RSS

Category Archives: ஆய்வுக் கட்டுரை

எந்திர ஊர்தியும் எங்கள் ஊர் நாவலரும்


Train

நாகூருக்கும் புகைவண்டிக்கும் ஏகப்பொருத்தம் உண்டு. ஒரு காலத்தில் வடநாட்டிலிருந்து நாகூர் ரயிலில் யார் பயணம் செய்து வந்தாலும், “நாகூர் வந்ததும் என்னை எழுப்பி விடுங்கள்” என்று சகபயணிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை. ரயிலில் ஏறி குறட்டை விட்டு தூக்கி விட்டால் போதும். அந்த ரயில் கடைசி நிறுத்தமாக நாகூர் வந்தடைந்து நின்றுவிடும். ரயிலைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அவர்களை எழுப்பி விட்டு விடுவார்கள். ஆகையால் கவலை இல்லை.

இப்பொழுது அப்படியில்லை. காரைக்காலுக்கும் தொடர்வண்டி தொடர்பு ஏற்படுத்தி விட்டதால் நாகூருக்கு இருந்த அந்த முக்கியத்துவம் முற்றிலும் போய்விட்டது.

இன்ஜினை வந்தவழியே திருப்புவதற்கு கிணறு போன்ற ஒரு சக்கர அமைப்பில் இன்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தி, இருபுறமும் இரு நபர்கள் லீவரைக் கொண்டு கையாலேயே திருப்புவார்கள். என் இளம் பிராயத்தில் நாகூரில் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை காணச் சென்றதுண்டு. இவ்வளவு பெரிய ரயில் இன்ஜினையே இரண்டு பேர்கள் திருப்பி வைத்து விட்டார்களே….? அவர்கள் எவ்வளவு பலசாலியாக இருப்பார்கள்? என அந்த புரியாத வயதில் கண்டு வியந்ததுண்டு.

இக்காலத்தில் ட்ரெயினை பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். “புகைவண்டி” என்றுதான் இவ்வளவு நாட்களாக நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படி அழைக்காதீர்கள் என்று தமிழார்வலர்கள் நம் மீது வெகுண்டு எழுகின்றார்கள்.

ஒருகாலத்தில் ரயிலானது புகை விட்டுக் கொண்டு “சிக்கு.. புக்கு. சிக்கு.. புக்கு ரயிலே..” என்று வந்தது. இப்பொழுது அது என்ன புகை விட்டுக்கொண்டா வருகிறது? என்று கேள்வியால் நம்மை துளைத்தெடுக்கிறார்கள். நியாயமான சந்தேகம்தான்.

ஆகவே, தொடர் வண்டி என்று அழையுங்கள் என்று நமக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனையோ இடங்களில் “ரயில்வே ஸ்டேஷன்” “புகைவண்டி நிலையம்” என்றுதான் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன.

புகையிரதம், புகை வண்டி, புகையூர்தி, ரயில் வண்டி, நீராவி ரயில், சாரனம் (சாரை+வாகனம்), இருப்பூர்தி, தொடருந்து, தொடரி என்று ஆளாளுக்கு வெவ்வேறு பெயர்களால் அழைத்து நம்மை குழப்புகிறார்கள்.

பொத்தாம் பொதுவாக தொடர்வண்டி என்று சொன்னால் போதுமா?

Locomotive Train, Diesel Train. Electric Train, Commuter, Goods Train, Metro Train, Mono Rail, Bullet Train என வகை வகையான ட்ரெயின்களுக்கும் தமிழ்ப் பெயர் கொடுத்து விட்டீர்களேயானால் எங்களைப் போன்ற பாமரர்கள் அழைக்க ஏதுவாக இருக்கும்.

வெறுமனே “தொடர் வண்டி” என்று எப்படி இவை யாவையும் அழைப்பது?

நாகூர் பெரும்புலவர் குலாம் காதிறு நாவலர் எழுதிய 220 அடிகளைக் கொண்ட புலவராற்றுப்படையில் இந்த தொடர் வண்டியைப் பற்றிய வருணனை நம்மை பிரமிக்க வைக்கிறது.

சங்ககால நடையில் சொல்நயம், பொருள்நயம் மிகுந்து காணப்படும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட காலத்தால் அழியாத இப்புலவராற்றுப்படையில் நாம் இப்போது அழைக்கும் “தொடர்வண்டி”யினை “எந்திர ஊர்தி” என்று குறிப்பிடுகிறார் நம் பெரும்புலவர்.

தமிழிலக்கியத்தில் காணப்படும் 96 வகை பிரபந்தங்களில் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்றால் நெறிபடுத்துதல் என்று பொருள். நாகூர் குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படையை நாம் ரசித்து படிக்கையில் “இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கோஷம் எழுப்பத் தோன்றுகிறது..

நாவலர் தன் சகபுலவர் ஒருவருக்கு “மதுரைக்கு ட்ரெயின்லேயே போகலாமே. ஜாலியா இருக்குமே” என்று பரிந்துரை செய்கிறார்.

அந்த புகைவண்டியை வருணிக்கும் அவருடைய நடையழகைப் பாருங்கள்.

//உருமுறுமோ டுறலொழியின்
இருபுறனும் இருப்புருளை
நான்குருளைக் கான்குழுமும்
வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்
ஒலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கொத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையின்
எந்திர வூர்தி…//

இடி மாதிரி வித்தியாசமான சத்தம் எழுப்பும் இரும்பினால் ஆன நான்கு உருளைகள் அதற்கு உண்டு. நடுக்காட்டிலே இருக்கின்ற கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி ‘புஸ்.. புஸ்ஸென்று..’ பெரிய மூச்சு விடுகின்றது.

இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளுகின்றன.

காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது.

அந்த மாதிரி ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற கரும் புகை இருக்கின்றதே … அப்பப்பா… ! அது எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த குழாயின் வாயிலாக புகை சுழன்று சுழன்று வருகிறது.

மரவட்டை மாதிரி இருக்கிறது அதன் நடை. அந்த எந்திர ஊர்தி ஒன்றுக்குப் பின் ஒன்றாக நீண்டு ஊர்ந்து ஊர்ந்துச் செல்கிறது.

“இந்த மாதிரி சிறப்பு கொண்ட எந்திர ஊர்தியில் பயணித்துப் பாரும் புலவரே!” என்று கூறுகிறார்.

இக்காலத்தில் வெளிவந்த எந்த ஒரு தமிழ் நூலிலும் எந்திர ஊர்தி என்ற பெயரோ அல்லது அதைப்பற்றிய வருணனையோ நான் அறிந்திலேன். டிரெயினுக்கு முதற் முதலாக “எந்திர ஊர்தி” என்று பெயர் சூட்டியது நம் நாவலராக இருக்கலாம் என்பது என் எண்ணம். இப்பதிவை படிக்கும் தமிழறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கக் கூடும்.

நாவலர் அந்த தொடர்வண்டியின் அமைப்பை வருணிப்பதோடு நின்றுவிடவில்லை. மேலும் பாடுவதைக் கேளுங்கள்.

//அந்தமில் காட்சி அணிபல காண்பிர்
வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்
ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்
பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுற செலவின்
மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்
சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்
நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்//

சக புலவருக்கு நம் நாவலர் மேலும் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

“அந்த டிரெயின்லே நீங்க கிளம்பி போனீங்கன்னா ஷோக்கான காட்சிகளையெல்லாம் வரிசையா பார்த்துக்கிட்டே போகலாம். போக வேண்டிய இடத்திற்கு சட்டுபுட்டுன்னு போய்ச் சேரலாம். அந்த அனுபவம் சூப்பரா இருக்கும். வழி நெடுக மக்கள் ஏறி இறங்கும் பல ஸ்டேஷன்கள் வரும். அதுமட்டுமல்ல வாய்க்கு ருசியா உணவு பண்டங்களும் அந்தந்த ஸ்டேஷன்களில் கிடைக்கும். நாள் கணக்கா மதுரைக்கு பயணம் போக வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளிலே நீங்க மதுரைக்குச் சென்று விடலாம்.”

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவிய குலாம் காதிறு அவர்கள் வாழ்ந்த காலம் .

அது, 1833 ஆண்டு முதல் 1908 வரை.

#அப்துல்கையூம்

 

ஒரு ஊருக்கு எத்தனைப் பெயர்கள் !!!


நாகூரின் பழைய பெயர்தான் என்ன?

“நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?” என்ற விளக்கத்தை ஏற்கனவே நான் பல கட்டுரைகளில் பதிந்திருக்கிறேன். நாகூரின் பண்டைய கால பெயர் என்னவாக இருந்தது? அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் இவ்வாய்வு நமக்கு பல அரிய ஆய்வுகளைத் தேடித்தரும்.

நாகூர் பெயர்காரணம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பாக, நாகூரை ஒட்டியுள்ள நாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்னவாக இருந்தது என்பதை ஆராய்வது இன்றிமையாதது. “ஒரு ஊருக்கு இத்தனை பெயர்களா?” என்று வியப்பில் நாம் ஆழ்ந்து போவோம்.

பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”.

சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்”

ராஜராஜ சோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது.

“நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.

”நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ ! (பாடல்-66)

மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்”  என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை)

புத்த இலக்கியங்களில் இதன் பெயர் ”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.

நாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும்

நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத டச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது

தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார்.

“நாகவதனா” (Nagavadana)  என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.

“மலிபட்டான்” (Mali-pa-tan)  என்று  இரச்புத்தீன் அழைக்கிறார்.

“நவுட்டபட்டனா” (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.

“நெகபட்டன்”  என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்

“நெகபெட்டாம்” (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.

“நெகமா”, “நாகானனை”, “நாகநகரம்” என்று புத்த நூல்கள் பகர்கின்றன.

ஒரு ஊருக்கு இத்தனைப் பெயர்களா? என்று நாமும் விழி பிதுங்கிப் போகிறோம்.

 

மகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றது

வங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில்  என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள்.

அப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி.  மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது பநன்கு விளங்கும்.

அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7).

பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர்.

சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.

துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு

தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து  –  (7.101.1)

 

முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்

திரைக்கை காட்டும் தென்நாகை  – (7.101.2)

 

முல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட

செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் – (7.101.3)

 

தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க

சேண்தார் புரிசைத் தென்நாகை – (7.101.4)

 

பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்

தெருவில் சிந்தும் தென்நாகை – (7.101.5)

 

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்

சேடை உடுத்தும் தென்நாகை – (7.101.6)

 

கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்

இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை – (7.101.7)

 

தொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்

தொள்ளும் வேலைத் தென்நாகை – (7.101.8)

 

முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்

சித்தம் கவரும் தென்நாகை – (7.101.9)

 

திரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்

சிறைவண்டு அரையும் தென்நாகை – (7.101.10)

தென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம்? கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.

அதன் பிறகு வந்த காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு.

நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன.

ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார்  இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36)

1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது.

நாகூரின் மற்ற மற்ற சிறப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.

அப்துல் கையூம்

 

Tags: ,

உட்டாலக்கடி


“இந்த உட்டாலக்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம்”. இப்படி பலரும் எச்சரிப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.

“உட்டாலக்கடி” என்ற தத்துவச் சொல்லுக்கு என்னதான் அர்த்தம் என்று 1.36 கிலோ எடையுள்ள மூளையை பலரும் போட்டு கசக்கக் கூடும். இதோ சொல்லுகிறேன். ஆனால் கொஞ்சம் பொறுமை தேவை.

சென்னைத் தமிழின் பிரதான அங்கம் இந்த “உட்டாலக்கடி” சொற்பதம்.

“உட்டாலக்கடி கிரி கிரி, சைதாப்பேட்டை வடைகறி” என்ற பழமொழி மிகவும் பிரசித்தம். இந்த கிரி கிரி யார்? அழகிரியா அல்லது வி.வி.கிரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சைதாப்பேட்டை வடைகறியைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

சைதாப்பேட்டையில் குமரன் வைத்திருக்கும் 65 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த “மாரி ஹோட்டல்” வடைகறிக்கு பிரசித்தமானது.

“உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே !
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே” –
(படம்: மை டியர் மார்த்தாண்டான்)

“உட்டாலக்கடி உட்டாலக்கடி பாட்டிருக்குது”
(படம் : உள்ளே வெளியே)

“அடி உட்டாலக்கடி ஜின்னு, நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு, இனி நீயும் நானும் ஒண்ணு”
(படம் – சிலம்பாட்டம்)

மேற்கண்ட பாடல் வரிகள் யாவும் திரைப்படத்தில் வெளிவந்த “உட்டாலக்கடி” தத்துவப் பாடல்கள்.

என் மனதை மிகவும் நோகடித்த வரிகளில் ஒன்று வாலிபக்கவிஞர் வாலி எழுதிய இந்த வரிகள்தான்:

“உட்டாலக்கடி செவத்த தோலுதான் – உத்துப் பார்த்தா
உள்ள தெரியும் நாயுடு ஹாலுதான்”

“பீப்” பாடலுக்கு கொதித்தெழுந்த மாதர் சங்கங்கள் அப்போது இந்த வரிகளுக்கு கொதித்து எழுந்தார்களா என்ற விவரம் நான் அறிந்திருக்கவில்லை.

“உட்டாலக்கடி” என்றால் என்ன அர்த்தம்? ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது நடிகர் கமல்ஹாஸனும் இதற்கான விளக்கம் அளித்திருந்தார்.

“உட்டாலக்கடி” என்றால் வேறொன்றுமில்லை. இந்தியில் “எடு அந்த கம்பை” என்று பொருள். பயமுத்துவதற்காக வழக்கில் வந்த சொல். அம்புடுதேன்.

பிள்ளைகள் வம்பு தும்பு செய்தால் பெற்றோர்கள் அவர்களை அதட்டுவதற்காக “எடுடா அந்த கம்பை” என்பார்கள். ஆனால் எடுக்க மாட்டார்கள். உடனே பிள்ளைகள் அழுகையை நிறுத்திவிட்டு, வழிக்கு வந்துவிடுவார்கள். இதுதான் அந்த “உட்டாலக்கடி”யின் சிதம்பர ரகசியம். ஒரு பூனையை விரட்டுவதாக இருந்தால்கூட கம்பை எடுப்பதுபோல் “பாவ்லா” செய்தால் போதும், அது தானாகவே தலை தெறிக்க ஓடிவிடும். (தலை ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக)

சங்க காலத்தில் தினைப்புனத்தில் மேய வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தமிழ்ப் பெண்கள் “உட்டாலக்கடி” என்றெல்லாம் பாவ்லா காட்ட மாட்டார்கள். காலில் அணிந்திருக்கும் தங்கத்தாலான காதணியைக் கழற்றி ‘ஸ்பின் பெளலிங்’ பண்ணுவார்களாம். அந்த அளவுக்குச் செல்வச் செழிப்புடன் அவர்கள் அப்போது வாழ்ந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் “உட்டாலக்கடி”யையும் “உல்டா” பண்ணுவதையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். தகிடுதத்தம் செய்யும் 420 வேலையைத்தான் ஆளைக் கவுத்தும் “உல்டா” பணி என்பது. “உல்டாவு”க்கும், “உட்டாலக்கடி”க்கும் உண்மையிலேயே எந்த WIFI கனெக்ஷனும் கிடையாது.

அடிக்கக்கூடாது. ஆனால் அடிக்க வருவதைப்போல் “உட்டாலக்கடி” பாவ்லா செய்ய வேண்டும். இதுதான் Moral of the Story.

சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு தீர்வு முறைகள் பற்றிச் சொல்வார்கள். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது “சாம” டெக்னிக். பணம் பொருள், சம்திங் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது இரண்டாவது “தான” டெக்னிக். மிரட்டி பணிய வைப்பது மூன்றாவது “பேத” டெக்னிக். இது எதற்கும் ஒத்து வரவில்லையென்றால் போட்டுச் சாத்துவது கடைசி “தண்டம்” டெக்னிக்.

இன்று ‘லஞ்சத்தை ஒழிப்போம்’, ‘லஞ்சத்தை ஒழிப்போம்’ என்று ஒவ்வொருவரும் கூக்குரல் கொடுக்கிறார்களே! “சம்திங்” மூலம் காரியத்தைச் சாதிக்கலாம் என்று நமக்கு சூப்பர் ஐடியா சொல்லிக் கொடுத்ததே நம்ம சாணக்கியர் சார்தான்.

ஆக இந்த கடைசி டெக்னிக் இருக்கிறதே அதுதான் “தர்ம அடி”

“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்” “கோல் எடுத்தால் குரங்கு ஆடும்” போன்ற பழமொழி யாவும் இந்தக் கருத்தை மையமாக வைத்து பிறந்ததுதான்.

“இரண்டு அடி கொடுத்தால் தான்
திருந்துவாய்; வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்”

என்று கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை வரிகளை ரசித்திருக்கிறேன்.

வரும் தேர்தலின்போது உங்கள் வீட்டைத்தேடி ஓட்டுக் கேட்கவரும் அரசியல்வாதிகள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நீங்கள் நினைத்தால் “உட்டாலக்கடி” என்று கூறுங்கள். அது போதும்.

தோளில் உள்ள துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடியே போய் விடுவார்கள்.

[பி.கு:அருஞ்சொற் பொருள்: பாவ்லா = பிலிம் காட்டுவது]

 

போண்டாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்


1024px-Bonda2

எனக்கு ஒரு நண்பர் Friend Request அனுப்பியிருந்தார். அவர் பெயர் போண்டா வாயன். அகன்று விரிந்து கிராபிக் செய்யப்படிருந்த வாயைப் பார்த்து நான் பயந்தே விட்டேன். அவரது பக்கத்தை நோட்டமிட்டால் ஒரே போண்டா மயம். பயங்கர போண்டா பிரியர் போலும்.

நாடகமொன்றில் பெண் பார்க்கும் படலத்தின்போது “மாப்பிள்ளை என்ன செய்யிறார்?” என்று கேட்க “மாப்பிள்ளை ஹீரோ ஹோண்டாவில் வேலை செய்யிறார்” என்று பதில் வரும். காதில் சரியாக வாங்கிக்கொள்ளாத மணப்பெண்ணின் தந்தை “என்ன..? மாப்பிள்ளை கீரை போண்டா சாப்பிடுவாரா?” என்ற அந்த டைம்லி ஜோக் நாடகத்தில் நன்றாக எடுபடும்.

கேதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஒரு நகைச்சுவை நடிகருக்கு போண்டா மணி என்ற பெயரே நிலைத்து விட்டது.

இளம் வயதில் நாகை பாண்டியன் தியேட்டரில் படம் பார்க்க போனபோது சுடச் சுடச் தின்ற போண்டா ஞாபகம் மனதுக்குள் உதித்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

தமிழகம் அன்றி ஆந்திராவிலும், கர்னாடகாவிலும் இந்த பதார்த்தத்தை போண்டா என்றே ஆசையுடன் அழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆங்கிலத்திலும் இதற்குப் பெயர் போண்டாதான்.

எங்களூரில் நாட்டுக்கோழி வகை அல்லாது White Leghorn என்ற அயல்நாட்டு வகை “கொழு கொழு” வெள்ளைக் கோழிகளை பொந்தாங் கோழி என்று அழைப்பார்கள். மத்திய இத்தாலி நாட்டு “டுஸ்கானி” என்ற இடத்திலிருந்துதான் முதன் முதலில் இவ்வகை குண்டுக் கோழிகள் ஏற்றுமதி ஆயின.

போந்தை என்ற வார்த்தைதான் நாளடைவில் மருவி பொந்தை என்றாகியது. அடிமரம் பருத்து இருந்தால் நாம் போந்தை என்போம். போந்தை என்பது சங்க இலக்கியச் சொல்.

பண்டைய காலத்தில் போந்தை என்கிற பனைமரம் சேர மன்னர்களின் சின்னம்.

போண்டா என்ற வார்த்தையை ஆங்கில அகராதிக்கு வழங்கிய தமிழுக்கு ஒரு “ஓ” போடுவோம்

இனி யாராவது உங்களை “போண்டா வாயன்”, “ போண்டா தலையன்” அல்லது “ஏண்டா! எண்ணையிலே போட்ட போண்டா மாதிரி இப்படி துள்ளுறே?” என்று கவுண்டமணி பாணியில் திட்டினால் சங்கத்தமிழ் தானே உரைக்கிறார் என்று திருப்தி அடைந்துக் கொள்ளலாம்.

 

மீனாட்சி சுமந்து வந்த நாகூர் சரவிளக்கு


நாகூர் சரவிளக்கு

எனது வாலிப பருவத்தில்  நாகூர் தர்காவுக்குள் பிரவேசிக்கும் போதெல்லாம் கட்டிடத்தின் உட்பகுதியில் தலைக்கு மேல் தொங்கும் பிரமாண்டமான சரவிளக்கை உன்னிப்பாக  நோட்டமிடுவேன். அதுவும் ஒரு பயம் கலந்த பார்வையோடு.

கலையம்சம் பொருந்திய அதன் அழகு என்னைக் கவர்ந்ததை விட, ஒரு வித திகில்தான் ‘திக்.. திக்..’ என்று கூடுதலாக என் மனதை ஆட்கொண்டிருந்தது

அதைப் பார்த்த மாத்திரத்தில் என்னை அறியாமலேயே ஒரு மாதிரியான அச்சம் உள்ளத்தைக் கவ்வும். எங்கே நம் தலைக்கு மேல் விழுந்து நாம் நசுங்கி ‘சட்னி’யாகி விடுமோ என்ற பீதி தான்.

“மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்”  படப்பிடிப்பின்போது சரவிளக்கொன்று ஜெய்ப்பூர் அரண்மனையில் ‘தடாலென்று’ சிதறி விழுந்து நடிகை லதா மயிரிழையில் உயிர் தப்பினார் என்ற பத்திரிக்கைச் செய்தியை படித்ததிலிருந்து இந்த பயம் என் மனதில் பதிந்திருக்கக்கூடும்.

பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சண் பிரபு பரிசளித்து தாஜ்மஹாலின் வாசலில் நிறுவப்பட்டிருந்த இரண்டு மீட்டர்கள் உயரமான, 60 கிலோ எடையுடைய சரவிளக்கு ஒன்று சில ஆண்டுகட்கு முன்னர்  நிலத்தில் விழுந்து உடைந்தது

இந்தியாவிலேயே மிகப்பெரிய சரவிளக்குஇருப்பது குவாலியர் நகரில் அடுத்து இரண்டாவது பெரிய சரவிளக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் என்றெல்லாம் படித்திருக்கிறேன்.

நாகூரில் இருக்கும் சரவிளக்கு  எவ்வளவு பெரியது அதன் பின்னணிக் கதை என்ன என்ற விவரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.

அதற்கு அடுத்தடுத்த கூரையில் தொங்கும் சங்கிலியைக் கண்பித்து “இது ஒரு காலத்தில் ரொம்ப நீளமாக இருந்தது. காலப்போக்கில் இது சிறியதாகி விட்டது. இது எப்போது முழுதாக கரைந்து விடுமோ அப்போது உலகம் அழிந்து விடும்” என்றெல்லாம் கதை கட்டிவிட்டு பயமுறுத்துவார்களேத் தவிர இந்த சரவிளக்கு  பற்றிய சரித்திர விவரங்கள் எல்லாம் கூற மாட்டார்கள்.

பக்தகோடிகள் அந்த நீண்ட சங்கிலியில் நனைக்கப்பட்ட நீரை பயபக்தியோடு அருந்தும்போது, அந்த துருப்பிடித்த சங்கிலியில் காணப்படும் துருவின் துகள்கள் நம் ஆரோக்கியத்தை பாதிக்காதா என்றெல்லாம் எண்ணி மிரள்வதுண்டு.

தஞ்சை மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலும் வணிகர்களே அதிகம். அவர்களில் பெரும்பாலும் சிங்கப்பூரில் வாணிபம் செய்து பெருமளவில் பொருளீட்டினார்கள்.

அவர்கள் நாகூர் தர்காவிற்கு தங்கள் பங்கிற்கு நீண்டகாலம் நினைவு கூறும் வகையில்  ஏதேனும் ஒரு பொருளை நன்கொடையளிக்க ஆவல் கொண்டனர்.

இது நடைபெற்றது 128 ஆண்டுகட்கு முன்னர்.  அதாவது 1888-ஆம் ஆண்டு.

இதற்காக சிங்கப்பூரிலிருந்த தமிழ்ச் சமுதாயத்து மக்கள் ஒன்று கூடி வசூல் வேட்டை நிகழ்த்தினர். 1500 டாலர் வரை வசூல் ஆனது. அப்போது அது பெரிய தொகை. நன்கொடை கொடுத்தவர்களின் வரிசையில் 41 வியாபார நிறுவனங்களும் சில தனிநபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.

பினாங்கு நகரில் நாகூர் சரவிளக்குக்காக 300 வெள்ளியை தாராள மனப்பான்மையோடுஅள்ளிக் கொடுத்தவர்கள் Katz Bros என்ற ஜெர்மானிய நாட்டு ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தின் நினைவாக ஒரு தெருவிற்கே இவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்கள். இது Lebuh Katz என்றும் அழைக்கப்படுகிறது.  1864 –ஆம் ஆண்டு ஹெர்மன் கட்ஸ் (Hermann Katz) என்பவர் இந்த ஸ்தாபனத்தை நிறுவினார். ஜெர்மானிய யூதர்களுக்கிடையே Kartz என்ற குடும்பப்பெயர் பரவலாக காணப்படுகிறது.

Katz Bros ஜெர்மானிய நிறுவனத்துடன் அதிகமாக வணிகத்தொடர்பு வைத்திருந் தவர்கள் தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக பல கப்பல்களும் இருந்தன,

நாகூர் தர்காவுக்கு சரவிளக்கு நிர்மாணிப்பதற்காக பணவசூல் செய்கிறோம் என்றவுடன் உடனே தயக்கம் காட்டாமல் இத்தொகையை  இவர்கள் அள்ளித் தந்தனர். தஞ்சை மாநிலத்து வர்த்தகர்களுடன் இந்நிறுவனத்தினர் கிட்டத்தட்ட 23 ஆண்டுகாலமாக வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர்.

ஒன்பது அடி உயரத்தில் 72 அலங்கார வளைவுக் கிளைகளைக் கொண்ட  பிரமாண்டமான சரவிளக்கை ஆர்டர் செய்து வாங்கினார்கள்.

ஜனவரி 16 –ஆம் தேதி வெளிவந்த “சிங்கை நேசன்” என்ற தமிழ்ப் பத்திரிக்கையில் நன்கொடை அளித்த அத்தனைப் பேர்களுடைய பெயர்களும் வெளியாகியிருந்தது.

மற்றொரு சுவையான தகவல் என்னவென்றால் இப்பத்திரிக்கையின் ஆசிரியரும் அதன் பதிப்பாளருமான சி.கு. மகதூம் சாஹிப் அவர்கள் நாகூரை பூர்வீகமாகக்  கொண்டு சிங்கப்பூரில் குடிபெயர்ந்தவர். சி.கு.மகதூம் சாஹிப் திருமணம் புரிந்த வகையில் பொறையாறில் இவரது குடும்பம் வசித்து வந்தது.

Csingai nesan magazine heading

சிங்கப்பூர் என்ற தனிநாடு உருவாவதற்கு முன்னர் மலாயாவின் முதல் பத்திரிக்கையாகக் கருதப்படுவது சி.கு.மகதூம் சாயபு அவர்களால்  1875-ஆம் ஆண்டு வெளிவந்த “சிங்கை வர்த்தமானி”  என்னும் இதழே.

அதன் பின்னர் 1887-ஆம் ஆண்டு “சிங்கை நேசன்” என்ற பெயரில் இப்பத்திரிக்கையை அவர்  வெளியிட்டார். சி.கு.மகதூம் சாஹிப் அவர்களுக்கிருந்த தமிழ்மொழிப் பற்றுக்கு ஒரு சிறிய உதாரணம் இது.  ஒவ்வொரு பதிப்பின் தலைப்பிலும் ஒரு திருக்குறள் காணப்படும். அதன் பொருள் விளக்கமும் அவ்விதழில் தரப்பட்டிருக்கும்.

(அதுமட்டுமன்று. மலாயாவில் முதன் முதலில் கவிதை நூல் (ஆறுமுகப் பதிகம்) வெளியிட்டதும் நாகையைச் சேர்ந்த மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்கள்)

நன்கொடையும் வசூலித்தாகி விட்டது. பிரமாண்டமான சரவிளக்கும் வாங்கியாகி விட்டது. இதனை  சிங்கையிலிருந்து நாகூருக்கு எப்படி கொண்டுபோய்ச் சேர்ப்பது? யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது.

இப்போதைய காலத்தில் இதுபோன்ற சரவிளக்குகள் எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாகி விட்டது. அப்போது இதுபோன்ற சரவிளக்குகள்  மிகவும் அபூர்வம்

எல்லோருடைய அறிவுரையின் பேரில் மகதூம் சாஹிப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான என்.எம்.முகம்மது அப்துல் காதர் புலவரிடம் இப்பணியை நிறைவேற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இவர் அக்காலத்தில் புகழ்ப்பெற்று விளங்கிய கவிஞர். பல கவிதைநூல்கள் எழுதி வெளியிட்டவர்.

நாகூர் கந்தூரி நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் “எஸ்.எஸ்.மீனாட்சி” என்ற கப்பலில் தன் சகாக்களுடன் நாகூர் பயணமானார். புகழ்ப்பெற்ற “எஸ்.எஸ்.ரஜுலா” கப்பலுக்கு முன்பே போக்குவரத்து கப்பலாக எஸ்.எஸ்.மீனாட்சி பயன்பட்டில் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு கப்பல் வழிச் சென்றோர் பயணிகள் பட்டியலை தருகிறார் அறிஞர் எட்கர் தர்ஃச்டன் என்பார்.

இந்த எண்ணிக்கையை ஆராய்ந்துப் பார்த்தால் மற்ற துறைமுக நகர்களிலிருந்து போனவர்களை விட நாகூர் நாகையிலிருந்து போனவர்களின் எண்ணிக்கை எத்தனை சதவிகதம் கூடுதல் என்பது நமக்கு நன்கு விளங்கும்.

நாகப்பட்டினம்.pdf

பாண்டிச்சேரி – 55 பேர்கள்

கடலூர் – 588 பேர்கள்

பரங்கிப்பேட்டை – 2555 பேர்கள்

காரைக்கால – 3422 பேர்கள்

நாகூர் நாகை – 45,453 பேர்கள்

Singai nesan

“சிங்கை நேசன்” பத்திரிக்கையைப் பற்றியும், சி.கு. மகதூம் சாஹிப் அவர்களின் தமிழ்ப் பணியை ஆய்வும் செய்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஒரு தனி நூலே வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி நமக்கு மனநிறைவைத் தருகிறது.

128 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சரவிளக்கு இப்போது நாகூர் தர்காவின் பெரிய வாயிலின் கூரையிலிருந்து அகற்றப்பட்டு சின்ன எஜமான் வாயிலின் கூரையில் 26.10.2015 அன்று மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

சிங்கைக்கும் நாகூருக்குமிடையே இருந்த பாசப்பிணைப்பு இன்று நேற்று உருவானதல்ல. “சிங்கப்பூர் நாகூர் சங்கம்” என்ற பெயரில் நாகூரிலிருந்து குடிப்பெயர்ந்த அன்பர்கள் இன்று வரை அந்த பந்தம் நிலைக்கும் வண்ணம் சங்கம் அமைத்து தீவிரமாக செயல்படுகிறார்கள் என்ற செய்தி நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

பின்குறிப்பு :1888 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9 ஆம் நாள் சிங்கை நேசன் வெளியீட்டில் “இந்தியா செய்தி” என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்ட செய்தி இது:

இவ்வூர்களில் இடைவிடாமல் மழை வருஷிப்பதில் ஜனங்களுக்கு வெகு தொந்திரவாக இருக்கிறது. தஞ்சாவூர் பகுதிகளில் அரிசி ரூபாய்க்கு 8 படி விற்கிறார்கள். வெயில் காண்பது அரிதாயிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் வந்து உடைப்புகள் உண்டாயின. கொள்ளடம் ஆற்றில் திடீரென 5 கெஜம் தண்ணி வந்து 3 வண்டிகளும் 30 ஜனங்களும் சேதமாம். கும்பகோணத்தைச் சேர்ந்த கொட்டையூரில் 10 அடி தண்ணியுயர்ந்து 200 குடிகளும் வெகு சாமான்களும் நஷ்டமாம். காய்ந்தாலும் ஆகாது, பேய்ந்தாலுமாகாதா?

[நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சரவிளக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்த உயர்திரு கலீபா சாஹிப் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி]

அப்துல் கையூம்

 

Tags:

தமிழ் நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் அந்நியர்களா?


 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உருது பேசும் முஸ்லீம்கள் சுமார் 15 லட்சம் பேர்கள்வரை இருக்கிறார்கள். இஸ்லாத்தில் ஜாதி பிரிவினைகள் கிடையாது. இவன் தீண்டத்தாகாதவன், இவன் கீழ்சாதியினன் என்ற பாகுபாடுகள் கிடையாது. ஆண்டான், அடிமை என்ற வேறுபாடுகளின்று ஒரே வரிசையில் நின்று தொழுவதற்கு காட்டித் தந்ததுதான் இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை.

ஆனால் அனைத்து சமுதாயத்திலும் இருப்பதைப்போன்று பல்வேறு சமூகங்கள் உண்டு. குலம், கோத்திரங்கள் உண்டு. அது நபிகள் நாயகம் காலத்திலும் இருந்தது.அதற்கு முன்னரும் இருந்தது. இப்பொழுதும் உள்ளது.

மரைக்காயர் ராவுத்தர், மாலுமியார், லெப்பை, சாயபுமார்கள், தக்னி முஸ்லீம்கள் என்று பல்வேறு பிரிவுகள் தமிழ் நாட்டில் உண்டு. இப்பெயர்கள் யாவும் தொழில் அடிப்படையில் அமைந்ததே.

உருது மொழி பேசுபவர்களை தக்னி (Dakhni or Deccani) என்று அழைக்கிறார்கள். தெக்கண பகுதியினர் என்று பொருள்படும் வகையில் இக்காரணப்பெயர் ஏற்பட்டது.

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பூர்வீகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.)அரேபியா, எகிப்து, ஏமன், ஈராக், பாரசீகம் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் புலம் பெயர்ந்தவர்களின் சந்ததியினர்.

2.)வட இந்தியாவிலிருந்தும், தக்கண பூமியிலிருந்தும் ராணுவப் படையினராகவும் ஏனைய தொழில் நிமித்தமாகவும் வந்து இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியினர்.

3.)தமிழகத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சன்மார்க்கம் போதிக்கவந்த இஸ்லாமியர்களின் நன்னடத்தையாலும், அவர்கள் காட்டிய சகோதரத்துவ அன்பாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவிய பூர்வீக தமிழ்க்குடிமக்களின் சந்ததியினர்.

ஹைதராபாத்தில் நிஜாம்கள் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலத்தில் அரண் காவலாளிகள், வாயிற்காப்போன், கருவூலப் பாதுகாவலர்கள், அரண்மனை வேலையாட்கள் போன்ற பணிகளுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டனர். விசுவாசமான பேர்வழிகள் என்று பெயரெடுத்திருந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழ் மாநிலத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அரண்மனை பணிகளுக்குச் சென்ற இவர்கள் அங்கு பல்வேறு கைத்தொழில்களையும் கற்றுத்தேர்ந்து அந்தந்த பணியில் சிறந்தனர்.

படைகலன்களுக்கு தேவையான தோல் கருவிகள், தோலால் ஆன உடைகள், மற்றும் காலணிகள் தயாரிக்கவும் கற்றுத் தேர்ந்திருந்த இவர்கள் ஒரு சில தலைமுறைகளுக்குப்பின் திரும்பவும் தாயகம் வந்து குடியேறியபோது இவர்களின் தாய்மொழியும், செய்தொழிலும் அடியோடு மாறிப் போயிருந்தன.

வயிற்றுப் பிழைப்புக்காக அண்டை மாநிலம் வேலை தேடிப்போன “லெப்பை” வகுப்பாரின் முந்தைய பிரதானத் தொழில் மதரஸாக்களில் மார்க்கக் கல்வியை போதிக்கும் பணியாக இருந்து வந்தது. இப்போது அது முழுவதுமாகவே மாறிப் போயிருந்தது.

உருது பேசும் முஸ்லீம்களின் பூர்விகத்தை அறிய முதலில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியிலிருந்து தொடங்குவோம். தோல் பதனிடும் முறையையும் நுட்பத்தையும் கற்றுத்தேர்ந்த இவர்கள் நாளடைவில் தோல் வர்த்தகத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண அவர்களது அனுபவம் பெரிதும் கைகொடுத்தது என்றால் அது மிகையாகாது.

ஐரோப்பிய சர்வதேச சந்தையில் புகழ்க்கொடி நாட்டிவரும் “Clarks”, “Ecco”, “Gabor”, “Florshiem”, “Espirit”, “Sears”, “JC Penny”, “Pierre Cardin” போன்ற நிறுவனங்களின் தயாரிப்புக்கள் வேலூர் மாவட்டத்தின் சின்னஞ்சிறு ஊர்களிலிருந்துதான் உற்பத்தியாகின்றன.. 2009-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இங்கிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியான தோல் பொருட்கள் மட்டும் ரூபாய் 1,524 கோடியைத் தாண்டுகின்றது

உருது மொழியை தங்கள் தாய்மொழியாக கருதும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் தமிழை தாய்மொழியாகக் கொண்ட லெப்பைகள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. உருது மொழி ஆதிக்கமுள்ள பகுதிகளில் இவர்கள் குடியேறியதால்தான் நாளடைவில் அம்மொழியே இவர்களின் பிரதான மொழியானது.

யார் இந்த லெப்பைகள். இவர்கள் வரலாறுதான் என்ன?

பண்டைய தமிழிலக்கியங்களில் “யவனர்” என்றும் “சோனகர்” என்றும் அழைக்கப்பட்ட முஸ்லீம்கள்தான் இந்த லெப்பைகள். ஆங்கில வரலாற்று நூல்களில் “Serandib muslims”, “Arwi Muslims” , “Moors” என்று பல்வேறு பெயர்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகளை நாம் காண முடிகின்றது.

லெப்பைகள் என்று அறியப்படும் இந்த முஸ்லீம் சமூகத்தினர் தமிழகம் வந்து சேர்ந்த வரலாறு முறையே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

1.கி.பி. 642-ஆம் வருடம் கலீபா உமர் அவர்களுடைய காலத்தில் நான்கு கப்பல்களில் அரேபியக் குழுக்கள் பாக்சந்தி வழியே இலங்கையிலுள்ள பெருவலா (Beruwala) என்ற இடத்தை வந்தடைந்தது. அங்கிருந்து வந்து தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக்கி கொண்டவர்கள்.

2.கி.பி.687-ஆம் ஈராக்கிலிருந்து கொடுங்கோலன் முக்தாருஸ் சகஃபி இப்னு அபு உபைத் (கி.பி. 622 – 687) என்ற நபரின் ஆட்சியின் அட்டூழியத்திற்கு பயந்து ஈராக்கிலிருந்து ஒரு பெரும் குழுவாய் காயல்பட்டினம் வந்து சேர்ந்தவர்கள்.

3.கி.பி. 866 – ஆம் ஆண்டு கால்ஜி என்ற அராபியர் தலைமையில் எகிப்து நாட்டில் “கரஃபத்துக் குப்ரா” என்ற இடத்திலிருந்து வியாபார நிமித்தமாகவும், இஸ்லாமிய சன்மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காகவும் புலம் பெயர்ந்து தமிழகம் வந்து சேர்ந்தவர்கள் .

லெப்பை என்ற பெயர் மருவி “லெவ்வை” என்றும் ஆனது. இவர்களின் தாய்மொழி தமிழ் மொழி. உருதுமொழி பேசும் இந்த லெப்பைகள் வடஆற்காடு மாவட்டத்தில்தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வீட்டில் இவர்கள் பேசும் மொழி உருது மொழி. வெளியில் பிறசகோதர மதத்தினருடன் இவர்கள் பேசும் மொழி தமிழ்.

வடஆற்காடு மாவட்டத்தில் வசிக்கும் உருது பேசும் மக்கள் பெரும்பாலோருடைய பூர்வீகமும் சோழநாட்டின் தஞ்சை தரணி என்பது சுவராஸ்யமான தகவல். இவர்கள் ராவுத்தர் வகுப்பை சார்ந்தவர்கள். உருது மொழியை தாய்மொழியாக்கிக் கொண்ட இவர்கள் பூர்வீக தமிழ் மக்கள் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், பேரணாம்பட்டு, வல்லத்தூர், மேலப்பட்டி, விஷாரம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் லெப்பைகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கு பற்பல ஆதாரங்களை எடுத்து வைக்க முடியும்.

தங்கள் தந்தையின் பெயரை இனிஷியலாக கொள்ளாமல் தங்களின் ஊர்ப்பெயர் அல்லது வீட்டுப் பெயர்களை தங்களின் பெயரோடு இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள். இப்பழக்கம் கேரள மக்களிடம் பரவலாக நாம் காண முடியும்.

ஆனைக்கார் (ஆனைக்காரர் – மாவுத்தர்), நாட்டாமைக்கார் (நாட்டாமைக்காரர்), கந்திரிக்கார், (கந்தக பொடிக்காரார் – பட்டாசு தயாரிப்பவர்), வாணக்கார் (வாணவேடிக்கை பட்டாசு தயாரிப்பவர், ஜல்லடைக்கார் (ஜல்லடை தயாரிப்பவர்), கட்லுகார் (கட்டில் தயாரிப்பவர்), வளையல்கார் (வளையல் காரர்) , அய்யாப்பிள்ளை, அப்பாப்பிள்ளை, பாம்புக்கண்ணு, ஏ.பா. வீடு (ஏழுபானை விடு), கண்ணீயம்பாடி, சோழாவரம், ஊசி வீடு, நெய்வாசல், கோட்டாவால் போன்ற குடும்பத்தின் பெயர்கள் இவர்களைத் தமிழ் பூர்வீகம் என்று காட்டிக் கொடுத்துவிடும்.

உருவ அமைப்பை வைத்து பெயர் சூட்டப்பட்ட குடும்பப் பெயர்களும் உண்டு. நெட்டை செய்யது, மூக்கண்ணன், சித்தண்ணன், குள்ள மீரான் போன்ற பெயர்களும் இதில் அடங்கும்

இவர்கள் வடநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருந்திருந்தால் இவர்களின் குடும்பப் பெயர் இப்படி இருந்திருக்காது. மாறாக வடநாட்டில் இருப்பதைப்போன்று சாய்வாலா, கிலிட்வாலா, மட்காவாலா, கான்ச்வாலா என்று இருந்திருக்கும்.

உருது மொழியின் ஆதிக்கத்தினால் இவர்கள் தங்கள் தமிழ் முகத்தை தொலைத்தார்களேத் தவிர இவர்களின் பூர்வீகம் தமிழ் மொழிதான் என்பது ஊர்ஜிதமாகிறது. இவ்வட்டாரத்தில் வசிக்கும் முஸ்லீம்கள் மட்டுமல்ல,. இந்து சகோதரர்களும் இதே உச்சரிப்புடன் வட்டார வாசனையோடு உருது மொழியில் சரளமாக உரையாடுவதை இங்கு சர்வசாதரணமாக காண முடிகிறது.

எப்படி பணிநிமித்தம் இலங்கையில் குடியேறிய தமிழ் முஸ்லீம்கள் சிங்கள மொழியை கற்று தேர்ச்சி பெற்றார்களோ, எப்படி மலேசியாவில் குடியேறிய தமிழ்மக்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெற்றார்களோ அதேபோன்றுதான் இவர்களும்.

வட ஆற்காடு தமிழ் முஸ்லீம்களுக்கு உருதுமொழி மீது அபார மோகம் ஏற்பட்டதற்கு காரணங்கள் பலவுண்டு. சந்தா சாஹிப், ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆற்காடு நவாப்களின் ஆளுமையில் வடஆற்காடு மாநிலம் இருந்தபோது உத்தியோகபூர்வ மொழியாக பாரசீகம் மற்றும் உருது மொழி கையாளப்பட்டது. திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் கோட்டைகளும் இராணுவ முகாம்களும் நிர்மாணிக்கப்பட்டன.

இச்சமயத்தில் பீஜப்பூர், உத்திர பிரதேசம், தில்லி போன்ற இடங்களிலிருந்து இஸ்லாத்தை எடுத்துரைக்க வந்த மார்க்க அறிஞர்களும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்து குடியமர்ந்தனர்.

சுமார் 150 ஆண்டுகட்கு முன்னர் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் பகுதிகளில் இஸ்லாமிய மார்க்கக் கல்வி பாடசாலைகள நிறுவப்பட்டன. உருது மற்றும் பாரசீக மொழிகளில் மார்க்க சம்மந்தமான நூல்கள் ஏராளமாக இருந்தமையால் மார்க்க அறிவு பெற்றுக்கொள்ள உருதுமொழி அவர்களுக்கு பெருந்துணையாக இருந்தது. அதன் காரணமாக உருது மொழி மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

உருது மொழியானது இசைக்கும், கவிதைக்கும் இலகுவான மொழி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பதைப்போல ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது என்பதை பரந்த மனப்பான்மையோடு ஆராய்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள்.

ஒரு மொழி மீது மற்றொரு மொழியின் ஆதிக்கம் மேலோங்குவது இங்கு ஒன்றும் புதிதல்ல. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் தமிழைத் புறந் தள்ளிவிட்டு தாங்கள் தமிழர்கள் என்று காட்டிக்கொள்ள வெட்கப்படும் நடப்புகளையெல்லாம் நாம் காணவில்லையா? ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தமிழ்மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கியபோது தமிழ்நாட்டில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய தமிழ் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் பணியை நாம் இங்கு நினைவு கூறுதல் அவசியம்..

தென்மாவட்டங்களில் இருக்கும் லெப்பைகளுக்கு உருது மொழி அறவே தெரியாது. முஸ்லீம்கள் என்றாலே உருதுமொழி தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைப்பவர்களும் ஆம்பூர் பகுதியில் உண்டு. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்” என்றுதான் அவர்களின் அறியாமையை விமர்சிக்க வேண்டும்.

உருதுமொழி பேசும் இவர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்வது கிடையாது என்ற வாதம் வைக்கப்படுவதையும் காண்கிறோம். லெப்பை வகுப்பாரின் தாய்மொழி தமிழ்மொழி என்ற வரலாறு அவர்களில் பலருக்கே தெரியாத காரணம்தான் இது.

அதேசமயம் மேற்கத்திய கவிவாணர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட புதுமை விரும்பிகள், மரபுப் பிடியில் சிக்கியிருந்த தமிழ்க் கவிதையை மீட்டு வெற்றிகண்ட “வானம்பாடி” இயக்கத்துக் கவிஞர்களும் இந்த மண்ணிலிருந்து உதித்தவர்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உருது முஸ்லீம்களை தமிழகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களைப் போன்று சிலர் சித்தரித்து அவர்களை அந்நியப்படுத்த முயல்வதை அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

அப்துல் கையூம்

 

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?


Nagore Association - Singapore wraper singapore assn

[ஆய்வுக்கட்டுரை : நாகூர் அப்துல் கையூம்]

நாகூருக்கு ஏன் “நாகூர்” என்று பெயர் வந்தது? Miliion Dollar Question என்பார்களே அது இங்கு முற்றிலும் பொருந்தும். பெயர்க்காரணம் குறித்து வரலாற்றாசிரியர்கள் அவரவர்கள் தங்கள் ஆய்வுக்கேற்ப ஏராளமான கருத்துக்களை பதிந்துள்ளனர்.

நாவல்மரம் நிறைந்திருந்த நாவல் காடு
நாகர்களும் வசித்ததாக குறிப்பிடும் ஏடு
நாவலர்கள் வாழ்ந்ததினால் நா-கூர் என்று
நற்றமிழில் பெயர்வைத்தார் நல்லோர் அன்று

என்று நாகூரின் பெயர்க்காரணத்தை நானெழுதிய “அந்த நாள் ஞாபகம்” என்ற நூலில் கவிதை வரிகளில் வடித்திருந்தேன். “நாகூர்” என்ற பெயர் எதனால் வந்திருக்கக் கூடும் என்று ஆழ்ந்து ஆராயுகையில் பல்வேறு சுவாராசியமான தகவல்கள் நமக்கு அரிய பொக்கிஷமாக கிடைக்கின்றன.

தமிழக சுற்றுலா வரைபடத்தில் நாகூர் ஒரு புனித யாத்திரை ஸ்தலம் என்ற வகையில்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றதே அன்றி அதன் தொன்மையான வரலாறு, சங்ககால பெருமை இவற்றினை எடுத்துரைப்பார் எவருமில்லை.

சமயத்தால், வணிகத்தால், தமிழால், வளத்தால் புகழ்பெற்ற ஊர் இது. புகழ்பெற்ற ஆதிமந்தி, ஆட்டனத்தி கதை நிகழ்ந்த ஊர் இது. காவிரிப் பூம்பட்டினம் பேரலையால் சூழப்பட்டு கடலுக்கு இரையானபின், நாகூர் கடல் வாணிகத்தின் நுழைவாயிலாகத் திகழ்ந்ததற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. உரோமானியர், சீனநாட்டார், பர்மியர், சுமத்திரர், அரபியர் என பலநாட்டாரும் கடல் வாணிபம் மேற்கொண்ட தொன்மையான ஊர் இது.

இவ்வூரை நாகரிகத்தின் தொட்டில் என்றாலும் மிகையாகாது. நாகூரின் எல்லையில் ‘பார்ப்பனச் சேரி’ உள்ளது. இது சங்க காலத்திலேயே அங்கு பெருகியோடிய ஆற்றின் அக்கரையில் வந்திறங்கியோர் சேரி அமைத்து தங்கிய இடமாகும். அக்கரையகரங்கள்தான் பின்னர் அக்ரகாரம் என்று மருவின.

“பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்”

என்று மாராத்திய மன்னன் பிரதாபசிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.

சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.

நாகூர் என்ற பெயர் எதனால் வந்தது? நாவல் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இவ்வூர் ஒருகாலத்தில் ‘நாவல் காடு’ என்று அழைக்கப்பட்டது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் அவ்வளவாக தென்படவில்லை.

முன்னொரு காலத்தில் நாகப்பாம்பு நிறைந்திருந்த காடு இது. அதனால்தான் நாகூர் (நாக+ஊர்) என்று அழைக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள் வேறு சிலர். நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திரம் கூறுகிறது. “மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் இங்கு வசித்து வந்தாதால் நாகூர் என்ற பெயர் வந்தது என்ற வாதமும் நமக்கு அவ்வளவாக திருப்தியைத் தரவில்லை.

கூர்மையான நா படைத்தவர்கள் வாழும் ஊர் நா+கூர் என்பது சிலரின் வாதம். அதாவது அறம் பாடத்தக்க புலவர் பெருமக்கள் இங்கு வாழ்ந்ததினால் இப்பெயர் வந்ததாம். பழங்காலந்தொட்டே இசைவாணர்களும் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களும் இங்கு வாழ்ந்ததினால் நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. “நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழ வேண்டும்” என்ற சொல்வழக்கு வெறும் வேடிக்கைக்காக சொல்லப்படுவதன்று.

பதினெட்டாம் நூற்றாண்டில் மட்டும் புகழ்ப்பெற்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் நாகூரில் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சென்ற நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்

“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”

என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே முழுவதுமாக அழிந்து சின்னா பின்னமாகி விட்டதாக முன்னோர்கள் கூற நான் கேட்டதுண்டு.

நாகூருக்கு மிகமிக அருகாமையில் இருக்கும் ஊர் திருமலைராயன் பட்டினம். விஜயநகர வேந்தர்களின் ஆட்சி காலத்தில் சிற்றரசன் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். காளமேகப் புலவன் சினமுற்று பாடிய அறத்தால் அவனது ஆட்சியே சரிந்து அவலத்திற்கு உள்ளானது என்பர்.

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்றுவெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்” என்று பாடிவிட்டுச் சென்றான் காளமேகம்.

அதாவது, கொலைகாரர்கள் வாழும் ஊர். கோள், மூட்டல், வஞ்சகம் செய்தல் முதலியன கற்றிருக்கும் ஊர். காளைமாடுகளைப்போல் கதறித் திரிவோர் நிறைந்த ஊர். நாளைமுதல் மழைபொய்த்து வறண்டு போய் மண்மாரி பெய்யட்டும் என்று அறம் பாடியதால் அந்த ஊரே செழிப்பற்று போனது என்பார்கள்.

புலவர்கள் பாடும் அறப்பாட்டுக்கு பலிக்கக் கூடிய வலிமை உண்மையிலேயே உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அது நமக்கு இப்போது தேவையில்லாதது.

அந்நாளில் நாகூரை வடநாகை என்றே பலரும் அழைத்து வந்தனர்.

“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தறம் நன்கு புலப்படும்.

பாக்கு கொட்டைகள் வைத்து ‘கோலி’ விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த பாலகர்களிடம் பசியினால் வாடிய காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் ‘தொண்டையில் விக்கும்’ என்று பதில் கூறினார்கள். [விற்கும் என்பதை பேச்சுவழக்கில் இன்றளவும் “விக்கும்” என்று கூறக் கேட்கலாம்] உடனே புலவர் வெகுண்டு அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு“ என்பது வரை சுவற்றில் எழுதி விட்டு, பசியாறிய பிறகு எஞ்சிய பகுதியைப் எழுதி முடிப்பதற்கு அங்கு வந்தபோது அவர் வியப்புற்று போனார். காரணம்

“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை“ – என்று பாலகர்கள் தங்கள் தமிழாற்றலை வெளிக்காட்டியிருந்தார்கள்.

நாகூர் பகுதி மக்களின் நாவன்மையும், நவரசப் பேச்சும், நையாண்டிச் சாடலும், நகைச்சுவை உணர்வும் நானிலமும் அறிந்த ஒன்று.

நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்று போற்றப்படும் மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரின் பெயர்க்காரணத்திற்கு கூறும் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.

“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வெஒண்மர முதன்மைமிக் கிருத்தலி னிவ்வூர்
நாக வூரெனுந் தலைமைபற் றியபெயர் நண்ணி
யாக மற்றுநா கூரென மரீஇயதை யன்றே
– (செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)

நாகூருக்கு கல்லெறி தொலைவில் இருக்கும் மேலநாகூரில்தான் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்தன. இப்பொழுது குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் வெறும் புன்னை மரங்கள்தான் பெருகி அடர்ந்திருந்ததாம்.

மற்ற எந்த மரங்களுக்கும் இல்லாத அளவுக்கு புன்னை மரங்களுக்கு தமிழ் இலக்கியங்களில் ஒரு தனி இடம் உண்டு.

“உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை” என்ற நற்றிணை (231) பாடலில் புன்னைமரத்தைப் பற்றிய வருணனையை நாம் காணலாம்.

“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” என்ற திருஞான சம்பந்தரின் பாடலில் புன்னை மரத்தின் பூவானது சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாக வருணனை செய்கிறார்.

நாக மரம் என்பது புன்னை மர இனங்களில் ஒன்றாகும். நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்ற பாரிவள்ளலைப் பற்றி நாம் இலக்கியத்தில் படித்திருப்போம்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி” என்ற சிறுபாணாற்றுப்படை (88-91) பாடல் வரிகள் இச்சம்பவத்தை எடுத்துரைக்கிறது.

புன்னை மரங்கள் காட்சிக்கு மிக எழிலான தோற்றத்துடன் காணப்படும். இம்மரங்கள் ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியன. புன்னை மரத்தின் இலை, மொட்டு, பூ இம்மூன்றுமே காட்சிக்கு மிக அழகாக இருக்கும்.

தென்பகுதியான இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா இவை அனைத்தும் தரைமார்க்கமாக இணைந்து லெமூரியா கண்டம்/ குமரிக் கண்டம் என்று அழைக்கப்பட்டதாய் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஆதாராமாக இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் மண்புழுக்களும், புன்னை மரங்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவை என்பது அவர்கள் எடுத்து வைக்கக்கூடிய ஆதாரங்களில் ஒன்று. நாகூர் போன்ற தென்னிந்தியக் கடற்கரையோரம் காணப்பட்ட புன்னை மரங்கள்தான் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அடர்ந்திருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் நாகர் இன மக்களின் இங்கு வாழ்ந்ததினாலேயே நாகர்+ஊர் = நாகூர் என்றானது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர்கள் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்கி வைக்கிறார்கள்.

நாகர்கள் என்றால் யார்? இதனை முதலில் தெரிந்துக் கொள்வது அவசியம். நாகர்கள் யார் என்பதிலேயே எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் வரலாற்றாசிரியர்களுக்கு இடையே நிலவுகின்றன.

நாகர் என்னும் சொல் வடமொழியிலும் உண்டு. தமிழிலும் உண்டு. சூழ்நிலைக்கேற்ப சொற்களின் பொருள் மாறுபடும். வடமொழியில் பாம்பு, ஒலி, கருங்குரங்கு, யானை, வானம். வீடு பேற்று உலகம், மேகம் என பொருள்களைத் தரும். தமிழ் மொழியில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.

நாகர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அ|ஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர் என்று சிலரும் நாகர்கள் தமிழகத்து பழங்குடியினர் என்று சிலரும் பகர்கின்றனர். நாகநாட்டவர் தமிழ்நாட்டுக் கடற்கரையூர்களான நாகூர், நாகப்பட்டினம் (நாகர்+பட்டினம்), நாகர்கோவில் வழியே தமிழகத்தில் வந்து குடியமர்ந்தனர் என்கின்றனர் வேறு சிலர்.

ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றும், நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்றும் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள் என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.

முரஞ்சியூர் முடிநாகராயர், முப்பேர் நாகனார், மருதன் இளநாகனார்,தீன்மிதி நாகனார், வெண்நாகனார், அம்மெய்யன் நாகனார், வெண்நாகனார், நாகன் மகன் போத்தனார், எழூஉப்பன்றி நாகன் குமரனார், நாலக் கிழவன் நாகன் என்றெல்லாம் புலவர், புரவலர் பெயர்களை தமிழிலக்கியத்தில் நாம் காண முடிகின்றது.

சங்க காலத் தமிழகத்தில் நாகர், இயக்கர், திரையர், கந்தருவர் என்னும் இனத்தவர் பெருமளவில் வாழ்ந்தனர் என்றும், இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே என்றும் அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

நாகர் புத்த மதத் தொடர்புடன் நுழைந்தனர். ‘புத்தரும், மகாவீரரும் நாக இனப் பெரியோர்களே’ என்று சாதிக்கிறார் கா.அப்பாத்துரை. தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால்தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபைச் சார்ந்தது என்றும், புத்தநெறி வங்கத்திலும், தென்னாடு, இலங்கை, பர்மா, சீனா முதலிய இடங்களில் பரவியதற்கு நாகூர் போன்ற இடங்களில் வசித்த நாகமரபினரே காரணம் என்றும் இவர் வாதிடுகிறார்.

புத்த துறவிகளின் நடமாட்டமும், புத்த விகாரமும் இப்பகுதியில் காணப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சீனப் பயணி யுவான் சுவாங் (கி.பி.629-645) தன் பயணக் குறிப்பேட்டில் அசோகச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட புத்தவிகாரத்தை நாகையில் கண்டதாக எழுதி வைத்துள்ளார். கி.மு. 302-ஆண்டுக்கு முன் வந்த சிரியா நாட்டு மெகசுதனிசு முதல் எகிப்து தாலமி, சீன நாட்டுப் பாகியான், இத்-சிங் முதலியோர் இப்பகுதியை பற்றிய மிகச் சுவையான தகவல்களைத் தந்து உதவியுள்ளனர்.

“சுந்தர பாண்டியன் என்னும் தமிழ் மன்னன் நாகர் குலப் பெண்ணை மணந்தான். அதனால் இவன் சுந்தரநாகன் – சுந்தர பாண்டியநாகன் எனப்பெற்றான்” என்று மார்க்கோ போலோ தம் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.

நாகரிகத்திலும், பண்பிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கியவர்கள் நாகர்கள் என்றால் அது மிகையல்ல. “நாகரிகம்” என்ற சொல்லே “நாகர்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பர். நாகர்கள் வகுத்த எழுத்து முறையே தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒருபுறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவியை கண்டுபிடித்தவர்களும் நாகர்கள்தான். [நாகூர் ‘நகரா மேடை’யில் முழங்கப்படும் அதே நகராவைத்தான் இது குறிக்கிறது]

நாகசுரம் (நாதஸ்வரம்) என்ற வாத்தியக்கருவி நாகூர் நாகை போன்ற இடங்களில் வாழ்ந்த நாகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாகசுரம், தவில் போன்ற இசைக்கருவிகள் ஆரியப் பிராமணர்களுக்கே உரித்தான கலைகள் அல்லவா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நீங்கள் முணுமுணுப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது.

ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று விதிவிலக்கு பண்டுதொட்டு இருந்து வருகிறதென்ற உண்மை பெரும்பான்மையான பிராமணர்களே அறிந்திராத உண்மை. மனுதர்ம சாத்திரம் 4-ஆம் அத்தியாயம், 15-ஆம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது…. இதுபோன்ற சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது..

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறிய காரணத்தால் பார்ப்பனர் சிலர் ஊராரால் விலக்கப்பட்டு ஊர் எல்லைக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தியினை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

சங்க காலத்தில் இசைப்பயிற்சியில் கைத்தேர்ந்தவர்களாக இருந்த பாணர், நாகர் குலத்தினரே என்கிறார் மற்றொரு ஆய்வாளர். எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்று இலக்கியத்தில் நாம் காணும் பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவுகிறது. சீவக சிந்தாமணியில் இடம்பெறும் “பாணியாழ்”, “பாண்வலை”, “பாணுவண்டு” என்ற சொற்களை ஆராய்ந்தால் பாண் என்னும் சொல், பாட்டு என்னும் பொருளிலேயே கையாளாப்பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் “பாண்-பாட்டு” என்ற சொல்லைக் காண முடிகின்றது.

நாகூருக்கும் முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழுக்கும் சங்க காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு. நுண்கலை வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் “இசை நுணுக்கம்” என்ற நூலைப்படைத்து நான்காம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. (இவர் கே.பி.சுந்தரம்பாளின் கணவர்) இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர், ஆம். செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம்தான் இசை பயில அனுப்பி வைத்தார். அதனால்தான் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் எழுகிறது.

இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் வாழ்ந்த ஊர் நாகூர். உஸ்தாத் சோட்டு மியான், உஸ்தாத் நன்னு மியான்,உஸ்தாத் கவுசு மியான், உஸ்தாத் தாவூத் மியான் என்று எண்ணிலா இசைவாணர்களின் பெயர்களை எழுதிக் கொண்டே போகலாம்.

உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் . கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவரான நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். இசைமணி எம்.எம்.யூசுப், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா போன்ற எத்தனையோ இசை வல்லுனர்களை பெற்றெடுத்த ஊர் நாகூர்.

நாகூரின் பெயர்க்காரணம் எதுவாக இருப்பினும் முத்தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், கடல் வாணிபத்திற்கும் தொன்மையான இவ்வூரின் பங்களிப்பு அளவிட முடியாதது. கடல் கடந்து இவ்வூரின் பெயரில் சங்கம் வைத்து செயல்படும் அன்பர்கள் மார்தட்டி கொண்டாடும் அளவுக்கு அளவிடற்கரிய பெருமைகள் உள்ளன.

இங்குள்ள மக்களுக்கு வஞ்சக குணங்கள் இருப்பதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தூய்மையான நெறியில் செல்லும் அவர்கள் அச்சமற்ற தன்மை கொண்டவர்கள். நம் பெருமான் உறையும் நாகூரில் வாழும் இவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். பாவங்கள் புரிவதில்லை.

இதை நான் சொல்லவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூர் புராணம் என்ற தன் நூலில் (நகரப்படலம்:4) குறிப்பிடுகிறார்.

“பஞ்ச மற்றது படர்பிணி யற்றது பவஞ்செய்
வஞ்ச மற்றது வறுமைமற் றற்றது, வாழ்க்கை
யஞ்ச மற்றது தீவினை யற்றதன் றாகா
நஞ்ச மற்றது நம்பெரு மானுறை நாகூர்”

 

Tags: , ,