ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளியான படம் “பாவமன்னிப்பு. அதில் நாகூர் ஹனிபா, டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்துப் பாடிய “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.
சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் செல்கிறார். அச்சமயம் சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் ‘ஜென்டில்மேனான’ சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கிறார். படத்தில் “கதை” புத்தா பிக்சர்ஸ் குழுவினர் என்றுதான் காண்பிப்பார்கள். சந்திரபாபு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.
அக்கால கட்டத்தில் சந்திரபாபுவும் சாதாரண நடிகர் அல்ல. சிவாஜிக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால் “சபாஷ் மீனா” படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வாங்கியவர் “சபாஷ் மீனா” திரைப்படம் பாவமன்னிப்பு வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே வெளிவந்த படம்.
“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ ஆசாமிகளுக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.
பொதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் முஸ்லிம் பாத்திரம் என்றாலே “நம்மள்கி”, “நிம்மள்கி” என்று மார்வாடி போன்றுதான் டமில் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
முஸ்லிம் பாத்திரம் பெரும்பாலும் சல்வார் கமீஸ் அணிந்து, கூம்பு தொப்பியணைந்த, ஆஜானுபாகுவான நெட்டை ஈட்டிக்காரனாக இருப்பார். “அரே.. சைத்தான் கி பச்சா” என்று ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தெருவெல்லாம் கடன்காரனை விரட்டுவார். கடன்காரரும் தலை தெறிக்க ஓடுவார்.
சினிமாவில் முஸ்லிம் பாத்திரங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களாக மட்டுமே காட்டப்படுவார்கள்.
தலையில் வலைப்பின்னல் வெள்ளைத் தொப்பி, கழுத்தில் தாயத்து, கைவைத்த பனியன், இடுப்பில் அகலமான பச்சை நிற பெல்ட் அணிந்திருந்தால் அவர் கசாப்புக் கடைக்காரர். சாதாரண நேரத்திலும் அவர் கசாப்புக் கத்தி கையுமாகத்தான் நடமாடுவார்.
முஸ்லிம் கதாபாத்திரமென்றால் அடிக்கொரு தரம் “அச்சா.. அச்சா” என்று சொல்ல வேண்டும்., திடீரென்று சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் “அரே அல்லா” என்று நீட்டி முழங்க வேண்டும்.
அதே கெட்டப்பில் நீளமான தாடி வைத்துக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல ‘இஞ்ச் டேப்பு’ தொங்கினால் அவர் தையற்கடை பாய்.
அதே கெட்டப்பில் கழுத்தில் மணியெல்லாம் அணிந்துக்கோண்டு, பச்சை நிற சால்வை போட்டுக்கொண்டு, கையில் குமைஞ்சான் சட்டியோடு கடை கடையாக, புகை மண்டலம் சூழ யாராவது அலைந்தார் என்றால் அவரும் முஸ்லிம் குணச்சித்திர பாத்திரம்.
மணிரத்தினம் படமென்றால் அந்த முஸ்லிம் தீவிரவாதியாக இருப்பான், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் “ஒயர்லெஸ்ஸில்” பேசுவான்.
வயதான முதியவர் முஸ்லிம் பாத்திரம் என்றால் அவருக்கு நீளமான தாடி இருக்கும்; ஆனால் மீசை முழுவதுமாக மழித்திருப்பார். ஆனால் எல்லோரும் தமிழை கடித்துக் குதறிதான் பேசுவார்கள்.
“நிம்பள் எங்கே போறான்?” “நம்மள்கி வாணாம்” “நம்பள் நமாஸ் படிக்கப் போறான்” என்றுதான் பெரும்பாலான முஸ்லிம் கேரக்டர்கள் பேசுவார்கள். ஒருவர் கூட தூயதமிழ் பேச மாட்டார்கள்.
தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.
“உங்கள் முஸ்லிம் நண்பர் “நம்மள்கி.. நிம்மள்கி” என்றுதான் தமிழ் பேசுவாரா?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “யோவ்! நீ லூசா?” என்று திருப்பிக் கேட்பார்கள்.
நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயில் பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்திற்கு அவர் ஒரு அத்தாரிட்டி. “பாவமன்னிப்பு” படத்தில் சிவாஜி கணேசனுக்கு இளைஞர் வேடம். சிவாஜியைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் அவர் ‘அல்வா’ போன்றவர். பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்.
இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கையில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா? இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது?
சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஐயா ஞாபகம்தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கின்றேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?
பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவதுபோல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.
நெகிழ்ந்துப்போன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறினார்.

rathnavelnatarajan
September 10, 2020 at 5:50 pm
சிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும் – தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். – அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி நாகூர் மண்வாசனை