RSS

Category Archives: அகடம் பகடம் (Misc.)

காரைக்கால் ஏ.எம்.தாவூத்


இஸ்லாமிய இன்னிசை உலகம் என்றென்றும் நெஞ்சில் நினைவு வைத்திருக்க வேண்டிய கடந்த கால பாடகர்களில் காரை ஏ.எம்.தாவூத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இஸ்லாமியப் பாட்டுலகில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

அந்த முன்னோடிக்கே முன்னோடியாக திகழ்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். காரை தாவூத், இசைத்துறையில் இமயத்தைத் தொட்ட இசைமுரசுக்கே ஓர் அழகிய முன்மாதிரி.

காலச் சுழற்சியில் காற்றோடு காற்றாக கரைந்துப் போன பெயர்களில் இந்த இன்னிசை வேந்தரின் பெயரும் ஒன்று.

காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்கள் 1905ஆம் ஆண்டு பிறந்தார், 1936ஆம் ஆண்டு முதலே இவர் தமிழ்க் கூறும் நல்லுலகில் நாடறிந்த இஸ்லாமியப் பாடகராய் வலம் வந்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் இவரை அறிந்து வைத்தவர்களைக் காட்டிலும் இலங்கையில் இவரைப் போற்றிப் புகழ்வோர் அநேகம் பேர்கள் உண்டு.

HMV (His Master’s Voice) நிறுவனத்து இசைத்தட்டில் இஸ்லாமியப் பாடல்கள் முதன் முதலாகப் பாடியவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அல்லது நாகூர் இ.எம்.ஹனிபா என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முதன் முதலில் எச்.எம்.வி. நிறுவனத்தில் இஸ்லாமியப் பாடல் பாடியவர் காரைக்கால் தாவூத் அவர்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய தகவல். நாகூர் மண்ணுக்கும் இசைத்துறைக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் நன்கறிவர். நாகூர்வாசியான இவர் அறியப்பட்டது காரை ஏ.எம்.தாவூத் என்ற பெயரில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல் காரை தாவூத் அவர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் இந்த வாய்மொழி வாக்குமூலமே போதுமானது.

பத்திரிக்கையாளர் அ.மா.சாமி அவர்கள் “உங்களுக்கு எப்படி இசையில் விருப்பம் ஏற்பட்டது?” என்று கேட்ட கேள்விக்கு இசைமுரசு தந்த பதில் இதோ:

“எங்கள் தந்தையார் கோலாலம்பூரில் ரெயில்வே ‘போர்மேன்’ ஆக வேலை பார்த்தார். 28 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பினார். இடையிடையே வந்து போனார். ஒருமுறை வரும்போது ஒரு கிராமபோன் பெட்டி கொண்டு வந்தார். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, சைகால், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் போன்றவர்களின் இசைத்தட்டுகளை அந்த கிராமபோன் பெட்டியில் ஓடவிட்டு, நான் கேட்பேன். இது அவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆசையை என்னிடம் ஏற்படுத்தியது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால், அப்படியே திரும்பிப் பாடும் ஆற்றல் இயற்கையாகவே எனக்கு இருக்கிறது, அப்படிப் பாடிப் பாடி பழகிக் கொண்டேன்.” என்று தன் மனதில் தோன்றியதை அப்படியே புட்டுப் புட்டு வைத்தார்.

நாகூர் ஹனிபாவைக் காட்டிலும் காரை தாவூத் அவர்கள் வயதில் 20 வருடம் மூத்தவர். நாகூர் ஹனிபா பாடத் தொடங்குவதற்கு முன்பே புகழின் உச்சத்தில் இருந்தவர் காரை தாவூத் அவர்கள்.

உசைன் பாகவதர், வித்வான் எஸ்.எம்.ஏ,காதர், குமரி அபுபக்கர், இசைமணி எம்.எம்,யூசுப், எச்.ஏ.ஏ.காதர், காரைக்கால் தாவூத் போன்று முறையாக சங்கீதம் கற்றவன் நானல்ல என்று நாகூர் ஹனிபாவே பலமுறை சொல்லியும் இருக்கிறார். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதைப் போலவே இசையை கேட்டுக் கேட்டு கேள்வி ஞானத்திலேயே தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர். இப்பேறினை இறையருள் என்றே சொல்ல வேண்டும்.

காரை தாவூத் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தது புலவர் ஆபிதீன், கவிஞர் சலீம் முதலானோர். முன்பே சொன்னது போல இவருடைய திறமைக்கு முறையான அங்கீகாரம் தந்து போற்றிப் புகழ்ந்தோர் இலங்கை வாழ் தமிழர்களே. இவரை தாவூத் மாஸ்டர் என்றே மரியாதைப் பொங்க அழைத்தனர்.

ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் திருச்சி வானொலியிலும், இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்திலும் அதிகப் படியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து நாட்டில் பி.பி.சி. ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலி அச்சமயத்தில் தமிழகமெங்கும் எல்லோராலும் விரும்பிக் கேட்கப்பட்ட வானொலி சேவையாகும்.

உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் மேலான இசைத்தட்டுகளை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த ஸ்தாபனத்தின் சேகரிப்பில் காரை ஏ.எம்.தாவூத் அவர்களின் ஏராளமான இசைத்தட்டுகள் இன்னும் அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கின்றது,

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு 2014 பிப்ரவரி மாதம் 14,15,16 நாட்களில் கும்பகோணம் நகரில் நடந்தேறியது. அதில் “முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அப்போதைய தலைவராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தொடங்கி வைத்தார். அக்கூட்டத்தில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களின் இசை பங்களிப்பை நினைவு கூர்ந்து “வாழ்நாள் சேவை விருது” (Posthumous) வழங்கப்பட்டது. உயிரோடு இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம் மறைந்த பின்பாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இலங்கையிலுள்ள மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தமிழறிஞருமான ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி எழுதிய “மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலை நான் அண்மையில் படிக்க நேர்ந்தது. அதில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களைப் பற்றிய குறிப்புகள் கண்டு நான் நெகிழ்ந்துப் போனேன்.

இந்நூலில் 1950களில் இசை மற்றும் இலக்கியத் துறையில் புகழ்ப் பெற்றிருந்த தமிழக ஆளுமைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களைப் பற்றியும் அவர் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.

1950களில் மீலாத் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், பதம் பாடுதல், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் மாத்தளையில் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்த பிரபல பாடகர்களை வரவேற்று உரிய மரியாதை செலுத்துபவர்களாக மாத்தளைவாசிகள் இருந்தார்கள். தமிழகத்து பிரபலங்கள் இலங்கை வரும்போதெல்லாம் அங்குள்ள பத்திரிக்கைகளும் அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளையும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் வரைந்தன.

கவ்வாலி பாடல்களும் மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே இசை ரசிகர்களை உருவாக்கியிருந்தன. இலங்கைக்கு வரும் இந்திய பாடகர்கள் மாத்தளைக்கு வருவது வழக்கமாக இருந்தது. இங்கு பாட்டுக் கச்சேரிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டன. இப்படி மாத்தளையில் பாடியவர்களில் மலாங் பாய், கலீபுல்லாஹ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காரைக்கால் தாவூத் இலங்கைக்கு 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போய் வந்த வண்ணமிருந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு உருவாகியிருந்தனர்.

“இத்தகைய பிரபல இஸ்லாமியப் பாடகர்களின் வருகையினால் மாத்தளையில் உருவான சிறந்த பாடகர், தன் வாழ்க்கையையும் தன் சொத்தின் பெரும் பகுதியையும் இஸ்லாமிய இசைக்காகவே அர்ப்பணித்தவர் மர்ஹூம் சேகு தாவுத் மாஸ்டர் ஆவார்” என்று தன் நூலில் ஏ.ஏ.எம். புவாஜி குறிப்பிடுகிறார் .

தாஸிம், கே.எம். எஸ். தெளவ்தான், கே.எம்.எஸ். சல்சபீல் போன்றோர் தமிழகத்து பாடகர் காரை ஏ.எம்.தாவூத் மாஸ்டர் அவர்களின் இசையால் உந்தப்பட்டு இசைத் துறைக்குள் புகுந்தவர்கள் என்று இலங்கை எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“புதையல் மூட்டையின் மேல் அமர்ந்துக்கொண்டே நாம் புதையலைத் தேடுகிறோம்” என்று கவிக்கோ சொல்வதைப் போல நாகூர்க்காரரின் பெருமை இலங்கையைச் சேர்ந்தவர்கள் சொல்லித்தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாவூத் நானா என்று உள்ளுர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் மிகவும் நேசிக்கப்பட்டார். முதல் மனைவி மறைந்ததும் இரண்டாவது திருமணம் புரிந்துக் கொண்டார், இவருக்கு மூன்று ஆண், ஒரு பெண் வாரிசுகள். மூத்த மகன் “ஷாஹா” என்றழைக்கப்படும் D, ஷாஹுல் ஹமீது என் பால்ய காலத்து நண்பர். பாடகருடைய சொந்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அவரிடமிருந்து பெறப்பட்டவை.

காரை தாவூத் போன்று இன்னும் எத்தனையோ இசைத்துறை ஆளுமைகள் கண்டுக்கப்படாமலேயே மறைந்தும் போய் விட்டனர். சிலர் இன்றும் மறக்கப்பட்டு வாழ்கின்றனர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் வாலை மணி ஆசானிடம் முறைப்படி சங்கீதம் பயின்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் சீறா விளக்கவுரை பாடல்களை தனது கம்பீரக் குரலால் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவர் இஸ்லாமியப் பாடகர் குமரி அபூபக்கர் அவர்கள்.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு இவருக்கு அழைப்பே கொடுக்கப்படவில்லை என்பது விநோதம்.

#அப்துல்கையூம்

 

இலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்


தமிழ் நாட்டு பிரபலங்களுக்கு குறிப்பாக அவர்கள் இசைத்துறை, திரைப்படத்துறை, இலக்கியம், அரசியல் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து கெளரவித்து உரிய மரியாதைச் செலுத்துவதில் இலங்கை தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என நான் சொல்வேன்.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து “தாரகை” என்ற இதழ் 01.04.1953 அன்று வெளியிட்ட ஒரு செய்தியை படிக்கையில் நாகூர் ஹனிபாவுக்கு இலங்கை நாட்டில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்பதை நாம் நன்றாக அறிந்துக் கொள்ள முடியும் .

“இசைமுரசு ஜனாப் ஹனீபா ஏப்ரலில் இலங்கை வருகிறார்” என்ற தலைப்புச் செய்தியுடன் அவரைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.. இச்செய்திகள் யாவும் 100 நூல்களுக்கு மேல் எழூதியிருக்கும் வரலார்றாசிரிய செ.திவான் ஆய்ந்து முறையே ஆதாரத்துடன் வெளியிட்ட செய்திகளாகும் . இலங்கை “தாரகை” இதழில் வெளியான அச்செய்தியை ஒரு வரி கூட மாறாமல் அப்படியே தந்திருக்கின்றேன்.

//தமிழக இளம் பாடகர்களிலே தோழர் ஹனிபாவும் ஒருவர். இருபத்தைந்து ஆண்டுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் “இசைமுரசு” என்ற பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல, எழுச்சி எண்ணங் கொண்ட சீர்த்திருத்தவாதியுங் கூட. பாடகர்களில் பலர் ஏதோ ஒரு காரியத்திற்காக அதுவும் பழமைப் பிடிப்புகளிலே பதுங்கி நின்று பணியாற்றும் பரம பக்தர்களாக காட்சியளிப்பார்களே தவிர , நாட்டுக்கு, மொழிக்கு, சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் பயன்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பழமை விரும்பிகளுக்கு மத்தியிலே ஏற்படுவது எதிர்ப்பு..

தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் தமிழ்ப் பாட்டுக்களைத்தான் பாட வேண்டும் என்று 1928-ம் ஆண்டு, காலஞ்சென்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் தமிழிசைக் கழகம் தமிழ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்குப் பல கட்சியினர்களின் ஆதரவும் கிடைத்தது மட்டுமல்ல மூக்கால் பாடும் முசிரிகளும் ஆங்காரக் குரல் அரியக் குடிகளும் “அழகு தமிழிலே பாடினால்தான் மரியாதை” என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அந்த இயக்கம் மதிப்புப் பெற்றது. இன்னும் ஒரு சிலர், தமிழில் ஒழுங்கான இசை நுணுக்கங்கள் இல்லை என்று கூறி தெலுங்கிலும் ஹிந்தியிலும் பாடிக்கொண்டலைவதும் ஆச்சரியம்தான்.! பிற மொழிகள் பேரிலுள்ள துவேஷத்தால் தமிழ்ப்பாடல்தான் பாட வேண்டுமென நான் கூறவில்லை. அந்த மொழிப் பாடல்கள் நம்மை திட்டாமலாவது இருக்கின்றதா என்பதுகூட தெரியாமல் தலையை அசைத்து ரசிப்பதில் அர்த்தமில்லை என்பதாகக் கூறுகிறேன்.

“செந்தமிழில் இசைப்பாடல்கள் இல்லையெனச்
செப்புகின்றீர் மானமின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில்
வீழ்ந்துயிரை மாய்த்தலன்றி
எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே
உடையில்லை என்பதுண்டா?”

என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார் நமது அன்புக் கவிஞர் பாரதிதாசன்,

“கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ் நூற்கள்
ஆராய்ந்து கிழித்திட்டீரோ?
புளியென்றால் புலியென்றே உச்சரிக்கும்
புலியீரே புளுக வேண்டாம்
துளியறிவும் தமிழ் மொழியில் உள்ளதுவோ
பாடகர்க்கு சொல்வீர் மெய்யாய் !”

என்று கனல் கொப்பளிக்க தமிழ் பாடல்களில் இசையில்லை என என்ணுகின்ற பாடகர்களை பார்த்துக் கடாவுகின்றார் புரட்சி வேந்தன்.

கவிஞரின் கருத்துப்படி தமிழ் பாக்கள்தான் பாட வேண்டும் என்ற எண்ணத்தினரைக் கொண்ட முற்போக்காளர் படைவரிசையில் நிற்பவர் தோழர் இசைமுரசு ஹனீபா அவர்கள். இனிமையான குரலமைப்பு, அவர் கையாளும் முறையே தனிச்சுவை தரும்.! சமீப காலங்களில்தான் தமிழ்ப் பட உலகு அவரை நாடியிருக்கின்றது. சில வாரங்களில் வரப்போகும் அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசலிலும், திருமதி ராஜகுமாரியின் வாழப் பிரந்தவளிலும் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கின்றார். சென்ற மாதம்தான் இசைத்தட்டில் அவர் குரலை வெளியிட ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். வருங்காலம் ஒரு சிறந்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்குமென எதிர்ப்பார்க்கலாம். இலங்கைக்கு அவர் சமீபத்தில் வருகிறாரென்ற செய்தி இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் தோழர் ஹனீபா இலங்கையில் ஒரு சில கச்சேரிகளில் கலந்துக் கொள்வாரெனத் தெரிகிறது.//

தமிழகத்து பாடகர் ஒருவர் தனது இனிமையான குரலால் இலங்கை வாழ் தமிழர்கள் மனதில் எத்தகையவொரு தாக்கத்தை 1950களில் உண்டு பன்ணினார் என்பது இந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து நான் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.

கச்சேரி என்றால் தெலுங்கு கீர்த்தனைகள்தான் என்றிருந்த நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்ட பாடகர்களில் நாகூர் ஹனிபாவும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அதே சமயம் நாகூர் ஹனிபாவைப் பற்றி தவறான புரிதல்கள் கொண்ட எழுத்தாளர்களும் இலங்கையில் இருக்கத்தான் செய்தார்கள். இலங்கை “தினகரன்” பத்திரிக்கையில் மான மக்கீன் என்ற மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபா மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதலுக்கு ஜூன் 4,2010 அன்று நான் ஒரு மறுப்புக் கடிதம் எழுத நேர்ந்தது.

“நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று திரு. எஸ்.ஐ.நாகூர் கனி என்பவர் இலங்கை தினகரன் பத்திரிக்கையில் ஒரு பரிந்துரை செய்திருந்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபாவுக்கு பாடல் எழுதித் தந்தவர்களை உயர்த்தியும், பாடகரை தரக்குறைவாக விமர்சித்தும் கட்டுரை (27.09.2009) ஒன்றை வரைந்திருந்தார். அவருடைய கடுமையான விமர்சனம் இலங்கை எழுத்தாளர்கள் பலரை அப்போது வெகுண்டெழ வைத்தது.

எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு..மானா மக்கீன் “தினகரன்” பத்திரிக்கையில் தொடுத்த குற்றச்சாடுகள் இதோ:

//“நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை அ.மா.சாமியின் ஆய்வில் வெளிவந்த பிறகு புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை”//

//“அவருக்கு பாடல்கள் எழுதி கொடுத்தவர்களை அவர் பிரபலப் படுத்தவில்லை”//

/“நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களை ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு”//

//“நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை”//

//“ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்”//

//”குரல்தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்”//

//“தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் (நாகூர் ஆபிதீன், நாகூர் சலீம்) இருவருமே!”//

//“ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள்தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும்”//

//“இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.”//

//“பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்”//

//“ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.”//

//“புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.”//

ஆக இறுதியில் அவர் வைத்த குற்றச்சாட்டு வாயிலாக எழுத்தாளருடைய நோக்கத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. புலவர் ஆபிதீனை பற்றிய அவரது நூலை விளம்பரப் படுத்த வேண்டி நாகூர் ஹனிபாவை கடுமையாக விமர்சித்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவருடைய கட்டுரையில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன. “முதுமையில் சலீம் அவர்கள் வறுமையில் உழன்றுக் கொண்டிருக்கிறார்” என்று அப்போது இலங்கையில் வசித்த அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இறைவன் புண்ணியத்தில் சலீம் மாமாவும் அவருடைய வாரிசுகளும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சலீம் மாமா வறுமையில் உழலவில்லை.

மக்கள் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள்” என்றும். நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “சிவாஜியின் தத்துவப் பாடல்கள்” என்றும் எழுதும்போது, இசைமுரசுக்காக எழுதப்பட்ட பாடல்களை “ஹனீபாவின் பாடல்கள்” என்று அழைப்பதில் என்ன தவறு?

நாகூர் ஹனிபா அவர்கள் ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு சிற்றுரை நிகழ்த்துவார். யாரெழுதிய பாடல், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்ட்து, எப்போது இசைத்தட்டு வெளியாகிறது போன்ற விவரங்கள் அதில் அடங்கியிருக்கும் . மற்ற பாடகர்களிடம் இல்லாத பழக்கம் அது. இறுதிநாள் வரை புலவர் ஆபிதீனை தனது “குருநாதர்” என்றே அழைத்து வந்தார். எனவே பாடல் எழுதிக் கொடுத்தவரை அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவில்லை என்பதெல்லாம் பொருந்தாத வாதம்.. கோரஸ் பாடியவர்களைக்கூட அவர் மேடையில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. .

அவர் பாடிய அனைத்து இசைத்தட்டுகளிலும் பாடலை எழுதியது யார் என்ற விவரங்கள் இருக்கும்..

ரத்த வாந்தி எடுத்து இனிமேல் பாடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் கூட வாழ்நாளெல்லாம் மூச்சுப் பிடித்துப் பாடி தன் வெண்கலக்குரலால் தமிழர் இதயங்களில் நிறைந்து நின்ற அவரை தரக்குறைவாக எழுதியவர்களின் செயல் ஒரு கரும்புள்ளி என்றுதான் நான் சொல்வேன்

 

நாகூரும் நற்றமிழும் பாகம் -1


 

நாகூரில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை தொடராக எழுதலாம் என ஒர் எண்ணம்.

“ரொம்பத்தான் இஹ பீத்திகிறாஹா. எங்க ஊருலேயும்தான் இப்படிச் சொல்லுவாஹா” என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் இல்லை,.

“பீத்திக்கிறீங்க” என்று சொல்றீங்க பாத்தீங்களா இதுவும் தூய தமிழ்ச் சொல்தான். பீற்றுதல் என்றால் அகம்பாவத்துடன் பெருமை பேசுதல்.

நான் நாகூரோடு சம்பந்தப்பட்டவனாதலால் நானறிந்த வட்டார வழக்கைத்தான் நான் சொல்ல முடியும்.. உங்கள் ஊரோட சம்பந்தப்பட்ட சொல்லாடல்களை நீங்களும் தாராளமாக பகிரலாம். இதில் பீத்திக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே சார்.

நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்.

“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”

“எனக்கு உடம்புக்கு ஏலல”

நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.

“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று

இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:

எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து

இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.

இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.

“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.

“நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி” (புற:376:11).
“நல்கும் வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கு வாய் ஒல்கல் உறும்” (தி.நூ:17:3).
“நைந்து வீழும் முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்தே” (கோவை:61).: “தேய்ந்த நுண்ணிடை நைந்து உகச் செப்பினை” (சீவ:3:270).

இதுபோன்ற சொல்லாடல் பழந்தமிழ்ப் பாடல்களில் நாம் கான முடிகின்றது.

“ஏலலே” என்பது சங்கத்தமிழ்ச் சொல் என்பதை உங்களுக்கு நான் புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.

– அப்துல் கையூம்

(இதில் சில கருத்துக்கள் ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் நான் எழுதியதுதான்)

 

மகாதேவி படத்தில் வசனங்கள் எழுதியது யார்?


Screenshot_20191006_181155

Screenshot_20191006_181221
நான் கவிஞர் கண்ணதாசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன். அவரது மகன் கலைவாணன் கண்ணதாசன் பள்ளியில் என்னுடன் படித்தார் என்பதால் கவிஞரின் விட்டுக்கு மூன்று முறை சென்று அவரைச் சந்தித்துப் பேசிய அனுபவங்கள் உண்டு. என் பள்ளியில் கவிஞர் நாஞ்சில் ஷா ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் கவிஞர் கண்ணதாசன் தலைமை தாங்க “அழுகை” என்ற என் முதல் கவிதையைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றதை என்னால் மறக்க முடியாது.

இப்போது நேராக விடயத்திற்கு வருகிறேன். கவிஞரின் அன்புத் திருமகன் அண்ணாதுரை கண்ணதாசன் , கலைவாணனுக்கும் இளைவர். அவருக்கு பழைய விடயங்களை அவர் படித்தோ அல்லது கேட்டுத்தான் தெரிந்திருக்க வேண்டும்., அவர் சொல்வதெல்லாம் வரலாறு ஆகிவிடும் என்பதல்ல.
என் பிரியமான நண்பன் கலைவாணன் கண்ணதாசன் துரதிருஷ்டவசமாக உயிரோடில்லை. ஒரு விபத்தில் மரணமுற்றார்.

(எனக்கு கவியரசருக்குமிடையே இருந்த நெருக்கத்தை ஏற்கனவே “வல்லமை” இதழில் எழுதியிருக்கிறேன். முதல் கமெண்டில் அதன் சுட்டி இணைத்துள்ளேன்)

அண்மையில் தினத்தந்தி பத்திரிக்கையில் மகாதேவி படத்தில் வரும் “பஞ்ச் டயலாக்” அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை என எழுதியுள்ளார். “தினத்தந்தி” போன்ற பத்திரிக்கை எப்படி எதுவும் ஆராயாமல் பிரசுரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதற்கு முறையான மறுப்பை வெளியிட வேண்டுகிறேன்.

மகாதேவியில் எழுதிய “பஞ்ச் வசனங்கள்” யாவும் நாகூர் ரவீந்தர் (காஜா மொய்தீன் எழுதியது என்பதில் துளியளவும் ஐயமில்லை. மகாதேவியில் வசனங்கள் எழுத எம்.ஜி.ஆர் நியமித்தது ரவீந்தரைத்தான்.

அக்காலத்தில் பிரபல இயக்குனராகத் திகழ்ந்த சுந்தர்ராவ் நட்கர்னி, விஜயா வாகிணி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த தன்னுடைய மைத்துனர் பி.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தானே தயாரிக்க விரும்பி எடுத்த படம்தான் “மகாதேவி” .

எம்.ஜி.ஆர். அவர்கள் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ரவீந்தரை வசனம் எழுத சிபாரிசு செய்தபோது நட்கர்னி மிகவும் தயங்கினார். ரவீந்தர் படவுலகுக்கு புதியவராக இருந்ததாலும். பிரபலம் இல்லாததாலும் ஏற்பட்ட தயக்கமிது.

எனவே கண்ணதாசன் பெயரை வசனம் என்று டைட்டிலில் போட்டு ரவீந்தரின் பெயரை “வசனம் உதவி : ‘இன்பக்கனவு’ ரவீந்தர்” என்று காண்பிக்க முடிவானது.

ரவீந்தர் புகழ் விரும்பி இல்லாததாலும் கவிஞர் கண்ணதாசனின் தீவிர ரசிகராக இருந்ததாலும் “இது அருமையான முடிவு” என்று தன் கருத்தை வெளியிட்டார். மகாதேவியின் வசனங்கள் கவிஞரின் மேற்பார்வையிலும் , அவரது சிறு சிறு திருத்தங்களாலும் வெளியானது. ரவீந்தரின் வசனம் எழுதும் திறமையைப் பார்த்து கவியரசரே வியந்து வாழ்த்தினார் என்பதே நிதர்சனமான உண்மை.

தம்பி அண்ணாதுரை கண்ணதாசன் கலைமாமணி வாமனன் 22.01.2018-ல் தினமலர் பத்திரிக்கையில் எழுதிய “நிழலல்ல நிஜம்” என்ற தொடரிலிலிருந்துதான் அத்தனை தகவல்களையும் திரட்டி எழுதியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் வாமனன் அதில் ரவீந்தர் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். அண்ணாதுரை கண்ணதாசனின் எழுத்துக்களில் அவர் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது எல்லா இயக்குனர்களும் “பஞ்ச் டயலாக்” அவசியம் இடம்பெற வேண்டும் என்று கேட்கிறார்கள். அக்டோபர் 2, 2014-ல் நான் எழுதிய என் வலைப்பதிவில் “பஞ்ச் டயலாக்”கின் முன்னோடி ரவீந்தர் என எழுதியிருந்தேன். இப்பொழுதும் அதையே நான் முன் மொழிகிறேன், மறுப்பவர்கள் தாராளமாக விவாதிக்க வரலாம்.

“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்”

“மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி”

போன்ற ‘பஞ்ச் டயலாக்’குகள் இன்னும் இளைஞர்களிடையே “வைரல்” ஆகிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. பி.எஸ்.விரப்பாவின் அந்த வில்லத்தனமான சிரிப்பும், வெடித்து பிழம்பாய் விழும் வீர வசனத்தையும் மறக்கத்தான் முடியுமா?”

“அத்தான்…..”
“அப்படிச் சொல்..அத்தான்…. இந்த வார்த்தையைக் கேட்டு கருணாகரன் செத்தான்”

“சொல்லுக்கெல்லாம் சக்தி இருந்தால் இந்த உலகம் என்றோ அழித்திருக்கும்”

“ஆத்திரமே நீதிபதி ஆகி விட்டால் அங்கு அறிவுக்கு இடமில்லை மன்னா..!”

“இந்தக் காதல் ஒரு பாதி அல்ல. சரிபாதி”

“உங்களுக்கு கண்ணிலே இதயம். எனக்கு இதயத்திலே கண்”

“கற்புக்கு நெருப்பு துணை என்பதை அறியாத கயவனே!”

இதுபோன்று எத்தனையோ வசன மழையில் “மகாதேவி”யில் நனைய முடியும்

OCT 2, 2014-ல் நான் என் வலைப்பதிவில் எழுதிய ஒரு பகுதியை மட்டும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,

//1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான “குலேபகவாலி” வெளிவந்தது. அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது. அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது. கதை-வசனம் கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும் “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.

1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.

1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்” படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.

1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்” படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் டைட்டிலில் காண்பிக்கப்படும்.

அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன. எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.

1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில் கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள். ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.

1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?

#அப்துல்கையூம்

(இப்பதிவையும் சிலர் என் பெயரை நீக்கிவிட்டு தாங்கள் எழுதியதாக “காப்பிரைட்” போட்டு பத்திரிக்கையில் பிரசுரிக்கக் கூடும்)

 

 

 

நாகூர் தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா


1

2

இன்று (17.07.19) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நாகூர் தமிழ் சங்கத்தில் கவிஞர் சாதிக் நானா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். அவருக்கு ஒட்டு மொத்தமாக திரண்ட 96000 ரூபாய்கள் வழங்கப்பட்டன. என் மூலமாக வந்த ரூ 42000/- யும் சேர்த்து தாராளமாக அன்பளிப்பு செய்து உதவிய சிங்கப்பூர் வாழ் என் தம்பிகள் தீன், நிஜாம் மற்றும் முஸ்தஃபா மாமா, சகோதரர் அபூபக்கர், தம்பி அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் பிலால் மூலம் அன்பளிப்பு செய்த தம்பி ஜாஃபர் சாதிக், பெயர் சொல்ல விரும்பாத ஒரு சகோதரர் ஆகியோருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், பரக்கத்தையும் அருள்வானாக ஆமீன்.

சாதிக் நானாவோடு சேர்த்து இரண்டு பேர் கௌரவிக்கப்பட்டார்கள். ஒருவர் பேரா. ஜெயச்சந்திரன் என்பவர்.இன்னொருவர் தமிழக அரசின் தமிழ் அறிஞர் விருது பெற்ற எழுத்தாளர் ஜி.அஹ்மது. இவர் எனக்கு நெருங்கிய உறவினர் என்பது அவரோடு பேசிய பிறகுதான் தெரிய வந்தது எனக்கு! என் மாமா அறிஞரும் பன்மொழி வித்தகருமான மர்ஹும் ஹுசைன் முனவ்வர் பேக் அவர்களோடு வேலை பார்த்ததாகவும் கூறினார். என் அக்கா மகளின் மாமானாரும் கூட!

நாகை மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு. ராஜசேகரன் வந்திருந்து விருது வழங்கினார். அவர் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்! சார் ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் வரமுடியவில்லை.

சகோதரர்கள் மாலிம், நிஜாம், வி.சாதிக், காதரொலி ஆகியோர் பேசினார்கள். காதரொலி சாதிக் நானாவின் பைத்து சபா பாட்டொன்றையும் பாடிக்காட்டினார்! அவர் பாடகராகப் போயிருக்கலாம். கவிதையாவது தப்பித்திருக்கும்! வி. சாதிக் பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி நிறைய பேசினார். அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற முதுகெலும்பாக இருந்த நண்பர் ஹுசைன் மாலிமுக்கும், அவர் தம்பி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுக்கும், நண்பர் நூர் சாதிக்குக்கும், காதரொலிக்கும், வி. சாதிக்குக்கும் என் சிறப்பு நன்றிகள்.

நாகூர் பற்றிய தகவல்களைக் கொட்டி வைத்திருப்பவர்கள் இரண்டு நாகூர்க்காரர்கள். அப்துல் கய்யூம், ஆபிதீன், இருவர் ஏற்படுத்தி வைத்துள்ள இணைய வலைத்தளங்களும் பொக்கிஷங்கள். அவற்றில் இருந்த சில விஷயங்களையும் நான் ’அல்லாஹ்வை நாம் தொழுதால்’ என்ற சாதிக் நானாவின் கவிதை நூலுக்காக பயன்படுத்திக்கொண்டேன். முக்கியமாக கய்யூமின் ஒரு கட்டுரையை அப்படியே – அவர் பேரில்தான் – நூலில் பயன்படுத்தியும் உள்ளேன். நூல் வடிவமைப்பு, அச்சிடல் போன்ற விஷயங்களில் உதவியவர் நண்பர் கவிஞர் யாழன் ஆதி.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இறைவன் மேலும் மேலும் நாகூரின் பொக்கிஷமாய் உள்ள படைப்பாளிகளை உலகுக்கு வெளியில் கொண்டு வர உதவி செய்வானாக.

நாகூர் ரூமி

 

நாகூர் ஆஸாத்


Screenshot_20190723_173414 (1)

நாகூர் பல ஆளுமைகளையும் , பல்வேறு விசித்திரமான குணநலன் கொண்ட நபர்களையும் கண்டுள்ளது. எனது இளம் பிராயத்தில் இதுபோன்ற பலபேர்களைக் கண்டு வியந்துள்ளேன்.

நாகூரில் பெரும்பாலானோர் கைலி அணிந்து வீதியில் வலம் வரும் காலத்தில் ஒரே ஒருவர் மட்டும் முழங்கால் வரை அரை டிராயர் அணிந்து , ஆங்கிலேயர் போல் வாயில் பைப் வைத்து புகைத்த வண்ணம்,  கையில் வாக்கிங் ஸ்டிக் சகிதம் ஸ்டைலாக நடந்து வருவார். சில சமயம்அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது OPEL வாகனத்தில் அவரே ஒட்டிக்கொண்டு உலா வருவார்.

அவர் பெயர் அபுல் கலாம் ஆஸாத். பெயருக்கேற்ற மிடுக்கு. அசால்ட்டான பார்வை.’ஹாய்’யான நடை. மிகவும் கெளரவம் பார்ப்பவர். யாரிடமும் அநாவசியாமாக  உரையாட  மாட்டார். அளவோடு பேசுவார்.

இவர் சிங்கப்பூரில் மிகப்பெரிய கஸ்டம்ஸ் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர்.  யாரோ ஒருவர் அவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தவர். லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியென சிங்கப்பூர் அரசாங்கத்திடம் நற்பெயர் பெற்றவர்.

பல காலம் சிங்கப்பூரில் பணிபுரிந்தபின் ஓய்வூதியம் பெற்று தாயகத்திற்கே திரும்பி வந்து தனது வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தவர். இளமை பருவத்தில் இந்தியாவின் முன்னாள் ராணுவ மந்திரியாகவும் பொருளாதார மந்திரியாகவும் இருந்த சி,சுப்பிரமணியனின் முகசாயலில் இருப்பார்.

தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தவர். அதே சமயம் நுனிநாக்கில் ஆங்கிலம்  சரளமாகப் பேசத் தெரிந்தவர். தமிழ் மீது கொண்டிருந்த பற்றால் தன் மகனுக்கு செல்வமணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். தன் மகனுக்கு தன்னைப்போன்று நல்ல ஆங்கிலமும்  கற்பிக்க வேண்டுமென ஊட்டி லவ்டேல் பகுதியிலுள்ள “தி லாரன்ஸ் கான்வெண்ட்”டுக்கு அனுப்பி வைத்தவர்.

இவரிடம் தமிழில் உரையாட வேண்டுமென்றால் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றாலும் கலப்பில்லாமலேயே பேச வேண்டும். ஆங்கிலம் பேசுகையில் தமிழ் வார்த்தையையும், தமிழில் பேசுகையில் ஆங்கில வார்த்தையையும் கலந்து பேசினால் இவருக்கு கோவம் வந்துவிடும்.

பெரும்பாலான வேளைகளில் தந்தையும் மகனுமாக கடைத்தெருவிற்கும், என் வீட்டுக்கு எதிரே இருக்கும் செய்யது பள்ளிவாயிலுக்கும் நண்பர்களைப்போல ஒன்றாக உரையாடிக் கொண்டே வருவார்கள்.

“பிள்ளை நம் தலைக்கு மேல் உயர்ந்தால் தோழன்” என்று தன் நண்பர்களிடம் சொல்வாராம்.

இவரைப் பற்றி குறிப்பிடத்தக்க வேறொரு தகவலும் உண்டு. இவர் திருமணம் முடித்தது பாரம்பர்யமிக்க எழுத்தாளர் குடும்பத்தில். இவரது மாமியார் சித்தி ஜுனைதா பேகம்.   தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர். புரட்சி பெண்மணி சித்தி ஜுனைதாவின்  தாத்தா தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்த மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர்.

சித்தியின் மூத்த சகோதர் அறிஞர் அண்ணாவால் புகழப்பட்ட பன்னூல் அறிஞர் ஹூசைன் முனவ்வர் பெய்க். இன்னொரு சகோதரர் முஜீன் பெய்க் “பால்யன்” பத்திரிக்கை ஆசிரியர். இக்குடும்பத்தில்  பிறந்த எத்தனையோ தமிழறிஞர்கள் உண்டு. வண்ணக் களஞ்சிய புலவர் வழிவந்த சித்தி அவர்களின் குடும்பத்திற்கு கவிஞர் நாகூர் சலீம், பன்னூலாசிரியர் நாகூர் ரூமி, திரைப்பட எழுத்தாளர் தூயவன் ஆகியோருக்கு நெருங்கிய உறவுமுறை உண்டு

இது அபுல் கலாம் ஆசாத் அவர்களைப் பற்றிய பதிவு என்பதால் மற்ற விடயங்களை நான் விவரமாக குறிப்பிடவில்லை.

#அப்துல்கையூம்

 

 

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும்- தொடர் – 18


ரவீந்தரும் எம்.கே முஸ்தபாவும்

mustafa

“முஸ்தபா! முஸ்தபா! டோன்ட் வொர்ரி முஸ்தபா!!” பாடல் பாடும் இளைய தலைமுறையினருக்கு எம்.கே.முஸ்தபாவைப் பற்றி தெரிந்திருக்க அறவே வாய்ப்பில்லை.

எம்.கே.முஸ்தபா என்பவர் யார் என்று நான் சொல்வதற்கு முன்பு ஒரு சிறிய ப்ளாஷ்பேக் தேவைப்படுகிறது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அறிமுகம் செய்து வைத்த கவி கா.மு.ஷெரீப் அவர்களைப்போல, காஜா மொய்தீனை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் டணால் கே.தங்கவேலு அவர்கள்.

1953-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு நடிகர் தங்கவேலு அவர்களுடைய சிபாரிஸின் பேரில் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் செல்கிறார் காஜா மொய்தீன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது லாயிட்ஸ் சாலையில் (தற்போது ஒளவை சண்முகம் சாலை) 160-ஆம் எண் இல்லத்தில் குடியிருந்தார். கருப்பு நிற டாட்ஜ் காரை அனுப்பி ஓட்டுனர் கதிரேசனிடம் காஜா மொய்தீனை அழைத்து வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

வீட்டு வாசல் முகப்பில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி, சின்னவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் இடையே காஜா மொய்தீனை பணிக்கும் அமர்த்தும் தேர்வில் நடுவில் வீற்றிருந்தவர் யார் தெரியுமா? சாட்சாத் இந்த எம்.கே.முஸ்தபாவேதான். எம்.ஜி.ஆரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பெரியவர் எம்.ஜி.சக்கரபாணியின் பாசத்திற்குரியவர்.

“வாங்க.. வாங்க….” என்று அன்புடன் அழைத்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரச் சொல்கிறார் எம்.ஜி,ஆர்.

எம்.ஜிஆர் அவர்களின் உபசரிப்பை விவரிக்கையில் இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவது கலீபாவான உதுமான் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தனது பதிவொன்றில் நினைவு கூர்கிறார் இவர்.

“உலகில் பெரிய பண்பு எது?” என்று கலீபா உதுமான் அவர்களிடம் கேட்கிறார் ஒருவர்.

“நம்மைத் தேடி வருபவர்களை உட்கார வைத்து பேசுவது” என்று வருகிறது கலீபாவின் பதில்.

இந்தச் சொல் என் நினைவுக்கு வந்தது என்று மனம் நெகிழ்ந்துப் போகிறார் பணித்தேர்வுக்குச் சென்ற காஜா மொய்தீன்.

வேலை தேடி வந்த அவரிடம் எம்.ஜி.ஆர். தொடர்கிறார். “உங்க ஊர் பெயரை தங்கவேலு சொன்னார். முஸ்லீம் மதத்தில் பிறந்த உங்கள் எழுத்து, தமிழுக்கு ரொம்ப சிறப்பைத் தருவதாக இருக்குதுன்னு சொன்னாரு. இவங்களும் உங்க இனம்தான் எம்.கே.முஸ்தபா, எங்க குடுமப நண்பர்.” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.

காஜா மொய்தீனைப்பற்றி பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எம்.கே.முஸ்தபா மேலும்சில தகவல்களை பகிர்கிறார், “சுதந்திர நாடு தின இதழில் இவர் நிறைய எழுதி வருகிறார். அதுமட்டுமின்றி பூவிழி என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தவர்”

“முஸ்தபா சொல்வதைப் பார்த்தால் நீங்க ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நல்லா எழுதியிருக்கீங்க. இனிமேலும் பெரிய சந்தர்ப்பங்கள் வரலாம். உங்க சொந்த பெயரில் எழுதுவதைவிட ஒரு பொதுப் பெயரிலே எழுதினா நல்லாயிருக்கும். அதனால பெயரை மாத்தி வச்சுக்கிறீங்களா?”

“உங்க இஷ்டம். மாத்தி வைங்க” என்கிறார் காஜா மொய்தீன்.

“உங்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்?. பெரியவங்களா இருக்கணும்” – இது எம்.ஜி.ஆர்.

“ரவீந்திரநாத் தாகூரை எனக்குப் பிடிக்கும். அவுங்க கதை கவிதைங்க நிறைய படித்திருக்கிறேன்”

“சரி. அவர் ரவீந்திரநாத் தாகூர். நீங்க தாகூர்”

“ஆகா.. நாகூரிலிருந்து வந்த தாகூர், நல்ல பெயர்ப் பொருத்தம்” என்று சிரித்தபடியே சொல்கிறார் முஸ்தபா.

“நாத், வேண்டாம். உங்க பேரை ரவீந்தரன் என்று வச்சுக்குங்க” என்கிறார் பெரியவர் எம்.ஜி,சக்கரபாணி

“சரி” என்று சம்மதித்து தலையாட்டுகிறார் இவர்.

சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு ஏதோ மனக்கணக்கு போட்டவாறு “அதுகூட வேணாம். புனைப்பெயரா தெரியணும். அதனாலே “ரவீந்தர்” என்ற பெயர் சரியா இருக்கும். அப்படிப் பார்த்தா நியூமராலஜி 6 வரும். கலைக்கு நல்லது” என்கிறார் எம்.ஜி,ஆர்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக்கொண்ட நாளில் அவருக்கும் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. பெரியவர், சின்னவர், எம்.கே.முஸ்தபா மூவரும் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.

“சரி. இனிமே உமக்கு எல்லாம் வரும். போய்ட்டு நாளைக்கு வாரும். கார் அனுப்பறோம்.” என்று வழியனுப்பி வைக்கிறார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி.

காஜா மொய்தீனாகச் சென்ற அவர் ரவீந்தராக வீடு திரும்புகிறார். ஒளிமயமான எதிர்காலம் அவர் உள்ளத்தில் தெரிகிறது

இப்போது எம்.கே.முஸ்தபாவின் கலைத்துறை வாழ்க்கையை சற்று பார்ப்போம். ரவீந்தருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த எம்.கே.முஸ்தாபாவின் பெயரும் பெரிதாக வெளியில் தெரிய வரவில்லை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். இயக்குனர் சமுத்திரகனியின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “இந்த இருவருமே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட்டார்கள்’.

1940-1980-களில் எம்.கே ராதா, எஸ்.எஸ்.ஆர். எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், கே.ஆர்.ராமசாமி போன்ற முன்னணிக் கலைஞர்கள் பலருடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகரான எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகத் திகழ்ந்தவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றம் ரவீந்தரின் வருகைக்குப் பிறகு சூடு பிடித்தது. ‘இடிந்த கோயில்’, ‘இன்பக்கனவு’, ‘அட்வகேட் அமரன்’, ‘ஆசை நினைவு’, ‘பகைவனின் காதலி’ என அடுத்தடுத்து நாடகங்கள் தொடர்ச்சியாக அரங்கேறின
.
“எம்.ஜி.ஆர் நாடக மன்றம்” உருவான துவக்க காலத்திலிருந்தே எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றியவர். எந்த வேடங்கள் கொடுத்தாலும் அது சிறிய வேடமாக இருந்தாலும் சரி முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, முகஞ் சுழிக்காமல் திறம்பட நடித்து ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தவர். அவருடைய குரல் கம்பீரமாக இருக்கும். அலட்டிக் கொள்ளாமல் நடிப்பவர். படிப்பிடிப்பின்போது சொன்ன நேரத்திற்கு முன்கூட்டியே ஆஜாராகிவிடும் பழக்கத்தைக் கொண்டவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் நடிக்க வருவதற்கு முன்ப்பு காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த “ஸ்ரீ ராம பால கான வினோத சபா” என்ற நாடகக் கம்பேனியில் எம்.கே.முஸ்தபா நடித்து வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், “சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம்.எஸ்.எஸ். பாக்கியம், கே. மனோரமா, போன்ற கலைஞர்கள் அதே சபாவில் அப்போது நடித்து வந்தனர்.

“வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எம்.கே. முஸ்தபா” என்று புகழ்மாலை சூட்டுகிறார் மறைந்த நாடக மேதை அவ்வை தி.க.சண்முகம்

எம்.கே.முஸ்தபா 40-களிலிருந்து 80-கள் வரை நடிப்புத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்திருந்தும் கூட அவர் பெயரை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம்.

99

தாயின் மேல் ஆணை படத்தில் சி.எல்.ஆனந்தன், புஷ்பவல்லி, எம்.கே.முஸ்தபா

112

”ஹரிச்சந்திரா” படத்தில் ஜி.வரலட்சுமி, மாஸ்டர் ஆனந்தன், சிவாஜிகணேசன், எம்.கே.முஸ்தபா

113

‘யார் பையன்’ படத்தில் பி.எஸ்.ஞானம், டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.கே.முஸ்தபா

111

கடவுள் மாமா படத்தில் மனோரமாவுடன் எம்.கே.முஸ்தபா

102

‘கங்கா கெளரி’ படத்தில் எம்.கே.முஸ்தபா

கே.பி.நாகபூசணம் இயக்கத்தில் ஹரிச்சந்திரா (1944)., கே.ராம்நாத் இயக்கத்தில் மர்மயோகி (1951), எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் கைதி (1951), எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ராணி (1952), கே.வேம்பு இயக்கத்தில் போர்ட்டர் கந்தன் (1955), நீதிபதி (1955),), நானே ராஜா (1956), ஆர்.ஆர்.சந்திரன் இயக்கத்தில் நானே ராஜா (1956), கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் குலதெய்வம் (1956), யார் பையன் (1957), டி.எஸ்.துரைராஜ் இயக்கத்தில் பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958), கே,ஷங்கர் இயக்கத்தில் சிவகங்கை சீமை (1959), ப.நீலகண்டன் இயக்கத்தில் திருடாதே (1961), எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கத்தில் மாடப்புறா (1962), யோகானந்த் இயக்கத்தில் பரிசு (1963), ஜி.வி.ஐயர் இயக்கத்தில் தாயின் கருணை (1965), எஸ்.ராமதாஸ் இயக்கத்தில் தாழம்பூ (1965), தேடி வந்த திருநாள் (1966), மனசாட்சி (1969), ஸ்நேகிதி (1970), கங்கா கெளரி (1973) பொன்னகரம் (1980), நீதிபதி, கே.சிங்கமுத்து இயக்கத்தில் கடவுள் மாமா (1974), தாயின் மேல் ஆணை, ரிக்ஷாக்காரன், சங்கே முழங்கு, தாயின் மடியில், பரிசு, ஏழைப்பங்காளன், சின்னஞ்சிறு உலகம், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், மற்றும் எண்ணற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்தவர்.

கிராமத்துக்காரராக, இன்ஸ்பெக்டராக, போலீஸாக, அப்பாவாக, ஒட்டுனராக, அமைச்சராக, வில்லனாக இப்படி பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்தவர்.

1985 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் கொடுத்ததோடு பொற்கிழியும் கொடுத்து இவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் இவருக்கு ‘கலைமாமணி’ பட்டம் வழங்கியபோது பத்திரிக்கைகள் இவரை மணவை முஸ்தபா என்று குறிப்பிட்டிருந்ததுதான். என்னத்தைச் சொல்ல..?

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகில் அனைத்து குணச்சித்திர வேடங்களும், துணை கதாபாத்திரங்களும் ஏற்று நடித்த ஒரு மனிதரை யாரும் நினைவு வைத்திருக்கவில்லை என்பது துரதிருஷ்டமான ஒன்று. ஒரு படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் வரும் சிரிப்பு நடிகரை ஞாபகத்தில் வைத்திருக்கும் நாம், படம் முழுவதும் வரும் துணைகதாபாத்திரங்களை நாம் கண்டுக் கொள்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அப்துல் கையூம்

இன்னும் தொடரும்

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9

எம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11

எம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 15

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 16

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 17

 

Tags: