர் வந்தடைந்து நின்றுவிடும். ரயிலைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அவர்களை எழுப்பி விட்டு விடுவார்கள். ஆகையால் கவலை இல்லை.
இப்பொழுது அப்படியில்லை. காரைக்காலுக்கும் தொடர்வண்டி தொடர்பு ஏற்படுத்தி விட்டதால் நாகூருக்கு இருந்த அந்த முக்கியத்துவம் முற்றிலும் போய்விட்டது.
இன்ஜினை வந்தவழியே திருப்புவதற்கு கிணறு போன்ற ஒரு சக்கர அமைப்பில் இன்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தி, இருபுறமும் இரு நபர்கள் லீவரைக் கொண்டு கையாலேயே திருப்புவார்கள். என் இளம் பிராயத்தில் நாகூரில் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை காணச் சென்றதுண்டு. இவ்வளவு பெரிய ரயில் இன்ஜினையே இரண்டு பேர்கள் திருப்பி வைத்து விட்டார்களே….? அவர்கள் எவ்வளவு பலசாலியாக இருப்பார்கள்? என அந்த புரியாத வயதில் கண்டு வியந்ததுண்டு.
இக்காலத்தில் ட்ரெயினை பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். “புகைவண்டி” என்றுதான் இவ்வளவு நாட்களாக நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படி அழைக்காதீர்கள் என்று தமிழார்வலர்கள் நம் மீது வெகுண்டு எழுகின்றார்கள்.
ஒருகாலத்தில் ரயிலானது புகை விட்டுக் கொண்டு “சிக்கு.. புக்கு. சிக்கு.. புக்கு ரயிலே..” என்று வந்தது. இப்பொழுது அது என்ன புகை விட்டுக்கொண்டா வருகிறது? என்று கேள்வியால் நம்மை துளைத்தெடுக்கிறார்கள். நியாயமான சந்தேகம்தான்.
ஆகவே, தொடர் வண்டி என்று அழையுங்கள் என்று நமக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனையோ இடங்களில் “ரயில்வே ஸ்டேஷன்” “புகைவண்டி நிலையம்” என்றுதான் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன.
புகையிரதம், புகை வண்டி, புகையூர்தி, ரயில் வண்டி, நீராவி ரயில், சாரனம் (சாரை+வாகனம்), இருப்பூர்தி, தொடருந்து, தொடரி என்று ஆளாளுக்கு வெவ்வேறு பெயர்களால் அழைத்து நம்மை குழப்புகிறார்கள்.
பொத்தாம் பொதுவாக தொடர்வண்டி என்று சொன்னால் போதுமா?
Locomotive Train, Diesel Train. Electric Train, Commuter, Goods Train, Metro Train, Mono Rail, Bullet Train என வகை வகையான ட்ரெயின்களுக்கும் தமிழ்ப் பெயர் கொடுத்து விட்டீர்களேயானால் எங்களைப் போன்ற பாமரர்கள் அழைக்க ஏதுவாக இருக்கும்.
வெறுமனே “தொடர் வண்டி” என்று எப்படி இவை யாவையும் அழைப்பது?
நாகூர் பெரும்புலவர் குலாம் காதிறு நாவலர் எழுதிய 220 அடிகளைக் கொண்ட புலவராற்றுப்படையில் இந்த தொடர் வண்டியைப் பற்றிய வருணனை நம்மை பிரமிக்க வைக்கிறது.
சங்ககால நடையில் சொல்நயம், பொருள்நயம் மிகுந்து காணப்படும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட காலத்தால் அழியாத இப்புலவராற்றுப்படையில் நாம் இப்போது அழைக்கும் “தொடர்வண்டி”யினை “எந்திர ஊர்தி” என்று குறிப்பிடுகிறார் நம் பெரும்புலவர்.
தமிழிலக்கியத்தில் காணப்படும் 96 வகை பிரபந்தங்களில் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்றால் நெறிபடுத்துதல் என்று பொருள். நாகூர் குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படையை நாம் ரசித்து படிக்கையில் “இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கோஷம் எழுப்பத் தோன்றுகிறது..
நாவலர் தன் சகபுலவர் ஒருவருக்கு “மதுரைக்கு ட்ரெயின்லேயே போகலாமே. ஜாலியா இருக்குமே” என்று பரிந்துரை செய்கிறார்.
அந்த புகைவண்டியை வருணிக்கும் அவருடைய நடையழகைப் பாருங்கள்.
//உருமுறுமோ டுறலொழியின்
இருபுறனும் இருப்புருளை
நான்குருளைக் கான்குழுமும்
வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்
ஒலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கொத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையின்
எந்திர வூர்தி…//
இடி மாதிரி வித்தியாசமான சத்தம் எழுப்பும் இரும்பினால் ஆன நான்கு உருளைகள் அதற்கு உண்டு. நடுக்காட்டிலே இருக்கின்ற கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி ‘புஸ்.. புஸ்ஸென்று..’ பெரிய மூச்சு விடுகின்றது.
இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளுகின்றன.
காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது.
அந்த மாதிரி ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற கரும் புகை இருக்கின்றதே … அப்பப்பா… ! அது எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த குழாயின் வாயிலாக புகை சுழன்று சுழன்று வருகிறது.
மரவட்டை மாதிரி இருக்கிறது அதன் நடை. அந்த எந்திர ஊர்தி ஒன்றுக்குப் பின் ஒன்றாக நீண்டு ஊர்ந்து ஊர்ந்துச் செல்கிறது.
“இந்த மாதிரி சிறப்பு கொண்ட எந்திர ஊர்தியில் பயணித்துப் பாரும் புலவரே!” என்று கூறுகிறார்.
இக்காலத்தில் வெளிவந்த எந்த ஒரு தமிழ் நூலிலும் எந்திர ஊர்தி என்ற பெயரோ அல்லது அதைப்பற்றிய வருணனையோ நான் அறிந்திலேன். டிரெயினுக்கு முதற் முதலாக “எந்திர ஊர்தி” என்று பெயர் சூட்டியது நம் நாவலராக இருக்கலாம் என்பது என் எண்ணம். இப்பதிவை படிக்கும் தமிழறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கக் கூடும்.
நாவலர் அந்த தொடர்வண்டியின் அமைப்பை வருணிப்பதோடு நின்றுவிடவில்லை. மேலும் பாடுவதைக் கேளுங்கள்.
//அந்தமில் காட்சி அணிபல காண்பிர்
வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்
ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்
பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுற செலவின்
மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்
சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்
நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்//
சக புலவருக்கு நம் நாவலர் மேலும் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.
“அந்த டிரெயின்லே நீங்க கிளம்பி போனீங்கன்னா ஷோக்கான காட்சிகளையெல்லாம் வரிசையா பார்த்துக்கிட்டே போகலாம். போக வேண்டிய இடத்திற்கு சட்டுபுட்டுன்னு போய்ச் சேரலாம். அந்த அனுபவம் சூப்பரா இருக்கும். வழி நெடுக மக்கள் ஏறி இறங்கும் பல ஸ்டேஷன்கள் வரும். அதுமட்டுமல்ல வாய்க்கு ருசியா உணவு பண்டங்களும் அந்தந்த ஸ்டேஷன்களில் கிடைக்கும். நாள் கணக்கா மதுரைக்கு பயணம் போக வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளிலே நீங்க மதுரைக்குச் சென்று விடலாம்.”
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவிய குலாம் காதிறு அவர்கள் வாழ்ந்த காலம் .
அது, 1833 ஆண்டு முதல் 1908 வரை.
#அப்துல்கையூம்