RSS

Category Archives: உலக நடப்பு

சகபயணி அமைவதெல்லாம் .. .. ..


“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று சொல்லுவதைப் போல பஸ்ஸிலோ, விமானத்திலோ பிரயாணம் செய்யும் போது நமக்கு பக்கத்தில் உட்காரப் போவது யார் என்பதை நிர்ணயிப்பது நாம் செய்த புண்ணியம்தான் என்று நினைக்கிறேன்.

ஒல்லியான மனிதர் நம் பக்கத்துச் சீட்டு ஆசாமியாக வாய்த்து விட்டால் அது நாம் செய்த புண்ணியம். துரதிர்ஷ்டவசமாக நுஸ்ரத் பதே அலிகான் அல்லது (பழைய உருவம் ) அத்னான் சாமி மாதிரி ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ அதோ கதிதான்.

ஒரு சமயம் ஊரில், பஸ்ஸில் கைப்பிடி இல்லாத இரட்டை இருக்கையில் தடிமனான ஆசாமியோடு நான் உட்காரப் போக, லெதர் சீட்டிலிருந்து வழுக்கி, வழுக்கி பலமுறை கீழே விழுந்து முட்டியை உரசிக் கொண்டது நன்றாக நினைவிருக்கிறது.

அண்மையில் என் உடன்பிறவாத் தங்கை, எமர்ஜென்ஸியாக தாயகம் போய் வர நேர்ந்தது. துணையின்றி தனியாக விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்ததால், கால் வைக்க விஸ்தாரமான, வசதியான இருக்கை கொண்ட, Emergency Exit-யை ஒட்டி இருக்கும் இருக்கையை, Boarding Pass வாங்கும்போது வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவான அவரது கணவர். போராடிப் பெற்ற பிறகு அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காலரை வேறு தூக்கி விட்டுக் கொண்டாராம். பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

பாவம் அவரது கணிப்பு இப்படி ‘உல்டா’வாகும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ‘புள்ளையார் புடிக்க குரங்கான கதை’தான்.

இவர் நினைத்ததைப் போலவே இன்னொரு ஓவர்வெயிட் ஆசாமி வசதியான இருக்கை வேண்டும் என்று மன்றாடி பெற, அவருக்கு வந்து வாய்த்ததோ நம் கதை ஹீரோயினின் பக்கத்து இருக்கை.

ஆசாமி குண்டு என்றால் குண்டு அப்படியொரு குண்டு. சாயம் போகாத கியாரண்டி கொண்ட கறுப்பு நிறம் வேறு. வந்து படக்கென்று உட்கார்ந்த போதே இருக்கை சற்று குடைச் சாய்ந்தது போலிருந்ததாம்.

ஊரிலே குதிரை வண்டியில் ஏறிப் போகையில் ‘பின்பாரம் அதிகமா இருக்கும்மா. முன்பாரம் வேணும். கொஞ்சம் முன்னாடி தள்ளி வாங்கம்மா” என்று குதிரை வண்டிக்காரன் ஆழி எச்சரிக்கை விடுப்பான். 

இங்கே பிளேனில் முன்பாரம், பின்பாரம் என்று யாரிடம் போய் சொல்லுவது? கை வைப்பதற்காக இருப்பதோ ஒண்ணரை அல்லது இரண்டு இஞ்ச் Hand Rest கைப்பிடி. அதில் ஹாயாக இந்த ஆசாமி தன் 30 கிலோ கையை வைத்து ஆக்கிரமிக்க, இந்தப் பெண்மணி கடுங்குளிரில் அடிப்பட்ட  பூனைக்குட்டி போல் உடலைச் சுருக்கிக் கொண்டு, இருக்கையோடு இருக்கையாக, பல்லிபோன்று ஒட்டிக்கொண்டு, ஒருக்களித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

பட்டி மன்றம் ஒன்றில் லியோனி கூறிய கதை ஒன்று இப்போது நினைவுக்கு வந்தது. பஸ்ஸில் பக்கத்து பக்கத்துச் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு இடையை சண்டை வந்து விட்டது. ‘ஜன்னலை மூடு’ என்று ஒருவர் சொல்ல, ‘ஜன்னலைத் திற’ என்று மற்றவர் சொல்ல, போட்டா போட்டி நடந்துக் கொண்டிருந்தது. சண்டையைத் தீர்த்து வைக்க கண்டக்டர் வந்திருகிறார்.

“எனக்கு குளிர்காத்து  ஒத்துக்காது. தொறந்து வச்சா நான் செத்துப் போயிடுவேன்” என்று ஒருவர் முறையிட,

“எனக்கு காத்து வேணும். மூடி வச்சா மூச்சு முட்டியே நான் செத்துப் போயிடுவேன்” என்று மற்றவர் கூற

“இப்படிச் செய்யலாம். கொஞ்ச நேரம் ஜன்னலைத் தொறந்து வை. இந்த ஆளு செத்து போயிடுவான். ஒரு பிரச்சனை சால்வ் ஆயிடுவோம். கொஞ்ச நேரம் ஜன்னலை மூடி வச்சா, இந்த ஆளும் செத்துப் போயிடுவான். அடுத்த பிரச்சினையும் சால்வ் ஆயிடும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

இது போன்ற புத்திசாலித்தனமாக நாட்டாமை செய்யவும் Gulf Air விமானப் பணிபெண்களுக்கு பயிற்சி அளித்தால் தேவலாம். நல்லவேளை விமானத்தில் ஜன்னலைத் திறந்து மூடும் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பே இல்லை.

‘பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்’ என்ற முதுமொழி விமானப் பணிப்பெண்களுக்குப் பொருந்தாது போலும். நம் கதாநாயகி, பணிப்பெண்ணிடம் சென்று இருக்கையை வேறு பெண் பயணியின் பக்கத்தில் மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்க, அவர் தனது லிப்ஸ்டிக் உதட்டை பிதுக்கி, ‘சாரி’ என்ற குட்டி வார்த்தையோடு கையை விரித்து விட்டார்.

சாப்பாடு முடிந்ததும் ஒரு கடுமையான ஏப்பம் பெரும் சப்தத்துடன் குண்டு ஆசாமி விட, நம் கதாநாயகி மேலும் அதிர்ந்துப் போயிருக்கிறார். சாப்பாட்டுக்கு பிறகு.. ..? வேறன்ன தூக்கம்தான், அதுவும் Sterophonic டிராக்கில் Woofer வைத்ததுபோல் ஒரு குறட்டைச் சத்தம் வேறாம். ரஜினி பாஷையில் சொன்னால் “சும்மா அதிருதில்லே”. 

குறட்டை விட்டுத் தூங்கும் ஆசாமி எங்கே தன் மீது சரிந்து விடுவாரோ என்ற பயம் வேறு. பிரயாணம் முழுதும் ஹிட்ச்காக் படம் பார்ப்பதைப் போன்று ஒரு விதமான திகில் உணர்வோடு பிரயாணம் செய்திருக்கிறார் இந்த பெண்மணி.

சக பிரயாணி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்.

 (நம் கதையின் வில்லன், படத்தில் காணப்படும் நபரைப் போல் அவ்வளவு குண்டாக இல்லாவிட்டால் கூட, சற்றே இளைத்தவராக வாசகர்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்)

 

நல்ல பாம்பு


படத்தில் நல்ல பாம்புடன் மகன் டானீஷும் மகள் மோனாவும்
 
என்ன லூசுத்தனமா இதுக்குப் போயி நல்ல பாம்புன்னு தலைப்பு கொடுத்திருக்கீங்கன்னு யாராவது கேக்கலாம். கெட்ட பாம்புதானே கடிக்கும்? இதுதான் கடிக்கலியே அதனாலே இதுக்கு நல்ல பாம்புன்னு தாரளாமா பேரு வைக்கலாம்னு சொல்லி தைரியமா சமாளிச்சுடலாம். ஹி.. ஹி….
 
பாம்பு ஜோக்
 
சின்ன மரைக்கான் : ஷாம்புக்கம் பாம்புக்கும் என்னாங்கனி வித்தியாசம்?
சேத்த மரைக்கான்: : நாம ஷாம்பு போட்டா நம்ம தலையிலே நுரை வரும், பாம்பு நம்மள போட்டா நம்ம வாயில நுரை வரும்.

——————————————————————————–

குட்டிப் பாம்பு : நம்ம உடம்புல பயங்கரமா விஷம் இருக்குன்னு சொல்லுறாஹலே உண்மையாம்மா?
உம்மா பாம்பு : ஏம்புள்ளே கேக்கற?
குட்டிப் பாம்பு : இல்ல என் நாக்கை நானே கடிச்சுக்கிட்டேம்மா.

——————————————————————————-

உம்மா: உன் வாப்பா ஏண்டா இப்படி பாம்பு மாதிரி நெளியுறாஹா…?
மகன் : தலைவலி மாத்திரைனு நினைச்சு பட்டாசு கடையிலேந்து வாங்கிட்டு பாம்பு மாத்திரையை லபக்குன்னு வாயிலே போட்டு முழுங்கிட்டாஹமா !

————————————————————————————–

சின்ன மரைக்கான் :- நேத்து எங்க வூட்டுல பாம்பு வந்திருச்சுங்கனி
சேத்த மரைக்கான் : அல்லாவே… அப்புறம் ….?
சின்ன மரைக்கான் : வாஞ்சூர்லேந்து பாம்பாட்டிய கூட்டியாந்து வந்து அடிச்சோம்
சேத்த மரைக்கான் : அட பே துப்பா ! .. பாம்பு வந்ததுக்கு ஏங்கனி பாம்பாட்டிய கூப்பிட்டு வந்து அடிச்சீங்களுவோ?

——————————————————————————

நூல் விமர்சனம்

பாம்பு என்றால்..?,
ச. முகமது அலி,
வெளியீடு: இயற்கை வரலாறு அறக்கட்டளை,
பொள்ளாச்சி 3,
பக்:72, ரூ.50

பாம்புகளைக் கண்டவுடன் அச்சம் கொள்வதுடன், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து அதைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போர், நம் நாட்டில் 95 விழுக்காடு உள்ளனர். மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள அறியாமையே இதற்கு அடிப்படைக் காரணம்.

பாம்புகளை தெய்வீகத்தோடு பார்க்கும் நம் நாட்டில்தான் பாம்புகளைப் பற்றிய பொய்யுரைகள், தவறான சொல்லாடல்கள், மூடநம்பிக்கைகள் ஆயிரம்ஆயிரமாய் குவிந்துள்ளன. நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் மக்களுக்கு காட்டுயிர்கள் பற்றி விழிப்பூட்டுவதற்கு பதிலாக, எதிர்மறையான மூடநம்பிக்கைகளையே திரும்பத்திரும்பக் கூறி வருகின்றன. இது மக்களிடம் இன்னும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலில் தோழர் ச. முகமது அலி எழுதி தமிழில் வெளிவந்துள்ள “பாம்பு என்றால்?” நூல் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் மேல் உள்ள ஆர்வத்தால் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் முகமது அலி, ஏற்கெனவே எழுதியுள்ள “நெருப்புக் குழியில் குருவி”, “யானைகள்: அழியும் பேருயிர்”, “இயற்கை: செய்திகள்-சிந்தனைகள்” போன்ற நூல்களின் மூலம் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர்.

இந்த நூலில் மனிதனின் பொதுப் புத்தியில் படிந்துள்ள பாம்பு பற்றிய மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் துணையோடு பலத்த அடி கொடுத்துள்ளார். அதில் சில முக்கிய விவரங்கள்:

– பல்லிகளில் இருந்தே பாம்புகள் பரிணமித்துள்ளன.
– பாம்புகள் முட்டை, பாலை உண்பதில்லை. முட்டையுண்ணி என்ற தனி வகை பாம்பு மட்டும் முட்டையை விழுங்குகிறது.
– நம் நாட்டில் காணப்படும் 270 வகைப் பாம்புகளில் 4 வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவை அனைத்தும் விஷமற்றவை.

இப்படி மக்கள் மனதில் பதிந்து, படிந்து போயுள்ள பழைமைக் கருத்துகளை அகற்றும் வகையில் ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். பாம்புகளின் வகைகள், பாம்புகளைப் பற்றிய இதர விவரங்கள் என 14 தலைப்புகளில் அறிவியல் கண்ணோட்டத்துடன், மேலைத்துவ பாணியில் இந்த நூல் தரமாக வெளிவந்துள்ளது. நேர்த்தியான ஒளிப்படங்கள், கோட்டோவியங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

மனிதர்களின் கைகளில் சிக்கி கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் அழிந்து கொண்டிருக்கும் பாம்புகளின் எதிர்கால வாழ்க்கை, தற்போது கேள்விக்குறியாகி நிற்கிறது. சூழலியல் சமன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பாம்புகள் அழிந்தால், அதன் தொடர்ச்சியாக மனிதனும் அழியும் நாள் தொலைவில் இல்லை.

“விலங்குகள் இல்லாமல் மனிதன் எங்கே? விலங்குகள் எல்லாம் மறைந்து விட்டால், மனிதன் மிகுந்த தனிமைக்கு உள்ளாகி மடிந்து விடுவான். இப்போது விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ, அது விரைவில் மனிதனுக்கும் நேரும். ஒரு வேளை மற்ற உயிர்களைவிட முன்னதாகவே, உன் படுக்கையை அசுத்தப்படுத்தி, ஒரு நாள் உன் மலத்திலேயே மூச்சுத் திணறிச் சாவாய்” என்று 1854ல் அமெரிக்க சிவப்பிந்தியத் தலைவர் சீயல்த் கூறிய வார்த்தைகள் உண்மையாவதற்கு முன், நாம் செயல்பட ஆரம்பிப்போம்.

– ஏ. சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், பெலிகன் நேச்சர் போட்டோகிராபி கிளப்

(நன்றி: பசுமைத் தாயகம்)
(நன்றி: கீற்று)

 


இன்று Gulf Daily News பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியைப் படித்து மனது வேதனைக்குள்ளானது.

தெற்கு சோமாலியாவில் கடந்த ஒரு மாத காலமாக 10-25 வயது பிரிவு மாணவ/ மாணவிகளுக்கான புனித குர்ஆன் ஓதுதல் மற்றும் பொது அறிவுப்போட்டியை இளைஞர் போராளிக்குழு (Al Shabaab Rebels) என்ற அமைப்பு நடத்தியது.

முதலிடத்தை வென்ற 17-வயது மாணவனுக்கு கிடைத்த பரிசுப்பொருள் என்ன தெரியுமா?

ஒரு ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டு, ஒரு கண்ணி வெடி மற்றும் ஒரு கணிப்பொறி வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தை வென்ற 22-வயது மாணவனுக்கு ஒரு ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி மற்றும் சில போர்தடவாளங்களை பரிசளித்திருக்கிறார்கள்.

பரிசு விழாவின் போது உரையாற்றிய நிகழ்ச்சி அமைப்பாளர்கள், “பெற்றோர்கள் முன்வந்து குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஐ.நா.சபை ஆதரவுடன் ஆட்சி புரிந்து வரும் அதிபர் ஷேக் ஷரீஃப் அஹ்மதுக்கு எதிராக 18-வருடங்களாக அல்-ஷபாப் மற்றும் ஹிஸ்புல் இயக்கத்தினர் நடத்தி வரும் உள்நாட்டுப்போர் இது.

இன்று உலகம் முழுவதும் மதம் எனும் போர்வையில் ஆயுதம் ஏந்தி தங்கள் தீவிரவாதச் செயலுக்கு நியாயம் கற்பிப்பவர்களைக் காண்கையில் மு.மேத்தாவின் கவிதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

உலக வீதிகளில்
ஊர்வலம் போகும்
ஆயுதங்கள் .. ..

வீடுகளுக்குள் ஒளிந்தபடி
எட்டிப் பார்க்கும்
மனிதன்.