RSS

Category Archives: என் கவிதைகள்

கனவுகளும் ரஜினியும்


கனவுகளுக்கு உருவம் உருவமுள்ளதா..?
ஆம். உள்ளது;
இல்லையெனில்
எப்படி அதனை நாம்
காண முடியும்?

காற்றையோ, கடவுளையோ
காணமுடியாத நாம்
கனவுகளைக் காண்கின்றோமே..?

கனவுகள் காணச்சொன்ன
ஐயா அப்துல் கலாம்
பொய் பேச மாட்டாரே..?

கனவுகளுக்கு அங்கங்கள் உள்ளதா..?
ஆம். உள்ளது;
இல்லையெனில்
எங்ஙனம் அது
சிறகுகளை விரிக்க முடியும்?

கனவுகள் திடவப் பொருளா?
ஆம். திடவப்பொருள்தான்.
கனவுகள் சிதறுகிறதே..?
கனவுகள் உடைகிறதே..?
கனவுகள் தூள்தூளாகிறதே..?
கனவுகள் காணாமல் போகிறதே?

பாரதி சொன்ன
நிற்பனவே..!, நடப்பனவே..! பறப்பனவே..!
இது கனவுகளுக்கும் பொருந்தும்.

கனவுகள் பறக்கும்..
கனவுகள் நடக்கும்..
கனவுகள் நடக்காமல் நின்றுபோகும்..!

கனவுகள் ரஜினி மாதிரி
எப்ப வரும்..?
எப்படி வரும்..?
யாருக்குமே தெரியாது..!

அப்துல் கையூம்

 

இன்னும் ஒரு சில வாரங்கள்


அரைத்த மாவையே அரைத்தெடுத்து
அவலை நினைத்து உரலை இடித்து
ஆளில்லா டீக்கடையில் அஸ்கா டீ ஆத்தி
அதோ பார் வெள்ளை காக்கா என அபாரமாய் கூவி
அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமுதமுமாய்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறி
சுயபுத்தி இழந்து சொற்புத்தியும் களைந்து
கூரைமேலே சோறு போட்டால்
ஆயிரம் காகமென வாய்ச்சவடால் பேசி
போகாத ஊருக்கு பொறுமையாய் வழி சொல்லி
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்
கொட்டை பாக்குக்கு விலை கூறித் திரிந்து
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
கொடிபிடிக்கும் தொண்டர்கள் துதிபாட
கோளுஞ் சொல்லி குனிந்தவாறு கும்பிடும் போட்டு
நகத்தாலே கிள்ளுவதை கோடாரியால் வெட்டிச் சாய்த்து
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என பீதி கொண்டு
மடியிலே கனம் ஏந்தி வழியிலே பயம் கவ்வ
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி
ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமியாய்
சண்டிக் குதிரையை நொண்டி சாரதி ஓட்ட
தேர்தல் நாள் வரை நெடுஞ்சுவராய் காட்சி தந்து
தேர்தல் முடிந்தபின் குட்டிச்சுவராய் காட்சிதரப் போகும்
கட்சிகளின் கூத்துக்கு மங்களம் பாட
காத்திருங்கள் இன்னும் ஒருசில வாரங்கள் !
கவலை மறந்து அமைதியாய் வேடிக்கை பாருங்கள் !!

– அப்துல் கையூம்

 

Tags:

பேய்கள் அரசாண்டால்….?


பேய்கள் அரசாண்டால் பிணம்தின்னும் சாத்திரங்கள்
பேதமையை தொடர்வதினால் நமக்குள்ளே ஆத்திரங்கள்
நாய்களும் நரிகளுமே ஊளையிடும் பிரசங்கம்
நமக்குஇவரா தருவார்கள் நல்லதொரு அரசாங்கம்?
ஓயட்டும் இவர்கொட்டம் பட்டதெல்லாம் படுநட்டம்
உண்மைகளை நாம் சொன்னால் உதாவக்கரை பட்டம்
கோயபல்ஸ்கள் நிறைந்துவிட்டார் கொள்கைகளோ காணோம் எங்கும்
கோடிகளை குவித்துவிட்டார் இவர்ஆட்டம் இனி மங்கும்

மதுஒழிப்போம் என்பார்கள்; மதுஆலை வைப்பார்கள்
மதியிழக்க செய்து நம்மை நம்ப வைப்பார்கள்
விதிமாற்ற முனைகின்றோம்; வியாக்யானம் சொல்லக்கூடும்
விளையாட்டை முடித்தபின்பு வேதாளம் மரம் ஏறும்
புதிதாக பலகதைகள் ஊடகங்கள் தான்புனையும்
பணம்பெற்ற அவர்கூற்று உண்மையென்று நம்பவைக்கும்
சதிகாரக் கும்பல்கள் சகலவித்தை கையாளும்
சனியன்களை வளரவிட்டால் சாக்காடு எந்நாளும்

நேற்று பெய்த மழையினிலே இன்றுபூத்த காளான்கள்
நிலையின்றி ஆடுவதை நேரிடையாய் காணடா!
ஆற்றுமணல் கொள்ளையர்கள் அதிகாரம் கைப்பற்றி
ஆட்சிபீடம் அமரவேண்டி ஆயத்தத்தை காணடா !
வேற்றுமையை ஏற்படுத்தி வெறும்பேச்சு சித்தாந்தம்
வீணர்களின் வாயிலிருந்து வெளிவருவதை காணடா !
நாற்றமுறும் சாக்கடையாய் சாதியினை மேலிருத்தி
நாட்டை ஆள துடிப்பவரின் நாடகத்தைப் காணடா !

கனிமவளம் சுரண்டியபின் கனவுகளை சுமந்தபடி
கழிசடைகள் உதிர்க்கின்ற கனிமொழியைக் காணடா !
இனிமேலும் நீ உறங்கி எதனையுமே கண்டிராமல்
இருந்துவிட்டால் இழப்புக்கள் தொடர்கதையே தானடா !
புனிதராக அரிதாரம் பூசியவர் வருகின்றார்
புரிந்துக்கொண்டு அவர்களையும் புறந்தள்ளி வீழ்த்தடா !
சனியன்களை மறுபடியும் சந்தர்ப்பவாதியையும்
சரிசெய்யத் தவறிவிட்டால் சனங்களுக்கு கேடடா !

எட்டுமுழம் வேட்டிகட்டி எலிகள் போகும் சவாரிகளை
எதற்கென்று சிந்தித்து இனம்கண்டுக் கொள்ளடா !
கட்டுக்கட்டாய் பணமிறக்கி களம்காணும் பேர்வழியை
களையெடுக்கும் தருணமிது அறிந்துக் கொள்ளடா !
சட்டங்களை கையிலேந்தி சாதகமாய் பயன்படுத்தும்
சண்டாளப் பேர்வழியை சகதியாக எறியடா!
வட்டமிடும் பருந்துகளாய் வாக்குபெற ஏமாற்றும்
வலையில்விழா திருக்க வேண்டும் புரிந்து கொள்ளடா!

– அப்துல் கையூம்

 

சாத்தன்கள் வேதம் ஓதும்


சாத்தான்கள் விதவிதமாய் வேதம் ஓதும்
சாதனைகள் (?) இதுவென்று பட்டியலாகும்
ஆத்தாவே கதி என்று துதிபாடும் பக்தர்களின்
ஆவேசம் பலமடங்கு இரட்டிப்பாகும்
சூத்திரர்மேல் திடீர் பாசம் அதுவாய் பொங்கும்
சூட்சமங்கள் அரசியலில் செயலாய் மாறும்
ஆத்திரத்தில் மதிமயங்கும் அடிவருடிகளின்
ஆணவங்கள் முகநூலில் காட்சிதரும்

பீற்றிக் கொள்ளும் சீமான்கள் நல்லவராய்
பெயரெடுக்க நாடகம் ஆடும்
ஆற்றாமையால் நட்புகளும் கொக்கரிக்கும்
அர்த்தமிலா வாதத்திற்கு நட்பை இழக்கும்
நாற்றமெடுக்கும் வாசகங்கள் தட்டெழுத்தாகும்
நடிப்பவனுக்கே நாட்டில் மரியாதை கூடும்
சீற்றங்கள் முழுமையாக கண்ணை மறைக்கும்
சிந்தனைகள் திசைமாறி சீரழிவைத் தேடும்

சாதிகளை வைத்தே சதுரங்க காய் நகரும்
“சாதிகட்சி நாங்களல்ல” வாக்குமூலம் வெளியாகும்
ஆதிசிவன் முப்பாட்டன் வழிவந்தோர் எனப்பகரும்
அவன்மைந்தன் முருகனையும் உறவுகொண்டாடும்
நாதியற்ற பேர்வழிகள் நாற்காலிக்கு ஆசைப்படும்
நடமாட முடியாதோர் நாடாள மனம்துடிக்கும்
வீதியிலே கலவரங்கள் வேடிக்கை ஆகும்
வீணர்களின் பேச்சுக்களை ஊடகங்கள் படம்பிடிக்கும்

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
தன் தலைவன் சொன்னதுவே வேத வாக்கு
ஏன் என்று கேள்விக்கு சொற்கணைகள் தான்பாயும்
எதிர்கேள்வி கேட்டுவிடில் ஓட்டம் பிடிக்கும்
நான் என்ற அகம்பாவம் பித்தம் ஏறும்
நாற்காலி கனவுகளில் நடுநிலை இழக்கும்
வானளாவ நாயகனை புகழ்பாடி நன்றி காட்டும்
வார்த்தைகளில் நாகரிகம் இல்லா தொழியும்

வசைபாட நுனிநாக்கு ஆங்கிலம் தேடும்
வலுவின்றி கோடிகளில் குற்றம் சாட்டும்
இசைத்தமிழும் தலைவிரித்து ஆட்டம் போடும்
இதுசமயம் மதவாதம் பிரிவினை தூண்டும்
பசையுள்ள கட்சிகளோ பணத்தால் அடிக்கும்
பகல்கொள்ளை அடித்தவர்கள் கொட்டம் ஓங்கும்
திசையெங்கும் ஒலிபெருக்கி திருவிழா தோற்றம்
தேர்தல்என வந்தாலே நம்பாடு நாசம்

  • அப்துல் கையூம்
 

அம்மாவும் கரகமும்


மதர்

அம்மா… கரகம் போன்றவள்
அலங்கரிக்கப்பட வேண்டியவள்

தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும்
தகுதி பெற்றவள்

அலுங்காமல் குலுங்காமல்
அப்படியே நழுவாமல்
அரவணைத்துப் பாருங்கள்

– அப்துல் கையூம்

 

Tags:

இலங்கை பிஸினஸ்


இலங்கையிலுள்ளோர்
பிஸினஸ் செய்து
ஆதாயம் கண்டதைவிட

இலங்கையை வைத்து
பிஸினஸ் செய்தவர்கள்
அரசியல் ஆதாயம்
அதிகம் கண்டார்கள்

 

Tags:

விலா எலும்பு


laugh

என் மனைவி மீது எனக்கு
ஆத்திரம் என்றால் ஆத்திரம்
அப்படி ஒரு ஆத்திரம் !

அடிக்க மனம் வரவில்லை!

விலா எலும்பு நோகும் அளவு சிரித்தேன்
“ஹா! ஹா ! ஹா!” என்று !!

அப்துல் கையூம்

([பிகு: ஆணின் விலா எலும்பிலிருந்துதான் வாழ்க்கைத் துணையை இறைவன் படைத்தானாம்)

 

Tags: