RSS

Category Archives: ஜெயகாந்தன்

விளம்பர வெறியர்களின் விளையாட்டு


For my blog

கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘எழுத்து மோசடி’ பற்றிய விவாதங்கள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்நேரத்தில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜெயகாந்தனின் மகள் தீபா சொல்வது உண்மைதானா? நாடறிந்த கவிஞர் வைரமுத்துவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா? வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் படிக்கச் சொன்னார் என்பதற்காக வாசகர்கள் விழுந்தடித்துக் கொண்டு படித்து விடப் போகிறார்களா என்ன?

letterJayakanthan-1

ஜெயகாந்தன் அவர்களின் உடல்நிலை கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்தது அவருக்கு  நெருங்கிய வட்டாரங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உண்மை இப்படியிருக்க, இதுபோன்ற கீழ்த்தரமான விளம்பர யுக்தி வெளியே தெரியவந்தால் அது வைரமுத்துவின் புகழுக்கு பெரும் களங்கம் விளைவிக்கும் என்பது அனுபவப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்குத் தெரியாதா என்ன? பின்னே இது யாருடைய சித்து விளையாட்டு?

ஜெயகாந்தனிடம் மிக நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் உண்மை என்னவென்று விசாரித்துப் பார்த்தேன். இவ்விஷயத்தில் இடைப்பட்ட தரகர்கள் நிறையவே விளையாடியிருப்பது தெரியவந்தது.

ஜே.கே.யின் புதல்வி தீபா சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. இப்பிரச்சினையில் கவிஞர் வைரமுத்து இதன் விளைவுகள் அறியாமலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்பது என் தாழ்மையான கருத்து.

கவிஞர் கண்ணதாசன் தன் கவிதைகளை ஒவ்வொரு வரிகளாகச் சொல்லச் சொல்ல கண்ணப்பன் அல்லது அரசு நாச்சியப்பன் போன்ற அவரது உதவியாளர்கள் எழுதி பதிவு செய்வார்கள் என்பது  நம்மில் பலருக்கும் தெரியும்.
அதே போன்று ஜெயகாந்தனிடமும் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வந்தது. பல சந்தர்ப்பங்களில், அப்படி அவர் சொல்லச் சொல்ல எழுதும் பணியில் இருந்தவர் செல்லூர் கிருஷ்ணன் என்பவர். இவர் ஆரம்பக் காலத்தில் கொத்தனார் பணி பார்த்தவராம். பின்னர் கவிஞர் பரிணாமன் என்ற பெயரில் சினிமா உலகில் வலம் வந்திருக்கிறார்.திரைப்படத் துறையில் கவிஞர் பிறைசூடனுக்கு உதவியாளராக இருந்த அனுபவம் இவருக்குண்டு. பல நூல்களும் எழுதியிருக்கிறார்.

download

கவிஞர் பரிணாமன் என்கிற செல்லூர் கிருஷ்ணன்

 

“ஐந்தாம் வகுப்போடு எனது பள்ளிக் கல்வி நின்று போனது. சித்தாள் வேலைத் தொடங்கி கட்டிடக் கொத்தனார் ஆகிவிட்டேன்” என்று அவரே வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

இக்கவிதை அவரது ஆரம்ப நாட்களில் கவிஞர் பரிணாமன் எழுதியது.

“பெற்றோர்க்குப் பணியாமல் ஊரை சுற்றி
பிழைபலவும் செய்தவன்நான் உண்மை சொல்வேன்!
நற்றாயும் பள்ளியிலே கொண்டு விட்டாள்
நான்கைந்து ஆண்டிருக்கப் பொறுமையில்லை!
சுற்றத்தார் யாவருமே கருதவில்லை!
சுதந்திரமாய்த் தெருக்களையே கற்றுத் தேர்ந்து
கற்றோர்கள் முன்வந்தேன் கவிதையாகி
கல்லாத எனைநன்கு கற்றுக்கொள்வீர்! ‘’

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போன்று வைரமுத்துவை எக்குத்தப்பாக இவர்தான் மாட்டிவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள். கவிப்பேரரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், சினிமா வாய்ப்பு சிபாரிசுக்காகவும் இப்படியொரு புகழ்ச்சி கடிதத்தை இவர் வைரமுத்துவிற்காக தயார் செய்து கொடுத்தார் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது.

கவிஞர் வைரமுத்து இதுபோன்ற புகழ்ச்சியில் எளிதில் மயங்குபவர்; விளம்பரத்துக்காக ஏங்குபவர் என்பதை மனதில் இருத்தி இடைப்பட்ட தரகர்கள் விளையாடிய நாடகமிது. இதில் குமுதம் நிருபருக்கும் பெருமளவு பங்கு உள்ளது.

“கேப்பையிலே நெய் வடியுதென்றால் கேட்பவனுக்கு எங்கே போனது புத்தி” என்பதுபோல் குமுதத்தில் பணிபுரியும் நிருபரொருவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான விளம்பர யுக்தியைக் கையாண்டார் என்று சொன்னால் குமுதம் நிர்வாகத்தினர் இதனை தடுத்திருக்க வேண்டாமா?

முன்பொருமுறை வைரமுத்து எழுதியிருந்தது இளையராஜா ரசிகர்களுக்கிடையே பெருத்த சர்ச்சையை உண்டு பண்ணியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும்.

வைரமுத்து எழுதிய அந்தச் சர்ச்சைக்குரிய செய்தி இதுதான்:

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம். வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

“சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?”

இது வைரமுத்து அவர்கள் ஜெயகாந்தனை வைத்து விளம்பரம் தேடியும், இளையராஜா மீதான ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்ட பழைய கதை.

ஆனால் ஜெயகாந்தன் மரணத்தை அடிப்படையாக வைத்து “வைரமுத்து சிறுகதைகளை வாழ்த்தி ஜெயகாந்தன் அனுப்பிய இந்தக் கடிதம்தான் அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம்” என்று குமுதம் பத்திரிக்கை எழுதியிருப்பது மிகவும் கேவலமானச் செயல்.

ஜெயகாந்தன்தான் உயிரோடு இல்லையே ? அவர் இனி எழுந்து வந்து இதற்கு மறுப்பு கொடுக்கவா போகிறார் என்ற இறுமாப்புதானே இவர்களுக்க?. ஒரு மாமனிதரின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் இவர்களை எந்த கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது?

Vairamuthu Moondram Ulaga Por Book Launch Photos

“மூன்றாம் உலகப்போர்” நூல் வெளியீட்டின்போது ஜே.கே., கலைஞர்,கமலஹாசன், வைரமுத்து

 

வைரமுத்துவைப் பொறுத்தவரை ஜே.கே. கடைசிவரை ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தார் என்பது உண்மை. வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி, கமலஹாஸன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயகாந்தன். ‘ஓசோனில் ஓட்டை விழுந்தால் உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா..?. படைப்புகள் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது” என்று தன் வழக்கமான பாணியில் வைரமுத்துவை கண்டித்தார். அப்படிப்பட்ட ஆளுமையுள்ள மனிதர் ஜே.கே..

jayakanthan270409_1

வேறொரு விழாவின்போது கமலஹாஸன், ஜே.கே., வைரமுத்து

 

ஜெயகாந்தன் மீது வைரமுத்துவிற்கு எப்பொழுதுமே ஒரு “Hero Worship” உண்டு. அந்த எண்ணத்தில் இந்த இடைப்பட்ட தரகர்களின் சூழ்ச்சிக்கு வைரமுத்து இலக்கானார் என்பதில் சற்றும் வியப்பில்லை. இந்த விளையாட்டில் போதிய பங்கு அந்த குமுதம் நிருபருக்கு உண்டு என்பது நிரூபணம்.

தன் அருமை தந்தையை இழந்து வாடும் ஜெயகாந்தனின் புதல்வி தீபாவுக்கு இவர்களுடைய இந்த கீழ்த்தரமான விளம்பர வெறி எந்த அளவுக்கு அவருடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். முகநூலில் அவரெழுதியிருப்பது அவரது உள்ளக்கிடக்கை.

ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் திரு வி.என்.சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கடந்த மாதம் சூர்யா மருத்துவமனையில் ICU வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை காணச் சென்றபோது “நான் VNS வந்திருக்கிறேன்” என்று இவர் அழைத்தபோதும் கூட ஜெயகாந்தனால் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குழந்தையைப் போன்ற மன நிலையிலிருந்த அவர் வைரமுத்துவின் சிறுகதைகளை படிக்கச் சொல்லி வாழ்த்தி ஒரு கடிதமாகவே எழுதி ஒரு ஆள் மூலம் அனுப்பி வைத்தார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு என்பதாகப் பேச்சு.

தீபாவின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் நாம், இந்த கீழ்த்தரமான விளையாட்டை நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களின் கேவலமானச் செயலை வன்மையாக  கண்டிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

– அப்துல் கையூம்

 

Tags: ,