RSS

Category Archives: திண்ணையில் நான்

பைக்காரா


(2012 உலகம் அழியப் போவதாக அன்று பயமுறுத்தினார்கள். 2009-ஆம் வருடம் ‘திண்ணை’ இணைய இதழில் நானெழுதிய ‘பைக்காரா’ வின் மீள்பதிவு இது) – அப்துல் கையூம்

உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான்.

அனுபவம் ஒருவனை சாக்ரடீஸ் ஆக்கி விடுகிறது என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். இல்லாவிட்டால் என் சிந்தனையிலிருந்து இது மாதிரி ஒரு தத்துவம் பிறந்திருக்குமா என்ன?

இந்த டிராலி தத்துவத்தை விளக்குவதற்கு ஒரு பிளாஷ்‘பேக்’ தேவைப் படுகிறது. என் வலைப்பதிவில், சிம்லாவில் என் மகன் ஒரு மலைப்பாம்பைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிரசுரித்து “இதுவும் நல்ல பாம்புதான். ஏனென்றல் இது கடிக்கவில்லையே!” என்று குசும்பு செய்திருந்தேன். நான் எழுதியது சரிதானே? கெட்ட பாம்புதானே கடிக்கும்?

பின்னூட்டம் எழுதிய நண்பர் ஒருவர் “அது நல்ல பாம்பு கிடையாது. பைதான் (Python). அது கடிக்காது.” என்று நான் ஏதோ கொலைக் குற்றம் செய்ததைப்போல் சீரியஸா என்னைத் தாக்கியிருந்தார்.

இதைப் படித்த என் மனைவி “அட! நம்ம மகன் தூக்கி வைத்திருப்பது பைதானா? பைதான் நானும் தூக்கியிருக்கிறேனே?” என்று ஒரு போடு போட்டாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!! நறுக்கும்போது கத்திரிக்காவில் புழு வந்தாலே நாலு வீட்டுக்கு கேட்கும்படி அலறுபவள், நமக்கே தெரியாமல் எப்போது பைதான் தூக்கினாள் என்று அதிர்ந்து போனேன்.

அவள் ‘பைதான்’ என்று சொன்னது அவளது டம்பப்பையைதான் என்று ட்யூப்லைட்டான நான் பிறகுதான் புரிந்து கொண்டேன். ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்பது போல, என்னோடு இணைந்து அவளும் ரம்பம் போட கற்றுக்கொண்டாளே என்று உள்ளுர மகிழ்ச்சி எனக்கு.

‘இந்த கைப்பையையே கருவாக வைத்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன?’ என்ற நினைப்‘பை’ வரவழைக்க அதுவே எனக்குள் குபீர் சிரிப்‘பை’ வரவழைத்தது.

சூப்பர் மார்க்கெட்டில் சில கணவன்மார்கள் (என்னையும் சேர்த்துதான்) கைநிறைய பைகள் தூக்கிக் கொண்டு பலராமன்களாக போவதைப் பார்க்கையில் பாவமாக இருக்கும். பாரம் தோள்பட்டையை அழுத்தும். அய்யனார் சாமி போன்று பல கைகள் இருந்தால் தேவலாம் போலிருக்கும்.

ஒரு சமயம் என் நண்பர் பாண்டியன் தன் மனைவிக்குப் பின்னால் ஏராளமான சிவப்பு நிற கேரி பேக்குகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போக “என்ன செம்பை வைத்தியநாதன் போல் போய்க் கொண்டிருக்கிறீர்கள்?” என்று நான் அவரை கலாய்க்க, “என்னைப் பார்த்தால் பெரிய இசை மேதை போல் உங்களுக்குத் தோன்றுதாக்கும்? என்று அவர் பெருமையோடு கூற, “இல்லை. சிகப்பு பையைத்தான் நான் “செம் பை” என்று கூறினேன் என்று அவருக்கு நான் விளக்கம் கூற, ஊஹும்.. அவர் முகத்தில் ஈயாடவில்லை.

இந்த சூப்பர் மார்க்கெட் டிராலி, நம்முடைய சுமையை ஓரளவு குறைத்து விட்டது என்பதென்னவோ உண்மைதான். கல்யாணமான ஆண்கள் இதுபோன்று பை தூக்கியே அலைக்கழிக்கப் படுவார்கள் என்பதை உணர்த்தவே நம்மைச் சிறுவயதில் எல்லோரும் “பையா!… ஏ.. பையா!” என்று விளிக்கிறார்கள் போலும். அப்போது எனக்கு இந்த உண்மை விளங்கவில்லை. இப்போது ‘பைக்காரா’ ஆன பின்பு நன்றாகவே விளங்குகிறது.

இங்கு அரபிகளும், இந்திக்காரர்களும் “பையா! (Bhaiya), கைஸா ஹே?” என்று என்னை நலம் விசாரிக்கும்போதும், நாம் பை தூக்குகிற விஷயம் இவர்களுக்கும் எட்டி விட்டதே என்று நொந்துப் போய் விடுவேன்.

அன்று ஹைப்பர் மார்க்கெட்டிலிருந்து இரண்டு கைகளிலும் பையை ஏந்தி வந்த என்னை, எப்போதும் இங்கிலீசுலேயே உரையாடலைத் தொடங்கும் என் இனிய தமிழ் நண்பரொருவர் “பை தி பை, வேர் ஆர் யூ கோயிங்?” என்று வினவியபோது, கையிலிருந்த பைகளைக் கொண்டே அவர் மண்டையில் ஓங்கி அடிக்கலாம் போலிருந்தது.

முட்டாள்தனமான காரியம் எதையாவது செய்து விட்டால் நம்மை ‘பேக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள் என்று புரிய மாட்டேன்கிறது. கல்யணமானவர்கள் என்றில்லை. இப்பொழுதெல்லாம் ஏராளமான புள்ளையாண்டான்கள் பேக்குகளாக அலையுதுகள். ஆமாம் எல்லோருடைய தோள்பட்டையிலும் லேப்டாப் பேக்குகள் தொங்குகின்றன.

“ரோட்டி கப்படா மக்கான்” (உணவு, உடை, உறைவிடம்) என்ற மனோஜ்குமாரின் இந்திப் படத்தில் சர்தார்ஜி வேடத்தில் நடிக்கும் பிரேம்நாத் பாடும் பாடலில் ஒரு பத்தி வரும்.

“அன்று கை நிறைய காசு கொண்டுச் சென்று பை நிறைய சாமான்கள் வாங்கி வந்தோம். இன்று பை நிறைய காசு கொண்டுச் சென்று கை நிறைய சாமான்கள் வாங்கி வருகிறோம்” என்று.

ஒருபுறம் விலைவாசி கிடுகிடுவென்று ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் தந்தைக்குலம் பைகள் தூக்கும் இம்சைகள் இன்னும் குறைந்தபாடில்லை. யாரோ ஒரு அறிவில்லா ஜீவி “கிரெடிட் கார்ட்” என்ற ஒன்றை கண்டுபிடிக்கப்போய் சூப்பர் மார்க்கெட்டில் நாம் எவ்வளவு வாங்குகிறோம், எத்தனைப் பைகள் தூக்கப் போகிறோம் என்ற கணக்கு வழக்கே தெரிய மாட்டேன்கிறது.

பெரியவர் ஒருவர் கருமியிடம் சென்று காசு கேட்டிருக்கிறார். அவர் காசு கொடுப்பதற்கு மனமில்லாமல் “காசா லேசா?” என்று பதில் கூறியிருக்கிறார். அதாவது “காசு என்றால் உனக்கு லேசா? அவ்வளவு எளிதில் உனக்கு தூக்கி கொடுத்துவிடுவேனா?” என்ற அர்த்தத்தில். அதற்கு அந்த பெரியவர் கருமியின் வாயிலிருந்து வந்த அதே வார்த்தைகளை வைத்தே “காசாலே சா” என்று சாபம் விட்டு விட்டார். அதாவது காசாலே(யே) சா – நீ சொத்து ஒழி; என்ற அர்த்தத்தில்.

இந்த வெள்ளைக்காரன் செய்து விட்டுப் போன குசும்பு அதை விட மோசம். பணத்திற்கு ரூபாய் என்று பெயர் வைத்துவிட்டு சில்லறைக் காசுக்கு ‘பைசா’ என்று பெயர் வைத்துவிட்டுப் போய் விட்டான். பை தூக்கியே சா(வு) என்று சாபம் விட்டுப் போய்விட்டானோ என்னவோ தெரியாது.

அந்தக் காலத்தில் ஒரு பெரிய கோபுரத்தை சாய்வாக கட்டி விட்டு அதற்கு “பைசா” கோபுரம் என்று பெயரையும் வைத்து விட்டுப் போனவர்களின் செயலை ஊமைக்குசும்பு என்று
ஏன் சொல்லக் கூடாது.

சிட்டிசன் படத்தில் வசுந்தராதாஸ் மழலைத் தமிழில் “பூக்காரா..! பூக்காரா.. !” என்று பாடும் பாட்டை வானொலி பண்பலையில் கேட்கும் போதெல்லாம் “பைக்காரா..! பைக்காரா..!” என்று அந்த அம்மா நம்மை கேலி செய்கிறதோ என்று சந்தேகப்படுவேன்.

கல்யாணமான புதிதில் ஊட்டிக்கு தேனிலவு சென்றபோது நான் முதலில் சென்று சுற்றிப்பார்த்த இடம்கூட “பைக்காரா அருவி”தான். இப்போது சூப்பர் மார்க்கெட்டில் என் மனைவிக்குப் பின்னால் பைகளைத் தூக்கிக் கொண்டு ‘பைக்காரா’வாக போகும் போதெல்லாம் ஏன்தான் அந்த பைக்காரா அருவிக்குப் போனோமோ என்று வருந்துவதுண்டு.

நம் தாய்மார்களைப் பார்த்தோமானால் குழந்தைகள் விருந்தாளிகளை வாய் நிறைய வரவேற்க ஏதுவான வார்த்தைகளை கற்றுக் கொடுக்க மாட்டார்கள். விருந்தாளிகள் வீட்டில் இருக்கும்வரை குழந்தைகள் வாயையே திறக்காது. பேசவே பேசாது. அவர்கள் புறப்படத் தயாராகிவிட்டால் போதும் “உடனே “பை பை அங்கிள்” “டாட்டா அங்கிள்” என்று விழுந்தடித்துக் கொண்டு வழியனுப்ப ஆரம்பித்து விடும்.

மனைவிக்கு பின்னால் பை தூக்கியே பழக்கப்பட்ட கணவன்மார்கள் “பை பை அங்கிள்” என்று நண்டு சுண்டுகள் கூறுவதைக் கேட்டு ‘நம்மைதான் கேலி பண்ணுகிறார்களோ?’ என்று டென்ஷன் ஆகி பையைத் தூக்கிக்கொண்டு பைய நழுவி விடுவதும் உண்டு.

தாய்க்குலம் கையில் தூக்கிக்கொண்டு போனால் அதற்குப் பெயர் கைப்பையாம். நாம் தூக்கிக் கொண்டு போனால் அதற்குப் பெயர் லக்கேஜாம். என்ன அநியாயங்க இது?

இன்று நேற்றல்ல, 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த அம்மாமார்கள் டம்பப்பையைத் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். டம்பம் அடிப்பதற்காகவே தூக்கிக்கொண்டு போகும் இந்த பைக்கு ‘டம்பப்பை’ என்று பெயர் வைத்த அந்த முகந் தெரியாத புண்ணியாவனை பாராட்ட வேண்டும். பள்ளியில் நான் படித்தபோது “Who invented Pi?” என்று கணக்கு வாத்தியார் என்னை கேள்விக் கேட்டிருக்கிறார். பதிலும் சொன்னார். நான்தான் மறந்து தொலைந்து விட்டேன்.

நம் தாய்மார்கள் கைக்குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு போக மறந்தாலும் மறப்பார்கள். ஆனால் இந்த டம்பப்பையை கையில் மாட்டிக் கொண்டு போக மறக்கவே மாட்டார்கள்.

அப்படி என்னதான் அவர்களின் கைப்பையில் இருக்கிறது என்று ஒருநாள் சோதனை போட்டும் பார்த்து விட்டேன். ஆண்களின் டயரியையும், பெண்களின் கைப்பையையும் அவர்களின் அனுமதியின்றி திறந்து பார்க்கக் கூடாதுதான். என்னச் செய்வது? என் கட்டுரைக்கு இந்த விவரங்கள் தேவைப்படுகிறதே? இறைவன் என்னை மன்னிப்பானாக.

கைப்பையை துப்புத் துலக்கி துழவிப் பார்த்துவிட்டு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டேன். ‘இத்துனூண்டு’ சாமான்களுக்காக ‘இம்மாம்’ பெரிய டம்பப்பை தேவைதானா என்று நொந்துப் போய் விட்டேன்.

பெரிய சுண்ணாம்பு டப்பி போல் ஒன்று. அதற்குப் பெயர் Face பவுடராம். குட்டியாய் ஒரு செண்ட் குப்பி. நாலைந்து கசங்கிய Tissue Paper. அதில் நல்ல வேளை மூக்குச் சளி இல்லை. லிப்ஸ்டிக் துடைத்த சிவப்புக் கறை மட்டும் இருந்தது. மினியேச்சர் பேட்ரியாட் ஏவுகணை போன்று ஒரு லிப்ஸ்டிக். ஜோஸ்யம் பார்ப்பவர்களின் கையில் இருக்கும் பூதக்
கண்ணாடியைப் போன்று கைப்பிடி கொண்ட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. பெரிய பெரிய பற்களைக் கொண்ட ஒரு சீப்பு. இரண்டு ஹேர் கிளிப். ஒரு ஊக்கு. காது குடையும் cotton buds. ஒரு சிறிய தலைவலி தைலம் பாட்டில். ஒரு Eye Brow பென்சில். ஒரு லேடீஸ் சமாச்சாரம். அவ்வளவுதான்.

இந்த உருப்படாத சாமான்களை வைப்பதற்காக ஆயிரக் கணக்கில் ஏன் லட்சக் கணக்கில் கூட காசு போட்டு டம்பப்பை வாங்கி வைத்திருக்கும் அம்மாமார்கள் உண்டு. சேனல், லூயிஸ் உயிட்டன், ஹெர்மிஸ், குச்சி, கிறிஸ்டியன் டியோர், Fendi, ப்ராடா, கேட் ஸ்பேட், லாக் ஹார்ட் என்று Branded டம்பப்பை மனைவிமார்களுக்கு வாங்கிக் கொடுத்து போண்டியான ஆண்டிகள் பலபேர்கள் உண்டு.

ஆண்களின் கதையே வேறு. ஆண்கள் வைத்திருக்கும் கைப்பையைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் செய்யும் தொழிலை எளிதாக கண்டு பிடித்து விடலாம். பஸ் கண்டக்டருடைய கைப்பை இடுப்புக்கு கீழே பரிதாபமாக தொங்கிக் கொண்டிருக்கும். கேமரா தளவாடச் சுமைகளைத் தூக்கித் தூக்கியே தோள்பட்டை ஒருபக்கம் சாய்ந்திருக்கும் போட்டோகிராபரை பார்த்திருக்கலாம். சீட்டுக் கம்பேனிக்காரர் பாஸ்போர்ட் பேக் போன்ற ஒன்றை அக்குளில் இடுக்கி வைத்திருப்பார்.

சிலபேர் வங்கியில் பெரிய தொகை எடுப்பதாக இருந்தால் ஒரு மஞ்சள் பையை கொண்டு போவார்கள். அப்போதுதான் யாரும் சந்தேகப்பட மாட்டார்களாம். பயங்கர பாதுகாப்பாம்.

இது போன்று எல்லோரும் நினைக்கப் போய் இப்பொழுதெல்லாம் மஞ்சள்பை சகிதம் யாரையாவது பார்த்தாலே அதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.

இந்தி கஜினி படத்திற்காக ஆமீர் கான் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு தயார் படுத்தினார் என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்து விட்டு, “சிக்ஸ் பேக்” என்றால் என்ன?” என்ற என் சந்தேகத்தை நண்பர் சலீமிடம் கேட்டபோது, “இது கூடத் தெரியாதா? 1) ஸ்கூல் பேக், 2) டிராவல் பேக், 3) ஹேண்ட் பேக் 4) ஷோல்டர் பேக், 5) லெதர் பேக், 6) கேரி பேக்” என்று எனக்கே நாகூர் அல்வா கொடுக்கிறார்.

2012-ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக சமீபத்தில் நான் பார்த்த ஒரு படத்தில் காண்பிக்கிறார்கள். அப்பாடா.. ! நாம் (ஆண் வாசகர்களாகிய உங்களையும் சேர்த்துதான்)

பைக்காராவாக அலையும் இம்சை இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குத்தான் என்றுச் சொல்லுங்கள்.

நன்றி : திண்ணை இணைய இதழ்

 

Tags: ,

ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி


(சில வருடங்களுக்கு முன் ‘திண்ணை’ பத்திரிக்கையில் வெளிவந்த சிறுகதை இது)

1

பஹ்ரைனிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அந்த இனிமையான தருணத்தில் மனதுக்குள் யாரோ உட்கார்ந்து ‘கிணிங் கிணிங்’கென்று கிலுகிலுப்பையை ஆட்டுவது போலிருக்கும். டிராலியை தள்ளிக்கொண்டு என் இளைய மகனும், கடைக்குட்டி மோனாவும் விறுவிறுவென்று நடந்தார்கள். நானும் என் மனைவியும் பிரயாணக் களைப்பில் மெதுவாக அன்ன நடை போட்டோம். (அன்னம் எப்படி நடக்குமென்று இதுவரை நான் கண்டதேயில்லை)

“பாதாம் இருக்குதா? பாரின் சிகரெட்? பாட்டில் கொண்டு வந்திருக்கீங்களா? டாலர் எவ்ளோ வச்சிருக்கீங்க? அதோ அங்கே நிக்கிற போலீஸ்காரர் கிட்ட 100 டாலர் கொடுத்துட்டு போங்க”

முன்பு, கஸ்டம்ஸ் ஆபிஸர்கள் வழக்கமாக பேசும் டயலாக்குகளை இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை. பயணிகள் எந்தவொரு அனாவசியமான கெடுபிடிகள் இல்லாமல் ‘மளமள’வென்று வெளியேறிக் கொண்டிருந்தார்கள். (இந்தியன் படம் வெளிவந்ததினாலோ?)

“பாரத் மாதா கி ஜே!” உள்மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் கரகோஷம் போட்டது.

டிக்காவையும், ஷவர்மாவையும் சாப்பிட்டு மறத்துப்போன நாக்கு ஊரில் விற்பனையாகும் தின்பண்டங்களை சுவைத்துப் பார்க்க மனம் நாடுவது இயற்கைதானே? ஊர் போனால் தெருவில் கூவிவிற்கும் பனங்கிழங்கு, நாவல்பழம், சுண்டல், கோதுமைக் கஞ்சி, உப்புரொட்டி, எலந்தைவடை இவைகளை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை.

“ஹாஜா கே..க்கு” என்று கீச்சுக் குரலில் கூவி வலம் வரும் அந்த ஒடிசலான மனிதரை இன்னும் மறக்க இயலவில்லை. “கொதிக்குதே” என்று கூவி விற்கும் சேமெய்தீன் நானாவுடைய கீரைவடை, மசால்வடையின் ருசியே தனி. ராவுத்தர் வீட்டு வாசலில் சுல்தான் சுடும் ‘வாடா’வை வாங்குவதற்கு கூட்டம் அலை மோதும். உ..ம். அது ஒரு நிலாக்காலம்!.

மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வாடகைக்கார் என் குடும்பத்தை சுமந்துக் கொண்டு நாகூரை நோக்கி பயணித்தது. மோனாவுக்கு நாலு வயது நிரம்பியிருந்தது. கருத்தறிந்து இப்பொழுதுதான் தாய்நாட்டுக்கு வருகிறாள்.

“நாகூர்லே மேக்டோனால்ட்ஸ் இருக்குதா டாடி? கென்டகி சிக்கன் கிடைக்குமா? பாஸ்தா கிடைக்குமா?” என்று சரமாரியான கேள்விகள்.

“சும்மா போட்டு நச்சரிக்கக் கூடாது. புரிஞ்சுதா?”. சற்று கடுப்படித்தேன்.

யார் கண்டது? இந்தியாவின் அபரீத வளர்ச்சியை பார்க்கும்போது அனைத்துலக விரைவுணவு உணவகங்கள் வெகு சீக்கிரம் இங்கு வந்தாலும் ஆச்சரியப்  படுவதற்கில்லை.

“டாடி..  நாகூர்லே டோனட் கிடைக்குமா?” மறுபடியும் நச்சரிப்பு.

 “டோனட் தானே? டோன்ட் வொர்ரி. நாகூர் டோனட் ரொம்ப ரொம்ப பேமஸ். ஊருக்குப் போயி கண்டிப்பா வாங்கித் தாரேன். சரியா..?

ஓரக் கண்ணால் நோட்டம் விட்டேன். மோனாவின் முகத்தில் சந்தோஷ ரேகை கன்னாபின்னாவென்று படர்ந்திருந்தது. அப்பாடா.. எனக்கு தற்காலிக விமோசனம்.

நாகூரில் ‘வாடா’ என்ற பெயரில் ஒரு தின்பண்டம் கிடைக்கும். திண்டுக்கல்லுக்கு முறுக்கு, திருப்பதிக்கு லட்டு, திட்டச்சேரிக்கு குவளை கேக்கு என்பது போல நாகூருக்கு இந்த ‘வாடா’.

“என்ன பேருடா இது, வாடா போடான்னு? ஏண்டா! உங்க ஊருகாரனுக்கு விவஸ்தையே கிடையாதா? தின்பண்டத்துக்கு வக்கிற பெயராடா இது? மருவாதி கெட்டத்தனமால்லே இருக்கு”

காலேஜ் ஹாஸ்டலுக்கு நைஸாக என் பாட்டி கேரியரில் ஒளித்து வாடாவை கொண்டு வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி ஊட்டுகையில் என் ‘ரூம்மேட்’ அடிக்கிற டயலாக் இது.

வாடா செய்வதற்கு கலக்கின்ற முக்கியமான பொருள் எதுவெனில் –  நன்றாக புளித்துப் போன மாவு. வாடிப் போன பொருளைச் சேர்த்து வாடா(த) பண்டமாய் உருவாக்குவதால் அதற்கு “வாடா” என்ற தூய தமிழ் அடைமொழி என்பது அந்த ஞான சூன்யத்திற்கு தெரிய வாய்ப்பில்லை.

வேர்க்கடலையை ஏன் மல்லாக் கொட்டை என்றழைக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்ததுண்டு. மண்ணில்-ஆம்-கொட்டை (‘ஆம்’ என்றால் ‘விளைகின்ற’ என்று பொருள்) நாளடைவில் மருவி மல்லாக் கொட்டையாகி விட்டதை ஆராய்ந்ததில் ஒரு தமிழ்ப் பெருமிதம். வட்டில் ஆப்பம் முதல் போனவம் (போனகம்) வரை ஏராளமான தூய தமிழ்ப் பெயர்களை  உதாரணம் காட்ட முடியும்.

“ஏங்கனி இந்த வழியா போறியும்?” டிரைவரிடம் வினவினேன்.

“இந்த வண்டிக்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்ல நானா. அதனாலே திட்டச்சேரி வழியா போயிடுவோம். கிலோ மீட்டரும் கம்மி”

“நீம்பரு எப்படி வேணும்னாலும் போய் சேரும். சீக்கிரம் வூட்டுக்கு போனா போதும். உம்பரோட டப்பாக் காரு குலுங்குற குலுங்கல்லே முதுவு வலியே வந்திடுச்சு.”

“இது டப்பாக்காரா? இப்பத்தான் ஊரு பட்ட செவு செஞ்சு பேரிங்கு, ஷாக் அப்சார்பரு, டயரு எல்லாம் மாத்தியிருக்கிரேன் நானா. ரோடு எப்படி இருக்குன்னு பாத்தீங்கல்லே?”

விட்டா பேசிக்கிட்டே போவான். நாகூருகாரனுக்கு பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்? இந்த குலுங்கல் என் மனைவியை தூளியிலிட்டு தாலாட்டுவது போலிருக்கிறது போலும். நன்றாக தூங்கிக் கொண்டு வந்தாள். கொந்தகை தாண்டியதும் அந்த வளைவு பாதையில் தூரத்தே நாகூர் பெரிய மினாரா தென்பட்டது.

“ஊரு வந்துடுச்சு. எந்திரி எந்திரி”. எழுப்பி விட்டேன்.

“ஹைய்யா.. லைட் ஹவுஸ்”.  மோனா துள்ளிக் குதித்தாள்.

“அது லைட் ஹவுஸ் இல்லே. மனாரா” என் இளைய மகன் விளக்கம் கொடுத்தான்.

“மனாரான்னா என்னா?”

“மனாரான்னா டவர்”

“டாடி.. டோனட் எப்போ வாங்கி கொடுப்பீங்க?” கீறல் விழுந்த ரெகார்ட் போல பழைய பல்லவியை மோனா ஆரம்பித்தாள்.

“இப்பத்தானே வந்திருக்கோம். எல்லாம் வாங்கி கொடுப்பேன். பேசாம இருக்கணும். புரிஞ்சுதா?” பொய்க்கோபம்தான். என்ன செய்வது?
2

அன்று மாலை மோனாவை கையில் பிடித்துக் கொண்டு கடற்கரைக்கு வாக்கிங் கிளம்பினேன்.

“கால் ஆட்டோவுல போறதுதானே?” என் தம்பியின் ஆலோசனை. ஆட்டோவிலே வாக்கிங் போவதாவது?

“வேணாம் நான் என் காலாலேயே போயிக்கிறேன்”

“இது கடற்கரைக்கு போகும் வழி” –ன்ற அம்புக்குறியோடு ஏதோ ஒரு நற்பணி மன்றம் இந்த வழிகாட்டி பலகையை வைத்திருந்தது. என்னை நக்கல் செய்வது போலிருந்தது. என்னதான் வெளிநாட்டில் வாசம் செய்தாலும் பிறந்த மண்ணும், வழியும் மறந்து போயிடுமா என்ன?

“சேச்சே.. இது நம்மளுக்காக இல்லை. வெளியூரு ஜனங்களுக்காக வச்சிருப்பாங்க” என்று என்னை நானே சமாதானம் படுத்திக்கொண்டேன்.

“ஓய்! சிங்கம் போவுது பாத்தியுமாங்கனி..?” வழியில் டீக்கடை பெஞ்சிலிருந்து ஒரு இளைஞனின் குசும்பு.

முகம் சிவந்து திரும்பிப் பார்த்தேன். நல்லவேளை நமக்கு விழுந்த ‘கமெண்ட்’ இல்லை. எனக்கு முன்னே ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். அவனுக்கு வேண்டாதவனாக இருக்க வேண்டும்.

‘சிங்கம் என்று சொன்னால் பிடறி மயிரை நீக்கி விட்டு, காலரை தூக்கி விட்டுக் கொள்வதுதானே? கோபம் எதற்கு?’ நியாயமான கேள்விதான். அது கிண்டலுக்கான  சங்கேத மொழியென்பது உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் வழியே வந்த ‘ஜில்’லென்ற காற்று, மேனியை ‘மஸாஜ்’ செய்தது. மணற்பரப்பில் காற்று சில கவிதைகளை எழுதிவிட்டு போயிருந்தது. அடுக்குத் தொடரில் நெளிவு சுளிவோடு புனையப்பட்ட கவிதை வரிகளை  திருத்தி ‘ரைட் மார்க்’ போட்டதுபோல் இடையிடையே யாரோ விட்டுப் போயிருந்த கால்தடங்கள்.

அந்த ருசியான வாசனை மூக்கைத் துளைக்க, பாதையோரமிருந்த ஓலைக்குடிசையின் பக்கம் என் பார்வை திரும்பியது. ஒரு பெண்மணி வாடா சுட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏய் மோனா! நீ கேட்டியே டோனட் ! இப்ப வாங்கித்தாரேன்”

ஆயிரம் விண்மீன்களை கை நிறைய அள்ளிவிட்ட சந்தோஷம் மோனாவுக்கு. வாடா விற்றுக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை. ஆமினாதான்.

“வாடா ரூவாக்கி எவ்ளோ?”

“தம்பி! நீங்க ஜொலஹாபீயோட பேரன் தானே..?”

“பரவாயில்லையே! நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..?”

நாமும் ஊரை மறக்கவில்லை; ஊரும் நம்மை மறக்கவில்லை. இந்த நினைப்பு மனதுக்கு இதமான ஒத்தடம் கொடுத்தது.

கவிழ்ந்திருந்த தகர டப்பாவில் ஒரு வெள்ளைத் துண்டை பரத்தி. மாவை ஊற்றி, உள்ளங்கையால் வட்டமாய் தட்டி, ஆட்காட்டி விரலால் ஒரு ஓட்டை போட்டு, அலக்காக துண்டை கவிழ்த்த, எண்ணெய்ச் சட்டியில்  வாடா “சொய்ங்”கென்று பொரிந்தது.

கடற் காற்றின் கோபத்தை தணிக்க,  25 கிலோ டால்டா டின்னை கிழித்து இற்றுப்போன தடுப்பொன்று, ஸ்டவ் அடுப்பின் விலாப் பக்கத்தை ஒட்டியாணமாய் அலங்கரித்தது.

“டாடி! இத பாக்குறதுக்கு சிட்டிங் ரூம்லே வைப்பாங்களே ரூம் டிவைடர். அது மாதிரியே இல்லே?”

குழந்தைகளின் கற்பனைத் திறனும், எதார்த்த ஒப்பீடும்  சில சமயம் கவிஞனையும் மிஞ்சி விடுகிறதே?

“அலி ஜர ஆ, அலி ஜர இ, அலி பேஷ ஊ,
பே ஜர பா, பே ஜர பீ, பே பேஷ பூ.
தே ஜர தா, தே ஜர தீ, தே பேஷ தூ”

அரபு மொழியின் அட்சரங்களை மூச்சு விடாமல் மனனம் செய்யும் சிறுமியின் குரல் குடிசையிலிருந்து கேட்டது. காலங்காலமாக  கேட்டுக் கொண்டிருக்கும் அதே ராகம். “ஆ.. பா.. தா..” என்ற அரபு மொழியின் உயிர் எழுத்தை இப்படித்தான் இங்குள்ள உஸ்தாதுமார்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

“தவ்லத்து சித்த இங்கே வாடி”

கிழிந்துப் போன பாவாடையும் ஒட்டுப் போட்ட சட்டையுமாய் சிறுமியொருத்தி ஆஜரானாள். தவ்லத் என்றால் அரபு மொழியில் செல்வம் என்று பொருள். செல்வம் வறுமைக் கோலத்தில் வந்து நின்றது.

“இது யாரு லாத்தா? உங்க மவளா?”

“ஆமாந்தம்பி. மாப்புளே மவுத்தானதுக்கு பொறவு, வாடா சுட்டுதான் காலத்தெ தள்ளுறேன். இவள ஆளாக்கி கட்டிக் கொடுத்துட்டா என் கடமை முடிஞ்சிடும்.”

“மொதல்லெ இவளை நல்லா படிக்க வைங்க.”

“செட்டியாரு ஸ்கூல்லே அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருக்கிறா தம்பி. அவட ஹக்குலே துஆ செய்யுங்க. அது போதும்”.

“ஏன் டாடி இந்த டோனட் ப்ரவுன் கலருலே இருக்கு?” – இது மோனா.

 “ஏண்டி! மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்கிரே? சீக்கிரம் போயி கத்திரிக்கோலு எடுத்துட்டு வா. இந்த பேப்பரை வெட்டிக் குடு”

தவ்லத் கத்திரிக்கோலால் தினசரி ஒன்றை சதுர வடிவில் கத்தரித்துக் கொடுக்க எங்களுக்கான பேப்பர் பிளேட் ரெடி.

“மோனா! இதுதான் இந்த ஊரு டோனட். நல்லா இருக்கா?”

“வாவ்! டோனட் சூப்பர்!” மோனா புகழ்ந்தாள்.

“இன்னும் கொஞ்சம் உள்ளடம் வைங்க லாத்தா”

வெங்காயத்தை மஞ்சளிட்டு லேசாக வறுத்து தேங்காய்ப்பூவை கலந்தால் அதற்குப் பெயர் “உள்ளடம்”. அழகான தமிழ்ப்பெயர். இடியாப்பத்திற்கு பாயா, இட்லிக்கு சட்னி, புட்டுக்கு வாழைப்பழம் என்று பொருத்தமான கூட்டை ஏற்படுத்தியதைப்போல வாடாவுக்கு உள்ளடம் என்ற ‘காம்பினேஷனை’ கண்டுபிடித்த மகராசனை உளமார பாராட்டினேன்.

 “என்ன லாத்தா ராலு வைக்கவே இல்லியே?”

எறா, ராட்டு, செம்மீன் என்று பல்வேறு பெயரில் அழைக்கப்படும் இறால் மீனுக்கு இந்த ஊர் பெயர் ‘ராலு’. வாடாவுக்கு மேலே ஸ்டிக்கர் பொட்டு வைத்ததைப்போல இறால் காட்சிதரும். ‘கடக் மொடக்’ என்று சாப்பிடுகையில் சுவை மேலும் மெருகேறும்.

 “இந்த சீஸனுலெ செனக்குனி ராலே கெடக்க மாட்டேங்குது வாப்பா. நா என்னாத்தெ செய்றது சொல்லுங்க?”

“லாத்தா.. இந்த வாடாவுக்கு டேஸ்டே ராலுதான். அது இல்லேன்னா ஒரு மஜாவே இல்லே போங்க”

“அப்டீன்னா நாந்தான் இனிமே கடல்லே இறங்கி போயி ராலு புடிச்சிட்டு வரணும்”

 “டோனட் ஆன்ட்டி என்ன டாடி சொல்றாங்க?” மோனா காதில் வந்து கிசுகிசுத்தாள்.

“ஆன்ட்டியே இறங்கிப்போயி கடல்லே ராலு புடிக்க போறாங்களாம்”

“ஹாய்.. நெசமாவா? கடல் உள்ளார போயா? மெர்மெய்ட் மாதிரியா?”

மோனா முகத்தில் ஆச்சரியம் கலந்த ஒரு பதட்டம். ஆமினா “டைவிங் சூட்” அணிந்துக் கொண்டு அந்த தவளைக்கால் சப்பாத்துடன் கடலுக்குள் ஆழமாக நீந்திச் சென்று இறால் பிடிப்பதுபோல் கற்பனை செய்துக் கொண்டாள் என்று நினைக்கிறேன். முகபாவம் காட்டிக் கொடுத்தது.

*     *     *

3

சுனாமி வந்து உலகத்தையே உலுக்கிய நேரம். வெளிநாட்டில் இருந்தாலும் விஞ்ஞான வளர்ச்சியில் உடனுக்குடன் நாட்டு நடப்பை அறிந்திட முடிந்தது. நாகூர், நாகை செய்தியை நேர்முக வருணனையில் குருதியை உறைய வைத்துக் கொண்டிருந்தது NDTV.

மாதங்கள் சில ஓடி விட்டன. மறுபடியும் விடுமுறையில் குடும்பத்துடன் ஊர்செல்லும் தருணம் வந்தது. இப்பொழுது மோனாவுக்கு ஆறு வயது நிரம்பியிருந்தது. முன்னமிருந்த நச்சரிப்பு அவ்வளவாக இல்லை. சற்று குறைந்திருந்தது.

ஊர் சென்றதும் முதல் வேலையாக கடற்கரை பகுதிக்குச் சென்று சேதப் பகுதிகளைக் காண்பதற்கு புறப்பட ஆயத்தமானேன். மோனாவும் கூட வருவேன் என்று அடம் பிடித்தாள்.

பீரோட்டத்தெருவை கடந்ததுமே மனது ‘பக்’கென்று பதைத்தது. சுனாமி அரக்கன் சூறையாடிச் சென்ற  பச்சைத் தழும்புகள் இன்னும் ஆறாமலிருந்தது. இரயில் தண்டவாளத்தைக் கடந்ததுமே எரிமலைக் குழம்புகளின் தடயம்போல  பூமியின் மேனி கருத்துப்போய் குதறியவண்ணம் குரூரமாக காட்சி தந்தது.

மோனாவுக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போலும்.

“டாடி.. டோனட் வாங்கித் தாங்க”. அப்பொழுதுதான் எனக்கு அது உறைத்தது.

ஆமினாவுடைய குடிசை இருந்த இடத்தை உற்று நோக்கினேன். காலி மைதானமாக வெறிச்சோடிக் கிடந்தது. ஆமினா நிலைமை என்ன ஆனதோ தெரியவில்லை. காலை வியாபாரத்திற்கு கடை விரித்திருக்கையில் ‘தளதள’க்கும் அந்த பொறிக்கன் சட்டி, அடுப்போடு அவளையும் சேர்த்து அந்த ராட்சஸ அலை அள்ளிக் கொண்டு போனதோ?

அப்படி என்றால் தவ்லத்தின் நிலைமை?  மற்ற செல்வத்தோடு ஆமினாவின் இந்த வாரிசுச் செல்வமும் கடலோடு கடலாக போய்விட்டதோ? அவள் கட்டி வைத்த குடிசையோடு அவள் மனக்கோட்டையும் நீரில் கரைந்துப் போனதோ?

இந்த பாழாய்ப்போன சுனாமி ஞாயிற்றுக்கிழமை வராமல் திங்கட் கிழமை வந்திருக்கக் கூடாதா? அந்நேரம் தவ்லத் பள்ளிக்கூடம் போயிருப்பாளே? பிழைத்திருப்பாள் அல்லவா?

இந்த கூறுகெட்ட ஆமினாவுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? கடலுக்கு இவ்வளவு அருகிலா குடிசை போட்டுக் கொள்வது?

“தவ்லத்து ! என்னை உட்டுட்டு போவாதே தவ்லத்து ! என் செல்லமே என்னை உட்டுட்டு போவாதேடா” இப்படித்தான் அந்த கடைசி வினாடியில் ஆமினா கதறியிருப்பாளோ..?

என் கண்கள் குளமாகி கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. அதற்கு மேல் அங்கு நிற்க என்னால் முடியவில்லை. தரதரவென்று மோனாவை இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினேன்.

“டோனட் ஆன்ட்டி எங்கே போயிட்டாங்க டாடி?”

“அதுவாடா செல்லம். டோனட் ஆன்ட்டி அன்னிக்கி சொன்னாங்கல்லே..? கடல்லே போயி ராலு புடிக்கணும்னு. அதுக்குத்தான் போயிருக்காங்க”. என் குரல் கம்மியது.

*     *     *

பி.கு. :
டிசம்பர் 26 அன்று சுனாமி அழைத்துச் சென்ற எத்தனையோ ஆமினாக்களுக்கு இந்தச் சிறுகதை சமர்ப்பணம்.

திண்ணையில் அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

 

இந்த வாரத்து என் திண்ணை கட்டுரை


ஒரு ஹலோபதி சிகிச்சை

படிக்க (இங்கே) சொடுக்கவும்
 

கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்


நன்றி : திண்ணை Jan 1, 2010

விலைமாதரைப்  பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்?

எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை,

“பொன்னடங்கிய பெட்டகம் கனி
 போல்அடங்கிய மார்பகம்
மின்னடங்கிய மெல்லிடை அதன்
 மேலடங்கிய ஆலயம்”

என்று வருணனை செய்வதோடு நிற்காமல், ஒரு படி மேலே சென்று

“நெய்திரண்டன மேனியில் சில
 நேரம்நின்றன என்விழி
கொய்துகொண்டது கைவழி கலை
 கூடிநின்றது ‘தாய்க்’ கிளி”

என்று சொற்சிலம்பம் ஆடுகிறார்.

‘மறைக்க வேண்டியவற்றை எல்லாம் மறைக்காமல் எழுதுகிறோமே அதனால் நம் மதிப்பு பாழாகுமே’ என்றெல்லாம் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

ஆசைப்பட்டவளை அடைவதற்கு அருந்தமிழையே ஆயுதமாக்கிய இலக்கிய கர்த்தாக்களை என்னவென்றுத் திட்டித் தீர்ப்பது?
காளமேகப்புலவர் இஞ்சிகுடி என்ற ஒரு சிற்றூரில் கலைச்சி என்ற தாசியிடம் உறவு கொள்ள ஆசைப் பட்டாராம். இவரது ஆசைக்கு அவள் இணங்க மறுத்ததால், அவள் உதாசீனப் படுத்தி அறம் ஒன்றையும் பாடி விட்டார்.

“ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.”
  என்று.

அவலட்சணம் பொருந்திய மூதேவி கலைச்சியை நாய்தான் விரும்பும் என்ற அர்த்தத்தில் பாடித் தொலைக்க, பயந்துப் போன கலைச்சி அவருடைய ஆசைக்கு சம்மதம் தெரிவிக்க, உடனே காளமேகம்

“நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னினும்வந்து எய்வானோ – விஞ்சு
முலைச்சிகரத் தால்அழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தால்அணைத்தக் கால்”.

என்று ‘பெரிய மனது’ பண்ணி, ‘அந்தர் பல்டி’யடித்து அவளைப் புகழ்ந்து பாடினாராம் கவிஞர் காளமேகம்.

புதுக்கவிதை புறப்பெடுத்த யுகத்தில்

‘நிர்வாணத்தை  விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக’ 

என்ற நா.காமராசனின் வரிகள் இலக்கிய வட்டத்தில் பெரும் பரபரப்பையும் வாசகர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பையும் ஏற்படுத்தியது.

ராட்சஸ ராட்டினத்தில் அமர்ந்து சவாரி செய்கையில், மேலிருந்து கீழ் இறங்கும்போது, உள்ளுக்குள் ‘கிலுக்’ என்ற அதிர்ச்சியோடு தூக்கி வாரிப் போடும். சில கவிதை வரிகளும் இப்படித்தான். நம் மனதில் சொல்ல முடியாத ஒரு விளைவை நிகழ்த்தும்.
 
புதிய மாதவியின் வரிகளைப் படிக்கையில் காமப்பித்து பிடித்த ஆண்களை சம்மட்டியால் அடிப்பதைப் போலிருக்கிறது.  

‘பசியை
அவள்  சாப்பிட்டாள்
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது’ 

என்கிறார் இந்தப் பெண் கவிஞர்.

“விலங்குகளை விடக் கேவலமாகி இறைவனின் உயர்ந்த படைப்பான பெண்ணினத்தை காம இச்சையோடு பார்ப்பாரேயானல் அந்த ஆணினம் அடியோடு அழிந்து விடுவதே மேல் என்று நான் நினைப்பேன்” என்று எழுதுகிறார் மகாத்மா காந்தியடிகள். 
 
கவிக்கோ அப்துல்  ரகுமான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தன்னிடம் பயின்ற  மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்பதே அந்த போட்டி.
முதலாம்  மாணவன் “பால்வினை நோய் விருட்சம்” என்ற சொற்றொடரை வழங்க, இரண்டாமவன் “சுக கிடங்கின் நித்திரை” என்று கூற
மூன்றாம் மாணவன் “வாடகை மனைவியின் உறக்கம்” என்று கூறியிருக்கிறான்.

இறுதியான ஒரு மாணவன் சொன்ன வாசகம் : “இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்”. பரிசு பெற்ற வாசகம் இதுதான்.

போகத்திற்காக  தேகம் விலை பேசப்படுவது மாபெரும் சோகம். இச்சைக்காக பெண்ணினத்தையே  கொச்சைப் படுத்தும் அவலம் இது. உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. காசுக்காக மாசுபடுகிறது இங்கே கற்பு. ..“கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம், கடைதெருவில் விற்குதடா அய்யோ பாவம்” என்ற திரைப்படப் பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

இரவுக்குப்பின்தான்  விடியல் வரும். இவர்களுக்கோ இரவில்தான் விடியல். படுக்கை அறையை மாத்திரமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே இவர்கள் இருட்டாக்கிக் கொள்கிறார்கள்.    
          “வாழ்க்கையின் விடியலுக்காக
           இரவை  எதிர்நோக்கி
           காத்திருக்கும்
           அல்லி மலர்கள்”

என்று இவர்களை  வருணிக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். அல்லி மலர்வது ஆகாயம் கருக்கையில்தானே?

கவிஞர் மு.மேத்தாவின் சிந்தனை இன்னும் சற்று  ஊடுருவி அவர்களின் கருப்பை வரை சென்று விடுகிறது.

“இரைப்பை  நிரப்ப
கருப்பையை
பட்டினியிடும் மாதர்”
  என்று பாடுகிறார்.

பிள்ளைப்பேறு என்பது பெரும் பேறு. தன் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக தன் வயிற்றுச் சுமையை ஏற்க மறுக்கிறார்கள் இந்தச் சுமைதாங்கிகள்.

Great men think alike என்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் சிந்தனையும் கவிஞர் மு.மேத்தாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது.

“இரைப்பை நிரப்பவா
கருப்பையை பட்டினியிட்டாய்?”

என்று கவிஞர் வினா தொடுக்க அதற்கு பால்வினையாளி பதில் சொல்கிறாள்.

“சில உறுப்புகள் அனாவசியம்
குடல்வால்,
இரண்டாம் கிட்னி,
ஆறாம் விரல்,
எனக்குக் கருப்பை”

ஆஹா.. என்ன ஓர் அற்புதமான சிந்தனை! வெறுப்பு மிகுதியால் கருப்பையையே உபயோகமில்லா உறுப்பு என்கிறாள் அவள்.

தனக்குள்ள இலக்கியப் பரிச்சயத்தை வெளிக்காட்ட குறள் ஒன்றையும் அவள் திரித்துக் கூறுகிறாளாம்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
உச்சத்தாற் காணப்படும்”.

“எச்ச”த்தை “உச்ச”மாக்கி கூறும் போதும் சரி , கவிஞர் அவளை “எடை பார்க்கும் எந்திரம்” என்று வருணிக்கும்போதும் சரி, நமக்கு விரசம் தோன்றுவதில்லை. மாறாக அவள் மீது பரிவும், பச்சாதாபமுமே ஏற்படுகிறது.

விலைமாதர் உருவாவதற்கு காரணம்

“செல்வத்தின் எச்சமும்
வறுமையின் உச்சமும்”

என்று அதனைத் தொடர்ந்து வரும் வைரமுத்துவின் வரிகள் அதற்கு சான்று பகர்கிறது.

பால்வினையாளியின் தொழில் எதுநாள் வரைக்கும் நீடிக்கிறது என்றால்

“திருமணம் – எய்ட்ஸ்
இரண்டிலொன்று முந்தும்வரை.. ..”    என்கிறார்.

மணம் அல்லது மரணம் இதில்தான் முடிகிறதாம். வாழ்க்கை ஒன்று ஆனந்தமாகிறது அல்லது அஸ்தமனமாகிறது. ஒரு படத்தில் எழுத்தாளராக வரும் பார்த்திபன் விபச்சாரம் பண்ணும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்வார். நிஜ வாழ்க்கையில் எத்தனை இளைஞர்கள் இதுபோல் முன்வருவார்கள் என்பதைச் சொல்லத் தெரியவில்லை. 

முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமக்கும் மாதருக்கு இயற்கை ஏற்றமுடன் அளிக்கும் பதவி உயர்வு “தாய்” என்ற ஒப்பற்ற ஸ்தானம். இதை அழகாகச் சொல்கிறார் பெண்கவிஞர் புதிய மாதவி.

‘அவள்
உங்களுக்காகச் சுமப்பது
வெறும்  நீர்க்குடமல்ல
வாழ்க்கையின்  உயிர்க்குடம்’  என்று.

விலைமாதர்கள்  தொடர்பினால் சீரழிந்துப்போகும்  சமுதாயத்தை எண்ணி “சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்” என்ற நூலில் கண்ணீர்  வடிக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருடைய கவலையெல்லாம் நாளைய நட்சத்திரங்களாக உருவாகப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியதாகவே இருக்கிறது

“இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?
 
ஒரு கல்லூரி  விடுதிக்கு விலைமாதர்  வருவதாக என் செவிக்கு எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?
 
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின்  கைப் பையில் போதை மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில்  சாட்சிகள் எட்டுகின்றன!
 
அடிப் பாவிப் பெண்ணே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா? 

வைரமுத்துவின் நியாயமான ஆதங்கம் எழுதுகோலை ஆயுதமாக ஏந்தி இலக்கிய உலகில் உலா வரும் ஒட்டுமொத்த கவிராஜர்களின் ஏகோபித்தக் குரலாக இங்கே எதிரொலிக்கிறது.

 

பைக்காரா


பைக்காரா

(திண்ணை இதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரை)

 

திண்ணையில் நான்


 

head_thinnai2.jpg

கட்டுரைகள்

மீசை 
தைலம்
என் இசைப் பயணம்
பங்க்ச்சுவாலிட்டி
சும்மா
குள்ள நரி
சட்டுவம்
சிறுகதை எழுதப் போய்
பஞ்ச் டயலாக்
ஆட்டோகிராப்
ராக்போர்ட் சிட்டி 
மூக்கு
கொட்டாவி
மந்திரம்
காதலர் தினம்
எல்லாமே சிரிப்புத்தானா?
பாகிஸ்தான் பாரதி
கண்ணதாசன் காப்பியடித்தானா?
நாசமத்துப் போ!
உடம்பு இளைப்பது எப்படி?
ஒட்டுக் கேட்க ஆசை
இடைவேளை
பம்பரக்கோனே
ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்
ஒலிகள் ஓய்வதில்லை
நாகூர் ஒரு வேடிக்கை உலகம்
நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
ஒலிகள் ஓய்வதில்லை
புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
வயதாகியும் பொடியன்கள்
மியாவ் மியாவ் பூனை

கவிதைகள்  

கலவரப் பகுதி
பூக்கள் – கவிதை  
மெழுகுவர்த்தி
ப்ரியா விடை
தாஜ்மகால்
மொழிபெயர்ப்புக் கவிதைகள்

சிறுகதைகள்

 ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி
 

Tags: