தமிழ் நாட்டு பிரபலங்களுக்கு குறிப்பாக அவர்கள் இசைத்துறை, திரைப்படத்துறை, இலக்கியம், அரசியல் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து கெளரவித்து உரிய மரியாதைச் செலுத்துவதில் இலங்கை தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என நான் சொல்வேன்.
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து “தாரகை” என்ற இதழ் 01.04.1953 அன்று வெளியிட்ட ஒரு செய்தியை படிக்கையில் நாகூர் ஹனிபாவுக்கு இலங்கை நாட்டில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்பதை நாம் நன்றாக அறிந்துக் கொள்ள முடியும் .
“இசைமுரசு ஜனாப் ஹனீபா ஏப்ரலில் இலங்கை வருகிறார்” என்ற தலைப்புச் செய்தியுடன் அவரைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.. இச்செய்திகள் யாவும் 100 நூல்களுக்கு மேல் எழூதியிருக்கும் வரலார்றாசிரிய செ.திவான் ஆய்ந்து முறையே ஆதாரத்துடன் வெளியிட்ட செய்திகளாகும் . இலங்கை “தாரகை” இதழில் வெளியான அச்செய்தியை ஒரு வரி கூட மாறாமல் அப்படியே தந்திருக்கின்றேன்.
//தமிழக இளம் பாடகர்களிலே தோழர் ஹனிபாவும் ஒருவர். இருபத்தைந்து ஆண்டுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் “இசைமுரசு” என்ற பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல, எழுச்சி எண்ணங் கொண்ட சீர்த்திருத்தவாதியுங் கூட. பாடகர்களில் பலர் ஏதோ ஒரு காரியத்திற்காக அதுவும் பழமைப் பிடிப்புகளிலே பதுங்கி நின்று பணியாற்றும் பரம பக்தர்களாக காட்சியளிப்பார்களே தவிர , நாட்டுக்கு, மொழிக்கு, சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் பயன்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பழமை விரும்பிகளுக்கு மத்தியிலே ஏற்படுவது எதிர்ப்பு..
தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் தமிழ்ப் பாட்டுக்களைத்தான் பாட வேண்டும் என்று 1928-ம் ஆண்டு, காலஞ்சென்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் தமிழிசைக் கழகம் தமிழ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்குப் பல கட்சியினர்களின் ஆதரவும் கிடைத்தது மட்டுமல்ல மூக்கால் பாடும் முசிரிகளும் ஆங்காரக் குரல் அரியக் குடிகளும் “அழகு தமிழிலே பாடினால்தான் மரியாதை” என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அந்த இயக்கம் மதிப்புப் பெற்றது. இன்னும் ஒரு சிலர், தமிழில் ஒழுங்கான இசை நுணுக்கங்கள் இல்லை என்று கூறி தெலுங்கிலும் ஹிந்தியிலும் பாடிக்கொண்டலைவதும் ஆச்சரியம்தான்.! பிற மொழிகள் பேரிலுள்ள துவேஷத்தால் தமிழ்ப்பாடல்தான் பாட வேண்டுமென நான் கூறவில்லை. அந்த மொழிப் பாடல்கள் நம்மை திட்டாமலாவது இருக்கின்றதா என்பதுகூட தெரியாமல் தலையை அசைத்து ரசிப்பதில் அர்த்தமில்லை என்பதாகக் கூறுகிறேன்.
“செந்தமிழில் இசைப்பாடல்கள் இல்லையெனச்
செப்புகின்றீர் மானமின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில்
வீழ்ந்துயிரை மாய்த்தலன்றி
எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே
உடையில்லை என்பதுண்டா?”
என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார் நமது அன்புக் கவிஞர் பாரதிதாசன்,
“கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ் நூற்கள்
ஆராய்ந்து கிழித்திட்டீரோ?
புளியென்றால் புலியென்றே உச்சரிக்கும்
புலியீரே புளுக வேண்டாம்
துளியறிவும் தமிழ் மொழியில் உள்ளதுவோ
பாடகர்க்கு சொல்வீர் மெய்யாய் !”
என்று கனல் கொப்பளிக்க தமிழ் பாடல்களில் இசையில்லை என என்ணுகின்ற பாடகர்களை பார்த்துக் கடாவுகின்றார் புரட்சி வேந்தன்.
கவிஞரின் கருத்துப்படி தமிழ் பாக்கள்தான் பாட வேண்டும் என்ற எண்ணத்தினரைக் கொண்ட முற்போக்காளர் படைவரிசையில் நிற்பவர் தோழர் இசைமுரசு ஹனீபா அவர்கள். இனிமையான குரலமைப்பு, அவர் கையாளும் முறையே தனிச்சுவை தரும்.! சமீப காலங்களில்தான் தமிழ்ப் பட உலகு அவரை நாடியிருக்கின்றது. சில வாரங்களில் வரப்போகும் அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசலிலும், திருமதி ராஜகுமாரியின் வாழப் பிரந்தவளிலும் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கின்றார். சென்ற மாதம்தான் இசைத்தட்டில் அவர் குரலை வெளியிட ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். வருங்காலம் ஒரு சிறந்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்குமென எதிர்ப்பார்க்கலாம். இலங்கைக்கு அவர் சமீபத்தில் வருகிறாரென்ற செய்தி இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் தோழர் ஹனீபா இலங்கையில் ஒரு சில கச்சேரிகளில் கலந்துக் கொள்வாரெனத் தெரிகிறது.//
தமிழகத்து பாடகர் ஒருவர் தனது இனிமையான குரலால் இலங்கை வாழ் தமிழர்கள் மனதில் எத்தகையவொரு தாக்கத்தை 1950களில் உண்டு பன்ணினார் என்பது இந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து நான் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.
கச்சேரி என்றால் தெலுங்கு கீர்த்தனைகள்தான் என்றிருந்த நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்ட பாடகர்களில் நாகூர் ஹனிபாவும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
அதே சமயம் நாகூர் ஹனிபாவைப் பற்றி தவறான புரிதல்கள் கொண்ட எழுத்தாளர்களும் இலங்கையில் இருக்கத்தான் செய்தார்கள். இலங்கை “தினகரன்” பத்திரிக்கையில் மான மக்கீன் என்ற மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபா மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதலுக்கு ஜூன் 4,2010 அன்று நான் ஒரு மறுப்புக் கடிதம் எழுத நேர்ந்தது.
“நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று திரு. எஸ்.ஐ.நாகூர் கனி என்பவர் இலங்கை தினகரன் பத்திரிக்கையில் ஒரு பரிந்துரை செய்திருந்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபாவுக்கு பாடல் எழுதித் தந்தவர்களை உயர்த்தியும், பாடகரை தரக்குறைவாக விமர்சித்தும் கட்டுரை (27.09.2009) ஒன்றை வரைந்திருந்தார். அவருடைய கடுமையான விமர்சனம் இலங்கை எழுத்தாளர்கள் பலரை அப்போது வெகுண்டெழ வைத்தது.
எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு..மானா மக்கீன் “தினகரன்” பத்திரிக்கையில் தொடுத்த குற்றச்சாடுகள் இதோ:
//“நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை அ.மா.சாமியின் ஆய்வில் வெளிவந்த பிறகு புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை”//
//“அவருக்கு பாடல்கள் எழுதி கொடுத்தவர்களை அவர் பிரபலப் படுத்தவில்லை”//
/“நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களை ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு”//
//“நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை”//
//“ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்”//
//”குரல்தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்”//
//“தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் (நாகூர் ஆபிதீன், நாகூர் சலீம்) இருவருமே!”//
//“ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள்தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும்”//
//“இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.”//
//“பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்”//
//“ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.”//
//“புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.”//
ஆக இறுதியில் அவர் வைத்த குற்றச்சாட்டு வாயிலாக எழுத்தாளருடைய நோக்கத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. புலவர் ஆபிதீனை பற்றிய அவரது நூலை விளம்பரப் படுத்த வேண்டி நாகூர் ஹனிபாவை கடுமையாக விமர்சித்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவருடைய கட்டுரையில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன. “முதுமையில் சலீம் அவர்கள் வறுமையில் உழன்றுக் கொண்டிருக்கிறார்” என்று அப்போது இலங்கையில் வசித்த அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இறைவன் புண்ணியத்தில் சலீம் மாமாவும் அவருடைய வாரிசுகளும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சலீம் மாமா வறுமையில் உழலவில்லை.
மக்கள் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள்” என்றும். நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “சிவாஜியின் தத்துவப் பாடல்கள்” என்றும் எழுதும்போது, இசைமுரசுக்காக எழுதப்பட்ட பாடல்களை “ஹனீபாவின் பாடல்கள்” என்று அழைப்பதில் என்ன தவறு?
நாகூர் ஹனிபா அவர்கள் ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு சிற்றுரை நிகழ்த்துவார். யாரெழுதிய பாடல், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்ட்து, எப்போது இசைத்தட்டு வெளியாகிறது போன்ற விவரங்கள் அதில் அடங்கியிருக்கும் . மற்ற பாடகர்களிடம் இல்லாத பழக்கம் அது. இறுதிநாள் வரை புலவர் ஆபிதீனை தனது “குருநாதர்” என்றே அழைத்து வந்தார். எனவே பாடல் எழுதிக் கொடுத்தவரை அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவில்லை என்பதெல்லாம் பொருந்தாத வாதம்.. கோரஸ் பாடியவர்களைக்கூட அவர் மேடையில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. .
அவர் பாடிய அனைத்து இசைத்தட்டுகளிலும் பாடலை எழுதியது யார் என்ற விவரங்கள் இருக்கும்..
ரத்த வாந்தி எடுத்து இனிமேல் பாடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் கூட வாழ்நாளெல்லாம் மூச்சுப் பிடித்துப் பாடி தன் வெண்கலக்குரலால் தமிழர் இதயங்களில் நிறைந்து நின்ற அவரை தரக்குறைவாக எழுதியவர்களின் செயல் ஒரு கரும்புள்ளி என்றுதான் நான் சொல்வேன்
