RSS

Category Archives: இயற்றமிழ் வளர்த்த நாகூர்

குடத்திலிட்ட விளக்குகள்


Screenshot_20200129_084709

நாகூர் எத்தனையோ எண்ணிலடங்கா படைப்பாளிகளை எழுத்துலகில் களம் இறக்கியிருக்கிறது. ஆன்மீக எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள்,  மொழிபெயர்ப்பு படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், திரைப்பட வசனகர்த்தாக்கள், கவிராஜர்கள் இப்படியாக பன்முகப் படைப்பாளிகள் எழுத்துலகில் வலம் வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னால் ஒரு சில பெயர்கள் விட்டுப்போய் விடுமோ என்ற பயத்தினால் அந்த நீண்ட பட்டியலை நான் குறிப்பிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அதிகமான எண்ணிக்கையில், அதாவது 55 நூல்கள் வெளியிட்டு சாதனை படைத்திருக்கும் எனது நண்பர் நாகூர் ரூமியைப் பற்றி நானிங்கு சொல்ல வேண்டியதில்லை.  நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே கிடைக்கிறது. இவருக்கு மாத்திரம் எப்படி 36 மணிநேரம் வாய்க்கிறது என்றெல்லாம் நான் பொறாமை பட்டதுண்டு. ரூமிலேயே இருந்துக்கொண்டு எழுதுவதால் இவருக்கு ரூமி என்று பெயர் வந்ததோ என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. (அப்ப ஹோமர் என்ன Home-ல் இருந்துக் கொண்டு எழுதியவரா என்றெல்லாம் கேட்டு படுத்தக்கூடாது.,ஆமாம்_

நான் இதுவரை இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறேன். மூன்றாவது ஆய்வுநூல் எழுத எனக்கு 5 வருடங்கள் பிடித்தது. இன்னும் அந்த நூல் வெளிவந்த பாடில்லை. ஒரு நூலை பதிப்பிப்பதற்குள் தாவு கழன்று, நாக்கு வெளியே தள்ளி விடுகிறது. நான் பணக்கட்டைச் சொல்லவில்லை மெனக்கெட்டைச் சொல்கிறேன்.

துபாயில் இருந்துக்கொண்டு ஒரு பெரிய வாசகர் பட்டாளத்தைச் சமாளித்துக் கொண்டு எழுதிக் குவிக்கும் கணிணி பிதாமகன் ஆபிதீன் கூட இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறார். (உயிர்த்தலம், இடம்). “ஓவியா ஆர்மி” போல் நிச்சயம் “ஆபிதீன் ஆர்மி”யும் இருக்க வேண்டும்.

நாகூர் ஈன்ற மற்றொரு பிரபலம் சாரு நிவேதிதா 53 நூல்களுக்கு மேல் எழுதியிருப்பதாக என் கணிப்பு.

ஆனால் நாகூரைச் சேர்ந்த ஒருவர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்போதோ சதம் அடித்து விட்டார். இவரைப் பற்றி 2012-ஆம் ஆண்டில் என் வலைத்தளத்தில் “வெளிச்சத்திற்கு வராத படைப்பாளிகள்” என்ற குறிப்போடு ஒரு பதிவு இட்டிருந்தேன்.

1a

டி.என்.சேஷனைப் பற்றி நமக்குத் தெரியும். டி.என்.இமாஜானைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.

கவிஞர் சலீமை “நாகூரின் தாகூர்” என்று புகழ்வார்கள். ஆனால் இவரை நாகூரின் அழ.வள்ளியப்பா என்பதா அல்லது நாகூரின் தமிழ்வாணன் என்பதா என்று அடைமொழி இடுவதில் எனக்கு பெரும் குழப்பம். நேரு மாமா போன்று இவருக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம் போல. அதனால்தான் குழந்தைகளுக்காக நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.என். இமாஜான் ஒரு குட்டி தமிழ்வாணன். “Master of All Subjects” என்று கூட சொல்லலாம். சிங்கையில் இருந்துக்கொண்டு சங்கத்தமிழ் நாதம் எழுப்பிக்கொண்டு, சந்தைப் படுத்தத் தெரிந்த சிந்தைக்கினியவர்.  நூற்றுக்கு மேலான நூல்கள் எழுதியிருக்கிறார். ஒண்ணேகால் சதம் நெருங்கி விட்டதாகக் கேள்வி.

நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு and What Not..? 2006-ஆம் ஆண்டு, இவர் எழுதிய 40 நூல்களை சிங்கப்பூரில் ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத் தெரிந்த சீரான ஆய்வாளர், தமிழாசிரியர்.

15.08.2015 தேதியன்று சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி டாக்டர் டி,என்,இமாஜான் எழுதிய 100 நூல்களில் வெளியீட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை புதுக்கல்லூரி மாணவர்.  திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த வசனகர்த்தா தூயவன் இவரது தாய்மாமன். இவர்களது பரம்பரையில் வந்த எழுத்துலக வேந்தர்கள் பட்டியலிட்டு புகழ் பாடினால் பக்கங்கள் காணாது.

எதுகை மோனையுடன் கூடிய இவருடைய நூலின் தலைப்புகளைப் படித்தால் அதுவே ஒரு கட்டுரை போல் இருக்கிறது. உள்ளடக்கம் என்னவென்பதை இவருடைய நூலின் தலைப்பே காட்டிக் கொடுத்துவிடும். லேனா தமிழ்வாணனுடன் இணைந்து பல நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்..

இவரிடம் சென்று “எங்கே நீங்கள் எழுதிய நூல்களின் தலைப்பை வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்?” என்று கூறிப் பாருங்கள். அவர் “பெக்கெ..பெக்கெ..” என்று பாண்டியராஜன் போன்று முழிப்பது நிச்சயம்.

வார்த்தையை மடக்கி எழுதத் தெரிந்தாலே “கவிஞர்” என்று அடைமொழி இட்டுக் கொள்வதும்,  தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் நபர்கள் நிறைந்த இந்த உலகத்தில் இவரைப் போன்ற சிலர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதிப் புரட்சி செய்வது பாராட்டத்தக்கது.

குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய சிலர் இன்னும் குடத்திலிட்ட விளக்காக இருப்பது துரதிருஷ்டமானது.

(பின்குறிப்பு: மேலேயுள்ள புகைப்படம் 3D புகைப்படம் அல்ல. சாதாரணப் புகைப்படம்தான். ஆனாலும் முனைவர் பேரா. நத்தர்சா மரைக்கார் அவர்களுடைய பதிவிலிருந்து திருடி ‘கிராப்’ வெட்டி அடியேன் பதிவேற்றம் செய்தது.  அன்னார் என்னை மன்னிப்பாராக)

முனைவர் டி.என்.இமாஜான் பதிவிட்ட நூல்களை இங்கும் அங்கும் தேடி ஓரளவு வரிசைப்படுத்தி இருக்கிறேன். விட்டுப் போனது இன்னும் உண்டு:

டி.என்.இமாஜான் இதுவரை எழுதியுள்ள நூல்கள்!

1. குண்டக்க மண்டக்க ஜோக்ஸ்
2. எடக்கு மடக்கு ஜோக்ஸ்
3. குழந்தைகளுக்குப் பிராணிகள் சொல்லும் ஜோக்ஸ்
4. பழமொழி ஜோக்ஸ் பாகம் -1
5. பழமொழி ஜோக்ஸ் பாகம் – 2
6. பேய் ஜோக்ஸ்
7. இமாஜான் ஜோக்ஸ்
8. ஆஸ்பத்திரி ஜோக்ஸ்
9. புருஷன்-பொண்டாட்டி ஜோக்ஸ்
10. சிரிப்பாய்ச் சிரியுங்கள்
11. நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்
12. செய்திகள் தரும் சிரிப்புகள்
13. சிறுவர் சிந்தித்துச் சிந்திய சிரிப்புகள்!
14. கணிப்பொறியில் சிரிப்புப் பொறிகள்!
15. வயிறு வலிக்கச் சிரிக்கலாம் வாங்க!
16. கெக்கெக்கெக்கே…! கெக்கெக்கெக்கே…!
17. கிச்சு….! கிச்சு…!
18. தமாஷோ தமாஷ்!
19. படித்தாலே சிரிப்புதான்!
20. மிஸ்டர் நையாண்டி!
21. பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்!
22. இருமுறை சிரிக்க இரட்டைச் சிரிப்புகள்!
23. ரசித்துச் சிரிக்க சினிமா பற்றிய சிரிப்புகள்!
24. ஒரே ஒரு வார்த்தையில் பலவகை சிரிப்புகள்!
25. சிரிப்புச் சொட்டும் ஒரு பக்கக் கதைகள்!
26. ஒரு பூந்தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகள்! (கவிதைகள்!)
27. வாங்களேன்! சிரிங்களேன்
28. படிக்கலாம்! சிரிக்கலாம்!
29. சிரிக்கத்தான் வாரீகளா!
30. சிரிப்பு மழை!
31. சிறப்பான வாழ்க்கைக்குச் சிந்தனை முத்துக்கள்!
32. நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!
33. நகைச்சுவையூட்டும் நாடகங்கள்!
34. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-1
35. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-2
36. புன்னகை பூக்கும் கவிதை மின்னல்கள்!
37. பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள்!
38. இதழ்களில் எழுதிய இன்சுவைப் படைப்புகள்!
39. இனிமையில் நனைந்த கவிதை நறுக்குகள்!
40. குறும்பு கொப்பளிக்கும் கேள்வி – பதில்கள்!
41. சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!
42. சிரித்துச் சிந்திக்க சிந்தனை மொழிகள்!
43. புன்னகை மன்னன் பராக்! பராக்!
44. குறுஞ்செய்திக் குறும்புகள்!
45. நகைச்சுவை தரும் நன்மைகள்!
46. சிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்!
47. மூளையை முடுக்கிவிடும் முத்தான புதிர்கள்!
48. வாய் வலிக்கச் சிரியுங்கள்!
49. சிரிப்புக்குப் பஞ்சமில்லை!
50. சிரிக்கும்வரை விடமாட்டேன்!
51. எழுத்து விளையாட்டு!
52. வார்த்தை விளையாட்டு!
53. உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
54. சிந்தையைச் சீண்டும் சுடோகுப் புதிர்கள்!
55. விவேகமான விடுகதைகள்!
56. சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
57. அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்!
58. சிரித்தாலே இனிக்கும்!
59. சுட்டிகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
60. சிரிப்பூட்டும் செய்திகள்!
61. நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள்!
62. வேடிக்கையான வினாடி-வினா!
63. பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
64. மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
65. நகைக்க வைக்கும் நாட்டு நடப்புகள்!
66. சிந்திக்கச் செய்யும் சுடோகுப் புதிர்கள்!
67. தம்பி தங்கைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
68. இளையர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
69. பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!
70. நகைச்சுவைக் கதம்பம்!
71. கணக்கிட்டு நிரப்பும் காக்குரோ புதிர்கள்!
72. கூட்டலால் நிறைக்கும் காக்குரோ புதிர்கள்!
73. ஒரேயொரு வார்த்தையில் பலவகைப் புதிர்கள்!
74. ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள்!
75. சிரிப்பூக்கள்!
76. சாமுராய் சுடோகுப் புதிர்கள்!
77. சிந்தித்துப் பூர்த்திசெய்ய சாமுராய் சுடோகு!
78. இருமுறை சிந்திக்க இரட்டைப் புதிர்கள்!
79. பலவகையில் யோசிக்க இருவகைப் புதிர்கள்!
80. குசும்பு கொப்பளிக்கும் கேள்வி-பதில்கள்!
81. புத்தியைப் புடமிடும் ஃபுடோசிகிப் புதிர்கள்
82. புத்தியைப் புதுப்பிக்கும் புதுமையானப் புதிர்கள்!
83. வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்!
84. சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள்!
85. வாய் விட்டுச் சிரிங்க! (சிரிப்பு மஞ்சரி)
86. பொது அறிவை வளர்க்கும் விநாடி-வினா-விடை!
87. அறிவைச் செறிவூட்டும் அறியாச் செய்திகள்!
88. இலக்கியத்திறன் வளர்க்கும் இன்பத்தமிழ்ச் செய்திகள்!
89. படிப்பினையூட்டும் பல்சுவைக் கேள்வி-பதில்கள்!
90. தயவுசெய்து சிரியுங்கள்!
91. உங்களைப் பண்படுத்தும் உன்னதப் பொன்மொழிகள்!
92. உலகறிவை ஊட்டும் ஏராள வினாடி=வினா!
93. அறிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் வினா-விடைகள்!
94. வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்!
95. பிரபலங்கள் செய்த குறும்புகள்!
96. விளையாட்டு வினாடி-வினா-விடை!
97. திரைப்படத் தகவல்களில் வினாடி-வினா-விடை!
98. பொது அறிவுப் பூங்கா!
99. சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்!
100. சிரிக்காவிட்டால் விடமாட்டேன்!
101. சிரிப்போ சிரிப்பு (குலுங்கக் குலுங்கச் சிரிங்க!)
102. சமர்த்தாய் யோசிக்க சதுரக் கட்டப் புதிர்கள்!
103. நாட்டுப்புற இலக்கியத்தில் இனிய விஷயங்கள்!
104. எளிமையான இலக்கண விருந்து! (நன்னூல்-எழுத்ததிகாரம்)
105. அறிவார்ந்த கேள்விகளும் ஆக்கபூர்வ பதில்களும்!
106. சத்தம்போட்டுச் சிரிக்க – சிரிக்க!
107. தமிழக வரலாற்றில் தலையாயத் தகவல்கள்!
108. காப்பிய – நீதி இலக்கியங்களில் கருத்தான விஷயங்கள்!
109. எண்களால் அமையப்பெற்ற எண்ணற்றப் புதிர்கள்!
110. சிங்கப்பூரில் நடந்த சிரிப்புச் சம்பவங்கள்!
111. விகடத்தில் விளைந்த வார்த்தை ஜாலங்கள்!
112. உங்களுக்கு ஊக்கமளிக்கும் உயர்வானப் பொன்மொழிகள்!
113. நன்னூல் சொல்லதிகாரத்தில் சொல்லத்தக்கச் செய்திகள்!
114. தமிழ்மொழி இயலின் போக்கில் அறிவியல் விஷயங்கள்!
115. கரும்பாக இனிக்கும் குறும்புகள்!
116. கத்திச் சிரிக்க சிரிப்புக் கொத்து!
117. துளித்துளியாய் கவிதைத்துளிகள்!
118. களிப்பூட்டும் துளிப்பாக்கள்!
119. சிலிர்ப்பூட்டும் சின்னஞ்சிறு கவிதைகள்!

120. கருத்தான கேள்விகளும் கரும்பான பதில்களும்!
121. புன்சிரிப்பூட்டும் சென்ரியூ கவிதைகள்!
122. மொழி பெயர்ப்போருக்கான முக்கிய ஆலோசனைகள்!
123. சங்க இலக்கியத்தில் சுவையான சங்கதிகள்!
124. உள்ளே போங்க நல்லா சிரிங்க!
125. இமாஜானின் சிரிப்புச் சேட்டைகள்!
126. ஒன்று முதல் நூறுவரை ஒருங்கிணைந்த தகவல்கள்!
127. தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான தகவல்கள்!
128. கவிதைகளில் காணப்பெறும் இலக்கண இனிமைகள்!
129. கடந்த ஆண்டுகளில் நடந்த உயர்வான சம்பவங்கள்!
130. சிறப்புப்பெயர்கள்-புனைபெயர்கள் பற்றிய சுவையான தகவல்கள்!
131. முதன்முதலாக நடந்த முக்கியச் செய்திகள்!
132. அடைமொழிப் பெயர்கள் பற்றிய அருமையான தகவல்கள்!
133. திரைப்படங்கள் பற்றிய தெரியாத தகவல்கள்!
134. தமிழ்த்தேன் துளிகள்!
135. முத்து முத்தான மூன்றடிக் கவிதைகள்!
136. கருத்தைக் கவரும் கடுகளவுக் கவிதைகள்!
137. இக்கால இலக்கியத்தில் இனிய பக்கங்கள்!
138. பக்தி இலக்கியத்தில் சுவையான பகுதிகள்!
139. பொறிப்பொறியாய் கவிதைப் பொறிகள்!
140. இமாஜானின் இனிய குறும்புகள்!
141. குதூகலமூட்டும் குறுங்கவிதைகள்!
142. படித்தவையில் பிடித்தவை!
143. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்!
144. ஒரேயொரு வாக்கியத்தில் இருநூறு கதைகள்!
145. பள்ளிக்கூடச் சிரிப்புகள்!
146. அப்துல் கலாமின் அறிவார்ந்த சிந்தனைகள்!
147. கேட்கப்படாத கேள்விகளும் கேள்விப்படாத பதில்களும்!
148. எண்களின் அடிப்படையில் எக்கச்சக்க விஷயங்கள்!
149. பலவகை எண்களில் பல்சுவைத் தகவல்கள்!
150. சிரித்துவிட்டால் விட்டுவிடுவேன்!
151. இஸ்லாமியச் சார்பில் இனிமைச் செய்திகள்!
152. உங்களின் உயர்வுக்கான உன்னதக் கேள்வி – பதில்கள்!
153. பொன்னான பெண்மொழிகள்!
154. படித்தேன் படி-தேன்
155. தேசத்தந்தைகளின் சீரிய சிந்தனைகள்!
156. பேசாமல் சிரியுங்கள்!
157. ஆண்கள் பற்றிய அருமையான மொழிகள்!
158. பொது அறிவுக்குப் புதுவிருந்து!
159.. பொதுஅறிவுப் புதையல்!
160. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி பதில்கள்!
161. புதிரான கேள்விகளும் புதிதான பதில்களும்!
162. இல்லத்தில் உதவும் நல்ல குறிப்புகள்!
163. விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்!
164. மலைக்க வைக்கும் மனிதர்கள்!
165. எள்ளலான லிமரைக்கூ கவிதைகள்!
166. அறிந்திராத கேள்விகளும் அறிஞர்களின் பதில்களும்!
167. பறவைகளைப் பற்றிய பல்சுவைச் செய்திகள்!
168. சிலேடைச்சொல் விளையாட்டு!
169. சொற்சிலம்ப விளையாட்டு!
170. அழகான ஹைபுன் கவிதைகள்!
171. எந்த நாடு? என்ன பேரு?
172. குறும்பான குக்கூ கவிதைகள்!
173. பூச்சிகளைப் பற்றிய புதுமையான செய்திகள்!
174. பகடியான பழமொன்ரியு கவிதைகள்!
175. நொடிக்கதைகள் – 100
176. சிறப்பான தலைப்புகளில் சிறந்தோரின் சிந்தனைகள்!
177. வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துகள்!

178. வாழ்க்கைக்கு வலிமையூட்டும் கேள்வி-பதில்கள்!
179. பொன்மொழிச் சிரிப்புகள்!
180. இரசனையான வசன கவிதைகள்!
181. காதலைப் பாடும் கஜல் கவிதைகள்!
182. தெரிந்த பிரபலங்களும் தெரியாத சம்பவங்களும்!
183. தெரியாத பிரபலங்களும் தெரியவேண்டிய சம்பவங்களும்!
184. அரும்பெரும் அறிஞர்களும் அறிவூட்டும் சம்பவங்களும்!
185. மிகச்சிறுகதைகள்!

  • #அப்துல்கையூம்

 

 

நாகூரும் நற்றமிழும் பாகம் -1


 

நாகூரில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை தொடராக எழுதலாம் என ஒர் எண்ணம்.

“ரொம்பத்தான் இஹ பீத்திகிறாஹா. எங்க ஊருலேயும்தான் இப்படிச் சொல்லுவாஹா” என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் இல்லை,.

“பீத்திக்கிறீங்க” என்று சொல்றீங்க பாத்தீங்களா இதுவும் தூய தமிழ்ச் சொல்தான். பீற்றுதல் என்றால் அகம்பாவத்துடன் பெருமை பேசுதல்.

நான் நாகூரோடு சம்பந்தப்பட்டவனாதலால் நானறிந்த வட்டார வழக்கைத்தான் நான் சொல்ல முடியும்.. உங்கள் ஊரோட சம்பந்தப்பட்ட சொல்லாடல்களை நீங்களும் தாராளமாக பகிரலாம். இதில் பீத்திக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே சார்.

நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்.

“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”

“எனக்கு உடம்புக்கு ஏலல”

நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.

“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று

இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:

எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து

இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.

இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.

“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.

“நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி” (புற:376:11).
“நல்கும் வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கு வாய் ஒல்கல் உறும்” (தி.நூ:17:3).
“நைந்து வீழும் முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்தே” (கோவை:61).: “தேய்ந்த நுண்ணிடை நைந்து உகச் செப்பினை” (சீவ:3:270).

இதுபோன்ற சொல்லாடல் பழந்தமிழ்ப் பாடல்களில் நாம் கான முடிகின்றது.

“ஏலலே” என்பது சங்கத்தமிழ்ச் சொல் என்பதை உங்களுக்கு நான் புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.

– அப்துல் கையூம்

(இதில் சில கருத்துக்கள் ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் நான் எழுதியதுதான்)

 

இசை சூழ்ந்த ஊர் – நாகூர்


Vikatan 1

”என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. நாங்க வசித்து வந்த ஏரியா ஒரு குடிசைப் பகுதி. எப்போதும் கலகலப்புடன் இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நாட்டு தொடக்கப் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்ப படிப்பு இருந்தது. நாங்க வசித்த தெருவின் பெயர்த கொசத் தெரு. அதை அறிவிக்கும் போர்டு தகரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவலில் நாகூரைப்பற்றி எழுத அந்தத் தெருவுக்குச் சென்றபோது, இன்னமும் அதே இடத்தில் அந்த போர்டு இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

Vikatan 2

 எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக்  கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும்.  உலகில் நான் கண்ட பல இசைகளில் ஹனிபாவின் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 

Vikatan 3 கடல் காற்றின் சத்தம், இரவில் கொத்துப் புரோட்டா போடும்போது எழும் ஓசை என எப்போதும் எங்கள் ஊரைச் சுற்றி பல இசை சூழ்ந்தே இருக்கும். நான் பல ஊர்களுக்குச் சென்று இருக்கிறேன். நாகூரைத் தவிர வேறு எங்கும் கொத்துப் புரோட்டாவில் அப்படி ஒரு சுவையை ருசித்தது இல்லை. மதுரைக்கு எப்படி ஒரு சிறப்பான கலாசாரம், உணவு என்று இருக்கிறதோ.. அதேபோல் நாகூருக்கும் தனிக் கலாசாரம் உண்டு. ‘தம்ரூட்’ என்னும் இனிப்புப் பண்டம், பாக்க அல்வாவைப் போலவே இருக்கும். ஆனால், அல்வா கிடையாது. அதனுடைய சுவையே தனி. நாகூரை விட்டால் வேறு எங்கும் தம்ரூட் கிடைக்காது.

Vikatan 4முத்தமிழும் கலந்த கலாசாரம்  நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள். 

Vikatan 5

 எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 200 புலவர்களுக்கு மேல் வசித்து பல வரலாற்று நூல்கள், கவிதைகள், பாடல்கள் என பல அரிய படைப்புகள் இயற்றியிருக்கிறார்கள். அதனால் நாகூருக்கு புலவர் கோட்டை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. மறைமலை அடிகளுக்கு ஆசிரியராக இருந்தவர் நாகூரைச் சேர்ந்தவர்தான். கிட்டத்தட்ட 10,000 பாடல்களுக்கு மேல் நாகூரில் இருந்து இயற்றி வெளிவந்து இருக்கிறது. பாட்டைப் போலவே  நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் எனப் பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்.

 நாகூர் தர்கா மிகவும் பிரசித்தம் பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது மனக் குழப்பம், கஷ்டம் வந்தால் தர்காவுக்குச் சென்று  அமர்ந்துவிடுவேன். உடனே மனம் ஆறுதல் அடைந்து விடும். அதேபோல் அங்கு குளிர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. ஏ.சி போட்டால்கூட அப்படி ஒரு இதமான காற்று வராது. குளிர் காற்று, கூட்டமான புறாக்கள் என அந்த இடமே பார்க்க அமைதியாக இருக்கும்.

மூன்று மதங்களும் ஒன்றாக இருக்கும் கலாசாரம் நாகூரில் உண்டு. தர்கா, சிவன் கோயில், சர்ச் என மூன்றும் ஒன்று சேர்ந்த இடம் நாகூர்தான். மத வித்தியாசம் இல்லாமல் மரபை உடைத்து நான் எழுத முடிந்ததற்கு காரணம், இங்கு சிறுவயதில் வாழ்ந்து பதிந்த உணர்வுகள்தான். 40 ஆண்டுகள் கழித்து எங்கள் ஊரைப் பற்றி ‘எக்ஸைல்’ நாவலில் எழுதுவதற்காக அங்கே சென்று இருந்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ இன்னமும் நாகூர் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. மக்களின் அன்பும் கூட!”

 நா.சிபிச்சக்கரவர்த்தி

 படங்கள்: செ.சிவபாலன், சொ.பாலசுப்பிரமணியன்

நன்றி : என் விகடன்

 

துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு


Gulam Kadir Navalar

சாகித்திய அகாதெமி நிறுவனம் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களை போற்றும் வண்ணம் அரிய பல நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வரிசையில் டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்களது கைவண்ணத்தில் குலாம் காதிறு நாவலரைப் பற்றிய சிறந்த நூலொன்றை பதிப்பித்துள்ளது.

டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதித் தன் எழுத்துப் பணியை தொடங்கியவர். மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புக்களும், ஒரு புதுக்கவிதைத் தொகுப்பும், இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளிவந்துள்ளன. கிரேக்க இதிகாசக் கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சமயம், தமிழ்த்துறைகள் வாயிலாக ‘வீரசைவம்’ குறித்து ஆய்வு நடத்தி ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நூலைப் படைத்த இவருக்கு பொதுவாக ஒட்டுமொத்த தமிழிலக்கிய ஆர்வலர்களும், குறிப்பாக நாகூர்வாழ் மக்களும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை எத்தனையோ தமிழறிஞர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர். பற்பல நூல்களை வெளியிட்டுள்ளனர். நாவலரின் தமிழ்ப்புலமையையும், சமயோசித புத்திகூர்மையும், சொல்வன்மையையும், மொழியாற்றலையும் இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ள முறை நம் கவனத்தை ஈர்க்கிறது. இதுவரை படித்திராத பல சுவராசியமான நிகழ்வுகளை நமக்கு வழங்குகிறார் நூலாசிரியர். ஈழத்தீவில் நாவலருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு அழகான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வை அப்படியே இங்கு வடித்திருக்கிறேன் :

ஈழத்தீவில் நாகூர் குலாம் காதிறு நாவலர்

“நாவலர்” என்ற பட்டம் குலாம் காதிறுக்கு வழங்கப்பட்ட பின்னரும் அவரை ஒரு சிலர் முழுமையாக “நாவலர்” என்ற பட்டத்திற்குடியவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைக் குறித்து கேலி பேசவும் கிண்டல் செய்யவுமாக இருந்தனர். இது தமிழ் இலக்கியவாதிகளிடையே அன்றைக்குமிருந்த “புலமைக் காய்ச்சலால்” ஏற்பட்ட எரிச்சல் என்பதைத் தவிர வேறன்று. தமிழுலகில் அன்று “நாவலர்” என்ற பெயருக்குரியவராகக் குறிப்பிடப்பட்டவர் யாழ்ப்பாணம் வண்ணை மாநகர் ஆறுமுக நாவலர் ஒருவரே!

இதனிடையே குலாம் காதிறு, “ஆரிபு நாயகம்” என்ற காவியத்தை இயற்றி நிறைவு செய்துவிட்டார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து வேறு எவரையும் நாவலர் என்றழைக்க விரும்பாத யாழ்ப்பாணத் தமிழர்கள், இவரை அழைத்து சோதித்துப் பார்க்க நினைத்தனர். அதற்கேற்றவாறு அங்குள்ள இவருடைய அபிமானிகளின் ஏற்பாட்டில் 1896-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணை மாநகரில் அதுவும் நாவலர் கோட்டத்தில் ஆறுமுக நாவலருடைய மருகர் பொன்னம்பலம் பிள்ளையின் தலைமையில், குலாம் காதிறு நாவலருடைய இலக்கியப் படைப்பான “ஆரிபு நாயகம்” அரங்கேற்றம் நடைபெற்றது.

சிறந்த தமிழ்ப் புலவரான பொன்னம்பலப் பிள்ளையும் அவருடைய குழுவினரும் அரங்கேற்றம் ஆகின்ற “ஆரிபு நாயக”த்தை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தனர். ஏறத்தாழ இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகின்ற முனைவர்பட்ட நேர்முகத் தேர்வைக் காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது அந்த அரங்கேற்ற அவை.

காவிய அரங்கேற்றம்

ஆரிபு நாயகத்தின் செய்யுட்களைப் பாடி, விரிவுரை நிகழ்த்தி வருகையில், “மாதுவளை வனங்கள் சூழ்ந்த மதினாவின் ரெளலா வந்தார்” என்ற அடியை குலாம் காதிறு நாவலர் பாட, அவரை அவமதிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் ஒரு புலவர் அவரை இடைமறித்து

“நாகூர்ப் புலவரே! மன்னிக்க வேண்டும். ‘மாதுவளை’ என்றால் ஆபாசச் சொல்லாக எமக்குப் படுகின்றதே”

என்று கூறி ஏளனமாகச் சிரித்தார். குலாம் காதிறு நாவலருக்கு, தாம் செய்யுளில் மாதளை என்ற சொல்லை ‘மாதுவளை’ என்று பாடியிருப்பதைக் குறிப்பிட்டுத் தவறான, ஆபாசமான பொருள் கற்பித்து, ஒரு தமிழ்ப் புலவர் தம்மிடம் கேள்வி கேட்பது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவரை நோக்கி புன்முறுவல் பூத்தவண்ணம்,

“புலவீர், அமரும்! கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்ற உற்றகலை மடந்தை உரையிலும் பெரியீரோ நீர்! உமது இலக்கண அறிவு இதற்கு விளக்கம் சொல்லவில்லையோ? கேளுமையா, புலவரே! மாதுளங்கம் என்ற சொல் வடமொழிச் சொல். அது தமிழில் வருகின்றபோது, திரிந்து “மாதுவளை’ ஆயிற்று. செய்யுள் இடம் நோக்கி – மாதுளங்கம், மாதுவளை, மாதளை என நிற்கும். மாதுவளை என்றால் நீர் கூறுவது போன்று ஆபாசப் பொருளன்று. அதன் பொருள் என்னவென்று கூறுகின்றேன் கேளும்; மா-பெருமை தங்கிய, துவளும்-நாவோடு துவண்டு சுவை தரும், அங்கம்-உள் அமைப்பை உடையது. இது பூ, பிஞ்சு, காய், பழம், சுளை ஆகியவற்றோடு சேரும்பொழுது மா, துவள், அம், பூ என்பது ‘மாதுவளம்பூ’ என்றும், மா, துவள், அம், பிஞ்சு என்பது ‘மாதுவளம்பிஞ்சு’ என்றும், மா, துவள், அம், சுளை என்பது ‘மாதுவலஞ்சுளை’ என்றும் புணர்ந்து நிற்கும். இத்துணை சிறு புணர்தல் இலக்கணமெனும் நீர் அறியீரோ”

என்று அவரை இடித்துரைத்தார். வினவிய புலவர் தலைதாழ்த்திக் கொண்டார்.. நாவலர் நக்கீரராய் நிமிர்ந்து நின்றார்.

‘துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு’

குலாம் காதிறு நாவலர் தொடர்ந்து தமது காப்பியத்தை அரங்ககேற்றும் பணியில் செய்யுட்களைப்பாடி அதனை விரிவுரை செய்துக் கொண்டிருந்தார்.

“விடிவெள்ளி மதினாபுக்கார்
வியன்குயில் கூறிற்றன்றே”

என்று ஒரு செய்யுளில் ஈற்றடியைப் பாடி, விரிவுரையைத் தொடர்ந்தபோது போது ஒரு பெண் எழுந்தார்.

“நாகூர்ப் புலவீர்!.. நீர் வியன்குயில் என்று கூறியிருப்பதன் காரணம் என்ன? குயில் என்பது மெல்லிய பறவை ஆயிற்றே, அதனை வீறுள்ள பறவையென்றோ வியப்பிற்குரிய பறவையென்றோ நீர் கூறக் காரணம் என்ன?” என்றார்.

அதற்குக் குலாம் காதிறு நாவலர், “அம்மணீ! குயிலுக்கு முட்டையிடத் தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. அதனால்தான் அதனை வியப்பிற்குரிய விநோதப் பறவை என்ற பொருளில் வியன்குயில் என்று கூறினேன். மேலும் குயில் தன் முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டுவிட்டுப் பறந்துவிடும். காக்கை தன் முட்டைகளோடு அதனை அடைகாத்துப் பொரிக்கச் செய்து, குயில் குஞ்சைத் தன் குஞ்சுகளோடு பராமரிக்கும். தன் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றும்போது, இதற்கும் தீற்றும். வளர்ந்த காக்கைக் குஞ்சுகள் ‘கா.. கா..’ என்று ஒலி எழுப்ப, இது மட்டும் ‘கீ… கீ…’ என்று கத்துவதைக் கேட்டு, காக்கைக்கு அது தன் இனத்தைச் சேர்ந்ததன்று என்ற உண்மை புலப்படும். சினமுற்று அதனைக் கூர்மூக்கால் கொத்தும். அப்பொழுது குயில் குஞ்சு சற்றும் அஞ்சாது, அக்காக்கையை எதிர்த்து ‘கீ…கீ..’ என்று கத்தி வீறுடன் சண்டையிடும். எனவேதான் அதனை ‘வீறுள்ள பறவை’ என்னும் பொருளில் ‘வியன்குயில்’ என்று பாடினேன்” என்று விளக்கமளித்தார். இவ்விளக்கத்தைக் கேட்ட அப்பெண்மணி, பெரிதும் மகிழ்வுற்று,

“துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து எங்கள் யாழ்ப்பாணக்கரை வந்தீர்…” என்று கூறி வாயார வாழ்த்திப் பாராட்டினார்.,

நாவலர் என்றால் நீர்தாம் நாவலர்

ஆரிபு நாயகக் காப்பிய அரங்கேற்றம் சிறப்பாகவும் செம்மையாகவும் நிறைவேறியது, சங்கத்தமிழ் பொங்கும் காவியத்தைக் கேட்ட யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் குலாம் காதிறு நாவலரின் புலமைத் திறத்தையும் இலக்கிய நயத்தையும் பெரிதும் பாராட்டினார்கள். “நாவலர்” எனற பட்டம் எங்கள் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கு மட்டுமே உரியது என்று மார்தட்டி நின்றவர்களும், குலாம் காதிறு நாவலருக்குச் சூட்டப்பட்ட “நாவலர்” என்ற சிறப்புப் பட்டத்தை எடுத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கட்டி இடையூறு விளைவித்தவர்களும் குலாம் காதிறு நாவலருடைய புலமையாற்றலுக்கு முன்னர் தலைசாய்த்தனர்.

“மாதுளை” பற்றி விளக்கிய நாவலருக்கு மாதுவளஞ் சுளைகளால் மாலைகட்டி, அணிவித்து மகிழ்ந்தனர். பல்வகை பரிசில்களை அள்ளி அள்ளி வழங்கினர். ஒரு சேர எல்லோரும் “நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்; நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்” என்று உரத்த ஒலி எழுப்பி குலாம் காதிறுக்கு நாவலர் பட்டத்தை உறுதிப்படுத்தி உலகிற்கு பறைசாற்றினர்.

மேலும் பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் தம்முடைய மாமனாரை (மாதுலர்)ப் போன்றே தமிழில் புலமைகொண்ட பெருமகனார் குலாம் காதிறு நாவலருடைய ஆரிபு நாயகம் காப்பியத்திற்கு

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறஞ் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
,ஆசு மதுரமாய் அமைந்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டான்

எனப் பாயிரம் பாடி நாவலரைச் சிறப்பித்தார்.

தொடர்புடைய சுட்டி:

தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும்    குலாம் காதிறு நாவலர் 

 

 

Tags:

வைரத்தூறல் – மதிப்புரை


நாகூரில் காதர் ஒலியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி நான் சொன்னதும் “நீங்கள் சுன்னத் ஜமாஅத்தா அல்லது தவ்ஹீதா?” என்ற அடுத்த கேள்வி எழக்கூடும்.

நான் சொல்ல வருவது நம்மூர் கவிஞர் காதர் ஒலியை.

இவர் பரிகாசப் பாடலில் தொடங்கி இதிகாசப் பாடல்களை எட்டி இருப்பவர். இதுவரை வாழ்த்துப்பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தவரை நாம் வாழ்த்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

குடத்திலிட்ட விளக்கு இன்று குன்றின் மேல் ஒளிர்கிறது.

இவரது “வைரத்தூறல்” மழையில் நனைந்த நான் இவரது கவிதைகளுக்கு மதிப்புரை வரைந்தால் என்ன என்று தோன்றியது.
—————————————————————————————-

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் E.M.ஹனீபா மற்றும் A.ராணி இணைந்து பாடிய இந்த அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

‘மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?’ என்று நாகூர் ஹனீபா அவர்கள் கேள்வி தொடுக்க ‘மக்கா என்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே’ என்று ராணி பதிலுரைக்கும் இந்த பாடல் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

கவிஞர் காதர் ஒலியின் “பிரிவினை எதற்கு?” என்ற இந்த கவிதையைப் படித்தபோது ஆபிதீன் காக்காவுடைய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பிறந்த உலகில் பற்பலப் பிரிவாய்
பிரிந்துக் கிடப்பது எதனாலே?
சிறந்த அறிவும் செயல்படுத்திறனும்
சிதைந்து போகுது அதனாலே!
தெரிந்து இருந்தும் தெளிவு படாமல்
திருந்த மறுப்பது எவராலே?
புரிந்து கொண்டால் பலமே பெறலாம்
புண்ணியம் படரும் செயலாலே!

நம் மக்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்துக் கிடப்பதை கவிஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றொரு இடத்தில்

விண்மீன்கள் சிதறிக் கிடந்தால்
விண்ணுக்கு அழகு!
மூமீன்கள் சிதறிக் கிடந்தால்
முளைக்குமா விடிவு?

என்று குமுறுகிறார். மீனை வைத்து “விண்மீன்கள்” “மூமீன்கள்” என்ற வார்த்தை விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. கவுச்சியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தது.

———————————————————————————————————————-

1993-ஆம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் எல்லோர் நினைவிலும் பசுமையாக இருக்கிறது. நம் கவிஞரின் “வைரத்தூறல்” தொகுப்பில் “திருடா! திருடா” என்ற தலைப்பைக் கண்டதும், இவர் எந்த திருடனைப் பற்றி சொல்லப் போகிறார்? ஒருவேளை கிரானைட் திருடனைப் பற்றி இருக்குமோ என்ற ஆவலில் கவிதையைப் படிக்க நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அப்பா அம்மா சொல்லைப் பின்னே தள்ளாதிருடா
அச்சம் அகந்தை அழுக்கு நெஞ்சில் கொள்ளாதிருடா
தப்பித் தவறி தறுதலை வழியில் செல்லாதிருடா
தரங்கள்கெட்ட வார்த்தையை வாயால் சொல்லாதிருடா

என நாசுக்காக நம் கவிஞர் நல்லுபதேசம் நயம்பட உரைக்கிறார்.
———————————————————————————————————————

இன்றைய இளந் தலைமுறையினருக்கு உவமைக் கவிஞர் சுரதாவைப் பற்றி அதிகம் தெரியாது. பாரதிதாசன் மிது கொண்டிருந்த பேரன்பின் காரணமாய் “சுப்பு ரத்தின தாசன்” என்ற தன் புனைப்பெயரை மேலும் சுருக்கி “சுரதா” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டவர்.

“விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்”

என்ற கே.பாலச்சந்தரின் “நாணல்” படத்தில் இடம்பெற்ற பாடலின் சாயலை கவிஞர் காதர் ஒலியின் “ஆடையோ ஆடை!” என்ற கவிதையில் காண முடிகிறது.

கவர்ச்சி கன்னிக்கு காலாடை
காற்றில் பறக்குது மேலாடை
கட்டழகு பெண்ணுக்கு நூலாடை
காய்ச்சிய பாலுக்கு பாலாடை

என்று பாடும் கவிஞர் மேலும் தொடர்கிறார்.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

கவிஞர் காதர் ஒலியின் ஆடை வரிகளில் வீசிய பா-வாடை என் மனதிற்குள் பலவிதமான சிந்தனையை தோற்றுவித்தது.

‘…அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை…” (அல்குர்ஆன் 2:187) என்ற திருக்குர்ஆன் வரிகள் நினைவுக்கு வந்தன.

ஒருவர் மற்றவருக்கு ஆடை என்றால் இருவரும் சரிசமம் என்று அர்த்தமாகிறது அல்லவா? ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பார்கள். இந்துமதம் கூட சிவபெருமானை ஆண்பாதி, பெண்பாதியாக – உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக, அர்த்தநாரீஸ்வரராக உருவகப் படுத்துகிறது.

வாழ்க்கைத்துணை இல்லாத மனித வாழ்க்கையும் அரைகுறையாகத்தான் ஆகிவிடுகிறது. பரிபூரணம் ஆவதில்லை. அதனால்தான் இஸ்லாம் சன்னியாசத்தை ஆதரிப்பதில்லை.

கவிக்கோ அவர்கள் ஜூனியர் விகடனில் இவ்வரிகளுக்கு விளக்கம் தந்ததை சற்று கூர்ந்து கவனித்தால் பலப்பல உண்மைகள் கண்முன் புலப்படுகின்றது.

ஆடையை ஏன் உதாரணம் காட்ட வேண்டும்?

ஆடை, மானத்தை பாதுகாக்கின்றது; மரியாதை கூட்டுகின்றது; மதிப்பை உயர்த்துகின்றது. ஆணுக்குப் பெண் ஆடையாகவும், பெண்ணுக்கு ஆண் ஆடையாகவும் இருப்பது கட்டாயமாகின்றது. குர்ஆன் கவிதைநயமிக்கது என்பதற்கு இவ்வசனமே நல்லதொரு சான்று.

மனைவியின் மானத்திற்கு பங்கம் ஏற்படுகையில் கணவன்தான் கேடயமாக செயல்பட்டு அவளுக்கு கேடு விளையா வண்ணம் பாதுகாக்கின்றான். கணவனுக்கு அவள் மனைவியானவள், தன் சொல்லாலும் செயலாலும், மதிப்பையும் மரியாதையையும் தேடித் தருகிறாள். எனவேதான் அவனுக்கு அவள் ஆடை, அவளுக்கு அவன் ஆடை என்ற பொருத்தமான உதாரணம் சுட்டிக் காட்டப் படுகின்றது.

உயிரினங்களில் மனிதன் மாத்திரம்தான் ஆடை அணிகிறான். அதேபோன்று ‘திருமணம்’ என்ற புனித பந்தம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. “வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்பது வெறும் கற்பனைக்குத்தானே அன்றி நிஜவாழ்க்கைக்கு அல்ல.

பொருத்தமான ஆடையைத் தெர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவசியம் தேவை என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

தட்பவெப்ப காலங்களில் குளிர் நம்மை தாக்காமலும், வெயில் நம்மை சுட்டெரிக்காமலும் ஆடை நம்மைக் காக்கின்றது. இன்பங்களிலும் துன்பங்களிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளித்து, ஆடை நம் அங்கங்களை மறைப்பதுபோல் அவரவர் தத்தம் குறைகளை மறைத்து இல்லறவாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து.

God Makes Man. Tailor makes him Gentleman என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஆடையை அணிந்ததும் மனிதனுக்கு மதிப்பு கூடி விடுகின்றது. பாதுகாப்பாக உணர்கிறான். மானம் காக்கப் படுகின்றது.

நன்மதிப்பு, சமுதாய அந்தஸ்து, கெளரவம் – இவைகளை ஈட்டித் தருகின்றது ஆடை, அணிகலன்.

ஆடை அணியாதவனை காட்டுமிராண்டி என்று பழித்துரைக்கிறோம்.

ஆடை நாகரீகத்துக்கான குறியீடு; சமூகத்தின் பண்பாடு. ‘அறிவுக்கனி’யை உண்டதும் ஆதாமும் ஏவாளும் புரிந்த முதற்காரியம் இலைதழைகளை ஆடையாக்கிக் கொண்டதுதான். சுயநினைவு இழக்கும் பைத்தியக்காரன் செய்யும் முதற்காரியம் ஆடைகளை கிழித்துக் கொள்வதுதான். புரிதலின்றி இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தாம்பத்திய வாழ்வை கெடுத்துக் கொள்வதும் பைத்தியக்காரர்கள் செய்யும் செய்கைகளுக்குச் சமம். அவர்களது வாழ்க்கை தாறுமாறாய்க் கிழிந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.

கவிஞர் காதர் ஒலியின் மேற்கூறிய இவ்வரிகள் மனநிறைவைத் தந்தது.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

——————————————————————————————————————–
இதோ கவிஞர் காதர் ஒலியின் மற்றொரு கவிதை:

கொசுக்களுக்கு கொண்டாட்டம்
நன்றி சொல்லும் பொதுக்கூட்டம்
முன்னிரவிலும் பின்னிரவிலும்
மூக்குப்பிடிக்க ரத்த விருந்து
மிக்க நன்றி! மின்வெட்டுக்கு!

நாகூரில் விருந்து என்றால் “சஹன் சாப்பாட்டில்” நாலுபேர்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கவிஞர் சொல்லும் இந்த ரத்த விருந்தில் கூட்டம் கூட்டமாக அல்லவா உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்?

இம்முறை தாயகம் சென்ற நான் மின்வெட்டினால் ரொம்பவே நொந்து போய்விட்டேன். கலைஞர் ஆட்சியின்போது வெளிவந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.

அரவிந்த் சாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?

அரவிந்த் சாமி வந்தது “மின்சாரக் கனவு”, ஆற்காடு வீராசாமி வந்ததும், மின்சாரமே கனவு.

இதுக்கு அது எவ்வளவோ தேவலாம் என்று தோணுகின்றது.

இவ்வளவு அருமையாக கவிதை எழுதும் என் நண்பருக்கு அடுத்த முறை ஊர் செல்லுகையில் ஏதாவதொன்று பரிசளிக்க வேண்டும். ‘டார்டாய்ஸ்’ கொசுவர்த்திச் சுருள் பொருத்தமான பரிசாக இருக்குமோ?  “அனுபவம்தான் கவிதை” என்பான் கவியரசு கண்ணதாசன். கொசுக்கடியால் எந்த அளவுக்கு நம் கவிஞர் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற அனுபவக் கவிதைகளை அவர் எழுதி இருப்பார் என்று நம்மால் எளிதில் கற்பனைச் செய்து ஊகிக்க முடிகின்றது.

“கடிஜோக்” கேள்விப்பட்டிருப்பீர்கள். இது “கடிகவிதை”

அசுக்கடி புசுக்கடி கொசுக்கடி
அவரவர் உடம்பினில் அடிதடி
இசுக்கடி நசுக்கடி பொசுக்கடி
இரவினில் நடக்குது அதிரடி

கொசுத்தொல்லையை விவரிப்பதோடு நிற்கவில்லை. அதை போக்குவதற்கும் ஆலோசனை தருகிறார் கவிஞர். ஒரு பிரச்சினையை எடுத்துச் சொல்வதோடு மட்டும் கவிஞனின் பங்களிப்பு நின்று விடுவதில்லை. அதற்கு நிவர்த்தி வைத்தியமும் சொல்ல வேண்டும்.

கொசுக்கு பயந்தா வலையடி?
குப்பைக் கூளத்தைத் தொலையடி
அசுத்த அசிங்கத்தை அகற்றடி
அதுதான் கிருமிக்கு சவுக்கடி.

வேப்பிலை புகையைப் போடடி
வெகுண்டு ஓடிடும் கொசுவடி
காப்பில்லை கொசுவத்தி சுருளடி
காசுக்குத் தாண்டி அழிவடி

என்று இப்பிரச்சினைக்கு தீர்வு காண விழைகிறார். இதை படித்துவிட்டு கொசுவத்திச் சுருள் விற்பனையாளர்கள் நிச்சயம் இவர்மீது கடுப்பாவார்கள் என்பது நிச்சயம்.
———————————————————————————————————————–

தினக்கூலித் தொழிலாளிகளின் அவல வாழ்க்கையை எடுத்துரைக்கையில் இப்படி கூறுகிறார் நம் கவிஞர்:

ஒருவேளை அடுப்பெரிக்க
மூன்று வேளை வெயிலில் காயும்
விறகுகள்

தன்னைச் சார்ந்தோரை வாழவைப்பதற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் தினக்கூலிக்காரன். மனிதனை விறகாய் உருவகப்படுத்துகையில் சித்தர் பாடல்களில் காணும் தத்துவக்கருத்தை   இந்த ‘ஹைக்கூ’ கவிதையில் நம்மால் உணர முடிகிறது.

பார்த்தா பசுமரம்
படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஞானப்பாடல்தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. (இது கண்ணதாசன் எழுதிய பாடலா அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பாடலா என்ற விவாதம் நமக்கு இப்போது தேவையில்லாதது.)  [பார்க்க]

———————————————————————————————————————

எட்டு வயது சிறுமியாக இருந்த என் மகள் ஒரு முறை என்னிடம் “ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?” என கேள்வி கேட்டாள். “தெரியாது” என்று நான் பதில் சொன்னதும் “அவர் அழுதா நோட்டு நனைந்து விடுமே!” என்று சிரித்தபடி கூறிவிட்டு ஓடிவிட்டாள். இதை நகைச்சுவையாக ரசித்த எனக்கு, கவிஞர் காதர் ஒலியின் இதே கருத்தைக்கொண்ட கவிதை சீர்தூக்கி சிந்திக்க வைத்தது.

வாக்களித்து விட்டு வெளியே வந்தவன்
வாழ்க காந்தி என்றான்!! கேட்டால்
வேட்பாளர் கொடுத்த பணத்தில்
காந்தி சிரிக்கிறாராம்

ஊழல் நிறைந்த தேர்தல் களங்களின் அவலத்தை உரித்துக் காட்ட இந்த வரிகள் போதாதா?

———————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலி எழுதியுள்ள “திருப்புகழ் தமிழ்”, “தமிழச்சித் தாலாட்டு”, “தாய் மண்ணை மதி” “தமிழா! தமிழா”, “திருக்குறள் சுவை”  “முண்டாசுக் கவிஞன்” “புதுவையின் புயல்”  போன்ற கவிதைகள், அவருக்கு தமிழ்மொழியின் மீதுள்ள ஈடில்லா பற்றையும் தமிழ் தாக்கத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

“புதியதோர் உலகம் செய்வோம்” என்றான் பாரதிதாசன் “புதிய பாரதம் செய்வோம்” என்று முழக்கமிடுகிறார் நம் கவிஞர். “ஓடி விளையாடு பாப்பா” என்று பாலர்களுக்கு கவிதை பாடினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி.

ஓடி நடக்காதே தாத்தா; உன்
உடம்புக்கு நல்லதல்ல தாத்தா
பீடி குடிக்காதே தாத்தா; பல
பிணிகளை உண்டாக்கும் தாத்தா

மாடி ஏறாதே தாத்தா; திடீர்
மயக்கம் வந்துவிடும் தாத்தா
ஆடி அலையாதே தாத்தா; அது
ஆகாது உந்தனுக்கு தாத்தா

மாமிசம் தின்னாதே தாத்தா; அந்த
மருத்துவர் சொல்கேளு தாத்தா
பூமியை நம்பாதே தாத்தா; அதை
புரிந்தவன் நீதானே தாத்தா

என பேத்தி தாத்தாவுக்கு அறிவுரை கூறுவதுபோல் கவிதை வடித்துள்ளார். இந்த ஐடியா ஏனோ பாரதிக்கு வராமல் போய்விட்டது. வந்திருந்தால் ‘பாப்பா பாட்டு’ பாடியதைப்போன்று ‘தாத்தா பாட்டையும்’ அவன் பாடிச் சென்றிருப்பான்.

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்

என்று பைந்தமிழ்த்தேனீ பாரதி பாடினான். கவிஞர் காதர் ஒலியின் கனவு சற்று மாறுபட்டு இருக்கின்றது.

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்
பசுமையும் வளமையும் பெருகிட வேண்டும்
லஞ்சம் வாங்காத அலுவலர் வேண்டும்
லட்சியம் எல்லாம் நடந்திட வேண்டும்

என தான் காணும் கனவை எடுத்தியம்புகிறார். படிக்கின்ற வாசகன் மனதிலும் கவிஞரின் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை உள்மனதில் எழுகின்றது.

——————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலியின் கவிதைகளில் காணப்படும் உவமை, உவமேயம், உருவகம், சொல்நயம், வார்த்தை சந்தம் – இவைகள் பாராட்டும்படி இருக்கின்றது. உதாரணத்திற்கு பூமியை உயிருள்ள ஒரு பொருளாய் கற்பனை செய்திருப்பது நம்மை ரசிக்கத் தூண்டுகிறது.

பூமி விடும் பெருமூச்சுதான் புயல் காற்றாம், நரம்புத் தளர்ச்சி பூகம்பமாம், திடீர் வயிற்றுப்போக்கு சுனாமியாம், சிறுநீரகக் கோளாறு வெள்ளப் பெருக்காம், செரிமான இல்லாமல் எடுக்கப்படும் வாந்திதான் எரிமலை வெடிப்பாம்.

கத்திரிக்காயை மகுடம் அணிந்த இளவரசியாக கற்பனைச் செய்வதும், துகில் உரிப்பவரை அழவைக்கும் சக்தி எங்களுக்குத்தான் உள்ளது என்று பாஞ்சாலிக்குகூட இல்லாத சக்தியை வெங்காயத்திற்கு அளித்து அழகு பார்ப்பதும், தரம் மாறாமல் நிறம் மாறும் கர்ப்பிணி என்று மிளகாயை உருவகப் படுத்துவதும், கவிஞரின் கற்பனாச் சக்திக்கு ஒரு சபாஷ் போட வைக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

‘விவசாயி’ படத்தில் மருதகாசி வெளியிட்ட அதே ஆதங்கத்தை அவர் பானியில் வெளியிடுகிறார் கவிஞர் காதர் ஒலி

பிறந்து வளர்ந்து படித்த மண்ணில்
பிழக்கத் தொழிலா உனக்கில்லை?
பறந்து சென்று இளமையைத் தொலைத்து
பணத்தைக் குவிப்பது கணக்கில்லை!
சிறந்த மனையால் சிரிக்கும் மழலை
செழித்த முகத்தில் பொலிவில்லை
திறந்து சொன்னால் அயலகம் சென்று
திறம்பட உழைபதில் புகழில்லை

என்று நம் கவிஞர் நடைமுறை வாழ்க்கையை, அயல்நாட்டு மோகத்தைச் சாடுகையில் பங்கஜ் உதாஸ் அவர்களின் “சிட்டி ஆயிஹே” கஜல்தான் நினைவில் வந்தது.

“ரோட்டி கப்படா அவுர் மக்கான்” என்ற படத்தில் “மெஹங்காயி மார்கயி” என்ற இந்தி பாடலில் அருமையான ஒன்று வரி வரு.ம் அதன் சாராம்சம் இதுதான்:

கைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருவோம் அன்று
பைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருகிறோம் இன்று

கவிஞர் காதர் ஒலி அவர்களின் கவிதையிலும் அதே கருத்துச்செறிவு காணக்கிடைக்கின்றது.

நோட்டு புத்தகத்துடன்
பள்ளிக்குச் சென்றேன் அன்று
நான் படிக்க!!

நோட்டுக் கட்டுடன்
பள்ளிக்கூடம் செல்கிறேன் இன்று
என் பிள்ளை படிக்க!!

என்று கல்வியின் அவலத்தை துகிலுரித்துக் காட்டுகின்றார்.

எத்தனையோ முறை திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் தேடி வந்தும் அதில் இவர் ஆர்வம் காட்டவில்லை என்ற இவரைப் பற்றிய சுவையான செய்தி நமக்கு மகிழ்வைத் தருகிறது. எண்ணற்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவி. கா.மு,ஷெரீப் அவர்கள் திரையுலகில் பிரவேசித்தமைக்கு, பிற்காலத்தில் மனம் வருந்தியிருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த ஏன் சிற்பியை அழைக்கிறீர்கள்?” என்ற வினாவை அவர்களிடத்திலேயே தொடுத்தார். நம் கவிஞரும் அதேபோன்ற தெளிவான சிந்தனையில் இருப்பது புலனாகிறது. புகழ் என்ற போதை அவரை மசிய வைக்கவில்லை. பணத்தாசை என்ற பாப்பாவூர் பேய் அவரைப் பிடித்து ஆட்டவில்லை.

நீ துளியில் பிறந்த உளி
சிற்பம் செத்துக்கவா?
அம்மிக் கொத்தவா?
தீர்மானிப்பது உன் விதி!!

எனக்கென்னவோ கவிஞரின் இக்கவிதை, கேள்விகளால் வேள்விகள் நடத்தி, தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கேள்வியாகத்தான் தோன்றுகின்றது. இக்கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணம் தன் வாழ்க்கையையும் சீர்பட அமைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது.

வளரட்டும் மேலும் இவரது கவித்திறமை என்று நம் இதயம் வாழ்த்துகின்றது.

 

Tags: , , ,

சாதிக்க வந்த கவிஞன் – நாகூர் சாதிக்


நான் ஒருமுறை காரில் பயணிக்கையில் “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலை ரசித்துக் கொண்டு வந்தேன். என்னுடன் பயணித்த நண்பரொருவர் “இந்த பாட்டெல்லாமா கேக்குறீங்க? நீங்க என்ன ‘ஷியா’வா மாறிட்டீங்களா?” என்று ஒரு போடு போட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பாவம் இன்றைய இயக்கவாதிகள் எப்படியெல்லாம் ஒரு சாராசரி முஸ்லீமை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் அப்பட்டமாக புரிந்தது. “பாத்திமா, அலி, ஹசன், ஹுசைன்” போன்றோரை புகழ்ந்து பாடப்பட்டால் அது ‘ஷியா’ பாடல் என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும். போதாதக்குறைக்கு இப்போது காதியானிக்கள், அஹ்மதியாக்கள் வேறு, வெவ்வேறு முகத்தோடு இணையதளத்தில் புகுந்து நம்மை குழப்போ குழப்பு என்று குழப்புகிறார்கள்.

நாயகத்திருமேனி அவர்களின் அன்பு மகளார் பாத்திமா அவர்களைப் பற்றி நாகூர் ஹனீபா பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த”, “பாத்திமுத்து ஜொஹ்ராவின் பரம்பரையில் வந்த பெண்ணே” “பெண்களுக்குத் தலைவியான பாத்திமா” “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள், நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்” “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளன.

விண்ணகமும் மண்ணகமும்

இதில் “விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா” என்ற இனிமையான பாடல் என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் எழுதியது. இப்பாடலில் காணப்படும் சொற்சிலம்பம், வார்த்தை ஜாலம், சந்த விளையாட்டு மெச்சத்தக்க விதத்தில் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு

தங்கு புகழ் அன்னையர்க்கும்
தங்கமான தங்கையர்க்கும்
சங்கமான மங்கையர்க்கும்
சங்கையான பாத்திமா

என்ற அமுத வரிகளில் அடுக்குமொழி வார்த்தைகள் அழகுத்தமிழில் அணை திறந்த வெள்ளமாய் ஆர்ப்பரித்து அப்பாடலைக் கேட்போரை அகங்குளிர வைக்கும்.

பெண்களுக்குக் கண்மணியாய்ப்
பெரியவர்க்கு விண்மணியாய்
பண்பிருக்கும் நன்மணியாய்
பாருயர்த்தும் பாத்திமா

என்ற வரிகளில் மெருகேறியிருக்கும் பண், மென்மையாய் நம் காதில் மெல்ல வந்து மிருதுவாய் தேன் பாய்ச்சுவது போலிருக்கும்.

பூவுறங்கப் புள்ளுறங்கப்
புவனமெல்லாம் ஆழ்ந்துறங்க
நாவுறங்கா திருந்திறையின்
நாமமோதும் பாத்திமா

என்ற எதுகை, மோனை மாறா வண்ணம் சிந்தும் அந்த சந்தச் சொற்கள் நம் சிந்தையை விந்தையில் ஆழ்த்தி அவரை சொந்தம் கொண்டாட வைக்கும்.

“நாவு உறங்காது இருந்து, இறையின் நாமம் ஓதும் பாத்திமா” என்று பிரித்து பொருளறிந்து படிக்கையில் கவிஞரின் புலமைத் திறன் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்து, புல்லரிக்க வைக்கும்.

கோதுமையை கையரைக்க
கோவுரையை நாவுரைக்க
போதுமென்ற பொன்மனத்தால்
பொலிவடைந்தீர் பாத்திமா

“அரவைக் கல்லில் ஒரு கையால் கோதுமையை அரைத்துக்கொண்டே, “கோ”வின் (இறைவனின்) உரையான திருமறையை மொழிந்துக்கொண்டே, எளிமை வாழ்வு வாழ்ந்த, ‘போதுமென்ற பொன்மனம் படைத்த’ நபிமகளார் பாத்திமா, தன் சொல்லாலும் செயலாளும் பொலிவடைந்தார்” என்ற மகத்தான செய்தியை வெண்கலக் குரலோன் ‘இசைமுரசு’ அரிமாவென முழங்குகையில் அந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படியே நம் கண்கள் முன் அழகான காணொளியாய் அவதானிக்கும்.

இறையருட் கவிமணி எழுதிய இப்பாடலானது இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் ஆரம்ப காலத்தில் பாடிய பாடல். இந்த சந்தப்பாடல் தந்த வெற்றியை விட, பாத்திமா (ரலி) அவர்களைப் பற்றிய மற்றொரு பாடல் நான்மடங்கு நாடெங்கும் நற்புகழ் ஈட்டித் தந்தது. பட்டி தொட்டிகளெங்கும் ஒலிபெருக்கிகளில் ஓயாது ஒலித்தது. அப்பாடலை முணுமுணுக்காத நாவுகளே இல்லை எனலாம். குறிப்பாக பெண்கள் மத்தியில் அப்பாடல் கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமடைந்தது.

அந்த பாடல் எது தெரியுமா? “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” என்ற பரவசமிகு பாடல்.

பாத்திமா வாழ்ந்த முறை

இறையருட் கவிமணி அவர்களின் “விண்ணகமும் மண்ணகமும்” என்ற பாடலை விட, இசைத்தட்டு விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தப் பாடல். சந்தப் பாடலையும் விஞ்சிய இப்பாடலின் சிறப்புதான் என்ன என்று சற்று ஆராய்ந்துப் பார்த்தால், இப்பாடலில் காணப்படும் எளிமையான வார்த்தைகளும், அதில் இடம்பெற்றிருக்கும் கருத்தாழமிக்க கருத்துக்களும்தான் முக்கிய காரணம் என்ற உண்மை நமக்கு புலப்படும். இப்பாடலை எழுதிய நாகூர் கவிஞரை நாகூர்க்காரர்களுக்கே அதிகம் தெரியாது.

இஸ்லாமிய பாடலுலகை ஒரு கலக்கு கலக்கிய பாடலிது. நாகூர் ஹனிபாவின் புகழ்பெற்ற “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலுக்கு அடுத்தபடியாக நானிலமெங்கும் பெரிதும் பேசப்பட்ட நற்சிந்தனைப் பாடல் இதுதான்.

பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா – அந்த
பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா!

என்று தொடங்கும் இந்த சிறப்பான பாடலின் ஆசிரியர்தான் இன்று நம் கட்டுரையின் கதாநாயகன். அந்த புகழுக்குரிய ஆசாமி யார்?

இதோ சொல்லி விடுகிறேன். அவர் பெயர் கவிஞர் நாகூர் சாதிக்.

இப்பாடலின் மகத்தான விற்பனையை கொண்டாடும் விதமாக அவருக்கு HMV நிர்வாகம் GOLD MEDAL AWARD என்ற தங்கப்பதக்கத்தை வழங்கி கெளரவித்தது. அப்படி என்னதான் சிறப்பு இப்பாடலில் இருக்கிறது?

ஒரு பாடல் என்றுச் சொன்னால் அதற்கு ‘ஆதி’யும் வேண்டும்; ‘அந்தமும்’ வேண்டும். “ஏ பெண்ணே! உனக்கு பாத்திமாவின் வாழ்க்கைமுறை தெரியுமா?” என்ற கேள்விக்கணையோடு பல்லவியை தொடங்கும் போதே, கவிஞர் நம்மிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விடுகிறார். ‘எதோ சொல்லப் போகிறார்’ என்ற ஆவல் மிகுந்து நாமும் பாடலோடு ஒன்றிப்போய் அடுத்தடுத்து செவிமடுக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்கிறோம்.

உத்தம திருநபியின் மகள் அல்லவா – நமது
உண்மை வீரர் அலியாரின் மனைவியல்லவா
சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா – நல்ல
செல்வங்களாம் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா
அருமை அன்னையல்லவா.

முதல் அனுபல்லவியிலேயே பாத்திமா என்ற பெண்மணியின் ‘பயோடேட்டா’வைத் தந்து விடுகின்றார் கவிஞர். அவர் யாருடைய மகளார்? அவருடைய கணவர் பெயர் என்ன? அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்களின் பெயரென்ன? என்ற அனைத்து விவரங்களும் ரசிகனுக்கு ‘உள்ளங்கை நெல்லிக்கனியாய்’ கிடைத்து விடுகின்றது. அதற்கு மேல் அவன் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவது அந்த மங்கையர்கரசி எப்படிப்பட்டவர்? அவர் குணநலன்கள் யாது? அவரது வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? என்ற கேள்விக்கான விடை. அதுவும் ரசிகனுக்கு உரித்து வைத்த பலாச்சுளையாய்க் இதோ கிடைத்து விடுகின்றது.

கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ – பெரும்
கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ
குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ – நல்ல
குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோ
இருந்தவரன்றோ

இதற்கு மேல் ஒருவரது குணநலன்களை அறிந்துக்கொள்ள ரசிகனுக்கு வேறென்ன வேண்டும்? இரண்டே இரண்டு அனுபல்லவியில் ஒரு மாதர்குல அரசியின் மகத்தான வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடித்து விட்டாரே கவிஞர். அதுவும் மிக மிக எளிமையான வார்த்தைகளில். பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் எதனால் மாபெரும் வெற்றி அடைந்தது என்ற பரமரகசியம் இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்குமே?

‘ஆதி’யைப் பார்த்து விட்டோம். இப்போது ‘அந்தந்திற்கு’ வருவோம். பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வு நெறிமுறையை வடித்து முடித்து விட்டார் கவிஞர். “Moral of the Story”தான் என்ன? ஒரு Message சொல்லியாக வேண்டுமே? என்ன சொல்வது? இதோ சொல்கிறார் கேளுங்கள்.

இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா – இந்த
இக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளம்மா – உண்மை
தீன் வழியை மறந்ததேனம்மா – நல்ல
உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா – நீ
வாழ்ந்து காட்டம்மா

ஆஹா! ஒரு கருத்தாழமிக்க பாடல் என்ற தகுதியை பெறுவதற்கு இதை விட சிறந்த இலக்கணம் வேறென்ன இருக்க முடியும்? இப்பொழுது புரிந்திருக்குமே இந்த எளிமையான மனிதரின் எளிமையான வரிகள்!

நாகூர் சாதிக் அவர்களின் மற்றொரு மகத்தான சாதனைப் பாடல் “அல்லாஹ்வை நாம் தொழுதால்”, என்ற அற்புதமான பாடலாகும்.

அல்லாஹ்வை நாம் தொழுதால்

அல்லாஹ்வை நாம் தொழுதால் – சுகம்

எல்லாமே ஓடி வரும் – அந்த

வல்லோனை நினைத்திருந்தால். – நல்ல
வாழ்க்கையும் தேடி வரும்…

பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

வழி காட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ

(அல்லாஹ்வை நாம் தொழுவோம்…)

இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை
இகம் எங்கும் பரப்பிடுவோம்

‘பாத்திமா வாழ்ந்த முறை” என்ற பாடலில் நபிமகளாரின் வாழ்க்கைமுறையை வரிசை படுத்திவிட்டு கடைசியில் ஒரு மெஸேஜை வெளிப்படுத்தினார் நம் கவிஞர். ஆனால் இந்த பாடலிலோ அதற்கு நேர்மாறான இலக்கணத்தை கையாண்டுள்ளார். “அல்லஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்” என்ற மெஸேஜை முதற்கண் வெளிப்படுத்திவிட்டு “ஏன் நீங்கள் பள்ளி செல்ல மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சினை? பாங்கு சப்தம் கேட்கவில்லையா? அல்லது பள்ளிவாயில் செல்வதற்கு அலுப்பு ஏற்படுகின்றதா? அல்லது படைத்த இறைவனையே மறந்து போய் விட்டீர்களா? என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்கின்றார். பாடலைக் கேட்பவனின் மனதில் ஒரு சிந்தனை ஊற்றை கிளப்பி விட்டு விடுகின்றார்.

அவனும் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றான். “ஆமாம். சரிதான். நாம் ஏன் பள்ளி செல்வதில்லை? என்ன காரணத்தினால் இருக்கும்? என்று தனக்குத்தானே கேள்வியினால் வேள்விகளை நடத்திக் கொள்கின்றான். கேட்பவனை சிந்திக்க வைப்பதுதான் ஒரு கவிஞனின் தலையாய பணி. நம் கவிஞர் அந்த வேலையை மெச்சத் தகுந்த விதத்தில் கனகச்சிதமாக சிரத்தையோடு செய்து முடிக்கிறார்.

கவிஞர் அத்தோடு அவனை விட்டு விடவில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து அவனுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். “உனக்கு வழிகாட்ட திருமறை இருக்கின்றது. மேலும் உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நபிபெருமானின் நல்லுரையாம் “ஹதீஸ்” இருக்கிறது. “அடப்பாவி! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கின்றாயே?” என்று சரமாரியாக ‘அட்வைஸ்’ தர ஆரம்பித்து அவனை தன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறார்.

ஒரு வினாவையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கத்தையும், தெளிவான தீர்வையும் கொடுக்காதவன் உண்மையான கவிஞனல்ல என்பது என் அபிப்பிராயம். இறுதியில் அதற்கான ஒரு தீர்வையும் கவிஞர் நாகூர் சாதிக் இப்பாடலில் தருகிறார். ஆண்டவன் கட்டளையை அடிமனதில் ஏற்றி அகிலமெங்கும் அண்ணல் நபியின் போதனையை பரப்புவதுதான் பிரச்சினைகள் தீர ஒரே வழி என்று ஒரேயடியாக முத்தாய்ப்பாய் முடித்து விடுகிறார். அவரது பாடல் வெற்றியின் பரமரகசியம் இதுதான்.

இந்த பாடலின் வரிகளை ஒருமுறை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது உண்மையென விளங்கும். இப்பாடலில் உள்ள சொற்பதங்கள், -சிறுவர் முதல் பெரியோர் வரை, படித்தோர் முதல் பாமரன் வரை- எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிய நடையில் கையாளப்பட்டுள்ளது. அரபுமொழி சொற்கள் அதிகமாக இடம்பெறும் பாடல்கள் பிறமதத்தவரை அதிகம் சென்றடைவதில்லை. ஆனால் இந்த பாடல் அறிமுகம் ஆனபோது எல்லா மதத்தவரும் முணுமுணுத்ததை நாம் செவிமடுக்க முடிந்தது. காரணம் எளிமையான எந்தமிழ் வார்த்தைகள்.

தக்பீர் முழக்கம்

இந்துமத நண்பர்கள் பாடும் மேடை நிகழ்ச்சிகளில் எப்படி கண்ணதாசன் எழுதிய “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடல் முதற்பாடலாக இடம்பெறுகின்றதோ அதுபோன்று எல்லா இஸ்லாமிய பாடகர்களுடைய மேடை நிகழ்ச்சிகளிலும் முதற்பாடலாக “தக்பீர் முழக்கம்; கேட்டால் இனிக்கும்” என்ற பாடல் முழங்கும்.

அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற கண்ணதாசன் பாட்டில் வரும் அதே உற்சாகம், அதே தாள லயம், அதே உத்வேகம் இப்பாடல் கொடுக்கும். எனவேதான் இப்பாடலை முதற்பாடலாக இஸ்லாமியப் பாடகர்கள் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்பாடல் வரிகளுக்கும் சொந்தக்காரர் நம் பதிவின் கதாநாயகன் நாகூர் சாதிக் அவர்களேதான்.

நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்து எல்லோரும் பாராட்டும் வண்ணம் எண்ணமெலாம் நிறைந்திருக்கும் மற்றொரு உதாரணம் “சொன்னால் முடிந்திடுமோ?” என்ற அமுதகானம்.

சொன்னால் முடிந்திடுமோ

நபிகள் நாயகத்தின் பெருமையை பறைசாற்ற எத்தனையோ கவிஞர்கள் புறப்பட்டார்கள். “வாழ்நாளெல்லாம் போதாதே வள்ளல் நபிகளின் புகழ் பாட” என்றும் “கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன் வந்தே இருக்காது” என்றெல்லாம் நபிநாதரின் புகழ் பாடினார்கள்.

அளவிட முடியா அண்ணல் நபியின் அருமை பெருமைகளை அழகுத் தமிழில், அற்புதமான உருவகத்தோடு அலங்கரிக்கும் அவரது இப்பாடல் காலாத்தால் அழியாத கனிவான கானமாய் காலங்கடந்து நிலைத்துள்ளது.

சொன்னால் முடிந்திடுமோ
சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை
ஆற்றல் மிகும் சொல்லழகை

என பல்லவியைத் தொடங்கும்போதே கவிஞர், தான் எதை பாடப்போகிறார் என்ற முன்னுரையை தந்து விடுகிறார். ஆம் அவர் சொல்லப்போவது அண்ணல் நபிகளின் பேரழகை மற்றும் அவர் சொல்லழகை. இறுதியில் சொல்லப்போகும் ஏந்தலின் பெருமைதனை சஸ்பென்ஸாகவே விட்டு விடுகிறார்.

அண்ணலின் பேரழகு எப்படிப்பட்ட அழகு என்பதை கம்பனின் பாணியில் தன் கவித்திறமையை கையாள்கிறார் கவிஞர் நாகூர் சாதிக்.

வெண்ணிலவும் வியப்படையும்
வேந்தர் முகம் கண்டு விட்டு…
விண்ணகத்துத் தாரகையும்
வெட்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பேரழகை

ஆகா! என்னமாய் ஒரு கற்பனை. உவமைக்கு இவர் தேடும் “பாடுபொருள்” இவ்வுலகிலேயே இல்லை. அதனால்தான் வானில் தவழும் வெண்ணிலவையும், விண்ணகத்து தாரகையும் உதாரணம் காட்ட உதவிக்கு இழுத்து வருகிறார்.

அண்ணல் நபியின் மேனியழகை சொல்லியாகி விட்டது. அடுத்து அவரது சொல்லழகை கூறுகிறார். யார்கண்ணுக்கும் இதுவரை புலப்படாத “அறிவு” அண்ணல் நபியிடத்தில் வந்து ‘டியூஷன்” கற்று போனதாம். அடுத்து “பண்பு” வந்ததாம். அதுவந்து கற்றுச் சென்ற பாடம் பணிவாம். இதுபோன்ற அட்டகாசமான கற்பனை எப்படி கவிஞர் சாதிக் அவர்களுக்குத் தோன்றியது என்று தெரியவில்லை.

அண்ணலிடம் அறிவு வந்து
ஆயிரம் பாடம் பெறும்…
பண்பு வந்து நபியிடத்தில்
பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் சொல்லழகை

மேனியழகையும் சொல்லழகையும் மெல்ல மொழிந்துவிட்டு அடுத்து நம் மேதகு நபியின் மேன்மையினை மெய்மறந்து மெச்சுகிறார்.

திரும்பும் திசை எல்லாம்
திருநபி செயல் மணக்கும்…
அருள் மறை வேதத்திலே
அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன்
ஏந்தலர் பெருமைதனை

(சொன்னால்…முடிந்திடுமோ…)

“உவமைக் கவிஞர்” என்று கவிஞர் சுரதாவைப் புகழ்வதைப்போல கவியுலகில் சாதிக்கும் நாகூர் சாதிக்கையும் தாராளமாக இந்த அடைமொழியிட்டு அழைக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

இருலோகம் போற்றும் இறைத்தூதராம் 

நாகூர் ஹனீபா, இந்திப்பட மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் பாடுவது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. அது அரும்புலவர் ஆபிதீன் காலத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது. , “மறைதீபம் இதோ பாராய்” “பாலைவனம் தாண்டி போகலாமே நாம்” “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்” “தீன்கொடி நாட்டிய தேவா” போன்ற பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தன.

ஜிதேந்திரா நடித்த “ஜீனே கீ ராஹ்” என்ற இந்திப்படத்தில் “ஆனேஸே உஸ்கே ஆயே பஹார்” என்ற மெல்லிசை பாடல் மிகவும் பிரபலமாக இருந்த நேரம் அது. முகம்மது ரஃபி அவர்களின் மென்மையான குரலில் இழையோடும் ராகலயம் மனதைப் பிழிந்தெடுக்கும். அந்த பாடலை சிம்மக்குரலோன் நாகூர் ஹனிபாவின் குரலில் கர்ஜிக்க வைத்தால் என்னவென்று தோன்றியது நாகூர் சாதிக் அவர்களுக்கு.

“இருலோகம் போற்றும் இறைத்தூதராம், இஸ்லாத்தைத் தந்த நபிநாதராம்”

என்ற நாகூர் சாதிக் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல் இசையார்வலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. “அருள்வடிவானவர்” என்று பாடும்போது நாகூர் ஹனீபா அவர்கள் அந்த “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற எழுத்தை படாதபாடு படுத்தியதுதான் கொடுமையிலும் கொடுமை. நாகூர் சாதிக் அவர்களை நேரில் காண நேர்ந்தால் “இந்த பாடலில் அவர் சாதகம் பண்ணுவதற்கு ஏதுவாக, வேறு ஏதாவது நெடில் வார்த்தை சங்கதியை லாவகமாக நுழைத்து, நாகூர் ஹனீபாவை சோதிக்காமல் இருந்திருக்கலாமே! அவரை இந்த பாடுபடுத்தி எங்களையும் படுத்தி விட்டிர்களே?” என்ற கேள்வியை அவரிடத்தில் கேட்க வேண்டும்.

வெளிச்சத்துக்கு வராத மொட்டுக்கள்

காட்சிக்கு எளிமையானவர் கவிஞர் சாதிக். என் இனிய நண்பர் இதயதாசனையாவது “கவிஞரே!” என்று பலரும் அழைக்க என் காதுகுளிர கேட்டிருக்கிறேன். ஆனால் இவரை யாரும் “கவிஞரே!” என்ற அடைமொழியோடு விளித்து நான் கண்டதில்லை. “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாக்கு இவருக்குத்தான் பொருந்தும். ஆடம்பரமில்லாத அடக்கம், அலட்டிக் கொள்ளாத தன்மை, பந்தா இல்லாத பண்பு, குறைவான பேச்சு; நிறைவான செயல், விளம்பரம் விரும்பாத விந்தையான மனிதரிவர்.

நாகூரில் கவிஞர்கள் என்று சொன்னால் புலவர் ஆபிதீன், நாகூர் சலீம். கவிஞர் இஜட்.ஜபருல்லா – இவர்களைத்தான் சட்டென்று அடையாளம் காட்டுவார்கள். வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ படைப்பாளிகள் இன்னும் திரை மறைவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியுலகிற்கு கொண்டுவர இந்த ஒரு வலைப்பூ காணாது.

சாரு நிவேதிதா நாகூர்க்காரர் என்பதே பல பேருக்குத் தெரியாது. உதாரணத்திற்கு டி.என்.இமாஜான் என்ற எழுத்தாளரை எடுத்துக் கொள்வோம். இவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? இவரும் நாகூர்க்காரர்தான். யாரும் இவரை கண்டுக் கொள்வதில்லை. “Master of All Subject” என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட தமிழ்வாணனைப் போன்று நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதித் தள்ளி இருக்கிறார். நாகூரின் அழ.வள்ளியப்பா என்றுகூட இவரைச் சொல்லலாம். (இவருடைய புத்தக வரிசைகளைக் காண இங்கே சொடுக்கவும்)

“நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்” என்ற இவரது நூலில் காணப்பட்ட இக்கவிதை வரிகள் என் மனதைக் கொள்ளை கொண்டன:

தொண்டை சரியில்லை
பொழுது எப்படி விடியும்?
சேவலின் கவலை!

‘இந்த உலகத்தை ரட்சிக்க வந்த புண்ணியவான் நான்தான்’ என்று எண்ணிக்கொண்டு இலவசமாக உபதேசம் வழங்கிக்கொண்டிருக்கும் என் நண்பர்கள் சிலருக்கு ஒரு இக்கூற்று சாலப்பொருந்தும்.

அம்மா, தாயே!
பிச்சைக்காரனின் குரல்
வீட்டில் சிறுமி!

வேடிக்கையான நடைமுறை முரண்பாட்டை சித்தரிக்கும் முத்தான வரிகள்.

தலைப்புக்கள் ஜனரஞ்சகமானவைகளாக இருந்தாலும் நூற்றுக்கணக்கில் நூல்கள் எழுதிக் குவிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் கிடையாது. இதற்காகவே இமாஜானுக்கு முதுகில் ஒரு சபாஷ் தட்டலாம். அதிகமான நூல்கள் எழுதிக் குவித்த நாகூர்க்காரர் நாகூர் ரூமிதான் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை இந்த மனிதர் பொய்யாக்கி விட்டார்.

நாகூர் ஹனிபாவுக்காக எழுதிய நற்றமிழ்க் கவிஞர்கள்

ஒரு கவிஞனின் பாடலானது நாகூர் ஹனிபா அவர்களது சிம்மக்குரலால் பாடப்பட்டு, அது இசைத்தட்டாக வெளிவரவெண்டுமெனில் அதற்காக யாகம் செய்ய வேண்டும். முக்கியமாக யோகம் வேண்டும். தன் பாடல் அரங்கேற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் பல கவிஞர்கள் அவரது வீட்டு வாசலில் தவம் கிடந்துள்ளார்கள். கவிவாணர்கள் அத்தனை பேருக்கும் இந்த பேறு கிடைத்து விடுவதில்லை. இந்த பேறு கிடைத்துவிட்டால் நல்ல பேரும் கிடைத்து விடுவது ‘அக்மார்க் கியாரண்டி’.

இசைமுரசுவின் பாடல்கள் மகத்தான வெற்றி பெற்றமைக்கு அவரது ‘பாடல் தேர்வு’தான் முக்கிய காரணம் என்று கூறுவேன். பிற பாடகர்களின் பாடல்கள் பத்தில் ஒன்றோ இரண்டோ ‘ஹிட்’ ஆகும் பட்சத்தில் இவரது எல்லா பாடல்களுமே சக்கை போடு போட்டு, வெற்றியின் முகட்டை திக்கெட்டும் எட்டும். பாடலின் கருப்பொருள் பொதுப்படையாக, எல்லோர் மனதில் சென்றடைவதாக, பிரச்சினைக்குரியதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிக மிக கவனமாக இருப்பார். அந்த விஷயத்தில் நம் முன்னோடி பாடகர் பயங்கர கில்லாடி.

“நாகூர் ஹனிபா, தனக்கு பாடல் எழுதிக் கொடுக்கும் கவிஞர்களை வெளிச்சத்திற்கு வர விடாமல் இருட்டடிப்புச் செய்வார்” என்ற குற்றச்சாட்டை புகுத்தும் இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் போன்ற அரைவேக்காடுகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை. பாடலெழுதும் கவிஞர்களின் பெயர் இசைமரபுகளுக்கு ஏற்ப இசைத்தட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது வழக்கம். மேடைக் கச்சேரிகளின்போது பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் பாடலுக்கு இடையே பாடல் எழுதிய கவிஞரின் பெயரை அறிவிப்பதையும் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் நாகூர் ஹனிபா. இதைவிட வேறென்ன அவர் செய்ய முடியும்? சில இந்தி கஜல்களில் பாடலாசிரியரின் பெயரை பாடலுக்குள்ளேயே புகுத்துவதுபோல் தமிழ்ப்பாடல்களிலும் ஒரு மரபு இருந்திருந்தால் இந்த குற்றச்சாட்டுக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஒரு சில பழைய பாடல்களில் நாகூர் புலவர் ஆபிதீன் இந்த யுக்தியைக் கையாண்டுள்ளதை கவனிக்க முடிகிறது.

“ஜபருல்லா பிறந்த செய்தியை நான்தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை, நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா. அவ்வளவு நெருக்கமாக இருந்த நாகூர்க்கவிஞர் இஜட்.ஜபருல்லாவுக்கு கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் கவிஞர் நாகூர் சாதிக் அவர்களுக்கு வாய்த்தது. நாகூர் ஹனிபாவின் குரலில் ஜபருல்லாவின் பாடல் மலர்வதற்கு அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இசைமுரசுக்கு பாடல் எழுதித் தந்தவர்களின் வரிசை கணக்கிலடங்காது. புலவர் ஆபிதீன், மதிதாசன் என்கிற ஷாயிர் H.அப்துர் ரஹீம், தா. காசிம், அப்துஸ் ஸலாம், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், நாகூர் E.M.நெய்னார், அபிவை தாஜுதீன், இ. பத்ருதீன், மறைதாசன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாகூர் சாதிக் அவர்களைப் பொறுத்தவரை அவர் நாகூர் ஹனீபாவுக்காக எழுதித் தந்த அத்தனைப் பாடல்களுமே முத்தான பாடல்கள்; சத்தான பாடல்கள்; எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தித்திக்கும் பாடல்கள். நாகூர் ஹனிபாவுக்கும் கவிஞர் சாதிக் கைராசி மிகுந்தவர் என்ற எண்ணம் உள்ளூற மனதில் குடிகொண்டிருந்தது.

நாகூர் ஹனீபா என்ற மாபெரும் பிம்பத்திற்கு முன்னாள் அவருக்கு பாடல் எழுதிதந்த கவிஞர்கள் நிழலாக மறைந்து போனார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு நாகூர் ஹனீபாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பயனில்லை. அந்த கறுப்புச் சூரியனின் தோற்றத்தைப் போலவே அவருடைய ‘இமேஜும்’ ஆஜானபாகுவானது. அந்த அதிரடி சூரியனுக்கு முன்பாக எவரெடி ‘டார்ச்’ வெளிச்சம் எடுபடாமல் போவது இயற்கைதானே?

(முனைவர் பட்டத்திற்காக நாகூர் ஹனீபாவின் பாடல்களை ஆய்ந்துவரும் இலங்கை சகோதரர் ஒருவருக்கு என்னுடைய கட்டுரைகள் பேருதவியாக இருக்கிறது என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது)

“நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு காரணம் அதை எழுதித் தந்த கவிஞர்களா? அல்லது அவரது பாடல் தேர்வா?” என்ற தலைப்பு வேண்டுமானால் பட்டி மன்றத்திற்கோ அல்லது முனைவர் பட்டம் வாங்க நினைக்கும் கற்றறிந்த மாணவருக்கோ முற்றும் உகந்ததாக இருக்கும். நாகூர் ஹனீபாவின் பாடலின் வெற்றிக்கு பின்னணியில் ஒரே ஒரு நபர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது மட்டும் எனக்கு திட்டவட்டமாகத் தெரியும். அவர் பெயர் இன்பராஜ். திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர். நாகூர் ஹனீபாவின் பெரும்பான்மையான பாடலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அவர். இன்பம் பொங்கும் பாடல்கள் யாவும் இன்பராஜ் இசையமைத்த இன்னிசை.

நடிகை சரோஜாதேவிக்கு கண்கள் பேசுவது போல, சிவாஜி கணேசனுக்கு உதடுகளும் புருவங்களும் பேசுவதைப் போல, இன்பராஜுக்கு கைவிரல்கள் பேசும். ஆம். ஆர்கன் கீ-போர்டில் இவரது விரல்கள் படருகையில் அத்னான் சாமியின் அதே வேகம். குலாம் அலியின் அதே லாவகம். இன்பராஜ் என்ற அற்புதமான இசைக்கலைஞன் வெளிச்சத்துக்கே வராமல் போனான் என்பது ஒரு மாபெரும் துரதிருஷ்டமே. இன்பராஜுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு இதோ வருகிறேன்.

பாடகர் ஹெய்னுலாபுத்தீன்

இஸ்லாமியப் பாடகர் ஜெய்னுலாபுத்தீன் என் கல்லூரி காலத்தில் நான் படித்த அதே சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர். நடிகர் ராதா ரவி, சின்னி ஜெயந்த் மற்றும் ஜெய்னுலாபுத்தீன் ஒரே ‘செட்’ மாணவர்கள். கல்லூரி ஆண்டுவிழாவில் ராதா ரவி ஒரு நாடகத்தில் நடிக்க அவருடைய சகோதரர் எம்.ஆர்.ஆர்.வாசு நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தார். வேகமாக ஊதினால் காற்றில் பறந்துவிடும் ஒல்லியான தேகம் உடைய முஸ்லிம் மாணவர் ஒருவர் Benaam () என்ற படத்தில் இடம் பெற்ற,. சன்ச்சல் பாடிய “யாரா ஓ யாரா”  என்ற எட்டுக்கட்டை உச்சஸ்தாயி பாடலை அதே குரல் வளத்துடன் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் அந்த நபர்தான் இன்றைய இஸ்லாமியப் பாடகராக வலம்வரும் “வெள்ளிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வருவேன்” புகழ் ஜெய்னுலாபுத்தீன் பைஜி. அவரை நாங்கள் ” The chanchal of New College” என்றுதான் செல்லமாக அழைப்போம்.

[அது என்னமோ தெரியவில்லை. இஸ்லாமியப் பாடகர் என்றாலே நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முஹம்மது. ஜெய்னுலாபுதீன் போன்று எட்டுக்கட்டை தொனியில், அடித்தொண்டையிலிருந்து, High Decibel Frequency-யில், ஸ்பீக்கர் தெறிக்க, காது ஜவ்வு கிழிய பாடவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. உதாரணத்திற்கு ஜக்ஜித் சிங் போன்று யாராவது ஒருவர் மென்மையான குரலில் பாடினார் என்று வைத்துக் கொள்வோம். அவரை இஸ்லாமியப் பாடல் பாடுவதற்கு லாயக்கே இல்லை என்று நம் மக்கள் கண்டிப்பாக Disqualify செய்து விடுவார்கள்]

பாடகர் ஜெய்னுலாபுத்தீன் கல்லூரியில் என்னைவிட இரண்டு வருடங்கள் சீனியர். (நடிகர் சரத் குமாரும் அதே கல்லூரியில் வித்தியாசமான ‘பைக்’ வைத்துக் கொண்டு பந்தாவாக ‘அலம்பல்’ பண்ணிக்கொண்டிருந்த காலம் அது) பாடகர் ஜெய்னுலாபுத்தீனுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு சுமார் பத்து இஸ்லாமியப் பாடல்களை ஒரே நேரத்தில் எழுதித் தந்தேன். அந்த பத்து பாடல்களுக்கும் இரண்டே நாட்களில் வெறும் ஒரு சிந்தஸைசரை வைத்துக் கொண்டு திறம்பட இசையமைத்துக் கொடுத்தார் இன்பராஜ். ஒவ்வொரு பாடல்களுக்கும் பத்து விதமான மெட்டுக்கள் பலவிதமாக இசைத்துக் காண்பித்து எனக்கும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அவருடைய இசைத்திறத்தை வெளிக்காட்டியதை என்னால் மறக்க முடியாது. “பாலைவனத்தில் பூத்த மலரே” “அலீஃப் என்ற எழுத்தில் மட்டும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு” “போகும் மேகங்களே! எங்கள் பூமான் நபிக்கு சலாத்தை சொல்லுங்களேன்” போன்ற எனது பாடல்கள் தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியாவிலும் ஜெய்னுலாபுத்தீன் அவர்களின் குரலில் ஒலித்தது.

அதே போன்று, 1987-ஆம் ஆண்டு பாடகர் ஜெய்னுலாபுத்தீன் உடன் நாகூர் சாதிக் அவர்களுக்கு ஏற்பட்ட நட்புறவுக்குப் பிறகுதான் கவிஞருடைய ஏகப்பட்ட பாடல்கள் அரங்கேறின. அவரின் அளவிலா கவியார்வத்திற்கு வடிகாலாக இருந்தார் இந்த பாடகர். “ஆன்மீகத் தென்றல்” என்ற பட்டத்துடன் A.ஜெய்னுலாப்புத்தீன் ஃபைஜி. இசையுலகை வலம் வந்த நேரம் அது.

“நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே
நல்லருள் செய்வாய் யா ரஹ்மானே!”

“என் ஆசை நெஞ்சம் தேடுதே யாரசூலல்லாஹ்”

“மன்னர் நபி நடந்து சென்ற”

போன்ற பாடல்கள் நாகூர் சாதிக் என்ற கவிஞரை மென்மேலும் இஸ்லாமிய இசையுலகில் அடையாளம் காட்டித் தந்தது.

சாதிக்க வந்த ஆதிக்க நாயகன்

75-வயதான நாகூர் சாதிக் பந்தா எதுவுமே இல்லாத பேர்வழி. புகழுக்கு ஆசைப்படாதவர். தன் கவித்திறமையை பகிரங்கமாக வெளிக்காட்டி சமுதாயத்தில் பீற்றிக் கொள்ளாதவர். இன்றைய இளம் தலைமுறையினர் யாருக்கும் கூடுதல் பரிச்சயம் இல்லாதவர். “தானுண்டு தன் வேலையுண்டு” என்றிருப்பவர். மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத மனிதர்.

1937-ஆம் ஆண்டு அப்துல் கனி, ஹமீதா அம்மா இருவருக்கும் மகனாக பிறந்த இவர் பிறக்கு முன்பே தந்தையை இழந்து, சிறிய தந்தை செய்யது இப்ராஹீம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து ஆளானவர். நாகூர் ஹனிபா பயின்ற அதே நாகூர் செட்டியார் பாடசாலைதான் இவருக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த கலாகேந்திரம். இவர் கவிதை எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து முறையான பயிற்சி தந்தவர் கவி A.S.அலாவுத்தீன் அவர்கள்.

நாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களான ரவீந்தர், தூயவன், நாகூர் சலீம், நாகூர் சேத்தான், டைலர் அஜ்ஜி இவர்களைப்போன்று நாகூர் சாதிக்கின் பெயரும் நாகூர் நாடக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பின்னர் “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

நாகூரில் பல கவிஞர்கள் “பைத்து சபா” மூலமாக கண்டெடுக்கப் பட்டவர்கள்தான். ஏதாவது ஒரு சினிமாப் பாடல் பிரபலமாகி விட்டால் போதும். அதே மெட்டில் உடனே ‘இஸ்லாமியப் பாடலொன்று” முளைத்துவிடும். குத்துப்பாடல் மெட்டில் இஸ்லாமியப் பாடல்கள் அரங்கேறுகையில்தான் சிற்சமயம் நமக்கு இரத்தக்கொதிப்பும் கூடவே எகிருகிறது. நாகூர் சாதிக் அவர்களின் எல்லா பாடல் வரிகளும் கண்ணியம் மிக்கதாக இருக்கும்.

வரந்தரும் மாநபி வையத்தில் பிறந்தாரே
முழு மதி ஒளிவோடு மனிதா!

என்ற பாடலோடுதான் அவரது அறிமுக நுழைவு இருந்தது. அன்று எழுதத் தொடங்கிய பேனா இன்றுவரை நிறுத்துவேன் என்பேனா என்கிறது. கவிதையுலகில் சாதிக்க வந்த சாதிக், ஆதிக்க நாயகனாக இன்றுவரை வலம் வருகிறார்.

நாகூரில் கவிஞர்கள் நிறைய உருவாவதற்கு என்னதான் காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். மண்ணின் மகிமை, புலவர் கோட்டை என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும். இதுபோன்ற பைத்து சபாக்கள், மற்றும் கல்யாண நிகழ்ச்சியில் இடம்பெறும் ‘நாலாம் நீர்’ சடங்கின்போது இசைக்கப்படும் பரிகாசப் பாடல் போன்றவை, வளரும் கவிஞர்களுக்கு ஒரு Platform அமைத்துக் கொடுக்கிறது. இன்று கவிஞர்களாக வலம் வரும் கதிர்தாசன் (காதர் ஒலி), இதயதாசன் (காசிம்) உட்பட எத்தனையோ கவிஞர்கள் பரிகாசப் பாடல்கள் எழுதி கவிஞர்களாக நம்மிடையே அங்கீகாரம் பெற்றவர்கள்தான்.

நாகூர் வருகை தந்து, மேடையேறி இங்கிருந்து பிரபலமடைந்த பாடகர்களில் அதா அலி ஆஜாத், ஹரிகிருஷ்ணன், நாகை ராமகிருஷ்ணன், காயல் ஷேக் முகம்மது, ஜெய்னுலாபுதீன் போன்றோர்கள் அடக்கம். வெளியூர்க்காரர்களான இவர்கள் அனைவரும் நாகூர்க் கவிஞர்களின் பாடலைப் பாடியிருக்கின்றனர். ஆக உள்ளுர்ப் பாடகர்கள் அன்றி வெளியூர்ப் பாடகர்களுக்கும் பாடல் எழுதித் தந்து புகழ் அடையக் கூடிய கூடுதல் வாய்ப்பு நாகூர்க் கவிஞர்களுக்கு தாராளமாகவே ‘போனஸாகக்’ கிடைக்கிறது. நாகூர்மண் கச்சேரிகளுக்கு பேர்போனதால் கவிஞர்களின் பேனாக்களுக்கும் எல்லையில்லா கொண்டாட்டம்தான்.

அண்மையில் (2011-ஆம் ஆண்டு) சமுதாயம் மறந்து போன இக்கவிஞனை Innerlight Moments என்ற சிங்கை நிறுவனம், சிங்கப்பூர், மலேசியாவுக்கு வரவழைத்து கெளரவித்தது. நாகூரைப் பொறுத்தவரை இவருக்கு பாராட்டு விழா நடத்தினால் யாரும் வருவார்களா என்பது சந்தேகமே. காரணம் நாகூர் ஹனீபா என்ற சாதனையாளனுக்கு சில ஆண்டுகட்கு முன்னர் நாகூர் முஸ்லீம் சங்கத்தில், ஜனாப் சுல்தான் மாலிமார் அவர்களின் தலைமையில், ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி, ஊரெல்லாம் கூப்பாடு போட்டு, போஸ்டர் அச்சடித்து, நோட்டீஸ் விநியோகித்து, விளம்பரம் செய்து, அவருக்கு “வாழ்நாள் விருது” கொடுத்தபோது அக்கூட்டத்திற்கு திரண்டு (?) வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதைக்கண்ட கம்பம் சாகுல் ஹமீது “இதே விழாவை கம்பம் நகரில் ஏற்பாடு செய்திருந்தால் ஊரே திரண்டுவந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கும் என்று மனமுடைந்து பேசினார். இதைத்தான் “உள்ளூர் மாடு விலை போகாது” என்று பழமொழி சொன்னார்களோ?

தும்பை விட்டு வாலைப் பிடித்தே பழக்கப் பட்டு போனவர்கள் நாம். ஏனெனில் இருக்கும்போது அவனை கண்டுக்காமல் இருந்துவிட்டு, அவன் போனபின் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் நமது பண்பாடாக இதுவரை இருந்து வருகிறது. தமிழுக்கு இறவாப் புகழைப் பெற்றுத் தந்த பாரதியின் சவ ஊர்வலத்துக்கு 30 பேர்கள் கூட கலந்துக் கொள்ளவில்லையே? ஒரு கொத்துப் பறாட்டவுக்கு கவிதை பாட தயாராக இருந்து, வறுமை தின்ற கவிஞனான புலவர் ஆபிதீனை நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு அவன் போனபிறகு அவன் பெயரில் “ஆபிதீன் சதுக்கம்” என்று பெயர் மட்டும் வைத்து பொதுக்கூட்டம் போட, அந்த நாற்சந்தியை பயன்படுத்திக் கொள்கிறோம். மகாகவி சாரண பாஸ்கரனை கடைசி காலத்தில் “சீட்டுக்கவி” எழுதி உதவி எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளியதே இந்த சமுதாயம்?

நாகூர் தர்கா நிர்வாகம் கவிஞர் சாதிக் அவர்களுக்கு “ஆன்மீகக் கவிஞர்: என்ற பட்டத்தை தந்து தன் பங்குக்கு கடமையை நிறைவேற்றி விட்டது.

வருங்காலத்தில் நாகூர் சாதிக் அவர்களின் மறைவுக்குப் பின்னால் யாராவது இன்னொரு கவிஞர் வந்து “கவிஞர் சாதிக் வாழ்ந்தமுறை உனக்குத் தெரியுமா?” என்று அவரை வருங்கால சந்ததியினருக்கு நினைவு படுத்துவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.

– அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி: Hawama Majeed 

நன்றியை வைத்து உனைப் புகழ்ந்தேனே

நெஞ்சில் உருவாகும் நினைவெல்லாம் பாடும்

கவிஞர் நாகூர் சாதிக் வலைத்தளம் 

 

 

Tags: , , , , ,

சித்தி ஜுனைதா பேகத்தின் பெண்ணியச் சிந்தனை


(இந்த ஆய்வுக் கட்டுரை பேராசிரியை மு. ஆயிஷாம்மா அவர்களால் 2007-ஆம் ஆண்டு நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது)

முன்னுரை

இஸ்லாமியத் தொழில் இலக்கிய உலகில் ஒளியுமிழ் தாரகையாக மின்னிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம் ஆவார். இவர் இயற்றிய முதல் தமிழ் நாவல் “காதலா? கடமையா?” ஆகும். இவரது மற்ற படைப்புகளில் ஒன்றான “இஸ்லாமும் பெண்களும்” என்ற தலைப்பில் இஸ்லாம் பற்றியும் பெண்களின் பல்வேறு உரிமைகள் பற்றியும், முஸ்லிம் சமுதாய பெண்களிடையே நிலவும் சூழ்நிலை பற்றியும் கூறி பெண்ணிணத்திற்கே புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது முற்போக்குச் சிந்தனைகள் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

சித்தி காலச் சமுதாயச் சூழல்:

ஆண் பெண் இருபாலரும் இணைந்தே மனித சமுதாயம். சமூக வாழ்வில் பெண், ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும், தனி ஆணுக்குச் சற்றும் குறையாத ஓர் உன்னதமான பொறுப்பை வகிக்கின்றாள். மேலும் தனி வாழ்வோ, பொது வாழ்வோ அல்லது வாழ்க்கையின் எந்தத் துறையோ ஆகட்டும், எதிலும் பெண்ணை விட்டும் நீங்கிய ஒரு சமூக அமைப்பைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. எனவே, சமூக அமைப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது எனும் அடிப்படையில் தான் இஸ்லாத்தின் கொள்கைகளும் வாழ்வில் தத்துவங்களும் பெண்களிடையே பரவுவதற்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி செய்த ஒரு பெண் படைப்பாளி என்று சொன்னால் மிகையாகாது.

இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் காரணம் அவருடைய கதைகள், கட்டுரைகள் அல்ல, அவைகள் எழுதப்பட்ட காலம், சூழல் பின்புலம், சித்தி ஜுனைதாவின் பள்ளிப்படிப்பின்மை ஆகியன ஆகும். அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதற்கு அஞ்சினர். இப்படி முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி எழுதி, தன் பெயரையும் போட்டு தன் வீட்டு முகவரியையும் மறவாமல் கொடுத்து, புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள் என்பது தான் இளம் வயதிலிருந்த இவருடைய முதிர்ச்சிக்கும் துணிச்சலுக்கும் அடையாளமானது. ஆகவே இவரை வரலாறு படைத்த, படிக்காத மேதை என்று வர்ணித்தாலும் தகும்.

சித்தி ஜுனைதா ஒரு முற்போக்கு புரட்சி எழுத்தாளர்:

“காலம் காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து ஆண்களுக்கு நிகரான மதிப்பினை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கும் செயற்பாடும் ஆகும்”, (பிரேமா, இரா.1994 ப.5)

சித்தி ஜுனைதாவும் பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று விளங்க வேண்டும் என்ற புரட்சி எண்ணத்தை தமது கட்டுரையின் வாயிலாக பரப்பியவர். ‘பெண்கள் சினிமா பார்க்கலாமா?’ என்னும் கட்டுரையில் “இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் என்பதுதான் என் கருத்து ஆகும்” என்று கூறியவர். ஆண் வன்மை உடையவன்; பெண் மென்மை உடையவள். ஆணுக்குள்ள கடமைகள் வேறு; பெண்ணுக்குள்ள கடமைகள் வேறு; உரிமைகளும் வெவ்வேறுதான். ஆனால் நீதி ஒன்றாகத்தான் இருத்தல் வேண்டும் என்று பெண்களின் தனித்துவத்தை தமது ‘பெண்ணியம் அணுகுமுறைகள்’ என்பதில் இரா. பிரேமா குறிப்பிடுகிறார்.

“அறச்செல்வி ராபியா” என்னும் கட்டுரையில் ஆன்மிகத்துறையில் அதியுன்னத அந்தஸ்தைப் பெறுவதற்குப் பெண்களும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும், ஆன்மீக மெய்ஞ்ஞான விசாரணை என்பது ஆண்களுக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எண்ணம் தவறானது என்பதையும் தமது கட்டுரையில் நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார். “பாராளப் பிறந்தவள் பேயாட்டம் போடுவதா” என்னும் கட்டுரையில் பெண் கல்வியினால் இஸ்லாமியப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கலாம். ஆண்களின் மேலாதிக்கப் போக்கிற்குப் பெண் கல்வி சவாலாக அமைகிறது என்று ஒரு புரட்சிப் பெண்ணாக மாறி விதண்டாவாதம் புரிவோர் மீது சீறிப் பாய்கிறார் என்பதை அவரது கட்டுரைகள் மூலம் நாம் அறிந்துக்கொண்டு அவரை பெண்ணிய முற்போக்குச் சிந்தனைவாதி என்று சொல்வதில் ஐயமில்லை.

திருமண உரிமை :

ஜான் ஸ்டூவர்ட்மில், தன் பெண்ணடிமை என்ற நூலின் வழி “திருமணம் என்ற நிறுவனம் பெண்ணுக்கு மிகப் பாதகமானது, பெண்ணடிமைத்தனத்திற்கு இத் திருமணமே காரணமாக உள்ளது என்றும், இவற்றை போக்கினாலொழிய பெண் விடுதலைக்கு வழியில்லையென்றும் குரல் எழுப்பினார். இத் திருமணத்திற்குப்பின், மனைவி, தனக்கென்று சுய விருப்பம் ஆர்வம், தனித்துவம் கொண்டிருப்பதை ஆணாதிக்கச் சமுதாயம் மறுக்கிறது” என்று பெண்ணிய திறனாய்வில் திருமண உரிமையினால் பெண் சுதந்திரம் இழக்கிறாள் என்ற கருத்தும் அறியப்படுகிறது. சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் பெண்கள் தமக்கு பிடித்தவரையே மணஞ்செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.

ஒத்த நலனும். ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடு மாடுகளைப் பிணைப்பதைப்போல் பிணைத்து விடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமில்லாத ஒருவனை மணந்துகொள்ள பெற்றோராலும் மற்றோராலும் வற்புறுத்தப் படுவாளேயானால், அப்பெண் அத்திருமணத்தை நிறைவேற்றி வைக்கும் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள்ளலாம். என்றும் இஸ்லாமிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்வதின் மூலம் குடும்ப பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் முற்படுத்துகிறார்.

மேலும் இஸ்லாம் பலதார மணத்தையும் ஆதரிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்த ஒருவன் ஊண், உடை, வீடு தங்கும் நேரம் எல்லாவற்றிலும் சமத்துவமாக ஆக்கக் கடமைப் பட்டிருக்கின்றான் என்றும் இவ்வாறு நடக்கத் தகுதியற்றவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணக்கும் உரிமையை இழந்து விடுகின்றான் என்றும் பரிசுத்த திருமறை தெளிவாக உணர்த்தியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இஸ்லாத்தின் பெயரால் பெண்ணுலகை ஏமாற்றி ஆண்கள் தன்னலத்தின் பொருட்டு செய்யும் இந்த அடாத செய்கைக்கு இடமில்லை. ஆனால் எதற்கும் விதிவிலக்குண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத விலக்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம். இஸ்லாம் எப்பொழுதும் தன்னலத்தை வெறுக்கின்றது. பிறர் நலம் ஓம்பலே இஸ்லாத்தின் ஆணிவேர் என்று இவர் கூறிய கருத்துகள் யாவும் திருக்குர்ஆன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன,

கல்வி உரிமை :

“பாரம்பரிய லட்சியங்களுக்கு ஏற்பவும் அதே நேரத்தில் நவீன தேவைக்கு ஏற்பவும், பெண்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். பெண்களின் மனதில் குடிகொண்டுள்ள ‘இந்து தர்மத்தை’ப் பாதுகாத்துக் கொண்டே அவர்களுக்குக் கல்வியோடு வாழ்க்கையும் நல்க முடியும். இது வேத காலம் நோக்கித் திரும்ப விழைகிற தியோசோபிகல் சொசைட்டியின் சிந்தனைக்கு ஏற்பவே உள்ளது; எனினும் அன்றைய சூழலில் பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதே பெரிய விஷயம்தான்” என முற்றுமுணர்ந்த கற்றோர் பலரும் அறிவிற் சிறந்த பெரியார் பலரும் இங்ஙனம் பெண் கல்வி பெண் கல்வி என்று கூவிக்கொண்டிருக்கும்போது 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பெண் கல்வியைக் கட்டாய கடமையாக்கினார் என்று நபியின் திருவாக்கியத்தினை எடுத்துக்கூறி இஸ்லாமிய பெண்களுக்குத் தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றி சித்தி ஜுனைதா பேகம் தமது கட்டுரையில் அழகாக பறைசாற்றியுள்ளார்.

சம உரிமை :

பெண்ணின் தாழ்வு எண்ணங்களும் கருத்துப் படிமங்களும் சமுதாயத்தில் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். பெண்மையின் மகத்துவம் எல்லா நிலைகளிலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட வேண்டும். ஆண், பெண் சமத்துவம் குடும்பத்திலும் சமூகத்திலும் நிலைபெற வேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்கள், பெண்கள் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் விழிப்புணர்வையும் மனித நேயத்துடன் வலியுறுத்த வேண்டும். இவை முழுமையாகச் செயற்படும்போது பெண் மீதான வன்முறைகளும், அநீதிகளும் அழிவுகளும் சிதைவடையும் என்பதில் ஐயமில்லை. இப்பெண்ணியக் கோட்பாடுகளுக்கு முன்பே பெருமானார் ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அவர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது. எளியோன், பணக்காரன், முதலாளி, தொழிலாளி, தொழிலாளி என்ற வேற்றுமையே கிடையாது என்று முதன் முதலாக உலகத்தின் நீண்ட சரித்திரத்தில் வீர முழக்கஞ் செய்தார்.

சித்திக்கு எதிர்ப்புகள்:

ஏறத்தாழ இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண் நலம் காக்க அவர் தீட்டிய சொற்சித்திரங்களை யாவும் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் எனப் பசப்பித் திரிவோர்க்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கின்றன. மேலும், பெண்கள் குடும்பம் தவிர கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் அன்பது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்தும்படி வைத்த ஒரு பெண் ஆசிரியை சித்தி ஜுனைதா; இவர் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதைவிட, எழுதிக் குவித்தார், என்பதே உண்மை. இவர் எழுதி வந்தபோது அதனைத் தடுக்கப் பலரும் முனைந்துள்ளனர். அதையும் மீறி எழுதியபோது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்து இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார். இவ்வாறு முதல் முஸ்லிம் பெண்மணி தனது முதல் படைப்பினை வெளியிடும்போது, பலவகை அனுபவங்களையும், தடைகளையும் சந்தித்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை:

சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் வெளிப்படுத்தும் பெண்ணியச் சிந்தனைகள் யாவும் தன் சமயம் சார்ந்த பெண்களுக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் போராட்ட வாழ்வில் சிக்கிப் புதைந்துக் கிடக்கும் எல்லாப் பெண்களுக்காகவும் கருணை ஒளி சிந்தியதை அவரது கட்டுரைகள் மூலம் நமக்குப் புலப்படுத்தியுள்ளார். மென்மையில் உயிர்த்தெழுந்த பெண்மைக்கு எத்தகைய எழுத்து வன்மை இருக்கிறது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அடிக்குறிப்புகள்:

1. பெண்ணிய அணுகுமுறைகள் – இரா. பிரேமா
2. பெண்ணியத் திறனாய்வு – முனைவர் வீ. நிர்மலா ராணி
3. இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதா? – கவிக்கோ அப்துல் ரகுமான்
4. தமிழகத்தின் சமூகச் சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு – அருணன்

Related Links:

சித்தி ஜுனைதா – நா. கண்ணன், ஜெர்மனி

சித்தி ஜுனைதா – ஓர் இனிய அறிமுகம் 

காதலா? கடமையா? – குறுநாவல்

மகிழம் பூ – நாவல்

சித்தி ஜுனைதா –  குமுதத்தில் வெளிவந்த கட்டுரை 

சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும் 

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் – ஜே.எம்.சாலி

சித்தி ஜுனைதா –  ஒரு நேர்காணல்

சித்தி ஜுனைதா – பிறரின் பார்வையில்

 

Tags: , , , ,