
கவ்வாலி உலகை கலக்கிய பாடகர்களின் பட்டியலில் அஜீஸ் நஸான் உடைய பெயர் கட்டாயம் முதன்மையாக பெற்றிருக்கும்.
ஒலிவாங்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை உச்ச ஸ்தாயி குரல் இவர் குரல் . ஆலாபனையில் இவர் காட்டும் ஏற்ற இறக்கம் எல்லோரையும் கிறங்க வைக்கும். ஒரு காலத்தில் இசைப் பிரியர்களை தன் கட்டுப்பாட்டில் பைத்தியமாக்கி வைத்திருந்த இந்த கவ்வாலி சக்கரவர்த்தி ஒரு மலையாளி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆம். இவருடைய தாய்மொழி மலையாளம்.1938ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பம்பாயில் பிறந்த அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார்தான் பிற்காலத்தில் அஜீஸ் நஸான் என்றாகிப் போனார்.இவரது உருது மொழி உச்சரிப்பின் லாவகத்தையும் சூட்சமத்தையும் கேட்பவர்கள் இவரை மலையாளி என்று கருதவே மாட்டார்கள். உதாரணத்திற்கு ஜேசுதாஸ் எத்தனையோ பாடல்கள் இந்தி திரைப்படங்களில் பாடியிருந்தாலும், அவருடைய உச்சரிப்பை வைத்தே ‘இவர் மலையாளி’ என்று யாரும் எளிதில் சொல்லி விடுவார்கள்.
உதித் நாராயண் என்னதான் குழைந்து குழைந்து பாடினாலும் அவர் தமிழர் இல்லை என்று வரது உச்சரிப்பு காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அஜீஸ் நஸான் அப்படியல்ல. குஜராத்தி மீடியம் பள்ளியில் படித்த இவருக்கு உருது மொழியின் மேல் அதீத காதல் ஏற்பட்டு, ஷாயிர் சாதிக் நிஸாமி என்பவரிடம் முறையாக மொழி கற்றுக்கொண்டு நாளடைவில் உருது கவிதை எழுதும் அளவுக்கு அவர் தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.இஸ்லாமிய பண்பாட்டில் ஊறித்திளைத்த கட்டுக்கோப்பான மலபார் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவரை, இசையே கூடாது, அதன் பக்கம் அண்டவே கூடாது என்று வலியுறுத்தியவர்
இவரது தந்தை. பம்பாய் மாநகரத்தில் பலசரக்கு கடை வைத்திருந்தார். சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொருமுறை இவர் திருட்டுத்தனமாக இசைக் கச்சேரி பார்ப்பதற்கு செல்லும்போதும், சிலசமயம் வசமாக மாட்டிக் கொண்டு அதற்கான தண்டனையும் அவர் தந்தையிடமிருந்து அனுபவிப்பார். பிண்டி பஜாரில்தான் இவர்களது வீடு இருந்தது. ஹிந்துஸ்தானி சங்கீத சாம்ராஜ்யத்து சக்கரவர்த்திகள் அத்தனைப்பேரும் அந்தப் பகுதியில்தான் குடியிருந்தார்கள். படே அலி குலாம் கான், அமீர் கான் சாகிப், அல்லா ரகா, இஸ்மாயில் ஆஜாத் கவ்வால் போன்ற அத்தனை பிரபலங்களும் அங்குதான் வசித்தார்கள்.
//ஹமே தோ லூட் லியா மில்கே ஹுஸ்ன் வாலோன் னேகாலே காலே பாலோன் னே, கோரெ கோரெ காலோன் னே//1958-ல் வெளிவந்த ‘அல்-ஹிலால்’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடி வானளாவிய புகழை அடைந்தவர் இந்த இஸ்மாயில் ஆஜாத் கவ்வால். இளைஞராக இருந்த அஜீஸ் நஸான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவரோடு சென்று அமர்ந்து விடுவார். இவர் கச்சேரிக்கு போகும்போது இவரும் கூடவே சென்று, சீருடை அணிந்து கவ்வாலி பாடல்களுக்கு தாளத்திற்கேற்ப கைத்தட்டல் புரிவது, கோரஸ் கொடுப்பது இவரது ஆர்வப்பணியாக இருந்தது. ஊஹூம்.. எத்தனையோ முறை இவருடைய வீட்டார் கண்டித்தும் இவர் கேட்பதாக இல்லை. இசைப்பித்து தலைக்கேறி இருந்தது.
ஒன்பது வயதில் இவர் தன் தந்தையாரை இழந்தார். அதன் பிறகு ஒரு இசைக்குழுவில் சேர்ந்துவிட்டார். 1958-ல் அஜீஸ் நஸான் கிராமபோன் கம்பேனியுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். 1962-ஆம் ஆண்டு ‘ஜியா நஹீன் மானா’ என்ற இவரது இசைத்தட்டு ஓரளவு பிரபலமானது. பின்னர் 1968-ல் ‘நிகா ஹே கரம்’ வெளியாகி கவ்வாலி பாடலுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திப்பட உலகில் கிஷோர் குமார் எப்போழுதோ கால் பதித்திருந்தார். ஆனால் ‘ஆராதனா’ படம் வந்தபின்தான் அவர் உலகப் பிரசித்தி பெற்றார்.
எஸ்.ஜானகி “சிங்கார வேலனே” பாடிய போது அவ்வளவாக பிரபலமாகாதவர், ‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு உச்சத்தை தொட்டார். ‘பொம்மை’ படத்தில் “நீயும் பொம்மை, நானும் பொம்மை” பாடிய ஜேசுதாஸ் எத்தனையோ காலத்திற்குப் பிறகுதான் தமிழில் பேரும் புகழும் அடைந்தார்.
அதுபோல 1958-ல் கொலம்பியா மியுசிக் கம்பேனியுடன் ஒப்பந்தம் போட்ட அஜீஸ் நஸான் 1970-ல் “ஜூம் பராபர் ஜூம் ஷராபி” என்ற பாடலை அந்த நிறுவனம் வெளியிட்ட போது ஒரே நாளில் உலகறிந்த பாடகர் ஆனார். 1973-ல் “மேரே கரீப் மேரே நவாஸ்” படம் வெளிவந்தபோது இந்த ஒரு பாடலுக்காகவே படம் சிறப்பாக ஓடியது. படத்தின் இடையில் 20 நிமிடம் அஜீஸ் நஸான் பாடுவதுபோல் ஒரு காட்சி இடம் பெற்றிருந்ததுதான் அதற்கு காரணம்.
1974-ல் மீண்டும் ஐ.எஸ்.ஜோஹர் தன்னுடைய ‘5 ரைஃபிள்’ படத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்தார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அச்சமயத்தில் இலங்கை வானொலியிலும், பினாகா கீத் மாலாவிலும், நேயர் விருப்ப பாடல்களில் தொடர்ந்து பல வாரங்கள் இதுவே முதல் வரிசையில் இருந்தது. இந்தப் பாடலுக்குப் பிறகு ரஃபூ சக்கர், ஃபகீரா, லைலா மஜ்னு, நெஹ்லெ பெ டெஹ்லா, ட்ரிஷ்னா போன்ற படங்களில் அவருக்கு பின்னணி பாட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது.
மகாராஷ்டிர மாநில சிறைச்சாலை ஒன்றில் சிறைவாசிகளின் பொழுதுபோக்குக்காக சிறைவாசிகளே ஒரு வானொலி ஒலிபரப்பை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டை கவ்ஸ்துப் குர்லேக்கர் என்ற ஜெயில் சூப்பரிண்டெண்ட் முன்னெடுத்தார். அது நல்ல பிரதிபலனையும் தந்தது. அவர்கள் செய்த அந்த அன்றாட ஒலிபரப்பில் திரும்ப திரும்ப விரும்பிக் கேட்கப்பட்ட பாடல் அஜீஸ் நஸானின் “சடுத்தா சூரஜ் தீரெ தீரெ டல்த்தா ஹே டல் ஜாயேகா” என்ற கவ்வாலி பாடல்தான்.
உருது நூல்கள் ஏராளமானவற்றை அவர் சேகரித்து தன் வீட்டில் ஒரு பெரிய நூலகத்தையே பாதுகாத்து வைத்திருந்தார். ஹார்மோனியம், தபேலா, காங்கோ இன்னும் மற்ற மற்ற தாள வாத்தியங்கள் அனைத்திலும் அவர் கைதேர்ந்திருந்தார்.
கைஸர் ரத்னாகிர்வி, ஹஸ்ரத் ரூமானி, நஸன் ஷோலாபுரி போன்ற உருது கவிஞர்களின் பாடல்களை இவர் பாடியிருந்தபோதிலும் இவரே ஒரு திறமையான ரசனைமிகு கவிஞராகத்தான் திகழ்ந்தார். பஷீர் பத்ர், மக்மூர் சயீதி, மீரஜ் ஃபைஸாபாதி, கிருஷ்ண் பீகாரி நூர் லக்னவி, வலி ஆசி, வஸீம் பஹ்ரெல்வி, முனவ்வர் ரானா, முஸஃபர் வர்ஸி போன்ற புகழ்ப்பெற்ற உருது கவிவாணர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கவ்வாலி பாடல்களில் சில புரட்சிகளை செய்ததால் இவரை ‘புரட்சி கவ்வாலி பாடகர்’ என்றே அழைத்தனர், மேலைநாட்டு தாள வாத்தியங்களை கவ்வாலி பாடல்களில் பகுத்தி புதுமை கண்டவர்.
இந்தி படவுலகில் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் வாத்திய இசைக்கருவிகளை அறிமுகப் படுத்துவதற்கு முன்னரே கவ்வாலி பாடல்களில் நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்திய பெருமை அஜீஸ் நஸானுக்கு உண்டு. அத்தனை கவ்வாலி பாடகர்களையும் ஒருங்கிணைத்து “பம்பாய் கவ்வால் சங்கம்” என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். நலிவுற்ற பாடகர்களுக்கு ஏராளமான பொருளாதார உதவிகள் தந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
1978ஆம் வருடம் அவரது மனைவி இறந்த பிறகு, ஒரு இந்து பெண்மணியை மறுமணம் புரிந்துக் கொண்டார். மும்தாஜ் நஸான் என்று அவர் அழைக்கப்பட்டார். அஜீஸ் நஸானுக்கு போதைப்பொருளோ, குடிப்பழக்கமோ அறவே கிடையாது. ஆனால் செம சாப்பாட்டுப் பிரியர். “சாப்பாட்டு விஷயத்தில் அவருக்கு பயங்கரமான ஈடுபாடு இருந்தது. பம்பாயில் எந்தெந்த ஓட்டலில் என்னென்ன உணவுப் பொருட்கள் சுவையாக இருக்கும் எல்லாமே அவருக்கு அத்துப்படி. பிறரை வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அவரது வழக்கம், எந்த நேரத்திலும் எங்க வீட்டு சாப்பாட்டு மேஜையில் யாராவது விருந்தினர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்” என்று கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார் அவர் மனைவி மும்தாஜ் நஸான்.
32 டிராக் ரிகார்டிங், டபுள் டிராக், இவர் பாடும் பாடலில் இவரே கோரஸ் படுவது போன்ற டெக்னிக் – இதுபோன்ற அதிரடி நுணுக்கங்களை ஒலிப்பதிவில் இணைத்தவர் இவர். எந்தவொரு உச்சத்தில் பாடினாலும் இவரது குரல் உடையாது; பிசிறு தட்டாது. இவரது குரல்வளத்தை ‘ஸ்டீரியோ வாய்ஸ்’ என்று சிலாகித்து பேசுவார்கள்.
1975 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 520 ரூபாய் விற்ற காலத்தில் கொல்கத்தா கலா மந்திர் அரங்கத்தில் நடந்த இசைக் கச்சேரிக்கு இவர் பெற்ற தொகை அந்த காலத்தில் 1.80 லட்சம் ரூபாய். ரான்ச்சிக்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்கு தொடர்வண்டியில் போய்க் கொண்டிருக்கிறார். போகும் வழியில் பொதுமக்கள் டிரெய்னை நிறுத்துகிறார்கள், ஏனென்றால் இவரிடம் கைகுலுக்க வேண்டி. வண்டி நின்று இவருடன் கை குலுக்கிய பின்புதான் தொடர்வண்டியை நகர விட்டார்கள் அந்த ஊர்க்காரர்கள்.
அந்த அளவுக்கு மக்கள் இவரை நேசித்தார்கள்.1992ஆம் ஆண்டு அக்டோபர் 8 நாளன்று அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார் உயிர் நீத்தபோது ‘இசையுலகத்திற்கு பேரிழப்பு’ என அனைத்து ஊடகங்களும் கண்ணீர் வடித்தன