நகைச்சுவை நாவலர் – எழுதியவர் : ஆரூர் தமிழ்நாடன்
—————————
’நகைச்சுவை நாவலர் ’ திருவாரூர் புலவர் இரெ.சண்முகவடிவேல் அவர்களுக்கு 80 வயது. இதை இன்று, இலக்கிய நண்பர்கள், நாவலர் சுகி.சிவம் போன்றவர்களை அழைத்துத் திருவாரூரில் தமிழ்த் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
#
இந்தச் செய்தியை என் இளவல் ஆனந்த், நேற்று இரவு சொன்னபோது, மனம் மலர்க்கொத்தாய் மாறியது. என் நினைவுகள் எழுந்து நின்று, அய்யா அவர்களை வாழ்த்தி வணங்கியது.
#
கலைஞருக்குப் பிறகு, திருவாரூருக்கு ஒளிவட்டம் கொடுத்திருப்பது அய்யா அவர்களின் நாவன்மைதான். அவரது தமிழ்க்குரல், இன்று உலகத்தமிழர்களை எல்லாம் வசப்படுத்திக்கொண்டிருக்கிறது. இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் பெருமை.
#
அய்யா அவர்கள் எனக்குத் தமிழாசிரியர். அய்யா அவர்கள் மட்டுமல்லாது, கவிக்கோ ஞானச்செல்வன், புலவர் அ.ப.பாலையன், புலவர் கோவி.தியாகராசன், புலவர் சுந்தராசன், புலவர் சந்திரசேகரன் என பள்ளியில் எனக்குக் கிடைத்த தமிழாசான்கள் அத்தனை பேருமே, பட்டிமன்ற ஜாம்பவான்கள். இது என் தமிழுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வரம்.
#
அய்யா சண்முகவடிவேல் அவர்களின் வகுப்பறை நாட்கள், என் புத்திக்கு அறுசுவை நாட்கள். வகுப்பறையில் அவர்கள் நடத்திய இலக்கியப் பாடமும், அவர்கள் சொன்ன இலக்கியக் கதைகளும், இப்போதும் என்மனதின் வைப்பறைகளில், தேனில் ஊறிக்கொண்டிருகின்றன.
#
எனது நாத்திகக் கால்கள், அப்போது அடிக்கடி கோயில் படிக்கட்டுகளை மிதித்ததென்றால், அது அய்யாவின் பட்டிமன்ற, வழக்காடு மன்றத் தமிழ்கேட்கத்தான். புலவர் நாகூர் சீனி.சண்முகம் அவர்களோடு, அய்யா அவர்கள் மேடையேறினார்கள் என்றால், கர்ப்பக்கிரகத்தில் இருந்தும் வெடிச்சிரிப்பு கேட்கும். அந்த அளவிற்கு, அவர்கள் அதிரடிச் சரவெடிகளைக் கொளுத்திப்போடுவார்கள். இவர்களால் மனம் பகுத்தறிவுக்கப்பாலும் தீபாவளி கொண்டாடும். ஏராளமானோரை வயிற்று வலிக்கு ஆளாக்கிய பெருமையும், இவர்களது நகைச்சுவைக்கு உண்டு. அய்யா அவர்களின் நகைச்சுவைச் செய்திகள், வெறும் கிச்சுச்கிச்சு ரகமாக இருக்காது; அவை கலைவாணர்த்தனம் கொண்டவை. நல்ல கருத்துக்களை மனதில் விதைக்கும் வல்லமை கொண்டவை.
#
இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். கையளவு கூட மனமில்லாதவர்களின் உலகம் இது. ஆனால் அய்யா சண்முகவடிவேல் அவர்களோ, ஏக்கர் கணக்கில் விரிந்த விசால இதயம் கொண்டவர்கள். தன்னிடம் பயிலும் மாணவன் தானே என்று கருதாமல், எத்தனையோ கவியரங்குகளில் என்னை மேடையேற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக வடக்குவீதி பழனியாண்டவர் கோயில், அய்யா அவர்களின் ஆளுகைப் பிரதேசம்.
#
அங்கு ஏதாவது ஒரு ஆன்மீகச் சாக்கில், இலக்கிய நிகழ்சிகளை, கோயில் தக்கார் நாகராசன் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்துவிடுவார்கள். கவிக்கோ ஞானச்செல்வன், பாட்டரசர் பாலைக்கண்ணன், புலவர் கோவி.தியாகராசன், கவிஞர் அடியார்க்கு நல்லான், புலவர் அம்புயம் போன்றவர்களோடு, என்னையும் கவிதைபாட வைப்பார்கள். அன்று எங்களைப் போன்ற இலக்கியவாதிகளுக்கு சன்மானமாகத் தேய்காய் மூடி, பிரசாதம் மட்டுமே கிடைத்துவந்த காலத்தில், எங்களுக்கு முதன்முதலில், உறையில் சிறியதொகை வைத்துக்கொடுக்கச் செய்தவர் அவர். அதோடு இலக்கியக் கூட்டம் முடிந்ததும் அருமையான சிற்றுண்டியும் இருக்கும். இப்படியெல்லாம் ஒரு பெரும் கூட்டத்தையே வளர்த்தவர் அவர்.
#
இவ்வளவு சிகரத்தன்மை கொண்ட அய்யா சண்முகவடிவேல் அவர்கள், என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த அன்பை அன்றுமுதல் இன்றுவரை இடையறாது பெய்துவருகிறார். அது நாங்கள் பெற்ற பெரும்பேறு. உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நடைபெற்ற என் திருமணம் தொடங்கி, கடந்த ஆண்டு, எங்கள் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற என் இளவல் அண்ணாதுரை திருமணம் வரையிலான அனைத்து நிகழ்விலும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த அவருக்கு, இதயத்தின் நன்றி சொல்ல ஏது வார்த்தை?
#
சற்றுமுன் அய்யா சண்முகவடிவேல் அவர்களைத் தொடர்புகொண்டு, வாழ்த்து சொன்னபோது, ஒரு குழந்தையாய், தனக்கு இப்படியொரு புகழ் இருப்பதையே அறியாதவராய், அவர் அன்பொழுகப் பேசிய பாங்கு, இப்போதும் எங்களுக்குப் பாடம் நடத்துவதாகவே தோன்றுகிறது.
#
அய்யா அவர்கள், நலமும் வளமும் பெருக, வாழ்வில் சதம் அடிக்கவேண்டும். மனப்பிணி நீக்கும் தமிழ் மருத்துவத்தை, இதே ஆரோக்கியத்துடன் அவர்கள் மேடை தோறும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.
#
அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ்க… வாழ்க… என கைகூப்பி வாழ்த்துகிறேன்.