RSS

Category Archives: சாய்பாபா

சாய்பாபா நாகூர்க்காரரா?


Sai baba 2

ஷிர்டி சாய்பாபா நாகூர்க்காரார் என்ற ஒரு பேச்சு இருக்குதே அது உண்மையா என்று இளவல் ஹசன் மரைக்கார்  ஒரு கேள்விக் குண்டை எடுத்து என்னிடம் போட்டிருக்கிறார்.

(இந்த பதிவு முழுக்க முழுக்க ஷிர்டி சாய்பாபாவைப் பற்றியதே தவிர புட்டபர்த்தி சாய்பாபாவுடன் இதனை இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்)

இந்தக் கட்டுரையை எழுதுவதினால் நான் மார்க்கத்துக்கு முரணாகி விட்டாதாக யாராவது ஃபத்வா வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. நாகூரில் அப்போது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் (மறைந்த) மர்ஹூம் ஆஜம் காக்கா அவர்கள். அவர் ஒரு தகவல் களஞ்சியம் என்றால் அது சற்றும் மிகையாகாது.. விசித்திரமான தகவல்கள் அவரிடம் ஏராளம். சஞ்சய் காந்தி, ஜெயலலிதா, அண்ணாத்துரை போன்ற பிரபலங்களைப் பற்றிய கேள்விப்படாத அபூர்வமான தகவல்களை அவ்வப்போது அள்ளித் தருவார்.

ஒருமுறை நாகூரில் நெல்லுக்கடைத்தெருவில் உள்ள ஒரு வீட்டைக் குறிப்பிட்டு, இந்த வீட்டில் இன்னாருடைய பாட்டனார் உறவு முறை கொண்டவர்தான் சாய்பாபா. அவருடைய இயற்பெயர் சாஹிப் மரைக்கார். சாய் மரைக்கார் என்று அழைப்பார்கள். அவர் இளமைப் பருவத்தில் வீட்டை விட்டுச் சென்றவர்தான் அப்புறம் திரும்பவே இல்லை. மார்க்க நெறியில் மஃரிஃபத் என்ற வழியில் இறைவனின் தேடலில் “மஜ்தூப்” ஆகி வடநாட்டில் திரிந்துக் கொண்டிருந்தார். வடநாட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்ட அவர்தான் இன்று சாய்பாபா என்று எல்லோராலும் அறியப்படுபவர்” என்று ஆஜம் காக்கா சொன்னதைக் கேட்டு கண்களை அகல விரித்து வியந்து போனேன்.

நாகையில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்த மோத்தி பாவா சென்னை எக்மோரில் அடக்கம் ஆனதையும், மஞ்சக்கொல்லையில் அப்போது மஜ்தூப் என்ற நிலையில் அறியப்பட்ட ஷிப்லி பாவாவைப் பற்றியும் என் இளமைப் பருவத்தில் ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். அதே போன்ற ஒரு பாபாவாக சாய்பாபாவும் இருக்கக்கூடுமோ என்ற எண்ணம் என் மனதில் குடிகொண்டிருந்தது.

காவி உடை தரித்து, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, ருத்திராட்ச மாலை அணிந்துக்கொண்டு, கையில் தம்பூரா போன்ற ஒரு வாத்தியத்தைக் கையில் ஏந்தியவாறு,  இந்துமத துறவிகள் குணங்குடி மஸ்தான் பாடல்களை பாடிக்கொண்டு யாசகம் கேட்டு வருவதை என் இளம்பிராயத்தில் பார்த்திருக்கிறேன். குணங்குடி மஸ்தான் ஒரு முஸ்லீம் என்பது எல்லோரும் அறிந்ததே.

பிற்பாடு நான் ஆராய்ந்து பார்த்த வகையில் ஆஜம் காக்கா குறிப்பிடுகிற அந்த குறிப்பிட்ட நபர் இந்த சாய்பாபாவாக இருக்க வாய்ப்பில்லை என்ற உறுதியாக நம்பினேன். சாய்பாபா பிறந்த ஊர் எது என்பது நெடுநாட்களாக ஒரு பெரிய சர்ச்சையாக இருந்தது. சமீப காலத்தில் ஒரு ஆய்வாளர் அவர் பிறந்த ஊரை ஆதாரத்துடன் வெளியிட்டார்.

sai baba with devotees

சாய்பாபா முஸ்லிம் என்ற செய்தியை ஆளாளுக்கு பரப்புகிறார்கள். அவர் ஒரு பிறாமணர். இது சாய்பாபாவின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது என்று கூறி  சிலகாலம் முன்பு மும்பையிலுள்ள சாய்தாம் கோவில் நிர்வாகிகள் ஒரு வழக்கு பதிவு செய்தார்கள்.

துவாரகா பீடத்து சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூப் ஆனந்த் சரஸ்வதி சாய்பாபா ஒரு முஸ்லீம்தான் என்று உறுதி படுத்தியதைத் தொடர்ந்துதான் இந்த சர்ச்சை மேலும் வலுவானது.

துவாரகா பீட சங்கராச்சாரியர் உமாபாரதியை பார்த்து கேட்ட கடுமையான கேள்வி “இராமன் கோயில் கட்ட வேண்டிய அமைச்சர் முஸ்லீம் பாபாவின் சீடராக இருப்பதா? ” என்பதே.

சாய்பாபா “பதாரி” என்ற கிராமத்தில் ஹிந்து பிறாமணராகவே பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் அவரை ஒரு முஸ்லீம் ஃபக்கீரிடம் வளர்ப்பதற்கு கொடுத்தார்கள் என்று பலரும் நம்புகின்றனர்.

முஸ்லீமாக இருக்கும் சாய்பாபாவை முஸ்லீம்களே ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது இந்துக்கள் எதற்காக அவரை வழிபடவேண்டும் என்பதுதான் சங்கராச்சாரியார் எழுப்பிய கேள்வி. யாரும் சாய்பாபாவின் உருவச்சிலையை வைத்து வழிபடக்கூடாது. . இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுத்த வைத்தது ஷிர்டிகாரர்கள் செய்த சதி என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு சாய்தாம் கோவில் நிர்வாகத்தினரையும் நாடெங்கும் உள்ள சாய்பாபா பக்தர்களையும் கொதிப்படையச் செய்தது.

சாய்பாபா முஸ்லீமா..?

ஷிர்டி சாய்பாபா இஸ்லாமிய சூஃபியிஸ சிந்தனை கொண்டவராக இருந்தார். குர்ஆன், ஹதீஸ், ஷரியத், ஃபிக்ஹூ மார்க்கச் சட்டம், மற்றும் தரீகத் வழிமுறை அனைத்திலும் கைதேர்ந்தவர். இதுபோன்ற கருத்துக்களை சில உருது நூல்களில் காண முடிகின்றது. அதுவன்றி வேதங்கள், உபநிஷாத், பகவத்கீதை அனைத்தும் அவருக்கு அத்துப்படியாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

அவர் பிறமதத்து வேதங்களையும், சமய கிரகந்தங்களையும் அறிந்து வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் இஸ்லாத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டார் என்று ஒரு சிலர் வாதிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து சமயங்களையும் Comparitive Religion Study செய்யும் ஜாகிர் நாயக், அதற்கு முன்பு அஹ்மத் தீதாத் போன்றவர்கள் அனைத்து வேதங்களையும் கற்றறிந்தவர்கள் என்பதை நாமறிவோம்.

அதே சமயம் சாய்பாபாவின் சில செயல்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதாக இருந்ததை நம்மால் மறுக்க முடியாது. இஸ்லாமியர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

முஸ்லீம் என்று அவரை சொல்ல முடியாது. ஏனெனில் அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தன. அவர் காதணிகள் அணிந்திருந்தார், அவர் “ராம நவமி” கொண்டாடினார் என்று வாதிடும் முஸ்லீம்கள் ஒருபுறம்.

மேகா என்ற பக்தருக்கு சிவலிங்கம் வழங்கியது, அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய படத்தை வைத்து பூஜிப்பதை அவர் அனுமதித்தது, அக்னி குண்டமேற்றி அதிலிருந்து ‘உதி’ என்ற விபூதியை அவர் தன் பக்த கோடிகளுக்கு வழங்கியது போன்ற காரணங்களால் முஸ்லீம்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இன்னொருபுறம் முஸ்லீம்தான் என்று வாதிடுபவர்கள் பின்வரும் காரணங்களை அடுக்கி வைக்கிறார்கள். அவர் பள்ளிவாசல்களிலேயே அதிகம் குடியிருந்தார், “அல்லாஹ் மாலிக் ஹே” (ஆள்பவன் அல்லாஹ்வே) என்று அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தார், சமைத்த இறைச்சியையே பிரசாதமாக வழங்கி வந்தார். அவரை “கலந்தர்” ஆகவும் “முர்ஷித்” ஆகவும்தான் அவருடைய வாழ்நாளில் அவரை முஸ்லீம்கள் போற்றி வந்தனர். அவர் தாஜுத்தீன் பாபாவின் நண்பராக இருந்தார்.. அவரை பின்பற்றியவர்களில் இந்துக்கள்தான் அதிகம் என்பதால் பிற்பாடு அவருக்கு உருவச்சிலை வைத்து அவரை தெய்வமாகி விட்டார்கள் என்று என்பது சில முஸ்லீம்களின் பார்வை. அவர் முஸ்லீமாக இல்லாதிருந்தால் எப்படி அவரை பள்ளிவாசலில் வாசம் செய்ய அனுமதித்திருப்பார்கள் என்பது அவர்கள் வைக்கும் வாதம்.

மெஹர் பாபா என்ற முஸ்லிம் துறவி அவரை “குத்தூப்-ஏ-இர்ஷாத்” என்று அழைத்தார். அதற்குப்பொருள் அவர் வலிமார்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் அந்தஸ்த்தில் உள்ளவர் என்று ஒரு நூலில் எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆராய்ந்து பார்த்தபோது மெஹர் பாபா (1894-1969) முஸ்லீம் துறவியல்ல அவர்  பார்ஸி சமூகத்தைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது.

Five_Perfect_Masters

ஷிர்டி சாய்பாபா, உபாஸ்னி மஹராஜ், ஹஸ்ரத் தாஜுத்தீன் பாபா, நாராயண் மஹராஜ், ஹஸ்ரத் பாபாஜான் இந்த ஐவரும் ஆன்மீக ஞானிகளில் மேலானவர்கள் என்று மெஹர்பாபா எழுதுகிறார். பார்ஸீ சமூகத்தைச் சார்ந்த மெஹர் பாபாவின் கருத்துக்களை எந்த முஸ்லீம்களும் ஏற்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

ஷிர்டி சாய்பாபாவுடைய வாழ்நாளில் அவருக்கு வாய்த்த முக்கிய சீடர்களில் பெரும்பாலோர் இந்துக்களே. எடுத்துக்காட்டாக : தாஸ்கணு மகாராஜ், நாராயண கோவிந்த சந்தோர்க்கர், ஹரிசீதாராம் தீட்சித், உபசானி பாபா, கபர்தே, அன்னாசாகேப், மஹல்சாபதி, போல்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவர் கபீரின் மறுபிறவி, சிவபெருமானின் அவதாரம், விஷ்ணுவின் அவதாரம்  என்றும் அவரை  சாய்நாத் சாய்ராம் என்றும் அவரை வழிபடும் இந்து சகோதரர்கள்கூறுகிறார்கள்.

அன்பு , அறம் , மனிதநேயம் , உதவி மனப்பான்மை , மன்னித்தல் – இதுபோன்ற எல்லா மதங்களும் போற்றும் பொதுவான கருத்துக்களே அவர் போதித்தார் என்ற காரணத்தால் அவர் இந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்தான் என்று யாராலும் அடித்துச் சொல்ல முடியவில்லை.

சாய்பாபாவை உயிரோடு இருக்குபோதே அவரை தெய்வநிலைக்கு கொண்டு சென்றார்கள். யேவாலாவைச் சேர்ந்த ஆனந்தநாத் அவரை “ஆன்மீக வைரம்” என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். கங்காகிர் என்ற மற்றொரு துறவி அவரை “ஆன்மீக ஆபரணம்” என்று போற்றித் துதித்தார். பீட்கர் மஹாராஜ் அவரை “ஜகத்குரு” என்று பெயர் சூட்டினார்.

முற்றிலும் மாறுபட்ட கோட்பாடுகளைக் கொண்ட பார்ஸி சமூகத்தவரும் அவரை வழிபட்டதுதான் ஆச்சரியமான விஷயம். பார்ஸி சமூகத்தைச் சார்ந்த நானி பால்கிவாலா, விஞ்ஞானி ஹோமி பாபா, மெஹர் பாபா போன்றோர் சாய்பாபாவின் பக்தர்களாக இருந்தார்கள்.

சாய்பாபாவை வழிபடும் இந்து பக்தர்கள் கூறுவது இது. பாபா, தான் மகாசமாதி ஆவதற்கு தேர்ந்தெடுத்த நாள் விஜயதசமி தினம். இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும் என்று சாய்பாபா பக்தர்கள் கூறுகிறார்கள்.

அவர் முஸ்லீம் போல தாடி வைத்திருந்தார். முஸ்லீம் ஃபக்கீர் போல உடை தரித்திருந்தார் , தர்கா அல்லது மசூதியில்தான் அதிகம் தங்கியிருந்தார் தலைமுடியை மறைத்திருந்தார். சாய்பாபாவின் உடலை எரித்து அவர் சாம்பலை கங்கையில் கரைக்கவில்லை . மாறாக முஸ்லீம்கள் போலவே அவரை புதைத்து சமாதி கட்டினார்கள்.  “அல்லாஹ் மாலிக் ஹே” இதுதான் அவரது தாரக மந்திரமாக இருந்தது. இவையாவும் அவர் முஸ்லீம் என்றே நம்மை நம்ப வைக்கின்றது.

1903-ஆம் ஆண்டில் ஒரு நபர் மீது திருட்டுப் பொருட்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்த பொருள் தான் திருடிய பொருள் இல்லை, அது சாய்பாபா கொடுத்தது என்று வாக்குமூலம் அளித்தார். ஆகவே சாய்பாபா சாட்சி கூறுவதற்காக தூலியா (Dhule also called as Dhulia) மாஜிஸ்த்ரேட் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தார்கள்.

சாய்பாபா மிகப் பெரிய துறவி. அவருக்கு ஆயிரக்ககணக்கில் சிஷ்யகோடிகள் இருக்கிறார்கள். அவரை சாட்சி சொல்ல நீதிமன்றம் அழைப்பது முறையல்ல என்று பக்தகோடிகள் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உதவி கலெக்டராகவும் முதல் வகுப்பு மாஜிஸ்த்திரேட் பதவி வகித்த நானா ஜோஷி என்பவரை ஷிர்டிக்கு அனுப்பி வைத்தார். நானா ஜோஷி வருவது யாருக்கும் தெரியாது என்ற போதிலும் சாய்பாபா அதை முன்கூட்டியே அறிந்தவராக மேசை, நாற்காலிகள் எல்லாம் தயார் செய்து அதை ஒரு நீதிமன்றம் போன்று ஏற்பாடு செய்திருந்தார் என்று சொல்லுகிறார்கள்.

அவர்களுக்குள் நடந்த உரையாடல் இதோ:

கமிஷனர்: உங்கள் பெயர்?

சாய்பாபா : எல்லோரும் என்னை சாய்பாபா என்று அழைக்கிறார்கள்

கமிஷனர் : உங்கள் தந்தையின் பெயர்?

சாய்பாபா: அவர் பெயரும் சாய்பாபா

கமிஷனர்: உங்கள் குருவின் பெயர்?

சாய்பாபா: வெங்குசா

கமிஷனர்: உங்களின் மதம்?

சாய்பாபா: கபீரின் மத

கமிஷனர்: உங்கள் வயது?

சாய்பாபா: மில்லியன் காலம்

கமிஷனர்: சொல்லுவதெல்லாம் உண்மையென சத்திய பிரமாணம் செய்ய முடியுமா?

சாய்பாபா: இதுவரை நான் பொய் சொன்னதும் இல்லை; இனியும் சொல்லப் போவதில்லை

கமிஷனர்: குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்குத் தெரியுமா?

சாய்பாபா : நான் தெரிந்து வைத்திருக்காதவர் யாருமேயில்லை

சாய்பாபா முஸ்லீமா இல்லையா என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும். சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் கூட முஸ்லீம்தான் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அவர் பாபா ஷேக் ஃபரீத் ஷாகர்கன்ஞ் (1173-1266) அவர்களின் சீடராக இருந்தார் என்றும் அவர் முஸ்லீமாக இல்லாதிருந்தால் எப்படி இஹ்ராம் உடை அணிந்து மக்கா சென்று வந்திருக்க முடியும் என்று வாதிடுகிறார்கள்.

அது எப்படியோ, சாய்பாபா முஸ்லீமாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன ஆனால் அவருடைய செயல்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு இருந்ததா இல்லையா என்பது வாதத்திற்குரிய விஷயம்.

  • அப்துல் கையூம்
 

Tags: