RSS

Category Archives: அப்துல் ஸமது

தமிழர் பண்பாடு


abdus-samad

சிராஜுல் மில்லத்

தமிழரின் பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு !  நினைவில் போற்றத்தக்க பண்பாடு.

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க சமுதாயத்தினர் என்று சொல்ல வேண்டுமானால், சீனர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமர்கள், அரபு மக்கள் இருந்தார்கள். நம்முடைய மக்களும் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள். பிறநாட்டினரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் தமிழனுடைய சிறப்பு பட்டெனத் தெரியும்.

சீனர்கள் தங்களைச் சீனர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மற்றவர்களை அவர்கள் பிசாசு என்று கருதினார்கள்.

கிரேக்கர்கள் தங்களை ‘சிட்டிசன்ஸ்’ (குடிமக்கள்) என்று பெருமையாக அழைத்துக் கொண்டார்கள். மற்றவர்களை “ஏலியன்ஸ்” (அன்னியர்கள்) என்று சொன்னார்கள்.

வீரம் செறிந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட ரோமர்கள் தங்களை ரோமன்ஸ் என்று பெருமையாக கூறிக் கொண்டனர். மற்றவர்களை அடிமைகள் என்று இகழ்ந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பு அரபு நாடுகளில் வாழ்ந்தவர்கள், தங்களை அரபிகள் என்று சொல்லிக் கொண்டனர். அரபிகள் என்றால் பேசத் தெரிந்தவர்கள் என்று பொருள். மற்றவர்களை அவர்கள் “அஜமிகள்” (பேசத் தெரியாதவர்கள்) – ஊமைகள் என்று அழைத்தனர்,

ஆரிய வர்க்கத்தில் வந்தவர்கள் தங்களை ஆரியர்கள் – சீரியர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மற்றவர்களை “மிலேச்சர்கள்” என்று அழைத்தார்கள். மிலேச்சர்கள் என்பதற்கு என்ன பொருள் என்பதை நான் இங்கே மொழி பெயர்க்க விரும்பவில்லை.

ஆனால் நம்முடைய தமிழ் மக்கள் எல்லோரையும் சமமானவர்களாக மதித்தார்கள். தமிழனின் பெருந்தன்மைக்கும் உலகளாவிய பார்வைக்கும், அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பிற்கும் ஒரு சின்ன சொற்றொடர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

“யாதும் ஊரே ; யாவரும் கேளிர்”. உலகம் முழுமையும் எல்லோருக்கும் பொதுவானது என்று தமிழர்கள் நினைத்தார்கள்.

மனிதன் கால் பதிக்கும் இடம் எல்லாம் அவனுக்குச் சொந்தம். அனைவரும் சகோதரர்கள்; சகவாழ்வு விதிக்கப்பட்டவர்கள் என்று தமிழர்கள் கருதினார்கள். அதனால்தான் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று சொன்னார்கள். மனிதர்கள் அனைவரும் உறவினர்கள் என்று கருதினார்கள்.  தமிழர்கள். வீடு தேடி வரும் விருந்தினர்களுக்கு அன்பை அள்ளிச் சொரிவது தமிழர் பண்பாடு.

அ.கா.அ.அப்துல் ஸமது

(உலகத் தமிழர் மாமன்றம் நடத்திய மாநாட்டின் நிறைவுநாள் விழாவில் 7.3.1993 அன்று ஆற்றிய சிறப்புரை)

-இலக்கியச்சுடர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் எழுதிய “சிராஜுல் மில்லத் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து-

 

Tags:

எம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்


எம்.ஜி.ஆருடன் நெருங்கிய பிணைப்புடைய சிராஜுல் மில்லத், அவருடைய மறைவின்போது மணிவிளக்கில் நீண்ட கட்டுரை எழுதினார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ என்ற அந்த நினைவுக் கோவையின் சில பகுதிகள் :

ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அவரே திப்பு சுல்தானாக நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு டெல்லி சென்று விட்டேன். அன்று மாலை பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சந்தித்தபோது திப்பு சுல்தான் படம் வெளிவரப்போகிறது என்றும், கதை வசனத்தை அப்துல் ஸமது எழுதுவாரென்றும் சொல்லியிருந்தார். இதை பத்திரிக்கையில் படித்த என் நண்பர்கள் தொலைபேசி மூலம் எனக்குத் தெரிவித்தார்கள். சமுதாயத்தில் இதை சில இளைஞர்கள் வரவேற்றார்கள். நானும் சினிமா உலகத்தில் மூழ்கிவிடுவேன் என்று பெரியவர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால், காயிதே மில்லத் அவர்களுக்கு நடந்த உண்மையை விளக்கியிருந்தேன்.

இந்த காலக்கட்டத்தில் நான் கோவைக்குப் போயிருந்தபோது எனக்கு வரவேற்பளித்த இளைஞர் சங்கத்தார் “திப்பு சுல்தான் திரைப்பட வசனகர்த்தாவே வருக!” என அழைப்பு விடுத்தார்கள். ஆக, என்னுடைய படவுலகப் பிரவேசம் அதோடு முடிந்தது.

ஆனாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சிறப்பாசிரியராகக் கொண்டு ‘சமநீதி’ என்ற வார இதழ் வெளிவந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் பத்திரிக்கை அங்கப்பன் நாயக்கன் தெருவில் இருந்த என்னுடைய அச்சகத்தில் அச்சிடப்பட்டதும் அதன் அச்சிடுவோராக என் பெயர்தான் வெளிவந்து கொண்டு இருந்ததும் பலபேர் நினைவில் இருக்க நியாயமில்லை.

என்னிடமிருந்த இந்த அச்சு இயந்திரத்தை நான் விற்க நினைத்தபோது எம்.ஜி.ஆர். அதை வாங்கி திரு. தென்னரசு அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். சினிமா உலகிலிருந்து நான் வெகுதூரத்தில் இருந்த நிலையிலும், அரசியல் தொடர்புடைய எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அல்லது தலைவர்களுக்கு விருந்தளித்தாலும் எம்.ஜி.ஆர். என்னையும் அழைக்காமல் இருந்ததில்லை. அவர் குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரைமணி நேரத்தில் நான் அவரைச் சென்று பார்த்தேன்.

(‘சமநிலையச் சமுதாயம்’ பத்திரிக்கையில் ஜே.எம்.சாலி அவர்கள் எழுதிய ‘இலக்கிய இதழியல் முன்னோடிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து)