RSS

Category Archives: சுள்ளானும் உல்லானும்

சுள்ளானும் உல்லானும்


ஆங்கிலேயர்கள் பருவகாலத்தை Spring, Summer, Autumn, Winter என நால்வகையாகப் பிரித்தார்கள். நாகூரைப் பொறுத்தவரை சீஸன்ஸ் எத்தனை என்ற எண்ணிக்கை கணக்கில் அடங்காது. “கோலாமீன் சீஸன்”, “உல்லான் சீஸன்”, “நவ்வாப்பழ சீஸன்” (நாவல் பழம்), மாம்பழ சீஸன் என்று பலவாரியாகப் பிரித்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு காற்று காலமாயிருந்தால் “கோலாமீன் சீஸன்”, மழைக்காலமாக இருந்தால் அதற்குப் பெயர் “உல்லான் சீஸன்”. கோடைக் காலமாக இருந்தால் “நொங்கு சீஸன்”. ஜூன்-ஜூலை மாதத்தில் “நாவல் பழம் சீஸன்”. இப்படி எல்லாமே சாப்பிடுற அயிட்டத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பருவங்களை பகுத்திருந்தார்கள். நாவல்பழ சீஸன் தன்னோடு அழைத்து வருவது கொசுவும் அதோடு கண்வலியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்றைய தலைமுறையினர் கொலைவெறியோடு “சுள்ளானைத்” தெரிந்து வைத்திருக்கும் அளவு “உல்லானைத்” தெரிந்து வைத்திருக்கவில்லை. நேற்று பஹ்ரைனில் நடந்த “Formula-1” கார் பந்தயத்தின் போது நடந்த கலைநிகழ்ச்சியை தொலைக்காட்சியில் என் மகள் பார்த்து விட்டு “Hi Dad! Watch that Stilt Walker!” என்று பரவசப்பட்டாள். நம்ம ஊரு பாஷயில் சொன்னால் கம்பங்கூத்தாடிகள்.

“Stilt என்று சொல்லுகிறாயே அதுக்குப் பேருதான் உல்லான் (STILT). அதைத்தான் நாங்கள் பொறித்துத் தின்போம்” என்று சொல்ல வாய்த் துடித்தது. இந்த கழைக்கூத்தாடிகளுக்கு ஏன் STILT WALKERS என்று பெயர் வைத்தார்கள் என்பது படத்திலிருக்கும் உல்லானுடைய ஒல்லிக்குச்சி கால்களைப் பார்த்தாலே உண்மை விளங்கி விடும்STILT WALKERS எனப்படும் கேளிக்கையூட்டுபவர்களை “உல்லான் நடையாளர்கள்” என்று சொன்னால் பொருத்தமான பதமாக இருக்குமோ? யுவகிருஷ்ணாவின் பதிவில் “ஒடுங்கிப் போன உல்லான் கண்கள்” என்ற வருணனையை நான் வெகுவாக ரசித்ததுண்டு.

உல்லான்களில் தான் எத்தனை வகைகள்? கோட்டுல்லான், கொசு உல்லான். உயிருல்லான், உப்பு உல்லான் – இன்னும் எத்தனை வகைகளோ? செட்டியார் ஸ்கூலில் சரவணா சார் வகுப்பில் attendance எடுக்கையில் எல்லா மாணவர்களும் “உள்ளேன் ஐயா” என்று சொல்லும்போது, சாய்மரைக்கான் மட்டும் “உல்லான் சார்” என்று நக்கல் அடிக்கும் காட்சி நினைவில் வந்து தொலைத்தது.

சிரவி, பொன்னாந்தட்டான், காடை, கெளதாரி, கொக்கு, மடையான், மஞ்சக்கொலுப்பான், குயில், வரிக்குயில் என்று விதவிதாமாக தின்று அனுபவித்த பெருசுகளை, வெறும் பாய்லர் கோழிகளை மாத்திரம் தின்று வளரும் சிறுசுகளொடு இணைத்துப் பார்க்கையில் அவர்களின் பாடு படுபாவமாகத் தெரிகிறது. Concrete Jungle-ல் வாழும் நம் பிள்ளைகள், நாம் அனுபவித்த பல பேறுகளை அனுபவிக்க முடியாமல் இழந்து நிற்கின்றார்களே என்று பரிதாபம் அடையத் தோன்றுகிறது.

தர்கா மார்க்கெட்டிலிருந்து நியுபஜார் லைன் வழியே ஒரு ஆசாமி உல்லானை கறிப்பொட்டியில் நிறைத்து வாங்கி வருகின்றார் என்றால் அவருடைய நடையே பந்தாவாக இருக்கும். நாலாபுறமும் நோட்டம் விட்டபடி, கைலியை சற்று தூக்கிப் பிடித்தவாறு, மிடுக்கானநடையில், பவுமானத்தோடு, “என்னாங்கனி சேதி” என்று ராகமிழைத்து குசலம் விசாரிக்கிறார் செல்ல மரைக்காயர் என்றால் “Something Fishy” என்று அர்த்தம்.

‘சுங்குத்தான் குழல்ஊதி
சுட்டக் களிமண்
சூறாவளியாய் தாக்கி
சுருண்டிடும் குருவி’

என்று நாகூர் நினைவுகளை “அந்த நாள் ஞாபகம்” என்ற தலைப்பில் நானெழுதிய கவிதைத் தொகுப்பினை ‘சமரசம்’ பத்திரிக்கையில் தாழை எஸ்.எம்.அலீ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“நீண்ட குழலை வாயில் வைத்து, சுட்ட களிமண் உருண்டையால் குருவியை வேட்டையாடும் பாங்கும் கடலோரக் கிராமங்களிலுள்ள கலையே. வாய்க்காற்று சூறாவளியாக மாறியதை சொல்லாமல் சொல்வது சுருண்டு விழும் குருவிகள்தான்” என்ற தாழை எஸ்.எம்.அலீயின் விமர்சன அலசல், மறந்துப் போன, மறைந்துப் போன ஒரு திறமையான கலையை நினைவுபடுத்தும் வகையில் நான் வெளியிட்ட ஆதங்கத்திற்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது.

உல்லானை நன்றாக காயப் பொறித்து ஊரிலிருந்து கடல் கடந்து கொண்டு வந்து இங்கு கஸ்டம்ஸ்காரனிடம் ஆயிரம் கேள்விகளுக்கிடையில் மாட்டிய கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

இப்போது யாரும் சுங்குத்தான் வைத்துக் கொண்டு வேட்டையாடப் போவதாகத் தெரியவில்லை. மானை வேட்டையாடியதற்காக பட்டோடி நவாப்பையும், சல்மான் கானையும் உள்ளே தள்ளும்போது நம்ம ஊரு சுல்தான் நானாவும், சுங்குத்தான் நானாவும் எம்மாத்திரம்? அதுவும் போயும் போயும் உல்லானைச் சுட்டுவிட்டு உள்ளே போவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்தான்.

– அப்துல் கையூம்