இஸ்லாமிய இன்னிசை உலகம் என்றென்றும் நெஞ்சில் நினைவு வைத்திருக்க வேண்டிய கடந்த கால பாடகர்களில் காரை ஏ.எம்.தாவூத் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இஸ்லாமியப் பாட்டுலகில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
அந்த முன்னோடிக்கே முன்னோடியாக திகழ்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். காரை தாவூத், இசைத்துறையில் இமயத்தைத் தொட்ட இசைமுரசுக்கே ஓர் அழகிய முன்மாதிரி.
காலச் சுழற்சியில் காற்றோடு காற்றாக கரைந்துப் போன பெயர்களில் இந்த இன்னிசை வேந்தரின் பெயரும் ஒன்று.
காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்கள் 1905ஆம் ஆண்டு பிறந்தார், 1936ஆம் ஆண்டு முதலே இவர் தமிழ்க் கூறும் நல்லுலகில் நாடறிந்த இஸ்லாமியப் பாடகராய் வலம் வந்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் இவரை அறிந்து வைத்தவர்களைக் காட்டிலும் இலங்கையில் இவரைப் போற்றிப் புகழ்வோர் அநேகம் பேர்கள் உண்டு.
HMV (His Master’s Voice) நிறுவனத்து இசைத்தட்டில் இஸ்லாமியப் பாடல்கள் முதன் முதலாகப் பாடியவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அல்லது நாகூர் இ.எம்.ஹனிபா என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
முதன் முதலில் எச்.எம்.வி. நிறுவனத்தில் இஸ்லாமியப் பாடல் பாடியவர் காரைக்கால் தாவூத் அவர்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய தகவல். நாகூர் மண்ணுக்கும் இசைத்துறைக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் நன்கறிவர். நாகூர்வாசியான இவர் அறியப்பட்டது காரை ஏ.எம்.தாவூத் என்ற பெயரில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல் காரை தாவூத் அவர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் இந்த வாய்மொழி வாக்குமூலமே போதுமானது.
பத்திரிக்கையாளர் அ.மா.சாமி அவர்கள் “உங்களுக்கு எப்படி இசையில் விருப்பம் ஏற்பட்டது?” என்று கேட்ட கேள்விக்கு இசைமுரசு தந்த பதில் இதோ:
“எங்கள் தந்தையார் கோலாலம்பூரில் ரெயில்வே ‘போர்மேன்’ ஆக வேலை பார்த்தார். 28 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பினார். இடையிடையே வந்து போனார். ஒருமுறை வரும்போது ஒரு கிராமபோன் பெட்டி கொண்டு வந்தார். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, சைகால், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் போன்றவர்களின் இசைத்தட்டுகளை அந்த கிராமபோன் பெட்டியில் ஓடவிட்டு, நான் கேட்பேன். இது அவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆசையை என்னிடம் ஏற்படுத்தியது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால், அப்படியே திரும்பிப் பாடும் ஆற்றல் இயற்கையாகவே எனக்கு இருக்கிறது, அப்படிப் பாடிப் பாடி பழகிக் கொண்டேன்.” என்று தன் மனதில் தோன்றியதை அப்படியே புட்டுப் புட்டு வைத்தார்.
நாகூர் ஹனிபாவைக் காட்டிலும் காரை தாவூத் அவர்கள் வயதில் 20 வருடம் மூத்தவர். நாகூர் ஹனிபா பாடத் தொடங்குவதற்கு முன்பே புகழின் உச்சத்தில் இருந்தவர் காரை தாவூத் அவர்கள்.
உசைன் பாகவதர், வித்வான் எஸ்.எம்.ஏ,காதர், குமரி அபுபக்கர், இசைமணி எம்.எம்,யூசுப், எச்.ஏ.ஏ.காதர், காரைக்கால் தாவூத் போன்று முறையாக சங்கீதம் கற்றவன் நானல்ல என்று நாகூர் ஹனிபாவே பலமுறை சொல்லியும் இருக்கிறார். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதைப் போலவே இசையை கேட்டுக் கேட்டு கேள்வி ஞானத்திலேயே தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர். இப்பேறினை இறையருள் என்றே சொல்ல வேண்டும்.
காரை தாவூத் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தது புலவர் ஆபிதீன், கவிஞர் சலீம் முதலானோர். முன்பே சொன்னது போல இவருடைய திறமைக்கு முறையான அங்கீகாரம் தந்து போற்றிப் புகழ்ந்தோர் இலங்கை வாழ் தமிழர்களே. இவரை தாவூத் மாஸ்டர் என்றே மரியாதைப் பொங்க அழைத்தனர்.
ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் திருச்சி வானொலியிலும், இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்திலும் அதிகப் படியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து நாட்டில் பி.பி.சி. ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலி அச்சமயத்தில் தமிழகமெங்கும் எல்லோராலும் விரும்பிக் கேட்கப்பட்ட வானொலி சேவையாகும்.
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் மேலான இசைத்தட்டுகளை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த ஸ்தாபனத்தின் சேகரிப்பில் காரை ஏ.எம்.தாவூத் அவர்களின் ஏராளமான இசைத்தட்டுகள் இன்னும் அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கின்றது,
அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு 2014 பிப்ரவரி மாதம் 14,15,16 நாட்களில் கும்பகோணம் நகரில் நடந்தேறியது. அதில் “முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அப்போதைய தலைவராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தொடங்கி வைத்தார். அக்கூட்டத்தில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களின் இசை பங்களிப்பை நினைவு கூர்ந்து “வாழ்நாள் சேவை விருது” (Posthumous) வழங்கப்பட்டது. உயிரோடு இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம் மறைந்த பின்பாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியாக இருந்தது.
இலங்கையிலுள்ள மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தமிழறிஞருமான ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி எழுதிய “மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலை நான் அண்மையில் படிக்க நேர்ந்தது. அதில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களைப் பற்றிய குறிப்புகள் கண்டு நான் நெகிழ்ந்துப் போனேன்.
இந்நூலில் 1950களில் இசை மற்றும் இலக்கியத் துறையில் புகழ்ப் பெற்றிருந்த தமிழக ஆளுமைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களைப் பற்றியும் அவர் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.
1950களில் மீலாத் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், பதம் பாடுதல், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் மாத்தளையில் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்த பிரபல பாடகர்களை வரவேற்று உரிய மரியாதை செலுத்துபவர்களாக மாத்தளைவாசிகள் இருந்தார்கள். தமிழகத்து பிரபலங்கள் இலங்கை வரும்போதெல்லாம் அங்குள்ள பத்திரிக்கைகளும் அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளையும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் வரைந்தன.
கவ்வாலி பாடல்களும் மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே இசை ரசிகர்களை உருவாக்கியிருந்தன. இலங்கைக்கு வரும் இந்திய பாடகர்கள் மாத்தளைக்கு வருவது வழக்கமாக இருந்தது. இங்கு பாட்டுக் கச்சேரிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டன. இப்படி மாத்தளையில் பாடியவர்களில் மலாங் பாய், கலீபுல்லாஹ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
காரைக்கால் தாவூத் இலங்கைக்கு 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போய் வந்த வண்ணமிருந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு உருவாகியிருந்தனர்.
“இத்தகைய பிரபல இஸ்லாமியப் பாடகர்களின் வருகையினால் மாத்தளையில் உருவான சிறந்த பாடகர், தன் வாழ்க்கையையும் தன் சொத்தின் பெரும் பகுதியையும் இஸ்லாமிய இசைக்காகவே அர்ப்பணித்தவர் மர்ஹூம் சேகு தாவுத் மாஸ்டர் ஆவார்” என்று தன் நூலில் ஏ.ஏ.எம். புவாஜி குறிப்பிடுகிறார் .
தாஸிம், கே.எம். எஸ். தெளவ்தான், கே.எம்.எஸ். சல்சபீல் போன்றோர் தமிழகத்து பாடகர் காரை ஏ.எம்.தாவூத் மாஸ்டர் அவர்களின் இசையால் உந்தப்பட்டு இசைத் துறைக்குள் புகுந்தவர்கள் என்று இலங்கை எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“புதையல் மூட்டையின் மேல் அமர்ந்துக்கொண்டே நாம் புதையலைத் தேடுகிறோம்” என்று கவிக்கோ சொல்வதைப் போல நாகூர்க்காரரின் பெருமை இலங்கையைச் சேர்ந்தவர்கள் சொல்லித்தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தாவூத் நானா என்று உள்ளுர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் மிகவும் நேசிக்கப்பட்டார். முதல் மனைவி மறைந்ததும் இரண்டாவது திருமணம் புரிந்துக் கொண்டார், இவருக்கு மூன்று ஆண், ஒரு பெண் வாரிசுகள். மூத்த மகன் “ஷாஹா” என்றழைக்கப்படும் D, ஷாஹுல் ஹமீது என் பால்ய காலத்து நண்பர். பாடகருடைய சொந்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அவரிடமிருந்து பெறப்பட்டவை.
காரை தாவூத் போன்று இன்னும் எத்தனையோ இசைத்துறை ஆளுமைகள் கண்டுக்கப்படாமலேயே மறைந்தும் போய் விட்டனர். சிலர் இன்றும் மறக்கப்பட்டு வாழ்கின்றனர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் வாலை மணி ஆசானிடம் முறைப்படி சங்கீதம் பயின்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் சீறா விளக்கவுரை பாடல்களை தனது கம்பீரக் குரலால் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவர் இஸ்லாமியப் பாடகர் குமரி அபூபக்கர் அவர்கள்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு இவருக்கு அழைப்பே கொடுக்கப்படவில்லை என்பது விநோதம்.
#அப்துல்கையூம்
