RSS

Category Archives: கவிஞர் ஜபருல்லா

உள்ளத்துள்ளது கவிதை


கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதைகளை நாம் படிக்கையில் கசப்பான அனுபவத்துடன் கூடிய ஒரு சோக ராகம் அதனூடே  இழைந்து வருவதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. “உள்ளத்துள்ளது கவிதை” என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியது உண்மை எனத் தோன்றுகிறது.

zaf-home2

அறிஞரும் நானும்
————————————-

ஐந்து வருஷங்கள் முன்னால்
அறிஞராக இருந்தார்
இன்று –
அவர் பேரறிஞர்..!

ஐந்து வருஷங்கள் முன்னால்
எனக்கு –
நிறைய ஆசைகள்..
ஒன்றுமே நிறைவேறவில்லை..
என்றாலும் –
இன்று நான்
பேராசைக்காரன்..!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
31.05.2000

இருட்டு வெளிச்சம்
————————————-

என் நிம்மதிக் கிராமம்
இருட்டாகவே …
என்றாலும் அதன்
கவலைத் தெருக்கள்
எப்போதும் வெளிச்சத்தோடு..!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
14.01.2000

தாயம்
————-

என் விஷயத்தில்
நினத்ததெல்லாம்
நடந்து விடுகிறது…!
நான் –
நினப்பதை தவிர..

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
01.01.2005

புதிர்
———

எனக்குப் புரியவில்லை…
புரியவில்லை என்பதே
ரொம்ப நாட்கள் புரியவில்லை.
இந்நிலையில் –
புரிந்தவர்கள்
என்னை –
எப்படிப் புரிந்திருப்பார்கள்..?
புரியவில்லை…!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
01.01.2005

தியானம்
——————

தியானம் செய்..
என்றார் குரு.
நான்தான்
கவிதை எழுதுகிறேனே என்றேன்
சினந்தார்.
எனக்கு
தியானம் புரிந்த அளவுக்கு
என் குருவுக்கு
கவிதை புரியவில்லை

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
26.05.2000

புரிந்த புதிர்
———————-

மனைவி புரிகிறது ..
மக்கள் புரிகிறது …
சொந்தம் புரிகிறது ..
சுமைகள் புரிகிறது
வாழ்க்கைதான் –
புரியவில்லை..!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
03.10.2002

தேடல்
————-

எனக்கு
நண்பர்கள்
நிறைய உண்டு..!
நட்பைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்…!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்
26.06.2003

 

Tags:

நித்யஜீவி


Nithya Jeevi

“பக்கவாட்டு சிந்தனை” என்ற வார்த்தையை கேள்வியுறும் போதெல்லாம் “அது என்ன பக்கவாட்டு சிந்தனை?” என்று என் மனதில் சந்தேகம் எழுவதுண்டு. படுக்கையில் ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்துக்கொண்டு சிந்திப்பதற்குப் பெயர்தான் பக்கவாட்டு சிந்தனையோ என்று நான் நினைத்தது உண்டு. ஒரு சிந்தனையை தெளிவு பெறுவதற்காக பல கோணத்தில் சிந்தித்து தீர்வு காண்பதுதான் LATERAL THINKING எனப்படும் இந்த பக்கவாட்டுச் சிந்தனை. இதில் கரை கண்டவர் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ். இருக்கும்வரையில்தான் ஜாதி, மதம். இறந்தபின் எல்லாம் ஒண்ணுதான் என்றுதான் நாம் கேள்விபட்டிருக்கிறோம். அதையும் மறுக்கிறார் நம் கவிஞர். என்ன ஒரு மாறுபட்ட சிந்தனை..!

நித்யஜீவி
===========

இருக்கும்போதுதான்
ஜாதியும் மதமும்
இறந்த பின்னாலே
யாவரும் ஒன்றே..!

எவரோ சொன்னது
எனக்கும் கேட்டது –

அது எப்படி…?

இந்து இறந்தால்
பிணம் ஆகிறான்.
கிறிஸ்தவன் இறந்தான்
“பாடி” ஆகிறான்.
முஸ்லிம் இறந்தால்
“ஜனாஸா” ஆகிறான்

மனிதன் இறந்தாலும்
மதமும் ஜாதியும்
மரித்துப் போகாது..!
அது – நித்யஜீவி…!!

கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
25.11.2002

 

 

 

 

வந்தது எது..?


money

தேவை என்று வந்தபின்னே
தெளிவு வந்தது – மனத்
தெளிவு வந்தது..!

தெளிவுஎன்ப தறிந்தபின்னே
ஒளி பிறந்தது – ஞான
ஒளி பிறந்தது..!

ஒளிபிறந்த காரணத்தால்
இருள் அகன்றது – நெஞ்ச
இருள் அகன்றது..!

இருளகன்ற பிறகுதானே
இன்பம் தெரிந்தது – மெய்
இன்பம் தெரிந்தது..!

இன்பம்தெரிந்த பின்னர்தானே
தேவை வந்தது – பணத்
தேவை வந்தது..!

(கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்)

 

மனசு


shaitaan

மனுஷனுக்கு உள்ள சொத்து

மனசு ஒண்ணுதான்..! – அதில்

மனுஷநேயம் இருக்கும்வரை

மனசு பொன்னுதான்..!

மறுமைதரும் சொர்க்கம், நரகம்

மனசுனாலேதான்..! – அதில்

மனுஷநீதி மரிச்சுப்போனா

நரகம் பக்கம்தான்…!

 

மனசு என்னும் வீட்டிலேதான்

இறைவன் வசிக்கிறான்..! – அதன்

மாசுபடா எண்ணங்களைப்

பார்த்து ரசிக்கிறான்..!

தூசுபடிஞ்சு மனசுமாறிப்

போகும்போதுதான் – அதில்

துஷ்டஷைத்தான் உள்ளேவந்து

வேதம் ஓதுரான்..!

 

கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்

01.05.1998

 

சட்டமும் தர்மமும்


 

சட்டம்

சட்டம் –

நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை –
சாட்சிக்கு அழைக்கும்..!

தர்மமோ –
நிஜத்தையே
சோதனைக்கு உள்ளாக்கும்..!

முன்னது –
சட்டத்தின் தர்மம்..
பின்னது –
தர்மத்தின் சட்டம்..!

கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
22.03.2001

 

Tags:

ரமலானே வருக..!


zafarullah (1)

நோன்பின் மகத்துவம்
———————————

இது –
பசியை மட்டும் உணர்த்துவது அல்ல
பசித்தவனையும் அறிவது.

இது –
வயிறை ஒட்டிபோகச் செய்யும்
தண்டனை சிறைச்சாலையல்ல..
உள்ளத்தை –
கட்டிப்போடப் பயிற்றுவிக்கும்
தத்துவ பாடசாலை..!

இது –
இபாதத்து நிலத்தின்
இருபோக சாகுபடி..!
‘ஸஜ்தா’ என்னும்
முத்திரை மரக்காலால் அளக்கப்படும்
‘ஜக்காத்’ மகசூல்..!

இது –
பக்குவப்படுத்தும்
பட்டினித்தவம்..!

(கவிஞர் நாகூர் இஜட்.ஜபருல்லாஹ்)

நோன்பின் மாண்பு
—————————-
பட்டினி வயலின்
பத்திய மகசூல்….!

நிய்யத் உரம்
நெஞ்சம் இட்டதால்
வெப்ப வயிற்றிலும்
வாசனையாய் பூக்கும்
ஈமான் மலர்..!

பணக்காரர்களுக்கும்
பசியை
பரிச்சயப் படுத்தும்
பக்குவப் பரிணாமம்..!

ஜக்காத் உடையால்
அலங்கரிக்கப்பட்ட
ரமலானின் குழந்தை..!

இபாதத்து வேள்விக்கு
தேவையான –
பசி நெருப்பு..!

இப்லீசை நகர்த்திவைக்க
இறைவன் அருளிய
ஈமான் குளிகை..!

(கவிஞர் நாகூர் இஜட்,ஜபருல்லாஹ்)

நோன்பு
————-
பசிநெருப்பை
பணக்கார
வயிற்றுக் குண்டங்களிலும்
பற்ற வைத்து
அதன் மூலம் –
வெப்பத்தை அல்ல..
ஈரத்தைக் கொடுக்கும்
ஈமான் விறகு..!

இல்லாமல் அல்ல..1
உணவு –
இருந்தும் தவிர்க்கும்
இதய சுத்திகரிப்பு..!

வல்லோனில் அருள்வேட்டல்..!
வறியோர்க்கு –
ஈவதால் நடக்கும்
இனிய பிரார்த்தனை…!

இது –
பட்டினியல்ல..
வாழ்க்கையின்
பத்தியம்..!

(கவிஞர் இஜட் . ஜபருல்லாஹ்)

புண்ணிய மேகம்
————————-
ரமலான் –
மறையமுதம்
பொழியப்பட்ட
யுகப் பாத்திரம்..!

ஷைத்தானின்
சிறைச்சாலை..!

சுவனத்தின்
திறவுகோல்..!

பத்தியப் பயிறுக்கு
பசிவிதை தூவும்
ஈமான் நிலம்..!

கொடுப்பது வரவாகும்
புதிமைப் பதிவேடு..!

கலீமா விருட்சத்தின்
கருணை வேர்..!

மறுமை மைதானத்தில்
நன்மை மழை பொழியும்
புண்ணிய மேகம்..!

– கவிஞர் நாகூர் இஜட், ஜபருல்லாஹ்

 

Tags:

தமிழன்னை இனியவரைக் காணப்போமோ..?


 

QMகண்ணியத்தை கருணையினை நெஞ்சில் தேக்கி
கள்ளமில்லா புன்சிரிப்பை உதட்டில் கூட்டி
விண்ணவனின் அருள்மறையை தூதர்வாழ்வை
வியத்தக்க முறையினிலே வாழ்ந்துகாட்டி
எண்ணரிய இஸ்லாத்தின் மாந்தர்தம்மின்
எழில்நலத்தைப் பேணுதற்காய் ‘லீக்’கையாத்து
கண்ணிமையாய் சமுதாய நலத்தைக்காத்த
காயிதே மில்லத்தைக் காணப்போமோ..?

அருமகரை பெருமகரை ஆற்றல்வேந்தை
அன்பொளிரும் திருவுருவை அருளின்ஊற்றை
பொறுமையினைத் தன்வாழ்வில் அணியாய்பூண்ட
புனிதமனப் பெம்மானை பொற்வின்கோவை
எவர்வரினும் தம்கருத்தைத் துணிவாய்க் கூறும்
எழுச்சிமிகு தளபதியை உணர்ச்சிக்காவை
கப்ருக்குள் கண்ணுறங்கும் கனிவுத்தேனை
காயிதே மில்லத்தைக் காணப்போமோ…?

தமிழாய்ந்த தமிழ்மகனை முதல்வனாக்க
தன்கரத்தைத் துணைகரமாய் தந்தஏந்தல்..!
அமுதூறும் தமிழ்மொழியை என்றும் எந்தன்
அன்னைமொழி எனப்பகர்ந்து இந்தியாவின்
பொதுமொழியாய் இருப்பதற்கு தகுதிவாய்ந்த
பொதுமைமொழி தமிழேதான் என்றுசொன்ன
தமிழ்மகன்ஓர் கல்லறைக்குள் உறங்குகின்றார்
தமிழன்னை இனிஅவரைக் காணப்போமோ..?

(“உரிமைக்குரல்” பத்திரிக்கையில் நாகூர் கவிஞர் இஜட்..ஜபருல்லாஹ் எழுதிய கவிதை)

இன்று ஜீன் 5. காயிதேமில்லத் பெருமகனாரின் பிறந்தநாள்

 

 

Tags: