RSS

Category Archives: கம்பன் அவன் காதலன்

சிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்


ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளியான படம் “பாவமன்னிப்பு. அதில் நாகூர் ஹனிபா, டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்துப் பாடிய “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.

சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் செல்கிறார். அச்சமயம் சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் ‘ஜென்டில்மேனான’ சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கிறார். படத்தில் “கதை” புத்தா பிக்சர்ஸ் குழுவினர் என்றுதான் காண்பிப்பார்கள். சந்திரபாபு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.

அக்கால கட்டத்தில் சந்திரபாபுவும் சாதாரண நடிகர் அல்ல. சிவாஜிக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால் “சபாஷ் மீனா” படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வாங்கியவர் “சபாஷ் மீனா” திரைப்படம் பாவமன்னிப்பு வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே வெளிவந்த படம்.

“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ ஆசாமிகளுக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.

பொதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் முஸ்லிம் பாத்திரம் என்றாலே “நம்மள்கி”, “நிம்மள்கி” என்று மார்வாடி போன்றுதான் டமில் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

முஸ்லிம் பாத்திரம் பெரும்பாலும் சல்வார் கமீஸ் அணிந்து, கூம்பு தொப்பியணைந்த, ஆஜானுபாகுவான நெட்டை ஈட்டிக்காரனாக இருப்பார். “அரே.. சைத்தான் கி பச்சா” என்று ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தெருவெல்லாம் கடன்காரனை விரட்டுவார். கடன்காரரும் தலை தெறிக்க ஓடுவார்.

சினிமாவில் முஸ்லிம் பாத்திரங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களாக மட்டுமே காட்டப்படுவார்கள்.

தலையில் வலைப்பின்னல் வெள்ளைத் தொப்பி, கழுத்தில் தாயத்து, கைவைத்த பனியன், இடுப்பில் அகலமான பச்சை நிற பெல்ட் அணிந்திருந்தால் அவர் கசாப்புக் கடைக்காரர். சாதாரண நேரத்திலும் அவர் கசாப்புக் கத்தி கையுமாகத்தான் நடமாடுவார்.

முஸ்லிம் கதாபாத்திரமென்றால் அடிக்கொரு தரம் “அச்சா.. அச்சா” என்று சொல்ல வேண்டும்., திடீரென்று சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் “அரே அல்லா” என்று நீட்டி முழங்க வேண்டும்.

அதே கெட்டப்பில் நீளமான தாடி வைத்துக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல ‘இஞ்ச் டேப்பு’ தொங்கினால் அவர் தையற்கடை பாய்.

அதே கெட்டப்பில் கழுத்தில் மணியெல்லாம் அணிந்துக்கோண்டு, பச்சை நிற சால்வை போட்டுக்கொண்டு, கையில் குமைஞ்சான் சட்டியோடு கடை கடையாக, புகை மண்டலம் சூழ யாராவது அலைந்தார் என்றால் அவரும் முஸ்லிம் குணச்சித்திர பாத்திரம்.

மணிரத்தினம் படமென்றால் அந்த முஸ்லிம் தீவிரவாதியாக இருப்பான், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் “ஒயர்லெஸ்ஸில்” பேசுவான்.

வயதான முதியவர் முஸ்லிம் பாத்திரம் என்றால் அவருக்கு நீளமான தாடி இருக்கும்; ஆனால் மீசை முழுவதுமாக மழித்திருப்பார். ஆனால் எல்லோரும் தமிழை கடித்துக் குதறிதான் பேசுவார்கள்.

“நிம்பள் எங்கே போறான்?” “நம்மள்கி வாணாம்” “நம்பள் நமாஸ் படிக்கப் போறான்” என்றுதான் பெரும்பாலான முஸ்லிம் கேரக்டர்கள் பேசுவார்கள். ஒருவர் கூட தூயதமிழ் பேச மாட்டார்கள்.

தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.

“உங்கள் முஸ்லிம் நண்பர் “நம்மள்கி.. நிம்மள்கி” என்றுதான் தமிழ் பேசுவாரா?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “யோவ்! நீ லூசா?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயில் பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்திற்கு அவர் ஒரு அத்தாரிட்டி. “பாவமன்னிப்பு” படத்தில் சிவாஜி கணேசனுக்கு இளைஞர் வேடம். சிவாஜியைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் அவர் ‘அல்வா’ போன்றவர். பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்.

இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கையில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா? இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது?

சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஐயா ஞாபகம்தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கின்றேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?

பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவதுபோல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.

நெகிழ்ந்துப்போன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறினார்.

 

கம்பன் அவன் காதலன் 9-ஆம் பாகம்


இனிக்கும் இராஜநாயகம் – பாகம் 1

IMG_0015

தணியாத தமிழ்த்தாகம், தன்னிகரில்லா தாய்மொழி மோகம், தலையாய மொழிப்பற்று, தண்டமிழ் ஊற்று, தரமான பேச்சு, தன்னம்பிக்கையுணர்வு இவற்றின் ஒட்டு மொத்த உருவம்தான் தகைசால் பெரியார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள்.

தீந்தமிழ் இலக்கியத்திற்கு இத்திருமகனார் தீட்டிய நூல்கள் ஒன்றா, இரண்டா? அச்சேறாத எழுத்துக்கள் ஆயிரமுண்டு. நீதித்துறைக்கு தன் முழுமையான பணியையும் அர்ப்பணித்த ஒருவரால் எப்படி இலக்கியப்பணிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிந்தது என்பதை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.

திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப்போல், சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப்போல், கம்ப ராமாயணம் என்றால் துரிதமாக எல்லோருடைய  நினைவிலும் உதிப்பது  நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய  பெயர்தான்.

இஸ்லாமிய இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு எதுவுமே இல்லை என்ற ஒருசிலரது கூற்று சற்றும் பொருந்தாத வாதம் மட்டுமன்று; உண்மைக்கு மாறான கூற்றும் கூட. அவர் எந்த காலத்திலும் தன்னை ஓரு மார்க்க அறிஞராக வெளிக்காட்டிக் கொண்டதில்லை. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன்னைத்தானே இழந்ததென்னவோ உண்மை. அதற்காக அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல.

அது இஸ்லாமிய இலக்கியமாக இருந்தாலும் சரி, இந்து சமய நெறியைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு இலக்கியங்களில்  இருந்தது இணையிலா  ஈடுபாடே அன்றி மதபாகுபாடு கடுகளவும் இருந்தது கிடையாது. மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் காட்டவேண்டுமெனில் அது இவரைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா காவியம்”, “இராஜ நாயகம்” போன்ற இலக்கியச் சுவைமிக்க இஸ்லாமியப்  படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார்.  அந்த அற்புதமான திறனாய்வுகளை கட்டுரைகள்,  நூல்கள்,  சொற்பொழிவு  வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார்.

நீதிபதி அவர்களின் உறவுக்காரரான சிங்கையில் வசிக்கும் முகம்மது இஸ்மாயில் அவர்கள்  வாயிலாக “இனிக்கும் இராஜ நாயகம்” நூல் பற்றிய  பற்பல சுவையான விடயங்களை என்னால் திரட்ட முடிந்தது.  நீதிபதியின் அதே பெயரை இவருக்கும் வைத்தது சற்றும் வீண் போகவில்லை போலும். தமிழார்வம் வம்சாவழியாய் இவரது குருதியிலும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்தது. “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்களே அது  முற்றிலும் மெய் என்பது வெள்ளிடைமலை.

இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்கு ‘திரமணிமாலை’ என்னும் இலக்கியத்தைப்  படைக்க  காரணமாக இருந்தது.

அதேபோன்று சுலைமான் நபியின் வாழ்க்கை நிகழ்வுகள் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு ‘இராஜநாயகம்’ என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்க ஏதுவாயிற்று.

இனிக்கும் இராஜ நாயகம் New

‘இராஜநாயகம்’ என்ற நூலின் ஆய்வுக்கு ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற பெயர் அருமையான தேர்வு. எறும்பு ஓரிடத்தில் ஊறினால் அங்கு இனிக்கும் தின்பண்டம் ஏதாகிலும் இருக்குமென பொருள்.  இனிப்பென்றால் எறும்புக்கும் அப்படியொரு ஈர்ப்பு. ஆரம்ப பாடசாலையில் மனனம் செய்த அழ.வள்ளியப்பாவின் பாடல்தான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

“தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல்

சீனியுள்ள இடத்தினைத் தேடி ஊரும் எறும்புபோல்”

என்ற வரிகள் பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்திருந்தது. “இனிக்கும் இராஜநாயக”த்தில் காணப்படும் இலக்கியச் சுவையானது வாசகர்களின் எண்ணத்தை எறும்பாக நுகரச் செய்யும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

எறும்புகளுக்கும் சுலைமான் நபிக்கும் உள்ள பொருத்தத்தை இணைத்து “இராஜநாயகம்” காப்பியத்தின் ஆய்வுக்கு “இனிக்கும் இராஜநாயகம்” என்று பெயர் சூட்டிய மேதாவித்தனத்தை என்னென்று புகழ்வது!  இக்காப்பியத்திற்கும் எறும்புகளுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை பின்னர் நாம் விரிவாக விவாதிப்போம்.

‘இராஜ நாயகமும் பிற படைப்புகளும்’ என்ற தலைப்பில், வண்ணக்களஞ்சியப் புலவரின் ஆக்கங்களை, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,  தமிழ்மாமணி முனைவர் அர. அப்துல் ஜப்பார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு முனைவர்  பட்டம் பெற்றவர் என்பது இக்காப்பியத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது. இவர் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர். இவரது இந்த நூலாய்வுக்கு உந்துதலாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் நம் நீதிபதி அவர்களே என்பதை நாம் எழுத்தில் வடிக்கவும் வேண்டுமோ?

இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் “இராஜநாயகம்” என்னும் காப்பியத்திற்கு தனியொரு இடம் உண்டு.  காரணம் இக்காப்பியத்தின் உட்பொருள் தமிழகத்துக்கு அப்பாலும் பரவலாக அறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மூலக்கரு. பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீதையும், சாலோமனையும்  இவ்வரலாறு  சித்தரிக்கின்றது.

யூதர்கள் மற்றும் கிறித்துவர்களது புனித நூலான விவிலியத்தில் (புனித வேதாகமம், பைபிள்) குறிப்பிடப்பட்டுள்ள ஏராளமான  பெயர்கள் திருக்குர்ஆனிலும் இடம் பெற்றுள்ளதை நாம் காண முடியும்.  பைபிளில் காணும் ‘தாவீது’ என்ற பெயர் தாவூது நபியென்றும், ‘சாலோமோன்’ என்ற பெயர் சுலைமான் நபியென்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பைபிளில் காணப்படும் எத்தனையோ குட்டிக்கதைகள் பொதுஜனங்களுக்கிடையே ஜனரஞ்சகக் கதைகளாக அறிமுகமாகி இளஞ்சிறார்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எடுத்துக்காட்டாக “சாலமனும் ஷீபாவும்”, “தாவீதும் கோலியாத்தும்” போன்ற  கதைகள் ஆரம்பப்பள்ளி பாடபுத்தகங்களில் பெரும்பாலானோருக்கு நன்கு அறிமுகமானவையே.

திருமறையில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியம்தான் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றிய “இராஜநாயகம்” என்ற காப்பியம்.

[இந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் நினைவாகத்தான், அதே பரம்பரையில் வந்ததாக பெருமைபட்டுக் கொள்ளும் கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம், ஆரம்பக் காலங்களில் தனக்கு “வண்ணதாசன்” என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் என்பதை அவரது பேட்டியொன்றில் படிக்க நேர்ந்தது]

நீதிபதி அவர்களின் “இனிக்கும் இராஜநாயகம்” ஆய்வுநூலைப் பற்றி அறிய முற்படுவதற்கு முன், மூலநூலாகிய “இராஜநாயகம்” எழுதிய வண்ணக்களஞ்சிய புலவரைப் பற்றி ஓரளவு அறிந்துக் கொள்வது அவசியம்.

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர் செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னூம் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். [‘சொல்லம்பு மகான்’ என்று போற்றப்படும் ஜவ்வாதுப் புலவரும் மற்றும் சேறை கவிராயரும் வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது]. அறம்பாடி அற்புதங்கள் செய்த ஜவ்வாதுப் புலவரும் வண்ணக் களஞ்சியப் புலவரும் சமகாலத்தவராக விளங்கினார்கள் என்பது வரலாறு.

வண்ணக்களஞ்சியப் புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர்  நாகூருக்கு அருகாமையில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் என்ற செல்வந்தரின் மகளை மணமுடித்துக் கொண்ட இவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார்.  இவர் நாகூராராகவே அறியப்பட்டார். ‘புலவர் கோட்டை’ என்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய புலவர்கள் சபை இவருக்கு “வண்ணக்களஞ்சியப் புலவர்” என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.

அதுமட்டுமின்றி,  தஞ்சையை ஆண்ட அரசர், இவரது புலமையைப் போற்றி “சிங்கமுகப் பொற்சிவிகை” என்ற விருதை அளித்து இவருக்கு மேன்மை அளித்தார்.  தமிழ் மற்றும் வடமொழியைக் கற்றுத் தேர்ந்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர்.   இவர் மதுரையில் அமைந்த ஆதீன மடத்தின் தலைவரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைக் கற்றதாக  நாம் அறிய முடிகிறது.

புதுமையான பல வார்த்தைகளை தமிழ் மொழிக்கு பங்களிப்புச் செய்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். கணவன் என்னும் சொல்லின் பெண்பாலாகக்  மனைவி என்ற சொல்லைத்தான் நாமெல்லோரும் பயன்படுத்துவோம், கணவனுக்கு பெண்பாலாக “கணவி” என்ற ஓர் அற்புதமான வார்த்தையை அறிமுகம் செய்தவர் இவர்.

நாமே இஸ்லாத்தை தமிழாக்கியவர்கள்

தமிழை இஸ்லாமாகியவர்கள்

மக்கா அரபிக்கு

மங்கைத் தமிழை

நிக்காஹ் முடித்தவர்கள்

சும்மா  முடிக்கவில்லை

ஈராயிரம் மஹராய்  ஈந்தே

மணமுடித்தோம்

என்று இஸ்லாமியப் புலவர்கள் தமிழ் மொழிக்களித்த பங்களிப்பினை மார்தட்டி முழங்குகிறார் கவிக்கோ அப்துல் ரகுமானவர்கள்.  மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

நாமோ

பாவலர் உமரின்

பரம்பரையில் வந்தவர்கள்

சேகுனாப் புலவரின்

செல்லக் குழந்தைகள்

பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்

காசிம் புலவரின்

கால்வழித் தோன்றல்கள்

வண்ணக் களஞ்சிய

வாரிசானவர்

குலாம் காதிரின்

குலக் கொழுந்துகள்

செய்குத் தம்பியின்

சின்னத் தம்பிகள்

என்று தமிழ் வளர்த்த நம் பாரம்பரியத்தை பெருமைபட கூறுகின்றார்.

கிஸ்ஸா, முனாஜாத்து, நாமா, படைப்போர், மசாலா, மாலை, கண்ணி, திருமண வாழ்த்து, நொண்டி நாடகம் என பல்வேறு வடிவத்தை தமிழுக்கு வார்த்தவர்கள் நம் புலவர்கள்.

சிறந்த இலக்கியப் பயிற்சியும், சீரிய மார்க்கப்பற்றும்,  தேர்ந்த கல்வி ஞானமும், தெளிவான  கற்பனை வளமும் கொண்டிருந்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். தன் அபாரப்புலமையை  “இராஜநாயகம்” நூலிலே உரிய இடங்களில் முறையே பயன்படுத்தியுள்ளதை நாம் படித்து இன்புற முடிகிறது.

இந்நூல் 46 படலங்களையும், 2240 செய்யுட்களையும், கொண்டது. கவிச்சக்கரவர்த்தியின் காப்பியமான கம்ப ராமாயாணத்தைப் போன்று  இதில் காண்டப் பிரிவுகள் கிடையாது. ஆனாலும் காப்பிய இலக்கணங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களும் பொருந்திய  முழுமை பெற்ற நூலிது. பொருளாலும்,  அமைப்பாலும் சிறந்து விளங்கும் அரும்பெருங்காப்பியம். அருந்தமிழ் ஆய்வாளர்களால் வானளாவ போற்றப்படும் வண்ணக் காவியம் இது.

இக்காப்பியத்திற்கு “இராஜ நாயகம்” என ஏன் பெயர் சூட்டப்பட்டது என்பதற்கு காரணம் உண்டு. “நாயகம்” என்றால் தலைவன் என்று பொருள்.  இராஜநாயகம்  என்றால் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் – மாமன்னர் என்று பொருள். அரசபெருமக்களுக்கெல்லாம் தலைவராகத் திகழ்ந்தவர் சுலைமான் நபி.  எனவேதான் பொருத்தமான  இப் பெயரை இக்காப்பியத்திற்கு புலவர் வழங்கியுள்ளார்.

கன்னித்தமிழில் “கம்ப ராமாயணம்”  படைத்த  கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆகட்டும் அல்லது சிந்தை அள்ளும்  “சிலப்பதிகாரம்” தந்த இளங்கோ அடிகள்  ஆகட்டும் இவர்கள் அனைவரும் ஒரே ஒரு காப்பியம்தான் ஒண்டமிழுக்கு உவந்தளித்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றி தமிழுக்கு தன்னிகரில்லா மகுடம் சூட்டிய பெருமை மூன்று முஸ்லிம் புலவர்களைச் சாரும்.

ஷேகுனாப் புலவர் நான்கு காப்பியங்களும், மஹாவித்வான் வா.குலாம் காதிறு நாவலர் மூன்று காப்பியங்களும், வண்ணக்களஞ்சியப் புலவர் மூன்று காப்பியங்களும் தமிழுக்களித்து தமிழ்மொழிக்கும்,  இஸ்லாமியச் சமூகத்திற்கும் தன்னிகரில்லா பெருமை தேடித் தந்துள்ளனர்.

“இராஜநாயகம்”, “குத்புநாயகம்” மற்றும் “தீன்விளக்கம்” ஆகிய மூன்று காப்பியங்களை வண்ணக் களஞ்சியப் புலவர் மணித்தமிழுக்கு அளித்து மகத்தான தொண்டாற்றியிருக்கிறார்.

இவர்களில் மஹாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர், வண்ணக் களஞ்சியப் புலவர் – இந்த இரண்டு புலவர்களுமே நாகூர் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்பது நாகூரில் பிறந்த ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்ள வேண்டிய விடயம்.  ’நாகூர்  இல்லாமல் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு இல்லை’ எனக்கூறும் ஜே.எம்.சாலி அவர்களிள், கூற்று பொருள் பொதிந்தது. இவர் புகழ்பெற்ர எழுத்தாளர். 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாவல்களை தமிழுக்கு வழங்கிய பெருமைக்குரியவர்.

தமிழ்க்காப்பியங்களில் சமணர்களால் எழுதப்பட்ட காப்பியங்களே மிகுதி என்று டாக்டர் தா.வே.வீராசாமி என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார்.  ஆனால் இக்கூற்று உண்மைக்குப் புறம்பானதாகும். சமணர்கள் சீவகசிந்தாமணி, வளையாபதி, பெருங்கதை என்னும் மூன்று பெருங்காப்பியங்களையும், சூளாமணி,  நீலகேசி,  யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் என்னும் ஐஞ்சிறு காப்பியங்களையும் மட்டுமே பாடியுள்ளனர்.  ஆக மொத்தம், அருந்தமிழுக்கு இவர்கள் அர்ப்பணித்தது வெறும் எட்டு காப்பியங்களே.

ஆனால் இஸ்லாமியப் புலவர்கள் எந்தமிழுக்கு இயற்றித் தந்ததோ இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்கள் என்கிறார் “தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம்” என்ற நூலைத் தந்த கலைமாமணி பேராசிரியர் காரை மு. சாயபு மரைக்காயர் அவர்கள் உமறுப்புலவரையடுத்து, சேகனாப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், சர்க்கரைப் புலவர், சவ்வாது, பத்ருத்தீன் புலவர் என்று தமிழுக்கு தொண்டாற்றியவர்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

ஈழத்து தமிழறிஞர் காலநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆராய்ச்சியில் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றார். “இஸ்லாமிய இலக்கியம் கலை, கலைக்காகவே என்ற குறுகிய வரம்பிற்குட்பட்ட இலக்கியமன்று. அது ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்துக்கொண்ட இலக்கியமாகும். அது ஓர் உன்னதமான நோக்கமும் உயர்ந்த குறிக்கோளும் உடையதாகும். இஸ்லாமிய இலக்கியம் வெறும் இலக்கிய ரசனையையும் கலையின்பத்தையும் நோக்கமாகக் கொண்டதன்று. அது ஓர் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான துணைச்சாதனமாகும். இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகியவற்றை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவித்து உயர்ந்த உன்னதமான படைப்புக்களை அவனில் வளர்ப்பதே அதன் இலட்சியமாகும்”  என்று பகர்கிறார்.

“இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு. முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை], இஸ்லாமிய காவியமும் [சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நானறிந்தவரையில் 1885-ஆம் ஆண்டில் இலங்கையின் மூத்த முஸ்லிம் அறிஞரான எம். சி. சித்தி லெவ்பை அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ‘அசன்பேயுடை கதை’ என்னும் நாவல்தான் தமிழ்மொழியில் முதன்முதலாக பிறந்த நாவல். எகிப்து நாட்டின் அரச குமரன் அசன்பேயின் நிகழ்ச்சியின் ஊடாக இஸ்லாமிய கலாச்சாரத்தின் பெருமைகளையும், அவனது வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் சரித்திரம் இது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 1895-இல் வெளியிடப்பட்ட திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய “மோகனாங்கி” தமிழ்மொழியின்  முதல் நாவல் என்று சிலரும், 1879-இல் வெளிவந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட “பிரதாப முதலியார் சரித்திரம்”தான் தமிழ்மொழியின் முதல்நாவல் என்று வேறு சில வரலாற்றாசிரியர்களும் எழுதி வருகின்றனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை இஸ்லாமியத் தமிழறிஞர்கள் கடந்த 400 ஆண்டுகளில் படைத்துள்ளார்கள்.  16-ஆம் நூற்றாண்டிற்கும், 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை “”இஸ்லாமியர் காலம்”  என்று குறிப்பிடத்தகும். முஸ்லிம்கள் தமிழ்த் தொண்டு புரிந்ததில் எவருக்கும் பின்னிட்டவர்கள் அல்லர் என்கிறார் பாலூர் கண்ணப்ப முதலியார். (தமிழ் நூல் வரலாறு, பக்கம் 385)

சைவமும், வைணவமும், சமணமும், பெளத்தமும், கிறித்தவமும் போன்றே இஸ்லாமும் இன்பத் தமிழுக்கு மெருகூட்டி வளப்படுத்தி உள்ளது.

நாகூர் என்றாலே ஆன்மீக சுற்றுலாதளம் என்ற வகையில்தான் பரவலாக எல்லோராலும் அறியப்படுகிறது. அது இயல், இசை. நாடகம் என மூன்று தமிழுக்கும் பிறப்பிடமாகத் திகழ்ந்த முத்தமிழ்ச் சுரங்கம் என அறிந்து வைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவு. நாகூர் மண் ஆன்மீகத்தை மட்டும் போற்றி வளர்க்கவில்லை, அருந்தமிழையும் அதே சமயம் அலைகடலுக்கப்பால் அளப்பரிய வாணிபத்தையும் ஒருசேர வளர்த்தது என்பது வரலாறு புகட்டும்  பாடம். சொந்தமாக கப்பல் வைத்து திரைகடலோடி திரவியம் தேடிய பெரும் வணிகர்கள் வாழ்ந்த பிரதேசம் இது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றையும் போற்றி வளர்த்த ஊர் இது.

மேலும், பத்திரிக்கைத் தொழிலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஊர் நாகூர். மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 -இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழான “‘வித்தியா விசாரிணி” என்ற அங்கு சில காரணங்களால் தடைபட்டபோது அது பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் வேரு யாருமல்ல. ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களே.  தமிழின் முதல் பெண் நாவலாசிரியை நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“இராஜநாயகம்” காப்பியத்திற்கும் “இனிக்கும் இராஜநாயகம்” ஆய்வு நூலுக்கும் முக்கிய தொடர்பு ஒன்று உண்டு

சுருங்கச் சொன்னால்,  நாகூரில் வாழ்ந்த ஒரு இலக்கியச்சிற்பியின் நூலுக்கு (இராஜநாயகம்), நாகூரில் பிறந்த ஒரு இலக்கிய நேசரின் அர்ப்பணிப்புதான் “இனிக்கும் இராஜநாயகம்” என்ற இந்த ஆய்வு நூல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களின் இந்நூலைப் பற்றிய கூடுதல் விவரங்களை நம் அடுத்த பதிவில் விலாவாரியாக அலசுவோம்.

IMG_0016

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் அயல்நாடு சுற்றுப்பிரயாணத்தின்போது

 

[இப்புகைப்படத்தில் இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் கவிஞர் இ.எம்.அலி மரைக்காயர்.  1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி பிறந்தவர். தந்தையார் பெயர் யூசுப் கனி. தாயார் பெயர் ஆயிஷா நாச்சியார். இவரது குடும்பம் மிகப்பெரிய இலக்கிய பாரம்பரியத்தைக்  கொண்டது.  

‘தேவார மஞ்சரி’, ‘கீர்த்தன மஞ்சரி’ ‘புகழ்ப்பா மஞ்சரி’ மற்றும் ‘லால்கெளஹர்’ எனும் நாடகம் ஆகியவற்றை எழுதிய பெரும்புலவர் முகம்மது நெயினார் மரைக்காயர் இவரது பாட்டனார். சிறந்த இசைஞானம் கொண்டவர். பெரும்புலவரின் படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.  ‘லால் கெளஹர் நாடகம் நாகூர் மற்றும் சுற்று வட்டார பிரதேசங்களில் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு மக்களின் பேராதரவையும், ஏகோபித்த பாராட்டுதலையும் பெற்றது.  நாடக நூலினை காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் முதற்முதலாக பதிப்பித்தவர் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள். இரண்டாம் பதிப்பு 1901-ஆம் ஆண்டு இட்டா பார்த்தசாரதி அச்சகத்திலும், மூன்றாம் பதிப்பு 1990-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும் வெளியிடப்பட்டது.

கவிஞர் இ.எம்.அலியின் முப்பாட்டனார் முத்தமிழ் வித்தகர் நெ.மாதறு சாகிப் அவர்கள்.

இவரது குடும்பத்தில் அனைத்து சகோதரர்களும் தமிழார்வலர்கள். தமிழ் மொழியில் அபார ஆற்றல் படைத்தவர்கள். இவரது மற்றொரு சகோதரர் சிங்கையில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர் இ.எம்.நெயினார் மரைக்காயர் அவர்கள். கவிஞர் இ.எம்.நெயினார் அவர்கள் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ‘ரூபய்யாத்’  கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இ.எம்.அலி அவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள் எழுதியுள்ளார். இசைமுரசு நாகூர் இ.எ,ஹனீபா அவர்கள் பாடிய “வானம் இருண்டு கிடந்தது”, “இன்னும் என்ன செய்யப் போறீங்க” (1940) போன்ற பாடல்கள் இவர் எழுதியதே.]

கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்

 கம்பன் அவன் காதலன் – 7-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

ப.சிதம்பரம் பார்வையில்

 

Tags: ,

கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்


Judge M.M.Ismail addressing the audience

Judge M.M.Ismail addressing the audience

Asmaul Husna

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆராய்ந்து எழுதிய “மூன்று வினாக்கள்”, “கம்பன் கண்ட ராமன்”, “கம்பன் கண்ட சமரசம்”, “வள்ளலின் வள்ளல்”, போன்ற நூல்களைத்தான் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்களேத் தவிர அவர் வரைந்த இஸ்லாமிய நூல்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் மிக மிகக் குறைவு.

அவர் இஸ்லாமியப் பணி எதுவுமே ஆற்றவில்லை என்ற தவறான ஓர் எண்ணம் பொதுவாகவே நம் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது.

தமிழிலக்கியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஒர் அளவிலா ஈர்ப்பும், ஈடுபாடும் இருந்ததோ அதே அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் அசைக்கமுடியாத ஒரு பற்றும் பிடிப்பும் இருந்தது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

கம்பராமாயணத்தை ஆய்ந்து அதில் முழுமையான தேர்ச்சி பெற்றதினால் அவருக்கு இஸ்லாமிய இலக்கியத்தின் மீது ஈர்ப்பு கிடையாது என்று அர்த்தம் கொள்ளல் ஆகாது.

இலக்கிய ஆர்வத்திற்கு மதம் ஒரு பொருட்டே அல்ல. இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவரைவிட இஸ்லாமியர் ஒருவர் இந்து சமய இலக்கியத்தில் வல்லுனராக விளங்கினார் என்றால் அது நிச்சயம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.

அவர் எழுதிய இஸ்லாமிய நூல்களில் “அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்” என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பாகும். எத்தனை ஆண்டுகளானாலும் இது வாசகர்கள் மனதில் நிலைத்திருக்கும். காரணம் அதில் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் அவர்.

அரபு மொழியிலும்,  தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும். நீதிபதி அவர்களின் மொழியாற்றலை இந்நூலை முழுவதுமாக வாசிக்கையில் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

“அஸ்மாவுல் ஹுஸ்னா” என்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம்.

நாட்டை ஆளும் ராஜாவையே “ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, வீராதி வீர, வீர மார்த்தாண்ட” என்றெல்லாம் மனிதன் புகழாரம் சூட்டும்போது, உலகாளும் இறைவனை எப்படியெல்லாம் நாம் போற்றிப் புகழ வேண்டும்? அவனது சிறப்புக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அந்த வல்லவனை நாம் தியானிக்கையில்தான் எப்பேர்ப்பட்ட பேரின்பம்? உதாரணமாக, ரஹ்மான் (அருளாளன்), ரஹீம் (அன்பாளன்), என்று பொருளுணர்த்தும் ஒவ்வொரு பெயரும் இறைவனின் தன்மையையும், சிறப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

வணக்கத்திற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு பல வேதங்களிலும், பல மொழிகளிலும் சுமார் மூவாயிரம் திருப்பெயர்கள் உண்டு. இதற்கு வேதவாரியாகப் பட்டியலும் பிற விவரங்களும் உண்டு. இறுதி வேதமான திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் சேர்த்து 99 -அழகுத் திருப்பெயர்கள் உள்ளன.

“வணக்கதிற்குரிய ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (அல்-அஃராப் 7:180) என்றுரைக்கிறது திருக்குர்ஆன்

திருமறையில் 81 பெயர்களும், நபிமொழியில் 18 பெயர்களும் ஆக மொத்தம் 99 அழகுத் திருப்பெயர்களால் இறைவனை முஸ்லீம்கள் துதிக்கிறார்கள்.

நம் இடது உள்ளங்கையில் அரபி எண் 81-ம், வலது உள்ளங்கையில் அரபி எண் 18-ம் காணப்படுவது இதனால்தானோ?.

HandAllah's name in our palm

“அல்லாஹ்விற்கு 99 – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி:6410 அபூஹூரைரா (ரலி).

“நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – அதனை மனனம் செய்தவர் – என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா – ரலி, நூற்கள்: புகாரீ 2531, முஸ்லிம்)

ஒவ்வொரு திருப்பெயர்களில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும் அதில் வெளிப்படும் விளக்கங்கள், அற்புத கருத்துக்கள் மற்றும் ஆழ்ந்த பொருட்செறிவும் இறைவனின் தன்மையை உணர்த்தும் அற்புதப் பிழிவாகும்.

“யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்'” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)

இறைவனின் திருநாமங்களின் சிறப்புகளை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

டாக்டர் இப்ராஹிம் கரீம் என்ற மருத்துவ ஆய்வாளர் இறைவனின் சில குறிப்பிட்ட பெயர்களை ஒவ்வொன்றாக உச்சரிக்கையில் மனித உடலில் சில குறிப்பிட்ட உறுப்புக்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தனது மூன்றாண்டு ஆராய்ச்சியின் முடிவில் மருத்துவ ரீதியாக நோய்களை குணமாக்கக்கூடிய அபூர்வ சக்தி (Healing Power) அப்பெயர்களுக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்.

எல்லா வல்ல இறைவனின் தன்மையை உணர்த்தும் பெயர்களை உச்சரிக்கையில் இத்தனை சிறப்புக்களா? என்று நாம் வியந்து போகிறோம்.

அஸ் ஸமி (As-Sami) என்று தியானிக்கையில் காதுகள், அல் நஃபி (Al Nafi) என்று தியானிக்கையில் எலும்புகள், அல் கவி (Al-Qawi) என்று தியானிக்கையில் தசைகள், அல் முக்னி (Al Mughni) என்று தியானிக்கையில் நரம்புகள் – இப்படியாக இறைவனின் ஒவ்வொரு பெயரின் துதிபாடலுக்கும் ஒவ்வொரு உடலுறுப்புகள் வலிமை பெறுவதற்கான அறிகுறிகளை டாக்டர் இப்ராஹீம் கரீம் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இறைவனின் 99 நாமங்களில் சில நாமங்கள், தீராத வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்தாக விளங்குகிறது என்று அவரது ஆராய்ச்சி பறைசாற்றுகின்றது. எடுத்துக்காட்டாக அல் ஜலீல் (Al-Jalil) என்ற நாமம் கேன்ஸர் வியாதிக்கும், அல் ஜப்பார் (Al-Jabbar) என்ற நாமம் Thyroid சிகிச்சைக்கும், அல் கனி (Al-Ghani) என்ற துதி Migraine (ஒற்றைத் தலைவலி) சிகிச்சைக்கும், அல் காஃபித் (Al-Khafed) என்ற இறைநாமம் இரத்தக்கொதிப்புக்கு நிவாரணியாக அமைவதாகவும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

இப்படியாக அனைத்து 99 திருநாமங்களுக்கும் குணப்படுத்தும் அற்புதத் தன்மை உள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. சில இல்லங்களில் திருஷ்டி பொம்மையை கட்டி தொங்க விடுவதைப்போன்று இந்த இறைவனின் நாமங்களை கண்ணாடி பிரேம் இட்டு மாட்டி வைப்பதினால் மட்டும் பயன் ஏதும் கிட்டி விடப்போவதில்லை. இறை நம்பிக்கையோடு ஆத்மார்த்த ரீதியில் உள்ளச்சத்தோடு இந்த அழகிய திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமே பயனடைய முடியும்.

மருத்துவ உலகில் இல்லாத மருந்துகளா? அவைகள் தராத நிவாரணத்தையா இந்த இறைநாமத்தின் துதிப்பு நிவாரணம் தந்து விடப்போகின்றது என்று சிலர் எண்ணக்கூடும். “Be faithful in small things because it is in them that your strength lies.” என்ற அன்னை தெரசாவின் பொன்மொழிதான் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது.

“More things are wrought by prayer than this world dreams of.” என்ற லார்ட் டென்னிஸனின் வார்த்தைகள் பொய்யல்ல. மனிதன் நினைத்துக்கூட பார்க்க முடியாத சில அதிசயங்களை அவரவர் வாழ்வில் இறைநம்பிக்கை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு மருத்துவர் கூறும் இறுதி வார்த்தைகள் “இனி எங்கள் கைகளில் எதுவும் இல்லை. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்பதாகத்தான் இருக்கும்.

அந்த இறை வேண்டுதலின் ஒரு பகுதிதான் இந்த இறைநாமங்களின் உச்சரிப்பு. இசைக்கு வியாதிகளை குணப்படுத்தும் அபூர்வசக்தி உண்டென்று நம்புபவர்கள, அகில உலகத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆண்டவனின் தன்மையை எடுத்துரைக்கும் அவனது பெயர்களுக்குள்ள அபூர்வசக்தியை ஏன் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

இறைவனின் திருப்பெயர்களின் தன்மைகளை தெள்ளத் தெளிவாக விளங்கியதோடன்றி அதனை பலரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் “அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்” என்ற பெயரில் நூல் எழுதிய பெருமை நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

ஏம்பல் New

ஏம்பல் தஜம்மல் முகம்மது

“அஸ்மாவுல் ஹுஸ்னா – இவற்றின் அருமையை உணர்ந்து விரித்துரைத்த பேரறிஞர் – எனக்குத் தெரிந்தவரையில் – ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள்தாம். அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ள ஒவ்வொரு திருப்பெயரைப் பற்றியும் ஒரு மாத இதழில் தொடராக வருடக் கணக்கில் எழுதி நிறைவு செய்தார்- எண்பதுகளின் இறுதியில்; அந்தத் தொடர் பின்னர் ஒரு நூலாகவும் வெளியானது. அது இப்போது கிடைத்தாலும் ஆழ்ந்து, பொறுமையாகப் படிக்கக்கூடியவர்கள் அரிதாகிப் போன காலம் இது. எனினும் எனக்கு மட்டும் “அஸ்மாவுல் ஹுஸ்னா”வை இளைய தலை முறையினருக்கு எளிய முறையில் எத்தி வைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது” என்று நீதிபதி ஐயா அவர்களுக்கு புகழ்மாலை சூட்டுகிறார் இஸ்லாமிய அறிஞரான ஏம்பல் தஜம்மல் முகம்மது.

நமது அடுத்த பதிவில் நீதிபதி அவர்கள் எழுதிய இனிக்கும் இராஜநாயகம் என்ற இஸ்லாமிய இலக்கிய நூலைப் பற்றி விரிவாக ஆராய்வோம்.

– இன்னும் வரும்

IMG_0004

 கம்பன் அவன் காதலன் – 7-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

 

Tags: , , , , ,

கம்பன் அவன் காதலன் – (ஆறாம் பாகம்)


இலக்கியமான நீதிபதி

ஒருவர் இறந்து விட்டால் அவர் “மரணித்து விட்டார்” அல்லது “மறைந்து விட்டார்” என்று கூறுவதுண்டு. சிலவேளை “காலமானார்” என்றும் கூறுவதுண்டு. அதன் பொருள் காலத்தால் எளிதில் அழிக்க முடியாத இடத்தை அவர் அடைந்து விட்டார் என்பதாகும். சாதனை படைத்த சிலரை “அவர் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்” என்று கூறுவதுண்டு.

2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நீதிபதி இஸ்மாயில் அவர்கள் காலமானபோது அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் 19.1.2005 அன்று ‘தினமணி’ நாளிதழில் ஒரு கட்டுரை வரைந்தார். அதன் தலைப்பு “இலக்கியமான நீதிபதி” என்பதாகும்.

ஒருவரின் இறப்பு “வரலாறு” ஆக முடியும். அது எப்படி “இலக்கியம்” ஆக முடியும்? நம்மை சிந்திக்க வைக்கின்ற கேள்வி இது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை “அவர் இலக்கியமானார்” என்ற கூற்று சாலப்பொருத்தம். தமிழிலக்கியம் பேசும் சான்றோர்களின் தண்டமிழ் பேச்சிலெல்லாம், எக்காலமும், எங்காகிலும் இவர் பெயர் என்றென்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

சென்னையில் 1974-ஆம் ஆண்டு இவரது பெருமுயற்சியால் கம்பன் கழகம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டபோது “The Right Person in the right Place” என்று ஆங்கிலப் பத்திரிக்கையொன்று இவரைப் புகழ்ந்து தள்ளியது. தொடர்ந்து 28 ஆண்டுகள் கம்பன் கழகத்தின் தலைவராக பணிபுரிந்து சாதனை நிகழ்த்தியவர் இவர்.

கம்பன் கழகம்

1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை.

காரைக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பற்பல ஊர்களில் தற்போது கம்பன் கழகம் விழாக்களை கோலாகலமாக நடத்தி வருகின்றன.

இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.

கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்திலிருந்து தாய்ச் சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். ஆஹா! என்னே ஓர் அற்புதமான தமிழர் பண்பாடு!

கம்பன் கழகமானது, தமிழறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத் திகழ்கிறது. தாய்மொழியாம் தனித்தமிழின் சிறப்பை தரணியெங்கும் பரவும் வண்ணம் தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறது.

கம்பனை காதலித்த கன்னித்தமிழ் வேந்தர்கள்

கம்பனின் காதலானாக ஒரு சுகி சிவமோ அல்லது சிவக்குமாரோ இலக்கிய உலகில் பவனி வருவதில் ஆச்சரியம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மதப்பற்றுமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிம் ஒருவர் இந்து மதத்தின் காப்பியம் ஒன்றினை கசடறக் கற்று, புலமை பெற்று, அக்காப்பியத்தின் மேன்மையை பட்டி தொட்டிகள் எங்கும் பறை சாற்றியதில்தான் வியப்பு மேலிடுகின்றது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் பாரதி – பைந்தமிழ்ச் சாரதி – கம்பனின் பெயரை ஏன் முதல் ஸ்தானத்தில் குறிப்பிட்டான் என்று எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வள்ளுவர் பெருந்தகையை விட உயர்ந்த புலவனாக கம்பனைக் கருதினானா அல்லது வெறும் எதுகை மோனைக்காக கம்பனை முதலிடத்தில் வைத்தானா என்பது கவிராஜனுக்கே வெளிச்சம்.

கம்பனைக் காதலித்தவர்கள் அந்த பாட்டுடைத்தலைவன் பதமறிந்தே கவிச்சக்கரவர்த்தியை முதல் வரிசையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்று வாதிடுகிறார்கள்.

கம்பனின் காவியத்தில் உண்மை இருந்ததா என்பது வேண்டுமானால் விவாதத்திற்குரிய கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அதில் பைந்தமிழ்ச் சுவை இருந்தது என்பதை “கம்பரசம்” எழுதிய அறிஞர் அண்ணாவால் கூட மறுக்க முடியாது.

கம்பன் கழகம் பரவலாகத் தோன்றுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் கம்பராமாயண எதிர்ப்பாளர்கள்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு விஷயத்தின் மீது எப்பொழுது எதிர்ப்பு அதிகமாகிறதோ அப்போது அதன் மவுசும் கூடுவது கண்கூடு. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று அவசர அவரமாக கற்று அதன் கவிநடையில் காதல் கொண்டவர்கள் பலர்.

“கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!”

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய இப்பேச்சு நம் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.

‘கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப்போற்றுவதாகும்’ என்று நீதியரசர் இஸ்மாயீல் அடிக்கடிச் சொல்வதுண்டு. பண்டிதர்கள் மத்தியில் இருந்த கம்பனின் காவியத்தை பாமரர்கள் மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை பெருமளவு நீதிபதி இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

“கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று என்னை குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான். நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது. அதை படித்து பாருங்கள்..” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் நற்றமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு நயம்பட வேண்டுகோள் விடுக்கிறார்.

கம்ப ராமாயணத்தின்பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் மூழ்கிக் கிடந்தவர் அவர் என்றால் மிகையாகாது.

இலக்கிய உலகில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் சிலர் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வர். மேடைகளிலும் ஊடகங்களிலும் புகழ்பெற்ற இலக்கியக்கர்த்தாக்களாக பவனி வருபவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக பட்டிமன்ற நாயகர்களாக பவனிவரும் திண்டுக்கல் ஐ. லியோனியையோ, சாலமன் பாப்பையாவையோ, பேராசிரியர் திருஞானசம்பந்தத்தையோ, அல்லது நெல்லை கண்ணனையோ எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பும் எத்தனையோ சான்றோர்கள் பிரபலமாக வலம் வந்தார்கள். ஒரு பத்து வருடங்களோ அல்லது அதிகபட்சமாக இருபது வருடங்களோ புகழின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். பிறகு இவர்களையும் மிஞ்சும் அளவுக்கு வேறு நபர்கள் வெளிச்சத்துக்கு வர இவர்களின் மவுசு குறையத் தொடங்கும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பது.

கிட்டத்தட்ட 50 வருட காலங்களுக்கு மேலாக கம்பராமாயணத்திற்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக, கம்பனுக்காக வாதாடும் வழக்கறிஞராக, அவனது காவியத்திற்கு நிபுணராக, அக்காப்பியத்தின் கலைக்களஞ்சியமாக, நடமாடும் அகராதியாக, அருஞ்சொற்பொருள் வல்லுனராக, அந்நூலுக்கு சந்தேகம் தீர்க்கும் விற்பன்னராகத் திகழ்ந்தவர் நம்மவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள்.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட “இலக்கியமான நீதிபதி” என்ற அடைமொழியில் வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

“இலக்கணமான நீதிபதி” என்று பழ.பழநியப்பன் குறிப்பிடவில்லை. ஏன் என்று கவனித்தீர்களா? இலக்கணம் மாறலாம். இலக்கியம் மாறுவதில்லை. நீதியரசர் ஓர் அமர இலக்கியம். ஓர் இலக்கியத்திற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர்.

காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். அரையுக காலம் ஒருத்தர் ஒரு குறிப்பிட்டத் துறையில், அவரை ஓரங்கட்ட முடியாத அளவுக்கு, முதன்மை நிலையில் இருந்து முத்திரை பதித்தார் என்றால், அவருக்கு இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆளுமை சக்தி இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கம்பனின் கவித்திறமையை தமிழ்க்கூறும் நல்லுலகில் தம்பட்டம் அடித்தவர்களின் பெயர்களை எழுத்தில் வடிக்க முனைந்தால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதிபதி இஸ்மாயீல் முதற்கொண்டு அ.ச.ஞானசம்பந்தன், நீதிபதி எஸ்.மகராசன், தொ.மு.சி.ரகுநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வெ.சாமிநாத சர்மா, திருச்சி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, தெ.ஞானசுந்தரம், கா. நயினார் முகமது, புலவர் அருணகிரி, தனிநாயக அடிகள், சே.ச., ராமலிங்கம், வையாபுரிப் பிள்ளை, எஸ்.ஆர்.கே, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பெ.நா.அப்புஸ்வாமி, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், க.கு.கோதண்டராமக் கவுண்டர், ஏ.சி.பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், கி.வா.ஜகன்னாதன், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வரதராசனார், அ.சீனிவாசராகவன், மு.இராகவ அய்யங்கார், கவிஞர் கண்ணதாசன், ஏ.என்.சிவராமன், கிருபானந்த வாரியார், கம்பராசன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெகவீரபாண்டியன், வே.மி.சம்மனசு, வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா.சொ., அ.சீ.இரா., கவிஞர் வாலி, சுதா சேஷய்யன், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற என் நண்பன் நாகூர் ரூமியையும் இப்பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.                                  (இன்னும் வரும்)

 

Tags: , , , , , ,

கம்பன் அவன் காதலன் (ஐந்தாம் பாகம்)


கம்ப ராமாயணமும் கன்னித்தமிழ் முஸ்லீம்களும்


நீதியரசரைப்பற்றி நான் எழுதத் தொடங்கியதிலிருந்து எனக்கு ஏகப்பட்ட கண்டனக் கடிதங்கள், விமர்சனங்கள்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் இஸ்லாத்திற்கென்று இதுவரை எதுவுமே செய்ததில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைக்கிறார்கள்.

“காலம் முழுதும் இந்துக்களின் தெய்வமான ராமனையே இவர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்”, என்று நாத்திக அன்பர்களும், “இவர் இஸ்லாத்திற்காக என்ன செய்து விட்டார்?” என்று இஸ்லாமியச் சகோதரர்களும் பலவிதமான கேள்விக்கணைகளை
தொடுத்துள்ளார்கள்.

உள்ளூர் அன்பர் ஒருவர் “இவர் நாகூருக்காக என்ன செய்தார் என்று உங்களால் கூற முடியுமா?” என்ற வினா வேறு விடுத்துள்ளார்.

அவர்களுக்கான என் விளக்கம் இதோ:

எல்லா ஊருக்கும் ஏதாவதொரு வகையில் சிறப்புண்டு. ஒவ்வொரு ஊருக்கும் பெருமை தேடித் தந்த ஆன்றோர் பெருமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் வருங்காலச் சந்ததியினருக்குத் தெரியாமலே கரைந்து போய்விடுகின்றன. அதேபோன்றுதான் நாகூரில் பிறந்த எண்ணற்ற இலக்கியவாதிகள், இசை விற்பன்னர்கள் இவர்களின் மகிமை மற்றும் மகத்துவம் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் போயிருக்கின்றது.

இந்த நோக்கத்தில்தான் “நாகூர் மண்வாசனை” என்று பெயரிடப்பட்ட எனது வலைப்பக்கத்தில் நாகூரில் பிறந்த நன்மக்களின் நற்பணிகளை இனிவரும் சமுதாயம் எளிதில் அறியும் வண்ணம் என்னால் இயன்றதை பதிவு செய்து வருகிறேன்.

“இவர் நாகூருக்காக என்ன செய்தார்?” என்ற கேள்வியானது, ஊருலகம் போற்றும் ஓர் உத்தமனை ஒரு சின்ன வட்டத்துக்கள் அடைப்பதாக எனக்குத் தெரிகிறது. குன்றிலிட்ட விளக்கை குடத்திலிட்டு அடைத்தல் முறையாகுமா?

அவர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிய மனிதரல்ல. ஆமாம், தன் உன்னத பணியால் உலகை வலம்வந்த வாஸ்கோடா காமா, இந்த ஜஸ்டிஸ் மாமா.

2000-ஆம் ஆண்டு தினமணி பத்திரிக்கை ‘தலைசிறந்த 100 தமிழர்கள்’ என்ற பட்டியலில் இந்த மாமேதையின் பெயரையும் வெளியிட்டு கெளரவித்தது.

இந்த ‘தலைசிறந்த மனித’னால் நாகூர் மண்ணுக்கு பெருமையில்லை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அமெரிக்க ஆய்வாளர்கள் பவ்லா ரிச்மேன், வாசுதா நாராயண் போன்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர்கள் பாராட்டும் ஓர் அறிஞனை “நாகூர்” என்ற குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்ப்பதிலே எனக்கு உடன்பாடில்லை.

ஓர் உள்ளூர் M.L.A.வைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து போற்றப்படும் இவர் மீது பாய்ச்சுதல் நியாயமா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருக்குவளைகாரர்கள் கலைஞரை பார்த்துக் கேட்டாலும் ஒரு நியாயம்
இருக்கிறது.

அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணிபுரிந்து, தன் சொந்தக் காசை செலவுசெய்து காலம் முழுதும் இலக்கியப்பணி செய்து வந்த இவரைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பது எந்த வகையில் நியாயம்?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள், முதலில், அவர்கள் ஊருக்காகச் என்ன நற்காரியம் செய்தார்கள் என்று மனசாட்சி அறிய தங்களை தாங்களே கேட்டுக் கொள்ளட்டும்.

இவர் அரசாங்கத்திடமிருந்து “தொகுதி மேம்பாட்டு நிதி” என்று ஏதாவது வாங்கிகொண்டு எதுவுமே செய்யாமல் போய்விட்டாரா? இறுதிவரை நீதி, நியாயம், நேர்மை, சட்டம், ஒழுங்கு என்று வாழ்ந்தவரைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது?

நாகூர் ஹனிபா உள்ளுரில் “ஹனிபா லாட்ஜ்” கட்டியதுபோல் இவரும் “இஸ்மாயீல் லாட்ஜ்” என்று கட்டியிருந்தால் திருப்தி அடைந்திருப்பார்களோ?

“வெளியூர்க்காரரான ஏ.ஆர்.ரகுமான் ரோடு போட்டுக் கொடுத்தார். இவர் ஊருக்காக என்ன செய்தார்?” என்று அந்த நண்பர் கேட்ட கேள்வி எனக்கு சிரிப்பை வரவழைக்கின்றது. நீதிபதி, தன் சொந்தக் காசில் தர்கா குளமருகே கழிப்பிடம் கட்டித் தந்திருக்கவேண்டும் என்று அவர்
எதிர்பார்க்கிறாரா?

ஒருவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது அது நிறைவுற்றபின்தான், அவரது செயல் போற்றத்தக்கதா இல்லையா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர அவசரப்பட்டு அரைகுறையாக விமர்சனங்கள் புரிவது அறிவுடமை ஆகாது.

ஒருவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை படிக்கையில் அதிலிருக்கும் நல்ல படிப்பினைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு நமக்கு ஒவ்வாததை ஏன் களையக் கூடாது?

“இஸ்லாத்துக்காக இவர் என்ன செய்தார்?” என்ற கேள்விக்கு, இனிவரும் பதிவுகளில் நான் எழுதவிருக்கும் இவராற்றிய இஸ்லாமிய இலக்கிய பணிகள் உரிய சான்று பகரும் என்று நம்புகிறேன்.

கம்பராமாயணத்தை ஆய்வுச் செய்த காரணத்தை வைத்துக்கொண்டு அவர் தன் மார்க்கத்திற்கு துரோகம் இழைத்து விட்டார் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல.

அவர் ஒரு சைவப்பிரியராக இருந்தார், பிராமணச் சமூகத்தாருடன் நெருங்கிப் பழகினார் என்ற ஒரே காரணத்தினால் அவரை “பூணூல் போடாத பிராமணர்”, “வழிதவறிய வெள்ளாடு” என்று விமர்சிப்பது முறையாகுமா?

“நாட்டை நேசி; அது ஈமானின் ஒரு பாதி” என்பது நபிகளாரின் கூற்று. அதேபோன்று ஒருவன் மொழியை நேசிப்பதும் தன் நம்பிக்கையின் ஒரு பாதிதானே?

“கம்பராமாயணம், மதங்கள் கடந்த, தமிழர் கொண்டாட வேண்டிய செவ்வியல் இலக்கியத்தின் வடிவம்” என்று நீதிபதி இஸ்மாயீல் அடிக்கடி உரைப்பார்.

கம்பராமாயணத்தை ஒரு இந்து மத காப்பியம் என முத்திரையிட்டு அதனை பிற மதத்தினரோ, நாத்திகர்களோ ஒதுக்கித் தள்ளுவது முறையாகாது.

கம்பனின் காவியம் ஒரு கற்பனைச் சுரங்கம். சந்தங்களின் சமுத்திரம். உவமைகளின் ஊற்று, கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் நிறைந்த தனித்துவக் காவியம்.

வள்ளுவன், இளங்கோ, கம்பன் – இம்மூவரையும் இன்பத்தமிழிலிருந்து எக்காலத்திலும் பிரித்தெடுக்க இயலாது. இலக்கியத்தை நுகர நாத்திகமோ, ஆத்திகமோ, மதமோ, அரசியலோ தடையில்லை. அக்காப்பியம் அழகுத்தமிழுக்கு ஓர் அற்புத பொக்கிஷம்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் ஒருவரை உதாரணம் காட்டவேண்டுமெனில் முதலில் நம் நினைவில் வருவது நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் பெயர்தான்.

இஸ்லாமிய இலக்கியகர்த்தாக்கள் கம்பராமாயணத்தை ஒரு தெய்வீக படைப்பாக காணவில்லை, அதிலிருந்த தெள்ளுதமிழ்ச் சுவையை தேனாகச் சுவைத்தார்கள்.

கம்பனைக் காதலித்த இஸ்லாமியர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் ஒருவர் மட்டுமா? அல்லவே அல்ல. கம்பராமாயணத்தின் உந்துதலால் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் கம்பனைக் காதலித்த முதல் இஸ்லாமியர் என்று உதாரணம் காட்டலாம்.

[கம்ப ராமாயணத்திலும், சீறாப்புராணத்திலும் உண்மைக்கு மாறான எத்தனையோ விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதை நாம் இப்போது ஆராயப் போவதில்லை]

கம்பனின் மேல் நீதியரசருக்கு ஏற்பட்ட காதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை அடைவதற்கு முன்பிருந்தே ஏற்பட்ட மோகமிது.

தமிழ் முஸ்லீம் இலக்கியவாதிகளிடம் காணப்படும் குணங்களில் ஒன்று – தங்களுடைய மதத்தின்பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அதே வேளையில், அவர்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்பையும் உணரத் தவறியதே இல்லை.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உருவெடுத்து வட இந்தியா முழுதும் கொழுந்து விட்டெரிந்த வேளையிலெல்லாம் தமிழகத்தில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் தம்மில் பரஸ்பரத்துடன் நட்பு பாராட்டியது நீதிபதி இஸ்மாயீல் போன்ற இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் கொண்டிருந்த மதசகிப்புத்தன்மை மற்றும் அணுகுமுறை இவைகளினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

நீதிபதி இஸ்மாயீல் போன்றவர்களின் இழப்பு நீதித்துறைக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல அதையும் தாண்டி இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கும்தான். இந்த சகோதரப் பாசம்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, முஸ்லீம்கள் மனமுடைந்து போயிருந்தபோது, கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்களை இதுபோன்று எழுத வைத்தது:

அந்த கட்டடத்தின் மீது எப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது .. .. ..

சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

என்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடுநிலை தவறாது கவிதை வடித்தார் அவர்.

எப்பொழுதும் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் “சோ” கூட, “தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்களை வானளாவ புகழ்ந்துள்ளார். (துக்ளக், 2.2.2005)

செய்குத் தம்பி பாவலர் (1874 – 1950)

கம்ப ராமாயண ஆய்வில் நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள். கம்பனுக்கு மணிமண்டபம் கட்டிய அதே எம்.ஜி.ஆர்.தான் தான் முதல்வராக இருந்தபோது செய்குத் தம்பிப் பாவலருக்கும் நினைவு மண்டபம் கட்டி, அவரே திறந்தும் வைத்து, நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார்.

வள்ளலார் எழுதிய “அருட்பா”வை மறுத்து, அது அருட்பாவன்று; மருட்பா எனக்கூறி இலங்கை யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், “இராமலிங்க சுவாமிகள் பாடலாபாசத் தருப்பனம் அல்லது மருட்பா மறுப்பு” என்று நூலொன்று எழுதினார்.

நம் செய்குத் தம்பிப் பாவலரோ ஆறுமுக நாவலருடன் விவாதம் செய்து வென்று, ‘அருட்பா-அருட்பாவே, மருட்பாவன்று’ என நிலை நாட்டினார். அவரை யானை மேல் ஏற்றி, ஊர்வலமாய்க் கொண்டு வந்த சைவர்கள், காஞ்சிபுரம் கோயிலில் பூரண கும்ப மரியாதை
கொடுத்து வரவேற்றனர். தமிழ் மொழிக்காக சமய வேற்றுமை பாராது போராடிய தமிழறிஞர் என்று செய்குத் தம்பிப் பாவலரை பாராட்டுகின்றனர்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்ட இவரைப் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு முஸ்லீம்களின் மீது நச்சுக்கருத்துக்களை பரப்பி, அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துவரும் வரும் சங்பரிவார் அமைப்புகளுக்கு தெரிய நியாயமில்லை.

பா.தாவூத் ஷா (1885-1969)

‘கம்பராமாயண சாயபு’ என அழைக்கப்பட்ட தாவூத் ஷா அவர்கள் நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கம்பனின் மேல் காதல் ஏற்பட கிரியாவூக்கியாக இருந்தவர்களில் ஒருவர். (உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள்)

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் பேசி வந்த அதேசமயம் கம்ப ராமாயணத்தின் சிறப்பையும், அதில் காணப்பட்ட நல்ல விஷயங்களையும் பிறருக்கு எடுத்துச் சொல்ல அவர் தயங்கியதில்லை. மனித நேய மாண்பிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் அடிப்படையான பண்பு இந்த மதசகிப்புத்தன்மை. இன்று பொதுவாகவே இந்த நற்பண்பு சிறுகச் சிறுக குறைந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.

கிராமமொன்றில் ஒருமுறை சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சியில் இரவு 2 மணி வரை கம்ப ராமாயண விளக்கவுரையை ஆற்றினார் பா.தாவூத் ஷா. அவரது இலக்கிய ரசனையை அறிந்து வியந்து, கூட்டத்தின் இறுதியில் இந்து சமய அன்பர்கள் ‘கம்ப ராமாயண சாஹிபு
வாழ்க’ என உற்சாக கோஷம் எழுப்பினர்.

சிறு வயதில் கம்ப ராமாயண சாஹிபின் பேச்சை மயிலாப்பூரில் பல முறை கேட்டு மகிழ்ந்ததாக நினைவு கூர்ந்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜாஜியின் புதல்வர், நரசிம்மன்.

கம்பராமயாணத்தைப் பற்றிப் மேடையில் உரையாற்றுகையில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் கண்ணீர் மல்க, லயித்துப்போய் ஆவேசத்துடன் சொற்பொழிவாற்றுவார் கிறிஸ்துவரான பேராசிரியர் ஜேசுதாசன். கம்ப ராமாணத்தை மிகவும் உயர்த்திப் பேசும் சாலமன் பாப்பையாவும் ஒரு கிறித்துவர்தான்.

‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ என்ற பெயரில் ஜான் பன்யன் எழுதிய நூலை “இரட்சண்ய யாத்திரிகம்” என்ற பெயரில் காப்பியமாக வடித்தார் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவரது இயற்பெயர் ஹென்றி ஆல்பர்ட். அவரை “கிறிஸ்துவக் கம்பன்” என்று அடைமொழியிட்டு அழைத்தனர் அறிஞர் பெருமக்கள்.

பெ.நா. அப்புஸ்வாமி என்பவர் பழுத்த நாத்திகர். ஆனாலும் கம்பராமாயணத்தின் மீதும் சங்க இலக்கியங்களின் மீதும் அவருக்கிருந்த அபரிதமான மதிப்பையும் புலமையையும் விவரிக்க இயலாது.

“கம்பரசம்” என்ற நூலை எழுதி அதில் காணப்படும் “காமரசத்தை” சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்து வந்தவர் அறிஞர் அண்ணா என்பது எல்லோரும் அறிந்ததே. “கம்பனின் கலைத்திறமை – கவிதையழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது, எடுத்தாண்ட கதை அக்கதையின் விளைவு” என்று “கம்பரசம்” நூலின் தொடக்கத்தில் அண்ணா எழுதுகிறார். அவரது தலைமையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கம்பனுக்குத் தரவேண்டிய உரிய இடத்தை அளித்ததுடன், சென்னை கடற்கரையில் சிலையும் வைத்து அந்தக் கவிச்சக்ரவர்த்தியின் புகழ்பாடத் தவறவில்லை.

பெரியார் வழியில் வந்தவர்கள், அண்ணா வழியில் வந்தவர்கள் என்று தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் நாளடைவில் எப்படி பச்சோந்திகளாய் நிறம் மாறிப் போனார்கள் என்பதை பின்னர் பார்ப்போம்.

கவிஞர் சாரண பாஸ்கரன் (1923-1986)

  கம்பனை போற்றிப் புகழ்ந்த இஸ்லாமிய எழுத்தாளர்களுள் இவரும் முக்கியமானவர். “தமிழோடு நிலைத்திருக்க பிறந்தவன் இக் கவிஞன்” என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் புகழப்பட்டவர். “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” என பலராலும் போற்றப்பட்டவர்.

9.4.1960-ல் காரைக்குடி கம்பன் விழா கலையரங்கில் பெராசிரியர் அ.சீனிவாசராகவனார் தலைமையில் ‘கம்பன் காணும் சமயக் கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிருஸ்துவம், இஸ்லாம், வேதாந்தம், சமரசம் முதலியவைப் பற்றிப் பலரும் கவிதை பாடினர். “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற தலைப்பில் கவிஞர் சாரண பாஸ்கரன் கவிதை பாடி அவையோரை சிந்தனையில் ஆழ்த்தினார்.

கம்பன் கண்ட இஸ்லாம்

கலையரங்கின் தலையரங்காம் கவியரங்கின்
…..அருந்தலைவ, கவிவா ணர்காள்!
விலைமிகுந்த கலையனைத்தும் வியந்தேற்றும்
…..கம்பன்புகழ் விளக்கும் சான்றோய்!
உலகனைத்தும் நிலைபடுத்தி உயிரனைத்தும்
…..நெறிபடுத்தி உவந்து காக்கும்
தலைவனுக்கே தலைவணங்கும் கம்பன்கண்ட
…..சமயநெறி இஸ்லாம் தானே!

ஆக்குதற்கு ஒருதெய்வம், காக்குதற்கு
…..மறுதெய்வம், அநீதி தோன்றில்
நீக்குதற்கு ஒருதெய்வம், என்றுபல
…..தெய்வங்கள் நிறுவிப் பேதம்
ஊக்குவித்த மாந்தரிடை இகபரத்தை
…..இனிதாள்வோன் ஒருவன் என்றே
நோக்குவித்த இஸ்லாத்தின் அறநோக்கைக்
…..கம்பனிலே நோக்கக் கூடும்!

கோவேந்தர் கொலுவினிலே கோலேந்தும் தமிழரசி
சாவேந்தச் செய்யாமல் தழைக்கவைத்த கம்பனையே
சைவத்தை சார்ந்தவனாய், வைணவத்தைச் சேர்ந்தவனாய்,
சமணத்தில் திளைத்தவனாய்ச் சாற்றினரே முக்கவிஞர்!

நிலையற்ற வாழ்வென்று நிகழ்த்துகின்ற பெளத்தத்தை
நிலைபெற்ற வாழ்வுற்ற நிகரற்ற ராமகதை
காட்டுதற்கே இங்குவந்த ‘கலைமகளின் காதலன்’சொல்
கேட்டுவந்தீர், பகைக்கிரங்கும் கிருஸ்து வத்தைத்
தீட்டியதாய் கம்பனது திறனாய்ந்தார் ஒருகவிஞர்!
பாட்டினிலே உங்கள்மனம் ஆட்டிவைத்தார் என்மூத்தோர்!

விளக்கம்:
(கலைமகளின் காதலன்’: கி.வா.ஜ வைக் குறிப்பது)

இத்தனைக்கும் இறுதியென – இத்தரைக்கே இறுதியெனும்
கத்தனருள் இஸ்லாத்தைக் கம்பனிலே காட்டுதற்கு
உத்தமனாம் ‘கணேச’னெனை ஓடிவரச் செய்துவிட்டான்,
சத்தியத்தை நாட்டுதற்குத் ‘தலைவன்துணை’ எனக்குண்டே!

விளக்கம்:
(‘கணேசன்’ – கம்பனடிப்பொடி சா.கணேசனைக் குறிப்பது
‘தலைவன்துணை’ – அரங்கத் தலைவர் சீனிவாச ராகவனாரை மட்டுமன்றி, இறைவனையும் குறிப்பது)

இறைதவத்து முனிவருக்கும் இமையவர்க்கும்
…..அரக்கர்தரும் இன்னல் நீக்க
மறையொழுகித் தரையாளும் தசரதனின்
…..அருந்தவத்து மகனைக் கேட்கும்
நிறைதவத்து கோசிகனின் வேள்வியினை
…..காத்துநெறி நிலைக்கச் செய்தே
கறைதுடைத்த ராமகதை காட்டுகின்ற
…..இஸ்லாத்தின் கருத்தைக் கேளீர்

ஆளுகின்ற வாய்ப்படைந்த காரணத்தால்
…..கடவுளுக்கும் அஞ்சேன் என்று
சூளுரைத்துத் தோளுயர்த்தும் அரக்ககுண
…..அரசியலார் சூழும் நாளில்
வாளுயர்த்தி வேலுயர்த்தி இறைபகைவர்
….வரும்போது வணங்கி டாமல்
தோளுயர்த்திப் போராடச் சொன்னநபி
…..வழிமுறையைச் சொன்னான் கம்பன்!

தரைமுழுதும் ஆளவந்த சூரியனின்
…..குலராமன் தந்தை வாக்கால்
துறவுகண்ட பெருங்காதை சொல்லவந்த
…..கவிமன்னன் தொடுத்த பாவில்
இறைவனது ஆணையினால் தம்நாட்டைத்
…..துறந்துபிற நாட்டை ஏற்ற
குறைஷிகுலத் திருமணியாம் நபிமணியின்
…..நெறிமுறையைக் குறிக்கக் காண்போம்!

விளக்கம்:
(‘துறந்து பிற நாட்டை’ – நபிகள் பெருமான், பிறந்த நாட்டைத் துறந்து மதீனாவிக்கு ஹிஜ்ரத் செய்ததைக் குறிப்பது)

மாதவத்தின் அருட்பிழம்பாய் மாநிலத்தின்
…..பெருங்கொடையாய் மக்கா தோன்றிப்
பேதமற்ற சமுதாயம் பேணிடவே
…..மக்களினம் பிணைந்து வாழ
வாதமற்ற வாழ்வுநெறி வகுத்தளித்த
…..வள்ளல்நபி வாழ்வில் காணும்
ஈதலறம் போதமுறை கம்பனிலே
…..இணைந்திருக்க இனிதே காண்போம்!

பொய்மையற்ற மெய்யுலகை, வறுமையற்ற
…..வளஉலகை, போரொ ழித்துத்
துய்மைபெற்ற நட்புலகை, கைம்மயற்ற
…..பெண்ணுலகைத் தோற்று வித்தே;
தெய்வநெறி வாழ்வுடனே சேர்ந்தொளிரத்
…..தாழ்வுயர்வு சிதைக்கும் திட்டம்
செய்தளித்த எங்கள்நபி திருவழியை
…..கோசலத்தில் செய்தான் கம்பன்!

‘வறுமையிலை’ என்பதனால் ‘வண்மையிலை’
…..என்றுரைத்தான், வஞ்ச மிக்கச்
‘செறுநரிலை’ என்பதினால் ‘திண்மையிலை’
…..என்றுரைத்தான், தீமை சேர்க்கும்
‘ஒருபொய்யிலை’ என்பதனால் ‘உண்மையிலை’
…..என்றுரைத்தே உயர்ந்த கம்பன்,
சிறுமையிலாக் கோசலத்தை இஸ்லாத்தின்
…..செயல்முறையால் செழிக்க வைத்தான்!

கோதையரை அவர்விருப்பம் கோராமல்
…..கற்பழிக்கும் கொடுமை செய்து
பேதையராய் நசுக்கிவந்த ஆடவரின்
…..பேதமையைப் பெயர்த் தெறிந்து
மாதருக்கும் கல்வியிலும் சொத்தினிலும்
…..உரிமையென வகுத்த இஸ்லாம்
போதனையைக் கோசலத்தின் பூவையர்க்கும்
…..கவிமன்னன் புகுத்தல் கேளீர்!

(வேறு)

‘பெருந்தடங்கண் பிறைநுத லார்க்கெல்லாம்
பொருந்தும் செல்வமும் கல்வியும் பூத்த’தாம்
‘பொருந்தும் மகளிரை வதுவையில் பொருந்துவர்
இருந்தனர் கோசலம்’ என்கிறான் கம்பனே!

விளக்கம்:
(இஸ்லாத்தின் இலட்சியச் சின்னமாகிய இளம்பிறை போன்ற நெற்றியுடைய கோசலத்துப் பெண்கள், சொத்துரிமை, கல்வியுரிமை பெற்றிருந்ததோடு, அங்குள்ள ஆடவர்கள் சம்மதிக்கும் மாதரை, களவியல், காந்தர்வ முறையிலன்றி மனச்சடங்கின் மூலமே
மணப்பார்களாம். இதுதான் இஸ்லாமிய நெறிமுறை)

இத்தனை இருப்பினும் தசரதன் இல்லறம்
புத்திரர் இன்றியே பொலிவை இழந்தது!
இல்லறம் நடத்திநன் மக்களை ஈன்றிடில்
நல்லறம் என்பதை நம்பிய தசரதன்
பல்லறம் விலைத்தனன், பரம்பொருள் அருள்பெறச்
சொல்லற முனிவரால் வேள்வியைத் தொடங்கினன்!

‘தனுவன்றித் துணையிலான் தருமத்தின் கவசத்தான்!
மனுஎன்ற நீதியான்..’ மக்களைப் பெற்றனன்.
விளைந்திடாப் பாலையாய் விளங்கிய மனைவியர்!
விளைநில மாயினர், வீரரை ஈன்றனர்!

(வேறு)

‘மனைவியரை கனிகள்விளை நிலமே’ என்னும்
…..மாசற்ற இஸ்லாத்தின் குர்ஆன் வார்த்தை
தினையளவும் பொய்க்காது என்ப தற்கே
…..சீர்மன்னன் தசரதனே சான்று ஆவான்!
மனையறத்தில் நன்மக்கள் பெற்ற ளித்தல்
…..மாண்புமிகும் பணியாகும்-கடமை யாகும்
மனைவியரை வரண்டநில மாக்கி டாமல்
…..வளப்படுத்திச் சிசுக்கனிகள் பறித்தான் மன்னன்!

‘இறைவிருப்பம் எப்படியோ அப்படியே
…..கருவடையும்’ என்னும் இஸ்லாம்
மறைமொழியை மெய்ப்பிக்கும் உவமையென
…..அயோத்திநகர் மன்னன் வாழ்வை
வரைந்தளித்த கம்பன்புகழ் வாழ்த்துகின்ற
…..இந்நாளில் வளமே பெற்றுச்
சிறந்தொளிரும் மனைவியரை வரண்டநிலம்
…..ஆக்காமல் செழிக்கச் செய்தான்!

தந்தைபட்ட கடன்நீக்கி எஞ்சியதே
…..தனயன்பெறத் தகுந்த தாக்கி
எந்தநிலை வரும்போதும் வாக்குறுதி
…..காத்திடலே இஸ்லாமாகும்
இந்தநெறி ராமனிடம் – தசரதனின்
…..உறுதியிடம் இணைத்துக் காட்டும்
எந்தமிழின் கவிவேந்தன் கம்பனது
…..பெருந்தகைமை இயம்பப் போமோ?

மென்மைமிகு பூவையரின் கற்பினையும்
…..பொற்பினையும் வெகுவாய் போற்றும்
உண்மைமிகும் இஸ்லாத்தின் ‘திருக்குர்ஆன்’
…..உரைக்குமொழி யொன்றால் கம்பன்
‘பெண்கள்சதி மிகப்பெரிது’ என்பதற்குக்
…..கூனியையும் பேரா சைக்குக்
கண்ணிழந்த கைகேயியையும் இலக்கணமாய்ச்
…..செய்துநம்முன் காட்டி விட்டான்.

(வேறு)

“ஒன்றுனக்கு உந்தை, மைந்த
…..உரைப்பதோர் உரையுண் டென்”று
‘கொன்றுழல் கூற்றம்’ ஒத்த
…..கைகேயி கூறக் கேட்டே
என்னுடை தந்தை ஏவல்
…..இயம்பினீர் நீரே என்றால்
‘மண்ணிடை உய்ந்தேன்’ என்று
…..மகிழ்வொடு உரைத்தான் ராமன்.

பெற்றவர் விருப்பை ஏற்றல்
…..பிள்ளையின் கடமை என்னும்
நற்றவ இஸ்லாம் சாற்றும்
…..நன்னெறி ஏற்றான் ராமன்!
கொற்றமே தம்பி ஆளக்
…..குறித்தவள் பதினான் காண்டு
சுற்றமே பிரிந்து கானில்
…..துறவறம் நடத்தச் சொன்னாள்!

‘மன்னவன் பணியன் றாகில்
…..நும்பணி மறுப்ப னோ?என்
பின்னவன் பெற்ற செல்வம்
…..அடியனே பெற்ற தன்றோ?’
என்றிடும் ராமன் வாக்கில்
…..எங்களின் நபிகள் நாதர்
நன்றெனச் சொன்ன சொல்லை
…..நவின்றிட வைத்தான் கம்பன்!

(வேறு)

கவியரங்கின் நாயகரே, கம்பன்குலக்
…..கவிஞர்களே, கற்றுத் தேர்ந்து
புவிசிறக்கும் நாவலரே, புகழ்சிறக்கும்
…..பாவலரே, புலமை போற்ற
அவைநிறைந்த பொதுமக்காள், தமிழ்பயிலும்
…..அடியேனை அரங்கில் ஏற்றிச்
சுவைநிறைந்த காவியத்தில் கம்பன்கண்ட
…..இஸ்லாத்தை சொல்லச் சொன்னாய்!

மற்றவரின் எழுத்துக்களை பெயர்த்தெழுதித்
…..தம்மெழுத்தாய் மாற்றிச் சொல்வோர்,
மற்றவரின் கருத்துக்களைக் களவெடுத்து
…..தம்கருத்தாய் வழங்கி நிற்போர்,
குற்றம்புரி இழிவழியே கம்பனுடை
…..உடைமைகளைக் கொள்ளை கொண்டு
முற்றினிலும் இஸ்லாத்தின் உடைமையென
…..விற்பதற்கு முனைந்தே னில்லை!

வானூறும் மாரியென எங்கள்மறை
…..எங்கள்நபி வழங்கும் உண்மை
‘நானூறு ஆண்டினுக்கும்’ முன்னிந்த
…..நாட்டினரே ஏற்றார்! அஃதைத்
தேனூறும் தமிழ்க்கவியில் காப்பியத்தின்
கருப்பொருளில் திரட்டிச் சேர்த்தே
ஊனூற உணர்வூற கம்பனெடுத்
….தாண்டசில உரைத்தே னிங்கு!

விளக்கம்:
(‘நானூறு ஆண்டினுக்கும்’ – நம் நாட்டில் இஸ்லாம் பரவி நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பன் வாழ்ந்திருக்கிறான். அவன் காலம்  12-ஆம் நூற்றாண்டென்றும், 9-ஆம் நூற்றாண்டென்றும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றனர்.)

புவியரசர் புகழரசர் வியந்தேற்றும்
…..இஸ்லாத்தின் பொதுக் கருத்து
கவியரசன் கம்பனையும் கவர்ந்ததனை
…..கலைஞரிடை விளக்கஞ் செய்தே
சுவையறிந்து நீவீரெலாம் இஸ்லாத்தின்
…..அறநெறியைப் பயிலச் சொல்லி
அவையிருந்து அகலுகின்றேன் அனைவருக்கும்
…..என்நன்றி அரங்கி னோரே!

“கூத்தாநல்லூர் பாரதி தாசன்” அன்று அழைக்கப்பட்ட கவிஞர் சாரண பாஸ்கரன் கம்பன் மேல் கொண்டிருந்த உயர்ந்த அபிமானத்தை எடுத்துக்காட்ட இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமோ?

கவிக்கோ அப்துல் ரகுமான்

கம்பன் கழக மேடைகளில் இதுநாள்வரை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ஆற்றி வரும் சொற்பொழிவுகளும், கவிதைகளும்,  கம்பன் மேல் அவர் கொண்டிருக்கும் காதலை திரை போட்டு மறைக்காமல் பறைசாற்றுகிறது.

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கிறது..

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன்

சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான்

என்ற வரிகளில் “சமயம்” என்ற வேறுபாட்டைக் காட்டி நாம் பிரிந்து நிற்கும் அவலத்தை ஆதங்கத்துடன் எடுத்துரைக்கிறார் கவிக்கோ.

பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை

என்ற வரிகளில் தலையணை மொத்தத்திலிருந்த சிலப்பதிகாரத்தின் சாராம்சத்தை யாவும் ஒருசில வார்த்தைகளில் வடித்து விடுகிறார்.

இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.

கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது

இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு மட்டுமே கைவந்தக் கலை.

முனைவர் பர்வீன் சுல்தானா

“கம்பராமாயணத்தை, பாரதியை, சிலம்பை, சீறாப் புராணத்தை, மணிமேகலையை, தேவார திருவாசகத்தை, சங்கப் பாடல்களை வாசிக்கும்போது அவை ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. அதனை எழுதியவர்கள் வெறும் எழுத்தை மட்டும் வீசிவிட்டுப் போகவில்லை. அவை மந்திரச் சொற்கள். அதன் உண்மையைக் கண்டறிவதற்காகவே நான் வாசிக்கிறேன். மேலும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று தன் தமிழ் வேட்கையை தெளிவுப் படுத்துகிறார் முனைவர் பர்வீன் சுல்தானா.

“கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும்” என்று தனது மானசீக குருவான நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு புகழ் மாலை சூட்டுகிறார் முனைவர்
பர்வீன் சுல்தானா.

“இஸ்லாம் எங்கள் மொழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி” என்ற முழக்கத்துடன் இஸ்லாமியப் பெருமக்கள் மதக்காழ்ப்புணர்ச்சி காட்டாமல் கம்பராமாயணத்தை ரசனை பாராட்டியது மெச்சத்தக்கது.

கம்பனை புகழ்ந்து போற்றிய தமிழார்வளர்கள் சதாவதானி, பா,தாவுத் ஷா, கவிஞர் சாரண பாஸ்கரன், கவிக்கோ, முனைவர் பர்வீன் சுல்தானா மாத்திரமல்ல. கவி கா.மு.ஷெரீப், யாழ்பாணத்து அறிஞர் ம.மு.உவேஸ், கலைமாமணி அப்துல் காதர், மு.மேத்தா, இன்குலாப்
(சாகுல் ஹமீது), அபி, மனுஷ்ய புத்திரன், “மதுக்கூர் கம்பன்” டி.ஏ.கே.முகம்மது யாகூப் மரைக்காயர், ரவூப் ஹக்கீம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனிவரும் பதிவுகளில் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் புரிந்த தமிழ்த்தொண்டினை விவரமாகக் காண்போம்.

– அப்துல் கையூம்

 

Tags: ,

ஐந்து கடமைகள்


கலிமா எனப்படும் மூல மந்திரம் , தொழுகை , நோன்பு , ஜகாத் , ஹஜ் ஆகியவை முஸ்லிம்களின் ஐந்து கடமைகள் .

1. ‘வணக்கத்திற்குரியவன் அல்லா(ஹ்). முகம்மது (ஸல்), அல்லா(ஹ்)வின் இறுதித் தூதர்’ என்பதை மனத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிவது முதல் கடமையான கலிமா ஆகும்

2. தினமும் ஐந்து நேரம் தொழுவது இரண்டாவது கடமை .

3. ரமலான் மாதம் முழுவதும் உபவாசம் இருப்பது மூன்றாவது கடமையான நோன்பு ஆகும் .

4. செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (இரண்டரை சதவிகிதம்) ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் திருக்குர் ஆனில் விதிக்கப்பட்டுள்ளபடி விநியோகிப்பது ‘ஜகாத்’ எனும் நான்காவது கடமை

5. வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்காவுக்குச் சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவது ஐந்தாவது கடமை.

நீதிபதி மு.மு. இஸ்மாயீல்.
ஆனந்தவிகடன் . 12-12-2008

 

Tags:

நீதிபதி இஸ்மாயீலைப்பற்றி சிலம்பொலி செல்லப்பன்


சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நீதியரசர் மாண்புமிகு மு.மு. இஸ்மாயீல் என்னிடம், “”இஸ்லாமியர்களிடையே அச் சமயம் பற்றி அவர்கள் மனங்கோணாமல் 25 கூட்டங்கள் எப்படி உன்னால் பேச முடிந்தது?” என்று வியந்து கேட்டார். அந்நிறைவு விழாவில் அவர்கள் வாயிலாக, “சீறாச் செல்வர்” எனும் சிறப்புப் பெயர் எனக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் இஸ்லாமியக் காப்பியங்கள் இரண்டினைத் தொடர் சொற்பொழிவாக ஆற்றிய வாய்ப்பு இதுவரை என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்.

நன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்

 

Tags: , , ,