RSS

Category Archives: வைரமுத்துவும் ஜபருல்லாவும்

வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்


கவிஞர் குழாமில் ஜபருல்லா

“வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்” என்ற இந்த தலைப்பைப் படிக்கையில் “அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” என்று கேட்கத் தோன்றும்.

நாகூர்க் கவிஞர் இஜட் ஜபருல்லாவுக்கும், நாடறிந்த கவிஞர் வைரமுத்துவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது?

கவிஞர் ஜபருல்லா ஒரு இளம்பிறை. கவிஞர் வைரமுத்து ஒரு கறுப்புச் சூரியன்.

இவர் நாற்சுவருக்குள் இருப்பவர். அவர் நாற்திசையும் அறிந்தவர்.

இவர் கற்பனை செய்யத் தெரிந்தவர். அவர் கற்பனையோடு விற்பனையும் செய்யத் தெரிந்தவர் – தன் எழுத்துக்களை.

“நமக்குத் தொழில் கவிதை” என்று மார்தட்டினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி. அதே வசனத்தை இன்று யாராவது பேசினால் “அதுசரி! அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா – எந்தோழா
போதைதர வன்றுபுதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு

என்று மரபு ரீதியில் வெண்பா படுகிறார் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் வைரமுத்து.

மேற்கூறிய இரு கவிஞர்களின் பாடல்களும், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் இருக்கிறன.

கவிதை என்றால் என்ன?

“கவிதை என்பது ஒரு தொழிலல்ல. அது ஒருவனின் ஆத்மராகம்” என்கிறார் புகழ்பெற்ற சோவியத் கவிஞர் மிகாயில் சுவெத்லா.

கவிஞர் வைரமுத்துவுக்கு கவிதை தொழிலாக இருக்கிறது. ஜபருல்லாவைப் பொறுத்தவரை அது வெறும் ஒரு ஆத்மராகம்.

ஜபருல்லா இதுவரை ஒரு கவிதை நூல்கூட வெளியிட்டு காசு பார்க்கவில்லை. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் சட்டைப்பையில் கசங்கிய காகிதங்களாக பத்திரப்படுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. அவ்வளவே. அவற்றில் சில அதிர்ஷ்டவசமாக ஆபிதீன் வலைபூவிலும் காணக்கிடைக்கின்றன.

“கவிஞன் எப்போதுமே இரட்டை வேடம் போட முடியாது. அவன் தன் படைப்புகளில் ஒருவனாகவும், வாழ்க்கையில் வேறு மனிதனாகவும் வாழ முடியாது. அவனது படைப்பையும் வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்கவே முடியாது” என்பது ரஷ்யக் கவிஞர் ராபர்ட் ராஷ்தெஸ்க் வென்ஸ்கியின் கூற்று.

ஆமாம். கவிஞர் வைரமுத்துவைப் போலவே கவிஞர் ஜபருல்லாவுக்கும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது. 

“Great men think alike” என்பார்கள். இவர்களின் இருவரின் “Physiques” ஒத்துப் போகா விட்டாலும்கூட “கெமிஸ்ட்ரி” ஒத்துப் போகிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் உனக்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்

என்று கவிஞர் வைரமுத்து பாடிய அதே கருத்தை சற்று வேறு விதமாக சிந்திக்கிறார் கவிஞர் ஜபருல்லா.

பதவி –
இதன்மேல் நீ அமர்
உன்மேல் –
பதவியை அமரவிடாதே..
. இது ஜபருல்லாவின் சிந்தனையூற்று.

“முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது” என்று நெப்போலியன் சொல்லியதை என் நண்பன் பாரூக் ராஜாவிடம் சொன்னபோது “அதுக்கு என்ன இப்போ? அவரோட அகராதி புத்தகத்துலே அந்த பக்கம் கிழிஞ்சு போயிருக்கும்” என்று ஜோக்கடித்தான்.

“உன்னால் முடியும் தம்பி, தம்பி” என்று கவிஞர் வைரமுத்துவின் பாடலை கேட்கும் போது நமக்கு தன்னம்பிக்கை பிறந்து வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்படும். இதே கருத்தை

‘முடியும்’ என்பதில்
நீ உறுதியாக இரு.
‘முடியாது’ என்பதை
சூழ்நிலை சொல்லட்டும்.

என்று இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் கவிஞர் ஜபருல்லா.

நம்மைப் பொறுத்தவரை வெளிச்சம், விடியல் எல்லாமே ஒன்றுதான். இரண்டுமே பிரகாசமாக இருக்கிறது. சற்றே சிந்தித்துப் பார்த்தால் வெளிச்சம் வேறு, விடியல் வேறு என்ற வியாக்யானம் புரிகிறது. விடியலில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெளிச்சம் யாவும் விடியல் அல்ல என்று உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு

ஒவ்வொரு முகத்திலும்
உன் துளி உண்டு

ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு

வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை

என்கிறார் கவிஞர் வைரமுத்து

உன் –
வாழ்க்கைப் பயணம்
துவங்கட்டும்..!
வெறும் வெளிச்சத்தை
நோக்கி அல்ல
விடியலை நோக்கி

என்கிறார் கவிஞர் ஜபருல்லா.

உதவி எப்படிப்பட்ட மனிதனிடம் எதிர்பார்க்க வேண்டும்?

பெரிய மனித
தரிசனமா?
அதிகாலை போ!
இல்லையேல் .. ..
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்

என்று உலக வழக்கை ஒளிவு மறைவின்றி போட்டு உடைக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ இஜட் ஜபருல்லா கூறுவதை கேளுங்கள்.

உதவி –
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களைத்
தேர்ந்தெடு..

என்கிறார் நம்ம ஊர் கவிஞர். அனுபவம் அவரைப் பேச வைக்கிறது போலும்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை”  என்று சொல்கிறார்களே?
“காசேதான் கடவுளடா” என்று பாடுகிறார்களே?
பணம் தேடுவது மட்டும்தான் வாழ்க்கையா?

இது போன்ற கேள்விகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இங்குதான் இரு கவிஞர்களின் கருத்தும் மாறுபட்டு ஒளிர்கிறது.

நாற்பதுவரை
பணத்தை நீ
தேடவேண்டும்

நாற்பதின்பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்

என்கிறார் வைரமுத்து.

ஏழை என்பதும்
பணக்காரன் என்பதும்
இருக்கின்ற
பணத்தினால் அல்ல
சுரக்கின்ற குணத்தினால்.

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே

நிலைப்படுகிறான்

என்று சாக்ரடீஸ் ஆக மாறி தத்துவம் பேசுகிறார் கவிஞர் ஜபருல்லா.

வாடிப்போயிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையூட்டுவது என்பது ஒரு தனிக்கலை. அது, கவிஞனுக்கு கைக்கூடி வருகின்ற அற்புதக் கலை. சொல்வதைச் சூசகமாகவும் சொல்வான், நெத்தியடியாகவும் சொல்வான்.

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?” என்று கண்ணதாசன் பாடும் போது, நிரந்தரத் துயிலுக்கு தயாராகும் மனமுடைந்த மனிதன் கூட, கையிலிருக்கும் தூக்க மாத்திரையை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு போராட ஆயத்தமாகி விடுவான். 

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே !

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

இஸ்லாம் கூறும் அதே கருத்தைதான் கவிஞர் வைரமுத்துவும் கூறுகிறார். இந்து சாஸ்திரத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. ஒருவன் பொருளை மற்றவன் அபகரிக்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இறைவன் அளித்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமையில்லை.

கவிஞர் வைரமுத்துவின் அபாரச் சிந்தனை, வார்த்தை ஜாலங்கள், கற்பனைத்திறன் நம்மை அவர்மேல் காதல் கொள்ள வைக்கிறது.

இதே போன்று கவிஞர் இஜட் ஜபருல்லாவின் வரிகளும் படிக்கின்ற வாசகனுக்குக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது

வீணை –
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே –
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா. மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

நீரால் உருவாகி
இருட்டிலிருந்து
காற்றால் உயிரேந்தி
வெளிச்சத்தில் விழுந்து
இருட்டுக்கும் ஒளிக்கும் நடுவே
உறங்கி விழித்து
இறுதியில் மரித்து
மண்ணில் புதைந்து
நடுவில்
கொஞ்சம் வாழ்க்கை!

வாழ்க்கை –
இது –
தத்துவமல்ல..
தனித்துவம்..!
இது –
பேசப்படுவதல்ல
பேணப்படுவது.

உன் வாழ்க்கை என்பது
உன்னை மட்டும்
சார்ந்தது அல்ல
உடன் இருப்பவர்களையும்
சூழ்ந்தது.

உதவு.. உதவு..!
வாழ்க்கையின்
கதவு திறக்கும்..!

உயர உயர
பறக்கும் பறவைக்கும்
உணவு என்னவோ
கீழேதான்..!

எண்ணமும் செயலும்
வாழ்க்கையின்
இரு சிறகுகள்..!
உயரப்பற
எனினும்
உள்ளம் என்ற அலகுதான்
உனக்கு
உணவைத் தரும்
மறந்து விடாதே..!

பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா, உயர உயர பறந்தாலும் உணவுக்காக பருந்து தாழ்ந்து வரவேண்டுமென்பது இயற்கையின் நியதி. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் உழைப்பாளிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் போனால் என்னாகும்?  “நாங்கள் சேற்றிலே காலை வைக்கா விட்டால் நீங்கள் சோற்றிலே கையை வைக்க முடியாது” என்று பாட்டாளிகளின் மேன்மையை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதை நாம் மறக்கத்தான் முடியுமா? “உழைப்பாளிகளுக்கு அவர்களின் வியர்வை உலரும் முன்பே அவர்களுக்கான ஊதியத்தை உடனே கொடுத்து விடுங்கள்” என்று கூறிய நபிகள் நாயகத்தின் பொன்மொழி நம் நினைவில் நிற்கிறது.

வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்த மனிதனுக்கு புத்தி வரும்படி இன்னும் எத்தனையோ அறிவுரைகளைக் கூறுகிறார் கவிஞர் வைரமுத்து.

பூமியைக்
கைவிடப் பார்ப்பவனே

பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா

காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?

தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன் மீது
நிறுத்திக் கொண்டதா?

பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?

தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.

நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?

என்று கேள்விக் கணைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ கவிஞர் ஜபருல்லாவின் அறிவுரைகளை காது கொடுத்து கேளுங்கள்.

வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.

‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!

எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!

உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!

உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..

அலைகள் –
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் –
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!

என்கிறார் ஊரறிந்த நம் கவிஞர்.

உலகறிந்த கவிஞரோ, சாகப் போகிறவனை எப்படியும் மரணவாயிலிருந்து மீட்டியேத் தீருவது என்ற வைராக்கியத்தோடு எழுதித் தள்ளுகிறார். இப்போது அவருடைய கோபம் (நாகூர் மம்முட்டி கடை டீயில் காணப்படும் சீனியைப் போன்று) சற்று தூக்கலாகவே காணப்படுகிறது. அவரது கண்டிப்பும் விலைவாசியாய் அதிகரிக்கிறது.

உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு

எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்!

உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன் – ஏன்?

அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஏன்?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே – ஏன்?

மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?

வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?

வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்

இத்தனை உரிமையான அறிவுறுத்தலுக்குப் பிறகு, சாவும் எண்ணம் – அதை மனிதன் மூட்டைக் கட்டி வைத்து விடுவது திண்ணம்.

மரண விளிம்பிலிருந்து காப்பாற்றி வந்த ஒருவனுக்கு மேலும் நம்பிக்கையூட்ட கவிஞர் ஜபருல்லாவின் இந்த வரிகள் பெரிதும் உதவும். அவனை சகஜநிலைக்கு கொண்டு வந்துவிடும்.

வாழ்க்கையில் –
உயர்ந்த பீடத்தை
இலக்காக்கு..!
அதே சமயம்
இருக்கின்ற இடத்தையும்
இழந்து விடாதே..!
முன்னேற்றத்தின்
முதற்படி இதுதான்..!

உன் சிந்தனை
மற்றவர்களைச் சுற்றி
இருப்பதை விட
முதலில்
உன்னைப்பற்றி இருக்கட்டும்..!

நீ –
யார் என்பதை உணர்..!
யாராக மாற விரும்புகிறாய் என்பதை
வரையறை செய்..!
எந்த வழியில் என்பதை
திட்டமாக்கு..!

இடையில் வரும்
வெற்றிகளில் –
இறுமாந்து விடாதே..!
இலட்சிய எல்லையை எட்டமுடியாது..!
இறுதியில் சிரிப்பவனே
வெற்றி பெற்றவன்.

பணம் –
இதை ஒரு கருவியாகவே
பயன்படுத்து
வாழ்க்கையாக
மாற்றிவிடாதே..

புகழ் –
இதனால் புத்துணர்ச்சி பெறு.
போதை மயக்கமாய்
ஆக்கிவிடாதே..!

என்று உணர வைக்கிறார் கவிஞர் ஜபருல்லா,

தற்கொலைக்குத் துணிகிறவனுக்கு முடிவுரையாக இந்த வேண்டுகோளை முன் வைக்கிறார் வைரமுத்து.

தம்பீ !

சாவைச்
சாவு தீர்மானிக்கும்

வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்துகொள்

சுடும் வரைக்கும்
நெருப்பு
 
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும்
மனிதன்

நீ மனிதன்!!!

இப்படியெல்லாம் நம்பிக்கையளித்து விட்டு சாவுமுனயிலிருந்து காப்பாற்றி வந்தவனை உட்கார வைத்து கவிஞர் ஜபருல்லாவின் கவிதையும் வாசித்துக் காட்டினால் போதுமானது. இன்னொரு முறை ஒருபோதும் அந்த தவறான முடிவுக்கு அவன் செல்லவே மாட்டான்.

இதோ ஜபருல்லாவின் அறிவுரை.

வாழ்க்கையில் –
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ –
உருவாக்கு..

உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.

வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது –
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!

தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது –
அது –
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!

அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை –
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!

உன்னைச்சுற்றி
ஒரு –
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!

உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!

ஆமாம் ! அப்துல் காதருக்கும் அமவாசைக்கும் சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.

– அப்துல் கையூம்

vapuchi@gmail.com
https://nagoori.wordpress.com