RSS

Category Archives: குலாம் காதிறு நாவலர்

எந்திர ஊர்தியும் எங்கள் ஊர் நாவலரும்


Train

நாகூருக்கும் புகைவண்டிக்கும் ஏகப்பொருத்தம் உண்டு. ஒரு காலத்தில் வடநாட்டிலிருந்து நாகூர் ரயிலில் யார் பயணம் செய்து வந்தாலும், “நாகூர் வந்ததும் என்னை எழுப்பி விடுங்கள்” என்று சகபயணிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை. ரயிலில் ஏறி குறட்டை விட்டு தூக்கி விட்டால் போதும். அந்த ரயில் கடைசி நிறுத்தமாக நாகூர் வந்தடைந்து நின்றுவிடும். ரயிலைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அவர்களை எழுப்பி விட்டு விடுவார்கள். ஆகையால் கவலை இல்லை.

இப்பொழுது அப்படியில்லை. காரைக்காலுக்கும் தொடர்வண்டி தொடர்பு ஏற்படுத்தி விட்டதால் நாகூருக்கு இருந்த அந்த முக்கியத்துவம் முற்றிலும் போய்விட்டது.

இன்ஜினை வந்தவழியே திருப்புவதற்கு கிணறு போன்ற ஒரு சக்கர அமைப்பில் இன்ஜினைக் கொண்டு வந்து நிறுத்தி, இருபுறமும் இரு நபர்கள் லீவரைக் கொண்டு கையாலேயே திருப்புவார்கள். என் இளம் பிராயத்தில் நாகூரில் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை காணச் சென்றதுண்டு. இவ்வளவு பெரிய ரயில் இன்ஜினையே இரண்டு பேர்கள் திருப்பி வைத்து விட்டார்களே….? அவர்கள் எவ்வளவு பலசாலியாக இருப்பார்கள்? என அந்த புரியாத வயதில் கண்டு வியந்ததுண்டு.

இக்காலத்தில் ட்ரெயினை பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். “புகைவண்டி” என்றுதான் இவ்வளவு நாட்களாக நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படி அழைக்காதீர்கள் என்று தமிழார்வலர்கள் நம் மீது வெகுண்டு எழுகின்றார்கள்.

ஒருகாலத்தில் ரயிலானது புகை விட்டுக் கொண்டு “சிக்கு.. புக்கு. சிக்கு.. புக்கு ரயிலே..” என்று வந்தது. இப்பொழுது அது என்ன புகை விட்டுக்கொண்டா வருகிறது? என்று கேள்வியால் நம்மை துளைத்தெடுக்கிறார்கள். நியாயமான சந்தேகம்தான்.

ஆகவே, தொடர் வண்டி என்று அழையுங்கள் என்று நமக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனையோ இடங்களில் “ரயில்வே ஸ்டேஷன்” “புகைவண்டி நிலையம்” என்றுதான் பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன.

புகையிரதம், புகை வண்டி, புகையூர்தி, ரயில் வண்டி, நீராவி ரயில், சாரனம் (சாரை+வாகனம்), இருப்பூர்தி, தொடருந்து, தொடரி என்று ஆளாளுக்கு வெவ்வேறு பெயர்களால் அழைத்து நம்மை குழப்புகிறார்கள்.

பொத்தாம் பொதுவாக தொடர்வண்டி என்று சொன்னால் போதுமா?

Locomotive Train, Diesel Train. Electric Train, Commuter, Goods Train, Metro Train, Mono Rail, Bullet Train என வகை வகையான ட்ரெயின்களுக்கும் தமிழ்ப் பெயர் கொடுத்து விட்டீர்களேயானால் எங்களைப் போன்ற பாமரர்கள் அழைக்க ஏதுவாக இருக்கும்.

வெறுமனே “தொடர் வண்டி” என்று எப்படி இவை யாவையும் அழைப்பது?

நாகூர் பெரும்புலவர் குலாம் காதிறு நாவலர் எழுதிய 220 அடிகளைக் கொண்ட புலவராற்றுப்படையில் இந்த தொடர் வண்டியைப் பற்றிய வருணனை நம்மை பிரமிக்க வைக்கிறது.

சங்ககால நடையில் சொல்நயம், பொருள்நயம் மிகுந்து காணப்படும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட காலத்தால் அழியாத இப்புலவராற்றுப்படையில் நாம் இப்போது அழைக்கும் “தொடர்வண்டி”யினை “எந்திர ஊர்தி” என்று குறிப்பிடுகிறார் நம் பெரும்புலவர்.

தமிழிலக்கியத்தில் காணப்படும் 96 வகை பிரபந்தங்களில் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்றால் நெறிபடுத்துதல் என்று பொருள். நாகூர் குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படையை நாம் ரசித்து படிக்கையில் “இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?” என்று கோஷம் எழுப்பத் தோன்றுகிறது..

நாவலர் தன் சகபுலவர் ஒருவருக்கு “மதுரைக்கு ட்ரெயின்லேயே போகலாமே. ஜாலியா இருக்குமே” என்று பரிந்துரை செய்கிறார்.

அந்த புகைவண்டியை வருணிக்கும் அவருடைய நடையழகைப் பாருங்கள்.

//உருமுறுமோ டுறலொழியின்
இருபுறனும் இருப்புருளை
நான்குருளைக் கான்குழுமும்
வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்
ஒலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கொத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையின்
எந்திர வூர்தி…//

இடி மாதிரி வித்தியாசமான சத்தம் எழுப்பும் இரும்பினால் ஆன நான்கு உருளைகள் அதற்கு உண்டு. நடுக்காட்டிலே இருக்கின்ற கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி ‘புஸ்.. புஸ்ஸென்று..’ பெரிய மூச்சு விடுகின்றது.

இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளுகின்றன.

காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது.

அந்த மாதிரி ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற கரும் புகை இருக்கின்றதே … அப்பப்பா… ! அது எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த குழாயின் வாயிலாக புகை சுழன்று சுழன்று வருகிறது.

மரவட்டை மாதிரி இருக்கிறது அதன் நடை. அந்த எந்திர ஊர்தி ஒன்றுக்குப் பின் ஒன்றாக நீண்டு ஊர்ந்து ஊர்ந்துச் செல்கிறது.

“இந்த மாதிரி சிறப்பு கொண்ட எந்திர ஊர்தியில் பயணித்துப் பாரும் புலவரே!” என்று கூறுகிறார்.

இக்காலத்தில் வெளிவந்த எந்த ஒரு தமிழ் நூலிலும் எந்திர ஊர்தி என்ற பெயரோ அல்லது அதைப்பற்றிய வருணனையோ நான் அறிந்திலேன். டிரெயினுக்கு முதற் முதலாக “எந்திர ஊர்தி” என்று பெயர் சூட்டியது நம் நாவலராக இருக்கலாம் என்பது என் எண்ணம். இப்பதிவை படிக்கும் தமிழறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கக் கூடும்.

நாவலர் அந்த தொடர்வண்டியின் அமைப்பை வருணிப்பதோடு நின்றுவிடவில்லை. மேலும் பாடுவதைக் கேளுங்கள்.

//அந்தமில் காட்சி அணிபல காண்பிர்
வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்
ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்
பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுற செலவின்
மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்
சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்
நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்//

சக புலவருக்கு நம் நாவலர் மேலும் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்.

“அந்த டிரெயின்லே நீங்க கிளம்பி போனீங்கன்னா ஷோக்கான காட்சிகளையெல்லாம் வரிசையா பார்த்துக்கிட்டே போகலாம். போக வேண்டிய இடத்திற்கு சட்டுபுட்டுன்னு போய்ச் சேரலாம். அந்த அனுபவம் சூப்பரா இருக்கும். வழி நெடுக மக்கள் ஏறி இறங்கும் பல ஸ்டேஷன்கள் வரும். அதுமட்டுமல்ல வாய்க்கு ருசியா உணவு பண்டங்களும் அந்தந்த ஸ்டேஷன்களில் கிடைக்கும். நாள் கணக்கா மதுரைக்கு பயணம் போக வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளிலே நீங்க மதுரைக்குச் சென்று விடலாம்.”

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவிய குலாம் காதிறு அவர்கள் வாழ்ந்த காலம் .

அது, 1833 ஆண்டு முதல் 1908 வரை.

#அப்துல்கையூம்

 

துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு


Gulam Kadir Navalar

சாகித்திய அகாதெமி நிறுவனம் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களை போற்றும் வண்ணம் அரிய பல நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வரிசையில் டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்களது கைவண்ணத்தில் குலாம் காதிறு நாவலரைப் பற்றிய சிறந்த நூலொன்றை பதிப்பித்துள்ளது.

டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதித் தன் எழுத்துப் பணியை தொடங்கியவர். மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புக்களும், ஒரு புதுக்கவிதைத் தொகுப்பும், இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளிவந்துள்ளன. கிரேக்க இதிகாசக் கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சமயம், தமிழ்த்துறைகள் வாயிலாக ‘வீரசைவம்’ குறித்து ஆய்வு நடத்தி ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நூலைப் படைத்த இவருக்கு பொதுவாக ஒட்டுமொத்த தமிழிலக்கிய ஆர்வலர்களும், குறிப்பாக நாகூர்வாழ் மக்களும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை எத்தனையோ தமிழறிஞர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர். பற்பல நூல்களை வெளியிட்டுள்ளனர். நாவலரின் தமிழ்ப்புலமையையும், சமயோசித புத்திகூர்மையும், சொல்வன்மையையும், மொழியாற்றலையும் இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ள முறை நம் கவனத்தை ஈர்க்கிறது. இதுவரை படித்திராத பல சுவராசியமான நிகழ்வுகளை நமக்கு வழங்குகிறார் நூலாசிரியர். ஈழத்தீவில் நாவலருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு அழகான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வை அப்படியே இங்கு வடித்திருக்கிறேன் :

ஈழத்தீவில் நாகூர் குலாம் காதிறு நாவலர்

“நாவலர்” என்ற பட்டம் குலாம் காதிறுக்கு வழங்கப்பட்ட பின்னரும் அவரை ஒரு சிலர் முழுமையாக “நாவலர்” என்ற பட்டத்திற்குடியவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைக் குறித்து கேலி பேசவும் கிண்டல் செய்யவுமாக இருந்தனர். இது தமிழ் இலக்கியவாதிகளிடையே அன்றைக்குமிருந்த “புலமைக் காய்ச்சலால்” ஏற்பட்ட எரிச்சல் என்பதைத் தவிர வேறன்று. தமிழுலகில் அன்று “நாவலர்” என்ற பெயருக்குரியவராகக் குறிப்பிடப்பட்டவர் யாழ்ப்பாணம் வண்ணை மாநகர் ஆறுமுக நாவலர் ஒருவரே!

இதனிடையே குலாம் காதிறு, “ஆரிபு நாயகம்” என்ற காவியத்தை இயற்றி நிறைவு செய்துவிட்டார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து வேறு எவரையும் நாவலர் என்றழைக்க விரும்பாத யாழ்ப்பாணத் தமிழர்கள், இவரை அழைத்து சோதித்துப் பார்க்க நினைத்தனர். அதற்கேற்றவாறு அங்குள்ள இவருடைய அபிமானிகளின் ஏற்பாட்டில் 1896-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணை மாநகரில் அதுவும் நாவலர் கோட்டத்தில் ஆறுமுக நாவலருடைய மருகர் பொன்னம்பலம் பிள்ளையின் தலைமையில், குலாம் காதிறு நாவலருடைய இலக்கியப் படைப்பான “ஆரிபு நாயகம்” அரங்கேற்றம் நடைபெற்றது.

சிறந்த தமிழ்ப் புலவரான பொன்னம்பலப் பிள்ளையும் அவருடைய குழுவினரும் அரங்கேற்றம் ஆகின்ற “ஆரிபு நாயக”த்தை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தனர். ஏறத்தாழ இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகின்ற முனைவர்பட்ட நேர்முகத் தேர்வைக் காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது அந்த அரங்கேற்ற அவை.

காவிய அரங்கேற்றம்

ஆரிபு நாயகத்தின் செய்யுட்களைப் பாடி, விரிவுரை நிகழ்த்தி வருகையில், “மாதுவளை வனங்கள் சூழ்ந்த மதினாவின் ரெளலா வந்தார்” என்ற அடியை குலாம் காதிறு நாவலர் பாட, அவரை அவமதிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் ஒரு புலவர் அவரை இடைமறித்து

“நாகூர்ப் புலவரே! மன்னிக்க வேண்டும். ‘மாதுவளை’ என்றால் ஆபாசச் சொல்லாக எமக்குப் படுகின்றதே”

என்று கூறி ஏளனமாகச் சிரித்தார். குலாம் காதிறு நாவலருக்கு, தாம் செய்யுளில் மாதளை என்ற சொல்லை ‘மாதுவளை’ என்று பாடியிருப்பதைக் குறிப்பிட்டுத் தவறான, ஆபாசமான பொருள் கற்பித்து, ஒரு தமிழ்ப் புலவர் தம்மிடம் கேள்வி கேட்பது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவரை நோக்கி புன்முறுவல் பூத்தவண்ணம்,

“புலவீர், அமரும்! கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்ற உற்றகலை மடந்தை உரையிலும் பெரியீரோ நீர்! உமது இலக்கண அறிவு இதற்கு விளக்கம் சொல்லவில்லையோ? கேளுமையா, புலவரே! மாதுளங்கம் என்ற சொல் வடமொழிச் சொல். அது தமிழில் வருகின்றபோது, திரிந்து “மாதுவளை’ ஆயிற்று. செய்யுள் இடம் நோக்கி – மாதுளங்கம், மாதுவளை, மாதளை என நிற்கும். மாதுவளை என்றால் நீர் கூறுவது போன்று ஆபாசப் பொருளன்று. அதன் பொருள் என்னவென்று கூறுகின்றேன் கேளும்; மா-பெருமை தங்கிய, துவளும்-நாவோடு துவண்டு சுவை தரும், அங்கம்-உள் அமைப்பை உடையது. இது பூ, பிஞ்சு, காய், பழம், சுளை ஆகியவற்றோடு சேரும்பொழுது மா, துவள், அம், பூ என்பது ‘மாதுவளம்பூ’ என்றும், மா, துவள், அம், பிஞ்சு என்பது ‘மாதுவளம்பிஞ்சு’ என்றும், மா, துவள், அம், சுளை என்பது ‘மாதுவலஞ்சுளை’ என்றும் புணர்ந்து நிற்கும். இத்துணை சிறு புணர்தல் இலக்கணமெனும் நீர் அறியீரோ”

என்று அவரை இடித்துரைத்தார். வினவிய புலவர் தலைதாழ்த்திக் கொண்டார்.. நாவலர் நக்கீரராய் நிமிர்ந்து நின்றார்.

‘துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு’

குலாம் காதிறு நாவலர் தொடர்ந்து தமது காப்பியத்தை அரங்ககேற்றும் பணியில் செய்யுட்களைப்பாடி அதனை விரிவுரை செய்துக் கொண்டிருந்தார்.

“விடிவெள்ளி மதினாபுக்கார்
வியன்குயில் கூறிற்றன்றே”

என்று ஒரு செய்யுளில் ஈற்றடியைப் பாடி, விரிவுரையைத் தொடர்ந்தபோது போது ஒரு பெண் எழுந்தார்.

“நாகூர்ப் புலவீர்!.. நீர் வியன்குயில் என்று கூறியிருப்பதன் காரணம் என்ன? குயில் என்பது மெல்லிய பறவை ஆயிற்றே, அதனை வீறுள்ள பறவையென்றோ வியப்பிற்குரிய பறவையென்றோ நீர் கூறக் காரணம் என்ன?” என்றார்.

அதற்குக் குலாம் காதிறு நாவலர், “அம்மணீ! குயிலுக்கு முட்டையிடத் தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. அதனால்தான் அதனை வியப்பிற்குரிய விநோதப் பறவை என்ற பொருளில் வியன்குயில் என்று கூறினேன். மேலும் குயில் தன் முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டுவிட்டுப் பறந்துவிடும். காக்கை தன் முட்டைகளோடு அதனை அடைகாத்துப் பொரிக்கச் செய்து, குயில் குஞ்சைத் தன் குஞ்சுகளோடு பராமரிக்கும். தன் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றும்போது, இதற்கும் தீற்றும். வளர்ந்த காக்கைக் குஞ்சுகள் ‘கா.. கா..’ என்று ஒலி எழுப்ப, இது மட்டும் ‘கீ… கீ…’ என்று கத்துவதைக் கேட்டு, காக்கைக்கு அது தன் இனத்தைச் சேர்ந்ததன்று என்ற உண்மை புலப்படும். சினமுற்று அதனைக் கூர்மூக்கால் கொத்தும். அப்பொழுது குயில் குஞ்சு சற்றும் அஞ்சாது, அக்காக்கையை எதிர்த்து ‘கீ…கீ..’ என்று கத்தி வீறுடன் சண்டையிடும். எனவேதான் அதனை ‘வீறுள்ள பறவை’ என்னும் பொருளில் ‘வியன்குயில்’ என்று பாடினேன்” என்று விளக்கமளித்தார். இவ்விளக்கத்தைக் கேட்ட அப்பெண்மணி, பெரிதும் மகிழ்வுற்று,

“துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து எங்கள் யாழ்ப்பாணக்கரை வந்தீர்…” என்று கூறி வாயார வாழ்த்திப் பாராட்டினார்.,

நாவலர் என்றால் நீர்தாம் நாவலர்

ஆரிபு நாயகக் காப்பிய அரங்கேற்றம் சிறப்பாகவும் செம்மையாகவும் நிறைவேறியது, சங்கத்தமிழ் பொங்கும் காவியத்தைக் கேட்ட யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் குலாம் காதிறு நாவலரின் புலமைத் திறத்தையும் இலக்கிய நயத்தையும் பெரிதும் பாராட்டினார்கள். “நாவலர்” எனற பட்டம் எங்கள் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கு மட்டுமே உரியது என்று மார்தட்டி நின்றவர்களும், குலாம் காதிறு நாவலருக்குச் சூட்டப்பட்ட “நாவலர்” என்ற சிறப்புப் பட்டத்தை எடுத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கட்டி இடையூறு விளைவித்தவர்களும் குலாம் காதிறு நாவலருடைய புலமையாற்றலுக்கு முன்னர் தலைசாய்த்தனர்.

“மாதுளை” பற்றி விளக்கிய நாவலருக்கு மாதுவளஞ் சுளைகளால் மாலைகட்டி, அணிவித்து மகிழ்ந்தனர். பல்வகை பரிசில்களை அள்ளி அள்ளி வழங்கினர். ஒரு சேர எல்லோரும் “நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்; நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்” என்று உரத்த ஒலி எழுப்பி குலாம் காதிறுக்கு நாவலர் பட்டத்தை உறுதிப்படுத்தி உலகிற்கு பறைசாற்றினர்.

மேலும் பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் தம்முடைய மாமனாரை (மாதுலர்)ப் போன்றே தமிழில் புலமைகொண்ட பெருமகனார் குலாம் காதிறு நாவலருடைய ஆரிபு நாயகம் காப்பியத்திற்கு

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறஞ் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
,ஆசு மதுரமாய் அமைந்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டான்

எனப் பாயிரம் பாடி நாவலரைச் சிறப்பித்தார்.

தொடர்புடைய சுட்டி:

தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும்    குலாம் காதிறு நாவலர் 

 

 

Tags:

நான்காம் தமிழ்ச்சங்க நக்கீரர்


Image

குலாம் காதிறு அவர்கள் பாவலர், பத்திரிகையாளர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார்.

புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்.

குலாம் காதிர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால், மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார்.

முதல் முதலில் தனிக் கவிதைகள் கீர்த்தனைகள் இயற்றினார். பிறகு பினாங்கு சென்று வித்யா விசாரினிஎன்ற பெயரில் தமிழ் வார இதழ் ஒன்றினை 1888இல் நடத்தினார். நன்னூல் விளக்கம் எழுதினார்.

பொருத்த விளக்கம்நூலிற்கு சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்த மதிப்புரையை ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் பார்த்து பெருமகிழ்வுற்று கி.பி.1901 ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியுடன் நாகூர் சென்று, குலாம் காதிர் நாவலரை சந்தித்து உரையாடினார். அப்பொழுது நாவலர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை நிறுவும்படிக் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறு நாவலரின் பெயரைச் சேர்த்தார்.

அரபு மொழியின் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழியினை அறிந்து அரபுத் தமிழ் அகராதி ஒன்றினை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தமிழக அரசு குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது.

நன்றி : தி இந்து

 

 

Tags:

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி



‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.

‘வித்திய விசாரிணி’க்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது.

’வித்தியா விசாரிணி’ பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.

மொழிபெயர்ப்பு பணியில் 19 ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்தவர் நாவலர். தமிழக முஸ்லிம் அறிஞர்கள் அரபு, பார்சி, உருது நூல்களை மொழியாக்கம் செய்து வந்த காலகட்டம் அது. நெடிய ஆங்கில நாவலை – புதினத்தை தமிழில் மொழி பெயர்த்து அந்நாளில் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தினார் குலாம் காதிறு நாவலர்.

ஆங்கில நாவலின் பெயர் ‘omar’ ஒமர். அதை எழுதியவர் ரைனால்ட்ஸ் (G.W.M.Reynolds ) அந்த வரலாற்றுப் புதினம் நாகூர் நாவலரை வெகுவாக ஈர்த்ததால் அதை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பக்கங்கள் பெருகிக் கொண்டிருந்தன. மொத்தம் 900 பக்கங்கள். அதனால் ஒரே தொகுப்பாக வெளியிட முடியவில்லை.  ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ எனும் தலைப்புடன் 4 பாகங்களாக 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார் நாவலர். கடல் கடந்து பல நாடுகளில் கலை இலக்கிய உலா வந்த நாவலரின் வாழ்க்கை வரலாறு நாடறிந்தது.

1883 ஆம் ஆண்டில் குலாம் காதிறு நாவலர் நாகூரில் பிறந்தார். இவர் தந்தை பெயர் வாப்பு ராவுத்தர். அரபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார் நாவலர். தமது பெரிய தந்தை புலவர் பக்கீர் தம்பி சாகிபின் வேண்டுகோள்படி நாராயண் சுவாமி உபாத்தியாயிடம் பாடம் கேட்டு வந்தார். பின்பு வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமும் பாடம் கேட்டு வந்தார்.

1901 ஆம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து மதுரையில் நான்காவது சங்கம் அமைத்தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய ‘மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை’ இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அன்று ‘நக்கீரர் என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார்.

பிரபு மதுரைப் பிள்ளையின் தர்பாரில் புலவரின் நூலொன்று அரங்கேற்றப்பட்டது. அதில் புலவருக்கு ‘நாவலர்’ என்று புகழ் நாமம் சூட்டப்பட்டது. நாவலரின் நூலொன்று யாழ்ப்பாணத்திலும் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது சுலைமான் லெப்பை ஆலிம், வித்துவான் பொன்னம்பலம்பிள்ளை மற்றும் பலரும் அதில் பங்கு கொண்டனர்.

ஆரிபு நாயகம் 1896 இல் இலங்கையில் அரங்கேற்றம் கண்டது. முகவுரைக் குறிப்பில் இடம்பெற்றுள்ள சில வரிகள்: “ஆயுள்வேத பாஸ்கர வாப்பு குமாரர் வித்வ ஜன சேகரரும், நாகூர் தர்கா வித்வானும் ஆகிய குலாம் காதிறு நாவலர் இயற்றியது.

“இது யாழ்ப்பாணம் மகா றா றா ஸ்ரீ அபூபக்கர் நயினார் பிள்ளை மரைக்காயர் குமாரர் பாக்கியப்பா என வழங்கும் மகா முகம்மது லெப்பை மரைக்காயர் முயற்சியைக் கொண்டு திருசிரபுரம் இலக்கண உபாத்தியாயர் கா.பிச்சை இப்றாகீம் புலவரால் பதிப்பிக்கப்பட்டது”.

திருச்சியில் இயங்கிய சவுத் இந்தியா ஸ்டார் பிரஸ் எனும் அச்சகம் ஆரிபு நாயக காவியத்தை அச்சிட்ட குறிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

நற்பெயர்

‘ஆரிபு நாயகம்’ நூலுக்கு இலங்கை பொன்னம்பலம் பிள்ளை பாயிரம் வழங்கிச் சிறப்பித்தார்.

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
மாசு மதுரமாய் அமைத்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டோன்

குலாம் காதிறு 9 வயதில் திருக்குர்ஆனையும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்தார். 12 வயதில் தமிழ்ப் பள்ளியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மருத்துவத்துடன் தமிழ்ப் புலமையும் பெற்று விளங்கிய ராவுத்தர் 90 வயதில் காலமானதால் இளைஞர் குலாம் காதிறை பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிப் பேணி வளர்த்தார். அவர் ரங்கூன் நகர சோலியா தெருவில் வர்த்தகம் நடத்தி செல்வாக்கு பெற்றவர். இளைஞர் குலாம் காதிறு 28 வயதில் பெரிய தந்தையையும் இழந்தார்.

குலாம் காதிறு அக்கால வழக்கறிஞர் சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். அவர், தமது தந்தை வாப்பு ராவுத்தரின் நண்பர். ‘ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து நூலாக்கும் திறனைக் கற்பித்த சரவணப் பெருமாளைப் போன்றே நாவலரின் அரபு மொழிப் புலமைக்கு ஆசானாக விளங்கியவர்கள் நாகூர் நூருத்தீன் சாகிபு காமில், முகியித்தின் பக்கீர் சாகிப் காமில் ஆகியோர் ஆவர்.

குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை பேராசிரியர் ம.மு. உவைஸ், அறிஞர் எம்.ஆர். எம். அப்துற் றஹீம், ஆர்.பி.எம். கனி பேராசிரியர்  சி. நயினார் முஹம்மது, நாகூர் மு. ஜாபர் முகைதீன் முதலானோர் ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளனர்.

படைப்புகள்

குலாம் காதிறு முதலில் தனிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். பதிகம், அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், புராணம், காவியம், ஆற்றுப்படை, உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் படைத்தார். வசன நூல்களை இயற்றினார். உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டார், அவருடைய படைப்புகளின் பட்டியல்கள் விரிவானது . அவை:

‘பிரபந்தத் திரட்டு சச்சிதானந்தன் பதிகம்,
இரட்டை மணிமாலை,
முனாஜாத்து திருநகை யமக பதிற்றந்தாதி நாகைப் பதிகம்,
முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

‘நாகூர்க் கலம்பகம்’ நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாகிப் அவர்கள் சிறப்பு விவரிப்பது கி.பி. 1878 இல் வெளிவந்தது.

“முகாஷபா மாலை’ நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம் 13 படலங்கள், 300 பாடல்கள் கொண்டது. முதற் பதிப்பு 1899 ஆண்டு காரைக்கால் முகமது ஸமதானி அச்சகத்தில்  அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1983 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம். செய்யது முஹம்மது ‘ஹஸன்’ சென்னை மில்லத் பிரிண்டர்ஸ் ‘குவாலீர்க் கலம்பகம்’ ஹலறத் முகம்மது கெளது குலாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்கள் 1882 இல் அச்சில் வந்தது.

‘திருமக்காத் திரிபந்தாதி’ மக்கா நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் 1895 ஆம் ஆண்டு யாழ்ப்பானம் வச்சிர யந்திர சாலையில் அச்சிடப்பட்டது. “நாகூர் புராணம்” ஹஜ்ரத் சாஹூல் ஹமீது நாயகம் அவர்களின் வாழ்வு சிறப்பு கூறுவது. மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித்திரட்டு உள்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள். 1893 ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு, ஹலறத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள். 2373 விருத்தங்கள். 1896 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

‘ஆரிபு நாயகம், ‘பகுதாதுக் கலம்பகம்’ ஹலறத் கெளது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாத் நகர் சிறப்பு கூறும் 101 பாடல்கள். 1894 ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. ‘பதாயிகுக் கலம்பகம்’ ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900 இல் அச்சில் வந்தது.

1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968 இல் வெளிவந்தது. பதிப்பித்தவர், டாக்டர்     ம.மு. உவைஸ் (இலங்கை)

நாகூர் தர்கா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது “தர்கா மாலை” நாவலர் குலாம் காதிறு மகன் வா.கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928 ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள்  குறிப்பிடப்படவில்லை.

உரை நடை

‘மும்மணிக் கோவை’, ‘மக்கா கோவை’, ‘மதினாக் கலம்பகம்’, ‘பகுதாதுய மக அந்தாதி’, ‘சச்சிதானந்த மாலை’, ‘சமுத்திர மாலை’, ‘மதுரைக் கோவை’, ‘குரு ஸ்தோத்திர மாலை’, ‘பத்துஹுல் மிஸிர் பஹனாஷாப் புராணம்’.

நாகூர் நாயகம் அவர்களின் அற்புத வரலாற்றை அழகிய தமிழ் உரைநடை நூலாக தந்தார். அந்நூல் ‘கன்ஸுல் கறாமாத்து’ என்னும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

சீறாப்புராண வசனம், திருமணிமாலை வசனம், ஆரிப் நாயகம் வசனம், சீறா நபியவதாரப் படல உரை, சீறா நபியவதாப் படல உரை கடிலக நிராகரணம், நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம், இசை நுணுக்க இன்பம், அறபுத் தமிழ் அகராதி, மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்.

அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யுத்தீன் அண்ணாவியாரின் பிக்ஹு மாலை’ உரை முதற்பதிப்பு 1890 ஆண்டில் வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பு 1990 ஆம் ஆண்டு புலவர் அ. அஹ்மது பஷீர், வெளிக் கொணர்ந்தார். நாகூர் பெரியார் முஹ்யுத்தீன் பக்கீர் சாஹிப், காமில் என்கிற செய்யத் அப்துல் வஹ்ஹாப் ஆலிம் சாயிபு அவர்களின் ‘தறீக்குல் ஜன்னா’ உரை (ஹி 1335) இலக்கணக் கோடரி பேராசிரியர் திருச்சி கா.பிச்சை இபுறாஹீம் புலவரின் ‘திரு மதினத்தந்தாதி உரை’ (1893).

நாகூர்ப் புராணம்

மகா வித்வான் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நூல்கள் அவரது வாழ்நாளிலேயே அச்சிடப்பட்டது. அவர் பெற்ற சிறப்பு. நாகூர்ப் புராணம் 1883 இல் படைக்கப்பட்டு 1893 ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது

அவ்வாறே மற்ற காப்பியங்களும், நூல்களும் அவர் காலத்திலேயே அச்சிடப்பட்டதால் அவர் மாபெரும் பாக்கியசாலி என நாகூர்ப் புராணம் பற்றிய தமது ஆய்வில் எழுதியுள்ளார். ஓய்வுபெற்ற அதிகாரி ச.கா. அமீர் பாட்சா.

தொட்டாலும் கை மணக்கும், சொன்னாலும் வாய் மணக்கும் எனப் போற்றப்படும் நாகூர்ப் புராணப் பாடல்கள் படிப்போர் நெஞ்சில் பதியக் கூடியவை. 1350 விருத்தப் பாடல்களில் ஒன்று:

மாணிக்க நகரமெனும் வடகடலின் உதித்தாங்கு
சேணிக்கை நாகூராம் தென்கடலின் மறையவெழுஉப்
பாணிக்க எவர் அகனும்ம அற்புதமாம் கதிர்பரப்பி
யாணிக்கை பெறும் ஷாகுல் கமீதென்னும் ஆதித்தன்

“சாகுல் ஹமீது எனும் கதிரவன் – ஆதித்தன் மாணிக்கப்பூர் நகரமான வட கடலில் உதயமாகி நாகூர் எனும் தென்கடலில் மறைந்தது. அந்தச் சூரியன் வலம் வந்த எல்லா இடங்களிலும் அற்புதங்கள் எனும் கதிரைப் பாய்ச்சியது என்பது கருத்து.

நாவலர் 19 ஆம் நூற்றாண்டில் அரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றுவதற்கு பிறர் வேண்டுகோளும் ஆதரவும் ஒரு காரணம். நாகூர் செல்வந்தர் சிக்கந்தர் ராவுத்தரின் விருப்பத்தை ஏற்று நாகூர்ப் புராணத்தைப் புலவர் இயற்றினார். திருநெல்வேலி – பேட்டை, திட்டச்சேரி, இராமநாதபுரம் என பல ஊர் அன்பர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பல நூல்களை எழுதினார். அது தனி ஆய்வுக்குரியது.

குலாம் காதிறு நாவலர் இயற்றிய ‘மதுரைக் கோவை’ அவரை இரங்கூன் நகருக்கு ஈர்த்துச் சென்றது. அந்நகரில் வாழ்ந்த மதுரைப் பிள்ளை ‘ராய் பஹதூர்’ பட்டம் பெற்றவர். இரங்கூனில் அந்தக் கோவையை அரங்கேற்றுவதற்காக நாவலரை அழைத்து உரிய சிறப்புகளைச் செய்தார் மதுரைப் பிள்ளை.

நாவலரின் படைப்புகள் அனைத்தும் விரிவாக ஆராயத் தக்கவை.

புலவராற்றுப்படை

குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படை 220 அடிகளைக் கொண்ட இனிய படைப்பு.
தமிழ் இலக்கியத்தில் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுண்டு. அவற்றுள் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்துதல்’ அல்லது ‘வழிப்படுத்துதல்’ என்ற பொருளையுடையது.

புலவராற்றுப்படையை டாக்டர் உவைஸ் 1968 நவம்பரில் மறுபதிப்பாக இலங்கையில் வெளியிட்டார்.

“இவ்வாற்றுப்படை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதாயினும், பழங்கால ஆற்றுப்படைகளைப் போல் சொல்நயம், பொருள்நயம், அமைந்துள்ளது. இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக் குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப்படையில் அமைக்காமல் பாடியிருப்பாரேயானால் இவ்வாற்றுப் படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே படிப்போர் எண்ணுவர். நடையும் பெரும்பாலும் சங்க கால ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சுவை, பொருட் செறிவு பொதிந்த இப்புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது” என்று முன்னுரையில் எழுதியுள்ளார் ம. மு. உவைஸ்

புலவராற்றுப்படை குறித்த அவருடைய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி ‘எந்திர ஊர்தியில் மதுரையை விரைவில் சென்றடையலாம் என்ற குலாம் காதிறு நாவலர் தாம் சந்தித்த புலவருக்குக் கூறி உள்ளார்.

இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளும். காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது. அங்ஙனம் ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற மிக்க புகை குழலின் வாயில் சுழலுவதைக் கொள்ளுகின்றது. எந்திர ஊர்தியின் தொடுக்கப்பட்ட வண்டில்கள் மரவட்டையினது நடையைப் போன்று செல்கின்றன. அத்தகைய வண்டில்கள் பல எந்திர ஊர்தியில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வண்டில்கள் பல நிரையாய் அமைந்துள்ளன. நீண்டு உள்ளன. அத்தகைய எந்திர ஊர்தியிலே ஏறிச் செல்க என தோழமை பூண்ட புலவருக்குக் கூறப்படுகிறது. இங்கே எந்திர ஊர்தி என்றது புகைவண்டியை. ஓர் ஆற்றுப்படையில் புகைவண்டி வருணிக்கப்பட்டுள்ளமை முதல் தடவையேயாகும். அந்தப் புகை வண்டியை நாகூர் குலாம் காதிறு நாவலர் பின்வருமாறு அற்புதமாகப் பாடி உள்ளார்.

உருமுறுமோ டுறலொழியின்
இருபுறனும் இருப்புருளை
நான்குருளைக் கான்குழுமும்
வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்
ஒலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
செல்பாண்டில் பல்கொத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையின்
எந்திர வூர்தி…

புகைவண்டியை வருணித்த ஆசிரியர் அந்தப் புகைவண்டியில் ஏறிச் சென்றால் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வது மட்டுமன்றி காட்சிகள் பலவற்றையும் காணக் கூடியதாக இருக்கும் என்கிறார். அங்ஙனம் புகைவண்டியில் சென்றால் அலங்காரமான பல காட்சிகளைக் காணலாம் என்று கூறுகிறார். அங்கே மக்கள் ஏறி இறங்கும் இடங்கள் பல உள்ளன. அத்தகைய இடங்களிலெல்லாம் அமுதம் போன்ற சுவைமிக்க உணவு வகைகளைப் பெறுவீர். இந்த நீண்ட பயணத்தை ஒரே நாளில் முடிக்கலாம் என ஆலோசனை வழங்கி உள்ளார்.

அந்தமில் காட்சி அணிபல காண்பிர்
வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்
ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்
பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுற செலவின்
மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்
சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்
நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்”

முரண்பாடுகள்?

“அறபில் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ்மொழி கண்டு ’அற்புத தமிழ் அகராதி’ ஒன்றை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளார். என்று டாக்டர் உவைஸ் தமது ஆய்வுக் குறிப்பில் கூறியுள்ளார்.

“அப்துற் றஹீமும ஆர்.பி. எம். கனியும் நாவலர் அறபு – தமிழ் அகராதியை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில்  அறபு – தமிழ் அகராதி எழுதியவர். ஹக்கீம் பா. முஹம்மது அப்துல்லா சாகிபு. நாவலரும், மவுலவி ஹாஜி குலாம் றசூல் சாஹிபும் இந்நூலைப் பார்வையிட்டுள்ளனர்”. என்று தமிழ்ப் பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர் தமது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

பிறரால் இயற்றப்பட்ட சில நூல்கள் நாவலர் எழுதியதாகத் தவறுதலாகச் சொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் “குலாம் காதிறு நாவலர் வரலாற்றில் சில முரண்பாடுகள்” என்ற கட்டுரையில் கூறுகிறார். பகுதாத்க் கலம்பகம், மதீனா கலம்பகம், பத்ஹுல் மிஸ்ர் பஹன்ஷா, வசன காவியம், மக்கா கோவை, தறீக்குல் ஜன்னா உரை ஆகியவற்றை அகமது மரைக்காயர் பட்டியலிடுகிறார்.

இவை முரண்பாடுகள் தாமா என்பதை ஆய்வாளர்களும் வாரிசுகளும் முடிவு செய்வது அவசியம்.

தமிழுக்குத் தாய்

பத்திரிகையாளர், இலக்கியப் படைப்பாளர், பாவலர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வர் குலாம் காதிறு நாவலர் சந்தித்த எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் அதிகம். ‘வித்தியா விசாரிணி’ இதழை எதிர்த்த பத்திரிகையாளர்கள் அவருடைய திறனைப் பாராட்டத் தவறவில்லை. சுதேச மித்திரன் போன்ற நாளிதழ்கள் நாவலரின் நூல்களைப் பாராட்டி விமர்சனம் எழுதின.

நாவலர் இயற்றிய பிரபந்த திரட்டு நூலை குறை கூறியவர்கள், அதனைப் ‘பிரபந்தத் திருட்டு’, ‘பிரபந்த இருட்டு’, ‘பிரபந்த குருட்டு’, ‘மருட்டு’ என்றெல்லாம் இழித்தும் பழித்தும் கூறியதுண்டு. அதனால் அவருடைய பணி தொய்வுறவில்லை.

அவருடைய ‘திருமணி மாலை வசனம் பார்க்க விசனம்’ என்று செவத்த மரைக்காயர் எழுதினார். ‘பெரியார் கருத்தறியா பேதை குலாம் காதிறு’ என சாற்றுகவி வரைந்தார், சின்ன வாப்பு மரைக்காயர்.

பேதையல்ல, தாம் ஒரு மேதை என்பதை மெய்ப்பித்தார் நாவலர். அவருக்குரிய அங்கீகாரத்தை தமிழுலகம் வழங்கிச் சிறப்பித்தது. திருச்சி தமிழ் ஆசிரியர், இலக்கணக் கோடரி, அ.கா. பிச்சை இப்றாஹீம், புலவர் நாவலரின் நண்பரானார். ஆசானாகவும், ஏற்றுக் கொண்டார். பதிப்புத் துறையில் ஒத்துழைப்பு நல்கினார்.

தண்டமிழுக்குத் தாயாகி பல புராணம்
  தகைய பலபிரபந்தம் வசன நூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பத் தந்திட்டு
  எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச் சங்ப் புலவராற்றுப்
  படையோதிப் பெரிய விரல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
  மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை

தமிழுக்குத் தாய் என போற்றப்பட்ட நாவலர் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

அவர் அளவுக்கு மற்ற படைப்பாளர்களின் நூல்களுக்கு அணிந்துரையான ‘சாத்துகவி’ (சாற்றுகவி) வழங்கிய புலவர்கள் அந்நாளில் இல்லை. நாவலரிடம் சாத்துகவி பெற்ற புலவர் அணி ஒரு பெரும் பட்டியல்.

திருச்சி பிச்சை இபுறாஹீம் புலவர், நாகூர் நூலாசிரியர்களான      மு. செவத்த மரைக்காயர், இ. பஷீர் முகியித்தீன், முகம்மது நயினா மரைக்காயர், செ. குலாம் முகமது மரைக்காயர், மீ. அல்லி மரைக்காயர், நாகபட்டினம், வெ.நாராயண சுவாமிப் பிள்ளை ஆகியோர் மட்டுமல்லர். வேளாங்கன்னி, அதிராம்பட்டணம், ஆவுடையார் பட்டணம், மகுமூது பந்தரான பரங்கிப்பேட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் புலவர்களும் நாவலரை நாடி வந்து சாத்துகவி பெற்றுச் சென்றுள்ளனர்.

நாகூர் தர்கா ஆஸ்தான வித்துவான், வித்வசிரோன் மணி கல்வி கேள்விகளில் தனக்கு நிகரில்லாதவர், வலது கையில் இலக்கணம் எனும் ‘வாளும்’ இடது கையில் செய்யுள் எனும் கொடியும் பிடித்து தமிழ்க் குதிரையில் வலம் வருபவர் என சிலாகிக்கப்பட்டவர் என்று எழுதுகிறார் ச.கா. அமீர் பாட்சா.

அஞ்சலி

திருக்குர்ஆனின் முப்பது அத்தியாயங்களுக்கும் உரை எழுத வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் நாவலர். அந்த நாட்டம்  நிறைவேறுமுன் 1908 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று இறையழைப்பை ஏற்று உலகைத் துறந்தார். (ஜனவரி 28 என்றும் சில நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்).

குலாம் காதிறு நாவலர் – மகுதூம் கனி அம்மாள் தம்பதியருக்கு மக்கள் பேறு இல்லாததால் துணைவியின் வேண்டுகோளின்படி ஆமினா அம்மையாரை மணந்து கொண்டார். நாவலரின் 74 ஆம் வயதில் ஆரிபு பிறந்தார். பிள்ளையைப் பெற்றெடுத்த பத்தாம் நாள் அந்த அன்னை உயிர் துறந்தார். மறு ஆண்டில் நாவலர் காலமானார்.

அவருடைய மறைவு தமிழுலகை உலுக்கியது. இதழியல் முன்னோடியான நாவலரின் மறைவுக்கு சுதேச மித்திரன், மறைமலை அடிகளின் ஞான சாகரம், காரை முகம்மது சமதானி, இலங்கை முஸ்லிம் நேசன் உள்ளிட்ட இதழ்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தின.

சந்ததி

புதல்வர் வா.கு. ஆரிபு நாவலர் தந்தை வழியில் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். தந்தையார் மீது கையறுநிலைக் கவிதைகள் பாடினார். அதுவே அவருடைய முதல் நூல். நாவலரைப் போன்றே அவரும் நாகூர் தர்கா மகாவித்துவானாக விளங்கினார்.

நாகூர் நாயகம் மீது 1946 ஆம் பிள்ளை தமிழ் இயற்றி வெளியிட்டார். பதிகம், கீர்த்தனை, முதலான பல்துறைக் கவிதைகளைப் படைத்தார். ஆரிபு நாவலரின் மீரான் சாகிப் முனாஜாத்து ரத்தின மாலை 1971 இல் வெளியிடப்பட்டது. உரைநடை நூல்களையும் அவர் எழுதி வந்தார். காட்டுவா சாகிப் வலி (என்கிற ஷாஹா பாவா பதுறுத்தீன் சாகிப் வலியுல்லாஹ்) அவர்களின் காரண சரித்திரம் 1960 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. 9 அத்தியாயங்களைக் கொண்ட சுவையான நூல் அது.

சென்னை, புதுக் கல்லூரி வளாகத்தில் 1974 இல் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் ஆரிபு நாவலர் சிறப்பிக்கப்பட்டார். ஆரவாரமின்றி அடக்கமாக இலக்கியப் பணியாற்றி வந்த அவர், 1976 ஆம் ஆண்டில் நாகூரில் உயிர் துறந்தார்.

ஆரிபு நாவலரின் புதல்வர், குலாம் ஹுசைன் நாவலர் இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இயற்றிய சின்ன எஜமான் முனாஜாத்து, இரத்தின மாலை 2003 ஆம் ஆண்டு நாகூரில் வெளியிடப்பட்டது.

நாட்டுடமை

குலாம் காதிறு நாவலரின் படைப்புகள் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம். அவர் மொழிபெயர்த்த உமறு பாஷா யுத்த சரித்திரம் 2001 இல் மறுபதிப்பாக வெளிவந்தது. (கல்தச்சன் பதிப்பம் அதனை வெளியிட்டது).

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய, இதழியல் முன்னோடிகளின் அணியில் முன்னணி இடம் வகிப்பவர் நாகூர் நாவலரே ஆவார். அவர் ‘வித்தியா விசாரிணி’ இதழைத் தொடங்கிய 1888 ஆம் ஆண்டில் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், இலங்கையிலும் சில இதழ்கள் இயங்கி வந்தன.

நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரரான நாவலர், செம்மொழி வள்ளல், பன்மொழிச் செல்வர், படைப்பிலக்கிய இமயம், தமிழக அரசு, குலாம் காதிறு நாவலரின் சந்ததியினருக்கு ஆறு லட்ச ரூபாய் அன்பளிப்பு வழங்கி அவருடைய ஒட்டுமொத்த இலக்கியப் படைப்புகளையும் நாட்டுடமையாக்கியுள்ளது. நாட்டுக்கும் நமது மொழிக்கும் கிடைத்த நற்பேறு.

நன்றி : சமநிலைச் சமுதாயம் – நவம்பர் 2007
http://www.mudukulathur.com/?p=8512

 

நாவலருக்கு பாவலரின் பாராட்டு


1896 – ஆம் ஆண்டு நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் “ஆரிபு நாயகம்” என்ற நூல் யாழ்ப்பாணத்தில் ‘நூல் வெளியீடு’ செய்யப்பட்டது. அந்நூலுக்கு வாழ்த்துரையை இலங்கை பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.

அந்த வாழ்த்துரை இதுதான் :

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
மாசு மதுரமாய் அமைந்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னும் நற்பெயர் கொண்டோன்

பிகு: நாகூர் குலாம் காதிறு நாவலரின் அரபு மொழிப் புலமைக்கு ஆசானாக விளங்கியவர்கள் இருவர்.

1. நாகூர் நூருத்தீன் சாகிபு காமில்
2. நாகூர் முகியுத்தீன் பக்கீர் சாகிப் காமில்

 

மறைமலை அடிகளாரின் இரங்கற்பா


maraimalai_stamp

நாகூர் குலாம் காதிர் நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் ஒரு பாடல் பாடினார்.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்
நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

Maraimalai Adikal was born on 15 July 1876 at Nagapattinam in Tamil Nadu. He studied Tamil under Ve. Narayanasamy Pillai. He had his schooling in the Wesleyan Christian High School. He enjoyed the friendship of Sundaram Pillai, author of Manonmaniyam. He settled in Madras thanks to the efforts of Sandamarutam Somasundara Nayakar. He joined the Madras Christian College as a Tamil teacher. He founded the Saiva Siddhanta Maha Samajam.

He edited ‘Gnanasagaram’  in which appeared Kokilambal’s letters, and Kumudavalli. He edited the English journal, ‘Oriental Mystic Myna.’ He was a research scholar proficient in Tamil, Sanskrit and English. He translated Kalidasa’s Sakuntalai into Tamil. He advocated purism in Tamil and changed his very name ‘Vedachalam’ into ‘Maraimalai Adikal’.  He later renounced family life. Contrary to practice, he began writing a commentary on the Thiruvasagam. His famous research work is Manikkavacakarin varalarum kalamum. He passed away on 15 September 1950.

 

குலாம் காதிறு நாவலர்


e0ae95e0af81e0aeb2e0aebee0aeaee0af8d-e0ae95e0aebee0aea4e0aebfe0aeb1e0af81-e0aea8e0aebee0aeb5e0aeb2e0aeb0e0af8d      நாவலர் நூல்கள் நாட்டுடமை

புலமைத்திரு குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரில் 1833 -ல் பிறந்தார். தந்தையார் பெயர் வாப்பு ராவுத்தர். நாவலரவர்கள் தமிழ், ஆங்கிலம், அரபு மொழிகளில் அறிவு நிரம்பியவர். இயற்றமிழ் ஆசிரியர் வே.நாராயணசாமி பிள்ளையவர்களிடமும், பின்னர் புலவர் ஏறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் தமிழ் கற்றார். மதுரையில் தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர் தமிழ்ச்சங்கம் அமைத்தபோது இவர் பணியையும் அவர் பெற்றார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்படை என்னும் நூலை எழுதி சங்கத்திலேயே அரங்கேற்றினார். மலேயா, இலங்கை சென்று தமிழும் இஸ்லாமும் பரப்பினார். யாழ்பாணத்திலும் இவர்தம் நூலொன்று அரங்கேறியது. நாகையில் சிறந்த வணிகராக இருந்த மதுரைப்பிள்ளை கூட்டிய பெரும்மன்றத்தில் ‘நாவலர்’ பட்டம் வழங்கப் பெற்றார். பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் இவர்தம் இலக்கண, இலக்கியப் புலமையைப் போற்றி எழுதினார். ‘புலவர் குலமணி’ என்று பாராட்டப் பெற்றார்.

இவர் எழுதிய நூல்கள் 24. அவற்றுள் ‘பொருந்த இலக்கணம்’ முதலிய இலக்கண நூல்களும், இலக்கியங்களும், உரைகளும், உரை நடை ஆக்க நூல்களும், சமய நூல்களாகச் சிற்றிலக்கியங்களும் உள்ளன.

நாகூர் ஆண்டகை வரலாறாக எழுதப்பட்ட ‘கன்சூல் கறாமத்து’ குறிப்பிடத்தக்க பெருநூல். அது 131 அத்தியாயங்களும், 576 பக்க அளவும் கொண்ட நூல். நாகூர் ஆண்டகை வரலாற்றை நிறைவாகக் கூறுவது அந்நூல்.

‘புலவராற்றுப்படை’ என்னும் அவர்தம் நூல் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் ஒரு பாட்டு போன்ற சிறப்புடையது. இவர் எழுதிய ‘அரபுத்-தமிழ் அகராதி’ குறில்லத்தக்க தமிழ்ப்பணியாகும்.

நாகூர் முத்துப் புலவர் இயல்பான ஓட்டத்தில் செய்யுள் இயற்றும் புலமையாளர். தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர்பால் பேரன்பு பூண்டு அவரால் போற்றப் பெற்றவர். அவர் மேல் 51 பாடல்களும் பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார்.

கோவை இளஞ்சேரன் (‘நாகப்பட்டினம்’ எனும் வரலாற்று நூலிலிருந்து)

 

குலாம் காதிறு நாவலர்

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் – அப்துற் றஹீம்

1896ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வண்ணைமா நகரில் ஆறுமுகநாவலர்தம் மருகர் பொன்னம்பலம் பிள்ளையின் கலைவலக் குழுவிடை ஒரு முஸ்லிம் புலவர் தாம் இயற்றிய புராணத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளார். அவரைச் சூழ புலவர் பெருமக்கள் வீற்றிருந்து அவருடைய புராணச் சொற்பொழிவைச் செவி சாய்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அக்குழுவின் ஒரு மூலையிலிருந்து அப்புலவரைத் தோற்கடிக்க வேண்டுமெனும் கெடுமதி கொண்ட பண்டிதக் குறும்பர் ஒருவரின் வாயிலிருந்தும் “நிறுத்துமையா!” என்ற சொல் முழங்குகிறது. அதைக் கேட்டு அப்புலவர் திடுக்குறவோ, துணுக்குறவோ செய்யாது, “நாவல நாட்டீர்! செய்யுள் வழக்கிலே நிறுத்தப் புள்ளியும் உண்டென்பது உமது சொந்த இலக்கணமோ? பொத்துமையா வாயினை!” என்று வாயாப்பு அறைந்தார். அப்பண்டிதக் குறும்பரின் வாய் அத்துடன் தானாகவே இறுகப் பொத்திக் கொண்டது.

அதன்பின் தம் புராணத்தைத் தங்கு தடையின்றி விரிவுரை நிகழ்த்தி வரும்பொழுது’மாதுவளை வனங்கள் சூழ்ந்த மதினாவின் ரௌலா வந்தார்’
என்று புலவர் பாடியதும், ஒருவர் எழுந்து ,”நாகூர்ப் புலவரே! மன்னிக்க வேண்டும். மாதுவளை என்றால் மாதர்களின் யோனித்துளையோ?” என்று கடாவினார். மாதளை என்பதனை மாதுவளை என்று தாம் பயன்படுத்தி இருப்பதை அல்லவா அப்புலவர் இடித்துரைக்கின்றார் என்பதை நன்கு விளங்கிக் கொண்ட புராணப் புலவர் அவரை நோக்கி புன்முறுவல் பூத்த வண்ணம், “புலவீர்! அமரும்! கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற உற்றகலை மடந்தை உரையினும் பெரியீரோ நீர்! உமது இலக்கணம் இதற்கு விளக்கம் சொல்லவில்லையோ ? கேளுமையா நாவல நாட்டுப் புலவரே! மாதுளங்கம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகும். அது தமிழில் வரும்பொழுது திரிந்து மாதுவளை ஆயிற்று. செய்யுள் இடம் நோக்கி மாதுளங்கம், மாதுவளை, மாதளை என நிற்கும். மாதுவளை என்றால் நீர் கூறுவது போன்று ஆபாசப் பொருளன்று. அவ்விதம் நான் என் வாயெடுத்தும் கூற மாட்டேன். அப்படியெனில் அதன் பொருள்தான் என்னவென்று வினவுகின்றீரா?கூறுகின்றேன் கேளும் !

மா-பெருமை தங்கிய, துவளும் – நாவொடு துவண்டு ரசனை தரும், அங்கம் – உள் அமைப்பை உடையது. இது பூ, பிஞ்சு, காய், பழம், சுளை ஆகியவற்றோடு சேரும்பொழுது மா, துவள், அம், பூ என்பது மாதுவளம்பூ என்றும் மா, துவள், அம், பிஞ்சு என்பது மாதுவளும் பிஞ்சு என்றும், மா, துவள், அம், காய் என்பது மாதுவளம் காய் என்றும், மா, துவள், அம், சுளை என்பது மாதுவளஞ்சுளை என்றும் புணர்ந்து நிற்கும். இத்துணை சிறு புணர்தல் இலக்கணமேனும் நீர் அறியீரோ?” என்ரு விளக்கம் பகர்ந்து இடித்துரைத்தார். வினவிய புலவர் மீண்டும் வாயைத் திறக்கவில்லை.

அதன்பின் புலவர்,

‘விடிவெள்ளி மதினாபுக்கார் வியன்குயில் கூவிற்றன்றே’ என்று ஈற்றடியாக உள்ள செய்யுளைப் பாடி விரிவுரை நிகழ்த்தியதும் ஒரு பெண் எழுந்து, “நாகூர்ப் புலவீர்! சற்று நிற்க!” என்றாள். “என்னை அம்மணீ?” என்று வினவினார் புலவர். “புலவீர்! நீர் வியன்குயில் என்று கூறியிருப்பதின் காரணம்தான் என்ன? குயில் என்பது மெல்லிய பறவை ஆயிற்றே. அதனை வீறுள்ள பறவை யென்றோ, வியப்பிற்குரிய பறவை யென்றோ நீர் கூறக் காரணம்தான் என்ன?” என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளை விடுத்தாள் அவள். உடனே புலவர், “அம்மணீ! சற்றுப் பொறும்! கூறுகின்றேன். குயிலுக்கு முட்டையிடத் தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. எனவேதான் அதனை வியப்பிற்குரிய பறவை என்ற பொருளில் வியன்குயில் என்று கூறினேன். “அப்படியானால் அது எவ்வாறு குஞ்சு பொரிக்கும்?” என்று நீர் வினவலாம். அது காக்கையின் கூட்டிற்குச் சென்று முட்டையிட்டு விட்டுப் பறந்து விடும். காக்கை தன் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றும்பொழுது குயில் குஞ்சையும் தன் குஞ்சென நினைத்துக் கொண்டு தீனி தீற்றும். அப்பொழுது காக்கைக் குஞ்சுகள் கா, கா என்று கத்தும்பொழுது, குயில் குஞ்சு கீ,கீ என்று கத்துவதைக் கேட்டதும் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்து, காக்கை அக்குயில் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றாது அவற்றை தன் சொண்டால் கொத்தும். எனினும் அக்குயில் குஞ்சு சற்றேனும் அஞ்சாது கீ, கீ என்று கத்திக் கொண்டு அக்காக்கையை வீறுடன் எதிர்த்துச் சண்டையிடும். எனவேதான் அதனை வீறுள்ள பறவை என்னும் பொருளில் வியன்குயில் என்று குறிப்பிட்டேன் ” என்றார். அவருடைய இவ்விளக்கத்தைக் கேட்டதும் அப்பெண்மணிக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. “துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து யாழ்ப்பாணக்கரை வந்தீர்” என்று கூறி அவரை வாயாரப் பாராட்டினாள்.

இறுதியாக புராண அரங்கேற்றமும் முடிவுற்றது. புலவர், கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தகுந்த வாயாப்புக் கொடுத்துப் புராண விரிவுரையை முடித்து வாகை சூடினார். ஆறுமுக நாவலரைத் தவிர்த்து வேறெவரையும் ‘நாவலர்’ என்று அழைக்க விரும்பாத யாழ்ப்பாணர்கள், அப்புலவருக்கு ‘நாவலர்’ என்று சூட்டப் பெற்ற சிறப்புப் பெயரை எடுத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கட்டிப் பற்பல இடக்குகளும், இடையூறுகளும் விளைவித்தனர். இறுதியில் அவருடைய கல்வி மேதமையின் முன் தலை சாய்த்தனர். வளஞ் சுளைகளால் மாலை கோத்து அவருக்கு அணிவித்து, பரிசில் பல நல்கி இரண்டாயிரம் ரூபாயுள்ள பொன்முடிப்பும் அருளி, “நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் , நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் , நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் ” என்று மும்முறை முழங்கி அவரின் ‘நாவலர்’ பட்டத்தை உறுதிப்படுத்தி , உலகிற்கு பறை அறைந்தனர்.

அவர் பாடிய ‘ஆரிபு நாயகம்’ என்னும் சீரிய நூலுக்கும் பின்வருமாறு பாயிரம் நல்கி , அவரைப் பொன்னம்பலம் பிள்ளை கௌரவித்தார்:

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
மாசு மதுரமாய் அமைத்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டோன்.

இதைக் கண்டு பெருமிதமுற்ற யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம்களும் ‘முஸ்லிம் நேசன்’ ஆசிரியர் சுலைமான் லெப்பையின் தலைமையில் பாராட்டு விழா நடத்தி அவருக்குப் பரிசில் பல நல்கி, அவரைப் பெருமைப் படுத்தினர். அவ்விதப் பெருமை வாய்ந்த பெரும்புலவர் யார் ? அவர்தாம் நாகூர் தந்த மேதகு புலவர் குலாம்காதிறு நாவலராவார்.

குலாம்காதிறு நாவலர் புலவர் கோட்டை என்று புகழ்ப் பெயர் பெற்றிருந்த நாகூரில் கி.பி. 1833ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தையார் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். அவரின் முன்னோர் சேது மண்டலத்திலிருந்து அங்கு வந்தவர் என்று கூறுவர். ஆனால் அம் மண்டலத்தில் எவ்வூரில் அவர்தம் மூதாதையர் வாழ்ந்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடைத்தில. ஏறக்குறைய நூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் அவரின் மூதாதையர் நாகூரில் குடியேறி இருக்கலாமென்று உய்த்துணர இடமுள்ளது.

அவரின் தந்தையார் மருத்துவத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பெரும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். அவருக்கு நாகூரில் காசுக்கடை ஒன்றும் இருந்தது. நாவலரின் பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிபுக்கு இரங்கூன் சோலியா தெருவில் பெரும் மாளிகை வாணிபம் இருந்தது. எனவே அவரின் குடும்பம் வளவாழ்வு பெற்றே வாழ்ந்தது என்று கூறலாம்.

பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தருக்கு இரண்டு ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். அவர்களில் ஒருவருக்கு குலாம்காதிறு என்னும் அழகுசால் திருப்பெயரிட்டு வளர்த்த தாய் தந்தையர், அவருக்கு ஏழு வயது நிறைவுற்றதும் ‘கலை பயிற்றாது காதலர்க்கு மாநிதி…கொலை வாளீவதும்…மலையினோரத்தில் வைப்பதும் மானுமே’ என்ற நெறிமுறைக் குற்றம் வராது காக்க அவரைப் பள்ளிக்கு அனுப்பி திருக்குர்ஆனையும் மற்றும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்ததும் ‘ஆலவிருஷ அடிபாரமும்,’ ‘மனைத்திண்ணை உறைவிட’முமே கல்வி பயிற்றும் பள்ளிகளாக விளங்கிய தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றிற்கு தமிழ்க் கல்வி பயில அனுப்பி வைத்தனர். அங்கே குலாம்காதிறு எழுத்துச் சுவடி, எண் சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு முதலான நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது பன்னிரண்டு.

அவரின் தந்தையார் தம்முடைய தொண்ணூறாவது வயதில் இறந்ததும் அவரை கவனிப்பார் யாருமில்லாது போய்விட்டது. எனவே அவர் கலை பயிலாது வீணே அலையலுற்றார். காசுக்கடை நிலையும் குலையலாயிற்று. அதைக் கண்டு பெரிதும் வருந்திய அவருடைய பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிபு ‘கைம்பெண்சாதி பிள்ளை கழிசடை’ என்ற பழமொழிக்கேற்ப குலாம்காதிறின் வாழ்க்கை ஆகிவிடாமல் காத்தார். அவரைத் தம் கைப்பிடியில் கொண்டு அவரை அங்கிங்கலையவிடாமல் தொழிலொன்று நியமித்திருத்தி அங்குக் காலை மாலை சென்று கல்வி பயிற்றினார். நன்னூல் முதல் மற்ற இலக்கண இலக்கிய நூல்களையும் அவருக்குப் போதித்தார். ஆனால் விதி செய்த சதி குலாம்காதிறு இருபதாட்டைப் பருவத்தை எய்தப் பெறுவதற்கு முன் இறைவன் பக்கீர் தம்பி சாகிபைத் தன்பால் அழைத்துக் கொண்டான். தம் பெரிய தந்தையார் தமக்குச் செய்த நன்றியினை குலாம்காதிறு மறக்கவே இல்லை. அவர் பிற்காலத்தில் பெரும் நாவலராகித் தம்முடைய அறுபதாவது வயதில் ‘நாகூர்ப் புராணம்’ என்னும் ஒரு காவியம் இயற்றி அச்சிட்டபொழுது அதில் ஒரு செய்யுளில் தம் பெரிய தந்தையின் அரும் உதவியையும் நினைவு கூர்ந்து அவரின் பதத்துணையையும் நாடுகின்றார். அச்செய்யுள் வருமாறு:

முந்தை வழியின் முறைசேர்வழி என்னை காட்டிச்
சிந்தை பொலிய அருந்தெண்டமிழ் தேக்கியிட்டார்
தந்தை முன் தோன்றல் தகைசால் பக்கீர்த் தம்பி யென்பார்
எந்தையவர்தம் பதமினை யீர்ங்கழல் ஏத்துவாமால்

பின்னர் குலாம்காதிறுக்கு கலையார்வம் அதிகரித்தது. பன்னூல்களை விலைகொடுத்து வாங்கியும் தம் தந்தைமார் இருவரும் சேமித்து வைத்திருந்த பெருநூல்கள் பலவற்றையும் கவனித்துக் கற்று வந்தார். அப்பொழுது நாகூரில் பெரும் புகழ்பெற்ற தமிழ்வல்ல பண்டிதராயிருந்த நாராயணசுவாமி என்பார் ஒரு புத்தகத் தொழில் நிலையம் வைத்திருந்தார். அந்நிலையத்தி/ர்கு குலாம்காதிறும் அடிக்கடிச் சென்று வருவார். குலாம்காதிரின் தந்தையாருக்கு நாராயணசுவாமி தோழராகையால் அவர் குலாம் காதிறைத் தம் மகனேபோற் கருதி கல்வி பயிற்றினார். அவரிடம் பலரும் பாடம் கேட்டு வந்தனர் என்னினும் அவர்களிலெல்லாம் குலாம்காதிறா சிறந்து விளங்கினார். எனவே, ‘குலாம் காதிறு பிற்காலத்தில் தமிழுக்கோர் சரஸ்வதியாம்’ என்று தம் மாணவர்களிடம் அடிக்கடி வியந்து கூறுவார் நாராயண சுவாமிப் பண்டிதர்.

நாராயண சுவாமிப் பண்டிதர் இறந்தபொழுது குலாம் காதிறுக்கு வயது இருபத்தெட்டு இருக்கும். தம் ஆசானின் இறப்பு அவருக்கு அளவற்ற மனவேதனையை அளித்தது.

ஆராய்ந்த சகலகலை அகத்திருத்தி யார் மாட்டும்
போராமற் பொருள் கொடுக்கும் சிலைபோன்ற கலை நாவாய்!
நாராயணப் பெரியோய் ! நற்றமிழ் வாழ் நாவுடையோய்!
ஆராயின் உன்போன்ற, அருந்தமிழோன் யாண்டுளனோ

என்பதுபோன்ற பல சரமகவிகள் பாடிப் புலம்பினார்.

அக்காலத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பேரும் புகழும் எட்டுத்திக்கினும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அவரை அணுகி அவரிடம் சைவசித்தாந்தம், இதிகாசங்கள், இலக்கண இலக்கிய சங்கிரியைகள் ஆகியவற்றையெல்லாம் பயின்று தேறினார். இதனையே மகாமகோபாத்யாய உ.வெ.சாமிநாதையர் தாம் எழுதிய மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் வரலாற்றில், ‘நாகூரில் புகழ் பெற்று விளங்கிய குலாம் காதிறு நாவலர் என்ற முகமதியப் புலவர் ஒருவரும் நமது மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குலாம் காதிறு இவ்வாறு பல பெரும் புலவர்களிடமும் சென்று கல்வி பயின்று வந்தது இலைமறை காய்போல் இருந்தாலும் அவர் விரைவில் பெரும் புலமை பெற்று விட்டதாலும் அவர்மீது அழுக்காறுற்ற பலர், ‘மருவில்லா மலரைப் போலும் மதியில்லான் வாழ்க்கை போலும் திருவில்லா மனையைப் போலும் தெளிவில்லாக கண்ணைப் போலும் தருவில்லா நிலங்கள் போலும் தனமில்லா மங்கை போலும் குருவில்லான் கற்ற கல்வி குறையன்றி நிறைபாடுண்டோ?’ என்ற கருத்தை மனதிற்கொண்டு அவரை ‘தானாப் புலவர்’ என்று எண்ணி இருந்தனர். வேற்றூர்ப் புலவர் ஒருவர் அவரைக் காண வந்தபொழுது அவரை நோக்கி, ‘ தங்களைப் பலர் தானாப் புலவர் என்று அழைக்கின்றனரே. அதன் காரணம் என்ன்?’ என்று வினவியக்கால், ‘தமிழ் மொழியில் த என்ற எழுத்து ஆயிரம் என்று பொருள்படும். எனவே அவர்கள் என்னை ஆயிரம் புலவர்களுக்குத் தலைமைப் புலவன்’ என்று அழைக்கின்றனர் என்று பதிலிறுத்தார் குலாம் காதிறு.

அவர் துவக்கத்தில் சில்லரையாகப் பல தனிக்கவிதைகள், கீர்த்தனைகளைப் பாடிவந்தார். அதன் பின் 109 செய்யுட்களடங்கிய பிரபந்தத் திரட்டு என்னும் நூலைப் பாடினார். அதனைப் பலர் குறை கூறினர். அவருடைய அப் பிரபந்தத் திரட்டை பிரபந்தத் திருட்டு என்றும், பிரபந்தக் குருட்டு என்றும் பிரபந்த இருட்டு என்றும், பிரபந்த மருட்டு என்றும் இழித்துரைத்தனர். எனினும் குலாம்காதிறு என்னும் அப்புலவர் பெருமான் அதனைச் சிறிதேனும் பொருட்படுத்தாது சமூகசேவையையே தம்முடைய தலையாய பணியாகக் கொண்டு செயலாற்றி வந்தார்.

இதன் நடுவே அவர் பினாங்கு சென்று, ‘வித்தியா விசாரிணி’ என்ற பெயருடன் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார். அது முழுவதிலும் இலக்கண இலக்கியங்களும் மார்க்க வினாவிடைகளும், உலக நிகழ்ச்சி பற்றிய விவரங்களும் அடங்கி இருந்தன. அங்கும் அவருடைய விரோதிகள் விட்டார்களில்லை. இலங்கையில் நடந்து வந்த ‘முஸ்லீம் நேசன்’ என்ற பத்திரிக்கைக்கும் ‘வித்தியா விசாரிணிக்கும் பலத்த வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இறுதியில் குலாம்காதிறே வாகை சூடினார்.

இதன்பின்னர் குலாம்காதிறு முகம்மதெங்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் மீது ‘மும்மணிக் கோவையும், நாகூரில் அடங்கப்பெற்றிருக்கும் ஆண்டகையாம் ஷாகுல் ஹமீது நாயகத்தின் மீது ‘நாகூர்கலம்பக’மும் பாடினார்.

இக்காலை, இரங்கூனில் பெருந்திருவும், பெரும்புகழும் பெற்று வாழ்ந்து வந்த மதுரைப் பிள்ளை என்பாருக்கு அரசாங்கத்தாரால் ‘ராய பஹதூர்’ பட்டம் நல்கப் பெற்றதும் அவரை வாழ்த்தி ‘மதுரைக் கோவை’ என்ற பெயருடன் ஒரு கோவை இயற்றி அவருக்கு அன்பளிப்பு செய்தார். அதைப் பெற்றுப் படித்துப் பெரிதும் பரவசமுற்ற மதுரைப் பிள்ளை, குலாம்காதிறை இரங்கூனுக்கு வரவழைத்து, பெரும் சபைகூட்டி, அவர் பாடிய அக்கோவையினை அவர் வாயாலேயே அரங்கேற்றக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். அவருக்கு பொற்பதக்கமும், பொற்கடிகாரமும், ரூபாய் ஆயிரம் கொண்ட பணமுடிப்பும், உடைகளும் பரிசிலாக நல்கினார். அதன்பின் அவரைத் தம் தாயகமான சென்னை வேப்பேரிக்கு அழைத்துவந்து அவருக்கு நாவலர்பட்டமும் பொற்றகட்டில் பொறித்து வழங்கி கௌரவித்தார். இது முதல் குலாம்காதிறு நாவலர், குலாம் காதிறு நாவலர் என்று அவரின் பெயர் குவலயத்தின் எட்டுக் கோணங்களிலும் எதிரொலிக்கத் துவங்கி விட்டது. வெறும் குலாம்காதிறாய் இருந்தவர், குலாம்காதிறு நாவலராய் ஆகிவிட்டதைக்கண்டு அவருடைய எதிரிகள் பெரிதும் புழுக்கமுற்றனர். முஸ்லிமாகிய அவர் முஸ்லிமல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடியிருப்பது இஸ்லாத்த்ற்குப் பொருந்துமா?’ என்று கூக்குரலிட்டனர். ‘அவர் முன்னர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேரில் பாடிய மும்மணிக் கோவையில் நபிகள் நாயகம் அவர்களைப் பெருமான் (பெருமையிற் சிறந்தோர்) என்றும், நாகூர் கலம்பகத்தில் ஷாகுல் ஹமீது ஆண்டகையைப் பெருமான் என்றும், மதுரைக் கோவையில் பாட்டுடைத் தலைவராம் மதுரைப் பிள்ளையைப் பெருமான் என்றும் கூறியுள்ளாரே. இம் மும் பெருமான்களுள் எப்பெருமான் சிறந்தவர் என்று எங்களுக்கு விளங்கவில்லையே’ என்று எகத்தாளமாய் பேசினர்.

நாவலர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆரிபு நாயகம், நாகூர்ப்புராணம் ஆகிய பெரும் புராணங்களை இயற்றினார். ‘நூருல் அஹ்மதியா’ என்ற அரபு நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆரிபுநாயகப் புராணத்தில் அக்காவியத் தலைவராம் சையிது அகுமதுல் கபீர் ரிபாரி ஆண்டகையின் பதத்துணை வேண்டி அவர் இறைஞ்சும் பாவானது அவரின் கவிதா மேதையை நன்கு பரிமளிக்கச் செய்கின்றது. அதனை கீழே தருகிறேன். படித்துப் பரவசமடைவீர்களாக!

கருமை பயக்கும் ஒருமேகக்
கவிகை நிழற்கீழ் வரும் இறைவர்
பெருமை பயக்கும் பேரர்எனப்
பிறங்கும் அவுலி யாமருள்
அருமை பயக்கும் ஸூல்தானுல்
ஆரிபீன் எம்பெரு மானார்
இருமை பயக்கும் மலர்த்தாட்கள்
இரண்டும் இரண்டு கண்மணியே!

இதுமட்டுமல்லாது அவ்வாண்டகைமீது ‘பதாயிகுக் கலம்பகம்’ என்னும் ஒரு நூலும் அவர் இயற்றி மகிழ்ந்தார்.

நாகூரில் பிரபல மிராசுதாராய் விளன்கிய சிக்கந்தர் ராவுத்தரின் வேண்டுகோளின்படி,

மாணிக்க நகரமெனும் வடகடலி னுதித்தாங்கு
சேணிக்கை நாகூராம் தென்கடலின் மறைய வெழூஉப்
பாணிக்க எவர்அகனும் அற்புதமாம் கதிர்பரப்பி
யாணிக்கை பெறும் ஷாகுல்கமீதென்னும் ஆதித்தன்

அவர்களின் நிர்யாணத்திற்குப்பின் நிகழ்வுற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி ‘நாகூர்ப்புராணம்’ என்னும் நூலை 1350 விருத்தப்பாக்களில் ஆக்கினார். அதில் மலடு தீர்த்த படலத்தில் பற்பல சித்திரக்கவிகளையும் இயற்றித் தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார்.

நாவலனார் செய்ததிரு நாகூர்ப் புராணத்தின்
பாவலனார் சித்திரகவிப் பாக்கட்கு-மாவலனார்
பிச்சையிபு றாகீம் பெரும்புலவன் செய்திட்டான்
உச்சிமேல் வைக்கும் உரை.

அந்நூலின் இறுதியில் அந் நூலின் கொடை நாயகராம் சிக்கந்தர் ராவுத்தர் மீது நாவலர் ஒரு வாழ்த்துப் பதிகமும் பாடினார். அதைக் கண்டு பெரிதும் மகிழ்வுற்ற சிக்கந்தர் ராவுத்தர் அவருக்கு ஆயிரம் ரூபாய் பொன்முடிப்பு வழங்கி அவரை மகிழ்வித்தார்.

இவற்றைத் தவிர நாவலர் நாகூர் தர்கா ஆதீனஸ்தருள் ஒருவரான காஸிம் சையிது முகம்மது பாகிறு சாகிபு அவர்களின் வேண்டுதலின் பேரில் நாகூர் ஆண்டகையின் காரணச் சரித்திரத்தை ‘கன்ஜூல் கறாமத்து’ என்ற பெயருடன் செம்பாக வசன நடையில் சிறப்புடன் எழுதி முடித்தார். அவர் அதில் கையாண்டிருக்கும் வசனநடை வசனநடைகளுக்கோர் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது. அந்தச் சரித்திரக் கோவை முடிவுற்றதும் நாகூர் சாஹிபுமார்கள் அதனை ‘காதர் பக்ஸ்’ என்னும் தர்கா யானையின் மீது வைத்தும் நாவலரை சோடிக் குதிரைகள் பூட்டிய வண்டியில் ஏற்றியும் பவனி வந்தனர். அது மட்டுமல்லாது அவரை நாகூர் தர்கா மகா வித்துவானாகவும் ஆக்கி, ‘ஷமஏ ஜஹான்’ (உலக திபம்) எனும் சிறப்புப் பெயரும் அவருக்குச் சூட்டி ஆண்டுதோறும் நூற்றுப்பதினொன்றே கால் ரூபாயும் ஒரு மூட்டை நெல்லும் ஆண்டகை சமாதியின் சால்வையும் பிரார்த்தனைப் பண்டங்களும் நல்கிக் கௌரவித்தனர்.

இவற்றையன்றி நாவலர் திருமக்காத் திரிபந்தாதி, மதினாக்கலம்பகம், பகுதாதுக் கலம்பகம், பஹனஷா வசன காவியம், ஆரிபுநாயக வசன காவியம் ஆகியவற்றையும் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் என்னும் அன்பர் பேரில், ‘சமுத்திர மாலை’ என்னும் ஒரு கவிதை நூலையும் இயற்றினார். அது சிலேடை மயமாகக் காட்சி வழங்குகிறது. மேலும் ஷாஹ¤ல்ஹமீது ஆண்டகையின் ஞானாசிரியர் குவாலீர் முகம்மது கவுது வலியுல்லாஹ் பேரில் ‘குவாலீர்க் கலம்பகம்’ என்னும் பிரபந்தமும் ஆக்கினார்.

அவர்தம் பாடிய சச்சிதானந்தப் பதிகத்தில் இறைகாவல் வேண்டி இறைஞ்சும் பா எவர் மனத்தையும் உருக்கவல்லதாக உள்ளது.

வானென்னை ? பூமென்னை ? எல்லாம் உனது வலிமை என்றே
யானென்னை யுமுன்னைப் போற்றிநிற் கின்றன ஐயஅடி
யேனென்னைக் காப்பது நீ யேயல்லா(து) இல்லைஇப்பொழுது
நானென்னை செய்வலடா ? சச்சி தானந்த நாயகனே !

மேலும் அவர் தம் பாடிய ‘தசரத்தினமாலை’யில் கௌதுல் அ·லம் அவர்களிடம் குறை இரந்து பாடும் கவிதை நயம் நிறைந்தது. அது இதோ உள்ளது. நீங்களும் படியுங்கள்!

நாரையானது தூங்கிய கான
நாகையா(ள்) அப்துல் காதி றெலிக்கணி
சீரை யானமூ தாதை யெனவரூஉம்
செய்யி தேநுமப் பையலைக் காப்பது
நீரை யாவல்ல தித்தரு ணத்திலே
நேயம் வைத்தருள் செய்வதெனக்கினி
யாரை யாவுளர் ? மாபகு தாதுவாழ்
அப்துல் காதிறு கௌதுல் லகுலமே.

இவையன்றி தம் தந்தையாரின் நண்பரான சரவணப் பெருமாளையர் என்னும் வழக்கறிஞரிடம் ஆங்கிலத்தைக் கற்று பிரபல ஆங்கில நாவலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பார் எழுதிய ‘உமறு’ என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ‘உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்’ என்ற பெயருடன் நான்கு பாகங்களில் வெளியிட்டார்.

அவர் தமிழில் மட்டும் பெரும் புலவராக விளங்கவில்லை. அன்று நாகூரில் ‘சூபி ரஹ்மத்துலாஹ்’ என்னும் சிறப்புப் பெயருடன் விளங்கிய நூருத்தீன்சாகிபு காமிலிடம் கைகொடுத்துத் தீட்சை பெற்றார். ‘தறீக்குல் ஜன்னா’ எழுதிய முகியித்தீன் பக்கீர் சாகிபு காமிலிடம் அரபு நூல்கள் பல கற்றுத் தேறினார். மேற்கண்ட ‘தறீக்குல் ஜன்னா’ என்ற நூலுக்கு நாவலர் ஷரீஅத் சட்டம் விலகாமல் உரை எழுதினார்.

அதிவீரராமன் பட்டினம் அண்ணாவியார் குலதிலகராகிய காதிறு முகியித்தீன் அன்ணாவியார் இயற்றிய ‘பிக்ஹூமாலை’க்கு இஸ்லாம் மார்க்க வரம்பு கெடாமல் யாவரும் எளிதில் படித்தறியுமாறு உரை செய்தார். அரபி திரிச்சொற் பிரயோகங்களுக்கு எளிதில் தமிழில் பொருள் விளங்குமாறு ‘அரபு-தமிழ்-அகராதி’ ஒன்றும் எழுதினார்.

இவையன்றி திருநெல்வேலிப் பேட்டை காசிம் முகியித்தீன் ராவுத்தர் அவர்களின் வேண்டுதலின்பேரில் சீறாப்புராண வசன காவியமும், திட்டச்சேரி முஸ்லிம்கள் வேண்டிக் கொண்டதன்பேரில் ஆரிபு நாயக வசனமும் எழுதினார். சீறாப் புராணம், நபி அவதாரப் படலத்திற்கு உரையும் எழுதினார். அவர் எழுதிய உரையினைக் குறைகூறிக் கண்டித்து முகம்மது பந்தர் காதிரசனா மரைக்காயர் ‘நபி அவதாரப் படல உரை கடிலகம்’ என்று வேறு உரை ஒன்று வெளியிட்டார்.

அதில் அவர் குலாம் காதிறு நாவலர் ஒவ்வொரு செய்யுளுக்கும் கூறிய உரையை மறுத்து வேறு உரை பகர்ந்துள்ளார். உதாரணமாக சீறாப் புராணத்தில் நபி அவதாரப் படலத்திலுள்ள

முடங்க லங்கைதை
முள்ளெயிற்று வெண்பனிப்
படங்க ளாயிரத்தினும்
பரித்த பாரெலாம்
இடங்கொள் பூதரப்
புயத்திருத்தி ஏதிலார்
மடங்க லேறெனும்
மனவலியின் மாட்சியார்

என்ற செய்யுளில் வரும் ‘பாரெல்லாம் இடங்கொள் பூதரப் புயத்திருத்தி’ என்பதற்கு அரசனை வியந்து கூறுமிடத்து பூமியைப் புயத்தில் சுமந்தானென முன் நுல்களில் கூறியிருப்பதற்கேற்ப பூமி முழுவதையும் தம் புயத்தில் தாங்கியவர் என்று பொருள் விரித்துள்ளார் நாவலர். இதனை காதிரசனா மரைக்காயர் தம் உரைகடிலத்தில் மறுத்து இதன் பொருள் ‘பூவுலகம் எங்கணும் தம் புயத்தின் வலியை இருத்தினவர்’ என்றும் எழுதினார்.

உடனே நாவலர் தாம் எழுதியது சரிதான் என நிலைநாட்டி ‘உரைகடிலக நிராகரணம்’ என்ற பெயருடன் நூல் வெளியிட்டார்.

அதில் அவர் பூமியைத் தன் புயத்தில் சுமந்தோன் என்று அரசனைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடியிருப்பதை மேற்கோள் காட்டியதுடன் புலவர் நாயகம் சேகனாப் புலவரும் கூடத் தம்முடைய புத்துருஷ்ஷாம் காப்பியத்தில்,

‘மறக்கோல் வளைய உலக பொறை
மறாத்தோள் சுமந்து பலன் பயவா கிறக்கில்’

என்று பாடி இருப்பதையும் எடுத்துக் காட்டி ‘பாரெலாம் என்பதற்கு பார் எங்கணும் என்று காதிரசனா மரைக்காயர் கூறி இருப்பது எப்படி சரியாகும் ? புயத்திலிருத்தி என்பது ஏழாம் வேற்றுமைத் தொகையாய்ப் புயத்திருத்தி என நிற்க அதில் வலிமை என்ற சொல்லைப் புகுத்தி பொருளை வலிந்து கூறுவது எவ்வாறு பொருந்தும் ? வலிமை என்ற சொல்லை உமறுப் புலவர் இதில் மறைத்து வைத்திருப்பதை இவர் எவ்வாறு கண்டு பிடித்தாரோ?’ என்று எழுதினார்.

மேலும் தம்முடைய உரையை எதிர்த்து காதிரசனா மரைக்காயர் கூறிய பல்வேறு கூற்றுக்களை மறுத்து தம் கொள்கையை நிலைநாட்ட சிலப்பதிகாரம், கந்தபுராணம், கூர்மபுராணம் முதலிய இலக்கிய நூல்களிலிருந்தும் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், வீர சோழியம், நன்னூல், தண்டியலங்காரம் முதலிய இலக்கிய நூல்களிலிருந்தும் ஷரகு ஹம்ஸிய்யா, மவாஹிபுல் லதுன்னியா, சீரத்துத் தஹ்லான், ரத்துல்முக்தார், ரூஹூல்பயான் ஆகிய அரபி நூல்களிலிருந்தும் அதில் ஆதாரம் காட்டினார் நாவலர். ஆனால் அதைக் கண்டு காதிரசனா மரைக்காயர் ‘உரைகடில நிராகரணச் சூறாவளி’ என்ற பெயருடன் மறுநூல்- மறுப்பு நூல்- ஒன்று வெளியிட்டார்.

இவ்வாறு இருவருக்கும் பெரும் பகைமூண்டு கட்சி திரண்டதைக் கண்ட நாவலரின் ஞானாசிரியரும் காதிரசனா மரைக்காயரின் ஞானாசிரியருமான நூருத்தீன் சாகிபு காமில் அவர்கள் காதிரசனா மரைக்காயருடன் நட்புச் செய்து வைத்தனர். அந்த நட்பு பின்பு நீண்ட நாள் நீடித்திருந்தது. நாவலர் இயற்றிய ஆரிபு நாயகப் புராணத்திற்கும் நாவலரின் வேண்டுகோளின் பேரில் காதிரசனா மரைக்காயர் பெருந்தன்மையுடன் சாற்றுக்கவி அருளினார்.

நாவலர் எழுதிய சீறா வசன காவியத்தில் பாத்திமா நாயகியின் திருமணப் படலத்திற்கு உரை எழுதும்பொழுது நாவலர் சிறிது தவறி ‘மஹர்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘கடிதடக் கிரயம்’ என்று பொருள் எழுதிவிட்டார். உடனே அவருடைய எதிரிகள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர் மீது வசைமாரி பொழிந்தார்கள். ‘இவர் தன்னை இலக்கண வித்வானென்றுஞ் சொல்லிக் கொள்கின்றாரே. இலக்கணம் கற்றிருப்பாராயின் மறைத்த சொல்லை வெளிப்படையாய்க் கூறுதல் தகுதியல்ல, வேறோர் குறிப்பால் கூறல் தகுதியென்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கென்றும், நன்னூலில் இடக்கரடக்கல் என்றும், தொல்காப்பியத்தில் அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் என்றும், இழிந்தோர் சொல்லுதல் இழிந்த சொல்லாதலால் அதனைக் குலமக்களிடத்து மறைத்துக் கூறல் வேண்டும் என்றும் இன்னும் இலக்கணங்களெல்லாம் மறைவாகிய சொல்லை மறைவாகவே கூறவேண்டும் என்று சொல்லியிருக்க , தமது புல்லறிவாண்மை மடமையினாலோ கல்வியும் செல்வமும் அற்பருக் கற்பமுண்டாயின் இறுமாப்பர் என்றதற்கடையாளமாகவோ கற்பிப்பாரில்லாத மதிமயக்கத்தினாலேயோ, பெரியாரோடு சேர்மானமில்லையாலேயோ, உயர்ந்த கல்வி கேள்வி இன்மையினாலேயோ, அடங்காமையினாலேயோ, பாத்திமா றலியலாஹூ அன்ஹா அவர்கள் விஷயத்தில் மஹர் என்பதற்குக் கடிதடக் கிரயம் என்றெழுதத் துணிந்த துணிபு.

இ·தன்றி மஹரென்பது கடிதடக் கிரயத்திற்கு மாத்திரம் ஆகும் பட்சத்தில் பெண்சாதியோடு புருஷன் செய்யும் சரசம் முதலான நடக்கைகளில் மற்ற உறுப்புகளுக்கு கிரயம் இல்லை போலும்’ என்று தாக்கி எழுதினர். மேலும் சீரியர் என்னும் செவத்த மரைக்காயர் நாவலர் எழுதிய திருமணிமாலை வசனத்தில் குறைகண்டு ‘திருமணிமாலை வசனம் பார்க்க விசனம்’ என்ற ஒரு சிறு நூலும் வெளியிட்டார், அதற்குச் சின்னவாப்பு மரைக்காயர் அளித்த சாற்றுக் கவியில்

பெரியார் கருத்தறியாப் பேதை குலாம்காதிர்
தெரியா துழலும் சீர்கேட்டைத்-தரியாது
தெற்றத் தெளியத் திருத்தினான் பன்னூலும்
கற்றச் செவத்த மரைக்கான்

என்று பாராட்டினார். மேலும் ‘சீரியசூரியன்’ என்னும் ஒரு செய்தித்தாளை துவக்கி நாவலரைத் தாக்குவதையே தம்முடைய தலையாய கடமையாகக் கொண்டார் சீரியர். அதைக் கண்டு பெரிதும் மனம் வருந்திய நாவலர் சீரியர் பாடியுள்ள ‘மக்காக் கோவை’யில் ‘தஞ்சவாணங்கோவை’யிலிருந்து பற்பல சொற்றொடர்களைக் களவாடிக் கையாண்டிருப்பதாகக் ‘காரை முகம்மது ஸமதானி’ பத்திரிகையில் எழுதி ‘ஓ! சீரியனே!! மக்காக் கோவையில் நீர் ஏன் கொக்குப் பிடித்தீர்?’ என்று குற்றத்தைக் கிளரிக் குறையுரைத்தார்.

சீரிய அகப்பொருளின் செய்பிசகோ கைப்பிசகோ
நேரிய அச்சுப்பிசகோ நேர்ந்தனவால்-பாரில்
வளநாகை வாழும் செவத்த மரைக்காயர்
விளம்பும்மக் காக்கோவை மீது

என்று குறை கூறினார். உடனே சீரியரின் நண்பர்கள்

‘கச்சுப்பிசகுங்குயத்தார்க்கு நாண் முதல் காண் குணங்கள்
வச்சுப் படைத்தனன் வல்லோனென் பாரவ் வழக்கிழுக்கப்
பிச்சுக் கிடக்கின்ற நாவல கோவைப் பெரும் பொருளில்
அச்சுப் பிசகன்று கைப் பிசகன்றுன் னகப் பிசகே’

என்றும்

கற்றோர் பலர்மகிழ்ந்து கண்டிருக்கக் கொண்டிருக்க
மற்றோர் தலைவலிநோய் வந்துனக்கேன் – உற்றவாறு
என்னோ நபிபெருமாற்கு ஏற்கும் திருக்கோவை
தன்னோ டிகல லென்றான்

என்றும் மறுப்பு விடுத்தார்கள். மேலும் நாவலரையும், அவரின் நண்பர்களான பக்கீர்முகிய்யிதீன் புலவரையும் கூனசெவத்த மரைக்காயரையும், தாரூக்காக்கா மீசா புலவரையும் கிண்டல் பண்ணி சீரியர் ஒரு பாட்டுப் பாடி, தெருப் பையன்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அதனைத் தெருத் தெருவாகப் பாடிக் கொண்டு திரியுமாறு செய்தார். அப்பாட்டின் ஒரு சில அடிகள் பின்வருமாறு:

பல்லவி

நாவலன தீவிலே ஓடுது கப்பல்

அனுபல்லவி

பாவிரித் தென்றுமே பக்கீரெனுங் கப்பல்
வாவிய நங்கூரக் கூனனைத் தூக்கியே
மேவிய தாரூக்காப் பாய்மரம் நாட்டியே
ஆயுந் தமிழ்க் கடல் அந்தம் தெரிந்திட-ஓடுது
கப்பல்

இச்சமயத்தில் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியின் தமிழ்ப் புலவராய் விளங்கிய பிச்சை இபுறாகீம் புலவர் நாகூருக்கு வந்தார்; சீரியரைக் கண்டார்; நாவலரின் மேதையை அவருக்கு நன்கு எடுத்துரைத்து அவரை நாவலர் பால் அழைத்துவந்து உறவு கொள்ளச் செய்தார். அன்று முதல் நாகூரில் நாவலர் மாட்டுக் கிளப்பிய வசைப்புயல் ஓய்ந்தது. இதன்பின் சிலகாலம் சென்று சீரியர் காலம் சென்றதும் நாவலர் அவரின் அடக்கவிடத்திற்க்குச் சென்று ‘அந்தோ ! என்னருங்கையே! வெறுங்கையாய் எனை விடுத்து விரைந்தாய் என்னே! சிந்தாத என் கலைக்குப் புகழ்கொடுத்த சீரியனே! போயிற்றாயோ!’ என்று பிரலாபித்து அழுது துக்கித்தார்.

‘இலக்கணக் கோடாரி’ என்னும் புகழ்ப்பெயர் பெற்றிருந்த பிச்சை இபுறாகிம் புலவருக்கும், நாவவலருக்கும் முதன் முதலில் நட்பு ஏற்பட்ட விதம் மிகவும் விநோதமானது. நாவலரின் பேரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்ட பிச்சை இபுறாகிம் புலவர் நாவலரைக் காண நாகூர் வந்தார். நாவலரின் இல்லம் சென்று நாவலரையும் கண்டார். நாவலரோ வந்த புலவரை யாரோ எனவெண்ணித் தாம் வழக்கமாகப் பேசும் நாட்டு வழக்கத் தமிழிலேயே அவருடன் உரையாடினார். புலவர் பிச்சை இபுறாகிம், நாவலரின் நாட்டு வழக்க மொழியைக் கண்டு சிரித்துவிட்டு ‘நாவலீர்! தங்களைத் ‘தமிழ்த் தெய்வமாய குலாம்காதிறு நவலரேறே’ என்று சாற்றுக் கவிகள் கூறுகின்றனவே. இன்று உங்கள் மொழிச் செல்வத்தைக் கண்டால், நாவலரும் பாவலரும் அல்லாத பாமரர் போன்றல்லவா தோன்றுகின்றது!’ என்று கூறினார். இதைக் கேட்ட நாவலர் சிரித்த வண்ணம் ‘புலவீர்! உங்கள் திரிசிரபுரத்துச் சீரங்க உலக்கையல்லவே நஞ்செந்தமிழ்! நீர் என் முதுகிலே சாத்தும் வெண்டமிழ் மொழியினைக் கண்டார் என்னையுமோர் தண்டமிழன் என மதிக்காரோ?’ என்று கூறினார். அதன்பின் அவ்விருவரிடையே உரையாடல் நிகழ்ந்தது. நாவலரின் மேதையை ஒரு நொடியில் விளங்கிக் கொண்ட பிச்சை இபுறாகிம் புலவர் நாவலரிடமே மாணவராய் அமர்ந்து, இலக்கணப் பொருளதிகார உள்ளுரைப் பொருளமைதிகளைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் தாம் எங்குச் சென்றபோதினும் , நாவலரைத் தம் ஆசான் என்று பகிரங்கமாக எடுத்துரைத்து நாவலரின் பெருமையைப் பறை முழக்கினார். எனினும் அடக்கமே உருவாயமைந்த நாவலர், ஒருதடவையேனும் பிச்சை இபுறாகிம் புலவரைத் தம் மாணவர் என்று யாரிடமும் கூறவில்லை.

இதனையே பிச்சை இபுறாகீம் புலவர் நாவலர் மீது பாடிய சரமகவி ஒன்றில்,

என்னாசான் இடைப் பயின்ற பயிற்சியெலாம்
அறிந்தனை
நின் இருங்கால் மாட்டு
முன்னாகி அகப்பொருளை ஆய்வுழி என் மதியளவு
மொழிந்த நின்னைப்
பன்னாளும் ஆசான் என்றுரைத்தனன் நீ உரையாய்
மன் பார்க்கில் ஆசான்
தன்னாவில் கூறாது மாணவகன் மொழிவதுதான்
தகுதி யன்றோ

என்று கூறுகின்றார்.

முன்னர் ‘நன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கணநூலை இராமநாதபுரத்து ஆறுமுகத் தேவரின் வேண்டுதலின்பேரில் செய்த நாவலர் ‘பொருத்த விளக்கம்’ என்னும் இலக்கண நூலை பிச்சை இபுறாஹிம் புலவரின் வேண்டுதலின் பேரில் செய்தார். அதுபற்றிய மதிப்புரை ‘சுதேசமித்திரன்’ தினத்தாளில் வெகுசிறப்புடன் வெளிவந்தது. பாவலனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவரின் கவனத்தை ஈர்த்தது. 1901ஆம் ஆண்டு அவரும், பாற்கர சேதுபதி மன்னரும் நாகூர் வந்தபொழுது நாவலரை சந்தித்தனர். அப்பொழுது பாற்கர சேதுபதி நாவலரை நோக்கி ‘அருந்தமிழ்ப் புலவீர்! நுமக்கு யாது வேண்டும்? கூறுமின்!’ என்று வினவினார். அதற்கு நாவலர் ,’நாடு செகிற்கொண்டு பீடுகெழு குடிதழீஇ, முற்றக்காக்கும் கொற்றக்குடையோய்! தமிழ்வளர்த் தருண்மின்!’ என்றார். அவருடைய அவ்வேண்டுகோளை ஏற்று பாற்கர சேதுபதி மன்னரும், பாண்டித்துரைத் தேவரும் அவ்வாண்டிலேயே மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கத்தை நிறுவி, நாவலரை அதன் முதற்பெரும் உறுப்பினராக ஏற்றுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளின் பேரில் ‘மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராற்றுப்படை’யை இயற்றி,அங்குச் சென்று அதனை அரங்கேற்றினார் நாவலர். அதில் அவர் ஒரு புலவரை நோக்கி, ‘மதுரைக்கு நடந்து சென்றால் நாள் பல செல்லும். ஆதலின் புகைவண்டியில் செல்லின் விரைவில் செல்லலாம்’ என்று கூறிப் புகைவண்டியை வர்ணிக்கும் விதம் வியத்தற்குரியதாய் அமைந்துள்ளது. அதில் அவர் புகைவண்டித் தொடரை மரவட்டைக்கு நிகராக கூறுகின்றார். அதனைக் கீழே தருகிறேன். படிப்பீர்களாக. படித்து அது புகைவண்டி ஓடும் ஒலியில் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கினையும், புதுமையையும் கண்டுகளிப்பீர்களாக !

காலிற் செல்லி னாளிற் செல்லு
முருமுறுமோ டுற லொழியி
னிருபுறனு மிருப் புருளை
நான்குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
னொலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல் கொள்ள
மரவட்டைச் செல வொப்பச்
செல்பாண்டில் பல் கோத்த
நெடுந்தொடரி னிறை நீண்டு
கடுங்காலிற் கழி விசையின்
எந்திரவூர்தி யிவர்ந்தனிர் படர்மின்
அந்தமில காட்சி அணிபல காண்பிர்.

அவர் இவ்வாறு புலவராற்றுப்படை இயற்றி அரங்கேற்றி வரும்பொழுது அதன் தனிச் சிறப்பியல்களையும், சொற் செறிவையும், பொருள் நிறைவையும் கண்டு பரவசமுற்ற புலவர் பெருமக்கள் திருமுருகாற்றுப்படையினைச் செய்த நக்கீரரையொப்ப அவர் ஆற்றுப்படை இயற்றி இருந்தமையின் அவருக்கு ‘நான்காவது சங்க நக்கீரர்’ என்னும் புகழ்ப் பெயரை நல்கிக் கௌரவித்தனர். மேலும் தமிழ்ச்சங்க மான்மியத்தில் மகாமகோபாத்தியாய உ.வே,சாமிநாதையரை ‘தமிழரசியின் முதல்சேய்’ என்று குறிப்பிட்டு,

தொல்லைவளம் படைத்ததிரி சிரபுரத்துத்
தோன்று புகழ் மீனாட்சி சுந்தரப் பேர்
வல்ல பெரும் தகை மாட்டுப் பன்னூலாய்ந்து
வளர் சங்க நூல்கள் பல வனைந்தஞ் சேற்றி
எல்லவரும் கொண்டாடும் வண்ணம் மேனாட்டு
இறைவர் மகாமகோபாத்தியாயப்பட்டம்
ஒல்லைதரத் தமிழரசி முதற்சேயாகி
ஒளிர் சாமிநாதப் பேருறுமேலோனை

என்று புகழ்ந்துள்ள அக் காப்பியப் புலவர் குலாம்காதிறு நாவலரைப் பற்றிக் கூறும்பொழுது

தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபுராணம்
தகைய பலபிரபந்தம் வசனநூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பத் தந்திட்(டு)
எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிறல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை

என்று பாடி அவரை ‘தண்டமிழின் தாய்’ என்று போற்றினார்.

இவ்வாறு தமிழின் தாயாக விளங்கி தம் காலத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனும்படி தமிழுலகில் தனிப்பெரும் செங்கோல் நடாத்திய நாவலர் வித்துவ ஜனசேவகராய் விளங்கி பல மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களைப் பெரும் புலவர்களாக ஆக்கினார். பிறகாலத்தில் மறைமலை அடிகள் என்று பெயருடன் சுவாமி வேதாசலமும் அவரிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரேயாவார்.

தாம் பாடிய நூற்களுக்குச் சாற்றுக்கவி பெறவும் அவரின் வாழ்த்துதலைப் பெறவும் நாடோறும் புலவர் பெருமக்கள் அவரிடம் வந்தவண்ணமே இருப்பர். அவர்களுடனெல்லாம் இன்முகத்துடன் நன்மொழிப் பேசி அவர்களின் பாக்களில் குற்றம் காணின் இதமாகக் கூறித் திருத்தம் செய்து சாற்றுக்கவி வழங்குவார் நாவலர்.

செவ்வல் மாநகராம் நைனாமுகம்மதுப் பாவலர் எழுதிய குத்புநாயகத்தின் புகழாரத்திற்கு அவர் கொடுத்த சாற்றுக் கவி இதோ வருமாறு:

தனிக்குமுயர் ஒலிபெருமான் கழற்கணியும் பொருட்டரிய
தமிழின்பம்
பனிக்குமென செவ்வல்நகர் நெயினான் முகம்மதென்னும்
பாவல்லான் சொற்
குனிக்கும் அணிப்பாவினத்தால் கோத்த புகழாரம் இது
கூறுங்காலை
இனிக்கும் அமுதெங்கோ, முக்கனி எங்கோ,
தேனெங்கோ என்னென் பேனே

இவ்வாறு தம்மினும் சிறிய புலவர்களுக்கேலாம் சிறப்பு மிகு சாற்றுக்கவி நல்கிக் கௌரவித்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த நாவலர் எளிமையின் திருவுருமாகவே விளங்கினார். புலவர் நாயகம் செய்கப்துல்காதிறு நெயினார் லெப்பை ஆலிம் புலவர் அவர்களைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும்பொழுது, ‘இவர்க்கும் கல்விதாம் எம்மிடம் கிஞ்சமும் இலெஇயே’ என்று கூறியுள்ளார்.

உடையிலும் அவர் அப்படித்தான். போனகிரி என்னும் ஒருவகை நாட்டுக் கைலியை உடுத்தி, மூடுகழுத்துப் கோட்டும் குஞ்சமில்லாத துருக்கித் தொப்பியும் அணிவார். கோட்டுப்பையில் கடிகாரமும் பேனாவும் மூக்குக் கண்ணாடியும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். கைவிரலில் புஷ்பராகக் கல் பதித்த வெள்ளி மோதிரம் ஒன்று மட்டும் அணிந்திருப்பார்.

அவர் அருந்தும் உணவும் மிகவும் எளிமையானதாயிருந்தது. அவர் காலையில் அருந்துவது நீராகரம். மாலையில் அருந்துவது சீரகத் தன்ணீர். காலை உணவு பசும்பாலும் மாக்கழியும் வாழைப்பழமும்தான். இரவு உணவு பழமும் பாலும் சிற்றுண்டிப் பலகாரங்களும்தான்.

காலையிலும் மாலையிலும் கடற்கரை சென்று உலவிவரும் நாவலர் இரவு ஏழரை மணி முதல் ஒன்பது மணிவரை நூல்கள் படிப்பார். காலை ஆறுமணி முதல் ஏழரை மணிவரை கவி இயற்றுவார்.

அவர் புலவராற்றுப்படையில் புலவர்களுக்கு வாரி வழங்கித் தம் பெயரை நிலைநாட்டிச் சென்ற கடையெழுவள்ளல்கள் இப்பொழுதில்லையே என்று வருந்தி,

கற்றுணர் மக்கள் அருமை இற்றென
அளந்(து) அரின்(து) அதனை உளத்தகம் நெளிந்து
முன்னாள் பொன்னும் மணியும் சிதறி
தம்பெயர் விட்டனர் இம்பரின் மாய்ந்த
பாரியும் காரியும் ஆயும் ஓரியும்
பேகனும் நள்ளியும் அதிகனும் மல்கி
வரையாது கொடுத்தோர் வாழ்நாள் ஈதன்று

என்று பாடியிருந்தபோதினும் அவருடைய வாழ்வு பிறர் தயவை நாடாது தன்னிறைவு பெற்றிருந்தது.

அவருடைய வாழ்க்கை வளவாழ்வு என்று கூறப்பட இயலாதபோதினும் வறுமையைவிட்டும் அப்பாற்பட்டிருந்தது. அவர் யாருக்கும் உதவி வேண்டி சீட்டுக் கவி எழுதி அனுப்பவமில்லை. யாரிடமும் நேரில் சென்று உதவி வேண்டியதுமில்லை.

அவருடைய முதல் மனைவியார் மக்தூம்கனி அம்மாளுக்குப் பிள்ளை உண்டாகாதலின் அவரின் உத்திரவுக் கிணங்கி நாவலர் ஆமினா என்னும் மங்கையை மணம் செய்து கொண்டார். அம் மங்கையார் மூலமாகவே நாவலருக்குத் தம்முடைய 74-வது வயதில் ஆரிபு என்னும் அருமந்த மகவு ஒன்று பிறந்தது. அவரே ஆரிபு நாவலர் என்ற பெயருடன் தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் தர்கா வித்வானாகவும் நாகூரில் வாழ்ந்து வந்தார். அம்மகவு பிறந்த பத்தாம் நாள் தாயார் ஆமினா விண்ணுலகம் எய்திவிட்டார். ஆமினா இறந்த ஓராண்டில் அதாவது 1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் நாள் புதன்கிழமை நாவலரும் இம்மன்ணுலகை எள்ளி இகழ்ந்து பொன்னுலகை அடைந்து விட்டார். இதனையே அவருடைய அருமந்த மைந்தர் ஆரிபுநாவலர் பின்னர் தாம் பாடிய கையறு நிலையில்,

முன்னாளில் உன்றன் மனையாம் எம் அன்னை
முதல்வன் கொடுத்து வரம்போல்
பன்னாள் தவத்துப் பலனாக எம்மைப்
படியார ஈன்ற பதுநாள்
தன்னாளில் ஆவி கழிகொள்ள நீயும்
தகுமோ இதென்ன தனியாய்
இன்னாளில் விட்டே ஓராண்டு போக்கி
இறந்தாயோ எந்தன் அப்பா!

என்று அலறித் துடிக்கின்றார். அவருடைய இறப்புச் செய்தி கேட்டுத் தமிழகமே துக்கக் கடலில் மூழ்கியது. அவரின் மாணவரான மறைமலை அடிகளோ தமது ‘ஞான சாகரம்’ இதழில்

வாடுகின்ற வையத்தின்
வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ
குலாம் காதிர் பெரும்புலவோய் !
நீடுவளப் புத்தேளிர்
நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ ?
இனியெங்குற் றுணர்வேனோ’

என்று பாடி ஏங்கித் தவித்தார். காரை ‘முகம்மது சமதானி’ என்னும் பத்திரிக்கை,

தென்னாகை வாழ்ந்த குலாங்காதிர்
நாவல தேசிகர்மாய்
பொன்னோட்டின் வாழ்வைப் பெரிதுன்னிப்
போயினர் போயினமற்
றென்னாட்டி னும்மிவர் மெய்க்கீர்த்தி
எங்க ளிருதயத்தின்
மன்னோகை மற்றிழிந் தந்தோ !
அவலங் குடிவந்ததே

என்று புலம்பிற்று.

சுதேசமித்திரன் செய்தித்தாள், ‘மதுரைத் தமிழ்ச் சங்க அங்கமொன்று போயிற்று. தென்னிந்தியாவில் ஜொலித்த விண்மீன் விழுந்தது. தமிழுலகின் தனம் அழிந்தது.’ என்று அலறியது. அவருடைய மாணவர் பிச்சை இபுறாகிம் புலவர் ,’என்னுயிரே என்றுரைத்த நின்னுயிர்தான் பிரிந்த விதமென்னே அந்தோ’ என்று அழுது கண்ணீர் வடித்தார்.

இலங்கை முஸ்லீம் நேசன்,

‘ஏ மண்ணகமே! சற்றேனும் மறைவுற்ற நாவலரின்
உடலைக் கண்டு
உண்ணாதே! அவன் நாவை உண்ணாதே!’

என்று அலறித் துடித்தது.

எனினும் ‘மண்ணிலிருந்தே படைக்கப்பட்டீர்கள். மண்ணுக்கே திரும்புவீர்கள்’ என்ற மாமொழிக்கு நாவலரும் இலக்கானார். அவருடைய பூதவுடல் மண்ணில் புதையுண்டபோதினும் அவருடைய புகழுடல் மண்மீது பவனி வந்து கொண்டுள்ளது. ‘நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர்’ என்று அன்று மும்முறை நாவலர் கோட்டத்தில் வைத்துப் பொன்னம்பலம் பிள்ளை மொழிந்த சொற்கள் இன்றும் தமிழகத்தின் எண் கோணங்களிலும் எதிரொலி செய்து நாவலரின் இசையைப் பரப்பிக் கொண்டுள்ளன

– ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ – அப்துற் றஹீம் –

 

சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் மகனார் கே.பி.எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை’யிலிருந்து :

1833ல் பிறந்து, தம்புகழ் நிறுத்தி 1908ல் மறைந்த மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் குலாம் காதிறு நாவலரை இற்றை நாள் தமிழர் மறந்திருக்கக்கூடும். மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவர் இவர். மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் தாம் எழுதிய மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை வரலாற்றில் நாவலர் பற்றி இவ்வளவுதான் கூறியிருக்கிறார் :

‘நாகூரில் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதிறு நாவலர் என்ற முஸ்லிம் புலவர் ஒருவரும் நமது மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரே’

இவ்வளவுதான் கூறியிருப்பினும் குலாம் காதிறு நாவலரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகு முழுவதுமாகப் பரவி நின்றிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர் குலாம் காதிறு நாவலவர் பற்றி இவ்வாறு குறிப்பிடிருக்கிறார்.

‘தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபுராணம்
தகையபல பிரபந்தம் வசன நூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பந் தந்திட்(டு)
எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிரல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை…’

தண்டமிழ்க்குத் தாயாக விளங்கிய பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர் பற்றி சித்திரமொன்று நன் முன்னர் தோன்றுகின்றது. பல புராணங்கள், பிரபந்தங்கள், வசன நூற்கள் எழுதித் தந்தவர், பெரும்புலவர் என்ற தோற்றம் மனக்கண் முன் உருவாகின்றது, வண்டமரும் பொழிலுடுத்த நாகூரும் நம் மனத்திரையில் படர்கின்றது.

‘புலவராற்றுப்படை இயற்றிய பெரும்புலவர் நமது நாவலர் எழுதிய இலக்கண இலக்கிய நூற்களுக்குக் குறைவில்லை. ஒற்றைத் தனிநபர் தமது வாணாளில் இத்தனைக் காப்பியங்கள், பாடல்கள் எழுதியிருக்கிறாரா என மூக்கின் மேல் விரல் வைத்து வியப்புறத் தோன்றும். தமிழ் வசனக் குழந்தை தளர்நடைபோடத் துவங்கியிருந்த காலத்தில் குலாம்காதிறு நாவலர் அவர்கள் ஒன்றிரண்டல்ல, பல வசன நூற்களை தமிழில் எழுதியிருக்கிறார். நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம் என்பன போன்ற இலக்கண நூற்கள், சீறாப் புராண வசனம், ஆரிபு நாயக வசனம், நாகூர் ஆண்டகையின் காரண சரித்திரம் என்றெல்லாம் அவர் எழுதிய வசன நூற்களுக்குக் குறைவில்லை.

ஆரிபு நாயகப் புராணமும் அவருடையதே. காவியத் தலைவரான செய்யது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகையின் அருள் வேண்டி நாவலர் இறைஞ்சிப் பாடிய புராணம்தான் இது. இப்புராணத்திற்குத்தான் திட்டச்சேரி முஸ்லிம்கள் ஒருமுகமாக வேண்டிக் கொண்டதன் பேரில் ஆரிபு நாயக வசனம் எழுதினார் குலாம் காதிறு நாவலர் அவர்கள்.

இந்த ஆரிபு நாயக வசனத்திற்கு கோட்டாறு, மதுரைத் தமிழ்ச் தமிழ்ச் சங்கப் புலவர், தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், மகாமதி, சதாவதனி கா.ப.செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் சாற்றுக் கவியொன்று வழங்கியிருக்கிறார்கள். ஐந்து விருத்தங்கள் கொண்ட இந்த சாற்றுக் கவியில் முதலிரண்டு விருத்தங்கள் பாட்டுடைத் தலைவரின் – செய்யது அஹ்மதுல் கபீர் சுல்தானுல் ஆரிபீனாரின் – மஹாத்மியத்தை வியந்துரைக்கிறார்கள். ஐந்தாம் விருத்தம் அய்யம்பேட்டைபதியில் வாழ்ந்த அப்துல் கனி சாஹிப் பொருளுதவி ஆரிபு நாயக வசனத்தை அச்சியற்றி ‘இருஞ்சீர்த்தி’ துளக்குற்ற மாட்சியினை வர்ணிக்கிறது. குலாம் காதிறு நாவலர் அவர்களையும் திருநாகையிருந்தபடி அவர் தமிழ்க் கோலோச்சியிருந்த தன்மையையும் மூன்றாம் நான்காம் விருத்தங்கள் அற்புதமாக சித்தரிக்கின்றன.

சொற்கள் கவிதை வடிவம் பெறும்போது ஒலிநயமும் கவிதைகளின் உள்ளமைந்த பொருள் நயமுமாகச் சேர்ந்து சிறந்த ஒரு சித்திரத்தை அங்ஙனே தத்ரூபமாக நம் மனக்கண்முன் கொணர்ந்து என்றென்றும் அழியாதவாறு நிறுத்திவிடுமேயாகில் இறவா வரம் பெற்று விடுகின்றன.

குலாம் காதிறு நாவலர் அவர்கள், பாஸ்கரப் பண்டித வாப்பு ராவுத்தர் அவர்களின் புதல்வர். கலைமகளோ நாமகளோ, தமிழாய்ந்த அகத்தியரோ என திருநாகைப் பதியிருந்து தமிழ்ப் புலவர் இதயமெனும் இராஜ்யத்தில் கோலோச்சும் குலாம் காதிறு காட்சி தருகிறார்.

‘மாவருத்தும் பெருநிலத்து வாப்புதவ மருண்மகவாய்
வந்தெஞ் ஞான்று
மூவருத்துங் கலைமகளு நாமகளோ கும்பர்குறு
முனியே யென்னத்
தாவருத்துந் திருநாகை யிருந்து தமிழ்க் கோலோச்சித்
தகைமிக் கார்ந்த
மேவருந்து மிணையில்குலாம் காதிறுநா வலனென்னும்
விபுதர் வேந்தன்’

சதாவதனம் செய்கு தம்பிப் பாவலர் அவர்கள், குலாம் காதிறு நாவலர் அவர்களினின்றும் வயதில் இளையவர்கள். எனினும் நாவலர் அவர்களின் சமகாலத்தவர். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களும் நாவலர் காலத்து வாழ்ந்தவரே. நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் புகழையும் கீர்த்தியையும் அவர் வாழ்ந்த மாட்சியினையும் நேரிற் கண்டவர்கள் சொல்ல சொல்லக் கேட்பதில் நமக்கோர் வித தனி மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர், நாகூர் குலாம் காதிறு நாவலரின் இலக்கியச் சேவைகளை நாம் உணருமாறு செய்திருக்கிறார். ஆனால் சதாவதானம் செய்கு தம்பிப் பாவலர் அவர்களோ நாகூர் புலவர் வேந்தர் எவ்வாறு கொலுவீற்றிருந்தார் என்பதை ஒரு அழியாச் சித்திரமாக இன்றைத் தலைமுறையோரின் மனத்திரையில் தீட்டி வைத்திருக்கிறார்கள். ‘தேன்கனியும் பாலமிழ்தும் கற்கண்டும் சர்க்கரையும் சேர்ந்து தான் கனிய, சுற்றி வந்து மொய்த்து நிற்கும் ஓவியத்தின் உள்ளடங்காப் பெருங்காட்சியொன்றை பாவலர் பெருமானார் அவர்கள்தம் சாற்று கவியின் நாலாவது விருத்தப் பாவில் தீட்டியிருக்கிறார்கள். கான்கனியும் செந்தமிழ் கொண்டு உணர்வளிக்கும் ஓர் நூலாம் ஆரிபு நாயக வசனம் தந்த குலாம் காதிறு நாவலரை சாற்றுக்கவி வாயிலாக நாம் பார்க்க முடிகின்றது.

தேன்கனியும் பாலமிழ்துங் கற்கண்டுச் சர்க்கரையுஞ்
சேர்ந்த தென்னத்
தான்கனியப் புலவர்குழாந் தலைகுனிந்து மனமுவந்து
தகைவிற் கொள்ளக்
கான்கனியுஞ் செந்தமிழ்கொண் டுணர்வளிக்கு மோர் நூலாய்க்
கவினச் செய்து
வான்கனிய் மாரிபுநா யகவசனப் பெயர்நிறுவி
வழங்கி னானால்

தமிழ்ப் புலவர் குழாத்திடை குலாம் காதிறு நாவலர் கோலோச்சும் தோற்றத்தை நாம் காண முடிகிறது. நாவலர் கொலுவீற்றிருந்து தமிழ் வளர்த்த மாண்பினையும் மாட்சியினையும் அவர் காலத்து வாழ்ந்த மற்றொரு பெரும் புலவர் வாயிலாக நாம் கேட்கிறோம்; பார்க்கிறோம். சொல்லின்பமும் காட்சியின்பமும் சேர்ந்து மனத்திரை விட்டகலா ஓவியமொன்று அங்ஙனே நம் உள்ளமெங்கனும் நிறைத்து நிற்கின்றது. சாற்றுக் கவியின் இலட்சியம் நிறைவேறுகின்றது.

***

நன்றி : பாவலர் பதிப்பகம்
பதிப்பக முகவரி : 53, நைனியப்பன் தெரு, சென்னை-600 001

(நன்றி : ஆபிதீன் பக்கங்கள்)