RSS

Category Archives: அல்லாமா இக்பால்

நாகூரின் அல்லாமா


அல்லாமா என்றால் அறிஞர் என்று பொருள். உலக மகாகவிகளில் ஒருவரான டாக்டர் இக்பாலை “அல்லாமா’ என்ற அடைமொழியிட்டு உலகம் அழைக்கிறது.

நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம்
வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்
இரு முனையும் கூர்மையான
இளம் பிறையே எங்கள் சமூகச் சின்னம்

என்று பாடினார் அல்லாமா இக்பால். அவரைப்போல பாடல்களில் இளைஞர்களுக்கு உரமேற்றும் கவிஞனை நாம் காண இயலாது.

எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம்
எஃகைப் போல உறுதியாக இருக்கிறதோ,
அந்த இனத்துக்கு வாள் தேவையில்லை

என்று அழகாக எடுத்துரைப்பார்.

இரவின் பயங்கர இருளிலே
களைப்படைந்த என் ஒட்டகப் படையை
வழி நடத்திச் செல்வேன்;
என் மூச்சு தீச்சுடரைக் கொளுத்தும்;
என் பெருமூச்சு தீப்பொறியைக் கக்கும்

என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறி தேற்றுகிறார்.

நாகூர் புலவர் ஆபிதீனின் புகழ்பெற்ற வரிகள் அந்த மகாகவியின் வரிகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அவரது இந்த ஒரு சில வரிகளில் அவரது உணர்ச்சிகள் மாத்திரம் கொப்பளிக்கவில்லை, அதற்கும் மேலாக ஆதங்கம், வீரம், தன்மானம், இறைபக்தி, கோபம், நாட்டுப்பற்று எல்லாவற்றையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறார் அவர்.  இத்தனை சிறிய கவிதை மனித உள்ளத்திலிருந்து ஆர்த்தெழும் இத்தனை உணர்ச்சிகளை ஒன்றாக்கி உரைப்பதென்பது அத்தனை எளிதான விடயமா?

இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை

ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்

எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்

புலவர் ஆபிதீனை நாகூரின் அல்லாமா என்று அழைப்பதில் என்ன தவறு?

 

Tags:

பின்லாடனைப் பாடிய அல்லாமா இக்பால்


ஒசாமா பின் லாடனை அல்லாமா இக்பால் கவிதை பாடியிருக்கிறார் என்று நான் சொன்னால் யாரும் என்னை நம்ப மாட்டார்கள் என்பது நன்றாகவே எனக்குத் தெரியும். அவருடைய காலம் வேறு,  இவருடைய காலம் வேறு, இப்படியிருக்க இவரைப் பற்றி அவர் எப்படி பாடல் இயற்றியிருக்க முடியும் என்று வாசகர்கள் என்னை எள்ளி நகையாடலாம். டாக்டர் அல்லாமா இக்பாலின் தீர்க்கதரிசன சிந்தனைகளுக்கு இவ்வரிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம் :

முல்லாக்கள் சிலர் மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்கிறார்கள். இறைவனின் பெயரால் இஸ்லாம் எனும் உயரிய மார்க்கத்திற்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களின் மீது மகாகவிக்கு தீராத கோபம் பொங்கி வழிகிறது.

இதோ அவரது வரிகளைக் கேளுங்கள் :

“முல்லாக்கள் சொர்க்கத்துப் போக வேண்டும்
என்று இறைவன் பணித்தான்
நான் அங்கே இருந்தேன்
அதைக் கேட்டதும் என் நாவை
அடக்க முடியவில்லை
“இறைவா!” என்னை மன்னித்துக்கொள்
முல்லாவை சொர்க்கத்துக்கு அனுப்பாதே
அவருக்குப் பெண்டு பிள்ளை தேவையில்லை 
காடு கழனி தேவையில்லை
அவருக்கு வேண்டியது சண்டையும் சச்சரவும்
பொய்யும் புளுகும்
அறியாத மக்களை ஏமாற்றுவதே அவர் வேலை,
சொர்க்கத்தில் கோயில் இல்லை;
பள்ளிவாயில் இல்லை;
பொய்யும் புளுகு மில்லை;
ஏமாறும் மக்களே இல்லை!
எனவே அவருக்கேற்ற இடம் அதுவல்ல
என்று பணிவுடன் மெதுவாகக் கூறினேன்”

கவிஞர் இக்பால் தன் கருத்தைக் கூட சற்று மெதுவாகத்தான் கூறுகிறார். காரணம் என்ன தெரியுமா? உரக்கமாக அவர் கூற, அது அந்த முல்லா காதில் விழ அங்கேயே நம் கவிஞரை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டால் என்னாவது?

மற்றுமொரு இடத்தில் அவர் கூறுவதைக் கேளுங்கள்:

“மத ஆர்வமுள்ள மக்களைப் பார்த்து
‘நீங்கள் மதமற்றவர்கள்’ என்று
கூறுவது இந்த முல்லாக்கள் வேலை
இறைவன் பெயரால் கஷ்டம்
விளைவிப்பதே இவர்களது வேலை”

அல்லாமா இக்பால் முல்லாக்கள் என்று குறிப்பிட்டுக் கூறுவது பின்லாடன் அல்லது பைத்துல்லா மஸ்வூத் ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது சங்பரிவார் தலைவர்களாகக் கூட இருக்கலாம்.

 – அப்துல் கையூம்