RSS

Category Archives: துட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி

துட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி


நரைத்த தாடி, நெற்றியில் சந்தனப் பொட்டு, வாய் நிறைந்த வெற்றிலைச் சிரிப்பு, ஞானி போன்ற தோற்றம். கவிஞர் வாலியின் தோற்றத்திற்கும் அவரது பாடல்களுக்கும் பஹ்ரைனுக்கும் நாகூருக்கும் உள்ள தூரம்.

“கதவச் சாத்து கதவச் சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமையா ஆமா
கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய
நீ கட்ட வேணும்”

வாலி ஐயாவின் சிருங்கார ரசம் சொட்டும் பாடலிது. இதுபோன்ற பாடல் வரிகள் தமிழர் பண்பாட்டையும், காலாச்சாரத்தையும் படுகுழிக்கு இழுத்துச் செல்லுவதோடல்லாமல், சுவாமி நித்யானந்தர் போன்றவர்களையும் சபலபுத்திக்கு ஆளாக்கி சன் டிவிக்கு தீனி போடச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எத்தனையோ நல்ல பாடல்களைத் தந்த இந்த வாலிபக்கவிஞர் ஏன் கா’வாலி’ப் பாடல்களை எழுதித் தள்ளுகிறார் என்று நமக்கு புரியவில்லை. அண்ணி என்றால் தாய்க்குச் சமம் என்பார்கள். அந்த அண்ணியையே தாரமாக தரம்தாழ்ந்து நோக்கும் ஒரு ஆபாசக் கதைக்கு “வாலி” என்ற பொருத்தமான பெயர் வைத்த இயக்குனரின் சாதூர்யத்தை மெச்சத்தான் வேண்டும்.

இவ்வளவு நன்றாக கவிதை எழுதும் நீங்கள் ஏன் திரைப்படத்திற்கு வியாபார நோக்கோடு எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு

இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;

அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!

மேலும் .. ..

எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!

மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்

கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!

என்று கவிதையிலேயே பதில் சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி. சமுதாயத்தைப் பற்றி எல்லாம் இந்த மனுஷருக்கு கவலையில்லை. காசு பண்ண வேண்டும் என்பதுதான் இவர் கவலையே.

பெரிய மனுஷர் என்று நினைத்து வாலியின் வீட்டிற்கு வேலைக்கு போகும் பணிப்பெண் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

“புது வேலைக்காரி வீட்டுக்கு வந்தாள்
வீடு சுத்தமாகியது.
மனசு குப்பை ஆகியது”

என்ற அவருடைய கவிதை வரிகள் கற்பனை வரிகளாக எனக்குத் தோன்றவில்லை. காரணம் அவருடைய துருப்பிடித்த மூளையிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வந்து கொட்டுகிறன.

சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு எழுதுகோல் ஏந்தும் படைப்பாளிகளுக்கு முன்பு “நான் எப்படியும் எழுதுவேன். எனக்கு வேண்டியது பணம்தான்” என்றுச் சொல்லும் இவர் போன்ற கவிராஜர்களை எப்படித் திருத்துவது?

ஒரு பெண் பூப்படைவது என்பது இயற்கை அவளுக்குத் தரும் வரப்பிரசாதம். அந்த நிகழ்வு மட்டும் நிகழாமல் போனால் எந்த அளவுக்கு ஒரு மனம் பாடுபடும் என்பதை வருணிக்க வார்த்தைகள் கிடையாது. அந்த புனிதமான நிகழ்வை கேலிக்கூத்தாக்கும் வண்ணம்

“எப்படி? எப்படி? சமைஞ்சது எப்படி?”

என்று பெண்ணினத்தை இழிவுபடுத்தி பாடலெழுதிய இந்த கவிஞரை சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

“மாங்காய் மாங்காய் ரெண்டு மாங்காய்
மார்கெட்டு போகாத குண்டு மாங்காய்”

என்று எழுதி ‘மார்கெட்டு’ என்ற வார்த்தையில் ‘மார்-கெட்டு’ என்ற சிலேடையை வைத்து பெண்ணின் உடற்கூறினை கொச்சைப்படுத்தி எழுதிய இந்தக் கவிஞர் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. நான் எழுதுவது பணத்துக்காகத்தான் என்று பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்.

வாலியின் ‘பொய்க்கால் குதிரை’ கவிதைத் தொகுப்பில் ‘இரக்கம்‘ என்ற தலைப்பில் அவரெழுதிய கவிதை ஒன்று இணையப் பதிவுகளில் வலம் வந்த வண்ணமுள்ளது. முஸ்லீம்களின் தியாகத் திருநாளின் மகத்துவத்தை மாசுபடுத்தி இருக்கிறது அவரது வரிகள். தியாகத் திருநாளை இங்குள்ள பத்திரிக்கைகள் ‘பக்ரீத்’ என்று அழைப்பதிலே எனக்கு உடன்பாடில்லை. பக்ரீ என்றால் உருது மொழியில் ஆடு என்று அர்த்தம். ஈத் என்றால் பண்டிகை. பக்ரீத் (ஆடு+பண்டிகை).

‘ஈதுல் அதா’ எனப்படும் இந்த தியாகத் திருநாள் முஸ்லீம்கள் வெறும் ஆடு அறுத்து பிரியாணி சமைக்கும் வைபவம் என்பது கவிஞர் வாலியின் எண்ணம் போலும். இதோ வாலியின் கவிதை : 

மறியே
செம்மறியே !
மேயப்போகிறாயா ? போ
அதோ அந்த மலையடி பக்கத்தில்
நல்ல மூலிகைகள் மலிந்து கிடக்கின்றன
அவைகளையே மேய் !

தப்பித்தவறி விஷப்பூண்டுகளில்
வாயை வைத்து விடாதே
ரொம்பவும் துள்ளாதே நிதானமாய் போ. . .

உன் முட்டி எலும்புகள் முறிந்து விட்டால்
என் கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்
உன்னைத் தேடும்படி வைக்காதே !
இருட்டியதும் நீயாகவே
வீடு திரும்பி விடு !

விடியும் வரையில் அரைத்தூக்கத்தில்
ஆனந்தமாக அசைபோடு !
விடிந்தபிறகுதான்
பக்ரீத் !

கவிஞர் வாலி என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்கு புரிகிறது. ‘ஆடு மழையில் நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை’யைதான் இத்தோடு இணைத்துப் பார்க்கிறார். இந்த தியாகத் திருநாளின் பின்னணியிலிருக்கும் உண்மையான தத்துவத்தை அவர் புரிந்துக் கொண்டிருந்தால் இப்படி அவர் எழுதி இருக்க மாட்டார்.

மணப்பாறைக்கு  அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட எருமை கிடாக்கள் பலியிடப்பட்டு பெரிய குழிவெட்டி அதில் போட்டு புதைக்கப்பட்ட செய்தியை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது.

குர்பானி கொடுக்கப்படும் ஆடுகள் எத்தனை சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும், எத்தனை சதவிகிதம் உறவினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் ஹஜ் சமயத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடுகள் முறையே பக்குவப்படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன.

விலங்குகள் அறுபடும்போது அதற்கு வேதனை இல்லாத முறையில் அறுப்பதற்கு இஸ்லாம் வகை செய்திருக்கிறது. குர்பானி கொடுக்கும் மிருகத்திற்கு குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்.

காதுகள் அறுபட்டவை, காதுகள் இல்லாதவை, எலும்பு முறிந்தவை, தானாக நடக்க முடியாதவை, வெளிப்படையாகத் தெரியும் நொண்டி, நன்றாக தெரியக் கூடிய மாறுகண், கொம்புகள் இல்லாதவை இக்குறைபாடு உள்ள மிருகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அவர்களது வாக்கு  (ஆதாரம்: அஹ்மத். திர்மதி, இப்னு மாஜா, நஸயீ, அபூதாவூத்)

இன்னொரு வகையில் கவிஞர் வாலியை சப்பைக்கட்டு கட்டும் விதத்தில் இப்படிக் கூட நான் வாதிடலாம். “குர்பானி கொடுக்கப்படும் ஆடு நல்ல விதத்தில் பராமரிக்கப்பட்டு அவைகளுக்கு எந்த குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற இஸ்லாத்தின் கருத்துக்களை ஆஹா! எவ்வளவு தத்ரூபமாக எடுத்துக் கூறுகிறார் பார்த்தீர்களா?” என்று நான் அவருக்கு வக்காலத்து வாங்கலாம். 

கவிஞர் வாலியின் பொது அறிவை வைத்துப் பார்க்கும் போது தியாகத் திருநாளின் மாண்பினை அறிந்து அவர் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. பலியிடப்படும் ஆட்டுக்கு இரக்கம் காட்டுவதாக நினைத்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பதாகவே எனக்கு படுகிறது.

அண்மையில் “அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ! உருதுக் கவிஞன் உமர் கய்யாமின் கவிதையா நீ!” என்ற திரைப்படப் பாடலைக் கேட்க நேர்ந்தது. “உமர்கய்யாம் உருதுக் கவிஞனா அல்லது பாரஸீகக் கவிஞனா என்ற உண்மை கூட தெரியாமல் படத்திற்கு பாட்டெழுத வந்து விடுகிறார்களே இந்த ஞான்யச் சூன்யங்கள்” என்று நொந்துப் போய் விட்டேன். விசாரித்துப் பார்த்ததில் இந்தப் பாடலும் வாலி எழுதியதுதானாம். சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது. கொஞ்சம் விட்டால் ஷேக்ஸ்பியர் சமஸ்கிருத கவிஞர் என்று சொல்வார் போலத் தெரிகிறது.

10.000க்கு மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வாலி ஒருமுறை “எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை” என்று ஒரு பேட்டியில் உண்மையைச் சொன்னார். அவர் உலகம் சுற்றாத ‘வாலி’பன் என்பது ஏற்கனவே தெரியும். அவருக்கு பொது அறிவும் பூஜ்யம் என்பது இப்போதுதான் தெரிகிறது.

புகழ்ச்சிக் கலையில் இவருக்கு ஒரு டாக்டர் பட்டமே சூட்டலாம். “நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர்.  நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்” என்று இவர் கலைஞரைப் புகழ்கையில் ‘இவருக்கு ஷுகர் மட்டும்தான் ஏறிப்போயிருக்கிறதா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

“ஒபாமா உனக்கு ஒப்பாகுமா?” என்று கலைஞரைப் புகழ்வதிலும், “கலைஞர் எழுதிய கவிதைகளிலேயே தலைசிறந்த கவிதை கனிமொழிதான்” என்று சோப்பு போடுவதோடு இவர் நிறுத்திக் கொள்ளட்டும்.

முஸ்லீம்களைத் தூண்டிவிட்டு அவர் வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

– அப்துல் கையூம்