
ரத்தமின்றி, கத்தியின்றி நடந்த புரட்சிகளை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சத்தமின்றி, சந்தடியின்றி சாதனைகள் புரிந்துவரும் ஒரு சாதனையாளனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
ஓரிரண்டு மேடைகளில் தோன்றி விட்டாலே தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் பாடகர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில், 52 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி, அசத்தலாக அமைதி புரட்சி புரிந்து வரும் ஓர் அபூர்வக் கலைஞனைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.
“Empty Vessel makes the Most Noise” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. குறை குடம்தான் கூத்தாடும். நிறை குடம் தளும்பாது என்பதென்னவோ முற்றிலும் உண்மையான கூற்று.
இந்த பாராட்டுகள் அனைத்துக்கும் சொந்தக்காரர் நாகூரில் பிறந்த ஓர் இசைக் கலைஞர். அவர் பெயர் கலைமாமணி அல்ஹாஜ் இ. குல் முஹம்மது.
இப்ராஹிம்ஷா – சபியா பீவி இணையரின் புதல்வரான இவர், பிறந்த தேதி பிப்ரவரி 14, 1946. பாடகராக முதன் முதலாக மேடையில் அறிமுகமான ஆண்டு 1968. அப்போது அவருக்கு வயது வெறும் 22.
1500 இசை நிகழ்ச்சிகள், 4000 பாடல்கள் – இவர் நிகழ்த்தியிருப்பது அசாதாரணமான ஒரு சாதனை. இன்றும் இந்த 74 வயது இளைஞர் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பாடிக்கொண்டு வலம் வருகிறார். போட்டியும் பொறாமையும் நிறைந்த இசையுலகில், இந்நிலையை எட்டிப் பிடிக்க வாழ்க்கையில் அவர் எந்தளவுக்கு எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது.
இவருடைய விடயத்தில் எனக்கு வருத்தமும் உண்டு. மகிழ்ச்சியும் உண்டு.
வருத்தம் என்னவெனில், தமிழகத்து நாகூர்க்காரரான இவரை புதுவை மாநிலம் தத்தெடுத்துக் கொண்டு தனதாக்கிக் கொண்டதே என்ற சோகம்.
மகிழ்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? தமிழ்நாடு இவருக்கு கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை புதுவை மாநிலமாவது இவருக்கு வழங்கி கெளரவித்ததே என்ற மனநிறைவு.
திறம் படைத்த கலைஞனை புடம் போட்ட தங்கமாக உருவாக்குவதும், அவனை உற்சாகப்படுத்தி உயர்த்துவதும் இதுபோன்ற அங்கீகாரங்கள்தான் என்பதை நாம் மறுக்க முடியாது. குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய இவரைப் போன்ற எத்தனையோ கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காக ஒளி குன்றிப்போனது அவர்களை முறையாக ஊக்கப்படுத்த தவறியதால்தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இவருக்கு பெருமளவு ஆதரவு தந்து இவருக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த பெருமை புதுச்சேரி முன்னாள் அமைச்சர் திரு A.M.H.நாஜிம் அவர்களைச் சாரும். “ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்” என்ற கவிஞர் வாலியின் வரிகள்தான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.
இஸ்லாமியப் பாடல்கள்
நாகூர் ஈந்த இஸ்லாமியப் பாடகர்களின் பட்டியலில் இசைமுரசு நாகூர் ஹனிபாவின் வரிசையில் இவரும் போற்றுதலுக்குரிய ஓர் இசைவாணர்.
தமிழகத்தில் எத்தனையோ இஸ்லாமியப் பாடகர்கள் இன்னிசை கீதம் பாடி பவனி வந்திருக்கிறார்கள். வந்த வேகத்தில் பலர் காணாமலும் போய்விட்டார்கள். காரணம் அவர்கள் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொள்ளாமல், பிறரின் பாணியை அப்பட்டமாக பின்பற்றியதால்தான் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே இசைமுரசு இ.எம். ஹனிபாவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதியை பாடகர்கள் தங்களுக்குத்தானே வகுத்துக் கொண்டார்கள்.
பாடலைத் தொடங்குவதற்கு நாகூர் ஹனிபாவை போலவே தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றுவது, ஃபர் ஜின்னா தொப்பியை சாய்வாக அணிந்துக் கொள்வது, அவரைப்போலவே பாடலுக்கிடையில் மூக்கை உறிஞ்சிக் கொள்வது, வலது கைவிரல்களை மடக்கிக் கொண்டு அடிகொருதரம் கையை மேலே உயர்த்துவது, உச்ச ஸ்தாயியில் பாடும்போது வலது காதோரம் வலதுகையால் மூடிக்கொள்வது, பாதியில் விட்ட அதே வரியை (வேண்டுமென்றே) மீண்டும் தொடர்வது, பாடலின் BGM வாசிக்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னாலிருக்கும் இசைக்கலைஞரிடம் ஏதாவது கிசுகிசுப்பது, (சில சமயம் வசை பாடுவது) இவையாவும் தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் பாடும் பாடகர் பெருமக்கள் அவசியம் செய்தே ஆக வேண்டும் என்பது ‘ஷரத்தாகி’ விட்டது.
ஒருவரை அப்படியே காப்பி அடிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. இது “ஈயடிச்சான் காப்பி” வகையில் சேர்ந்தது. ‘கானமயிலாட கண்டிருந்த வான்கோழி’ என்ற மூதுரைதான் என் மூளையில் ரீங்காரமிட்டது.
இதாவது பரவாயில்லை சிலர் நாகூர் ஹனிபாவைப்போலவே பனங்கற்கண்டையும், விக்ஸ் மிட்டாயையும் வாயில் போட்டு மென்றுக்கொண்டு பாடுபவர்களும் உண்டு. என்னத்த சொல்ல? ‘ஏனிந்த மேனரிசம்?’ என்று கேட்டால் அவர்கள் இஸ்லாமியப் பாடல் பாடுகிறார்களாம்.
நிலையான ஓர் இடம்
மேடை அனுபவத்தில் இவர் அரை சதம் அடித்த பிறகும் அசையாமல் இசையுலகில் பசை பிடித்தாற்போல் திசைமாறாது நிலைக்கின்றார் என்றால், இந்த பாணர், யார் பாணியையும் பார்த்து காப்பி அடிக்காததினால்தான் என்று குட்டிக்கரணம் அடித்து கூறுவேன்.
தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி உருது கவ்வாலி மற்றும் இந்தி, தமிழ் திரையிசை பாடல்களை அனாயசமாக பாடுவது இவரது தனிச்சிறப்பு. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? “ஆன்மீக பாடல்கள் பாடும் கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடினால் உங்களுடைய இமேஜ் பாதிக்காதா?” என்ற கேள்விக்கு மிகவும் எதார்த்தமான முறையில் “இசைக்கு ஏது மொழி?’ என்கிறார் இந்த பன்முகக் கலைஞர்.
“இஸ்லாமியப் பாடல்களில் புகழ்ப்பெற்ற நாகூர் இ.எம்.ஹனிபா போலவே இவரின் குரலில் பாடல்கள் தனிச் சிறப்பும் பெற்றிருக்கின்றன. இவருக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து, தொய்வில்லாமல் துணிவும் செறிவும் இழையோட, இசை நடத்தும் இசை நிகழ்ச்சிகள் எந்த மதத்தவரும் மயங்கிப் போய் பாராட்டுகின்றனர்” என்று இவரைப் புகழ்ந்து, மனதில் பட்டதை அப்பட்டமாக எழுதுகிறார் தமிழ் மாமணி மலர் மன்னன் அவர்கள். மனுஷர் மிகவும் சரியாகத்தான் கணித்திருக்கிறார்.
“இசைப்பயணத்தில் உங்களுடைய குருநாதர் யார்?” என்று இவரிடம் வைக்கப்படும் கேள்விக்கு இவருடைய பதில் என்ன தெரியுமா?
“என்னுடைய மானசீக குரு கர்னாடக இசைமேதை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்”என்று அடக்கத்துடன் பதில் கூறுகிறார். வித்வானுக்கு நாகூர் தர்காவில் “வாழ்நாள் விருது” அளித்து பெருமைப் படுத்திய விழாவில், ஒரு மூலையில் அமர்ந்து, தன் மானசீக குருவுக்கு கிடைக்கப் பெறும் பாராட்டுதல்களை இவர் பவ்யமாக இரசித்துக் கொண்டிருந்ததை நான் நேரிலேயே பார்த்தேன்.
‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப் போல இவரிடத்தில் பந்தாவோ, வீண் ஜம்பமோ, சவடாலோ, அலட்டலோ எதுவுமே கிடையாது என்பதை இவரிடம் பழகியவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள்.
நாடகப் பாசறை
நாகூரில் ஏராளமான திறமைசாலிகள் உருவானதற்கு காரணம் ஒரு காலத்தில் நாகூரில் நாகூர்வாசிகளால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பது பலருக்கும் புதியதொரு செய்தியாக இருக்கும். கலைமாமணி இ. குல் முஹம்மது போன்றவர்களைப் பற்றி எழுதுகையில் இந்த நாடக வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.
“முத்தமிழும் கலந்த கலாச்சாரம் நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாச்சாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள். பாட்டைப் போலவே நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் என பற்பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்”
என்று தன் இளம் பிராயத்து பசுமையான நினைவுகளை அசை போடுகிறார் நாகூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா.
நாகூரில் நாடகப் பாசறை
நாகூரில் ஒரு காலத்தில் ஏராளமான நாடகங்கள் அரங்கேறின. எண்ணற்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.
சினிமாத்துறையில் நாகூரைச் சேர்ந்த ரவீந்தர், தூயவன் போன்ற பிரபலங்கள் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது இந்த நாடகங்கள்தான்.
புலவர் ஆபிதீன், நாகூர் ஹனிபா போன்ற திறமைசாலிகள் உருவாவதற்கு அடிக்கோலிட்டதும் இந்த நாடகங்கள்தான்.
பாடலாசிரியர் கவிஞர் சலீம், வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து பின்னர் “டான்” என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஹமீது சுல்தான், விறகுவாடி ஜப்பார், அஜ்ஜி, சேத்தான், குல் முஹம்மது, நாகூர் சாதிக், கத்தீப் சாஹிப், சிங்கை ஆரிஃப், பாப்ஜான், நவாப்ஜான், கவிஞர் இஜட் ஜபருல்லா போன்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.
நாகை பேபி தியேட்டரில் சினிமா ஸ்டண்ட் நாகூர் பரீது அவர்கள் அரங்கேற்றம் செய்த “விதவைக் கண்ணீர், “சோக்காளி”, “மிஸ்டர் 1960”, “படித்தவன்” போன்ற நாடகங்கள் ஏராளமான கலைஞர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தது.
“சிவப்புக்கோடு”, “சந்தர்ப்பம்”, “சன்னிதானம்”, “சூரியக்கோடு”, “சீனியர் அண்டு ஜூனியர்”மற்றும் நாகூர் சேத்தான் எழுதிய “எல்லோருக்கும் பே.. பே..”, “தண்டனை” போன்ற அனைத்து நாடகங்களும் வெற்றி வாகை சூடின. இவை எல்லாவற்றிலும் குல் முகம்மது அவர்களுடைய பங்களிப்பு கணிசமாக இருந்தது.
கவிஞர் நாகூர் சலீம் பாடல் புனைய, சேத்தான் மெட்டமைக்க, பாடகர் குல் முஹம்மது பாட்டிசைக்க – இக்கூட்டணி மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றது.
“சிவப்புக்கோடு” நாடகத்தில் கவிஞர் சலீம் எழுதி, சேத்தான் மெட்டமைத்த ‘வானம் கருத்ததடி’ ‘பட்டுவிட்ட மரக்கொடியில் பச்சைக்கிளி படருவதோ’ என்று தொடங்கும் பாடல்கள், மேலும் ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா’ ‘பூஜை மலர் மேலே புழுதி வந்து மலர்ந்ததம்மா’ போன்ற பாடல்கள் யாவும் குல் முஹம்மது பாடிய பாடல்களே.
இசையில் நாட்டம் ஏற்பட இவருக்கு நாடக மேடை வழிவகுத்து தந்தது. இவரது இசையார்வத்திற்கும், திறமைக்கும் தீனி போட்டது நாடக மேடைதான் என்பது கலப்படமில்லாத உண்மை.
பாடகரின் பெருந்தன்மை
பாடகர் இ. குல் முஹம்மது அவர்களின் பரந்த மனதுக்கு ஏராளமான நிகழ்வுகளை உதாரணம் காட்டலாம். விட்டுக் கொடுக்கும் சுபாவம், பிடிவாதம் இல்லாத குணம், வளைந்து கொடுக்கும் மனப்பான்மை – இவை யாவும் புடம் போட்ட தங்கமாக இவரை படம் பிடித்துக் காட்டுகின்றது.
எத்தனையோ புகழ்ப் பெற்ற பாடல்கள் இவர் முதன்முதலாக அரங்கேற்றி, பிறகு மற்ற மற்ற பாடகர்கள் பாடி அது வெளிச்சத்துக்கு வந்த பாடல்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? “இப்பாடல்களை முதன்முதலில் பாடி பிரபலப்படுத்தியது நான்தான்” என்று ஒருபோதும் இவர் உரிமை கொண்டாடியதில்லை, பீற்றிக் கொண்டதும் இல்லை. மற்ற மற்ற பாடகர்களாக இருந்தால் சிவாஜி கணேசன் திருவிளையாடல் திரைப்படத்தில் ஆடியதுபோல் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார்கள். தன்னுடைய நல்ல நல்ல பாடல்களெல்லாம் தன் கைவிட்டு போய்விட்டதே என்று கைசேதப்பட்டு பொற்றாமரைக் குளத்திளல்ல, கவலையில் மூழ்கி இருப்பார்கள்.
நிகழ்வு – 1
//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபி போதம்
இருக்கையில் நமக்கென்ன கவலை
இரு கண்களில் ஏன் நீர்த் திவலை//
இவ்வரிகள் நாகூர் சேத்தான் எழுதி, அவரே மெட்டமைத்து, மேடைக் கச்சேரிகளில் குல் முஹம்மது அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிமையான கானம்.
இப்பாடல் இசைமுரசு இ.எம்.ஹனிபா அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே அவர் இப்பாடலைப் பாட நாகூர் சேத்தானிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இவரும் மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருக்கிறார். இசைமுரசு அவர்கள் சேத்தானிடம் “என்னப்பா இது ‘திவலை’ என்று வருகிறது. கேட்பவர்கள் காதுக்கு ‘தவளை’ என்று விழப்போகிறது” என்று அபிப்ராயம் சொல்லவே இப்பாடலின் வரிகள் கீழ்க்கண்டவாறு உருமாறி இருக்கிறது.
//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?//
இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. சீனியர் பாடுவதற்கு ஜூனியர் பாடகர் மனமுவந்து விட்டுக் கொடுத்த பாடலிது. தன்னுடைய நல்ல பாடலொன்று பறிபோய் விட்டதே என்று அவர் ஒருக்காலும் வருத்தப்பட்டது கிடையாது.
நிகழ்வு – 2
“ஜீனே கி ராஹ்” என்ற படத்தில் முஹம்மது ரஃபி பாடிய “ஆனே ஸே உஸ்கே ஆயே பஹார்“ என்ற இந்திப்பாட்டு மெட்டில் நாகூர் சாதிக் அவர்கள் எழுதிக் கொடுத்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
//இருலோகம் போற்றும் இறைத்தூதராம்
இஸ்லாத்தை தந்த நபி நாதராம்//
என்ற இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேடையில் பாடி வந்ததை உள்ளூர்வாசிகள் அனைவரும் அறிவார்கள். இது அப்படியே இருக்கட்டும்.
இச்சமயத்தில் இந்தவொரு குட்டி நிகழ்வையும் இங்கு சொல்லிக் காட்டுவது அவசியம். “பாவ மன்னிப்பு” படத்தில் கண்ணதாசன் “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடலை எழுதியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும். அப்படத்தின் கதாநாயகன் பிறப்பால் இந்துவாகவும். வாலிப வயதை எட்டிப் பிடித்த அவன் முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான “ஓம்” என்ற நாத மந்திரம் அவன் வாயிலிருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்” என்று கண்ணதாசன் சொன்னது பத்திரிக்கையிலும் வெளிவந்தது.
கவிஞர் நாகூர் சாதிக் கைவண்ணத்தில் மிளிர்ந்த “இருலோகம் போற்றும் இறைத் தூதராம், இஸ்லாத்தை தந்த நபி நாதராம்” என்ற பாடல் வரிகளை கச்சேரிகளில் பாடியபோது, குல் முகம்மது அவர்களுக்கு கண்ணதாசன் சொன்னதுதான் மண்டையில் ஓடியது.
கவிஞர் நாகூர் சாதிக்கிடம் நேரடியாகச் சென்று “இது இஸ்லாமியப் பாடல் ஆயிற்றே? இப்பாடலின் வரிகளில் ‘ராம்.. ராம்’ என்று முடிகிறதே. இதை சற்று மாற்றித் தர முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது குல் முகம்மது மலேசியா இசைப் பயணத்திற்கு புறப்பட வேண்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.
இதற்கிடையில் இப்பாடலால் கவரப்பட்ட இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள், உச்சஸ்தாயியில் அமைந்திருக்கும் இப்பாடலை, தான் பாட ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனை கவிஞர் நாகூர் சாதிக் இவரிடம் தெரிவிக்க “அண்ணன் விருப்பப்படுவதால் நான் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. தாராளமாக அவரே பாடட்டும்” என்று மனமுவந்து ஒப்புதல் தந்திருக்கிறார்.
“ஒரு கையில் இறைவேதம்”, “இருளோகம் போற்றும் இறைத்தூதராம்” – இந்த இரு பாடல்களையும் நாகூர் ஹனிபா பாடத்தொடங்கிய பிறகு மேடைக் கச்சேரிகளில் பாடுவதையே இவர் விட்டு விட்டார்.
அதற்கு காரணம், தனக்கென தனி பாணியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை வளர்த்துக் கொண்ட இவர், அப்பாடல்களை பாடினால் ‘நாகூர் ஹனிபாவுடைய பாடல்களையே இவரும் பாடுகிறார்’ என்று மக்கள் நினைப்பார்களே என்ற எண்ணம் இவரை பாட விடாமல் தடுத்து விட்டது. இதற்கு இன்னொரு காரணம், இசைமுரசு அவர்கள் மீது இவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்றுதான் கூற வேண்டும்
நிகழ்வு – 3
//நபி மணி தந்த
அலி வழி வந்த
இரண்டு தீபமே !//
இந்த வரிகள் ஒரு காலத்தில் பாடகராக வலம் வந்துக் கொண்டிருந்த நாகூர் ஹஸன் குத்தூஸ் எழுதிய பல்லவி. ஹஸன் குத்தூஸ், குல் முஹம்மது இருவரும் ஒன்றாக இணைந்து நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். இப்பாடலுக்கு அனுபல்லவி எழுதி முழுமையாக்கியது கவிஞர் நாகூர் சலீம் அவர்கள். இதே மெட்டில் “நபி நபி போலே, அலி அலி போலே” என்ற உருது பாடல் வடிவத்தையும் குல் முஹம்மது சிங்கப்பூர், மலேசியா சுற்றுப் பிரயாணத்தின்போது மேடை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார்.
இதே மெட்டில் கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுத்து, “நபிமணி சொன்ன நெறி முறை என்ன” என்று தொடங்கும் பாடல் நாகூர் ஹனிபா அவர்களுக்கு எழுதிக் கொடுத்து, அது மிகவும் பிரபலமாகிய பின்னர் இந்தப் பாடலை பாடுவதையும் இவர் நிறுத்திக் கொண்டார்.
“மதினா நகருக்கு போக வேண்டும்” என்ற மெட்டைச் சார்ந்து கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுக்க, மேடையில் குல் முஹம்மது பாடிக்கொண்டிருந்த பாடல் இது:
//எண்திசை வித்வான்கள் சேரும் தலம்
ஏழிசை கீதங்கள் கேட்கும் தலம்
எப்போதும் பக்தர்கள் கூடும் தலம் – காஜா
ஏழை பங்காளர் வாழும் தலம்//
இதே மெட்டில் “மதீனா நகருக்கு போக வேண்டும்” என்ற பாடலை சமுதாயக் கவிஞர் தா.காசீம் எழுத, சேத்தான் மெட்டமைக்க, நாகூர் ஹனிபா அவர்கள் பாடி பிரபலமானபோது கவிஞர் இ.எம்.நெய்னா ஏற்கனவே எழுதிக் கொடுத்த இப்பாடலை நாகூர் சேத்தான் வேறு ராகத்தில் அதாவது ‘பீம்ப்ளாஸ்’ ராகத்தில் முழுவதுமாகவே மாற்றிக் கொடுத்து விட்டார்.
ஒரே ஊரில் ஏராளமான கவிஞர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் இருந்தால் இதுபோன்ற இடியப்ப சிக்கல் நேருவது சகஜம்தான் போலிருக்கிறது.
நிகழ்வு – 4
‘சிவப்புக் கோடுகள்’ நாடகத்தில் கவிஞர் நாகூர் சலீம் எழுதி, சேத்தான் ட்யூன் அமைத்து, குல் முஹம்மது மற்றும் சுல்தான் சாபு இணைந்துப் பாடிய பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடக்க வரிகள் இதுதான்:
//பட்டுவிட்ட மரக்கிளையில்
பச்சைக்கொடி படருவதோ//
அதன் பிறகு “பெருமானார் அவர்களின் பேரர் இமாம் ஹுசைனாரின் தியாகத்தை போற்றும் வகையில் இப்பாடலை மாற்றித் தாருங்களேன்” என்று இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்த நாகூர் சேத்தானிடம் இவர் முறையிட, அவரும்
//உண்மை நபி பேரர்களை
உம் மடியில் தவழ விட்டோம்
கண் இரண்டை பறித்துக் கொண்டு
கைகளிலே கொடுத்து விட்டாய்//
என்று எழுதிக்கொடுத்து பல காலம் இவர் மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்கையில், இந்த மெட்டு இசைமுரசு அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, மெட்டமைத்த நாகூர் சேத்தானிடம் அனுமதி பெற்று பொரவாச்சேரி கவிஞர் மதிதாசனை வைத்து
//கண்கள் குளமாகுதம்மா
கர்பலாவை நினைக்கையிலே
புண்ணாகி நெஞ்சமெலாம்
புலம்பியே துடிக்குதம்மா//
என்று எழுத வைத்திருக்கிறார். இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய இப்பாடல் பட்டி தொட்டிகள் எங்கும் ஒலித்தது.
“அதிகாலை வேளையிலும், காரில் பயணிக்கையிலும் இப்பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பேன். என் மனம் இளகும்” என்று நாகூர் ஹனிபாவின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டிய பாடலிது.
நிகழ்வு – 5
//ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
இறைவன் தந்தான் அந்த நாளையில்//
இது காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அவர்களின் பிரபலமான பாடல் என்று எல்லோருக்கும் தெரியும். கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் ஆரம்பத்தில் பி.கே கலீபுல்லா அவர்களுக்கு எழுதிக் கொடுத்த பாடலிது. ‘கலாவதி’ ராகத்தில் நாகூர் சேத்தான் மெட்டமைத்துக் கொடுத்தார். இப்பாடலை மேடைகளில் குல் முஹம்மதுதான் தொடர்ந்து பாடி வந்தார்.
1974-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுப் பிரயாணத்தின்போது இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பாடி, மஜீது பிரதர்ஸ் ஒலிப்பதிவு செய்து ஒலிநாடா கூட வெளியிட்டது.
சில காலத்திற்குப் பிறகு இதே பாடலை காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது அவர்கள் கவிஞர் நாகூர் சலீமிடமிருந்து கேட்டுப் பெற்று, இசைத்தட்டில் பாடி வெளியான பிறகு, இவர் இந்தப் பாடலை மேடைகளில் பாடுவதையும் தவிர்த்து விட்டார்
நிகழ்வு – 6
‘ஷிகார்’ என்ற இந்திப் படத்தில் ‘பர்தேமே ரெஹ்னே தோ, பர்தா நா ஹட்டாவோ’ என்ற மெட்டில் கவிஞர் நாகூர் சலீம் எழுதிக் கொடுத்து குல் முஹம்மது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த பாடல். இந்தப் பாடல் வரிகள் இதோ:
//உலகாளும் பெரியோனே
உயிர் காக்கும் இறையோனே – என்றும்
அலையும் தீமை அகன்றே வந்தோம்
அருள் பாவிப்பாய்//
பின்னர் இப்பாடல் பாடகர் எஸ்.எஸ்.ஏ.வாஹித் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அவரும் பாடத் தொடங்கிவிட்ட பிறகு அதையும் இவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
நான் இங்கு குறிப்பிட்டது ஒரு சில பாடல்கள்தான். இதுபோன்று இவர் பெரிய மனது பண்ணி, விட்டுக் கொடுத்த பாடல்கள் கணக்கில் அடங்காது. இதற்காக ஒரு தனி நூலொன்று எழுத வேண்டி வரும்.
முகம்மது ரஃபி பாடல்கள்
குல் முஹம்மதுக்கு இந்திப் பாடல்கள் மீது நாட்டம் ஏற்படுவதற்கு இவரது இளம் பிராயத்தில் நடந்த நிகழ்வொன்று பெரிதும் உந்துதலாக இருந்திருக்கின்றது. தனக்கு நன்றாக பாட வரும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கிய காலத்தில், முகம்மது ரஃபி பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்ற எண்ணம் இவரது சிந்தனையில் ஊஞ்சலாடி இருக்கிறது.
அவரது முகவரியைத் தேடிப் பிடித்து, தான் அவருடைய மந்திரக் குரலால் ஈர்க்கப்பட்டவன் என்றும், அவருடைய பாடல்களை கேட்காத நாளே இல்லை என்றும், எதிர்காலத்தில் அவரைப் போலவே பாடகனாக வர விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
சில நாட்கள் கழித்து இவர் எழுதிய கடிதத்திற்கு அவரிடமிருந்து பதிலும் வந்திருக்கிறது. கடிதத்தை திறந்து பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார். தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. தன்னையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்.
முகம்மது ரஃபி இவருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதம் அது. இவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அக்கடிதத்தை இன்றும் அரியதொரு பொக்கிஷமாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.
இந்த ஒரு சாதாரண நிகழ்வு அவரது வாழ்க்கைத் தடத்தையே மாற்றிவிட்டது. அன்றிலிருந்து முகம்மது ரஃபியுடைய பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு, பாடிப் பழகி, தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி, தான் பாடும் இஸ்லாமிய மேடைக் கச்சேரிகளில் முகம்மது ரஃபியின் பாடல்களை பாட இவர் தவறியதே இல்லை.
1973-74 காலகட்டங்களில் சிங்கப்பூர், மலேசியாவில் ஏராளமான இடங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த இசைப் பயணத்தின்போது முகம்மது ரஃபி பாடிய பழைய இந்திப் பாடல்கள் நிறைய பாடியதால், தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்களும் இவரது பாடல்களை விரும்பிக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
பெற்ற விருதுகள்
07.9.1974 தேதின்று சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் “இசையமுது” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
21.07.1974 தேதியன்று பினாங்கு மாநகரில் மலேசியப் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது இவருக்கு “இன்னிசைச் சுடர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
2001-ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்ட அனைத்துப் பள்ளிகள் சார்பாக இவருக்கு “ஆன்மீகத் தென்றல்” பட்டம் வழங்கப்பட்டது.
16.02.2014 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துல இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடந்த எட்டாம் மாநாட்டில் விழாவில் இவருக்கு “இசைச்சுடர்” என்ற பட்டம் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்டது.
1993-ஆம் ஆண்டு லட்சத்தீவில் நடந்த விழாவொன்றில் முன்னால் மத்திய அமைச்சர் பி.எம். சயீது அவர்களால் Indian Youth Federation (IYF) விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார்.
1994ஆம் வருடம் மலப்புரம் நகரில் நடந்த இவ்விழாவில் குன்னக்குடி வைத்தியனாதன் அவர்களால் ‘பாரத் உத்சவ்’ விருது வழங்கப்பட்டது
2005-ஆம் ஆண்டில் “கலைரத்னா” பட்டம் புதுவை அனைத்துக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக காரைக்கால் அம்மையார் அரங்கில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.
2008-ஆம் வருடம் மேலாக புதுவை அரசாங்கம் இவருக்கு “கலைமாமணி” என்ற உயரிய விருதை அளித்து கெளரவித்தது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது.
2009-ஆம் வருடம் “வாழ்நாள் சாதனையாளர் விருது” இந்து சமய இலக்கியப் பேரவை சார்பாக வழங்கப்பட்டது.
2010-ஆம் ஆண்டு “தமிழ் மாமணி விருது” இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பாக அதிராம்பட்டினம் அரசு கல்லூரியில் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களால் வழங்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புது டில்லி பாரதிய சாகித்ய அகாதெமி இவருக்கு “டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது” (Dr. Ambedkar Fellowship National Award 2011) வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட், சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மணிப்பூர் மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
18.03.2012 அன்று காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பாக இவருக்கு “கலைப்பேரரசு” என்ற பட்டம் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கையால் வழங்கப்பட்டது.
17.12.2014 தேதியன்று “செம்பணிச் சிகரம்” விருது புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் குரு பன்னீர் செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு அவர்களால் வழங்கப்பட்டது.
இவைகளன்றி “இசைத்தென்றல்”, “இசைஅரசு”, “இன்னிசைத் தென்றல்” போன்ற பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
முன்னாள் குடியரசு அப்துல் கலாம் நல்ல இசை ஞானம் கொண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரிடம் பெற்ற பாராட்டை இவர் மிகவும் பாக்கியமாகக் கருதுகிறார்.
இசைப்பயணம்
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்னாடகா, லட்சத்தீவு உட்பட பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தூரக்கிழக்கு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் இவர் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம், திருப்பூர், பெரிந்தல்மன்னா போன்ற ஊர்களில் கலாச்சார விழாவில் தமிழக முன்னாள் இயல் இசை நாடக மன்றத் தலைவர் குன்னக்குடி வைத்யநாதன் அவர்களுடன் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
தமிழ், உருது, இந்தி, தேசப்பற்று பாடல்கள், மத நல்லிணக்கப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள், திரையிசை பாடல்கள் ஆன்மீக பாடல்கள் என 25க்கும் மேற்பட்ட இவரது ஒலி நாடாக்கள் வெளிவந்திருக்கின்றன
1974-ஆம் ஆண்டு சிங்கை வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் தொடர்ந்து பாடினார். மிகவும் பிரபலமான பாடகர்களுக்கு மாத்திரமே இதுபோன்ற வாய்ப்புகள் அன்று தரப்பட்டன.
1977-ஆம் இவர் தூரக்கிழக்கு நாடுகளுக்கு இசைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இவருடன் தாயகத்திலிருந்து சென்றவர் ‘தபேலா மன்னன்’ யாகூப் அவர்கள். 8.5.1977 அன்று அப்பர் தமிழ்ப்பள்ளியில் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு மற்றும் தமிழ்க்காவலர் கா.முகம்மது பாட்சா முன்னிலையில், இசைச் செல்வர் எஸ்.சுந்தர்ராஜ் குழுவினருடன் நடந்த இவரது இசை நிகழ்ச்சியை ‘தமிழ் முரசு’ பத்திரிக்கை வெகுவாக பாராட்டி எழுதியது. “திரு குல் முஹம்மதுவின் கணீரென்ற குரல் செவிப்புலன்களில் தேனெனப் பாய்ந்தது என்றால் அது மிகையாகாது” என்று புகழாரம் சூட்டியிருந்தது.
சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 14.9.1974 தேதியன்று இவர் இந்தியா திரும்பியபோது, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிக்கைகள் அனைத்தும் சிங்கையில் இவர் தொடர்ந்தாற்போல் நடத்திய இசை நிகழ்ச்சிகள் குறித்து புகழாரம் சூட்டி எழுதியிருந்தன.
நாகூர் இ.எம்.ஹனிபா, எச்.எம்.ஹனீபா போன்ற இஸ்லாமியப் பாடகர்களின் பாடல்களை மட்டுமே வெளியிட்டு வந்த சிங்கை எஸ்.ஏ.மஜீது பிரதர்ஸ் என்ற பாடல் ஒலிப்பதிவு நிறுவனம், குல் முகம்மது அவர்களை வரவழைத்து நேரடி ஒலிப்பதிவு செய்து ஒலிநாடாக்கள் வெளியிட்டது.
சிங்கப்பூரில் இவர் பாடிய கவிஞர் நாகூர் சலீமின் தத்துவப் பாடல்கள், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ‘பாபி’, ‘ஆராதனா’ இந்திப் பாடல்கள், முகம்மது ரபி பாடிய பழைய இந்தி பாடல்கள், ‘அடி என்னடி ராக்கம்மா’ போன்ற ஜனரஞ்சக சினிமாப் பாடல்கள் அனைத்தும் வெகுவாக இசை ரசிகர்களை பரவசப்படுத்தின.
1983-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நாகூர் சேத்தான், கவிஞர் காதர் ஒலி இவர்கள் எழுதிய “கண்ணுக்கு விருந்து கல்புக்கு மருந்து”, “இறைத்தூதரே”, “நாகூரார் வாசலுக்கு நாடி வாருங்கள்”, “வங்கக் கடலோரம் வாழுகின்ற நாதா” போன்ற பாடல்களை, ஜே.கே.பாப்ஜான் இசையமைக்க சிங்கப்பூர் லதா மியூசிக் சென்டர் ஒலிநாடாவாக வெளியிட்டது.
இவரது இசைத்தட்டு மற்றும் ஒலிநாடாக்களை சங்கீதா இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவரது இசைத்தட்டு பாடல்களை சென்னை, திருச்சி, காரைக்கால், புதுவை தூர்தர்ஷன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வானொலியில் கேட்டு இரசித்தவர்கள் ஏராளம்.
இவர் பாடிய “சுவனத்தென்றல்”, “அருள் சோலை”, “பேரிரையோனே” “இறைநேசம்” ஏனைய ஒலிப்பேழைகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.
விஜய் டிவி, ராஜ் டிவி நிகழ்ச்சிகளில் இவர் பாடும் பாடல்களை காண முடிந்தது
பன்முகக் கலைஞர்
பொதுவாக ‘கலைஞர்கள்’ என்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நாம் அனுபவத்தில் கண்கூடாகக் கண்டது. இவர் பாடகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் நாகூர் மக்கள் இவரைச் சிறந்த கால் பந்தாட்டக்காரராகவே அறிந்து வைத்திருந்தார்கள்.
நாகூரில் கஞ்சஸவாய் ஸ்போர்ட்டிங் கிளப் A, B. C, என பல குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டுத் துறையில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்த நேரம். ஹாஜி மெளலானா, குல் முஹம்மது, மெய் சாஹிப், ஷேக் ஹசன் சாஹிப், A.T.அலி ஹசன், A.T.சாபுனி, சாதிக் போன்ற சிறந்த கால்பந்தாட்டக்கார வீரர்கள் களமிறங்கி பேரும் புகழும் பெற்றிருந்த காலமது. மாநில அளவு போட்டிகளில், பல ஊர்களுக்கும் சென்று, நாகூர் கால்பந்தாட்டக் குழுவின் சார்பாக குல் முஹம்மது பங்கு பெற்று விளையாடி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, நாணயம், தபால் தலைகள் சேகரிப்பு போன்றவற்றில் கரை கண்டு பற்பல கண்காட்சிகள்கூட நடத்தியிருக்கிறார்.
“வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்ற செழுமையான நோக்கம் என் நோக்கம்” என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர் இசையுலக ஜாம்பவான்களில் ஒருவராக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
தமிழக மக்கள் சார்பாக நாகூரில் இவருக்கு வாழ்நாள் விருது வழங்கி இவரை கெளரவிக்க வேண்டியது நம் தலையாய கடமை.
நாகூர் அப்துல் கையூம்
http://www.saaral.in/2020/10/23/gul-mohamed/
ஹரிசுந்தர்
October 24, 2020 at 8:20 am
பயனுள்ள தகவல்கள் விரும்பதக்கவைகளாகவும் உள்ளது. நன்றி வணக்கம்