RSS

Category Archives: ஜபருல்லாஹ் குதர்க்கவாதியா?

கவிஞர் ஜபருல்லாஹ் குதர்க்கவாதியா?


zafarullah

“நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதில்லை”

“இறைவன் நரகத்திலும் இருப்பான்”

“இறைவன் மனிதனை நம்பவில்லை”

“ரசூலுல்லாஹ் பிற்காலத்தில் சூஃபி அல்ல”

அஸ்தக்ஃபிருல்லாஹ். இப்படியெல்லாம் கூறும் கவிஞர் ஜபருல்லாஹ்வுக்கு யாராவது “ஃபத்வா” கொடுத்தாலோ அல்லது ஜமாஅத்தார் ஊர்விலக்கம் செய்தாலோ நாம் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜபருல்லாஹ் ஆத்திகரா? இல்லை நாத்திகரா? இல்லை குதர்க்கவாதியா? என்ற கேள்வி நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

In my opinion Poet Z.Zafarullah is the most misunderstood person.  பாரசீகக் கவிஞன் உமர் கய்யாம் போன்று கவிஞர் ஜபருல்லாஹ்வும் தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்மனிதர் என்பதே என் தாழ்மையான கருத்து.

உமர் கய்யாம் வாழ்ந்த காலத்திலேயே அவர் பாடல்களை பாமர மக்கள் பாடக்கூடாது ஏனெனில் மறைபொருளில் பாடப்பட்ட அந்த ஞானப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள சாதாரண மனிதனுக்கு மனப்பக்குவம் போதாது என்று கூறி பாமர மக்கள் அவருடைய பாடல்களை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கவிஞர் ஜபருல்லாஹ்வின் கவிதை பலாப்பழத்தைப் போன்றது. வெளிப்பார்வைக்கு முட்களால் நிரம்பிய கரடு முரடான தோரணை. சற்றே சிரமம் மேற்கொண்டு ஆற அமர அறுத்து, செதுக்கி உள்ளே பார்த்தால் இன்பம் பயக்கும் பலாச்சுளைகள்.

“இறைவன் எங்கே இருக்கிறான்?” என்பது காலங்காலமாக கேட்கப்படும் கேள்வி. “அவன் பிடறி நரம்பைக்காட்டிலும் நெருக்கமாக இருக்கின்றான்” என்றும், “ஏழு வானத்திற்கப்பால் இருக்கின்றான்” என்றும், “அர்ஷில் வீற்றிருக்கிறான்” என்றும், “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்றும், “நீக்கமற நிறைந்திருப்பவன்” என்றும்  –  இப்படி பலரும் பலமாதிரியான விளக்கங்கள் அளிக்கிறார்கள்.

“இறைவன் நரகத்திலும் இருப்பான்” என்று சொல்லும் கவிஞர் ஜபருல்லாஹ்வின் வரிகளைப் படிக்கும்போது நம் மனம் ‘திக்’ என்று திடுக்குற்றுப் போகின்றது.

இவர் ஆன்மீகவாதியா? அல்லது நாத்திகவாதியா? என்ற சந்தேகம் நம் மனதுக்குள் வலுக்கின்றது.

இவரது கவிதையை பரந்த மனத்துடன் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே இவர் சொல்லவரும் கருத்து நம் மூளைக்கு எட்டுகிறது.

சுவனத் தென்றல் தரும்
சுகத்தில் மட்டுமல்ல..!
நரக நெருப்பிலும்
உன் கருணை என்னை
அணைக்கும் என்பதில்
அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டவன் நான்..!
நரகத்தில் கூட நீ
இருப்பாய் தானே…?
நீ…
இல்லாத இடம் என்று
ஏதும் இருக்கிறதா என்ன..?

என்று வினா எழுப்பி நம்மை சிந்தனைத் தடாகத்தில் தள்ளுகிறார். சொர்க்கத்தை படைத்த இறைவன்தானே நரகத்தையும் படைத்தான். இறைவன் இல்லாத இடம் ஏது? என்று கேட்டு நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

ஏசுவே மரித்தாலும்
சிலுவை சிலுவைதான்..!
சாமி கையில் இருந்தாலும்
கத்தி கத்திதான்..!
அல்லாவே படைத்தாலும்
நரகம் நரகம்தான்..!
இயல்புகள்
எப்போதும் சாவதில்லை…!

என்கிறார் நம் கவிஞர்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும். இப்படித்தான் நமக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்பித்தார்கள். இதில் கவிஞர் ஜபருல்லாஹ்வுக்கு உடன்பாடில்லை. அவருக்கே உரித்தான பாணியில்அவர் சற்று மாற்றி யோசிக்கிறார்.

நல்லதுக்கு நல்லதும்
கெட்டதுக்கு கெட்டதும்
நடக்குமாம்…!
அப்படி எனில்..
ஏசுவுக்கு சிலுவையும்
முஹம்மதுக்கு
கல்லடியும் ஏன்…?

கெட்டவர்களுக்கு மாத்திரம்தான் கெட்டது நடக்கும் என்பதில்லை. நல்லவர்களுக்கும் கெட்டது நடக்கும். அதுபோல் கெட்டவர்களுக்கும் நல்லது நடக்கும் என்பது கவிஞரின் வாதம்.

அல்லாஹ்வுக்கு அஞ்சி நட! படைத்தவனின் பயம் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். இப்படித்தான் நமக்கு பெரியோர்கள் போதனை செய்தார்கள். இந்த மனுஷன் சொல்வதை மேலோட்டமாக கேட்கையில் நமக்கு இவர் மீது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதில்லையாம். இந்த ஆளுக்கு புத்தி கித்தி பேதலித்து விட்டதா? இவர் உண்மையிலேயே முஸ்லிம்தானா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

நான்
அல்லாவுக்கு அஞ்சுவதில்லை
அவன்
பயத்தை விட்டும்
என்னை பாதுகாப்பவன்.
நான்
அஞ்சுவது அந்த
ஷைத்தானுக்கு மட்டுமே…!

நன்றி செலுத்த வேண்டியது அல்லாஹ்வுக்கு என்கிறார் கவிஞர். ஆனால் எங்கே நம்மை வழிகெடுத்து விடுவானோ என்று அஞ்ச வேண்டியது ஷைத்தானுக்குத்தான் என்று இவர் கூறுகையில், இதுவும் உண்மைதானே என்று நாம் புரிந்துக் கொள்வதற்கு சற்று நேரம் பிடிக்கிறது.

மற்றொரு கவிதையில், இறைவன் மனிதனை நம்பவில்லை என்ற தொனியில் சொல்லுகிறாரே இந்தக் கவிஞர். இப்படிச் சொல்லலாமா? என்று சினம் கொள்கிறோம்.

இறைவா..
நாங்கள்
உன்னை மட்டுமே
நம்பி இருக்கிறோம்.
நீயோ-
எங்களை நம்பவில்லையே…?
உன் –
வேதத் திருமறையை
நீயே –
பாதுகாத்துக் கொள்வதாக
சொல்லிவிட்டாயே….!

படைத்த இறைவனுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவானாக மனிதன் நடந்துக் கொள்ளவில்லையே என்ற கவிஞரின் ஆதங்கம் இவரது கவிதையின் உட்பொருளை ஆராய்ந்துப் பார்த்தால் நமக்கு நன்கு விளங்குகிறது.

குழந்தை பிறந்ததும் அதற்கு அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை), அப்துல் ரஹ்மான் (நிகரற்ற அருளாளனின் அடிமை), அப்துல் கையூம் (நிலையானவனின் அடிமை) என்றெல்லாம் பெயர் சூட்டுகின்றோம். அதெல்லாம் சரி. படைத்தவனுக்கு பெயர் சூட்டியது யார்? என்று கேள்வி கேட்டு நம்மை குழப்புகிறார். இறைவன்தான் ஆதிமூலம் என்றால் அந்த ஆதிமூலத்திற்கு ஆதிமூலம் யார்? இறைவன் தனக்கு “அல்லாஹ்” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டானா? என்ற ரீதியில் நம்மை குழப்புகிறார் கவிஞர்.

இறைவா..!
நீ படைத்த மனிதர்களுக்கு
உன் பெயரைத்தான் வைக்கிறோம்.
“அல்லாஹ்” என்று
உனக்கு பெயர் சூட்டியது
யார்?

மேலோட்டப் பார்வையில் இக்கேள்வி ஒரு நாத்திகன் கேட்பதைப்போல் இருக்கிறது. ஓரிறைக் கொள்கையையும், படைப்பினங்களின் ஆதிமூலத்தின் சிந்தனைகளையும் இவ்வரிகள் மேம்படுத்துகின்றன என்பது புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பொருளாக இருக்கிறது.

ரசூலுல்லாஹ்வை சூஃபிகளுக்கெல்லாம் சூஃபியாக, மெய்ஞானிகளுக்கெல்லாம் மெய்ஞானியாக நம் மனதில் வைத்து போற்றுகிறோம். அப்படிப்பட்ட இறைத்தூதரை கவிஞர் “ரசூலுல்லாஹ் பிற்காலத்தில் சூஃபி அல்ல” என்று கூறும்போது நம் ரத்தம் சூடேறுகிறது. இவர் என்னதான் சொல்ல வருகிறார்? என்று குழம்புகிறோம். ஜபருல்லாஹ்வுக்கு ஃபத்வா நிச்சயம் என்று நம் மனது நமக்கு எச்சரிக்கிறது.

ஹீராக் குகையில் அவர்கள் அமர்ந்து அவர்கள் இறை சிந்தனையில் ஈடுபட்டபோது அவர்கள் சூஃபி. அதற்குப் பிறகு இறைவனிடமிருந்து “வஹீ” வரத் தொடங்கிய பிறகு அவர்களுடைய சிந்தனை முடிந்து விட்டது. அதற்குப் பின்னர் அவர்களது செயல்கள் எல்லாம் இறைக்கட்டளைக்கு உட்பட்டது என்று விளக்கம் சொல்லும் இவரை ஒரு கவிஞானியாக பார்க்கத் தோன்றுகிறது.

இன்னுமொரு கவிதையில் “பள்ளிவாசலில் மணி அடிக்கலாம்; திரி ஏற்றலாம்” என்ற இவரது வரிகள் மீண்டும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

பள்ளிவாசலில்
மணி அடிக்கலாம்..!
திரி ஏற்றலாம்..!
தேவாலயங்களில்
பாங்கு சொல்லலாம்..!
தேங்காய் உடைக்கலாம்..!
கோயில்களில்
ஜெபம் பண்ணலாம்..!
வேதம் படிக்கலாம்..!
மனங்கள்
சுத்தமானால்..!

மனங்கள் சுத்தமானால் மார்க்கம் ஒரு தடையே அல்ல என்பது கவிஞரின் கருத்து. இவ்வரிகள் ஒரு சரித்திர நிகழ்வை எனக்கு நினைவு படுத்தியது.

நபித்தோழர் கலீபா (ரலி) அவர்கள் ஒருமுறை ஜெரூசலம் நகரைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தபோது மதிய வேளை (லுஹர்) தொழுகை நேரம் வந்து விட்டது. அங்கிருந்த கிறித்துவ மதகுரு சொப்ரோனியஸ், தங்களது தேவாலயத்திற்குள் வந்து தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். தான் உள்ளே நின்றுன் தொழுதால் எங்கே பின்வரும் முஸ்லிம் சந்ததியினர் அந்த இடத்தை பிற்காலத்தில் உரிமை கொண்டாடிவிடுவார்களோ என்ற ஒரே காரணத்திற்காக கிறித்துவ தேவாலயத்திற்கு வெளியிலேயே தொழுகை நடத்தினார்.

அப்துல் கையூம்

– தொடரும்

 

Tags: ,