ஆங்கிலத்தில் ‘Banana Lazy’ என்ற சொற்பதத்தை யாரும் கையாள்வதில்லை. “வாழைப்பழ சோம்பேறி” என்ற வார்த்தையை நாம்தான் பயன்படுத்துகிறோம்.
ஆனைக்கு கவளச்சோறு கொடுப்பதைப்போல் உருண்டை பிடித்து ஊட்டி வளர்ப்பது தமிழன்தான் போலும்.
“ஊரெங்கும் திண்ணைக் கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?”
என்று கண்ணதாசன் தமிழனைப் பார்த்துதானே பாடினான்?
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படித்த காலத்தில் ஜங்ஷன் அருகிலுள்ள “ஹோட்டல் டி ப்ராட்வே”யில் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. (பிளாட்பாரக் கடைக்கு பசங்க இப்படித்தான் பெயர் வைத்திருந்தாங்க).
புறாட்டாவை நாறு நாறாய் பிய்த்துப் போட்டு அதற்கு மேல் குழம்பை ஊற்றுவான் சப்ளையர். நண்பன் ஹாஜாவுக்கு சப்ளையர் பிய்த்துப் போடாததினால் வந்ததே கோபம். அப்பப்பா! ரகளை பண்ணி விட்டான்.
“அவுங்களுக்கெல்லாம் பிய்ச்சு போடுறே? எனக்கு மட்டும் பிய்ச்சு போடலே ஏன்? பிய்ச்சுடுவேன் பிய்ச்சு” என்று ரகளை பண்ணிவிட்டான். அவன் முத்தாய்ப்பாய் “பிய்ச்சிடுவேன்” என்று சொன்னது புறாட்டாவை அல்ல; சப்ளையரை.
அது போகட்டுமுங்க. சிலபேருக்கு காப்பியை கொண்டு வந்து அவர்கள் கண்முன்னே ஆற்றிக் கொடுத்தால்தான் திருப்தியே ஏற்படும். மேலே காணப்படும் இந்தப் புகைப்படம் இலங்கை புகைப்பட நிபுணர் ஒருவர் நாகூர் ஹோட்டலில் எடுத்தது. சுவரில் சாட்சிக்காக தேசத்தலைவர்கள் வேறு. அந்த புகைப்படத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால் “இப்படியொரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கிறீயே?” என்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.
இந்தப் பதிவு மட்டும் நடிகர் விவேக் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். கண்ணில் பட்டால் தன் அடுத்த படத்திற்கு தமிழனுக்கு மெசேஜ் சொல்ல இதை அபேஸ் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
– அப்துல் கையூம்