தா.காசீம் அவர்களின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு பதிலாக அவருடைய ஒரே ஒரு பாடலில் காணப்படும் ஒரு சில வரிகளுக்கு மாத்திரம் விளக்கம் தந்தாலே இப்பதிவு நிறைவு பெற்றுவிடும்.
தா காசிம் எழுதி, நாகூர் சேத்தான் மெட்டமைத்து, இளையராஜா இசையமைத்து நாகூர் ஹனிபா பாடிய பாடல் இது ;
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு – எங்கள்
திருநபி யிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு
என்று மதினாவில் அடங்கியிருக்கும் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தென்றலைத் தூது விடும் பாடல்.
சன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
என்ற வரிகள் இதில் இடம் பெறும். சன்மார்க்கம், துன்மார்க்கம் என்ற அழகிய சொற்பதங்களை கவிஞர் கையாண்டிருக்கிறார்.
அதென்ன சன்மார்க்கம் vs துன்மார்க்கம்?
சத் என்றால் அழியாமலிருப்பது. சத் + மார்க்கம் = சன்மார்க்கம்.
துன் மார்க்கம் என்றால் துஷ்ட மார்க்கம் அதாவது தீய நெறி.
இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அது ஒரு மார்க்கம். அது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்ற கருத்தை கவிஞர் முதலில் நம் மனதில் படிய வைத்து விடுகிறார்.
//வாய் வாதமிட்டுலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை//
என்ற சொல்லாடலை வள்ளலார் அருட்பாவில் கையாள்கிறார். வள்ளலாருக்கு முன்பு தாயுமானவரும், திருமூலரும் கூட இப்பதத்தைக் கையாண்டுள்ளார்கள்.
//செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க – சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.//
என்று வள்ளலார் பாடுகிறார். தா.காசிம் பாடிய சன்மார்க்கம் + துன்மார்க்கம் இவையிரண்டிற்கும் இதில் விளக்கம் உள்ளது.
வள்ளலாரின் விளக்கப்படி சன்மாக்கி என்றால் என்றும் நிலைத்திருப்பவன். அரபியில் சொல்ல வேண்டுமென்றால் “யா கையூம்”.
இப்போது பாடலின் அடுத்த வரியைப் பார்ப்போம்
//கடல்போன்ற பகைமுன்னே உடைவாளைக் கரமேந்தி
படைகொண்டு பகைவென்ற எம்மான் – பத்ரு
படையரசர் முகம் காண்ப தெந்நாள்?//
இந்த மூன்றே மூன்று வரிகள் நபிகளார் புரிந்த பத்ருப் போர் காட்சியினை நம் கண்முன் விரிக்கிறது. .
‘கடல் போன்ற பகை முன்னே” என்று அவர் கூறுவது மக்க மாநகரத்து குறைஷிகளின் படை வெள்ளம்.
ஒரு பக்கம் நபிகளாரின் சிறிய படை. சுமார் 313 பேர்கள். முறையான கவச உடைகள் கிடையாது. இரண்டு குதிரைகள். 70 ஒட்டகங்கள். அவ்வளவுதான்.
எதிர் அணியில் ஏறக்குறைய 1300 படை வீரர்கள், 100 குதிரைகள். எண்ணிக்கையில் அடங்கா ஒட்டகங்கள். கவசமணிந்த படைவீரர்கள் மட்டுமே சுமார் 600 பேர்கள்
இப்படையையும்,அப்படையையும் ஒப்பிட்டால் நபிகளாரின் படை ஒன்றுமே இல்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் இறை நம்பிக்கையும், மனோதைரியமும் மட்டும்தான்.
நபிகளாரின் எதிரணியை “கடல் போன்ற பகை முன்னே” என்று கவிஞர் வருணிப்பது நல்லதொரு உவமை.
//உடைவாளைக் கரமேந்தி படைகொண்டு பகைவென்ற எம்மான்//
என்ற வரியில் நபிகள் பெருமானாரே போர்க்களத்தில் இறங்கி போர் புரிந்தார்கள் என்று கவிஞர் சொல்கிறார். ஆம், உண்மை.
நபிகளார் நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் சுமார் பத்தொன்பது. பத்ருப்போர் அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வியூகம் அமைத்தது முதற்கொண்டு களமிறங்கி சண்டை போட்டது வரை யாவுமே வரலாற்றில் பதிவாகி இருக்கிறது,
இப்போரில் அபூஜஹல் என்ற பெரும் எதிரியை வீழ்த்தியவர்கள் யார் தெரியுமா? முஆத், முஅவ்வித் என்ற இரண்டு சிறுவர்கள்.
கடைசியில் போரில் வெற்றி வாகை சூடியது நபிகளாரின் அணிதான்,
இவ்வளவு விரிவான ஒரு வரலாற்றை “கடல் போன்ற’ என்ற ஒரே ஒரு உவமையில் அடக்கிச் சொன்னது கவிஞரின் சொல்லாற்றலுக்கு தக்க சான்று,
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறளைப் போல “கடல்போன்ற” என்ற ஒரே வார்த்தையை வைத்து போர்ப்படலம் முழுவதையும் ஜாடியில் பூதம் போல அடக்கி விட்டார்.
சொற்சிலம்பம் ஆடத் தெரிந்தவனால் மட்டுமே இத்தகைய வித்தையை செய்து காட்ட முடியும்.
அதே பாடலில் வரும் மற்றொரு வரியைப் பார்ப்போம்
//எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது
இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்//
பள்ளிவாசல் அல்லது பள்ளிவாயில் என்று சொல்வதற்கு பதிலாக இறையில்லம் என்ற அவரது சொல்லாடல் நம்மை வெகுவாக கவர்கிறது.
பாங்கோசையைக் குறிப்பிட்டு //எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது?// என்று சொல்வதன் மூலம் ஒரு மாபெரிய பூகோள விஞ்ஞான உண்மையை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து போய் விடுகின்றார்.
இதற்கு நான் விளக்கம் சொல்வதென்றால் ஒரு நூலே எழுத வேண்டிவரும். சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.
உலகமெங்கும் ஒரே போன்று ஒலிக்கும் பாங்கோசையில் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற நபிநாமம் ROUND THE CLOCK 24/7 நேரமும் ஒலிக்கிறது.
அறிவியல் அறிஞர்களின் கணக்குப்படி பாங்கொலி ஒலிக்காத நிமிடமே கிடையாது, உலகெங்கிலும் எல்லா நேரத்திலும் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
எல்லோரும் ஒரே பாங்காகவே பாங்கு சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ‘அல்லாஹ் பெரியவன்’ என்றும், வட இந்தியாவில் ‘அல்லாஹ் படா ஹே’ என்றும் இங்கிலாந்தில் ‘GOD IS GREAT’ என்றும் சொல்வதில்லை. உலகம் முழுவதும் ‘அல்லாஹூ அக்பர்’ என்றுதான் பாங்கினை தொடங்குகிறார்கள்.
உதாரணமாக இந்தோனேசியாவில் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் இரவு நேரத் தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்கிறது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உலக வரைபடத்தில் கிழக்குபுறம் இருக்கும் இந்தோனேசியாவில் அதிகாலை ஒலிக்கும் பாங்கொலி, இந்தோனேசியாவைக் சுற்றியிருக்கும் ஏராளமான தீவுகள் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சைபில், என்று தொடர்கிறது.
சைபில் தீவின் கிழக்கு பக்கத்தில் 5.30 மணிக்கு அதிகாலைத் தொழுகை நேரம் என்றால் 180 மில்லியன்களுக்கும் கூடுதலாக முஸ்லீம்கள் வசிக்கும் அந்நாட்டு சுற்றுவட்டார தீவுகளில் ஆயிரக்கணக்கான பள்ளிவாயில்களில் ஒன்றன் பின் ஒன்றாக பாங்கோசை தொடர்ந்து ஒலிக்கின்றது.
இத்தொடர்ச்சி ஒலிம்பிக் ஜோதி ‘ரிலே’ போன்று தொடர்கிறது. பின்னர் இந்தோனேசியாவின் மேற்கு பகுதிகளில் தொடர்கிறது. இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் மேற்கு தீவுகளுக்கிடையே உள்ள நேர வித்தியாசம் ஒன்றரை மணி நேரம், ஆக நாம் முன்னர் குறிப்பிட்ட சைபில் தீவில் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்ட பாங்கோசை ஜகார்ட்டா, ஜாவா, சுமத்ரா தீவுகளில் ஒலிக்கிறது.
இந்தோனேசியா தீவுக்கூட்டங்களில் இந்த பாங்கு தொடர் முடிவதற்கு முன்னரே இப்போது மலேசியா பின்னர் பர்மா என்று ஒலிக்கத் தொடங்கி விடுகிறது, பிறகு பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு பகுதிகள் கல்கத்தா பின்னர் ஶ்ரீநகர், பாம்பே மற்றும் இந்தியா முழுதும் ஒலிக்கின்றது.
ஶ்ரீநகரிலும் பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டிலும் ஏறக்குறைய ஒரே நேரம்தான். சியால்கோட், கோட்டா, கறாச்சி, கோவதார் (பலூசிஸ்தானிலுள்ள நகரம்) இவைகளுக்கிடையிலுள்ள நேர வித்தியாசம் 40 நிமிடங்கள். இந்நேரத்தில் பாகிஸ்தானிலுள்ள அனைத்து பள்ளிவாயில்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக பஜ்ரு தொழுகைக்கான பாங்கோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது
பாகிஸ்தானில் இது ஓய்வதற்குள் இப்போது இது தொடர்ந்து ஆப்கானிஸ்தான், மஸ்கட் என பாங்கொலி கேட்கத் தொடங்கி விடுகிறது. மஸ்கட்டுக்கும் பக்தாதுக்கும் இப்போது நேர இடைவெளி ஒரு மணி நேரம்,
ஈராக்கைத் தொடர்ந்து அமீரகம், குவைத், சவுதி அரேபியா ஏமன் என்று பரவுகிறது. இப்போது எகிப்திலுள்ள அலேக்ஸான்டிரியாவுக்கும் பக்தாதுக்கும் ஒரு மணி நேரம் வித்தியாசம். இப்போது சிரியா, எகிப்து, சோமாலியா, சூடான் நாடுகளின் ஒவ்வொரு பள்ளிவாயிலிலும் தொடர்ந்தாற்போல் சிறு சிறு இடைவெளிகளில் பாங்கு சப்தம் கேட்ட வண்ணம் இருக்கின்றன,
அலேக்ஸான்டிரியாவும் இஸ்தான்புல்லும் ஒரே புவியியல் தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன. துருக்கியின் மேற்கு பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்குமே ஒன்றரை மணிநேரம் வித்தியாசம் இருக்கிறது.
இறைவனின் இந்த கணித விளையாட்டும் நமக்கு ஆச்சரியமாகவும் புரிந்தும் புரியாத புதிராகவும் இருக்கிறது.
அலேக்ஸாண்டிரியாவுக்கும் திரிபோலி நகருக்கும் (லிபியா) நேர கால இடைவெளி ஒன்றரை மணிநேரம். இக்கால இடைவெளியில் ஒவ்வொரு பகுதியிலும் பாங்கோசை ஓயாது ஒலித்துக் கொண்டே இருப்பது கவனிக்கத்தக்கது, அடுத்து ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஒலிக்கின்றது, ஆப்பிரிக்க கண்டம் எவ்வளவு பெரிய கண்டம் என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்தோனேசியாவின் கிழக்குத் தீவுகளில் ஒலிக்கத் தொடங்கிய பாங்கோசை ஒன்பதரை மணி நேரங்களுக்குப் பிறகு இப்போது அட்லாண்டிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியை எட்டி விடுகிறது,
அட்லாண்டிக் கரையை இந்த தொடர் பாங்கோசை எட்டும் முன்னரே இப்போது இந்தோனேசியாவின் கிழக்கு பகுதிகளில் மதிய நேர லுஹர் தொழுகை தொடங்கி விடுகிறது. அது பங்களதேஷ் டாக்கா நகரத்துக்கு எட்டும் முன்னரே அஸர் நேரத்து பாங்கோசை ஒலிக்கத் தொடங்குகிறது. இந்தோனேசியாவில் அஸர் கால பாங்கு ஒலிக்கத் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே, அங்கு அந்தி சாயும் மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை கேட்கிறது. சுமத்ரா தீவில் மக்ரிப் பாங்கொலி கேட்கும் நேரத்திலேயே இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி சைபிலில் இப்போது இரவு நேர இஷாத் தொழுகை.
அடேங்கப்பா..! ஆண்டவனின் இந்த கால நேர கணித விளையாட்டு, நம்மை மலைக்க வைக்கிறது. மனிதனோ இதற்கு என்னென்னமோ பெயர் வைத்திருக்கிறான். கிரீன்விச் நேரம், பூமத்திய ரேகை, புவியியல் தீர்க்க ரேகை, ஈக்வடார், தென்துருவம், வடதுருவம் என்று எப்படி எப்படியோ அழைத்து திருப்தி பட்டுக் கொள்கிறான்.
இந்தோனேசியாவில் மோதினார் அதிகாலை விடியற் தொழுகைக்கு ஒலிபெருக்கியில் அழைக்கும் அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள இறையில்லத்தில் மோதினார் இரவு நேர இஷாத் தொழுகைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.
இந்த தொடரோசை இறுதி நாள்வரை உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும், இந்த மாபெரும் தத்துவத்தை சமுதாயக் கவிஞர் தா.காசிம்
//எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது
இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்//
என்று இருவரிகளில் அனாயசமாக கூறி முடித்து விட்டார். எனக்கோ இதை விளக்குவதற்குள் தாவு கழன்று விட்டது
அடுத்த வரியில் அவர் சொல்வது இன்னும் ‘ஹைலைட்’.
கைநகம் கண்தொட்டுக் கனிகின்ற ஸலவாத்தில்
கஸ்தூரி மணம் கமழும் எம்மான் – அவரின்
கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்
பாங்கோசை ஒலிக்கையில் அதில் நபிகள் பெருமானார் பெயரைக் கேட்கையில் நாம் பெருவிரலையும்< ஆட்காட்டி விரலையும் இணைத்து கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இது நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொடங்கி வைக்க, இந்நாள் வரை நபி பெருமானார் அவர்கள் மீது கொண்ட காதலால் நாம் பின்பற்றி வருகிறோம். மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி பெருவிரல் ரேகை, கண்ணின் கருவிழி உயிரியளவு (Biometric) இவையிரண்டும் தனித்துவமானது. இவைதான் நம்முடைய பூளோகத்து ஆதார் கார்டு. இவையிரண்டையும் ஒன்றோடொன்று ஒற்றிக் கொள்ளும்போது இவைகள் நாம் கொண்ட நபிகாதலுக்கு மறுமையில் சாட்சி பகர்கின்றன.
“திருப்புகழை பாடப் பாட வாய்மணக்கும்” என்ற பாடலை நான் கேட்டதுண்டு. கவிஞர் தா.காசிம் ஒருபடி மேலே சென்று பாங்கோசையின்போது நபி பெருமானார் அவர்களின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கைநகத்தை கண்ணில் ஒற்றிக்கொண்ட மாத்திரத்திலேயே அது கஸ்தூரி மணமாக கமழ்ந்தது என்று தன் நபிகாதலை வெளிப்படுத்துகிறார்.
நான் இப்பாடலின் ஓரிரு வரிகளை மட்டும்தான் விளக்கி இருக்கிறேன். முழுவதும் விவரித்தால் பொழுது சாய்ந்துவிடும்
இதோ முழுப்பாடல் :
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு – எங்கள்
திருநபி யிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு
சன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞானப் பெருமான்
கண்ணோடு கண்ணாகி கல்புக்குள் நிறைவாகி
கருணைக்குப் பொருள் தந்த எம்மான் – அவரைக்
காணத் துடிக்கின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)
மடமையாம் இருள்போக்கி
மதுவையும் விஷமாக்கி
மாந்தரின் நலம்காத்த பெருமான்
மண்ணோடு பெண்மகவை மகிழ்வோடு புதைத்திட்ட
மாபாவச் செயல் தடுத்த எம்மான் – அந்த
மஹ்மூதைக் காண்பேனோ இந்நாள் (தென்றல் காற்றே)
கடல்காடு மலைபாலை கடக்கின்ற இறைவேதம்
கனிவாயில் இதழ்விண்ட பெருமான்
கடல்போன்ற பகைமுன்னே உடைவாளைக் கரமேந்தி
படைகொண்டு பகைவென்ற எம்மான் – பத்ருப்
படையரசர் முகம் காண்பதெந்நாள் (தென்றல் காற்றே)
எந்நாளும் அவர் நாமம் இயம்பாத கணமேது
இறை இல்லப் பாங்கோசைப் பெருமான்
கைநகம் கண்தொட்டுக் கனிகின்ற ஸலவாத்தில்
கஸ்தூரி மணம் கமழும் எம்மான் – அவரின்
கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)
#நாகூர்_அப்துல்_கையூம்
ஹரிசுந்தர்
October 31, 2020 at 6:01 am
அருமை பாராட்டுக்கள் நன்றி